இளவரசன் நினைவாக....

கொலையா? தற்கொலையா? தர்மபுரி இளவரசனின் கோரச் சாவு எப்படி நிகழ்ந்தது? கொலை என்றால் செய்தது யார்? தற்கொலை என்றால் தூண்டியது யார்? இந்த வினாக்களுக்குக் கூர்மையும் நேர்மையுமானதொரு புலனாய்வினால்தான் விடை காண முடியும். எனவேதான் இந்த வழக்கு நடுவண் புலனாய்வு அமைப்பிடம் (சி.பி.ஐ) ஒப்படைக்கப்பட வேண்டும் என்று இளவரசனின் பெற்றோரும் உற்றாரும் மற்றோரும் கோருகின்றனர். சமூக விருப்புவெறுப்புகள் முனைப்புடனிருக்கும் இப்போதைய சூழலில் மாநில அளவிலான புலனாய்வு அமைப்புகளால் இந்தப் பணியைச் செவ்வனே செய்ய இயலுமா? என்ற ஐயம் எழுவது இயல்பே.

தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர் அறிவித்துள்ள நீதி விசாரணை உண்மையை வெளிக்கொணரப் பயன்படாது. கொலையா? தற்கொலையா? என்பதையும் அதற்குக் காரணமானவர்களையும் காரணமானவற்றையும் கண்டறியப் புலனாய்வினால்தான் முடியும், நீதி விசாரணையால் முடியாது என்ற எளிய உண்மைகூட முதலமைச்சருக்குத் தெரியாமல் போனது ஏன்? அல்லது தலித் மக்களும் சனநாயக ஆற்றல்களும் இளவரசனின் சாவு குறித்துக் கொண்டுள்ள மன வெப்பம் தணியும் வரை காலங்கடத்தும் உத்தியாகத்தான் நீதி விசாரணை அறிவிக்கப்பட்டுள்ளதா?

தமிழக அரசு நீதி விசாரணை நடத்தட்டும். அந்த விசாரணை இளவரசன் சாவு குறித்து மட்டும் நடத்தப்படாமல், இளவரசன் – திவ்யாவின் காதல் திருமணம் தொடங்கி – திவ்யாவின் தந்தை நாகராசன் தற்கொலை – மூன்று தலித் குடியிருப்புகள் மீது நடத்தப்பட்ட வன்கொடுமைத் தாக்குதல் (கலவரம் அன்று) – இளவரசனிடமிருந்து திவ்யாவைப் பிரிக்க நடந்த முயற்சிகள் – உயர் நீதிமன்ற வழக்கு நீதிபதி அந்த வழக்கைக் கையாண்டவிதம் – திவ்யாவின் முரண்பட்ட வாக்குமூலங்கள் – காவல்துறையின் பங்கு – இவை அனைத்திலும் சாதி சார்ந்த வழக்குரைஞர்களின் பங்கு – இவர்களுக்குப் பின்னிருந்து இயக்கிய சாதிச் சங்கங்கள், சாதிக்கட்சிகள் – இளவரசனின் சாவுக்கு இட்டுச் சென்ற காரணிகள் - என்று எல்லாவற்றைப் பற்றியும் முழுமையாகவும் விரிவாகவும், ஆனால் விரைவாகக் குறிப்பிட்ட கால வரம்புக்குள் விசாரிக்கட்டும். காதல் திருமணங்களையும், சாதி மறுப்புத் திருமணங்களையும் பாதுகாப்பதற்கான வழிமுறைகளைப் பரிந்துரைக்கட்டும். அப்படியொரு நீதி விசாரணைக்கு அரசு ஆணையிட்டால் வரவேற்போம்.

இளம்பெண் திவ்யா தந்தையை இழந்து, காதல்-கணவனையும் இழந்து தவிக்கும் பெருந்துயரத்துக்கான பழி காதலை எதிர்க்கும் சாதி வெறியையே சாரும். சாதிமீறிக் காதலித்த குற்றத்துக்காக உயிர்கள் பலியிடப்படுவது இந்த நாட்டில் புதிய செய்தியன்று. ஆனால் சாதி வெறியோடு சாதி சார்ந்த அரசியல் பதவி வெறியும் சேர்ந்து திவ்யா – இளவரசன் காதலுக்குப் பகையாக முளைத்து விட்டதுதான் இவ்வளவு கொடிய முடிவு ஏற்படக் காரணமாகி விட்டது.

     தலித் இளைஞன் வன்னியப் பெண்ணைக் காதலித்து மணப்பதை நாடகத் திருமணம் என்று கொச்சைப்படுத்திய பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாசின் மேடை வசனத்தை இளவரசனின் உயிர்ப்பலி பொய்ப்பித்துக் காட்டி விட்டது. வன்னியப் பெண்ணைக் காதலித்து மணக்கும் தலித்தின் கையை வெட்டச் சொன்ன காடுவெட்டி (கை வெட்டி, கால் வெட்டி., தலை வெட்டி?) குருவின் வன்முறைப் பேச்சுதான் இளவரசனின் உயிரைப் பறிக்க உந்துதலாயிற்று எனலாம். இராமதாசு வகையறாக்கள் இப்போதாவது வருந்தட்டும், வருந்தித் திருந்தட்டும். இல்லையேல் தமிழக அரசியலில் தலையெடுக்க முடியாதபடி இவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். இவர்கள் அணிசேர்க்கத் துடிக்கும் தலித்தல்லாத பிற சாதியினர் மட்டுமல்ல, இவர்களின் சொந்தபந்த வன்னிய மக்களே இவர்களைப் புறக்கணிக்கும் நிலை வரத்தான் போகிறது.

     காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்புத் திருமணங்களுக்கும் ஆதரவும் பாதுகாப்பும் ஊக்கமும் தரும் கொள்கையை இந்திய அரசும் தமிழக அரசும் வெளிப்படையாக அறிவித்துச் செயலாக்க வேண்டும். சனநாயக, சமூகநீதி ஆற்றல்களும் காதல் திருமணங்களையும் காதல் இணையரையும் சாதி வெறி வன்செயலர்களிடமிருந்து பாதுகாப்பதை ஒரு செயல்திட்டமாகவே கொண்டு இயங்க வேண்டும். வருண–சாதியமைப்பைக் கட்டிக்காக்கும் இறுதிப் பண்பாட்டு அரண் சொந்த சாதிக்குள் மணம் புரிந்து கொள்ளும் அகமண முறையே என்று அம்பேத்கர் கூறியதை நினைவிற்கொண்டு, சாதியொழிப்பில் காதலுக்கும் சாதிமறுப்புத் திருமணங்களுக்கும் உள்ள பெரும்பங்கினை உள்வாங்கி, இவற்றைக் காக்கவும் வளர்க்கவும் தமிழ்த் தேசியச் சமூகநீதி ஆற்றல்கள் தனிக் கவனம் செலுத்த வேண்டும்.

     முழுச் சிக்கலையும் தலித்துகளுக்கும் தலித்தல்லாதாருக்கும் இடையிலான வன்மோதலாகவும், தலித்தல்லாதார் அனைவரையும் தலித்துகளின் பகைவர்களாகவும் சித்திரிப்பது தலித்துகளைத் தனிமைப்படுத்தும் சாதி வெறியர்களின் சதித் திட்டத்துக்கே துணை புரியும். தலித்தியம் என்பதன் சாரம் சாதியொழிப்பே தவிர பிற சாதியினரை ஒழிப்பதன்று. தலித்துகள் தலித்தல்லாத சமூகநீதி, சனநாயக ஆற்றல்களோடு கொள்கையடிப்படையில் ஒன்றுபடுவதே சாதிவெறியர்களைத் தனிமைப்படுத்தப் பயன்படும் என்பதை உணர்ச்சிவயப்பட்ட நிலையிலும்கூட மறவாமலிருப்பதே நன்று.

     பண்பாட்டுத் தளத்தில் காதலும் சாதி மறுப்புத் திருமணமும் செழித்து வளர வேண்டுமானால் பொருளியல் தளத்திலும் அரசியல் களத்திலும் அடைய வேண்டிய மாற்றங்களை மறந்து விடலாகாது. இந்த மாற்றங்களைத் தலித்துகள் மட்டும் தனித்துச் சாதித்து விட இயலாது என்பது எளிதில் விளங்கும். சேரக் கூடாதவர்களுடன் சேருவது அறிவீனம். சேர வேண்டியவர்களுடன் சேராமலிருப்பது பலவீனம்.

     காதல் என்பது தமிழர் வாழ்வியல் கூறுகளில் ஒன்று. காதலைப் போற்றாத தமிழ்த் தேசியம் தமிழ்த் தேசியமே அன்று. அன்பின் வழியது உயிர்நிலை. ஆண் – பெண் அன்பின் ஆக்க வடிவமே காதல். காதலால் தமிழ் வளர்ப்போம். தமிழால் காதல் வளர்ப்போம். சாதி கொன்ற காதல் உயிர்த்தெழும்.

     அது சாதியைக் கொன்று இளவரசன்களுக்கும் திவ்யாக்களுக்கும் நீதி செய்யும்.

- தியாகு, பொதுச் செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்.

Pin It