"முடிந்தது கேளிக்கூத்து". இது உலகப் புகழ் பெற்ற ரஷ்ய நாவலான மு.யூ.லேர்மந்தேவ்வின் "நம் காலத்து நாயகனில்" வரும் புகழ்பெற்ற வரிகளாகும். தர்மபுரி நாய்க்கன் கொட்டாய் கிராம இளைஞனான இளவரசனின் சாவு இந்த வரிகளை நினைவூட்டுகின்றன. கேளிக்கூத்தை அரங்கேற்றிய சாதியவாதிகள் நாடகக் காதல், ஏமாற்றுக் காதல் என கச்சை கட்டிக் கொண்டிருந்தனர். சாதிய சமூகம் இந்த தம்பதியினரை ஓட ஓட விரட்டியது. நான்குக்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் கிராமங்கள் முழுவதும் கொளுத்தப்பட்டன. அனைத்து பொருள்களும் கொள்ளையடிக்கப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒரே நாளீல் வீதியில் ஏதுமற்றவர்களாக மாற்றித் தள்ளப்பட்டனர். ஒரு காதல் திருமணத்திற்காக அதுபோன்ற ஒரு சாதிய கொடூரத்தை அந்த அளவில் தமிழகம் கண்டிருக்கவில்லை. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக எல்லா சாதிய ஆதிக்க சக்திகளையும் ஒன்று திரட்ட பாட்டாளி மக்கள் கட்சி முயன்றது. அதன் தலைவர்கள் தொடர்ந்து சாதிய வன்மத்தைப் பேசினர். அதன் தொடர்ச்சியாக 2013 ஏப்ரல் மாதம் மரக்காணத்தில் நிகழ்ந்த கலவரம் ஒரு திட்டமிட்ட வன்முறையாக இருந்தது.

இந்த பரந்த உலகில் ஒரு மூலையில் விரும்பிய ஆணும், பெண்ணும் சேர்ந்து உயிர் வாழ வாய்புகளற்றுப் போன நிலையில் தர்மபுரி காதலர்களான திவ்யாவும், இளவரசனும் பிரிக்கப்பட்டனர். இந்த பிரித்தலுக்கு சாதிய சக்திகள் சட்டம் மற்றும் நீதிமன்றங்களை கருவியாக்கிக் கொண்டது. தங்ககளின் காதலுக்காக, ஒரே சாதியினர் என்ற ஒற்றை காரணத்திற்காக அனைத்தையும் இழந்த மக்களின் முன், மனைவியினை சாதி ஆதிக்கத்திற்குப் பறி கொடுத்த ஓர் இளைஞனாக நின்றான் இளவரசன். தமிழகமே கவனித்த ஒரு காதல் இணையரின் வாழ்க்கை நீர்க்குமிழி போல முடிவுக்கு வந்தது. திவ்யா சார்ந்த சாதியின் சமூகக்கட்டுக்குள் அவள் சிறைப்படுத்தப்பட்டாள். அதன் பின் 4.7.2013 தேதி தர்மபுரியில் இரயில் தண்டவாளம் அருகில் கிடந்த அவனின் உயிரற்ற உடல் பல்வேறு ஐயங்களை எழுப்பியது. அது தற்கொலையா? அல்லது கொலையா?. இந்த விவாதங்கள் எதிர்காலத்திலும் தொடரும். ஆனால் ஒன்று நிச்சயம் முடிந்தது ஆதிக்கவாதிகளின் கேளிக்கூத்து. அவர்கள் இதையே விரும்பினார்கள்.

சமூகம் இந்த கேளிக்கூத்தின் வெறும் மெளன சாட்சி மட்டுமா? நம்மால் இந்த பார்வையாளர் பாத்திரத்தைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாதா?. கடந்த 7 நவம்பர் 2012ல் நாய்க்கன் கொட்டகை உள்ளிட்ட சுற்றுப்பகுதி கிராமங்களில் தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகள் கொளுத்தப்பட்ட நிகழ்வுக்குப் பின் அங்கு சென்றிருந்த போது, சிதைந்து கிடந்த இளவரசனின் வீட்டிற்குச் சென்று பார்த்த சமயம் அந்த வீட்டினுள் உடைந்து கிடந்தது ஒரு புகைப்படம் (துணை இராணுவப் படையில் (சீ.ஆர்.பி.எப்) உள்ள அவரின் சகோதரரின் குரூப் படம் எனக் கூறப்பட்டது.) இளவரசனுக்கும் காவல்துறையில் சேரவேண்டுமென்பது ஓர் லட்சியமாக இருந்திருக்கிறது. அவன் காவல்துறைக்கு தேர்வாகி பணி உத்திரவும் வந்திருந்தது. ஒரு நல்ல இளைஞனை காவல்துறை இழந்துவிட்டது.

தமிழகத்தில் இளவரசனின் மரணம் முற்போக்கு, சனநாயக சக்திகளைத் தாண்டி சாமானிய மக்கள் மத்தியில் கூட இரக்கத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. அவன் வாழ்ந்திருக்க வேண்டிய இளைஞன். அவனை ஒட்டுமொத்த சமூகமும் பாதுகாக்கத் தவறிவிட்டது. நீதிமன்றமும் கூட வெறும் சட்டம் சார்ந்த நிலையிகளைத் தாண்டி,ஒரு சிறப்பு வழக்காக இவ் வழக்கினை அணுகியிருக்க வேண்டும் .காதலர்களைப் பிரிக்க நினைத்தோர் எல்லா பாதுகாப்பு வடிவங்களையும் தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டனர்.

தர்மபுரியில் ஆதிக்க சாதியான வன்னிய சாதியினரும் அவர்களின் கட்டப்பஞ்சாயத்துகளும் இந்த காதலர்களின் நிகழ்வில் நடந்துகொண்ட அனைத்து செயல்பாடுகளும் நமது நாட்டின் ஒட்டு மொத்த சனநாயக பண்புகளையும், சட்டத்தின் ஆட்சியையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

நமது சமூகத்தில் நீண்ட காலமாகவே விரும்பிய ஆணும் பெண்ணும் குடும்பமாக மாறும் உரிமை அவர்கள் தீர்மானிப்பதை விட அவர்கள் சார்ந்த சமுகம் தீர்மானிப்பதாக உள்ளது. உலகம் முழுவதும் இந்த அத்துமீறல்களால் ஏராளமான காதலர்களின் உயிர் வாழும் உரிமை பறிக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போருக்கு பின் 1948ல் உருவாக்கப்பட்ட உலகளாவிய மனித உரிமை சாசனம் விரும்பிய ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்ந்து குடும்பமாக வாழ்வது மனித உரிமை என பிரகடனப்படுத்தியது. அவர்களின் குடும்பம் என்பது சமூகத்தின் இயற்கையான அடிப்படை அலகு எனவும் அதனை அரசும், சமூகமும் பாதுகாக்க வேண்டும் என்றும் கூறியது. தர்மபுரி நாய்க்கன் கொட்டாய் காதலர்களான இளவரசன், திவ்யா காதலில் அரசும், சமூகமும் இவர்களைப் பாதுகாத்ததா? நமது சமூகம் நடந்து முடிந்த எல்லா நிகழ்வுகளுக்கும் வெற்றுப்பார்வையாளராக நின்றது.

நீதிமன்றத்திற்கு வந்திருந்த திவ்யா தனது தாயாருடன் செல்வதற்கு கூறிய காரணம் மிக முக்கியமானது. அந்தப் பெண் இன்னமும் தனது கணவரை காதலிப்பதாகவும், பெரிதும் அரசியலாக மாற்றப்பட்ட தங்களின் திருமண நிகழ்வினால் கணவருடன் சேர்ந்து வாழ முடியவில்லை என்றும் கூறிச் சென்றுள்ளார். காலங்காலமாக நமது ஆதிக்க சமூகம் நிகழ்த்திய கோரத்தில் அடுத்த பலியாக திவ்யா - இளவரசன் காதல் வீழ்ந்துவிட்டது. தன் குடும்ப உறுப்பினர்களின் திருமணத்தைத் தீர்மானிக்கும் உரிமை மறுக்கப்பட்ட சமூகத்தால் ஏச்சுக்கும் பேச்சுக்கும், சாதிய சக்திகளால் தொடர்ந்து இழிவுப் படுத்தப்பட்ட நிலையில் திவ்யாவின் தந்தை நாகராஜனின் மரணம் நிகழ்ந்தது. அடுத்து நாய்க்கன் கொட்டாய் கிராமத்தில் சாதிய வன்முறையினைக் கண்டித்து நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் போது உடல்நிலை பாதிக்கப்பட்ட மங்கம்மா என்ற ஒரு பெண்னின் மரணம், தற்போது இளவரசனின் மரணம் என நீள்கிறது உயிர்ப் பலி பட்டியல்.

நமது தமிழக மண் ஒரு நீண்ட சாதி மறுப்பு மற்றும் இந்து மத, பார்ப்பனிய மறுப்பு என்ற பெரியாரிய, திராவிட அரசியல் நிகழ்வின் பின்புலத்தைக் கொண்டிருக்கிறது. இந்து மத சடங்குகளின்றி திருமணம் செய்வது திருமணமே அல்ல என நீதிமன்றங்களில் தீர்ப்பு வந்த பின்பும் ஆயிரக்கணக்கான சாதி மற்றும் சடங்கு மறுப்புத் திருமணங்கள் நடத்தப்பட்டு, அவை அரசியல் இயக்கம் என பரிணாமம் பெற்று ஆட்சியைப் பிடித்த பின்பு அங்கீகாரம் பெற்றன. ஆனால் இன்று தமிழகத்தில் சாதி மறுப்புத் திருமணம் செய்த இணையர்கள் வாழவே முடியாது என்ற ஆபத்தான அச்சுறுத்தலை இளவரசனின் மரணம் ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் கிராமங்களில் ஆட்சி செய்யும் ஆதிக்க சாதியின் வன்மம் - அதன் இருப்பை கேள்விக்குள்ளாக்கும் மாற்று அரசியல் இல்லாமையின் வெளிப்பாடே நடந்தேறிய வன்முறைகள்.

திராவிட அரசியலின் முக்கிய பண்பாட்டுக் கூறுகளாக கருதப்பட்ட சாதி மறுப்புத் திருமணம் செய்தோர் சேர்ந்து இயக்கமாக வாழ்தல், தொடர்ந்து சாதி மறுப்புத் திருமணங்களை ஊக்குவித்தல், அதற்கான பிரச்சாரத்தை முன்னெடுத்தல் என்ற சமூக நீதிக்கான செயல்பாடுகளை எந்த தேர்தல் பாதை அரசியல் கட்சியினரும் முன்னெடுக்கவில்லை. அது திராவிடர் கழகம் அல்லது அதிலிருந்து பிரிந்த பெரியார் திராவிடர் கழகம் அல்லது திராவிடர் விடுதலைக் கழகம் போன்ற சிறிய இயக்கங்களின் செயல்பாடுகள் என குறுகிப் போயுள்ளது. இத்தனைக்கும் ஒரு சாட்சியின் முன் உறுதிமொழி ஏற்று, திருமணம் செய்வதாக ஒப்புக்கொள்வதே, இந்து திருமணச் சட்டத்தில் சட்டப் பூர்வமான திருமணம் என்று சட்டம் உள்ள மாநிலமான தமிழகத்தில் சாதி மறுப்புத் திருமணங்களை ஊக்குவித்தல் இல்லாமல் போய்விட்டது. மேலும் மிக மோசமான வன்முறைகள் காதலர்கள் மீது சாதிய கெளரவத்திற்காக நடந்தேறியும் வருகின்றது, காதல் இணையர்களான திவ்யாவும், இளவரசனும் கடந்த ஆண்டு ஓடிப்போகாமல் போயிருந்தால் நிச்சயம் அவர்கள் ஆதிக்க சமூகத்தால் அன்றே மோசமான விளைவினை எதிர்கொண்டிருப்பார்கள்.

கடந்த 2000 ஆண்டிலிருந்து 2010 வரை தமிழகத்தில் காதல் விவகாரம் தொடர்பாக நடந்தேறிய கொலைகள் பற்றி ஓர் ஆய்வு மேற்கொண்ட போது காவல் நிலையங்களில் பதியப்பட்ட சில கொலைகள் பற்றி அறிய முடிந்தது.

2003 ஜீலை மாதம் கடலூர் மாவட்டம் விருதாசலம் அருகில் உள்ள புதுகோரைப்பட்டி கிராமத்தில் ஆதிதிராவிடர் சாதியினைச் சார்ந்த இளைஞன் முருகேசன். இவர் அண்ணாமலை பல்கலைகழகத்தில் கெமிக்கல் இஞ்சினியரிங் பட்டம் பெற்றவர். கிராமத்தில் சொந்தமான விவசாய நிலங்கள் என பிறரைச் சாராது வாழும் பொருளாதார நிலை கொண்ட குடும்பப் பின்னணியில் வளர்ந்தவர். அவர் அக் கிராமத்தைச் சார்ந்த வன்னியர் சாதிப் பெண்ணான கண்ணகியினை காதலித்தார். இருவரும் 2003 மே மாதம் ரகசியமாக பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். பின் முருகேசனுக்கு ஒரு நல்ல வேலை கிடைத்ததும் தங்களின் திருமணத்தை வெளிப்படையாக சொல்வது என முடிவு செய்திருந்தனர். முருகேசனுக்கு திருப்பூரில் வேலை கிடைத்ததும் கண்னகியினை அழைத்துச் சென்றுவிட்டார். கண்னகியின் தகப்பனார் கிராமப் பஞ்சாயத்து தலைவர். தனது சாதிய சக்திகளால் இரவோடு இரவாக முருகேசனின் தகப்பனார், சித்தப்பா, தம்பி என அவரின் சொந்தக்காரர்களை கடத்தி முருகேசன், கண்னகி உள்ள இடம் குறித்து கேட்டு சித்தரவதைக்குள்ளாக்கினர்.

நெய்வேலி நிலக்கரி சுரக்கத்திற்கு நிலக்கரி கண்டறிவதற்காக தோண்டப்பட்ட ஆழ்துளாய் கிணற்றுக் குழியில் கயிறு கட்டி முருகேசனின் தம்பி தொங்கவிடப்படும் அளவு சித்திரவதைக்கு அந்த குடும்பம் உட்படுத்தப்பட்டது.. இறுதியில் முருகேசனின் சித்தப்பா மூலம் காதல் தம்பதியரை கிராமத்தில் சமாதானம் பேசுவதற்காக வரவழைக்கின்றனர். அதனை நம்பி ஊருக்கு வந்தார்கள் காதலர்கள். ஆனால் ஊரின் நடுவில் ஒட்டுமொத்த கிராமமுமே வேடிக்கை பார்க்க கண்ணகிக்கும், முருகேசனுக்கும் வாயில் பூச்சி மருந்து விஷம் வலுக்கட்டாயமாக புகட்டப்பட்டது. அவர்கள் திமிறியபோது காதில் அந்த விஷம் ஊற்றப்பட்டது. அவர்கள் துடிதுடித்து செத்த பின்பு இருவரின் உடலும் கிராம சுடுகாட்டில் எரிக்கப்பட்டது. இந்த நிகழ்வினை காவல் நிலையத்தில் சொன்ன முருகேசனின் தாயார் காவல் நிலையத்தில் தாக்கப்பட்டார். பின் காவல்துறையினரோ கண்ணகியினை அவர் தந்தை கொன்றதாகவும், முருகேசனை, முருகேசனின் தந்தை மற்றும் சித்தப்பா கொன்றதாகவும் வழக்கு தாக்கல் செய்தது.

சாட்சிகளை குற்றவாளிகளாக மாற்றும் போது சாட்சி சொல்ல ஆளின்றிப் போய்விடும் என்பதே காவல்துறையின் ஆதிக்க சாதி நலன்பேணும் கீழ்த்தரமான அந்த யுக்தி. இதில் வேடிக்கை என்னவென்றால் கண்ணகியின் தகப்பனார் துரைசாமி பஞ்சாயத்துத் தலைவர் என்பதால் ஒரு மாதத்திற்கு மேல் சிறையிலிருந்தால் பஞ்சாயத்துத் தலைவர் பதவி பறி போய்விடும். எனவே ஜாமீனில் விடுதலை செய்யவேண்டும் என மாவட்ட நீதிமன்றத்தில் வேண்டப்பட்டது, அதனை ஏற்று சிறைப்படுத்தப்பட்ட மூன்றே வாரத்தில் குற்றவாளிகளை விடுதலை செய்தது நீதிமன்றம்.(1) இவ் வழக்கு சி.பி.ஐ புலன் விசாரணைக்கு உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் பொ.இரத்தினம் முயற்சியால் மாற்றப்பட்ட போதும், பழைய நிலையே தொடர்கிறது. இது குறித்து தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்னமும் விசாரனைக்கு எடுத்துக்கொள்ளாமல் நிலுவையில் உள்ளது.

கடந்த 2007 ல் விழுப்புரம் மாவட்டம் சின்ன சேலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மறவநத்தம் கிராமத்தைச் சார்ந்த சின்னசாமியின் மகள் சுதா, கொங்கு வேளாளர் சாதியினைச் சார்ந்தவர். அவர் திருச்செங்கோட்டில் பொறியியல் கல்லூரியில் படிக்கும்போது தன்னுடன் படித்த ஈரோடு அரச்சலூரைச் சார்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரை காதலித்தார். தமிழ்ச்செல்வன் முதலியார் சாதியினைச் சார்ந்தவர். படிப்பு முடிந்த பின்னர் காதலர்கள் திருமணம் செய்து கொள்கின்றனர். தனது தந்தையால் தனக்கு ஆபத்து ஏற்படும் என்பதை உணர்ந்த சுதா, தனது கணவனை அழைத்துக்கொண்டு வட இந்தியா சென்று விடுகின்றார். இருவரும் அங்கு பணியில் இருக்கின்றனர். சில மாதங்கள் கழித்து தனது மகள் வட இந்தியாவில் இருப்பதையும், அவர் அந்த சமயம் கர்ப்பமாக இருப்பதையும் அறிந்த சின்னசாமி தனது மகளை ஏற்றுக் கொள்வதாகவும், அவளுக்கு வளைகாப்பு நடத்த விரும்புவதாகவும் தகவல்களைக் கொடுத்து தனது ஊருக்கு வரும்படி அழைக்கின்றார். இந்த வார்த்தைகளை நம்பி தனது குடும்பத்தினரை காண மறவநத்தம் வந்தபோது இருவரையும் வரவேற்ற சுதாவின் தந்தையும், சகோதரன் சங்கர் என்பவனும், அடுத்த சில நொடியில் இருப்பு பைப்பால் தாக்கி சுதாவை கொலை செய்து விட்டனர்.(2)

பழனியில் ஆசிரியர் பட்டயப்படிப்பில் படித்த பன்னாரி என்பவரும் திருச்சி மாவட்டம் சோமரசம் பேட்டையினை சேர்ந்த பிரியாவும் காதலித்து வந்தனர். பன்னாரி பட்டியல் சாதியான பள்ளர் சாதியினைச் சார்ந்தவர். பிரியாவோ கள்ளர் சாதியினைச் சார்ந்தவர். இருவரும் திருமணம் செய்துகொண்டு உடுமலைப்பேட்டை மடத்துகுளத்தில் உள்ள பன்னாரியின் சகோதரியின் வீட்டில் வசித்து வந்தனர். சில நாட்கள் கழித்து அவர்கள் வீட்டிற்கு வந்த பிரியாவின் தந்தை மற்றும் இரண்டு உறவுக்காரர்கள் பிரியாவுடன் பேச வந்ததாகக் கூறிவிட்டு, பிரியாவின் வீட்டில் நுழைந்து கதவினை தாழிட்டுக்கொண்டு பிரியாவை கொலை செய்துவிட்டனர்.(3)

இது போல தமிழகத்தில் நடந்தேறிய சாதி வெறிக்கொலைகளை நாம் ஒரு நீண்ட பட்டியலிட முடியும். தமிழகம் எந்த விதத்திலும் காதலர்கள் மீது நடக்கும் வன்முறை இல்லா பரந்த முற்போக்கு கருத்துகளின் தாக்கம் உள்ள மாநிலம் என மார் தட்டமுடியாது. ஆனால் இந்த வழக்குகளில் பெரும்பாலும் குற்றவாளிகள் நீதிமன்றத்தில் சாட்சிகளைக் கலைத்து, பிறல் சாட்சியாக மாற்றி, தண்டனையிலிருந்து தப்பித்துவிட்டனர். மடத்துக்குளத்தில் கொல்லப்பட்ட பிரியாவின் வழக்கில் சாட்சிகள் பிறல்சாட்சியாக்கி குற்றவாளிகள் வழக்கில் தங்களுக்கு எதிராக சாட்சியமின்றி செய்தனர். நீதிமன்றம் குற்றவாளிகளை விடுதலை செய்யத் தள்ளப்பட்டது. இந்த கொடூர கொலைச் செயல் புரிந்தோர் எளிதில் விடுவிக்கப்பட்டனர். எந்த அக்கறையும் இந்த காதலர்கள் மீது காட்ட அரசும், சமூகமும் தயாரில்லை. இந்த காதலர்களை கொலை செய்த குற்றவாளிகளின் விடுதலை எதிர்காலத்தில் இத்தகைய குற்றங்கள் சமூகத்தில் அதிகரிக்க வாய்ப்பினை ஏற்படுத்திவிடும். தமிழக காவல்துறை இவ் வழக்குகளில் சாட்சிகளையும் பாதுகாக்கவில்லை. விடுதலைக்கு எதிராக மேல் முறையீட்டையும் செய்யவில்லை.

கிராமப்புறங்களில் சாதியின் ஆதிக்கத்தால் நடைபெறும் - கெளரவக்கொலைகள் என்று பொதுவில் வகைப்படுத்தப்படும் - பெரும்பாலான கொலைகள் தற்கொலைகள் என முடிக்கப்படுகின்றன. மொத்தத்தில் அரசுக்கும் அதன் வெளிப்படையான வடிவமாக உள்ள காவல்துறைக்கும் இதில் எந்த அக்கறையுமில்லை. இந்தக் கொலைகளை செய்த கொலைகாரகளுக்கு தூக்கு கயிறு காத்திருப்பதாக உச்சநீதிமன்றத்தில் 2006 ஆண்டு நீதிபதி மார்க்கண்டேய கட்சு, லதாசிங் / எதிர்/ உத்திரப் பிரதேச அரசு,(4)என்ற வழக்கில் எச்சரிக்கை செய்தார். மேலும் சாதிய சமூகம் பெரும் சாபக்கேடு என்றும் இந்த சாதிய முறை நாட்டில் உள்ள எல்லா நல்லவற்றையும் பாழ்படுத்திவிடும் ஆபத்தானதையும், அதனை ஒழிக்க சாதி மறுப்புத் திருமணங்களே தீர்வுகள் எனவும் குறிப்பிட்டார். அரசும், சமூகமும் இந்த காதலர்களை பாதுகாக்கவேண்டும், காதல் ஒரு மனித உரிமை என்று உரக்கப் பேசினார். (4)

மேலும் 2011ல் 'ஆறுமுக சேர்வை /எதிர்/ தமிழ்நாடு அரசு' என்ற வழக்கில் சாதியின் பெயரால் மற்றொரு மனிதனின் மனதை புண்படுத்த அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது. ஆனால் எதார்த்ததில் காதல் திருமணங்களுக்கு எதிராக நீளும் வன்முறைகளைத் தடுக்க ஒரு தொலைநோக்குப் பார்வையில் எவ்விதமான தடுப்பு நடவடிக்கைகளையும் அரசு எடுக்கத் தயாரில்லை. வட இந்தியாவில் பல்வேறு காதலர்களின் கொலைக்கு காப் பஞ்சாயத்துக்கள் என்ற சாதிய கட்டப் பஞ்சாயத்து காரணமாக உள்ளது, தமிழகத்தில் மேலே விவரிக்கப்பட்ட சம்பவங்கள் இளவரசன், திவ்யா நிகழ்வு உள்ளிட்ட எல்லாவற்றிலும் சாதிய கட்டப் பஞ்சாயத்துக்களே உயிர் வாழும் உரிமையினை முடிவு செய்யும் அமைப்பாக உள்ளன.

பெண்களை மோசமான இத்தகைய மிரட்டல்கள் மற்றும் வன்முறைகள் மூலமாக தங்களின் கட்டுப்பாட்டிலேயே வைத்துக் கொள்ள சாதிய சமூகம் முயலுகின்றது. அதன் சட்டங்களை, தடைகளை மீறுவோரை அது தண்டிக்கிறது. இளவரசன், திவ்யா பிரச்சனையினை உற்று நோக்கும் ஒவ்வொருவரும் இதனை உணர முடியும், இத்தகைய போக்கு நமது சனநாயகத்தின் அடிப்படையினை கேள்விக்குள்ளாக்குகிறது. இத்தகைய பஞ்சாயத்துகளை தடை செய்ய மத்திய சட்ட ஆணையம் பரிந்துரைத்துள்ள திருமணம் தொடர்பன நிகழ்வுகளில் தலையிடுவதை தடுக்கும் சட்டம் The prohibition of unlawful assembly (interference with the freedom of matrimonial alliance ) bill 2011 சட்டமாக மாற்றப்படாமல் வெறும் பரிசீலனை நிலையிலேயே உள்ளது. இந்த "காப்" பஞ்சாயத்து போன்ற கட்டப் பஞ்சாயத்துகள் ஆதிக்க சாதியான ஜாட் சாதியின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த சாதியினரே வாக்குகளை தீர்மானிப்பவர்களாக உள்ளனர். ஆளும் கட்சி, எதிர்க் கட்சி என எல்லா கட்சியிலும் உள்ள அரசியல்வாதிகளும் இதன் ஆதரவில் தேர்வு செய்யப்படுகின்றனர். பலர் இந்த பஞ்சாயத்துகளின் தீவிர ஆதரவாளர்களாகவும் உள்ளனர். இந்த பஞ்சாயத்துகள் நாட்டின் சட்டங்களைப் புறக்கணித்து விட்டு தங்களின் சாதிய சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன. வேறு குலத்தில் அல்லது கூட்டத்தில் திருமணம் செய்வதைத் தடுத்தல், மீறி திருமணம் செய்தால் கொலை செய்தல் என அதன் சட்டவிரோத செயல்கள் தொடர்கின்றன. சுயநல அரசியல்வாதிகளுக்கு காப் பஞ்சாயத்து ஆதரவு தேவை என்பதால் இந்த காப் பஞ்சாயத்துக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கின்றனர். இதனால் திருமண நிகழ்வுகளில் பிறர் தலையிடுவதைத் தடுக்கும் சட்டம் உருவாக்க வேண்டி சட்ட கமிசன் கொடுத்த பரிந்துரை பாராளுமன்றத்தில் சட்டமாக மாற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

வெறுமனே ஒரு சட்டம் மட்டும் புரையோடிப்போன சாதிய முறையினை மாற்றிவிடாது. ஆனால் திருமண நிகழ்வுகளில் விருப்பம் போல மணத்தேர்வு செய்வதில் அரசின் தார்மீக ஆதரவு நிலை என்ற ஒரு சட்ட நிலைக்கு இந்த சட்ட உருவாக்குதல் உதவும். சட்டம் ஒழுங்கு மாநிலப்பட்டியல் என்பதால் தமிழக அரசு இது போன்ற ஒரு சட்டத்தை தமிழக சட்டமன்றத்தில் உருவாக்கி தனது நிலைபாட்டை வெளிப்படுத்த வேண்டும். சாதியப் பெருமை பேசி தனிமனித சுதந்திரத்தில் தலையீடு செய்யும் கட்டப் பஞ்சாயத்துகள், இயக்கங்கள் மற்றும் அதன் நடவடிக்கைகள் சட்டவிரோதமானது என தடுக்கப்பட வேண்டியது அவசியம். காவல்துறைக்கும் இந்த காதல் திருமண வழக்குகளில் மனித உரிமை பாதுகாப்புடன் துரிதமாக செயல்பட பயிற்றுவிக்கப்படவேண்டியதும் அவசியமாகும். திருமணம் மற்றும் காதலர் பிரச்சனைகளில் உயர்சாதி, பிற்போக்கு மனப்பான்மையுடன் காவல்துறையின் செயல்பாடுகள் உள்ளதை பல்வேறு ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. எனவே இப் போக்கு மாற்றப்படவேண்டும். வட இந்தியாவில் சாதிய கட்டப் பஞ்சாயத்து வன்முறைக்கு காதலர்களைப் பிடித்து ஒப்படைக்கும் வேலைக்கு காவல்துறை துணை போனதை மக்கள் சனநாயக உரிமைக்கழகத்தின் (PUDR) 2003 ஆம் வருட அறிக்கை வெளிப்படுத்துகின்றது.

டாக்டர்.பாபா சாகிப் அம்பேத்கர் சாதி ஒழிப்புக் கட்டுரையில் கீழ் கண்டவாறு குறிப்பிட்டார்.

"உங்கள் சாதியை விட்டு இன்னொரு சாதியினரோடு திருமணம் செய்து கொள்ளுங்கள் என எவ்வளவு தான் பிரச்சாரம் செய்தாலும் அதை மக்கள் ஏற்று கொள்ள மறுக்கிறார்களே, ஏன்? சாதி செங்கற்களால் கட்டப்பட்ட சுவர் அல்ல. ஒரு தடுப்பினை எடுத்து விட்டால் சாதியினை ஒழித்து விடலாம் என நினைக்கக் கூடாது. சாதி என்பது ஓர் உணர்வு. அது ஒரு மனநிலை. இந்துக்கள் சாதியினை ஏன் பின்பற்றுகிறார்கள்? அது தவறானது, மனித உரிமை மீறல் என்பதால் அதை அவர்கள் பின்பற்றவில்லை. அவர்கள் தங்கள் மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுடையவர்களாக இருக்கிறார்கள். அதனாலே அவர்கள் சாதிமுறையை கடைபிடிப்பவர்களாக இருக்கிறார்கள்." என்றார்.

சாதியம், சனநாயக பண்புகளுக்கும் உரிமைகளுக்கும் எதிரானதாக மாறிய நிலையில் மக்களின் மனநிலையில் ஆதிக்க உணர்வை கலைத்து, சமூகத்தை சனநாயகப்படுத்தும் முக்கிய பணியினை செய்யவேண்டியது அரசாங்கத்தின் கடமை. தீண்டாமை என்ற சாதியத்தின் கோரத்தை அழிக்க எடுக்கும் தொலைநோக்கு செயல்பாடுகளே சாதிய வன்செயல்களுக்கான தீர்வை நோக்கி நகர்த்தும். சாதிய அரசியல் சக்திகளை அம்பலப்படுத்துவது, புறக்கணிப்பது மேலும் பொது வெளியில் தனிமைப்படுத்துவதும் அவசியமானதாகும். சாதிய வன்செயல்புரிந்தோர் மீது உறுதியாக எடுக்கும் தடுப்பு மற்றும் சட்டரீதியான தண்டனை என்பது சமூக அமைதிக்கும், பாதுகாப்புக்கும் வழி வகுக்கும். சமூகத்தின் பெரும்பாலான நல்ல சக்திகள் வெறும் பார்வையாளர்களாகவே நில்லாது சனநாயக கடமையாற்ற பங்கேற்பாளர்களாக மாறவேண்டியதும் அவசியம்.

உதவிய குறிப்புகள்:

1.Killing for caste honor -Viswanathan, Frontline 12 sept,2003
2.Vilupuram dist Chinna salem police station cr.no. 587/2007 case
3.Tirupur dist Madaththukulam police station cr.no. 628/2009 case
4.Lata Singh vs State Of U.P. & Another on 7 July, 2006 - Indian Kanoon

Pin It