தமிழ்க் கலை இலக்கியப் பேரவை வேண்டுகோள்

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (BAPASI) சார்பில் வருகின்ற செப்டம்பர் மாத இறுதியில் இலங்கையில் புத்தகக் கண்காட்சி நடத்தவிருப்பதாக புத்தகப் பதிப்பாளர்களுக்கு, அதாவது பப்பாசியில் உறுப்பினர்களாக உறுப்புவகிக்கும் அனைத்து பதிப்பாளர்களுக்கும் கடிதம் அனுப்பப் பட்டுள்ளது.

அக்கடிதத்தில் “இலங்கை யாழ்ப்பாண நகரில் தமிழ் புத்தகத் திருவிழா நடத்த வேண்டும் என்று, யாழ்ப்பாண தமிழர்கள் கேட்டுக் கொண்டதாகவும், யாழ்ப் பாண மாவட்ட நிர்வாகம், யாழ்ப்பணம் மாநகராட்சி மற்றும் யாழ்ப் பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகம் ஆகியோர் முழு ஒத்துழைப்பு தருவாதகவும்,” அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அது குறித்து விவாதித்து முடிவு எடுக்க சிறப்புக்கூட்டமாக பப்பாசியின் சார்பில் வருகிற 27.7.2013 செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு சென்னை தியாகராயர் நகர், ஸ்ரீபாலாஜி திருமண அரங்கத்தில் நடைபெற இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

கடந்த 2008-2009 இல் இந்தியா உள்ளிட்ட பலநாடுகளின் ஆதரவோடு ஒன்றரை இலட்சம் ஈழத்தமிழர்களை கொன்றொழித்த மனித குலப்பகைவன் இராசபட்சே கும்பலுக்கு எதிராக தமிழகத் தமிழர்கள் மற்றும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள், சர்வதேச நாடுகளின் மனித உரிமை அமைப்புகள் என தொடர்ந்து இலங்கைக்கு எதிரான கண்டனங்களையும், போராட்டங்களையும் நடத்திவரும் சூழலில், தமிழ் நாட்டிலிருந்து புத்தகப் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனை யாளர்கள் இலங்கைக்குச் சென்று புத்தகக் கண்காட்சி நடத்தச் செல்வது கண்டனத்திற்குரியது.

ஒரு சமூகத்தை ஒவ்வொரு தளத்திலிருந்தும் அடுத்தத் தளத்திற்கு உந்தித் தள்ளும் வலிமை மிக்கவை அறிவு ஆயுதங்கள் புத்தகங்கள். ”ஒரு நூலகம் திறக்கப்பட்டால் ஒரு சிறைச்சாலை மூடப்படும்” என்பது நம் முன்னோர்களின் கூற்று. அறிவையும் ஆற்றலையும் அள்ளி வழங்கும் தாய்க்கு ஈடானவை நூலகங்கள். அப்படி ஒரு சிறப்பு வாய்ந்த, பல இலட்சம் நூல்கள் தாங்கிய யாழ் நூலகத்தை 1981 இல் சிங்களப் பேரினவாதம் எரித்துச் சாம்பலாக்கியது.

தமிழர்கள் அனைவரும் சுயமாக சிந்திக்கும் உரிமை மீதும், அறிவைத் தேடும் மானுட இயல்பு மீதும் எறியப்பட்ட கொள்ளி என்றே அதை கருதவேண்டும். ஆற்றல் உள்ள இனமாக இல்லாது செய்துவிட்டால் தொடர்ந்து அடிமைகளாகவே வைத்திருக்கலாம் என்ற முடிவுகளோடுதான் சிங்கள இனவெறி அரசு யாழ் நூலகத்தைத் தீயிட்டது.

தமிழர்களின் அறிவு தளத்தை தரைமட்டமாக்கத் துடிக்கும் சிங்கள இன வெறியர் களுக்கு, அவர்களின் அழைப்பின் பேரில், அறிவை புகட்டும் பணியை செய்யும் தமிழகப்பதிப்பாளர்கள் இலங்கைக்கு புத்தகக் கண்காட்சி நடத்த செல்வது வேதனைக்குரியதாகும்.

தமிழக அரசு, இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடைவிதிக்கவும், இலங்கை விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் ஆசிய தடகளப்போட்டியை தமிழகத்தில் நடத்த முடியாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகச் சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் (பப்பாசி) இலங்கைக்கு புத்தகக் கண்காட்சி நடத்த செல்லக்கூடாது. அதை உடனடியாக ரத்து செய்யவேண்டும் என தமிழ்க்கலை இலக்கியப் பேரவையின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இது குறித்து முடிவு எடுக்கும் ஆலோசனைக் கூட்டத்திலும், புத்தகக் கண் காட்சி நடத்த இலங்கைக்கு செல்லக்கூடாது” என்றே தீர்மானம் நிறை வேற்றவேண்டும் என்றும் கேட்டுக்கெள்கிறேன்.

- கவிபாஸ்கர், செயலாளர், த.க.இ.பே

Pin It