நிலம், நீர், காற்று முதலிய இயற்கை மூலாதாரங்கள் மாசுபாடு அடைவதால் சுற்றுச்சூழல் சீர்கெட்டு வருகிறது. காடுகளில் மரங்கள் வெட்டப்படுவதாலும், ஆறுகளில் மணல் கொள்ளையடிக்கப்படுவதாலும், தொழிற்சாலைகளிலிருந்தும், வாகனங்களிலிருந்தும் வரும் கழிவுகளும் புகையும் காற்றில் கலப்பதால் இயற்கைச் சூழல் நாளும் நாசமாக்கப்பட்டு வருகிறது.

 சுற்றுச் சூழல் கெடுவதால் மனித குலம் மட்டுமல்ல, விலங்கினங்களும், தாவர இனங்களும் அழிவுக்கு உள்ளாகி வருகின்றன. இதனால், இயற்கைச் சமநிலை இழந்து, பருவ காலங்கள் மாறி கடலில் ஆழிப் பேரலைகளும், கொந்தளிப்புகளும், நில நடுக்கங்களும், கடும் புயல்களும் ஏற்படுகின்றன. சுற்றுச்சூழல் வெப்பமடைவதாலும், பனிக்கட்டிகள் உருகி கடலின் நீர் மட்டம் உயர்வதாலும், கடலோர மக்களின் வாழ்க்கை சீர்கெடுகிறது.

 வாகனங்கள் எழுப்பும் ஒலி வழியும், அவற்றை இயக்கும் எரிபொருள் வழியும் காற்று மாசடைகிறது. அதனால், மனிதன் சுவாசிப்பதும் கூட சிக்கலுக்குள்ளாகிறது. மேலும், ஞெகிழிப் (பிளாஸ்டிக்) பொருட்களாலும் மின்னணு சாதனப் பொருட்களின் கழிவுகளினாலும் சுற்றுச்சூழல் கட்டுடைந்து சிதறுகிறது.

 சுற்றுச் சூழலை பாதுகாத்திட உலக அளவிலும், இந்தியாவிலும் பல இயக்கங்கள், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, போராடி வருகின்றன.

 திருவள்ளுவர் தமது திருக்குறளில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, எழுதிச்சென்றுள்ள கருத்துக்களையும், அறிவுரைகளையும் கற்றாலே சுற்றுசூழலின் தூய்மை நன்கு உணரப்படும்!

 “புறந்தூய்மை நீரான் அமையும், அகந் தூய்மை
 வாய்மையால் காணப் படும்”  (குறள்– 298)–என்னும் குறளில் வரும்,

 ‘புறந்தூய்மை’-என்பது நாம் அன்றாடம் குளித்தல், துணிகளைத் துவைத்தல், பாத்திரங்களைக் கழுவுதல், வீட்டைக் ஒழுங்குசெய்தல் முதலியனதானே? இந்தியாவில், மக்கள் அதிகமாக வாழும் இடங்களில், முழுசுகாதாரம் என்பது கேள்விக்குறியாக உள்ளது. கண்ட இடங்களில் மலம், சிறுநீர் கழிப்பது, எச்சில் துப்புவது, ஈ மொய்த்த உணவுப் பண்டங்களை வாங்கி உண்பது, சாக்கடை வாய்க்கால் ஒரங்களில் குடியிருப்பது, கழிவு நிர் தேங்கி நிற்கும் இடங்களை சுத்தப்படுத்தாதது, தெருக்களில் குப்பைகளைக் கொட்டுவது போன்றவற்றால் புறந்தூய்மை சீர்கேடு அடைகிறது, எனவே, மக்களும், அரசும் ‘புறந்தூய்மை’யை ஏற்படுத்துவது மிகவும் அவசியம். அதன் மூலம் சுற்றுச் சூழலை பாதுகாக்க வேண்டும் என்பதை சொல்லாமல் சொல்லி வலியுறுத்துகிறார் வள்ளுவர்.

 “கழா அக்கால் பள்ளியுள் வைத்தாற்றல் சான்றோர்
  குழா அத்துப் பேதை புகல்”. (குறள் – 840)

 அறிவுச் சான்றோர் சூழ்ந்த அவைதனில் அறிவில்லாதவன் நுழைதல், சுத்தமில்லாக் கால்களைப் பஞ்சு மெத்தைப் படுக்கையுள் வைத்தாற் போன்றதாகும்.

 தமிழகத்தில் பண்டைக்காலம் தொட்டு கை,கால் கழுவிய பின்னர் உணவு உண்ணும் பழக்கம் சிறப்பாகக் கையாளப்பட்டு வருகிறது. அதனால், எப்போதும் மக்கள் கை, கால் கழுவிய பின்னர்தான் உணவு உண்ணவேண்டும். இல்லையெனில் தொற்று நோய்கள் பரவிடும்!

 வீட்டின் அருகிலும், தெருக்களிலும் கழிவுநீர் தேங்குவதால் கொசு உற்பத்தியாகிறது. மலேரியா, வாந்திபேதி, யானைக்கால் நோய் போன்ற நோய்கள் தொற்றுவதால், மக்கள் மாண்டுபோகின்றனர். உணவும், சமைக்கும் பாத்திரங்களும் சுத்தமாக இருக்க வேண்டும்.

 “பண்பு இலான் பெற்ற பெருஞ்செல்வம்; நன்பால்
 கலந்தீமை யால் திரிந்தற்று” (குறள் – 1000)

 பண்புகள் இல்லாத ஒருவர் பெற்ற பெருஞ்செல்வம், நல்ல பால், அது வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தின் அழுக்கினால் எவருக்கும் பயன்படாமல் திரிந்து கெட்டாற் போன்றதாகும்.

 “நீர் இன்று அமையாது உலகெனின், யார்யார்க்கும்
 வான் இன்று அமையாது ஒழுக்கு”. (குறள் – 20)

 நீரில்லாமல் உலக வாழ்வு அமையாது அதைப்போல் நீரைத் தரும் வான்மழை இல்லாது போனால் எல்லோரிடமும் ஒழுக்கம் அமையாது. எனவே, மழை வளம் பெருக, மரங்களை வளர்த்தல் இன்றியமையாதது என்பதை வலியுறுத்தவா வேண்டும்? !

 தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரின் நச்சுத்தன்மையால் நீரின் மென்மை கெடுகிறது. தமிழகத்தில் பாலாறு, பவானி, காவிரி, வைகை, அமராவதி, மணிமுத்தாறு, சிறுவாணி முதலிய ஆறுகளில் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் கலப்பதால் ஆற்றுநீர் கெட்டுப் போகிறது. கெட்டுப்போன குடிநீரும், பாசன நீரும் நிலத்தையும், நிலத்தில் வாழும் உயிரினங்களையும் பலிகொள்கின்றன.

 “நிலத்து இயல்பான் நீர்திரிந்து அற்றாகும்; மாந்தர்க்கு
 இனத்தியல்ப தாகும் அறிவு” (குறள் – 452)

 உதாரணமாக, மணற்பாங்கான இடத்தில் வீழ்ந்த நீர் வெண்மையாகவும், செம்மண் நிலத்தில் வீழ்ந்த நீர் செம்மையாகவும், களிமண் நிலத்தில் விழுந்த நீர் கலங்கலாகவும் ஆகிவிடுகிறது. தொழிற்சாலைக் கழிவுகள் கலப்பதால் ஆறுகள், ஏரிகள், கிணறுகள் முதலியன பாதிக்கப்பட்டு சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது. அந்த நீரினால் நிலமும் விவசாயம் செய்யப் பயன்படாத தன்மைக்கு மாற்றப்பட்டு மலட்டுத்தன்மையை அடைகிறது இது சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கருத்து.

 “நிழல்நீரும் இன்னாத இன்னா; தமர் நீரும்
 இன்னாவாம் இன்னா செயின்”. (குறள் – 881)

 நிழலில் கிடக்கும் நீர் பருகிட இனிதேயானாலும் தீமை பயப்பனவாக இருந்தால், அது தீயதேயாகும். மேலும், நிழல் தரும் மரங்களும், வளமான காடுகளும், வற்றாத நதிகளும் இருந்தால் சுற்றுச் சூழல் பாதிப்படையாது. மக்கள் நலமுடன் வாழ்வர் என்பதையே வள்ளுவர் வலியுறுத்துகிறார்.

 “நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும், கடிந்தெழிலி
 தான் நல்கா தாகி விடின்”. (குறள் – 17)

 மேகம் கருத்து மின்னிப் பெருமழையாகப் பெய்து நீரைக் கொடுக்காமல் போனால், பெரிய கடலின் நீர்வளங் கூடக் குன்றிப் போகும். கடல் நீரில் உப்புத் தன்மை அதிகமாவதற்குக் காரணம் மழை இன்மையேயாகும். கடல் நீரில் உப்புத் தன்மை அதிகரிப்பதால் கடல் வாழ் உயிரினங்கள் இறக்க வாய்ப்புண்டு. மேலும் முத்து, பவழம் முதலியன குறைய வாய்ப்புண்டு. கடற்கரையோரங்களும் பாதிப்புக்கு உள்ளாகும். மீன் வளம் குறைந்து மீன்பிடித் தொழில் பாதித்து, வருமான இழப்பும் ஏற்படும்.

“ஊருணி நீர்நிறைந்தற்றே உலக அவாம்
 பேரறி வாளன் திரு. (குறள் – 215)

 ஊர்களில் உள்ள நீர் நிலைகளில் நீர் நிறைந்து இருக்க வேண்டும். மழை பொழியாவிட்டால் நீர் நிலைகள் நிரம்பாது. தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படும். மண் வளம் குன்றும். தமிழகத்தில் பழங்காலம் முதலே குளம், ஏரி, கண்மாய் வெட்டுதல், ஆழப்படுத்துதல் போன்றவைகள் மூலம் நீர்நிலைகள் பாதுகாக்கப்பட்டு வந்தன. ஆனால், இன்றைய தமிழகத்தில் ஏரி, குளம், கண்மாய் முதலிய நீர்நிலைகள் வீட்டுமனைகளாகவும், குடியிருப்புகளாகவும் மாற்றப்பட்டுவருகின்றன. அதனால் மழைபொழியும் பொழுது மழைநீர் வெளியேற முடியாமல் உள்ளது. “எங்கள் ஊருக்கு அருகில் ஏரி இருந்தது என்பது அந்தக் காலநிலை, ஏரிக்குள் எங்கள் ஊர் இருக்கிறது என்பது இந்தக் காலநிலை! அதனால், எங்கள் ஊர் வெள்ளத்தில் மிதக்கின்றது” -என்பது ஓர் அவலமான நிலை! இந்நிலை மாற வேண்டாமா? அரசு தீவிர நடவடிக்கைகள் மூலம் நீர் நிலைகளை பாதுகாத்திட வேண்டும்!

“விசும்பின் துளிவீழின் அல்லாற் மற்றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது”. (குறள் – 16)

 விண்ணில் இருந்து மழைத்துளி விழாவிட்டால் இம்மண்ணுலகில், பசும்புல்லின் தலையைக்கூட காண முடியாது. ஆக, மண் வளம்பெற விண்ணிலிருந்து மழை பொழிவது அவசியம். மேலும், மழையினால் மாசுகள் கட்டுப்படுத்தப்படும். மழையில்லாவிட்டால் சுற்றுச்சூழல் சீர்கேடு அடையும். வேளாண்மை அழிந்து உணவுப் பஞ்சம் ஏற்படும் என வள்ளுவப் பேராசான் எச்சரிக்கிறார்.

“மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்
காடும் உடையது அரண்”.  (குறள் – 742)

வற்றாத மணியான நீர் உடைய அகழியும், விரிந்த மண்பரப்பும், உயர்ந்த மலைகளும், அடர்ந்த நிழல் தரும் மரங்ளைக் கொண்ட காடும் ஒரு நாட்டைப் பாதுகாக்கும் கோட்டையாகும் என்கிறார் வள்ளுவர். ஆனால், ஆறுகள் ஆக்கிரமிக்கப்படுவதும், மணற்கொள்ளை நடப்பதும், கல் உடைக்க மலைகளைத் தகர்ப்பதும், காடுகளை அழிப்பதும், மரங்களை வெட்டி வீழ்த்துவதும், மண் பரப்புகளை நச்சுக் கழிவுகளால் நாசமாக்குவதும் நாள் தோறும் நடக்கின்றன. இந்தப் பேரழிவுகளைத் தடுத்து நிறுத்திட மக்களும், அரசும் இணைந்து இயக்கம் காண வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

 ஒரு மரம் ஐம்பது ஆண்டுகள் உயிரோடு இருந்தால் சமுதாயத்திற்குச் செய்யும் சேவையின் மதிப்பு சுமார் பதினைந்து லட்சம் ரூபாய் ஆகும். மரங்கள் பிராணவாயு உற்பத்தியிலும், காற்றினை தூய்மையாக்குவதிலும் முக்கிய பங்காற்றுகிறது. மேலும், நிலத்திற்கு மணிச்சத்து அளிப்பது, நிழல் தருவது, காற்றின் ஈரப்பசை குறையாமல் காப்பது, காய் கனிகள் கொடுப்பது, மண் அரிப்பைத் தடுப்பது முதலியவைகளைச் செய்வதும் மரங்களே! காடுகள்தான் பூமித்தாய்க்கு சுவாசப்பைகளாகும் என்பதை மாந்த இனம் உணர்ந்திட வேண்டும்.

“அல்லல் அருள் ஆள்வார்க்கு இல்லை; வளிவழங்கும்
மல்லல்மா ஞாலம் கரி ”. (குறள் – 245)

 காற்று உலவுகின்ற உலகம் வளமான உலகம். காற்று ஓரிடத்தில் நிற்கும் தன்மையது அல்ல. காற்று உலாவிக்கொண்டேயிருக்கும். எனவே, காற்று மாசுபடாமல் இருக்க வேண்டியதன் காரணத்தை குறள்மொழி இப்படிக் கூறுகிறது:-

பெருந்தன்மையுடையவனிடம் செல்வம் சேர்ந்தால், அது ஊர்மக்களுக்கு உதவிடும்; மரங்களும் அப்படியே; வேர் முதல் இலைவரை பூ முதல் காய், கனி வரை யாவும் பயன்படும்!

காற்று அம்மருந்து மரங்களின் மருத்தவ குணம் பெற்று வந்து, மனிதர்களின் நோய்களைத் தடுக்க உதவுகிறது. இக்கருத்தைக் கீழ்க்கண்ட குறள் மூலம் அழகாக விளங்கிக் கொள்ள முடிகிறது அல்லவா?

“மருந்து ஆகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்”. (குறள் – 217)
 
 சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முக்கியக் காரணியாக கவனிக்க வேண்டியது என்ன? செயற்கைத்தன்மை, இயற்கையைப் பாதிக்காமல் இருக்க வேண்டும் என்பதுதானே..?

இதோ குறள்:-

“செயற்கை அறிந்த கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்”. (குறள் – 637)

குறள் வழி நின்று சுற்றுச் சூழலைப் பாதுகாக்க அனைவரும் பாடுபடுவோம்!

Pin It