கடலூரை நஞ்சாக்கப் போகும் புதிய சாயப்பட்டறை ஆலைகள்

இந்தியாவில் தொழிற்பேட்டையால் சுற்றுச்சூழல் சீர்கேடு அடைந்த 43 இடங்களில் கடலூரும் ஒன்று என அரசு அறிக்கை சொல்கிறது. நீர், நிலம், காற்று ஆகிய அனைத்தும் இங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் மாசுக் கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது. கடலூர் தொழிற்பேட்டையைச் சுற்றி வாழும் மக்களுக்கு புற்று நோய் பரவும் அபாயம் 2,000 மடங்கு அதிகம் உள்ளது என்று தேசிய சுற்றுச்சூழல் ஆய்வு நிறுவனம் நீரி தெரிவித்துள்ளது. மனிதர்கள் வாழத் தகுதியற்ற இடங்களில் 16-வது இடமாக கடலூரை இந்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அறிவித்துள்ளது.

இத்தகைய பெருமைக்குரிய(?) கடலூர் மாவட்டத்தில்தான் கடந்த 2009 ஆம் ஆண்டு மத்திய ஜவுளித்துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் தென்னிந்திய ஆலைகள் கழகத்தின் (The Southern India Mills Association -SAIMA) மூலம் கடலூரில் ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

சைமா டெக்ஸ்டைல்ஸ் புராசசிங் சென்டர் (SAIMA Textiles Processing Centre) என்ற பெயரில் ஜவுளிப் பூங்கா அமைத்திட வேலைகள் நடைபெறும் நிலையில் தற்போது கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பெரியப்பட்டு, பெரியாண்டிக்குழி, கோபாலபுரம் உள்ளிட்ட பகுதிகளில் முதலில் சுமார் 300 ஏக்கர் அளவிலும், பின்னர் 800 ஏக்கர் அளவிலுமாக 1100 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு கொண்டிருக்கின்றது இந்த ஜவுளிப் பூங்கா.

சுமார் 500 கோடி முதலீட்டில் துவங்கும் இந்த தனியார் ஆலைக்கு 15 சதவிகிதம் அரசு மானியம் கொடுக்கும். அதில் முதல்கட்டமாக 9 கோடி ரூபாயை தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் வழங்கி விட்டார். மத்திய அரசும் நிதிஒதுக்கீடு செய்துள்ளது.

இந்தச் சூழ்நிலையில் சைமா ஆலையின் கழிவு நீரை கடலில் கலப்பதற்காக கடற்கரை ஓரம் குழாய் அமைக்க வந்ததை 2013 பிப்ரவரி மாதம் வாண்டையாம்பள்ளம், தச்சம்பாளையம், ரெட்டியார்பேட்டை, அய்யம்பேட்டை, மடவாப்பள்ளம், குமாரப்பேட்டை, சாமியார்பேட்டை, அன்னப்பன்பேட்டை உள்ளிட்ட கிராம மக்கள் திரண்டு வந்து தடுத்து விட்டனர்.

sipcot_cuddalore_saima

விவசாய நிலங்கள் வழியாக குழாய் பதிக்கவும், கழிவுநீரைக் கடலில் கலக்கவும் பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் கோட்டாச்சியர் தலைமையில் 16 கிராம தலைவர்கள் கலந்துகொண்டு, சைமா நிறுவனத்தோடு பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் மக்களுக்கு எதிரான கருத்துக்களே முன்வைக்கப்பட்டதால், மக்கள் இந்த பேச்சுவார்த்தையைப் புறக்கணித்து வெளியேறினர். தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இப்பிரச்சனை குறித்து கடலோரக் கிராமங்களில் கூட்டம் நடத்திடவும் கோரிக்கை வைத்தனர்.

இத்திட்டம் மக்களைப் பாதிப்பதாக தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு, சிப்காட் பகுதி சமூக சுற்றுச்சூழல் கண்காணிப்பகம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம், இந்திய தொழிற் சங்க மையம், கடற்கரையோர மக்கள் வாழ்வுரிமை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் களத்தில் இறங்கி போராடி வருகின்றன. சிதம்பரம் தொகுதி மா.கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.கோபாலகிருஷ்ணன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெற்றுள்ளது.

அப்பகுதியிலுள்ள விவசாயிகள், “இந்தப் பகுதி சவுக்கை, முந்திரி, மணிலா, நெல் என பல வகை சாகுபடிகள் நடந்த இடங்கள். தச்சம்பாளையம்-பெரியப்பட்டு வடிகால் வாய்க்கால் பக்கிங்காம் கால்வாயில் கலக்கிறது. சைமா நிறுவனத்தினர் அதனைத் தடுத்து விட்டதால் விளைநிலங்கள் மழைக்காலத்தில் மூழ்கிவிடுகிறது. நீலம் புயலின் பாதிப்பும் அதனால்தான் அதிகமானது. கடந்த ஆண்டு கூட சுமார் 1500 ஏக்கர் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியது” மேலும், “ஏற்கனவே சிப்காட் அமைக்கும் போது வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்பட்டது. யாருக்கும் வேலை கிடைக்கவில்லை. மாறாக புற்றுநோய், கருச்சிதைவு, ஆண்மைக் குறைவு இன்னும் பேர் தெரியாத வியாதிகள்தான் கிடைச்சது. தொழிற்சாலைகள் நிலங்களை நேரடியாக வாங்கக் கூடாது என்ற விதி இருந்தும், இந்த நிறுவனங்கள் விவசாயிகளை மிரட்டி அடிமாட்டு விலைக்கு நிலத்தை வாங்கியுள்ளனர்” என்று கொந்தளித்துப் போய் உள்ளனர்.

சிப்காட் பகுதி சமூக சுற்றுச்சூழல் கண்காணிப்பகம் என்ற அமைப்பின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் டி.அருள்செல்வம், “ரசாயனத் தொழிற்சாலைகளின் கழிவுகளால் ஏற்கெனவே கடலூர் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. புற்றுநோய் பாதிப்பு, புளோரோஸிஸ் என்ற பல் மற்றும் எலும்பு வியாதி தமிழகத்தில் கடலூரில்தான் அதிகம்.

பல தொழிற்சாலைகள் தங்களது சுத்திகரிக்க முடியாத ரசாயனத் திரவக் கழிவுகளை ரகசியமாக ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து பூமிக்குள் செலுத்துகின்றன.

சிப்காட் வளாகத்தின் தாங்கும் திறனை கருத்தில் கொள்ளாமல் இந்த புதிய ஆலை அமைக்கப்படுவது அரசுக்கு சரியான புரிதல் இல்லை என்பதைத்தான் காட்டுகின்றது.

சைமா ஜவுளிப் பூங்கா அமைந்தால் விவசாயமும், மீன்பிடித்தொழிலும் முற்றிலும் முடங்கி விடும். இப்போதே கடலூரில் 30 கி.மீ. நீளத்துக்கு கடலில் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது. சாயப் பட்டறைக் கழிவுகளையும் கடலில் கொட்டினால் விளைவுகள் மிகவும் மோசமாகும். 39 மீனவ கிராமங்கள் நேரடியாகப் பாதிக்கப்படுவார்கள்” என்று அரசுக்கு புகார் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் எம்.நிஜாமுதீன், “சைமா என்பது 9 முண்ணனி நிறுவனங்களை உள்ளடக்கி தொழிற்சாலைகளை அமைக்கின்றது. இதற்காக 12 க்கும் மேற்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு 10.95 மில்லியன் லிட்டர் நிலத்தடி நீர் உறிஞ்சப் போகின்றார்கள். ஒரு ஆழ்குழாய் அமைப்பதற்கே மத்திய நிலத்தடி நீர் கழகத்தின் அனுமதி வரை பெற வேண்டும் என்ற நிலையில் விதிகளை மீறி ஆழ்குழாய்கள் அமைத்து வருகின்றனர்.

கழிவுநீர் சுத்திகரிப்பு குறித்த மோகன் கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்தாமல் ஏற்கனவே ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் பவானி, குமாரபாளையம் பகுதிகளில் இருந்து விரட்டப்பட்ட சாயத் தொழிற்சாலைகள்தான் கடலூரில் முகாமிடுகின்றன.

இந்த ஆலை அமைகின்ற பகுதி தென்னை, சவுக்கு, முந்திரி போன்ற மரங்களின் நர்சரி அமைக்கும் வளமிக்க, ஈரப்பதம் கொண்ட விவசாய நிலங்கள். இவையனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டது.

ஏற்கனவே 12 கி.மீ. தொலைவிலுள்ள நெய்வேலி அனல் மின் நிலையத்தின் 3 நிலக்கரி சுரங்கத்தின் மூலமாக பல லட்சம் காலன் நிலத்தடி நீர் வெளியேற்றப்படுகின்றது. இப்போது கடல் பரப்பில் இருந்து 7 கி.மீ. மட்டுமே தொலைவில் உள்ள பெரியபட்டு பகுதியில் ஆழ்குழாய் அமைத்து நீர் உறிஞ்சப்படும் போது கடல்நீர் உள்புகுந்து சுற்றுபுற கிராமங்கள் அனைத்துமே தண்ணீரில்லாமல் போய்விடும்.

இயந்திரங்கள் மட்டுமே இயங்குகின்ற தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு என்பதெல்லாம் மோசடி வார்த்தைகள்.

இந்த ஆலையினால் சுவாசிக்கும் காற்றும், நிலத்தடி நீரும், கடல்வளமும் மட்டுமின்றி ஒட்டுமொத்த சுற்றுச்சூழலுமே பெரும் கேள்விக்குறியாகிவிடும்.

மனித வளத்தை முடக்கி, இயற்கை வளத்தை அழித்து விட்டு கொண்டு வரப்படும் இந்த தொழில்வளம் எதிர்காலத்தை இல்லாமல் செய்து விடும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சைமா நிறுவனத்தின் சார்பில், ஜீரோ டிஸ்சார்ஜ் முறையில் கழிவுகள் சுத்தப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 1 லிட்டர் சாய கழிவு வெளியாகின்றது என்றால் அதில் ஒரு துளி கூட விஷத்தன்மை இருக்காது.

இதில் முதலில் நிறம் நீக்கல், அப்புறம் நீரில் பாக்டீரியாக்களை வளர்த்து நச்சுத்தன்மையை நீக்கப்படும். இதற்கு பயோ கெமிக்கல் ஆக்ஸிஜன் டிமாண்ட், மிக்சர்டு லிக்யூடு சஸ்பெண்டேடு சாலிட் என்ற அறிவியல் தொழில்நுட்பங்களை கையாளுவார்கள். இதற்கு பல்வேறு அடுக்குகளில் தொட்டிகள் அமைக்க வேண்டும்.

இந்த சுத்திகரிப்பு முறைக்கு மின்சாரமும், தண்ணீரும் இல்லாமல் எதுவும் நடக்காது. குறைந்தபட்சம் 12 மோட்டார்கள் இயங்கும். 10 லட்சம் லிட்டர் கழிவுநீர் வெளியேற அதில் பலமடங்கு அதிகமான தண்ணீரும் தேவைப்படும். அதிகளவு மின்சாரமும் தேவைப்படும். இன்றைய சூழலில் இது சாத்தியப்படுமா என்ற கேள்விக்குறி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்தக் கழிவுநீரில் மிச்சமாகும் வண்டல் என்ன செய்யப்படும் என்றும், சுத்தப்படுத்த முடியாத 30சதவிகித கழிவு நீரை என்ன செய்வார்கள் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எழுப்பிய வினாவிற்கு சைமா தரப்பில் பதில் இல்லை.

”நிலம், நீர், காற்று உள்ளிட்ட இயற்கை வளம் முற்றிலும் நாசமாகப் போகின்றதே” என்று பொதுமக்களின் குற்றச்சாட்டிற்கு விளக்கமளிக்கு யாரும் தயாராக இல்லை.

கடலூர் மாவட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு முன் 3 லட்சம் ஏக்கரில் நெல், 1.15 லட்சம் ஏக்கரில் கரும்பு, 15 ஆயிரம் ஏக்கரில் வாழை, 15 ஆயிரம் ஏக்கரில் மரவள்ளிக் கிழங்கு, 1.25 லட்சம் ஏக்கரில் உளுந்து உள்ளிட்ட பயறு வகைகள், 35 ஆயிரம் ஏக்கரில் முந்திரி உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வந்தன.

இப்போது நெல் 2.5 லட்சம் ஏக்கராகவும், கரும்பு 75 ஆயிரம் ஏக்கராகவும், உளுந்து மற்றும் பயறு வகைகள் 70 ஆயிரம் ஏக்கராகவும், வாழை 10 ஆயிரம் ஏக்கராகவும் மரவள்ளிக் கிழங்கு 3 ஆயிரம் ஏக்கராகவும் குறைந்து விட்டது.

இப்போது விவசாயத்தை இழந்த மக்கள் நாடோடிகளாக வெளியூர்களில் கூலிவேலை செய்கின்றனர்.

அதேபோன்று 52.5 கி.மீ. நீளம் கொண்ட கடற்கரை மாவட்டமான கடலூரில் மீன்வளமும் முற்றிலும் குறைந்துவிட்டது.

இந்த லட்சணத்தில் புதிய ஆலைகள் வந்து யாருக்கு பயன்தரப் போகின்றதோ தெரியவில்லை.

-ஜெ.பிரபாகர் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Pin It