சென்ற ஆண்டு போலவே இந்த ஆண்டும் நாமக்கல் மாவட்ட மாணவர்கள் முதலிடம் பெற்றுள்ளார்கள் என்ற செய்தி எல்லோரது மனதிலும் சிறிது ஆச்சரியத்தையும் சமூக சிந்தனையாளர்கள் மத்தியில் சிறிது பயத்தையும் விதைத்து விட்டிருக்கிறது. ஏனென்றால் நாமக்கலில் கல்வி கற்பிக்கபடும் வழிமுறை அப்படி.

மனுஷ்யபுத்திரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நாமக்கல் பள்ளிகளை ஊக்குவிப்பதற்காக பள்ளி கல்வித்துறை அமைச்கத்தின் மீது வழக்கு தொடரலாமா என தனது வக்கீல் நண்பர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் இப்படி நாமக்கலை ஊக்குவிப்பது, கல்வி ரீதியாக பிற மாவட்ட மாணவர்களும் பாதிக்கபடுவார்கள் என்று அவர் விளக்கம் கூறுகிறார்..

இந்தியாவில் கல்வி கற்பிக்கபடும் முறை சரியில்லை  மெக்காலே வடிவமைத்த கல்வி ஆங்கிலத்தை முன்னிறுத்தி அவரவர் தாய் மொழியை கற்க விடாமல் ஆங்கிலேயனுக்கு அடிமையாய் இருப்பது எப்படி என்ற மனநிலையை உருவாக்கி விட்டது அது இன்றும் தொடர்கிறது. அதை முற்றிலும் இந்திய சமூகபொருளாதாரம் மற்றும் வரலாறு சார்ந்து மாற்றியமைத்து கட்டமைக்கவேண்டும் என்கிறார்கள் சமூக நோக்கர்கள் மேலும் இது ஆராய்ச்சி மனநிலையை மாணவர்களுக்கு உருவாக்குவது இல்லை .அதற்கு மாறாக மனப்பாடம் மற்றும் மதிப்பெண் மட்டும் தான் கல்வி என்ற விதியை உருவாக்கிவிட்டதுதான் மிச்சம். இந்த நிலை மாற வேண்டும், என்கிற பேச்சு இப்போது பரவலாக கேட்க துவங்கி உள்ளது. ஆனால் நாமக்கல் பள்ளிகள் தரும் வெற்றி சார்ந்த அறிவிப்புகள், மீண்டும் மக்களை குழப்பமடைய செய்துள்ளது.

என்ன நடக்கிறது நாமக்கலில்?

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் என்பது இன்றைய சூழ்நிலையில் நாம் அடுத்தகட்ட கல்வி சார்ந்த நகர்தலை தீர்மானிக்கும் என்பது திண்ணம், ஆனால் அதை நம் மதிப்பெண்கள் மட்டுமே தீர்மானிக்கும் அதற்கு மனப்பாடம் செய்தல் ஒன்றே வழி என்ற கொள்கையை மாணவர்கள் மேல் திணித்து அவர்களை மதிப்பெண்ணை சுற்றி வரும் செக்கு மாடுகள் போல நடத்தி அவர்களை மதிப்பெண் பெறவைத்ததன் விளைவு, நாமக்கலை  முன்னுதாரணமாக கொண்டு இயங்க ஆரம்பித்திருக்கிறார்கள் பிற மாவட்டத்து கல்வி நிலையங்கள்.

நாமக்கலில் அரசு பள்ளிகள் தவிர்த்து மற்ற தனியார் பள்ளிகள் அனைத்திலும் பத்தாம் வகுப்பு மற்று பன்னிரெண்டாம் வகுப்புகள் படிக்க கண்டிப்பாக விடுதியில் தங்க வேண்டும் என்பது முதல் விதி . இப்படி அடுக்கடுக்காக பல விதிகள்..

காலை ஐந்து மணிக்கு மேல் துளி தூக்கம் கூடாது எழுந்தவுடன் டீ குடித்துவிட்டு படிப்பு பின் காலை உணவு உண்டுவிட்டு மீண்டும் பள்ளிக்கு அங்கே தொடர் படிப்பு,மற்றும் தேர்வு பின் பள்ளி முடிந்தவுடன் மீண்டும் படிக்க ஆரம்பித்துவிடுவோம் இல்லையேல் தேர்வு எழுதுவோம். நாங்கள் உண்டுவிட்டு படுக்க செல்ல மணி பத்தாகிவிடும் பின் மீண்டும் காலை ஐந்து மணிக்கு துயில் எழல். இது தான் எங்கள் தினசரி வாழ்கை எனக்கு அதிகம் வயதாகிவிடவில்லை, இருந்தாலும் எதையோ இழந்தது போல உணர்கிறேன் எப்போதும். என்கிறார் இப்போது  நாமக்கலில் படிக்கும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர் அருண். இவரது பள்ளியிலிருந்து கடந்த ஆண்டு இரண்டு மாணவர்கள் மாநில அளவில் தேர்ச்சி பெற்றனர்.

பன்னிரெண்டாம் வகுப்பு பாடதிட்டம் பதினொன்றாம் வகுப்பு ஆண்டிலேயே முடித்து விடுவது. இப்போதெல்லாம் அனைத்து சுயநிதி பள்ளிகளிலும் செயல்படுத்தும் நடைமுறை. இது கண்டிப்பாக தடுத்து நிறுத்தபடவேண்டும். மாநில அரசு கடுமையான தண்டனை மூலம் இதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும், பிறகெதற்க்கு ப்தினொன்றாம் வகுப்பு பாடம் என்று கோபங்களோடும் ,கேள்விகளோடு முடிக்கிறார் கல்வியாளர் வீரசேகர்.

நான் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கையில் லேப் என்ற ஒன்றை நாங்கள் கண்டதே இல்லை அநேகமாக அந்த வகுப்பு நேரத்தில் எல்லாம் நாங்கள் தேர்வு எழுதிகொண்டிருப்போம் அல்லது தேர்வுக்காக படித்துகொண்டிருப்போம்.

மெயின் லேப் தேர்வில் எங்களுக்கு என்ன உப்பு என்று சொல்லிவிடுவார்கள், அந்த உப்புக்கேற்றவாறு நாங்கள் மனப்பாடம் செய்துவைத்திருந்த பத்தியை எழுதிவிட்டு வருவோம். அனைவருக்கும் ஐம்பது மார்க் உறுதி.

பன்னிரெண்டாம் வகுப்புவரை நான் மனப்பாடம் மட்டுமே செய்து படித்ததால். எஞ்சினியரிங்கில் நான் சேர்ந்த பொழுது புரிந்து மட்டுமே படிக்க வேண்டி இருந்ததால் நான் மிகுந்த சிரமப்பட்டேன், அதிலிருந்து மீண்டு வரவே எனக்கு மாதங்களாயிற்று என்கிறார் இப்போது திருச்சியில் மூன்றாம் ஆண்டு மெக்கானிக்கல் படித்து வரும் நமச்சிவாயம்.

மேலும் அவர் கூறுகையில்..

பத்தாம் வகுப்பு பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு விளையாட்டு என்பதே இல்லை, அதிலும் பள்ளிகளின் ஆளுகைக்கு உட்பட்டு விடுதியில் இருப்பதால் விளையாட்டு என்பது நடைமுறை சாத்தியமே இல்லை அதையும் மீறி விளையாட்டை தன் வாழ்கையாக கொண்டிருக்கும் மாணவன் பள்ளியிலிருந்து கடும் சவால்களை சந்தித்து, பெற்றோர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி .கடைசியில் படிப்பை தாண்டிதான் விளையாட்டு என தீர்கமான முடிவெடுக்கபடும். என்று முடிக்கிறார் நமச்சிவாயம்.

நான் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த 96களில் எல்லாம் இந்த அடக்குமுறைகள் இல்லை ஏனென்றால் இந்த பணம்விரும்பிகளான இந்த தனியார் பள்ளிகள் பெரும்பாலும் இல்லை. தாங்கள் மாணவர்கள் மேல் அக்கறை செலுத்துபவர்களாக மக்களிடம் காட்டிகொண்டு நன்மதிப்பை பெற்று அதற்கேற்ப பள்ளி கட்டணத்தை உயர்த்தும் தனியார் பள்ளிகளின் பெருக்கமே காரணம் என்கிறார் சிபி

இதன் நடுவில் வெளிவருகின்றன சில பகீர் தகவல்கள்.

பள்ளிகள் வைக்கும் தொடர் தேர்வுகளில் மிக குறைந்த மதிப்பெண்கள் அல்லது தேர்வுகளில் தோல்வி அடைந்து கொண்டே வந்தால் அந்த மாணவனை மட்டும் பள்ளி சார்பாக தேர்வு எழுத அனுமதிக்க மாட்டார்கள் மாறாக அவனை அந்த பகுதியில் உள்ள டுடோரியல் மூலமாக தான் தேர்வு எழுத அனுமதிக்க படுவார்கள் இது நூறு சதவீத தேர்ச்சிக்காக பள்ளி நிர்வாகமே செய்யும். நான் படித்த காலகட்டத்தில் 13 நண்பர்கள் இது போல டுடோரியலில் தேர்வு எழுதினார்கள். பெற்றோர்கள், இறுதியாண்டு படிப்பு என்பதால் பள்ளி நிர்வாகத்தை கேள்வி கேட்க கேட்கவும் முடியாது

மேலும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகளில் ஒன்று ,இரண்டு மதிப்பெண்கள் கூட மாநில அளவிலான தேர்வு முடிவுகளை மாற்றி அமைப்பதால் தேர்வு அறைகளில் குறிப்பிட்ட மாணவர்களுக்கு மட்டும் ஒரு மதிப்பெண் வினா விடைகள் அளிக்கப்படும். இதுவும் இவர்கள் தம்பட்டம் அடிக்கும் வெற்றிக்கு சூத்திரம்.. என்கிறார் பெயர் சொல்ல விரும்பாத நாமக்கலில் படித்த நண்பர்...

மதிப்பெண்கள் மாணவர்கள் வாழ்கையை மட்டும் தீர்மானிப்பதில்லை பள்ளி நிர்வாகத்தின் எதிர்காலத்தையும் தான். எங்கள் மாணவர்கள் நூறு சதவீதம் தேர்ச்சி என்று ஊர் முழுக்க தம்பட்டம் அடிக்கும் பள்ளிகளே இதற்கு சாட்சி

நான் ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்க வில்லை, பெற்றோர்களிடமும் கூட. ஏனென்றால். எல்லாம் மாணவர்களுக்காக தானே அவர்கள் படிப்பு அவர்கள், வாழ்கை  கை நிறைய சம்பாதித்து  எங்களுக்கு தர வேண்டாம் அவர்கள் வாழ்கையை அவர்கள் தீர்மானிக்கட்டும் என்று பெற்றோர்களும் ஆசிரியர்களும் சொல்லக்கூடும். பிள்ளைகள் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் தலையாய லட்சியமும் கூட...

நாஞ்சில் நாடன் ஒரு பேட்டியில் இப்படி சொன்னார் பிராய்லர் கோழியை வளர்பது போல் இன்றைய குழந்தைகளை வளர்ததன் விளைவு. படிப்பு, வேலையை தவிர இந்த உலகில் செய்வதற்கொன்றுமில்லை என நினைகின்றனர்.

அவர் சொல்வது சரிதானே .....இறுதியாக. குட்டி குட்டியாக தமிழன் எத்தனை கோடி தொழில்நுட்பங்களை அறிந்து வைத்திருந்தான், மழை பெய்வதை கணிப்பதிலிருந்து வானியல் சாஸ்திரம் வரைக்கும். படிப்படியாக வளர வேண்டிய தொழில் நுட்பம் சுறுங்கி சுறுங்கி காணமல் போய்விட்டதே. காரணம் மனப்பாட கல்விதான் என்பதில் சிறிதும் ஐயமில்லை..

ஒரு சந்தையில் லாபம் பார்த்த முதலாளி அந்த சந்தையை விடமாட்டான் அவனை கண்ட மற்ற முதலாளிகளும் அதே சந்தையில் இறங்கி லாபம் பார்க்க. அது அடிப்படை தேவை மற்றும் வெகு ஜன மக்களுக்கான சந்தையாக இருந்தாலும்.அதை வெகுஜனங்கள் நெருங்கவே முடியாதபடிக்கு செய்துவிடுவார்கள் முதலாளிகள். ருசி கண்ட பூணையை போல மீண்டும் மீண்டும் அதே நிலை தொடரும்...

கல்வி என்பது அடிப்படை தேவை என்ற கூற்றிலிருந்து லாப நோக்க சந்தை என மாறிவிட்ட பிறகு ஒட்டுமொத்த அரசு சக்கரத்தையே கல்வி தந்தைகள் தனக்கு சாதகமாக சுழற்றும்  நிலை வந்துவிட்ட பிறகு . இனி மெக்காலே கல்வியை இந்திய சூழல் சார்ந்து மாற்ற முடியுமா? பணக்காரன் குழந்தை படிக்கும் பள்ளியில் ஏழை மாணவன் படிக்க முடியுமா? என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.

இன்று நாம் படிக்கும் கல்வியில் மாற்றம் எல்லாம் தேவையில்லை. ஒரு விஷயத்தை படிக்கும்போது அதன் அடிப்படை கூறு மாறாமல் தாங்கள் கற்ற விதத்தில் வெளிப்படுத்த பள்ளிகள் பயிற்சி அளித்தல் வேண்டும். மாணவர்கள்  தாங்கள் படித்தவற்றை கண்டுனர்ந்து அதை செயல்படுத்தி பார்க்கும்போதுதான் முழுமையான கல்வி மாணவர்களுக்கு கிட்டும்.மதிப்பெண்களுக்கு மதிப்பு கொடுக்காமல் தான் கற்ற கல்வியை கொண்டு சாதிக்க துடிக்கும் மன நிலையை மாணவர்களுக்குள் புகுத்தவேண்டும் .மற்றும் அரசு பள்ளிகளை நவீனமாக்குவது, ஆசிரியர் பனியிடங்களை நிரப்பி. 20 மாணவனுக்கு ஒரு ஆசிரியர் என்ற விதியை பின்பற்றி. தாய் தந்தையர் போல மாணவர்களிடம் நடந்துகொள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தாலே போதும்.    புதிய புதிய கண்டுபிடிப்புகளும் ,தொழில் நுட்பங்களும்  இந்தியாவிலும் சாத்தியம்.

Pin It