சித்ரா பவுர்ணமியையொட்டி மாமல்லபுரத்தில் பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் வருடந்தோறும் இளைஞர் பெருவிழா மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் பாமக சார்பில் கடந்த 25ம் தேதி இளைஞர் பெருவிழா மாநாடு ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது. இதில் பங்கேற்க நாகை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து புதுச்சேரி வழியாக மாமல்லபுரத்திற்கு புறப்பட்ட பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் மரக்காணத்தில் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். இக்கலவரத்தில் அரசுப் பேருந்துகள் உட்பட 5க்கும் மேற்பட்ட தனியார் வாகனங்கள் தீ வைக்கப்பட்டுள்ளன. பயணிகள் பலர் காய மடைந்துள்ளனர். மரக்காணம் காலனியிலுள்ள தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அவர்களின் வீடுகளுக்கும் வன்முறையாளர்கள் தீ வைத்துள்ளனர்.

ஒவ்வொரு முறையும் சித்திரா பவுர்ணமியை முன்னிட்டு மாமல்லபுரத்தில் பாமக மாநாடு நடத்தும்போதெல்லாம் மரக்காணம் பகுதியில் பதட்ட நிலை உருவாகும். அவ்வழியாக மாமல்லபுரத்திற்கு பயணிக்கும் பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்கின்றனர் மரக்காணம் பகுதி மக்கள். இந்த முறை மரக்காணத்தையும் தாண்டி அருகாமையிலுள்ள கூனிமேடு என்ற கிராமத்திலும் முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதோடு, அங்கிருந்த கடைகளை அடித்து நொறுக்கி, கறிக்கடை ஒன்றையும் தீ வைத்துக் கொளுத்தியுள்ளனர்.

சித்ரா பவுர்ணமி விழா என்ற பெயரில் நடத்தப்படும் மாநாட்டில் வன்முறையையும் சாதி வெறியையும் தூண்டும் வகையில் பாமக தலைவர்கள் பேசி வருகின்றனர். இப்படியான பேச்சுகள் அக்கட்சியின் தொண்டர்களிடையே வன்முறையாக வெளிப்படுகிறது.

கடந்த முறை மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் இளைஞர் பெரு விழாவில் "வன்னிய பெண்களை கலப்புத் திருமணம் செய்யும் அந்நியர்களின் கையை வெட்டுவோம்' என வன்னியர் சங்கத் தலைவரான காடுவெட்டி குரு பேசியிருந்தார். குருவின் பேச்சுதான் தருமபுரி கலவரத்திற்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் அப்போதே சுட்டிக் காட்டினர்.

கடந்த எட்டு மாதங்களாக தமிழகமெங்கும் வன்முறையைத் தூண்டும் வகையில் பாமக தலைவர்கள் பேசி வந்த நிலையில், மாமல்லபுரம் இளைஞர் பெருவிழாவிற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்திருந்தது. ஆனாலும் தடையை மீறி இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினரின் தலித் மற்றும் முஸ்லிம்கள் மீதான வன்முறையை வன்மையாக கண்டிப்பதோடு, இனி வரும் காலங்களில் இதுபோன்ற மாநாடுகளுக்கு அனுமதி அளிக்கும் மாவட்ட நிர்வாகம், வன்முறைகள் நிகழாத வண்ணம், சம்மந்தப்பட்ட பகுதிகளில் குறிப்பாக மரக்காணம் பகுதிகளில் முன்கூட்டியே போலீஸ் படைகளை குவித்து பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றும், தமிழக அரசு இது குறித்து காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்ட காவல்துறைக்கு உரிய ஆலோசனைகளையும் உத்தரவுகளையும் வழங்க வேண்டும் என்றும் வன்முறையில் ஈடுபட்ட சமூக விரோதச் சக்திகள் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

- முஹம்மது ஷிப்லி, மாநிலச் செயலாளர், இந்திய தவ்ஹீத் ஜமாஅத்

Pin It