திமுக பெரும்புள்ளிகளின் பினாமிகளின் நிலங்களின் மதிப்பை உயர்த்துவதற்காக மூன்று கிராமங்களின்  1478  ஏக்கர்  விவசாய நிலங்களை அழித்து சிப்காட் அமைக்க  சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் முயற்சி செய்வதாக விவசாயிகள் குற்றச்சாட்டியுள்ளனர்.கொச்சி முதல் பெங்களூரு வரை, நிலத்தடியில், எரிவாயு குழாய்கள் பதிக்கும் பணிகளை, இந்திய எரிவாயு நிறுவனமான, "கெயில்' நிறுவனம் மேற்கொள்கிறது. தமிழகத்தில், கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் வழியாக, 318 கி.மீ., தூரத்துக்கு, குழாய்கள் பதிக்கும் பணிகள் துவங்கியதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

mdu-rural-sivrakottai_640

விவசாய நிலத்தில் குழாய் பதிக்கவே அனுமதி மறுக்கும் தமிழக அரசு,மதுரை மாவட்டத்தில் விவசாய நிலங்களை அழித்து எப்படி சிப்காட்டை நிறுவ முயற்சிக்கிறது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு விவசாய நிலங்களை ஒதுக்க வேண்டாம் என்று மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

ஆனால், உளுந்து, பாசிப்பயிறு, தட்டாம்பயிறு, மொச்சைப்பயிறு, கொள்ளுப்பயிறு, சுண்டல் கடலை, மல்லி அவுரி, நித்தியகல்யாணி, துவரை, நிலக்கடலை,கம்பு, எள்ளு, கேப்பை, வரகு, திணை, மக்காச்சோளம், இரும்புச்சோளம், சோளம்நாத்து, பருத்தி, குருதவல்லிஎன 20 வகையான பயிர்கள் செழித்து வளர்ந்து வரும் பூமியை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கடந்த திமுக ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது.இதை எதிர்த்து மூன்று கிராம மக்கள் மட்டுமின்றி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், பல்வேறு அமைப்புகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  ஆகியவை போராடின. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து இப்பிரச்சனையில் குரல் கொடுத்து வருகின்றனர்.

ஜெயலலிதாவின் வாக்குறுதி

திமுக ஆட்சியின் போது அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா,கைப்பற்றப்பட்ட நிலங்கள் விவசாயிகள் வசம் ஒப்படைக்கப்படும் என்று சட்டமன்றத் தேர்தல்  மட்டுமின்றி திருமங்கலம் இடைத்தேர்தல், மக்களவைத்  தேர்தல் பொதுக்கூட்டங்களில்   வாக்குறுதி அளித்தார். ஆனால், அவருடைய ஆட்சியிலும் இந்த நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன என்பதை அறியாமல் சட்டமன்றத்தில் திருமங்கலம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் முத்துராமலிங்கம் பேசியுள்ளார். கடந்த 11.8.2011 அன்று சட்டமன்றத்தில் அவர் பேசும் போது,“மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலூகாவில் சிப்காட் அமைக்க சிவரக்கோட்டை,கரிசல்காளான்பட்டி,சுவாமிமல்லம்பட்டி ஆகிய பகுதிகளில் 1,400 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரியின் கல்லூரிக்காவும், இந்தப்பகுதியில் விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை மீட்க வேண்டும்“என்று கூறியதோடு,தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் மனுவும் கொடுத்துள்ளார்.விவசாயிகள் தங்கள் பட்டா நிலங்களில் சுதந்திரமாகவும், அச்சமின்றி பாதுகாப்பாக விவசாயம் செய்து வாழ்வதற்கு விளைநிலங்களாக மாற்றி கொடுத்து இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.சட்டமன்றத்தில் முத்துராமலிங்கம் பேசியதற்கு பதிலளித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,“விளைநிலங்கள்தொழிற்சாலைக்காககையகப்படுத்தப்படமாட்டாது“ என்று பதிலளித்தார்.

அமைச்சருக்குத் தெரியாமலா அரசாணை?

சிவரக்கோட்டை, கரிசல்காளான்பட்டி, சுவாமிமல்லம்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாய நிலங்கள் உரிமை மாற்றம் செய்யப்பட்டுள்ளதா என்று சிப்காட் அலகு 3-நில எடுப்பு தனி வட்டாட்சியர் எஸ்.மரகதவள்ளிக்கு தகவல் உரிமை பெறும் சட்டமத்தின்படி விவசாயிகள் சங்கத்தலைவர்  மு.ராமலிங்கம் கேள்வி எழுப்பினார்.இதற்கு  அளிக்கப்பட்ட பதில் என்ன தெரியுமா?“நில உரிமை மாற்றம் செய்ய சிப்காட் நிறுவனம் மூலமாகவோ அல்லது அரசோ திருமங்கலம் சார்பதிவாளருக்கு எந்த உத்தரவும் வழங்கவில்லை‘என்று (ந.க.எண்:2/2012. 30.4.2012) கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

ஆனால்,தமிழகஅரசிடம் நில ஒப்படைப்பு செய்து அதன் பின் சிப்காட் நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட வேண்டிய கரிசல்காளாம்பட்டி நிலங்கள் 28.1.2011அன்று தேதிக்கு நேரடியாகவே சிப்காட்டிற்கு மாற்றப்பட்டு அரசிதழில்(எண்:37) வெளியிடப்பட்டுள்ளது.தமிழக அமைச்சருக்குத் தெரியாமலேயே இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளா என்ற கேள்வி எழுந்துள்ளது. அது போல, திருமங்கலம் அதிமுக

சட்டமன்ற உறுப்பினர் முத்துராமலிங்கம்

2012 ஏப்ரல் மாதம் உள்துறை செயலாளரிடம் புகார் அளித்துள்ளார். 2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை வெளியிடப்பட்டது தொகுதி சட்டமன்ற உறுப்பினருக்கும் தெரியாதா என்று சிவரக்கோட்டை, , கரிசல்காளான்பட்டி, சுவாமிமல்லம்பட்டி ஆகிய கிராம மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த முயற்சி

தமிழக முதல்வருக்குத் தெரியாமலேயே சில ஐ.ஏ.எஸ்அதிகாரிகள் இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாகவும் மூன்று கிராம மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். விவசாய நிலங்களை, விளை நிலம் இல்லை என்றும், நிலங்களை கையகப்படுத்தப்பட அனுப்பப்பட்ட கடிதத்திற்கு(3/2 நோட்டீஸ்) விவசாயிகள் அனைவரும் ஆட்சேபணை தெரிவித்துள்ள நிலையில், அனைவரும் நிலத்தை தர சம்மதம் தெரிவித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் அன்சுல்மிஸ்ரா அறிக்கை அனுப்பியதாக சட்டமன்றத்தில் 19.4.2013 அன்று சட்டமன்றத்தில் தொழில் துறை அமைச்சர் பி.தங்கமணி கூறியுள்ளார்.

சிவரக்கோட்டை, கரிசல்காளாம்பட்டி, சுவாமிமல்லம்பட்டி ஆகிய மூன்று கிராமங்களின் விவசாய நிலங்களுக்கு 4 கிலோ மீட்டர் தூரத்தில் 30 ஆண்டுகளாக தரிசு நிலங்களாக 3 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களை பல்வேறு கம்பெனிகள் பெயரில் திமுக பெரும்புள்ளிகள் வாங்கியுள்ளனர்.இந்த நிலங்களின் சந்தை மதிப்பை உயர்த்துவதற்காகவே,கரிசல்காளான்பட்டி,சுவாமிமல்லம்பட்டி ஆகிய மூன்று கிராமங்களை  குறிவைத்து சிப்காட் துவங்குவதற்காக கடந்த ஆட்சியில் இருந்த சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டதாகவும்,அந்த முயற்சி அதிமுக ஆட்சியிலும் தொடருவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.கெயில் நிறுவன குழாய் பதிக்கவே அனுமதி அளிக்காத முதல்வர் ஜெயலலிதா, விவசாய நிலத்தில் சிப்காட் அமைத்து தனது சொந்த மாநில விவசாயிகளைப் பரிதவிக்க எப்படி விடுவார் என்ற கேள்வியையும் நம்பிக்கையுடன் எழுப்புகின்றனர்.

மாவட்ட ஆட்சியரின் நோட்டீஸ்

விவசாயிகளின் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீடு வழங்கும் பொருட்டு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக  ஏப்-23 ம் தேதி காலை 9.30 மணிக்கு சிவரக்கோட்டையைச் சேர்ந்த விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரவேண்டும் என்றும், இக்கூட்டத்தில் கலந்து கொள்ளாதவர்களின் நிலங்களுக்கு அரசு விதிகளின்படி விலை நிர்ணயம் செய்யப்பட்டு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல்மிஸ்ரா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.  இதன் தொடர்ச்சியாக கரிசல்காளாம்பட்டி,சுவாமிமல்லம்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளின் நிலங்களுக்கு இழப்பீடு வழங்க ஏப்-30ம் தேதி கூட்டம் நடத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

தொழில்மயமாக்கப்படுவதில் விவசாயிகளும் பங்கேற்க வேண்டுமே தவிர,அவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கத்திற்கான விடை  முதல்வர் ஜெயலலிதாவிடம் மட்டுமே உள்ளது.

Pin It