ஆசிரியர் கற்பிக்கும் முறையில் கல்விகரும்பாக இருந்தால், அது மாணவர்க்குக் கசப்பாகவா இருக்கும்?கற்கண்டாகச் சுவைக்கும். வகுப்பறைகூட இனிப்பறையாக மாறும்! அதற்கு,ஆசிரியர் என்ன செய்ய வேண்டும்?நூலுக்கு முன்னுரைபோல, வகுப்புத் தொடங்கும்போதே நாட்டு நிகழ்வுகளை உலக நடப்புகளுடன் இணைத்துப் பாடத்தைப் பயிற்றுவிக்க முயல வேண்டும். நடத்தப் போகும் பாடப் பகுதி குறித்த தயாரிப்பும் வேண்டும். விதைக்கப் போகும் செய்தி பற்றிய தொடர்பும் அதற்கான முன்னேற்பாடும் தெளிவாய்த் தெரிந்திருக்கவும் வேண்டும்!மாணவர்களின் உள்ளத்தை உணர்ந்து, அதைப் பக்குவப்படுத்திவிட்டால், எந்த நேரத்தில், எந்தப் பாடத்தை நடத்தினாலும் உள்வாங்கிக் கொள்வார்கள். அதனை அறிந்து கற்பிக்க வேண்டும். அதுவே வகுப்பறை ஆளுமையாகும். 

“ஆசிரியப் பணியை ஊதியம் தரும் ஒரு தொழிலாக மட்டும் கருதிவிடக் கூடாது.  அது ஒரு சமூகப் பணி,எதிர்காலச் சந்ததியினரைச் சிறந்த முறையில் உருவாக்கி,உயர்ந்த சமூகத்தைக் கட்டமைக்கச் செய்யும் உன்னதமான சேவை.  அது ஓர் இலட்சியத் தொண்டு”-இப்படியெல்லாம் விளக்குவார்,இந்தியக் குடியரசின் முந்தைய தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன்!  மிகச்சிறந்த ஆசிரியர்கள்தான் மிகச் சிறந்த மாணவர்களை உருவாக்க முடியும்.  அறிவியலாளர் ஜன்ஸ்டீன் மிகப் பெரிய சார்பியல், மெய்யியல் கண்டுபிடிப்பை நிகழ்த்திய தருணத்தில் அவரைச் செய்தியாளர்கள் சந்தித்தனர். அவர்கள் வினவிய பொழுது, இப்படி விடையளித்தார்:

“எனக்கு முந்தைய ஆசிரியர்களான நியூட்டன், லாரன்சு, சேம்சு  கிளார்க் போன்ற அறிவியலாளர்களின் வழியில் அவர்கள் தந்த அறிவு வெளிச்சத்தில்தான் இத்தகு கண்டுபிடிப்புகளை நான் நிகழ்த்த முடிந்தது”அடக்கத்துடன் கூடிய அவரது பதில் எல்லாரையும் வியக்கவைத்தது.  இதிலிருந்து நாம் என்ன அறிந்து கொள்ளமுடிகிறது?  ஆசிரியர்கள் மாணவர்களை நெறிப்படுத்தும் போது,அவர்கள் வல்லவர்களாக மலர முடிகிறது!  வெற்றியாளர்களாகத் திகழ முடிகிறது!! 

 வகுப்பில் கற்பிக்கும் போது, ஆசிரியர்களின் தோற்றப் பொலிவு முக்கியமானது.  அதற்கு, எளிமையானதாக இருந்தாலும்,உடைஎடுப்பானதாக இருக்கவேண்டும். ஆசிரியர்கள், மாணவர்களுக்கு முன்மாதிரிகளாக விளங்குபவர்கள்.  எனவே, ஆசிரியர்கள் நேர்த்தியான, பகட்டு இல்லாத, பொருத்தமான உடைகளை அணிந்து வரவேண்டும்.  இதில் தனிக் கவனம் செலுத்துவதோடு,முகத்தைமலர்ச்சியுடன் வைத்திருக்கவேண்டும். இனிய வார்த்தைகளையும் இயல்பாய்ப் பயன்படுத்திட வேண்டும்.

நேரம் தவறாமை என்பது பேரம் பேசுவதற்குரியதல்ல. குறித்த காலத்திற்குள் பள்ளிக்குச் செல்வதும்,சரியானநேரத்தில் வகுப்பு அறைக்குள் காலடியைப் பதித்துப் பாடம் கற்பிக்கத்தொடங்குவதும் அவசியம்.நேரம் தவறாப்பண்பை ஆசிரியர்களிடமிருந்தே மாணவர்கள் தத்தெடுத்துக் கொள்கின்றனர்.

ஆசிரியர்கள் நினைவாற்றலை நாளும் வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்பொழுது தான் பாடங்களை மறக்காமல் நினைவில் நிறுத்திக் கொள்ளும் பழக்கம் மாணவர்களுக்கு ஏற்படும்.  ஆசிரியர்கள் நல்ல குரல்வளமும், தெளிவான உச்சரிப்பும் கொண்டவர்களாக விளங்க வேண்டும்.

ஆசிரியர்கள், பள்ளிப்புத்தகங்களுடன் நிறுத்திக் கொள்ளாமல், மாணவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்குரிய பாடங்களையும், அரிய செய்திகளையும், நற்பண்புகளையும் அவர்கள் மனதில் விதைக்க,வேண்டும். நல்ல ஆசிரியர் என்பவர்,தான் அறிந்துகொண்ட நுணுக்கங்களை மாணவர்களுக்குத் தெளிவாக எடுத்துரைத்துப் புரிய வைப்பவராகவும் இருக்க வேண்டும். மாணவர்களிடம் நல்லுறவு பேணிவருதல் மனதளவில் நெருக்கததை ஏற்படுத்தும்.

ஆசிரியர்கள்,வகுப்பறையில்,நாற்காலியில் அமர்ந்து கொண்டு பாடத்தைப் படித்துக் கொண்டே போவதோ அல்லது ஒரு மாணவரை எழுப்பி அவரைப் படிக்கச்சொல்லிக் கேட்டுக்கொண்டே விளக்குவதோ கூடாது. அதனால் மாணவர்கள் சலிப்படைவார்கள்; பாடத்தில் கவனம் பிசகுவார்கள்; ஆசிரியரின் கட்டுப்பாட்டில் இல்லாமல் விலகிப் போய் விடுவார்கள். இவையாவும், உளவியலாளர்களின் ஆய்வுக் கூற்று தரும் உண்மைகள்.

 எனவே, வகுப்பறையில் நின்றபடி, அல்லது இயங்கியபடி கற்பிக்கவேண்டும்.  மாணவர்களின் அசைவுகளையும் முகக்குறிகளையும் அறிந்து பாடம் நடத்திட வேண்டும். இடையிடையே, பலாச்சுளைபோல, சில நகைச்சுவைகளையும் அளவோடு தெளிக்கலாம்!

வகுப்பறை நாற்றங்கால் போன்றது.  அறிவு விதைகளை விதைத்தால் நல்ல செழுமையான பயிர்கள் வளர முடியும்.  ஆசிரியர்கள், உழவர்களைப் போன்றவர்கள்; மாணவப் பயிர்களை அறிவுநீர் பாய்ச்சிப் பாதுகாத்து வளர்த்தால், சமூகநலனுக்கான விஞ்ஞான விளைச்சல் அமோகமாகவே இருக்கும்!

தங்கள் வகுப்பிற்கு வரமாட்டார்களா என மாணவர்கள் எண்ணி எதிர்மார்க்கும் அளவிற்கு, ஆசிரியர்கள் நுண்மாண் நுழைபுலம் கொண்டவர்களாகத் திகழவேண்டும்.பாடம் கற்பிப்பதில் கைதேர்ந்தவர்களாகவும், கருத்துக் கருவூலங்களாகவும் விளங்கிட வேண்டும்.

மதிநிறைந்த ஆசிரியர் தோழமை உணர்வுடன் பழகினாலும், மதிப்பு பன்மடங்கு உயரவே செய்யும். தமது, மாணவர்களின் நற்குணங்களை அறிந்து அவர்களைப் பாராட்டவும் முடியும்.

கற்பதையும்,கற்பிப்பதையும் உயிரெனக் கருதும் ஓர் ஆசிரியரே என்றும் சிறந்த ஆசிரியராக மதிக்கப்படுவார்!  

Pin It