ஒரு முழுநேர அரசியல் ஊழியராக இருந்தும் முகநூல் மற்றும் கீற்று இணைய தள‌த்தில் தாங்கள் எழுப்பிய கேள்விக்கு உடனே பதிலளிக்காமல் களத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் தோழர்.அருண்சோரியின் இந்த தாமதத்திற்கு அவர் சார்பாகவும் எங்கள் தமிழ்நாடு மக்கள் கட்சியின் சார்பாகவும் முதலில் எங்கள் வருத்தத்தை தெரிவித்துக்கொண்டு அந்த கட்சியின் உறுப்பினர் என்ற முறையில் தங்கள் சந்தேகத்துக்கும், கேள்விகளுக்கும் நான் பதிலளிக்க விழைகிறேன்.

 முதலில் தாங்கள் தோழர்.அருண்சோரியின் குற்றச்சாட்டை (அந்தக் கட்டுரையை) சரியாகப் படிக்கவில்லை என்றே நான் நினைகிறேன்.

ஏனெனில், தோழர்.அருண்சோரி தன் கட்டுரையில் திரு.திருமுருகன் மீதும், மே 17 மீதும் வைத்த குற்றச்சாட்டே ஈழ விடயத்தில் இந்தியாவின் துரோகத்தை எதிர்த்து மாணவர்கள் போராடிக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில்… திரு.திருமுருகன் அவர்கள் அமெரிக்காவை எதிர்க்க வேண்டும், அமெரிக்க பொருட்களை (பெப்சி, கொக்ககோலா...)புறக்கணிக்க வேண்டும், அதன் மூலம் அமெரிக்காவிற்கு பொருளாதார நெருக்கடியை உருவாக்கி, அமெரிக்க அரசை நிர்பந்தித்து அடுத்து ஐ.நாவில் கொண்டு வரும் தீர்மானத்தைப் பலப்படுத்த வேண்டும் என்ற கருத்தை உருவாக்கி வருகிறார் என்பதுதான். 

தோழர் கார்த்திக் அவர்களுக்காக அருண்சோரி கட்டுரையில் இருந்து சில பகுதிகள்…… இப்பவாவது இதை நன்றாகப் படிக்கவும். 

//….இந்த வரலாற்றுத் தருணத்தில் தமிழ்ச் சமூகத்தில் உணர்வின் அடிப்ப‌டையில் ஒட்டுமொத்த இந்திய தேசியக் கட்சிகளை நிர்பந்திக்கக் கூடிய வாய்ப்புள்ளது. இந்த சூழலில் இரண்டு மூன்று நாட்களாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.திருமுருகன் கல்லூரி மாணவர்களைச் சந்தித்து 'நாம் அமெரிக்காவை எதிர்க்க வேண்டும், அமெரிக்கப் பொருட்களைப் புறக்கணிப்பது, அமெரிக்க அரசை நிர்பந்தித்து அடுத்து ஐ.நாவில் கொண்டு வரும் தீர்மானத்தைப் பலப்படுத்தும்' என்று கருத்து உருவாக்கி வருகிறார்…..// 

அருண்சோரியின் இந்த கட்டுரைக்கு பதிலளிப்பதற்காக கட்டுரை எழுதும் தோழர்.கார்த்திக் கடைசி வரை இதற்கு பதிலளிக்காமலே கட்டுரையை முடித்திருப்பது அவரது சாமர்த்தியத்தைக் காட்டுகிறது.  

 ஆரம்பத்தில் அவருடைய கண்டன உரைக்குப் பின் அருண்சோரி கேள்விக்கு வரும் தோழர்.கார்த்திக் அந்த இடத்திலேயே அருண்சோரியின் குற்றச்சாட்டையே மாற்றிக் கூற ஆரம்பிக்கின்றார். 

தோழர்.கார்த்திக் கட்டுரையில் இருந்து சில….. 

//…..அவர் திருமுருகனின் மேல் வைத்திருக்கும் குற்றச்சாட்டு மே 17 இயக்கம் அமெரிக்கத் தீர்மானத்தை எதிர்த்து இந்தியாவை காப்பாற்றும் நோக்குடன் திசைதிருப்புகிறோம் என்பதாகும்…..// 

 இதில், அருண்சோரி திருமுருகன் மேல் வைத்திருக்கும் குற்றச்சாட்டு மே 17 இயக்கம் அமெரிக்கத் தீர்மானத்தை எதிர்த்து இந்தியாவை காப்பாற்றும் நோக்குடன் திசை திருப்புகிறோம் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்.  

அவர் கட்டுரையில் எந்த இடத்திலாவது “மே 17 இயக்கம் அமெரிக்கத் தீர்மானத்தை எதிர்த்து, இந்தியாவை காப்பாற்றும் நோக்குடன் திசைதிருப்புகிறார்கள்” என்ற வாசகம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இருக்கிறதா தோழர்? 

அமெரிக்க எதிர்ப்பு, அமெரிக்க பொருட்கள் (கொக்ககோலா, பெப்சி…) புற‌க்கணிப்பு என்று தெளிவாக உள்ளதை "அமெரிக்க தீர்மான எதிர்ப்பு" என தவறாக நீங்கள் குறிப்பிட்டுள்ளது… தவறாக புரிந்துக்கொண்டதாலா? இல்லை தங்கள் வசதிக்காக மாற்றிவிட்டீர்களா?  

 ஆனால் உங்கள் கட்டுரை முழுக்கவே இந்த விமர்சனத்தை அமெரிக்கத் தீர்மானத்தை எதிர்ப்பதை விமர்சிப்பதாகவே பயன்படுத்தி உள்ளீர்கள்.  

 எப்படி இருப்பினும், அருண்சோரி "போராட்டத்தை மடை மாற்றுகிறீர்கள்" என்று வைத்த அடிப்படையான விமர்சனத்துக்கு பதில் அளிக்காமல் அவர் விமர்சனத்தையே மடை மாற்றி சப்பை கட்டுக்கட்டி கட்டுரையாக்கி இருக்கிறீர்கள்.  

இதில் இப்படி ஒரு முடிவுரை வேறு 

//..எங்கள் மேல் வைக்கப்பட்ட அனைத்து அவதூறுகளுக்கும் நாங்கள் நேர்மையாக பதிலளித்திருக்கிறோம். நாங்கள் கேட்ட எந்த கேள்விகளுக்கும் நீங்கள் இதுவரை பதில் சொல்லவில்லை. இனிமேலாவது பதில் சொல்ல முடியுமா அருண்சோரி?...// 

என்ன நேர்மையான பதில் தோழர்……. 

எங்கள் கேள்வி தெளிவானது. 

இன்றைய சூழலில், ஈழ விடயத்தில் மாண‌வர்கள் போராட்டமாக இருந்தாலும், இயக்கங்களின் போராட்டமாக இருந்தாலும் நம்முடைய போராட்டங்களும் முழக்கங்களும் முதன்மையாக யாரை நோக்கி என்பதுதான்? 

 இனக்கொலைக்கு சர்வதேச விசாரணை, பொதுவாக்கெடுப்பு போன்ற நம் கோரிக்கைக்கு நாம் முதன்மையாக போராட வேண்டியது… அழுத்தம் கொடுக்க வேண்டியது இந்திய அரசையா? இல்லை அமெரிக்க அரசையா? ஈழத்தை வென்றெடுக்க நாம் எதிர்க்க வேண்டியது  இந்திய ஆளும் வர்க்கத்தையா? இல்லை பெப்சி, கொக்க கோலாவையா? இதற்கு பதிலிருந்தால் அடுத்த கட்டுரையிலாவது எழுதுங்கள். 

குறிப்பு: 'முதன்மையாக' என்ற வார்த்தையை கவனிக்கவும். இதையும் கவனிக்காமல் இந்திய அரசை எதிர்ப்பது என்று நான் கூறியதை மடைமாற்றி கொக்ககோலா ஆதரவு, பெப்சி பாசம் என கூற மாட்டீர்கள் என நம்புகிறேன். ஏனெனில் உங்கள் கட்டுரையில் அதைத்தான் செய்திருந்தீர்கள். 

உங்கள் பதிவு கீழே… 

//கடந்த வாரம் சத்தியம் தொலைக்காட்சியில் நடந்த நேர்காணலில் திருமுருகன் இந்திய அரசை பொறுக்கி அரசாங்கம் என்று விமர்சித்தார். இந்த அளவிற்கு நீங்கள் எங்காவது இந்தியாவை எதிர்த்துப் பேசியதுண்டா? இத்தனை ஆண்டுகள் நாங்கள் இந்தியாவிற்கு எதிராக போராட்டம் நடத்தும் பொழுதெல்லாம் கேள்வி கேட்காத அருண்சோரிக்கு, அமெரிக்கப் பொருட்களைப் புறக்கணிக்கச் சொல்லும்பொழுது மட்டும் ஏன் கோபம் வருகிறது? அருண்சோரியின் இந்த கோவத்தில் இந்திய எதிர்ப்பைவிட அமெரிக்கப் பாசம் அதிகம் இருப்பதன் நோக்கம் என்ன? கொலைகாரனை நீதிபதியாக்கிய LLRCயை நிராகரிப்பதும், அதையே தமிழனுக்கான தீர்வாகத் திணிக்கும் ஐ.நா மற்றும் அமெரிக்காவினை எதிர்ப்பதும் இந்தியாவிற்கு ஆதரவானது என்பது எந்த புரட்சிகர சிந்தனையில் வருகிறது என்று சத்தியமாக எங்களுக்குப் புரியவில்லை.// 

பதில்:

இந்த பத்தியில் இருந்து 4 விடயங்களை பார்க்கலாம்.

1.இந்த பத்தியிலும் இந்திய எதிர்ப்பை விட அமெரிக்கப் பாசம் அதிகமாக இருப்பதன் நோக்கம் என்ன? எனக் கேட்டுள்ளீர்கள்.

அருண்சோரி ML அரசியல் பின்புலம் கொண்டவர்… அவர் ஒரு நக்ச‌லைட் என இந்திய உளவுத்துறையை விட அதிகமாக பொய் பரப்புரை செய்துவரும் நீங்கள்தான் (தனிப்பட்ட உங்களை சொல்லவில்லை; ஒட்டுமொத்த மே 17 இயக்கத்தார்), அமெரிக்கப் பாசம் என்று கூறுகிறீர்கள்.

 ஈழ விடுதலைக்காக இன்று கொக்ககோலாவை விட இந்தியாவை எதிர்ப்பது முக்கியம் என்று சொல்வது அமெரிக்கப் பாசமா தோழர்?

 சீனாவின் முற்றுகையில் இந்தியா என்ற புத்தகத்தை வெளியிட்ட நீங்கள், காந்திய பொருளாதாரத்தில் நம்பிக்கை கொண்ட நீங்கள், இன்றைய சூழலில் இந்திய அரசுக்கு எதிரான போராட்டத்தை ஏர்டெல், கொக்ககோலாவுக்கு எதிராக மடை மாற்றுவதற்கு பெயர் இந்தியப் பாசம் தோழர். 

2. பொறுக்கி அரசாங்கம் என்று குறிப்பிட்டதை சொன்னீர்கள். அதுதான் தைரியம் என நீங்கள் நினைத்தால் உங்கள் தைரியத்துக்கு வாழ்த்துக்கள் தோழர். ஆனால் உண்ணாநிலை போராட்டம் செய்பவர்கள் மீதே தேசத்துக்கு எதிராக போர் தொடுத்த வழக்கு போடும் இந்திய அரசு, இந்த தைரியத்தை கண்டுக்காததைப் பார்த்தால் அரசு இதை தைரியமாகக் கருதுகிறதா என்பதுதான் எங்கள் சந்தேகம். அடுத்து நீங்கள் யாராவது இவ்வளவு தைரியமாக (???) பேசியிருக்கிறீர்களா எனக் கேட்டீர்கள். எங்களைப் பொருத்தவரை அரசை நிர்பந்திக்கும் வலிமையான போராட்டமே சரியானது எனக் கருதுவதால் நாங்கள் இப்படி திட்டுவதில் கவனம் செலுத்துவதில்லை.

3. //… இத்தனை ஆண்டுகள் நாங்கள் இந்தியாவிற்கு எதிராக போராட்டம் நடத்தும் பொழுதெல்லாம் கேள்வி கேட்காத அருண்சோரிக்கு, அமெரிக்கப் பொருட்களைப் புறக்கணிக்கச் சொல்லும்பொழுது மட்டும் ஏன் கோபம் வருகிறது?….//

 பதில்: போங்க தோழர். காமடி பண்றீங்க. இந்தியாவை எதிர்த்து போராட்டத்தை நடத்துப்பா என சொல்லும் நாங்கள், இந்தியாவை எதிர்த்து நீங்கள் போராட்டம் நடத்தி இருந்தால் ஏன் கேள்வி கேட்கப் போகிறோம்! ஆதரவு தானே தெரிவிப்போம்.

4.//… கொலைகாரனை நீதிபதியாக்கிய LLRCயை நிராகரிப்பதும், அதையே தமிழனுக்கான தீர்வாகத் திணிக்கும் ஐ.நா மற்றும் அமெரிக்காவினை எதிர்ப்பதும் இந்தியாவிற்கு ஆதரவானது என்பது எந்த புரட்சிகர சிந்தனையில் வருகிறது என்று சத்தியமாக எங்களுக்குப் புரியவில்லை…//

 பதில்: முன்பே நான் சுட்டிக்காட்டியது போல் அமெரிக்க எதிர்ப்பு, கொக்ககோலா எதிர்ப்பு, பெப்சி எதிர்ப்பு என்ற போராட்டங்களை முன்னிறுத்தியதைப் பற்றிய விமர்சனத்தை (தீர்மானம் என்ற ஒரு வார்த்தையை சேர்த்து) இதிலும் அமெரிக்க தீர்மானத்தை எதிர்ப்பது எப்படி இந்தியாவிற்கு ஆதரவானது என உங்களுக்கு சாதகமாக மாற்றிவிட்டீர்கள் என்பதோடு இது எந்த புரட்சிகர தத்துவத்தில் வருகிறது எனவும் கேட்டுள்ளீர்கள். வைக்கப்பட்ட விமர்சனத்தை சரியாக எதிர்கொள்ளாமல் அதை உங்கள் விருப்பத்துக்கு மாற்றியதோடு… இந்த செயலுக்கு புரட்சிகர சாயம் வேறு…. யப்பா முடியல தோழர். 

உங்கள் அடுத்த கேள்வி....

 //நாங்கள் அமெரிக்காவை எதிர்த்து, இந்தியாவை காப்பாற்ற முயல்கிறோம் என்பது அடிப்படை புரிதல் கூட இல்லாத செயலாகும். மே 17 இயக்கம் இதுவரை நடத்திய, நடத்தப் போகின்ற அனைத்து போராட்டங்களையும் இந்தியாவை எதிர்த்தே நடந்தும், நடத்தியும் வருகிறது. இப்பொழுது நாங்கள் அமெரிக்காவை எதிர்ப்பது போராட்டத்தின் ஒரு பகுதியே தவிர, இதுவே ஒட்டுமொத்த போராட்டம் இல்லை. நாங்கள் இந்தப் போராட்டத்தை தொடங்கும்பொழுதே நாங்கள் வெளியிட்ட சுவரொட்டியில் இந்தியா+இலங்கை+அமெரிக்காவின் கூட்டு சதியை முறியடிப்போம் என்று தான் வெளியிட்டோம்......//

// கூடங்குளம் அணு உலை, முல்லைப் பெரியாறு, தமிழகத்திற்கு தரவேண்டிய மின்சாரத்தை தராமல் இருட்டடிப்பது என்று இந்தியாவின் அனைத்து தமிழர் விரோத துரோகங்களுக்கும் எதிராக எங்கள் இயக்கம் தொடர்ந்து போராடி வருகிறது. அதேபோல் தமிழின அழிப்பிற்கு துணைபோன இந்தியாவின் ஏர்டெல் புறக்கணிப்பு போராட்டம், இந்திய வெளியுறவுக் கொள்கைக்கு முட்டு கொடுக்கும் ஹிந்து பத்திரிக்கைக்கு எதிரான போராட்டம், தமிழின இனப்படுகொலைக்கு துணைபோன ஐ.நா. அலுவலக முற்றுகை என்று தமிழீழத்திற்கு தடையாக இருக்கும் அனைத்து முட்டுகட்டைகளுக்கும் எதிராக எங்கள் போராட்டம் சரியான திசையில் செல்கிறது //.  

பதில்:

மேலே உள்ள உங்கள் பதிவில் 2 விடயங்கள். 

 1. இந்திய பிரச்சனைகளில், தமிழ் நாட்டு பிரச்சனையில் உங்கள் போராட்டத்தைப் பற்றி கூறியுள்ளீர்கள். இவற்றைப் பொருத்தவரை ML அரசியல், காந்தியப் பொருளாதாரம், இந்திய பாதுகாப்பு, சாதிய பிரச்சனை, இடஒதுக்கீடு என பல விடயங்களில் உங்கள் நிலைப்பாட்டை பற்றி நிறைய கேள்விகள் கேட்க வேண்டி இருப்பினும் இந்த கட்டுரை உங்கள் ஈழப் பிரச்சனை தொடர்பான நிலைப்பாட்டை பற்றியதால் இதை பின்னர் தனியாக ஒரு கட்டுரையில் விவாதிப்போம். 

 2. ஈழப்பிரச்சனை தொடர்பாக பார்த்தால் மே 17 இயக்கம் இதுவரை நடத்திய, நடத்தப் போகின்ற அனைத்து போராட்டங்களையும் இந்தியாவை எதிர்த்தே நடத்தும், நடத்தியும் வருகிறது. இப்பொழுது நாங்கள் அமெரிக்காவை எதிர்ப்பது போராட்டத்தின் ஒரு பகுதியே தவிர, இதுவே ஒட்டுமொத்த போராட்டம் இல்லை என கூறுகிறீர்கள். அதன் கீழேயே உங்கள் போராட்டங்களை பட்டியல் இட்டுள்ளீர்கள். அதை சரியாகப் படித்து பாருங்கள். ஏர்டெல் எதிர்ப்பு, ஹிந்து பத்திரிக்கை எதிர்ப்பு, ஐநா அலுவலக முற்றுகை..... அருண்சோரியின் குற்றச்சாட்டுக்கு இதை விட வேறு ஆதாரம் எதற்கு?...

            ஏர்டெல்,இந்து பத்திரிக்கை எதிர்ப்புகளும் ஐநா எதிர்ப்பும்தான் இந்திய அரசு எதிர்ப்பா தோழர்? இது தான் சரியான திசையா?

 இது மட்டும் இல்லை, இந்த 3 ஆண்டுகளில் உங்கள் போராட்டங்களின் பட்டியலை எடுத்துப் பாருங்கள். அதில் உங்கள் முதன்மையான எதிரியாக நீங்கள் குறிப்பிடும் இந்தியாவை எதிர்த்த போராட்டங்கள் எத்தனை? பகுதி எதிரியாக குறிப்பிடும் அமெரிக்க, ஐ.நா., கம்பனிகளுக்கு எதிரான போராட்டங்கள் எத்தனை? எது அதிகம்... என்பது உங்களுக்கே புரியும். (பார்க்க: மே17 முகநூல்). சாதாரண‌ நேரங்களில் இந்திய அரசை நோக்கியும், நெருக்கடி காலங்களில் பகுதி எதிரிகளை நோக்கியும் உள்ளதைப் பார்க்கலாம் (உதாரணம்: காலச்சுவடு எதிர்ப்பு, அருந்ததிராய் எதிர்ப்பு, சிவசங்கர் மேனன் எதிர்ப்பு, எம்.எஸ்.சுவாமினாதன் எதிர்ப்பு, ஐ.நா. அதிகாரிகள் எதிர்ப்பு, டைம்ஸ் ஆப் இன்டியா எதிர்ப்பு......என மிக நீண்ட பட்டியலை பார்க்கலாம். இத்தனை போராட்டங்களுக்குப் பின்னால் உள்ள உங்கள் உழைப்பு தெரிந்தாலும், இவை ஈழத்துக்கான போராட்டத்தில் எந்த அளவுக்கு இந்திய அரசுக்கு அழுத்தத்தை கொடுத்திருக்கும் என நினைக்கிறீர்கள்? நீங்கள் எதிர்க்கும் ஐ.நா. அதிகாரிகளோ... சிவசங்கர் மேனன்களோ... அரசின், ஆளும் வர்க்கங்களின் பிரதிநிதிகள். அவர்கள் இடத்தில் எந்த குப்பனும், சுப்பனும் இருந்தாலும் இதைத்தான் செய்திருப்பார்கள் என்ற அடிப்படை புரிதல்கூட இல்லாத நீங்கள்.. புவிசார் அரசியல் என்றும், ஏகாதிபத்திய எதிர்ப்பு என்றும் பேசிக்கொண்டிருகப்பது மிகுந்த நகைப்புக்குரியதாக உள்ளது தோழர்.

 இந்திய எதிர்ப்பை பொருத்தவரை இந்தியாவை நேரடியாக எதிர்க்காமல் இந்தியாவை தாஜா பண்ணி வென்றெடுக்கும் செயல்திட்டத்தைக் கொண்டுள்ளீர்கள். (சீனா முற்றுகையில் இந்தியா....). அதன் தொடர்சியே உங்கள் இந்த அமெரிக்க எதிர்ப்பு.  

உங்கள் அடுத்த கேள்வி....

//….மேலும் எங்களின் ஐ.நா. அதிகாரிகளுக்கு எதிரான போராட்டம் குறித்து கேள்வியெழுப்பியிருக்கும் இவர் ஐ.நா. அமைப்பு என்பது உலக ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருக்கும் நிறுவனமாக இருந்தபோதும், தமிழீழ விடுதலையை முன்கொண்டு செல்ல உதவக் கூடிய போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கான பன்னாட்டு விசாரணையை கொண்டு வருவதற்குரிய மையமாக இருக்கின்றது என்கிறார். என்ன சொல்ல வருகிறீர்கள் அருண்சோரி? ஐ.நா. அதிகாரிகள் என்ன குற்றம் செய்தாலும் அதை எதிர்த்து யாரும் கேள்வி கேட்கக்கூடாது என்கிறீர்களா?...//

பதில்:

 நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் கார்த்திக்?. இப்போது மாணவர்கள் இந்திய அரசின் குற்றத்தை கேள்வி கேட்பது... முக்கியமா?. ஐநா அதிகாரிகளின் குற்றத்திற்கு கேள்வி கேட்பது முக்கியமா?

எதை நோக்கிய போராட்டம் முக்கியம்?. அப்படியே மே17 ஐ.நா. அதிகாரிகளின் குற்றத்துக்கு கேள்வி கேட்டுவிட்டல் எல்லாம் சரியாகிவிடுமா?. ஐ.நா. அதிகாரிகள் மட்டும்தான் குற்றம் செய்தார்களா?. ஐ.நா. மன்றத்திற்கு தெரியாமல் தான் நடந்ததா இந்த இனப்படுகொலை?. இல்லை சர்வதேச சமூகங்களுக்கும் தெரியாமல் நடந்ததா?. எம் இனம் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போது அமெரிக்காவுக்கும், ஐ.நா.வுக்கும் தெரியாதா?

 சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டதை விட அதிகமான ஆதாரங்கள் அவர்களிடம் இல்லையா?

செயற்கைக்கோள் உதவியுடன் ஒவ்வொறு நொடியும் மொத்த உலகையும் படம் பிடித்துக் கொண்டிருக்கும் வல்லரசுகளிடம் எம் இனம் அழிக்கப்பட்ட மொத்த நிகழ்வுகளுக்கான ஆதாரங்கள் இல்லை என நினைக்கிறீர்களா?

 இவ்வளவு இருந்தும் இன அழிப்பைத் தடுக்காத, எம் இனம் அழிப்பதற்கு எல்லாவகையிம் துணை நின்ற இந்த ஐ.நா. மன்றத்தையும் இந்த சர்வதேச சமூகத்தையும், சில ஐ.நா. அதிகாரிகளை குற்றம் சொல்வதாலேயே நிர்பந்திக்க முடியும் என நீங்கள் நம்புவது உங்கள் அரசியல் புரிதலின்மையாலா? இந்திய அரசின் நலன் சார்ந்த நோக்கத்தாலா?

 ஐ.நா.வை அம்பலப்படுத்துவோம், முற்றுகை இடுவோம் என்கிறீர்கள். ஐ.நா.வை அம்பலப்படுத்த நாம் யார்?. சொந்தமாக நாடு உள்ளதா? அரசு உள்ளதா? தமிழ்நாட்டுக்கென ஐ.நா.வில் பிரதிநிதி உள்ளாரா? சொந்தமாக அரசு உள்ள நாடுகளே அங்கே ஒன்றும் கிழிக்க முடியாதபோது, கண் எதிரே உள்ள துரோகியான இந்திய அரசை விடுத்து ஐ.நா.வை நோக்கி போராட முழங்குவதற்கு பின்னால் இந்திய அரசு நலன் தவிர்த்து வேறு என்ன இருக்க முடியும்?

 ஏனெனில்... தமிழக அரசை நோக்கிப் போராடினால் அது ஒடுக்கும். இந்திய அரசை நோக்கிப் போராடினால் பெரிதாக கண்டுகொள்ளாது. ஏனெனில் அதற்குப் பெரிதாக பாதிப்பு இராததால்... அதே போல் ஈழ விடயத்தில் இன்றய சூழலில் ஐ.நாவையும், அமெரிக்காவையும் எதிர்ப்பது, பெப்சியையும், ஏர்டெல்லையும் எதிர்ப்பது இந்திய அரசின் மீதான நெருக்கடியை குறைத்து இந்தியாவுக்கு நலன் சேர்க்காதா? 

உங்கள் அடுத்த கேள்வி.......  

//.....மேலும் ஐ.நாவிற்கு எதிரான போராட்டத்தை புலம்பெயர் சமூகம் தான் செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார். முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் ஐ.நாவின் போர்க் குற்றம் குறித்த உண்மைகளை முதன்முதலில் மிகப்பெரிய ஆய்வுக்கு உட்படுத்தி, ஒவ்வொன்றுக்கும் தெளிவான ஆதாரங்களோடு அதை வெளிக்கொண்டு வந்தது யார்? அது குறித்த புரிதல்களை மக்களுக்கு ஏற்படுத்த போராட்டங்கள் செய்யாமல் வெறும் அறிக்கைகளை மட்டும் விட்டுக் கொண்டிருந்தால் அது தமிழக மக்களிடமும் சென்று சேர்ந்துவிடுமா என்ன? இதில் கவனிக்க வேண்டிய செய்தி - நாங்கள் ஐ.நாவிற்கு எதிரான போராட்டம் செய்தது பிப்ரவரி 12 மாணவர்கள் போராட்டம் தொடங்குவதற்கு முன் என்பது அருண்சோரிக்கு தெரியாதா இல்லை அதை வசதியாக மறந்துவிட்டாரா?.....// 

பதில்: 

அடப்போங்கப்பா... விட்டா சேனல் 4க்கு அந்த ஆவணப்பட ஆதாரங்களை எல்லாம் கொடுத்ததே நாங்கதான் என்ற அளவுக்கு பேசினா என்ன பண்ணுவது. 

 எந்த காலகட்டத்தில் எந்த முழக்கத்தை வைக்க வேண்டும் என்பது கூட தெரியலை. இந்திய அரசுக்கு வரிகொடா இயக்கம் நடத்துவோம் என்கிற அளவுக்கு மாணவர்கள் முழக்கங்களை வைத்துக்கொண்டு இருக்க.... அடுத்து இந்தியக் கொடியை எரிப்போம் என்கிற அளவுக்கு போய்க் கொண்டிருப்பவர்களிடம் போய் பெப்சியை புறக்கணிப்போம்... ஏர்டெல்லை எதிர்ப்போம்னு பேசிக்கிட்டு.... எங்கள வந்து வெற்று அறிக்கை விடுவதாக சொல்பவர்களுக்கு என்ன பதில் சொல்வது? தோழர் களத்துல இருக்கீங்க இல்ல....

பிப்ரவரி 12 நடத்தியதை மறந்துட்டீங்களா? என கேட்டுள்ளீர்கள். உங்கள் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.திருமுருகன் கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் தான் ஏர்டெல் புறக்கணிப்பு, பெப்சி புறக்கணிப்பு பற்றி பேசியதை நீங்க மறந்துட்டீங்களா தோழர்?. 

 இதற்கு உங்க நேர்மையான பதில் என்ன தோழர்?. 

உங்கள் அடுத்த கேள்வி... 

//.....மாணவர்கள் போராட்டத்தை மே 17 திசை திருப்புவதாக குற்றம் சுமத்தியிருக்கும் அருண்சோரியிடம் நாங்கள் கேட்கவேண்டிய கேள்விகள் பல விடயங்களில் இருக்கிறது. இருப்பினும் இப்பொழுது அவர் மாணவர் போராட்டத்தை மையப்படுத்தியே எங்களின் மேல் குற்றம் சுமத்தியதால் நானும் மாணவர் போராட்டம் தொடர்பாகவே அவரிடம் சில கேள்விகளை கேட்க விரும்புகிறேன். முதன்முதலில் லயோலா கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் உட்கார்ந்த பொழுது முதல் நாள் அன்றே “AICUF வளாகத்திலிருந்து இடத்தை மாற்ற வேண்டாம்; இன்றே போராடி கைதாவோம். நீங்கள் கைதானால் தமிழகத்தில் மாபெரும் புரட்சி வெடிக்கும்” என்று போராட்டம் மற்ற மாணவர்களுக்கு தெரியும் முன்பே ஆலோசனை கூறி நீர்த்துப்போக செய்ய முயற்சித்ததின் நோக்கம் என்ன?....// 

பதில்:

அங்கே உள்ள சூழல் கருதியே இடத்தை மாற்ற வேண்டாம் என்றோம். மாணவர்கள் உட்கார்ந்த இடம் கல்லூரி வளாகம் அருகில்... அங்கே கூடியிருந்த மாணவர் கூட்டம். தமிழக அரசின் அன்றைய ஈழ ஆதரவு நிலை என அனைத்தும் கருத்தில் கொண்டு பார்த்தால் அந்த இடத்தில் காவல்துறை கைது செய்ய முயற்சிக்காது என்பதால்தான் அங்கேயே இருக்கச் சொன்னோம். அதுமட்டுமல்ல சுற்றிலும் பல கல்லூரிகள் நடக்கும் தூரத்தில் உள்ளது. மாணவர்களை அணிதிரட்ட வசதியாக இருக்கும். எதிரிலே இலங்கை துணைத் தூதரக கட்டிடம்.. என பல காரணங்கள். 

அது சரி தோழர்... மாணவர்களை அவசரமாக கோயம்பேடுக்கு இடத்தை மாற்றியதற்கான‌ காரணத்தை நீங்கள் சொல்லவே இல்லையே! 

உங்கள் அடுத்த கேள்வி... 

 //.......மாணவர்கள் போராட்டத்திற்கு பல இயக்கங்கள், கட்சிகள் உதவி வருகின்றன. யார் பெயரும் வெளியில் தெரியாது. அதே போல் தமிழ்நாடு மக்கள் கட்சி மதுரை போராட்டத்தில் பங்கு கொண்டது. அவர்களுக்கு 14ம் தேதி பேரணிக்கு சுவரொட்டி ஓட்டும் பணி கொடுக்கப்பட்டது. மாணவர்கள் அனைவரும் ஐ.நாவில் அமெரிக்கத் தீர்மானத்தை அயோக்கிய தீர்மானம் என்று மறுத்த பொழுது சுவரொட்டி போட்டவர்கள் ஐ.நா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று சுவரொட்டி போட்டது ஏன்? (கடைசி நேரத்தில் கவனித்த மாணவர்கள் அந்த பகுதியை கிழித்துவிட்டு ஒட்டினர்) அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரித்து நீங்கள் போட்ட சுவரொட்டியை உங்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் போட்டிருப்பது குறித்து கேள்வி எழுப்பியவுடன் அந்த கேள்விக்கு கூட பதில் சொல்லாமல் அவசர அவசரமாக அந்தப் படத்தை நீக்கியது ஏன்? உங்களிடம் நேர்மை இருந்தால் அதை ஏன் நீக்க வேண்டும்? .....// 

பதில்:  

 அனைத்து கல்லூரி மாணவர்கள் போட்ட சுவரொட்டியைப் பற்றி விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.  

 மாணவர்களின் அந்த சுவரொட்டியில் மாணவர்கள் தெளிவாக போட்டுள்ள பொதுவாக்கெடுப்பு, தனி ஈழம் போன்ற கோரிக்கைகளை ஆதரிக்க எங்கள் முகநூலில் அதை போட்டோம். அதேபோல் அமெரிக்கத் தீர்மானம் தொடர்பாக அவர்களுக்கு விளக்கினோம். அந்த மாணவர்களின் கோரிக்கை தனி ஈழம், பொதுவாக்கெடுப்பு என மிகத் தெளிவாக உள்ளது. அந்த கோரிக்கைகளையும் அவர்கள் இந்திய அரசை நோக்கியே (கொக்ககோலா பாட்டிலை முற்றுகையிடாமல்) வைத்துள்ளார்கள். அவர்கள் கோரிக்கையும், நோக்கமும், அமெரிக்கத் தீர்மானத்தில் உள்ளதா என்பதே விடயம். அதில் இல்லை என்பதால் தான் அவர்களே கிழித்துவிட்டு ஒட்டியிருந்தார்கள். அவர்கள் தெளிவாகவே இருக்கிறார்கள். 

 ஆனால் அந்த சுவரொட்டியில் உள்ள பொதுவாக்கெடுப்பு, தனி ஈழம் போன்ற விடயங்களை விடுத்து ஆதரி என்ற வார்த்தையும், முகநூலில் இருந்த தமிழ்நாடு மக்கள் கட்சி என்ற வார்த்தையையும் மட்டும் அடிக்கோடிட்டு எங்கள் கட்சிக்கெதிராக அரசியலாக்க நினைக்கும் உங்கள் ஆர்வம் புரிகிறது தோழர்.  

             எந்த நேரத்தில் யாரை எதிர்க்கவேண்டும், என்ன போராட்டம் நடத்தவேண்டும் என தெரியாமல் களமாடிக் கொண்டிருக்கும் நீங்கள், புதிதாக‌ களத்துக்கு வந்த மாணவர்களை குறை சொல்வதிலும், எங்கள் மீது அவதூறு பரப்புவதிலும் காட்டும் கவனத்தில் பாதியையாவது தங்கள் செய்ய வேண்டிய போராட்டத்தின்மீது வைத்திருந்தால் எங்களுக்கு கட்டுரை எழுத தேவை இல்லாமலே போயிருக்கும். 

உங்கள் அடுத்த கேள்வி... 

//......லயோலா மாணவர்களின் போராட்டம் தொடங்கிய முதல் நாளிலிருந்து போராட்டத்தை ஒருங்கிணைக்க மாணவர்களால் உருவாக்கப்பட்ட தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பை உடைத்து, மாணவர் போராட்டத்தை உடைக்க ‘தமிழீழத்திற்கான மாணவர் போராட்ட குழு’ என்ற குழுவை நீங்களும் உங்கள் கட்சியும் உருவாக்க வேண்டிய அவசியம் என்ன?....// 

பதில்: 

 எல்லா மாணவர் போராட்டங்களின் ஆரம்பக் கட்டத்திலும் மாணவர்கள் பல்வேறு அமைப்புகளாகவும், பல்வேறு குழுக்களாகவும், கூட்டமைப்புகளாகவும் அவர்களின் அரசியல் புரிதல்களுக்கு ஏற்ப அணிதிரள்வது அவர்களின் சனநாயக உரிமை தோழர். இதுதான் சமூக இயங்கியல். போராட்டக்களத்தில் இணைந்து செயல்படும்போதுதான் அவர்களுக்கு முழுமையான அரசியல் புரிதல் வரும். அவர்களுக்குள் இருக்கும் சிறு சிறு முரண்பாடுகள் மறையும். ஒத்தக்கருத்துள்ள குழுக்கள், கூட்டமைப்புக்களுக்கிடையே இணைதல் நடைபெரும். கடைசியாக சரியான அரசியலை முன்னெடுக்கும் ஒரு அமைப்பின்கீழ் பெரும்பான்மையினர் அணிதிரள்வர்.... அனைத்தும் போராட்ட வளர்ச்சிப் போக்கில் பல கட்டங்கள் தோழர்.  

 பொதுவாக ஒரு கூட்டமைப்பு என்பது பல்வேறு அமைப்புகள் சேர்ந்து உருவாக்குவதுதான். ஆனால் ஒரு நல்ல நோக்கத்திற்காக 8 லயோலா மாணவர்களால் உருவாக்கப்பட்ட மாணவர் கூட்டமைப்பு என்ற அடையாளத்தை, அந்தப் பெயரை அந்த நல்ல நோக்கங்களுக்காக எங்கள் மாணவர் அமைப்பும் ஆதரித்தது. ஆனால் அந்த லயோலா மாணவர்கள் கைது செய்யப்பட்டதும் அந்த லயோலா மாணவர்களால் உருவாக்கப்பட்ட அந்த அடையாளத்தைக் கைப்பற்றும் நோக்குடன் எந்த‌ மாணவர் அமைப்பிலும் இல்லாத மே17 தோழர் சிபியை வைத்து அந்த மாணவர் கூட்டமைப்பு என்ற அடையாள‌த்தில், பெயரில் தனியாக பத்திரிக்கையாளர் ச‌ந்திப்பை நடத்திய‌ நீங்கள் (மே17) எந்த அடிப்படையில் எங்களை கேள்வி கேட்கிறீர்கள்? மே17 இயக்கத்தின் சுயந‌ல அரசியலுக்காக நீங்கள் ஆரம்பித்த இந்த பணி, அடுத்தடுத்து வெவ்வேறு மாணவர்களை, அந்த மாணவர் கூட்டமைப்பு என்ற அடையாள‌த்தின் ஒருங்கிணைப்பாளர்களாக முன்னிருத்தி தொடர் பத்திரிக்கையாளர் சந்திப்புகள் நடத்தி பத்திரிக்கையாளர்களே கடுமையாக விமர்சிக்கும் நிலைக்கு ஆளாக்கியது நீங்களா இல்லை, நாங்களா தோழர்?  

 மாணவர் போராட்டங்கள் வீரியமாகிக் கொண்டிருந்த அந்த சூழலில், புதிதாக மாணவர்கள் அலை அலையாய் களத்துக்கு வந்த அந்த சூழலில் அவர்களை அணிதிரட்டி இந்திய அரசுக்கு எதிரான ஒரு வலிமையான மாணவர் போராட்டமாக முன்னெடுத்திருக்க வேண்டிய அந்த மாணவர்களை, மாணவர் கூட்டமைப்பு என்ற அடையாளத்தை கைப்பற்றும் போராட்டத்தை தங்களுக்குள் நடத்தும் சூழலுக்கு தள்ளிய நீங்கள், இந்த அடையாள‌ அரசியலில் போட்டியில் பங்கேற்காமல் களத்துக்கு வந்த மாணவர்களை அணிதிரட்டும் பணியை சரியாக செய்த... செய்துக் கொண்டிருக்கின்ற எங்கள மாணவர் அமைப்பைப் பற்றி பேச என்ன அடிப்படை இருக்கிறது தோழர். 

 ஆனால் ஒரு விடயம். மாண‌வர்கள் மத்தியில் அந்த கீழ்தர அரசியலை செய்தவர்கள் அம்பலமாகி வருவது தங்களுக்கும் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்.  

உங்கள் அடுத்த கேள்வி... 

//.....மாணவர் போராட்டத்தில் எந்த அமைப்பும் தலையிடக்கூடாது என்ற உயர்ந்த நோக்குடன் செயல்படும் நீங்கள், உங்கள் கட்சியில் இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திவ்யாவையும், கட்சியின் மாணவர் அமைப்பில் இருக்கும் இளையராஜாவையும் தமிழீழத்திற்கான மாணவர் போராட்ட குழுவின் ஒருங்கிணைப்பாளர்களாக முன்னிருத்துவது ஏன்?.....// 

மாணவர்கள் அரசியல் கட்சிகளிலும், இயக்கங்களிலும் இருப்பது அவர்களின் சனநாயக உரிமை. அது ஆக்கப்பூர்வமான விடயமும் கூட. அப்படி அரசியல் இயக்கங்களில் இருப்பவர்கள் போராட்டக் களத்துக்கு வருவதும் அவர்கள் உரிமை. இன்றைக்கு போராட்டக் களத்துக்கு வந்த மாணவர்கள் பலபேர் பலவித அரசியல் பின்புலம் உள்ள‌வர்கள்தான். தங்கள் அமைப்பிலும் கூட மாண‌வர்கள் இருப்பார்கள் என நினைக்கிறேன். மாணவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்பது...இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்குப் பின் ஆட்சியை பிடித்த கருணாநிதியின் குரலா? இல்லை இந்திய ஆளும் வர்க்கத்தின் குரலா? என்பது எங்களுக்கு சரியாக புரியவில்லை. இதில் தங்கள் நிலைப்பாடு என்ன தோழர்? 

இருப்பினும்,  தோழர். திவ்யாவும், தோழர்.இளையராசாவும் பல ஆண்டுகள் மாணவர் போராட்டத்தை முன்னெடுத்த அணுபவம் உள்ளவர்கள் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். அதேபோல் தோழ‌ர் சிபி அவர்களை மே17 ஏன் முன்னிறுத்தியது என கேட்க மாட்டேன். ஏனெனில் மாண‌வர்கள் அரசியல் களத்துக்கு வர வேண்டும். அரசியல் படவேண்டும் என்பதே எங்கள் விருப்பம். 

ஒரு கட்சி முன்னிருத்தும் ஆட்களை அப்படியே கண்ணை மூடிக்கொன்டு ஏற்கும் அளவுக்கு அறியாமையில் இன்றைக்கு களத்தில் உள்ள மாண‌வர்கள் இல்லை. டெசோ அமைப்பு முதல்... பல்வேறு அமைப்புகள் அவர்கள் போராட்டத்தை கைப்பற்ற நினைத்தும் முடியாமல் அசிங்கப்பட்டதுதான் இன்றைய சூழல். அப்படியே முன்னிறுத்தப்பட்டாலும் சரியான ஆட்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் தொடர்வதும், தவறான ஆட்கள் தூக்கி எறியப்படுவதும் தொடர்ச்சியாக மாண‌வர்களின் போராட்டத்தையும் பேட்டிகளையும் பார்த்திருப்பவர் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.... 

உங்கள் அடுத்த கேள்வி... 

//.....எங்களை இந்தியாவை எதிர்த்துப் போராடவில்லை என்று குறைசொல்லும் நீங்கள், இந்தியாவின் தேர்தல் அரசியலை ஏற்றுக்கொண்டு கட்சி தொடங்கிய நீங்கள், இந்தியாவை எதிர்த்து செய்த போராட்டங்கள் தான் என்ன?.....// 

எங்கள் கட்சியை பற்றிக் கேட்டுள்ளதால் சில விடயங்களைப் பற்றி கூற விரும்புகிறேன். எங்கள் கட்சியைப் பொருத்தவரை உங்களுக்குப் பிடிக்காத ML அரசியல் பின்புலம் முதல் தமிழ்தேச அரசியல் வரை பல்வேறு அரசியல் பின்புலத்திலிருந்து 1 முதல் 15 ஆண்டுகள் வரை களத்தில் பணியாற்றிய பல்வேறு அமைப்புகள், தமிழ்த் தேச விடுதலையையும், மக்களுக்கான சனநாயகத்தையும் முதன்மை கொள்கை முழக்கமாக‌ முன்னிறுத்தி அதன் அடிப்படையில் இணைந்து உருவாக்கிய கட்சியாகும். எங்கள் கொள்கை முழக்கத்தை வென்றெடுக்க மக்களுக்கு விரோதமில்லாத எந்த வித அரசியல் வடிவத்தையும் எடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்கள் கட்சியும் சரி, எங்களுடைய முந்தைய வடிவத்திலும் சரி இந்திய அரசுக்கு எதிரான எங்களுடைய தொடர்ச்சியான போராட்டங்களை களத்தில் தொடர்ச்சியாக பணியாற்றும் அனைவரும் அறிந்ததே. இணையதளத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் உங்களுக்கு அது தெரியாதது ஒன்றும் ஆச்சர்யமில்லை. களத்தில் உள்ள சக தோழர்களுக்கு நன்றாகத் தெரியும்.

எங்களுக்கு என்று ஒரு சித்தாந்தம் இருக்கிறது, எங்களுக்கு என்று கொள்கை இருக்கிறது. தமிழ்நாடு தேசிய ஜனநாயக விடுதலையே எங்கள் நோக்கம். எங்கள் நிலைப்பாடு தங்களுக்கு ஏற்றதோ இல்லையோ அதை நாங்கள் சொல்லிவிட்டோம். ஆனால் உங்கள் அமைப்பின் சித்தாந்தம் என்ன? நோக்கம் என்ன? செயல்திட்டம் என்ன? கொஞ்சம் தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும், தோழர்! 

உங்கள் அடுத்த கேள்வி.......  

அருண்சோரி தன் விமர்சனத்தை தங்கள் மே17 அமைப்பின் மீது வைக்காமல் திருமுருகன் மீது வைத்துள்ளார். இது தனி நபர் தாக்குதல் என கண்டித்துள்ளார். 

விமர்சனங்களை திருமுருகன் மீது வைத்ததற்க்கு காரணம் அவை அனைத்தையும் (பெப்சி, கொக்ககோலா, ஏர்டெல் எதிர்ப்பு…...) தோழர்.திருமுருகனே மாணவர் மத்தியில் பேசியதாலும், மே17 இயக்க செயல்பாடுகள் அனைத்துமே ஒருதனி நபரை முன்னிருத்தியதாகவே இதுவரை இருந்துள்ளது என்பது மட்டுமல்லாமல் மே17 பற்றி எங்களுக்கும் மற்ற பிற இயக்கங்களுக்கு மத்தியிலும் இதே பார்வைதான் உள்ளது என்பதாலும், தோழர் திருமுருகனின் அமைப்பு விரோத அரசியலை நாங்கள் நன்கு அறிந்திருப்பதாலும்தான்.  

கடைசியாக, தோழர். அருண்சோரியைப் பற்றி உங்கள் தலைப்பிலும் பல்வேறு இடங்களிலும் கூறியிருந்தீர்கள். வைக்கப்பட்ட விமர்சனத்தைக்கூட சரியாக புரிந்துக்கொள்ளாமல் (???) கேட்கப்பட்ட ஒரே ஒரு கேள்விக்கு கூட சரியாக பதில் சொல்ல முடியாமல் தங்கள் இஷ்டத்துக்கு ஒரு கட்டுரை எழுதிய உங்கள் கேள்விகளைக் கண்டும், நேற்று கள‌த்துக்கு வந்த மாணவர்கள் கூட சரியான கோரிக்கையை வைத்து சரியான திசையில் போராடிக்கொண்டிருக்க, ஈழப் பிரச்சனையை முன்னிருத்தியே அமைப்பு கட்டியதாக கூறிக்கொண்டு முக்கிய தருண‌ங்களில் கூட சரியான கோரிக்கையை முன்னிருத்தி போராட்டத்தை எடுக்காமல்... ஏர்டெல் எதிர்ப்பு, பெப்சி கொக்ககோலா புறக்கணிப்பு என மடைமாற்றிக் கொண்டிருக்கும் உங்கள் அமைப்பின் கேள்விகளைக் கண்டு அருண்சோரி ஓடி ஒளிந்ததாக நீங்களே கூறிக்கொள்வது ஓவராக இல்லையா தோழர்?

 2009 ஈழப்போர் உச்சத்தில் உயிராயுதம் ஏந்தி தோழர் முத்துக்குமார் தீக்கிரையான அந்த நாள் முதல் தான் பார்த்துக்கொண்டிருந்த வேலையையும், 5 இலக்க சம்பளத்தையும் தூக்கி எறிந்துவிட்டு அன்று முதல் இன்று வரை எந்தவித சுய ஆசைகளையும் கொள்ளாமல் ப.சிதம்பரத்துக்கு எதிரான பிரசாரத்தில் சிறை சென்ற‌து முதல் (அதில் கைது ஆகாதவர்கள் எல்லாம் தாங்கள் தான் நடத்தினோம் என தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்க), முத்துக்குமார் இளைஞர் எழுச்சி பாசறை, குடிசை மக்கள் வாழ்வுரிமை இயக்கம், தமிழக இளைஞர் எழுச்சி பாசறை... தமிழ்நாடு மக்கள் கட்சி என தனித் தமிழ் தேச நலனுக்காக... மக்களுக்கான சனநாயகத்துகாக இந்திய அரசை எதிர்த்தும், ஆளும் வர்க்கத்தை எதிர்த்தும் களமாடிவரும் தோழர் அருண்சோரியை தங்கள் மொக்கை கேள்விகளை கண்டு ஓடி ஒளிந்ததாக கூறும் தோழர்.கார்த்திக் அவர்களையும், மே17 இயக்கத்தையும் தமிழ் நாடு மக்கள் கட்சி மிக வன்மையாக கண்டிக்கிறது. 

 தோழர் அருண்சோரியின் கேள்வியே பதிலளிக்கப்படாமல் இருக்க தாங்கள் எழுப்பிய அத்தனை கேள்விகளுக்கும் வரி வரியாக பதிலளித்துள்ளோம் என்பதை தெரிவித்துக் கொண்டு எங்கள் கேள்விகளுக்கு பதில் இருந்தால் (கேள்விகளை திரிக்கக் கூடாது தோழர்.) அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

- வினோத்குமார், தேசிய பொதுக்குழு உறுப்பினர், தமிழ்நாடு மக்கள் கட்சி. கைப்பேசி - 9994262666 (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It