ஈழத்தில் தமிழர்கள் கொத்து கொத்தாக இனப்படுகொலை செய்யப்பட்ட பொழுது தமிழகத்தில் வாழும் நாம், நமது தொப்புள் கொடி உறவுகளுக்காக பல்வேறு விதமான போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என்று நம்மால் முடிந்த அனைத்து விதமாக போராடியும், முத்துக்குமார் உட்பட பல தமிழர்கள் தங்கள் உடலை தீக்கு தந்து ஆயுதமாக்கிய பின்னும், அதை அனைத்தையும் தமிழ்நாட்டில் உள்ள சிலரின் பதவி ஆசைக்காக நம் போராட்டத்தை திசை திருப்பி நம் உறவுகளான‌ ஒன்றரை லட்சம் தமிழர்களை நாம் இழந்தோம்.

arunchorie_480

தமிழ்நாடு மக்கள் கட்சி சென்னை மாவட்டத் தலைவர் அருண்சோரி 

இப்படி தன்னெழுச்சியாக 2009ல் போராடிய மக்களை தங்களின் பதவியைத் தக்க வைத்து கொள்வதற்காக கருணா போன்ற ஒரு சிலர் இனப்படுகொலைக்கு துணை போனார்கள். அது போலவே இப்பொழுதும் தனது அரசியல் லாபத்திற்காக, போராடும் மாணவர்களை தனது கட்சியின் ஆட்களைக் கொண்டு தம்முடைய அரசியல் கட்சியின் போராட்டமாக மாற்ற முயற்சித்து வருகிறார்கள் தமிழ்நாடு மக்கள் கட்சியும் அதன் சென்னை மாவட்டத் தலைவர் அருண்சோரியும்.

பச்சிளம் பாலகன் பாலச்சந்திரன் படுகொலை காட்சிகள் வெளிவந்த போது அனைத்து தமிழ் நெஞ்சங்களும் துடித்தன‌. அது போலவே இலங்கை மீதான ஒரு விவாதம் ஐ.நா அவையில் வந்தது. இந்த காலகட்டத்தில் 08/03/2013 அன்று லயோலா கல்லுரி மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை கல்லுரி அருகில் உள்ள அய்கப் அரங்கில் ஆரம்பித்தார்கள்.

அப்பொழுது அங்கே வந்த காவல்துறையினர் 'மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும். இல்லையென்றால் கைது செய்வோம்' என்று சொன்ன போது தமிழின உணர்வாளர்கள் அனைவரும் மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டாம் எனவும், அவர்களை காவல் துறையினரிடம் இருந்து காப்பாற்றி, போராட்டத்தை தொடர்வது என்றும் முடிவு செய்த பின், அதுவரை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த அருண்சோரியும், அவரது ஆட்களும் தன்னிசையாக மாணவர்களிடத்தில் போராட்டத்தை கைவிட வேண்டும் எனவும், மாணவரகள் போலிசாரிடம் கைது ஆக வேண்டும் எனவும் வலியுறுத்தினார். அது அங்கு இருந்த உணர்வாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

illaiyaraja_politics_300தமிழ்நாடு மக்கள் கட்சியின் அருண்சோரி ஏன் அப்படி போலிசாருக்கு சாதகமான ஒரு முடிவை மாணவர்களிடத்தில் வைத்தார், ஏன் போராட்டத்தை திசை திருப்ப முயன்றார் என்று ஒரு விவாதம் மாணவர்களிடத்திலும், அங்கு இருந்த உணர்வாளர்களிடத்திலும் ஏற்பட்டது. ஆனாலும் மாணவரகள் போராட்டத்தை காக்க வேண்டும், அதை அனைத்து மக்களிடத்திலும், மாணவர்களிடத்திலும் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் மாணவர்களை உணர்வாளர்கள் அங்கிருந்து கோயம்பேட்டில் உள்ள செங்கொடி அரங்கத்திற்கு கொண்டு சென்று போராட்டமானது தொடர்ந்தது.

இப்படி மாணவர் போராட்டத்தை முதலிலேயே தடுக்க முயன்ற தமிழ்நாடு மக்கள் கட்சியும் அருண்சோரியும் அடுத்து மாணவர்களை பிளவுபடுத்த தன் கட்சியின் ஆட்களைக் கொண்டு "தமீழீழத்திற்கான மாணவர் போராட்டக் குழு" என்ற ஒன்றை ஏற்கனவே இருந்த தமீழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்புக்கு எதிராக ஆரம்பிக்க வைத்தனர். அதன் ஒருங்கிணைப்பாளராக தனது கட்சியின் இணைச் செயலாளர் திவ்யா என்பவரையும், அதன் அடுத்த கட்ட தலைவராக தனது கட்சியின் மாணவர் தலைவரான இளையராஜா என்பரையும் நியமித்து மாணவர் போராட்டத்தை தனது கட்சியின் போராட்டமாக மாற்றினார். 

முதலில் போராட்டத்தை ஆரம்பித்த லயோலா கல்லூரி மாணவர்கள், இது வெறும் லயோலா கல்லூரி மாணவர்கள் போராட்டம் இல்லை, அனைத்து கல்லூரி மாணவர்கள் போராட்டம், ஆகவே இதற்கு 'தமீழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு' என்று பெயரிட்டு, அதன் மூலம் அனைத்து மாணவர்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வருவதற்கு ஆரம்பிக்கப்பட்டது தான் 'தமிழீழ விடுதலைக்கான் மாணவர் கூட்டமைப்பு'.

இப்படி போராடும் மாணவர்களால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பில் முதலில் இணைந்து வேலை செய்த தமிழ்நாடு மக்கள் கட்சியின் திவ்யாவும், இளையராஜாவும் கூட்டமைப்புக்கு கிடைத்த வரவேற்பை தனது கட்சிக்கு மாற்ற நினைத்தார்கள். அது அங்கு இருந்த மாணவரகளால் தடுக்கப்பட்டது. அதன் பின் தனியாக ஒரு அமைப்பை 'தமீழிழத்திற்க்கான மாணவர் போராட்ட குழு' என்று ஆரம்பித்து அதன் தலைவராக தங்களது கட்சியின் ஆட்களை நியமித்துக் கொண்டு, மொத்த மாணவர் போராட்டத்தை இரண்டாக உடைத்தார்கள் அருண்சோரியும் தமிழ்நாடு மக்கள் கட்சியும்.

tmk_poster_628

இப்படி மாணவர் போராட்டத்தை உடைத்ததோடு இல்லாமல் போராடும் மாணவர்களின் கோரிக்கைகளையும் அவர்களுக்குத் தெரியாமல் மாற்றி அமைத்தனர் தமிழ்நாடு மக்கள் கட்சியினர். மதுரையில் போராடும் 'தமீழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு' மாணவர்களுக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தந்த நிலையில் அங்கும் தமிழ்நாடு மக்கள் கட்சியின் மதுரை மாவட்டத் தலைவர் தங்கபாண்டியனும் ஆதரவு தருகிறோம் என்றும், வேலையை பிரித்துப் கொள்ளலாம் என்றும் கூறியதன் காரணமாக மாணவர்கள் தயாரித்த அமெரிக்கத் தீர்மானத்தை எதிர்க்கிறோம் உட்பட கோரிக்கைகளை வைத்து சுவரொட்டி தயாரிக்கும் வேலையை மாணவர்கள் தங்கபாண்டியன் அவர்களுக்கு கொடுத்தனர். அவர் மாணவர்களின் கோரிக்கையான அமெரிக்க தீர்மானத்தை எதிர்க்கிறோம் என்பதற்குப் பதிலாக தனது கட்சியின் கோரிக்கையான 'அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்க' என்று தன்னிச்சையாக மாற்றிக் கொடுத்தார். அதன் பின் சுவரொட்டி ஒட்டும் பொழுது அதைப் பார்த்த மாணவரகள் அதிர்ச்சி அடைந்து அனைத்து சுவரொட்டியின் மீதும் மீண்டும் ஒரு சுவரொட்டியை ஒட்டி தவறான கோரிக்கையை அழித்திருக்கின்றனர். இப்படியாக மாணவர்களின் கோரிக்கையைக் கூட ஏற்றுக்கொள்ளாத அளவுக்கு யாரைக் காப்பாற்ற அருண்சோரியும் அவர் சார்ந்த தமிழ்நாடு மக்கள் கட்சியும் முயல்கிறார்கள் என்று நேர்மையாளர்கள் புரிந்து கொள்ளட்டும்.

divya_285இதுமட்டுமில்லாமல் மாணவர் போராடும் போது ஆதரவு தெரிவிக்க வந்த அரசியல் கட்சியினரை இது மாணவர் போராட்டம், இதில் அரசியல் கட்சிகள் தலையிடக் கூடாது என்று தமீழீழத்திற்கான மாணவர் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் அதாவது தமிழ்நாடு மக்கள் கட்சியின் இணை செயலாளர் திவ்யா நேரிலும் பத்திரிக்கை வாயிலாகவும் பலமுறை சொன்னார்.

அவரே தமிழ்நாடு மக்கள் கட்சியின் இணை செயலாளராக இருந்து கொண்டு அங்கே வேறு அரசியல் கட்சியினர் யாரையும் உள்ளே விடாமல் தடுத்தது எதனால்?? அல்லது வேறு அரசியல் கட்சியினர் வந்தால் தங்களுக்கு பெயர் கிடைக்காது என்று நினைத்தார்களா என்று தெரியவில்லை. அது தமிழ்நாடு மக்கள் கட்சிக்கும் அருண்சோரிக்குமே தெரியும்.

இப்படியாக போராடும் மாணவர்களின் போராட்டத்தை தனது அரசியல் லாபத்திற்க்கு பயன்படுத்த நினைத்து அனைத்து மாணவர் போராட்டத்தை உடைத்த தமிழ்நாடு மக்கள் கட்சியின் சென்னை மாவட்டத் தலைவர் அருண்சோரியையும், அவரது கட்சியையும் - மாணவர்களே! உணர்வாளர்களே! - புரிந்துகொண்டு நமது கோரிக்கைகளில் தெளிவாக இருப்போம்; தமீழீழம் அடைவோம்.

- சு.கி.கொண்டல்சாமி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It