(அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டுரையின் தொடர்ச்சி...)

அடுக்ககத்தில் உணவகம்

ஒருவர் தன் வீட்டிலேயே மெஸ் நடத்தினார். ‘நடத்தக் கூடாது’ என்று கூறினோம். அவர் கேட்கவில்லை.  ‘என் வீடு, என் உரிமை’ என்றார். அவர் வீட்டுத் தண்ணீருக்கு மீட்டர் பொருத்தினோம். அவரது குப்பைகளை மட்டும், அவர்களேதான் கீழே கொண்டு வந்து போடவேண்டும் என்றோம். அவர் எங்களுக்குக் கொடுத்த இடையூறுகளைக் காட்டிலும், அவருக்கு நாங்கள் இடையூறுகள் கொடுத்து, அவரைக் குடியிருப்பில் இருந்தே வெளியேற்றினோம்.

ஒருவர் வீட்டில் பரத நாட்டியப் பயிற்சி வகுப்பு நடத்தினார். ஒரே சத்தம். பக்கத்து வீட்டில் இருந்தவருக்கு இருதய சிகிச்சை செய்து இருந்தார்கள். ‘தை தை என்று குதிப்பதாக’ அவர் வந்து குறை சொன்னார்.

நான் சொன்னேன். ‘சத்தம் வராத அளவுக்கு, ரப்பர் மேட் விரித்துக் கொண்டு ஆடுங்கள்’ என்றேன். அதை அவர்கள் ஏற்கவில்லை. பரத நாட்டியத்தை நிறுத்தினோம். இப்போது, வளாகத்தில் உள்ள குழந்தைகள், மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பரத நாட்டியப்பள்ளிக்குச் சென்று வருகிறார்கள்.

ஒரு குடியிருப்பில் சொந்தத் தொழில் செய்யக்கூடாது என்பது இல்லை. ஒரு குடியிருப்பில் உள்ள மாணவர்கள் டியூசனுக்குப் போக வேண்டும் என்றால், ஐந்து கிலோ மீட்டர் செல்ல வேண்டும் என்றால், அந்தக் குடியிருப்பில் இருப்பவர்களே டியூசன் எடுக்கலாம்.

அதிலும் ஒரு பிரச்சினை. ஒரு பேராசிரியர் கணிதத்தில் சிறப்பு நிபுணராக இருந்தார். அவரது வீட்டுக்கு, நூற்றுக்கணக்கான மாணவர்கள் நாள் முழுவதும் வந்து போய்க்கொண்டே இருந்தார்கள். பக்கத்து வீட்டுக்காரர் வந்து குறை சொன்னார்.

என்ன குறை? ‘தினமும் காலையில் நான் வீட்டுக் கதவைத் திறந்தால், நூற்றுக்கணக்கான செருப்புகளின் மீதுதான் விழிக்கின்றேன். என் மனைவி, வீட்டுக்கு முன்பு கோலம் போட முடியவில்லை. என் வாழ்க்கையே சூனியமாகி விடடது’ என்றார்.

இது மாணவர்களின் கல்விப் பிரச்சினை. வெளியில் இருந்து வருகின்ற மாணவர்களை வரக்கூடாது என்று தடுக்க முடியாது. எனவே, மாணவர்களை, வளாகத்தின் கீழ்ப்பகுதியிலேயே செருப்புகளை விட்டு வரும்படிச் சொன்னேன்.

ஒரு பெண்மணி வீட்டில் பியூட்டி பார்லர் நடத்துகிறார். நடத்தலாம். ஆனால், வெளியில் இருந்து ஆட்கள் வரக்கூடாது. அக்கம்பக்கத்துக் குடியிருப்பில் உள்ளவர்களும் வரக்சுடாது. அதே குடியிருப்பில் உள்ளவர்கள் மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஒரு கிறித்துவர் வந்தார். காலையில் எழுந்தவுடனே, பக்கத்து வீட்டுக்காரர், ‘வேங்கடவா எழுந்தருள்வாய்’ என்று பாட்டுப் போடுகிறார். அவர்கள் கடவுள் தூங்கினால் எழுப்பட்டும். அதற்காக என்னை ஏன் எழுப்புகிறார்கள்? என் தூக்கத்தைக் கெடுக்கிறார்கள்? என்று கேட்டார்.

பாட்டுப் போடுகின்ற அம்மையார் வைதீகக் குடும்பம். காலையில் எழுந்தவுடன் குளித்துத் தலைமுடித்து, பாட்டைப் போட்டு விடுகிறார். அவரிடம் சொல்லி, சத்தத்தைக் குறைத்து, வீட்டுக்கு உள்ளேயே கேட்டுக் கொள்ளும்படிச் செய்தோம்.

வளாகத்தில் இருந்த தோட்டத்தில், மருத்துவ குணம் மிக்க மணத்தக்காளிச் செடியைப் பயன்படுத்துவதில் போட்டி வந்தது. அதைத் தீர்த்தோம்.

குடியிருப்பு வளாத்துக்கு உள்ளே நாய் வளர்ப்பது ஒரு பெரிய பிரச்சினை. வளர்ப்பவருக்கு அது செல்லக் குழந்தை. அதை யாராவது குறை கூறினால், அவர்களுக்குக் கோபமே வந்து விடும். சில வீட்டுக்கு உள்ளே நுழையும்போது, ‘பயப்படாமல் வாருங்கள்; உங்களைக் கடிக்காது’ என்பார்கள். அதற்கு ஆளைத் தெரியுமா?

நாய்களை வளர்த்தால், வீட்டுக்கு உள்ளேயே கழிக்கப் பழக்க வேண்டும். அல்லது, காலையில் வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும். வீட்டுக்கு உள்ளே இருக்கும்போது, அது குரைக்காமல் இருக்க வேண்டும். குரைத்துக் கொண்டே இருந்தால், பக்கத்து வீட்டுக்காரர் எப்படி நிம்மதியாக இருக்க முடியும்?

ஒரு பெண்மணி, குழந்தைகள் விளையாடுகின்ற மணலில் நாயை நடக்க வைத்தார். அங்கே அது கழித்தால், அதற்குப் பிறகு, அங்கே விளையாடுகின்ற குழந்தைகளுக்குக் கேடு. மேலும், மூன்றாவது நான்காவது மாடியில் இருந்து, மின்தூக்கியில் நாயைக் கொண்டு வருவார். ஒருமுறை நாய் மின்தூக்கிக்கு உள்ளே வந்துபோனால், இரண்டு மணி நேரத்துக்கு அதன் வாடை இருக்கின்றது. இவையெல்லாம் சுகாதாரக்கேடுகள்.

யார் பிரச்சினையைக் கொண்டு வருகின்றார்களோ, அவர்களிடமே அதற்கான தீர்வு இருக்கின்றது. அலுவலகப் பொறுப்பில் இருப்பவர்கள் அதைக் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும். அவ்வளவுதான்.

வீட்டு உரிமையாளர்களுக்கும், வாடகைதாரர்களுக்கும் இடையே பெரிய பிரச்சினைகள் வருகின்றன. கடன் வாங்கி ஒருவர் வீட்டை வாங்குகிறார். பல வாடகைதாரர்கள், உரிமையாளர்களை விடப்பெரும் பணக்காரர்களாக இருப்பார்கள். ஒருவருக்கு சென்னையிலேயே மற்றொரு பகுதியில் தனி பங்களா இருக்கின்றது. மேலும், இரண்டு சொந்த வீடுகள் இருக்கின்றன. அவர் எங்கள் குடியிருப்புக்கு வந்தார். ஒரே காரணம், தன்னுடைய குழந்தைகள், ஒரே வளாகத்தில் பல குழந்தைகளோடு சேர்ந்து விளையாட வேண்டும், வளர வேண்டும் என்பதற்காக, அவர் கூட்டுக்குடும்ப அமைப்புக்கு வந்து இருக்கின்றார். மாதம் 15,000 வாடகை கொடுக்கின்றார்.

உரிமையாளர்கள் இதைப் புரிந்து கொண்டு, அவர்களை நடத்த வேண்டும். ஏதோ வேறு போக்கிடம் இல்லாமல் இங்கே வந்து குடியிருப்பதாகக் கருதக்கூடாது.

வாடகைதாரர்களுக்கான உரிமைகள் வரையறுக்கப்பட்டவை. ஒவ்வொரு குடியிருப்பு வளாகத்திலும், சங்கச் சட்டங்கள் உள்ளன. அதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். உரிமையாளர்கள் மட்டும்தான் சங்கப் பொதுக்குழுவில் கலந்து கொள்ள முடியும். நாங்கள் ஏன் கலந்து கொள்ளக்கூடாது? என்று வாடகைதாரர்கள் கேட்க முடியாது.

குடியிருப்புகளில் ஆண்டுக்கூட்டம் நடத்துவது என்பது பெரும்பாடு. ஒவ்வொரு உறுப்பினருமே படித்தவர்களாக, நன்கு விவரம் அறிந்தவர்களாக இருப்பார்கள். சங்கப் பொறுப்பாளர்கள் ஓராண்டு ஆற்றிய பணியை யாருமே பாராட்ட மாட்டார்கள். குறைகளை மட்டும்தான் சொல்லுவார்கள். பொறுப்பில் இருப்பவர்களும், பாராட்டுகளை எதிர்பார்க்கவே கூடாது. நிறையத் திட்டுகளும் கிடைக்கும். ஆனால், அதுவே பின்னர் வெகுமதியாக மாறும். எப்படி?

வேறு ஒருவர் பொறுப்புக்கு வந்தால், முன்பு இருந்தவரைப் பாராட்டுவார்கள். அவர் நன்றாகச் செய்தார்; இவர்தான் கெடுத்துக் குட்டிச் சுவராக்குகிறார் என்பார்கள்.

காதல் திருமணம்

1994 ஆம் ஆண்டு, தமிழகத்தில் தனியார் தொலைக்காட்சிகள் அறிமுகம் ஆயின. அப்போது, எல்லா வீடுகளிலும் தொலைக்காட்சிகள் கிடையாது. எனவே, தொலைக்காட்சி பார்ப்பதற்காக, குடும்பத்தோடு பக்கத்து வீட்டுக்குப் போவார்கள். விளக்கை அணைத்து விட்டுப் படம் பார்ப்பார்கள். 8 மணி செய்திக்காக விளக்கைப் போடும்போது பார்த்தால், ஒரு குடும்பத்துப் பெண்ணையும், மற்றொரு குடும்பத்துப் பையனையும் காணவில்லை. வீட்டை விட்டே ஓடிப் போய் விட்டார்கள்.

காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தோம். ஒரு குடும்பத்தினர், என் பையனை மயக்கி விட்டார்கள் என்கிறார்கள்; மற்றொரு குடும்பத்தினர் பெண்ணைக் கடத்திக்கொண்டு போய்விட்டடார்கள் என்று புகார் எழுதிக் கொடுத்தார்கள். ஒருவர் மாற்றி ஒருவர் சண்டை.

அடுத்த நாள் திருமணம் செய்து கொண்ட அந்த இளஞ்சோடிகள், காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்து விட்டார்கள். ஆய்வாளர் இரு குடும்பத்தாரையும் அழைத்தார். இருவரையும் பார்த்த உடனேயே, உறவினர்கள் அடிக்கப் பாய்ந்தார்கள். அந்த ஜோடிகள் உறுதியாக இருந்தார்கள். ஆய்வாளர் எச்சரித்து அனுப்பினார்.

பையன் கிறித்தவன். பெண் இந்து. பையன் நல்ல வேலையில், கை நிறையச் சம்பளத்தோடு இருப்பதால், ஏற்கனவே வீடு எல்லாம் பார்த்து வைத்து இருந்தான். எனவே பிரச்சினை இல்லை. அவர்ளை அழைத்து அங்கே குடியேற உதவினோம். உண்மைக் காதலைச் சேர்த்து வைத்தோம். இன்றைக்கு மூன்று குழந்தைகளோடு நன்றாக இருக்கின்றார்கள். இதைப் பற்றிப் பேசும்போது, ‘தமிழ் மாலையில் தள்ளிக்கொண்டு போய்விட்டான்’ என்று பேசினார்கள்.

மற்றொரு சம்பவம். ஒரு வீட்டு ஓட்டுநர், மற்றொரு வீட்டு வேலைக்காரியைக் காணவில்லை. இரண்டு பேருமே வெளியில் இருந்து வந்து எங்கள் குடியிருப்பில் வேலை பார்ப்பவர்கள். பக்கத்து ஊர்க்காரர்கள் திரண்டு வந்து எங்களிடம் சண்டைக்கு வந்தார்கள். அவர்களை மிரட்டி அனுப்பினேன். பிறகு அவர்களே, ஒரு வாரத்தில் தேடிக் கண்டுபிடித்து விட்டார்கள். பத்து நாள்கள் கழித்து, அந்த ஓட்டுநர் வேலைக்கு வந்தார். நாங்கள் உள்ளே விடவில்லை. அதேபோல, அந்தப் பெண்ணும் வேலைக்கு வந்தார். அவரையும் சேர்க்கவில்லை.

ஆனால், இரண்டு குடும்பத்தாருமே, ‘அவர்கள் திருமணம் செய்துகொண்டால் என்ன? எங்களுக்கு நன்றாகத்தான் வேலை பார்த்தார்கள். அவர்களை ஏன் தடுக்கிறீர்கள்?’ என்று பிரச்சினை செய்தார்கள். அவர்களுக்கு விளக்கம் அளித்தோம்.

இதன்பிறகு, வேலை பார்க்க வருகின்றவர்களுக்கு அடையாள அட்டையை அறிமுகப்படுத்தினோம். குடிமைப் பொருள் அட்டை நகல், படம் வாங்கி வைத்துக் கொள்கின்றோம். அவர்களை யார் வேலைக்கு வைத்துக் கொள்கின்றார்களோ, அவர்களுடைய ஒப்புதலையும் வாங்கிக் கொள்கின்றோம். கைரேகையையும் பதிவு செய்து கொள்கின்றோம். இதனால், அவர்களுக்கு ஒரு அச்சம் இருக்கும்.

சங்க அலுலகப் பணியாளர்களுக்கும் இந்த விதிகள் பொருந்தும்.

ஒருமுறை வாடகைக் கார் அமர்த்திச் சென்றோம். என் மகன் கார் ஓட்டுநரை அங்கிள் என்று அழைத்தான். எங்களோடு வந்த நண்பர் என்னை அழைத்து எச்சரித்தார்.

இதனால் என்ன பிரச்சினை வரப்போகிறது? என்று கேட்டேன்.

ஓட்டுநரை ஓட்டுநர் என்றுதான் அழைக்க வேண்டும். அதுதான் தொழில் மரியாதை.

பம்ப் ஆபரேட்டர் ஒருவரை எங்கள் வளாகத்துக் குழந்தைகள் எல்லோரும் அங்கிள் என்றுதான் அழைத்தார்கள். வயதுக்கு வராத ஒரு பெண் குழந்தையை பேசிப்பேசி, மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று சில்மிசம் செய்து விட்டான். இதைத் தெரிந்து அந்தப் பையனை வேலையை விட்டு விலக்கினோம்.

நீ ஏன் மேலே போனாய்? என்று அந்தக் குழந்தையிடம் கேட்டோம்.

வேறு ஒரு பெரிய கட்டடத்தைக் காட்டுவதாகச் சொல்லி அழைத்துப் போனார் என்றாள்.

உன்னை தொட்டாரா? பேட் டச் செய்தாரா? என்று கேட்டால், ‘தெரியாமல் செய்து இருக்கலாம் இல்லையா அங்கிள் என்றது அந்தக் குழந்தை. அதற்கு விவரம் புரியவில்லை.

எனவே, குழந்தைகளை அழைத்து, இருட்டான பகுதிக்குப் போகாதீர்கள். பூச்சிகள் பாம்பு இருக்கும் என்று சொல்லி மிரட்டி வைத்தோம்.

வேலைக்காரர்களோடு மிக நெருக்கமாகப் பழக, குழந்தைகளை அனுமதிக்கக் கூடாது. எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அடுக்குமாடி வளாகங்களில் கள்ளக்காதல் நிறைய நடக்கின்றது. ஒருமுறை, மாடியில் வந்து கும்மாளம் போடுகிறார்கள் என்று ஒரு போன் வந்தது. போய்ப் பார்த்தால், ஒரு பெண், ஆறு பையன்கள். அந்தப் பெண்ணைச் சுற்றிக்கொண்டு, கலர்த் தண்ணீரைப் பீய்ச்சிக் கொண்டு இருந்தார்கள. ஹோலி கொண்டாட்டமாம். அந்தப் பெண் உடல் முழுவதும் நனைந்து போய் நிற்கின்றாள்.

‘நீங்கள் யாரும் என்னைத் தொடக்கூடாது. அப்படியானால், நான் உங்கள் முன்னாலேயே உடையை மாற்றுவேன்’ என்று சொல்லி, சட்டையை அவிழ்க்கிறாள். அந்த ஆறு பையன்களும் சுற்றி நின்று கொண்டு, செல்போனை வைத்துக் கொண்டு இருக்கின்றார்கள். அந்தப் பையன்கள், அந்தப் பெண்ணை நீதான் உலக அழகி என்று புகழ்ந்துகொண்டு இருந்தார்கள். இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டு இருந்த மற்றொரு பெண்மணிதான் தகவல் கொடுத்தார். முதலில் அந்தப் பெண்மணி போய் அந்தப் பெண்ணை அடித்தார்.

அதற்கு, ‘அவர்கள் யாரும் என்னைத் தொடவில்லையே? நீங்கள் ஏன் பிரச்சினை செய்கின்றீர்கள்?’என்று அந்தப் பெண்ணே கேட்கிறாள்.

குடும்பத்தினரும் அவளை ஆதரிக்கின்றார்கள். ‘இது எங்கள் வழக்கம்’ என்கிறார்கள். பல இன மக்கள் வாழுகின்ற வளாகங்களில் இப்படிப் பிரச்சினைகள் வருகின்றன.

வட மாநிலத்தவர்கள் ஹோலி கொண்டாடுகிறபோது, அவர்களோடு சேர்ந்து கொண்டாடலாம். ஆனால், அந்தக் கொண்டாட்டங்கள் வரம்பு மீறக்கூடாது. கலர் தண்ணிரைப் பீய்ச்சும்போது, சுவர்களில் அந்த வண்ணம்பட்டு விடக் கூடாது என்பதை முதலிலேயே எச்சரிக்க வேண்டும். இல்லை என்றால், அது ஒரு பிரச்சினையாக ஆகி விடும். இன்றைக்கு நமது தமிழ்ப் பிள்ளைகளுமே, அவர்களிடம் அங்கிள் அடுத்த ஆண்டு எப்போது ஹோலி கொண்டாடுவீர்கள் என்று கேட்கத் தொடங்கி விடுகிறார்கள்.

நமது காலனி என்பது நமது வீடு. எனவே, நம் வீட்டுப் பெண்களை நீங்கள் கிண்டல் செய்யக்கூடாது. அவர்களுக்கு வெளியில் வேறு எதாவது பிரச்சினை என்றால், நீங்கள் போய் உதவ வேண்டும் என்று சின்ன வயதில் இருந்தே இளைஞர்களிடம் சொல்லி வளர்க்க வேண்டும்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று, இளைஞர்களை எல்லாம் அழைத்து, காலனியைச் சுத்தம் செய்தேன். மரம் நடச் செய்தேன். ஒவ்வொருவருக்கும் ஒரு மரத்தை ஒதுக்கிக் கொடுத்து, நாள்தோறும் பராமரிக்கச் செய்தேன். அதில் போட்டியே வந்தது. ஒவ்வொருவரும் தங்கள் மரத்தை நன்றாகக் கவனித்துக் கொண்டார்கள்.

காலனியில் வசிப்பவர்களைப் பற்றிய விவரங்கள் அடங்கிய ஒரு முகவரி புத்தகதை அச்சிட்டோம். உரிமையாளர்கள் பெயர், படம், தொலைபேசி எண்களோடு. இந்த விவரங்களை எல்லாம் வீட்டுக்கு வீடுபோய், மாணவர்கள்தான் சேகரித்துககொண்டு வந்தார்கள். தன்னலம் அற்ற சேவை ஆற்ற குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

(தொடரும்..)

- அருணகிரி ( இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It