தமிழக அரசின் இணையதளங்கள் யாருக்காக என்ற கேள்வியை எழுப்பிப் பார்த்தால்,   நிச்சயமாகத் தமிழக மக்களுக்கானவையல்ல என்று சொல்லிவிடலாம். தமிழ் நாடு அரசின் இணையதளங்களைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருந்த வேளையில், 'முள்ளு முனையிலே மூன்று குளம் வெட்டினேன் ரெண்டு குளம் பாழு ஒண்ணுல தன்ணியே இல்லை' என்ற நாடோடிப் பாடல்தான் சட்டென்று நினைவுக்கு வருகின்றது.  ஒன்று முகவரியே தப்பாகத் தரப்பட்டிருக்கும். அல்லது அரசு இணைய தளம் விற்பனைக்குத் தயாராக இருக்கும் அல்லது அவை முழுவதும் ஆங்கிலத்திலான உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கும்;  தமிழில் எதையும் காணமுடியாது. இந்தப் பொது விதியை மீறி மொத்தம் 250க்கும் அதிகமான இணையதளங்களில் ஒரு பத்து தளங்களாவது தமிழில் தகவல்களை அளித்துக் கொண்டிருப்பதைக் காணமுடிகின்றது; அதாவது தமிழக அரசுக்குச் சொந்தமான 250க்கும் அதிகமான இணைய தளங்களில் குறைந்தது  240 இணையதளங்கள் முற்றிலும் ஆங்கிலத்தில் மட்டுமே தகவல்களைக் கொண்டுள்ளன. .

முதலில் இந்த ஆய்வுக்கு மிகப் பொருத்தமான, நான்கு  வெவ்வேறு தகவல்களைக்   காண்போம்:

1. 2012 மார்ச் மாதத்தில் தமிழ்க அரசினால் வெளியிடப்பட்ட "தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு மூலோபாய திட்டம் (Strategic Plan for Infrastructure Development in Tamil Nadu)  2023"ன் படி,  தமிழ் நாடு அரசு இனங்கண்டுள்ள பத்து கருத்துருக்களில் இரண்டாவது கருத்துரு  இவ்வாறு சொல்கிண்றது :  "தமிழ் நாடு  அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி முறைமையைப் பெருமளவில் வெளிப்படுத்தும்  அதே வேளையில் ஏழ்மையற்ற மாநிலமாகவும்  இருக்கும்.  வேலை வாய்ப்புக் கோரும் அனைவருக்கும் ஆதாரமான பலனளிக்கும் வேலைவாய்ப்பை அளிக்க வல்லதாக இருக்கும்.  மாநிலத்தின் பின் தங்கிய, ஆதரவற்ற எளிதில் பாதிப்புக்குள்ளாகத் தக்கவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கத் தக்கதாகவும் அமையும்".  அதாவது, இந்த மூலோபாயத் திட்டத்தின் படி, பின் தங்கிய, ஆதரவற்ற எளிதில் பாதிப்புக்குள்ளாகத் தக்கவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதை அரசு தனது முக்கிய கடமையாகக் கொண்டுள்ளது தெரியவருகின்றது.

2. தமிழே அரச கரும மொழி :  அரசு  மக்களுக்கானத் தேவைகளை, கடமைகளை நிறைவேற்றப் பயன்படுத்தும் மொழியே  ஆட்சி மொழி  ஆகும். 1956 அக்டோபர் 7ஆம் நாளில்  குளித்தலையில் தமிழ் ஆட்சிமொழி மாநாடு நடைபெற்றது. தமிழ் நாட்டில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் (த.நா.சட்டம்‍ 39/1956)   1956 டிசம்பர் 27 அன்று  நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தின்படி அவ்வப்போது அறிவிப்புகளும் அறிக்கைகளும் தமிழில் வெளியிடப்பட்டு மாநில அரசின் கீழ் இயங்கும் பல்வேறு ஆட்சித்துறை அலுவலகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1966 ஆம் ஆண்டுஆட்சி மொழி தமிழ் என்பதைச் செயற்படுத்தும் வகையில் ஆட்சி மொழிக்குழுவின் தொடக்க விழா நடைபெற்றது.  1967 ஆம் ஆண்டில்  ‘சென்னை மாநிலம்’ என்பதை அறிஞர் அண்ணா 'தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றம் செய்தது முதல் பல்வேறு தமிழ் வளர்ச்சிப் பணிகள் தமிழ் ஆட்சி மொழிப் பணிகளாக மேற்கொள்ளப்பட்டன. ஏறத்தாழ கடந்த 50 ஆண்டுகளாக, தமிழே தமிழக அரசின்  அரச கரும மொழியாக (ஆட்சி மொழியாக) உள்ளது.

3. மாற்றுத் திறனாளிகளின்   உரிமைகள் குறித்த ஐக்கிய நாடுகள் மன்றத்தின்  உடன்படிக்கை (Convention on the Rights of Persons with Disabilities)  ஆகஸ்டு 2006 ல் நிறைவேற்றப் பட்டது. சமூகத்தில் எல்லோருக்கும் கிடைக்கும் அடிப்படை உரிமைகளும் சுதந்திரமும் மாற்றுத் திறனாளிகளுக்கும் கிடைத்திடச்  செய்ய வேண்டும் என்பதே இந்த சர்வதேச உடன்படிக்கையின் முக்கிய நோக்கம். இதன் 4 ஆவது உறுப்பின் (1)  (அ) பிரிவு,  இந்த உடன்படிக்கையில் ஒப்பமிட்ட நாடுகள் யாவும், மாற்றுத் திறனாளிகள்    புதிய தகவல் தொடர்பு தொழில் நுட்பத்தை, குறிப்பாக இணையத்தை,  அணுகுவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து  தரவேண்டும் என்று வலியுறுத்துகின்றது. அதே போல, இந்த சர்வதேச உடன்படிக்கையின் 9ஆவது உறுப்பில்,  இந்த உடன்படிக்கையை ஏற்றுக் கொண்ட நாடுகள் "மாற்றுத் திறனாளிகள், போக்குவரத்து வசதிகள், பொதுப் பயனுக்குரிய வசதிகள், தகவல் தொழில் நுட்ப வசதிகள் போன்றவ்ற்றை  அணுகுவதற்குரிய தடைகளையும், இடர்ப்பாடுகளையும்  கண்டறிந்து அகற்ற வேண்டும்" என்று வலியுறுத்துகின்றது.  இந்த உடன்படிக்கையை ஏற்றுக் கொன்ட நாடு என்ற வகையில் இந்தியாவும், இந்திய ஒன்றியத்திற்குட்பட்ட  மாநில அரசுகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு இணையத்தை அணுகுவதற்குரிய வசதிகளைச் செய்து தரக் கடமைப்பட்டுள்ளன..

4. இணையதளத்தை அணுகுதல் உள்ளிட்ட  தரக் கட்டுப் பாடுகளை உருவாக்கி அளித்து வரும்  டபிள்யூ 3 சி  எனப்படும் வையக‌  விரி வலைக் கூட்டமைப்பு, வலை உள்ளடக்க அணுகல் வழிகாட்டியை  WCAG 2.0 - The Web Content Accessibility Guidelines என்ற பெயரில்   2008 டிசம்பரில்  அறிமுகப்படுத்தியுள்ளது.  இந்த வழிகாட்டுதல்கள் தற்காலிக அல்லது நீண்ட காலக் குறைபாடுகள் உள்ளவர்களும், வயது மூப்பு உள்ளிட்டவற்றால் ஏற்படும் சவால்களைக் கொண்டோரும்  இணையதளங்களை அணுகத் தேவையான வசதிகளை ஏற்படுத்துவதற்குரிய தொழில் நுட்ப யோசனைகளை முன்வைக்கின்றன. இவற்றை நான்கு முக்கிய பிரிவுகளாகப் பிரித்து வழங்கியுள்ளது டபிள்யூ 3 சி : 1. உணரத் தக்கவை 2. இயக்கத்தக்கவை  3, புரிந்து கொள்ளத் தக்கவை  4, வலுவானவை.

இந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில், இந்திய நடுவணரசும், 2009 பிப்ரவரியில் அரசுத் துறை இணையதளங்களை உருவாக்குவதற்குரிய பரிந்துரைகளை வெளியிட்டது.  . இந்தப் பரிந்துரைகள் மைய தலைமைச் செயலக அலுவலக நடைமுறைக் கையேட்டிலும்  (Central Secretariate Manual of Office Practices) பிரசுரிக்கப் பட்டு, மாநில அரசுகளுக்கும் அனுப்பி வைக்கப் பட்டது.

இந்தப் பின்னணியுடன், தமிழ் நாடு அரசின் இணையதளங்களை ஆய்வு செய்தேன் : தமிழ் நாடு அரசின் இணையதள முகவரிகளின் தொகுப்பைத் தமிழ் நாடு அரசு தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதன்படி, 250க்கும் மேற்பட்ட இணையதளங்கள் தமிழக  அரசினாலும், அரசு நிதி நல்கை பெறும் நிறுவனங்களாலும் இயக்கப்பட்டு வருகின்றன.

இவற்றில், விற்பனைக்குத் தயாராக உள்ள அரசின் இணைய தளங்கள் அல்லது இயங்காத இணையதளங்களாகக் கீழ்க்கண்ட பட்டியல்  தொகுப்பைச் சுட்டலாம் : 

1. கலை இலக்கியத் துறையின் இணையதளம்

2. தமிழக அரசின் விலங்கு நோய்கள் குறித்த தகவல் தொகுப்பு

3. தாட்கோவின் இணையதளம் அரசின் இணையதளத்தில் உள்ளபடி இந்த முகவரியில் சென்றால் இணையதளம் எதுவும் இராது. ஆனால், http://www.tahdco.tn.gov.in/ என்ற முகவரியில் தாட்கோவின் இணையதளம் இயங்கிக் கொண்டிருக்கின்றது.

4. திருச்சி சுற்றுலாவுக்கென உருவாக்கப் பட்டுள்ள இணைய தள முகவரி இந்த முகவரியே தவறு.

5. சென்னை கார்ப்பொரேஷனின் எய்ட்ஸ் தடுப்பு மற்றும் ஒழுங்கு படுத்தும் சொசைட்டி   முகவரிக்குச் சென்றால் எதுவுமில்லை

6. கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கான இணைய தள முகவரிக்குச் சென்றால் எதுவுமில்லை

7. தமிழ் நாடு ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகளுக்கான இணையதள முகவரிக்குச் சென்றால் எதுவுமில்லை

8.வயது வந்தோர் கல்விக்கான மாநில அளவிலான வள மையத்தின் இணையதளம். அரசு அறிவித்துள்ள முகவரியில் சென்றால், ஜப்பானிய மொழியில் உடல் இளைக்க யோசனை சொல்லும் தகவல்களைக் காணலாம்.

9. தமிழ் நாடு மாநில அளவிலான குழந்தைத் தொழிலாளர் மறுவாழ்வு மற்றும் நலத்துக்கான சொசைட்டியின் இணையதளப் பக்கம் இதுவரை உருவாக்கப் படவேயில்லை. ஆனால், அறிவிப்பு மட்டும் அரசின் இணைய தளத் தொகுப்பில் காணலாம்.  

10. தமிழ் நாடு வர்த்தகர்களுக்கான நலவாரியத்தின் இணையதள   முகவரிக்குச் சென்றால் எதுவுமில்லை

11. தமிழ் நாடு மழை நீர் சேகரிப்பை ஊக்குவிக்கும் நிறுவனம் (குடிநீர் வடிகால் வாரியத்தின் அங்கமென அரசு  இணையதளத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.    முகவரிக்குச் சென்றால் எதுவுமில்லை

12. திருப்பூர் மாநகராட்சிக்கும் வேலூர் மாநகராட்சிக்கும் தனித்தனி இணைய பக்கங்கள் உருவாக்கப் பட்டு அவை இயங்கிக் கொண்டிருந்தாலும், தமிழக அரசின் அதிகாரப் பூர்வ இணைய தளத்தின் படி இந்த 2 மாநகராட்சிகளுக்கும் இணையதளங்கள் இருப்பதாக அங்கீகரிக்கப்படவேயில்லை.

13.அழகப்ப செட்டியார் பொறியியல் தொழில் நுட்பக் கல்லூரியின் இணையதள முகவரி விற்பனைக்குத் தயாராக‌ இருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது .    முகவரிக்குச் சென்றால் எதுவுமில்லை

14. குழந்தைகள் நல ஆய்வு மையம் மற்றும்  மருத்துவமனைக்கான இணையதள  முகவரிக்குச் சென்றால் எதுவுமில்லை

15. தமிழ் நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்திற்கு அரசு தந்துள்ள இணைய தள முகவரியில் சென்றால், அந்த முகவரி விற்பனைக்குத் தயாராக இருப்பதாகவே தகவல் கிடைக்கும். ஆனால், தமிழ் நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம், http://www.tndalu.ac.in/ என்ற முகவரியில் இயங்கிக் கொண்டிருப்பதைக் காணலாம்.

16. போக்குவரத்துத் துறைக்கென தரப்பட்டுள்ள இணைய தள முகவரி முகவரிக்குச் சென்றால் எதுவுமில்லை

17. அடையாறு பூங்காவுக்கென உருவாக்கப் பட்டுள்ள இணையதள  முகவரிக்குச் சென்றால் எதுவுமில்லை

ஓரளவுக்கேனும் தமிழில் தகவல்களைத் தரும் தமிழக அரசின் இணையதளங்கள் :

1. உணவுப் பொருள் வழஙக்ல் மற்ரும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் இணைய தளம்.
2. தமிழ்நடு கூட்டுறவு ஒன்றியத்தின் இணைய தளம்
3. கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகத்தின் இணைய தளம்
4. கருவூலக் கணக்குத் துறையின் இணைய தளம்
5. பட்டு வளர்ச்சித் துறையின் இணைய தளம் (கொள்கைக் குறிப்புகளும், சட்டப்பேரவை நிகழ்வுகளும் மட்டும் தமிழில் தரப் பட்டுள்ளன).
6. உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையத்தின் இணைய தளம்
7.பொதுப் பணித் துறையின் நீர் வள ஆதார அமைப்பின்  இணைய தளம்
8. சென்னைப் பெருநகர் வலர்ச்சிக் குழுமத்தின் இணைய தளம்
9. தமிழ்நாடு மின் வாரியத்தின் இணைய தளம்

சர்வதேச அளவில் பல நாடுகள் தத்தமது அரச இணையதளங்களை டபிள்யூ 3 சி யின் ஆலோசனைகளின் படி மாற்றியமைத்துக் கொண்டுள்ளன. தொடர்ந்து மாற்றும் முயற்சியிலும் ஈடுபாட்டுடன் இயங்கிவருகின்றன. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய நாடுகள் : ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஹாங்காங், ஜப்பான், நியூசிலாந்து, ஐக்கிய ராச்சியம், அமெரிக்கா ஆகியவை ஆகும். ஆஸ்திரேலிய அரசு "தேசிய நிலைமாற்ற மூலோபாயம்" ( National Transition Strategy ) என்று தனது இணைய தளங்களை மாற்றுவதற்கான திட்டத்தை வகுத்து அதன்படி இயங்கிக் கொண்டிருக்கின்றது.

2014 டிசம்பருக்குள் தனது இணையதளங்கள் யாவற்றையும் டபிள்யூ 3சியின் பரிந்துரைகளின் படி மாற்றியமைத்து விடுவது என்று தீர்மானித்தும்  உள்ளது.

இந்திய அரசின் பரிந்துரைகளின் படி, நடுவணரசின் மனித வள மேம்பாட்டுத் துறையின் இணைய தளம் , உள்ளிட்ட விரல் விட்டு எண்ணிவிடும் அளவில் சில அரசு இணையதளங்கள், டபிள்யூ 3சியின் பரிந்துரைகளின் சில பரிந்துரைகளை அமல்படுத்தியுள்ளன. இந்திய மாநிலங்களிலேயே, ஜார்க்கண்ட் மட்டும் தான் தனது அரசு இணையதளங்களில் டபிள்யூ 3சியின் பரிந்துரைகளின் படி சில மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.

தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன?  :

1. தமிழக அரசு தனது இணைய தளங்களில் 95%  ஆங்கில மொழியில் மட்டுமே தகவல் வழங்கப் படுவதைப் படிப்படியாக மாற்றி இயல்பாகவே, அரசு இணையதளங்கள் தமிழில் இயங்க வழிவகை செய்ய வேண்டும்.  கூடுதலாக, ஆங்கிலத்திலும் தகவல் தருவதில் தவறில்லை.  ஆட்சி மொழிச் சட்டத்தின் படியும், தகவல் பெறும் உரிமையின் படியும், தமிழக மக்கள் அரசு இணையதளங்களில் தமிழில் தகவல் அறியும் உரிமை பெற்றவர்கள் என்பதை நினைவில் கொண்டு அரசு உடனடியாக இந்த நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும்.

2. உள்ளடக்கிய வளர்ச்சியில் ஆர்வம் கொண்டுள்ள அரசு, ஐ.நா. உடன்படிக்கையை அமல்படுத்தும் விதமாகவும், இந்திய அரசின் வழிகாட்டுதல்களை அமல்படுத்தும் வகையிலும், தனது அரசு இணையதளங்களில் அனைத்து மாற்றங்களையும் செய்து, மாற்றுத் திறனாளிகளும் அரசு இணைய தளங்களைப் பயன்படுத்த வழிவகை செய்ய வேண்டும்.

3. இணைய தளங்கள் என்பவை  முதலில் தமிழ் நாட்டில் உள்ளவர்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதைத் தமிழக அரசு உணர்ந்து கொள்ள வேண்டும். மக்களோடு அரசு இயந்திரம் அன்றாடம் உரையாட வழிவகை செய்யும் வகையில் அரசு இணைய தளங்கள் இயங்கும் போது மக்களின் பங்கேற்பு அதிகரிக்கும்.

- அருள்செல்வன் செந்திவேல் [இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.]

Pin It