சில ஆண்டுகளுக்கு முன்னரே சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் நடுவண் அரசின் முடிவு நாடு தழுவிய கடுமையான எதிர்ப்பால் கைவிடப்பட்டது. ஆனால் இன்று நடுவண் அரசு அந்நிய முதலீட்டை சில்லறை வணிகத்தில் அனுமதிப்பதில் உறுதியாக இருப்பதாக அறிவித்துள்ளது.

51 விழுக்காடு அந்நிய முதலீடு என்பதில் பன்னாட்டுக் கம்பெனிகளின் கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கமே இருக்கும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. எல்லா முடிவுகளையும் அவர்களே எடுப்பார்கள். இரண்டாவது, 51 போக மீதியுள்ள 49 விழுக்காடு பங்குகளை கார்ப்பரேட் கம்பெனிகள் நியமிக்கும் அவர்களின் ஏஜண்ட்டுகளே பெயரளவில் வைத்துக் கொள்ளலாம். இதில் சட்டச்சிக்கல் ஏதுமில்லை என்கின்றனர் பங்குச்சந்தை நிபுணர்கள். முழுமையாக 100 விழுக்காடு அனுமதித்தால் கடுமையான எதிர்ப்பை எதிர்கொள்ள முடியாது என்பதால் இந்த ஏற்பாடு போலும்.

walmart_protests_650

பெரும் காட்டாற்று வெள்ளம் அடித்துச் செல்லும்போது ஒரு மரக்கட்டையைப் பிடித்துக் கொண்டு தப்பித்துக் கொள்வது போன்றதுதான் சில்லறை வர்த்தகம். பணம் படைத்தவர்களுக்கும் பெரும் முதலீட்டாளர்களுக்கும் மட்டுமே உத்திரவாதமான வாழ்க்கை என்றாகி விட்டது. வேலையுமில்லை வாழ வழியுமில்லை என்றான ஏழைமக்கள் சாதாரண நடுத்தர வர்க்கத்தினர் அன்றாடம் பிழைப்பு நடத்துவதற்கான துருப்புச்சீட்டாக கிடைத்ததுதான் சில்லறை வர்த்தகம்.வேலை இல்லாதவர்கள் ஒரு பெட்டிக்கடை வைத்தாவது பிழைத்துக் கொள்ள வழி செய்ததுதான் சிறு வணிகம். இப்போது அதிலும் மண்ணைப் போட்டு விட்டனர்.

சில்லறை வணிகம் என்றாலே அலட்சியம் காட்டும் நடுத்தர வர்க்கத்தினருக்கு அதைப்பற்றி எதுவுமே தெரியாமல் இருக்கும் நிலையில் அந்நிய முதலீட்டை வரவேற்பது கொடுமையிலும் கொடுமை. சில்லறை வர்த்தகம்தான் இந்தியாவின் மொத்த வணிகத்தின் முதுகெலும்பாக இருக்கிறது. மற்ற எல்லா நாடுகளை விட இந்தியாவில்தான் அற்புதமான ஜனநாயகத்துடன் இயங்கி வருகிறது. மிகப் பெரிய முதலீடுகள் இன்றி அரசின் உதவிகள் இன்றி வெளிநாட்டு சார்புத்தன்மை இன்றி சுயமாக ஒருங்கிணைக்கப்பட்டு சிக்கல்களின்றி எளிமையான முறையில் அமைப்பாக்கப்பட்டு இயங்குகிறது. ஒவ்வொரும் அவருக்கேயுரிய வணிகரீதியான வலைப்பின்னல் தொடர்புகளை கொண்டுள்ளனர்.

இந்தியாவில் இன்றைய சிறு வணிகத்தின் சந்தை மதிப்பு 270 பில்லியன் டாலர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 5.7 விழுக்காடு வரை வளர்ந்து வருவதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால்தான் மிகப்பெரிய கார்ப்பரேட்டுகள் சில்லறை வர்த்தகத்தை குறி வைத்து உள்ளே நுழைந்துள்ளனர். இவ்வளவு வருமானம் கொழிக்கும் ஒரு துறையானது ஏன் திறந்துவிடப்படுகின்றது? இதற்கு காரணம் உலகமயமாக்கல் கொள்கைகள்தான்.

நாட்டையே அடகு வைத்துவிட்டனர்

கடந்த 25 ஆண்டுகளாக நாட்டில் அமல்படுத்தப்பட்டு வரும் உலகமயமாக்கல் கொள்கைகளின்படி கிட்டத்தட்ட நாட்டிலுள்ள அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும், சேவைத்துறைகளும் தண்ணீர் உள்பட அனைத்துப் பொது வளங்களையும், தனியார்மயமாக்கிவிட்டனர். உணவு உட்பட எல்லாப் பொருட்களையும் இறக்குமதி செய்ய தாராளமாக நாட்டின் கதவுகளைத் திறந்துவிட்டுள்ளனர். இறக்குமதி மீதான கட்டுப்பாட்டை (Quantitative Restrictions - QRS) நீக்கிவிட்டனர்.

விவசாயம் மீன்துறை - சூறையாடுவதற்கு அனுமதி

உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தங்களில் ஒன்றான விவசாய ஒப்பந்தம் (Agreement on Agriculture - AOA), விவசாயத்தை சூறையாடப்படப் போகிறது. மீன்துறையையும் அனைத்துத் தொழில்களையும் நாசமாக்கிட நாமா ஒப்பந்தம் (Non Agricultural Market Access - NAMA), தண்ணீர், மின்சாரம், வங்கி காப்பீடு போன்ற 300க்கும் மேற்பட்ட சேவைகளை வெளிநாட்டுக் கம்பெனிகளிடம் தாரை வார்க்க காட்ஸ் ஒப்பந்தம் (General Agreement on Trade in Services - GATS) போடப்பட்டுள்ளது. ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து இப்போது மனிதனையே கடிக்கத் துவங்கிவிட்டன இந்திய ஆட்சியாளர்கள் கடைசி அடைக்கலமாகவும், புகலிடமாகவும் உள்ள சிறு வியாபாரத்தையும் அழித்துவிட முடிவு செய்துவிட்டனர். சிறு வியாபாரத்தில் அந்நிய மூலதனம் என்னனென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை இங்கு சற்று விரிவாகப் பார்ப்போம்.

மறைமுகமான வேலையின்மை

இந்தியாவின் மொத்த உற்பத்தியில் தொழில் உற்பத்திக்கு அடுத்தபடியாக உள்ளது சிறு வியாபாரம்தான். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தொழில் உற்பத்தியானது 15.6% எனில், சிறுவியாபாரம் 13.8% ஆகும். நாட்டில் மொத்தம் 1 கோடியே 50 இலட்சம் கடைகள் உள்ளதாக மதிப்பிடப்பட்டு உள்ளது. இதில் பாரம் பரியமாக, தலைமுறை தலை முறையாக ஈடுபட்டு வருபவர்களும் உண்டு. வேலை வாய்ப்பு இல்லாத வர்களும் புதிது புதிதாக நுழைந்து கொண்டி ருப்பதைப் பார்க்கலாம். இத்தனைக்கும் இத்தொழிலை ஒரு முழுமையான நிரந்தரமான வேலைவாய்ப்பாக கருதுவதில்லை. வேலை இல்லாத் திண்டாட்டம் பெருகி வருகிற நிலைமையில் இது ஒரு மறைமுகமான வேலையின்மையாகவே (Disguised Employment) செயல்படுகிறது.

ஒரு ஆண்டுக்கு 12,82,500 கோடி வியாபாரம்

சில்லரை வியாபாரத்தில் மக்கள் ஈடுபடுவது அதைத் தெரிவு செய்து விருப்பத்தின் அடிப்படையில் அல்ல. வேறு வழியில்லாமல் நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் அமைவதாக உள்ளது என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இப்படிப்பட்ட நிலையிலும் சிறு துளி பெரு வெள்ளம் போல இந்திய சிறு வியாபாரச் சந்தையில் ஓராண்டில் (2003 ஆண்டு கணக்குப்படி) ரூ.12,82,500 கோடி அளவிற்கு வர்த்தகம் நடைபெறுகிறது. இதுதான் பன்னாட்டு கம்பெனிகள் நமது சிறு வியாபாரச் சந்தையின் மீது கண் வைப்பதற்கு காரணம்.

இதுவரை நேரடி அனுமதி இல்லை

கடந்த சில ஆண்டுகளாகவே சிறு வியாபாரத்தில் பன்னாட்டுக் கம்பெனிகளும் தேசங்கடந்த தொழில் கழகங்களும், நம் நாட்டில் நுழைய முயற்சித்து வருகின்றன. இதுவரை இந்திய நாட்டின் சில்லரை வர்த்தகத்தில் அந்நியக் கம்பெனிகள் நேரடியாக அனுமதிக்கப்படுவதில்லை. சிறப்பு முகவராகவோ (Franchise) இணைந்து தொழில் செய்யும் கூட்டாளியாகவோதான் (Joint Venture) சில்லறை வியாபாரத்தில் ஈடுபட முடியும். இதுவரை மார்க் அன் ஸ்பென்சர் (Mark & Spencer) மெட்ரோ கேஷ் அன் கேர் (Metro Cash & Carry) மற்றும் டைரி ஃபார்ம் இன்டர் நேஷனல் (Dairy Farm International) போன்ற அந்நிய நிறுவனங்கள் நுழைந்துள்ளன.

ஒவ்வொன்றும் மூன்று தாஜ்மகால் சைசு

நம் நாட்டிலுள்ள சில்லறை வியாபாரக் கடைகள் எல்லாம் அதிகபட்சமாக போனால் 500, அல்லது 600 சதுர அடிகள்தான். நகரிலுள்ள பெரிய கடைகள் 10 ஆயிரம் சதுர அடிகள் தான் இருக்கும். ஆனால் வெளிநாட்டு கம்பெனிகளின் கடைகள் அளவு பல நூறு மடங்குகள் பெரியவை. பெங்களூர் நகரிலுள்ள ஜெர்மனியின் மெட்ரோ நிறுவனத்தின் இரண்டு கடைகள் பெங்களூரிலுள்ள கனக்புராவிலும், யஸ்வந்த்பூரிலும் உள்ளன. ஒவ்வொன்றும் 1,10,000 சதுர அடிகள் ஆகும். இதையெல்லாம் விட சில்லரை வியாபாரத் துறையில் பிரம்மாண்டமான ஆதிக்க சக்தியாக உள்ள வால்மார்ட் கம்பெனி இந்தியாவிடம் நுழைவதற்கான அனைத்து தயாரிப்புகளையும் முடித்துவிட்டது. இதற்காக அடிக்கடி வந்த வால்மார்ட்டின் பிரதிநிதிகளும் இந்தியாவிற்கு வந்த வால்மார்ட் அதிபரும் மன்மோகன்சிங்கை சந்தித்து பேச்சு வார்த்தைகள் நடத்தி சென்றுள்ளனர். காங்கிரஸ் ஆட்சியாளர்கள் வழக்கம் போல் அனுமதி அளித்துள்ளனர்.

walmart_protest_400

காங். அரசைப் பொறுத்தவரை, பன்னாட்டுக் கம்பெனிகள் கேட்கும் முன்னரே அவர்களுக்கு அனுமதி அளிக்கத் தயாராக உள்ளனர். வால்மார்ட்டுடன் ஒப்பிடும்போது ஏற்கனவே உள்ள வெளிநாட்டு கம்பெனிகள் மிகச் சிறியவையாகும்.

ஆனால் ஏற்கனவே வந்துள்ள இக்கம்பெனிகளில் ஒன்றான மெட்ரோவினால் பெங்களூரில் பல நூற்று சில்லரை வியாபாரிகளின் கடைகள் மூடும் நிலை ஏற்பட்டது. மெட்ரோவில் 17,000 வகையான பொருட்கள் விற்பனையாகின்றன. தென் ஆப்பிரிக்காவின் ஷாப் ரைம் செக்கர்ஸ் என்ற பன்னாட்டு சில்லரை வியாபார நிறுவனம் மும்பையில் மூலன்ட் என்ற இடத்தில் 60,000 சதுர அடியில் கடை விரித்துள்ளது. பன்னாட்டு நிறுவனங்களின் கடைகளின் முன்னால் குறைந்த விலைக்கு விற்பனை என்று பிரபலமாகவுள்ள நம்மூரில் உள்ள சூப்பர் மார்கெட்டுகள் கூட தாக்கு பிடிக்க முடியவில்லை. அப்படியிருக்கும் போது மிகப் பெரிய வால்மார்ட் வந்தால் என்ன நடக்கும்?

உலகம் முழுவதும் வால்மார்ட்

வால்மார்ட்டிற்கு அமெரிக்காவில் மட்டும் 38000 கடைகள் உள்ளன. உலகம் முழுவதும் 1494 கடைகள் உள்ளன. ஒரு கடையின் பரப்பளவு 85,000 சதுர அடியிலிருந்து 1,50,000 சதுர அடிவரை உள்ளது. வால்மார்ட்டின் கடைகள் மெக்சிகோவில் 641ம் கனடாவில் 236ம், பிரேசிலில் 144ம், பிரிட்டனில் 267ம் மற்றும் ஜெர்மனி 92ம் உள்ளன. இவர்களின் ஆண்டு வணிகம் 11,47,500 கோடிகளாகும். அதாவது ஏற்கனவே குறிப்பிட்டபடி இந்தியாவில் 4 கோடி பேரும் சேர்ந்து பண்ணுகின்ற வணிகத்தை வால்மார்ட் மட்டுமே செய்கிறது.

வால்மார்ட்டின் கடைகளுக்கு 2 கோடி பேர் தினமும் வந்து போகிறார்களாம். இத்தகைய ஆதிக்க சக்தியான வால்மார்ட் இந்தியாவிற்கு வந்தால் என்ன ஆகும்? 10 இலட்சம் மக்கள் தொகை கொண்ட 35 இந்திய நகரங்களில் நகரம் ஒன்றுக்கு வால்மார்ட் கடை திறக்கப்பட்டால் நம்மூரின் 4,32,000 சிறிய கடைகளை மூட வேண்டியிருக்கும். அவ்வளவு ஏன், இவை இந்தியாவில் நடைபெறும் சில்லறை வியாபாரத்தில் 20 விழுக்காட்டைக் கைப்பற்றினாலே 80 இலட்சம் சிறு வியாபார கடை ஊழியர்களின் வேலை பறிபோகும்.

எந்த உத்தரவாதமும் கிடையாது

மேலும், வால்மார்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் உள்நாட்டில் தயாராகும் பொருட்களைத் தான் வாங்கி விற்பனை செய்யும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. எந்த நாட்டில் பொருட்கள் மலிவாகக் கிடைக்கிறதோ அங்கிருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்யும். அதனால் சில்லரை வியாபாரம் மட்டுமின்றி உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு சந்தையும் கிடையாது.

அன்று கிழக்கிந்திய கம்பெனி என்ற ஒரே ஒரு கம்பெனி வணிகம் செய்யப்போகிறோம் என்று கூறித்தான் உள்ளே வந்தது. பின்னர் நாட்டை அடிமையாக்கிய அவர்களை விரட்டிட நமக்கு 200 ஆண்டுகளுக்கு மேலே ஆனது. இரத்தம் சிந்தி எத்தனையோ தியாகங்கள் செய்து நாடு விடுதலை அடைந்தது. ஆனால் இன்று வணிகம் செய்வதாகக் கூறிக் கொண்டு 17000 மேற்பட்ட பிரம்மாண்டமான நாட்டையே விழுங்கி விடக் கூடிய கம்பெனிகள் நாட்டின் உள்ளே நுழைந்துள்ளன. இவர்கள் வெறும் வியாபாரம் மட்டும் செய்ய வரவில்லை. உள்ளே வரும் இவர்கள் வெளியே போகப் போவதும் இல்லை. நாடு மீண்டும் மீள முடியாத அடிமைத்தனத்தில் சிக்க உள்ளது . நாம் என்ன செய்ய போகிறோம்?

- சேது ராமலிங்கம்

Pin It