மாற்றங்கள் விருப்பமல்ல, விதி! விதிகளுக்கு முரணான விருப்பங்கள் நிராகரிப்பிற்குள்ளாகும்!

தர்மபுரி நாயக்கன் கொட்டாயில் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான பாமகவின் வன்னிய ஆதிக்கசாதி வெறியாட்டத்தைத் தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகளின் மாநில செய்தித் தொடர்பாளர் வன்னி அரசு ”பாமகவின் சாதிவெறியும் புரட்சிகர அமைப்புகளின் தோல்வியும்”, என்ற கட்டுரையை கீற்று இணைய தளத்தில் வெளியிட்டார். இதில், இந்த வன்னிய ஆதிக்க சாதி வெறியாட்டத்தில் மகஇக-வைச் சேர்ந்த வன்னியர்களும் கலந்து கொண்டதாக அபாண்டமாக பழி சுமத்தியிருந்தார்.

தன் மீதான விடுதலைச் சிறுத்தைகளின் குற்றச்சாட்டை மறுத்து மகஇக குழும இணைய தளமான வினவு வாதாடியது. இதையொட்டி நாங்கள் “தாழ்த்தப்பட்டோர்: பலவண்ண பிழைப்புவாதிகளின் பகடைக்காய்கள்” மற்றும் “சாதி வெறியாட்டங்களும் புரட்சிகர அமைப்புகளின் தோல்விக்கான காரணங்களும்” என்ற கட்டுரைகளை கீற்றில் வெளியிட்டிருந்தோம்.

மகஇக மீதான அபாண்டமான பழியை, அப்பட்டமான பொய்யை எவ்வித கூச்சமும், நெருடலும் இன்றி வன்னி அரசு கூறியுள்ளதற்குக் காரணம், அந்த அமைப்பின் மீது விடுதலைச் சிறுத்தைகளுக்குள்ள தனிப்பட்ட பகையினால் அல்ல. மார்க்சிய சித்தாந்தத்தின் மீதான வெறுப்பு, ஆத்திரம் ஆகியவைகள்தான் இதற்குக் காரணம். தர்மபுரி நிகழ்வுகளுக்குப் பின்னரும் பாமகவோடு இணக்கமானப் போக்கை கடைபிடிக்கும் விடுதலைச் சிறுத்தைகள், சாதி, தீண்டாமையை ஒழிப்பதற்கான போதாமையைக் கொண்டிருந்தாலும், அதை எதிர்த்து தொடர்ந்தும் போராடிவரும் கம்யூனிச அமைப்புகள் மீது வெறுப்பை கக்கியுள்ளார்கள்.

விடுதலைச் சிறுத்தைகளின் பிழைப்புவாத அரசியலுக்கு அடித்தளமான தாழ்த்தப்பட்டவர்களை, கம்யூனிச அமைப்புகளும் தமது செயல்பாட்டுக்கான அடித்தளமாக கொண்டிருப்பதுதான் மார்க்சியத்தின் மீதான இவர்களின் பகைமைக்கான அடிப்படையாகும்.

மகஇக குழும அமைப்புகளும் பிழைப்புவாத அமைப்புகளாக மாறிய பிறகு சாதி, தீண்டாமையையும் தமது தேவைக்காக பயன்படுத்திக் கொள்பவர்கள்தான் என்பதை, அதற்கான வலுவான ஆதாரங்களுடன் நாங்கள் கட்டுரையாக வெளியிடும் வரை விடுதலைச் சிறுத்தைகளுக்கு மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள வேறுஎந்த அமைப்பிற்கும் இந்த உண்மை தெரிந்திருப்பதற்கான வாய்ப்புகள் ஏதுமில்லை.

ஏனென்றால், சாதி, தீண்டாமையை தனது பிழைப்புவாதத்திற்கு பயன்படுத்தும் மகஇக‍வின் வழிமுறை விடுதலைச் சிறுத்தைகளோ அல்லது வேறு எவருமோ புரிந்து கொள்ளும், தெரிந்து கொள்ளும் அளவிற்கு அவைகள் பலவீனமான வடிவங்களைக் கொண்டதல்ல என்பதையும் குறிப்பிட்டிருந்தோம்.

அப்படியே இந்த உண்மை நாங்கள் அம்பலப்படுத்துவதற்கு முன்பே, விடுதலைச் சிறுத்தைகளுக்கு தெரிந்திருந்தாலும் கூட அதற்காக மகஇக குழும அமைப்புகளிடம் மட்டுமே இவர்கள் பகைமை பாராட்டுவதுதான் நேர்மையான, நாணயமான செயலாக இருக்க முடியும்.

தமக்குக் கிடைத்த ஆதாரத்தின் அடிப்படையில் மகஇக-குழும அமைப்புகள் புரட்சிகர அமைப்புகள் இல்லை என்பதை அரசியல், சித்தாந்த ரீதியாகவும் நடைமுறையிலும் அம்பலப்படுத்தியிருக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் தாங்கள் மக்கள் நலனை நேசிப்பவர்கள் என்பதையும், சாதி, தீண்டாமையை ஒழிப்பதற்கான அரசியலையும், வழிமுறைகளையும் கொண்டவர்கள் என்பதையும் நிறுவியிருக்க வேண்டும்.

ஆனால், இதற்கு நேர்முரணானவர்கள் தாங்கள் என்பதைத்தான் மகஇக அமைப்பின் மீது அபாண்டமாக பழி சுமத்தியதன் மூலமும், மார்க்சிய சித்தாந்தத்தின் மீது வெறுப்பை உமிழ்ந்ததின் மூலமும் நிரூபித்துள்ளனர். அதோடு தனது பிழைப்புவாத நலன்களுக்காக நாங்கள் எப்படிப்பட்ட இழிவான செயலையும் செய்யத் தயங்காதவர்கள் என்பதையும் நிரூபித்துள்ளனர்.

 எமது கட்டுரைகள் கீற்றில் வெளிவருவதற்கு முன்னர் போர் முரசு கொட்டிக்கொண்டிருந்த வன்னி அரசும், வினவும் கட்டுரை வெளிவந்த பின்னர் வாயை இறுக மூடிக்கொண்டனர். ஆனால் சில வாசகர்கள் எமது கட்டுரைகளின் மீது தமது விமர்சனங்களை பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் இவர்கள் தம்முடையதை மட்டுமல்ல, தம்மைச் சார்ந்தவர்களின் எண்ணங்களையும், விருப்பங்களையும் வெளியிட்டுள்ளனர்.

இதில் விடுதலைச் சிறுத்தைகளின் நிலைப்பாட்டை ஆதரிக்கும் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்ற வாசகர் அழுத்தமான பதிவு ஒன்றை அளித்துள்ளார்.

”ஒரு தனிப்பட்ட நபரின் கருத்தால் இந்த இயக்கத்தின் செயல்பாட்டை, ஒடுக்கப்படுகின்ற சமுதாயத்தில் அதன் தேவையை மறுக்க முடியாது. மற்ற பிழைப்புவாத கட்சிகளுக்கும், விடுதலைச் சிறுத்தைகளின் தேர்தல் அரசியலுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் மறுபுறம் ஒடுக்கப்பட்ட தலித் மக்களுக்கு ஒடுக்கும் முறையை எதிர்த்துப் போராடும் வலிமையை அளிக்கிறது” என்றும்,

“ஒரு புறம் அருவறுக்கத்தக்க பிழைப்பு அரசியல் இருந்தாலும் மறுபுறம் ஒரு மாற்றத்தை விடுதலைச் சிறுத்தைகள் செய்துள்ளது. வெறும் பொருளியல் அடிப்படையிலான இந்திய சமூகத்திற்குப் பொருந்தாத மார்க்சிய கண்ணோட்டத்தில் பார்க்கப்படுவதால் ஏற்படும் நடுநிலை பிழைகள் நீங்கள் காண்பது” என்ற தனது கருத்தின் மூலம் தமது மற்றும் சித்தாந்த ரீதியாக தன்னைச் சார்ந்தோர் அனைவரின் கருத்தையும் வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக மேலாதிக்கம் செலுத்திவந்த பார்ப்பனிய சமூக அமைப்பு என்றென்றைக்கும் மாற்ற முடியாதது என்றுதான் கருதப்பட்டது. பார்ப்பனிய சமூக அமைப்பினால் காலம், காலமாக ஆதாயம் அடைந்தவர்கள் சமூக மாற்றம் தவிர்க்கவியலாத ஒன்றாகிய பின்னரும் அதை இன்றுவரை ஏற்க மறுத்தே வருகின்றனர்.

•             இரண்டாயிரம் ஆண்டுகளாக நீடித்த பார்ப்பனிய கல்விக்கு மாற்றாக மெக்காலே கல்வி முறையை ஆங்கிலேயர்கள் கொண்டு வந்தபோது, பார்ப்பனக் கும்பல் அதை ஏற்க மறுத்தது. இந்த எதிர்ப்பு தனது நலன்களுக்குப் பயன்படாது என்று புரிந்துகொண்டவுடன் மெக்காலே கல்வி முழுவதையுமே தனதாக்கிக் கொள்ள முயன்றது.

•             அரசு எந்திரத்தோடு தமக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி தம்மால் காலம்காலமாக வஞ்சிக்கப்பட்ட மக்களுக்கு, இப்போதும் கல்வி கற்கும் உரிமையை இல்லாமல் செய்வதற்கு முயன்று பார்த்தது.

•             இந்தியாவிலும், இலங்கையிலும் ரயில் பாதைகள் அமைக்கப்பட்டபோது தண்டவாளங்களைப் பெயர்த்தார்கள். அதையும் மீறி ரயில் வந்த போது கல்லால் அடித்தார்கள் ஆதிக்கசாதி வெறியர்கள்.

•             பள்ளு, பறைகள் தொட்டால் தீட்டு, நாடானைக் கண்டாலே தீட்டு என்றும் இச்சாதிப்பெண்கள் இடுப்பிற்கு மேல் துணி உடுத்தி தமது மார்பகங்களை மறைத்துக்கொள்ளக் கூடாது என்றெல்லாம் கோரத் தாண்டவமாடியவர்கள் அவற்றில் மாற்றம் வருவதையும் ஏற்க மறுத்தனர். பின்னர் தாழ்த்தப்பட்டோர் கல்வி கற்பதையும், ரயில், பேருந்துகளில் பயணிப்பதையும், செருப்பணிவதையும்,சைக்கிள் ஓட்டுவதையும் ஏற்க மறுத்து அடம்பிடித்தனர்.

ஆனால், இந்த விருப்பங்களில் எதிலும் அவர்கள் வெற்றி பெற முடியவில்லை. அதற்கு மாறாக தோல்வியை மட்டுமே சந்தித்தனர். அன்று முதல் இன்று வரை எப்போதுமே, எங்குமே ஆதிக்கச்சாதிகள் - சமூக,பொருளாதாரம் உட்பட எந்த ஒரு துறையானாலும் – தனக்கு ஆதாயம் தரக்கூடிய எதுவும் மாறாமல் அப்படியே நீடிக்க வேண்டும் என்றே விரும்புகின்றன.

ஆதிக்க சாதிகளின் மேற்கண்ட விருப்பத்திற்கு மாறாக, இவர்களால் ஒடுக்கப்படும், சுரண்டப்படும் மக்களோ இவைகள் மாற வேண்டும் என்றே விரும்புகின்றனர். ஆனால் இப்படிப்பட்ட விருப்பங்களே அதை நிறைவேற்றித் தந்துவிடுவதில்லை. ஈராயிரம் ஆண்டுகளாக ஆதிக்க சக்திகளின் விருப்பங்கள் தொடர்ந்து நிறைவேறியதற்கு எது காரணமாக இருந்ததோ, அதுவே ஒடுக்கப்பட்ட மக்களின் விருப்பங்கள், நிறைவேறாமல் இருந்ததற்கும் காரணமாக இருந்தது.

ஆதிக்க சாதிகளின் விருப்பங்கள் இன்றும் அப்படியே தொடர்ந்தாலும் இவைகள் ஏறத்தாழ நூற்றுஐம்பது ஆண்டுகளாக படிப்படியாக தோல்வியையே சந்திக்கின்றன.

தாழ்த்தப்பட்ட மக்களோ, ஆதிக்க சாதிகள் தம்மீது செலுத்தும் ஒடுக்குமுறைகள் முற்றாக ஒழிய வேண்டும் என்று விரும்பினாலும் இவர்களின் இந்த விருப்பங்கள் முழுமையாக நிறைவேறவில்லை.

ஆதிக்க சாதிகளின் விருப்பங்கள் முற்றாக தோல்வியடையாமல் அவைகள் தொடர்வதற்கு எது காரணமோ, அதுவே தாழ்த்தப்பட்ட மக்களின் விருப்பங்கள் முழுமையாக நிறைவேறாமல் இருப்பதற்கும் காரணமாகும்.

அன்று முதல் இன்று வரை எங்கேயும், எப்போதும் மனித விருப்பங்கள் எதுவாயினும் அவைகளில் மாற்றங்கள் நிகழ்ந்தாலும், நிகழாவிட்டாலும் ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் மாற்றங்கள் மாறாத உண்மைகளாகிவிட்டன.

உண்மையிலேயே சாதியும், தீண்டாமையும் ஒழிக்கப்பட வேண்டும் என்று விரும்புபவர்கள், தமது இந்த விருப்பங்கள் நிறைவேறுவதற்கும்,செயல்வடிவம் பெறுவதற்குமான - அடித்தளத்தை உருவாக்குவதற்கான - திட்டத்தையும், வழிமுறைகளையும் கொண்டிருந்தால் மட்டுமே அவைகள் நிறைவேறும். இதுவல்லாது இவ்விருப்பங்கள் எவ்வளவு நியாயமானதாயினும் அவைகள் நிறைவேறுவதற்கான அடித்தளம் உருவாகும் வரை அவைகள் வெறும் கனவுகளாக மட்டுமே நீடிக்கும்.

ஆதிக்க சாதிகளின் விருப்பங்கள் விதிகளுக்கு முரணாக இருப்பதால்தான் அவைகள் படிப்படியாக சமூக வளர்ச்சிக்கு ஏற்ப தோல்வியைச் சந்திக்கின்றன.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் உற்பத்தித் துறையில் மாற்றம் நிகழாமல் தடுத்துவந்த தடைக்கல்லை ஆங்கிலேயர்கள் அகற்றி உற்பத்தியில் புதிய மாற்றத்தை திணித்தபோதே ஆதிக்க சாதிகளின் தோல்விகளும் தவிர்க்க இயலாதவைகளாகிவிட்டன. ஆனாலும் இந்த உண்மைகளை ஆதிக்க சாதிகள் ஒப்புக்கொள்ளாமல் இருப்பதற்கும், இந்த விருப்பங்கள் மீண்டும், மீண்டும் முளைவிடுவதற்கும் ஏற்ற அடித்தளம் இன்னமும் நீடிப்பதே காரணமாகும்.

தாழ்த்தப்பட்டவர்களைத் தொட்டால் தீட்டு, அவர்கள் தமது தெருக்களில் நடந்தால் தீட்டு. இந்தத் தீட்டை போக்குவதற்கு தாழ்த்தப்பட்டவர்களின் காலடி தடத்தை அழிக்க அவர்களின் இடுப்பிற்கு பின்னால் பனை ஓலையை கட்டி இழுத்துவரச் செய்தும், அவர்களின் எச்சில் தரையில் படாமல் இருக்க கழுத்தில் கலயத்தை கட்டிவரவும் நிர்பந்தித்தனர். இவைகளை மீறியவர்களை அடித்து உதைத்து சித்திரவதைகளுக்கு உள்ளாக்கினர். சில தருணங்களில் கொலையும் கூட செய்து அச்சுறுத்தினர்.

அதன் பிறகு சமூக வளர்ச்சியின் விளைவாக, தாழ்த்தப்பட்டோர் ஆதிக்க சாதி தெருக்களில் நடமாடுவது தவிர்க்கவியலாத செயலாக மாறியபோது அவர்களை தொட்டுவிட்டால் அந்தத் தீட்டைப் போக்க மாட்டுத்தொட்டியின் 'அதி சுகாதாரமான' நீரை தலையில் தெளித்துக் கொண்டனர். பின்னர் அதுவும் சாத்தியமில்லை என்று ஆகிவிட்ட பின்னர் எவனும் தமது தோல்விக்காக தூக்கு கயிற்றை தெரிவு செய்து கொள்ளவில்லை!

இன்று தாழ்த்தப்பட்டவர்கள் வீட்டில் சாப்பிடுவது கூட தீட்டில்லை என்றாகிவிட்டது. இந்த மாற்றங்களின் தொடர்ச்சி, வளர்ச்சி தான் சாதிமறுப்புத் திருமணங்கள்.

சமூக நடவடிக்கைகளில் தாழ்த்தப்பட்டோரையும், பெண்களையும் வலுக்கட்டாயமாக தடுத்து வைத்திருந்ததன் மூலமே சாதி, தீண்டாமை, பெண்ணடிமைத்தனம் ஆகியவற்றை செயல்படுத்த முடிந்தது.

இனி அப்படி செய்ய முடியாது என்றாகி அவைகள் தவிர்க்கவியலாத, இயல்பான அன்றாட நிகழ்வுகளாகி விட்ட பின்னர் சாதியையோ, தீண்டாமையோ, பெண்ணடிமைத்தனத்தையோ முந்தைய வடிவில் அப்படியே பாதுகாக்கவும் முடியாது. ஆணும், பெண்ணும் தமது வாழ்க்கைத் துணையை தெரிவு கொள்வதையும், காதலிப்பதையும், தடுத்து நிறுத்திவிடவும் முடியாது.

மனித வாழ்க்கைக்கு அத்தியாவசியத் தேவைகளான கல்வி, மருத்துவம் உட்பட எதிலும் சாதி பார்க்க முடியாது. ஆணும், பெண்ணும் தமது வாழ்க்கைத் துணையைத் தெரிவு செய்து கொள்ள சாதி பார்க்க முடியாது, தேவை இல்லை என்று கருதுவது என்பதும் சரியானதுதான். முன்னதை சாதிவெறி பிற்போக்காளர்களால் தடுக்க முடியாததைப் போன்றே, பின்னதையும் என்னதான் அச்சுறுத்தினாலும் தடுத்து நிறுத்திவிட முடியாது.

ஆதிக்க சாதி வெறியர்கள் தமது பிற்போக்குத் தனத்தை பாதுகாத்துக் கொள்வதற்கு எவ்வளவு கொடூரமான, கோரமான வழிமுறைகளைக் கையாள்கிறார்களோ, அது அவர்களின் பலத்தின், நியாயத்தின் வெளிப்பாடல்ல. அது அவர்களின் பலவீனத்தின் வெளிப்பாடு.

எனவே சமூக மாற்றத்திற்கும், முன்னேற்றத்திற்கும் விஞ்ஞானத்திற்கும் புறம்பான இவர்களின் அனைத்து நடவடிக்கைகளும் தோல்வியைத் தழுவுவது என்பது தவிர்க்கவியலாதவைகளாகும்.

இவர்கள் தமது பிற்போக்குத்தனத்தைப் பாதுகாக்க எந்த ஆயுதத்தை தேர்வு செய்கிறார்களோ, அதுவே அவர்களின் தோல்வி, அழிவு ஆகியவற்றுக்கான தேர்வுமாகும்.

ஏனென்றால் இவர்கள் தடுக்க நினைப்பது தாழ்த்தப்பட்டவர்களின் வளர்ச்சியை மட்டுமல்ல, இதனூடாக சமூக வளர்ச்சியையும், முன்னேற்றத்தையுமே தடுக்க முனைகிறார்கள்.

எனவே யாருடைய வளர்ச்சியை, முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த முனைகிறார்களோ அவர்கள் சமூக வளர்ச்சியின், முன்னேற்றத்தின் பிரதிநிதிகள். எனவே இவர்கள் தமது எதிர் வினையாற்றல்களின் ஊடாக ஆதிக்க சாதிவெறியர்களுக்கு உரிய பாடம் கற்பிப்பார்கள்.

சமூக வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் தவிர்க்கவியலாத இந்த சங்கிலித் தொடர் நடவடிக்கைகளில், செயல்பாடுகளில் பலத்தரப்பட்ட பிரிவினர் தமது பங்களிப்பை செலுத்துவது தவிர்க்கவியலாதது ஆகும்.

வன்னிய ஆதிக்க சாதிவெறி பிற்போக்குத்தனத்திற்கு எதிரான விடுதலை சிறுத்தைகளின் பங்களிப்பும், பாத்திரமும் இத்தகையதேயாகும்.

                                                                                                                                தொடரும்....

Pin It