இந்தியாவின் பழைய வரலாற்றை புரட்டிப் பார்த்தால், இனி இந்தியாவில் அரங்கேற்றப்பட இருக்கும் காட்சிகளின் உண்மை புரியும்.

 இந்தியா தனது சுதந்திரக் காற்றை 1947 ஆகஸ்ட் 15ல் சுவாசிப்பதற்கு முன் அன்னியரின் பிடியிலிருந்தது என்ற உண்மை நாம் அனைவரும் அறிந்ததே. அந்த நிகழ்வுகளை நாம் மீண்டும் மீண்டும் நினைவு கூற வேண்டிய காலத்தின் கட்டாயம் வெகுதொலைவில்லை. வணிக நோக்கத்திற்காக இந்தியாவிற்குள் நுழைந்த அயல்நாட்டினர், படிப்படியாக இந்தியரின் மனநிலையையும், சூழ்நிலையையும் தமக்கு சாதகமாக்கிக் கொண்டு இந்தியாவை அடிமை நாடாக்கினர். பொருளாதாரத்திலும், அரசியலிலும் நாம் ஆங்கிலேயரைச் சார்ந்து வாழ்ந்தோம். நம் நாட்டின் வளங்களை, நம் கண்முன்னே சுரண்டிச் சென்று, அவர்களது நாட்டிலிருந்து தூக்கியெறியப்பட்ட எச்சங்களை நம்மிடம் கொடுத்தார்கள். இந்தியாவை ஆங்கிலேயக் கண்கொண்டு பார்த்த காலம் அது. ஆங்கிலேயர்களின் வளர்ச்சியே, இந்தியாவின் வளர்ச்சியாகக் கருதப்பட்டது. பழைய காலனியாதிக்கத்தின் கொடுமைகள் இதோ.

- அந்நியரின் ஆதிக்கத்தினால் மிக அதிகமாக பாதிக்கப்பட்டது விவசாயிகளே. விவசாயிகளின் நிலங்கள் பறிக்கப்பட்டு, அவர்களது உற்பத்திப் பொருளுக்கு பல புதிய வரிகள் விதிக்கப்பட்டன. இதனால் ஆங்கிலேயர் மிகுந்த வருவாய் பெற்றனர்.

- ஆங்கிலேய நாட்டு உற்பத்திப் பொருளுக்கு குறைந்த வரி, உள்நாட்டில் தயாராகும் பொருளுக்கு மிக அதிக வரி விதிக்கப்பட்டது. இந்த கொள்கைகளைப் பயன்படுத்தி உள்நாட்டுப் பொருள்களின் தயாரிப்பு மற்றும் தொழிலை குறிப்பாக சிறு வணிகர்களையும், வணிகங்களையும் படிப்படியாக அழித்தனர். அந்நிய நாட்டு பொருட்களை இந்தியர்கள் மீது திணித்தனர்.

- நம் நாட்டில் விளைந்த பருத்தி, சணல் போன்றவற்றை கட்டாயமாக பயிரிட வைத்து அவர்கள் நாட்டிற்கு எடுத்துச் சென்றனர். நம் நாட்டிலிருந்து பொருட்களை வரிவிதிப்பின்றி இலவசமாக எடுத்துச் சென்றனர். வாணிப நோக்கத்திற்காகவும், கொள்ளையடிக்கும் நோக்கத்திற்காகவுமே துறைமுகங்கள், இரயில்வே மற்றும் சாலைகளை அமைத்தனர்.

- போர்க்காலங்களில் இந்தியாவிலிருந்து அடிமைகளை ஏற்றுமதி செய்து போர்கருவிகளாக பயன்படுத்தினர். மேலும் கட்டுமானப் பணிகளுக்கும் விலையில்லாப் பணியாளர்களாக இந்தியர்களைப் பயன்படுத்தினர்.

- மொத்தத்தில் இந்தியாவின் கலாச்சாரம், பண்பாடு, வளங்கள் இவற்றை அழித்து அவர்களின் பொருட்களையும், கலாச்சார வாழ்க்கை முறையையும் நம் மீது திணித்தனர். எதிர்த்தவர்களை அழித்தொழித்தார்கள்.

- நமது சுதந்திரம், தன்மானம் போன்றவற்றை தடம் தெரியாமல் அழித்தனர்.

அந்நிய மண்ணிலிருந்து வந்து இந்தியாவில் தனது ஆட்சியையும் அதிகாரத்தையும் நிறுவுவது எவ்வாறு சாத்தியம்? ஆம் சாத்தியம். ஆங்கிலேயருக்கு துணைபோன எட்டப்பர்கள் இருக்கும் வரை அனைத்து அடிமைத்தனங்களும் சாத்தியமே. 1990களில் இந்தியாவிற்குள் நுழைந்த தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம் போன்ற கொள்கைகளை யார் உருவாக்கியது? எதற்காக உருவாக்கினார்கள்? எந்த நாட்டிலும் தொழிலாளர்களோ, விவசாயிகளோ, நெசவாளர்களோ, வணிகர்களோ உருவாக்கவில்லை, மாறாக ஏகபோக முதலாளிகள் வலிந்து திணித்த கொள்கை இது. இக்கொள்கையின்படி பல பொதுத்துறை நிறுவனங்கள் இது வரை மறைமுகமாக தனியார்மயமாக்கப்பட்டுள்ளது. இப்போது அன்னிய நேரடிமுதலீடு என்ற பெயரில் வெளிப்படையாக காலனியாதிக்கத்திற்கு பட்டுக்கம்பளம் விரித்து வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலேயர்களின் காலனியாதிக்கத்திலாவது பலர் தங்கள் உயிர்தந்து போராட்டம் நடத்தினார்கள். ஆனால் இந்த நவீன மறுகாலனியாதிக்கத்தில் மன்மோகன், சோனியா, சிதம்பரம், கபில்சிபில், கருணாநிதி, சரத்யாதவ், மாயாவதி போன்ற எட்டப்பர்கள்தான் அதிகம். நாக்கிற்கு நரம்பில்லை என்பதை இவர்கள் நாள்தோறும் விடுக்கும் அறிக்கையிலிருந்து தெளிவாகும். இதற்கு இவர்கள் கொடுக்கும் காரணம் 'மதவாதம்| மதவாதத்திற்கு எதிராக தாய் மண்ணை' அன்னியர்களுக்கு தாரைவார்க்கக்கூட தயங்காத தியாகிகள். வாக்காளர்களாகிய நாம் தியாகிகளுக்கும் தியாகிகள். ஏன் தெரியுமா? மறுபடியும் அவர்களுக்குத் தான் நமது முத்திரை என்ன கொடுமை இது?

மறுகாலனியாதிக்கம்

 1962-ல் அமெரிக்காவில் சிறிய பெட்டிக்கடையில் துவங்கப்பட்ட வால்மார்ட் நிறுவனம் இன்று 27 நாடுகளில் 10,390 கடைகள். விற்பனையோ ஆண்டுக்கு 440 பில்லியன் டாலர்கள். உலகச் சில்லறை வியாபரத்தில் முதல் இடம். ஆதலால்தான் உலகிலுள்ள ஐந்து பெரிய சில்லறை வணிகச்சந்தைகளுள் ஒன்றான இந்தியாவின் மீது அதன் கண் பதிந்துள்ளது. அதன் மொத்த மதிப்பு சுமார் 23,85,000 கோடி ரூபாய். இவ்வளவு வருவாய் வரும் இந்திய சில்லறை வணிகத்தை ஏன் இந்த அரசு தாராளமாக அன்னியனுக்கு விட்டுக்கொடுக்கிறது? இதற்கான பதிலை சோனியா, மன்மோகன், ப.சிதம்பரம் போன்றவர்களின் பாக்கெட்டுக்கள்தான் பதில் கூற வேண்டும். வால்மார்ட்டின் தாரக மந்திரம், தயாரிப்பாளர்களிடம் கருணை காட்டக் கூடாது. எல்லாப் பொருள்களின் விலையும் 20% குறைவு, வியாபாரம் என்பது போட்டியல்ல, போர்.

விவசாயிகள், சிறுதொழில்கள் ஆகியோரின் கைகளை முறுக்கி பேரம் பேசுவது, போட்டியாளர்களை ஓட ஓட விரட்டுவது, ஊழியர்களுக்கு சம்பளம் மிகக் குறைவு, வேலையில்லா இளைஞர்களின் உழைப்பை சுரண்டுவது, வேலையின் போது ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு மிகக் குறைவான நஷ்ட ஈடு, இரவு நேரப் பணியாளர்களை கடைக்குள் பூட்டிவைப்பது, அதிக வேலை இருந்தாலும் அதிக சம்பளம் கிடையாது, யூனியன் அமைக்க அனுமதி கிடையாது, குழந்தைத் தொழிலாளர்கள் ஏராளம், குழந்தைகளின் உயிரைவிட, குறைந்த விலையும் கொள்ளை இலாபமுமே முக்கியம் என ஏகபோகமான நிறுவனம் இது. இது போன்ற பல நிறுவனங்கள் இந்தியாவில் நுழையப்போகின்றன. ஏற்கனவே துவங்கப்பட்ட இடங்களில் ஏகப்பட்ட வழக்குகள், நஷ்டஈடுகள், மற்றும் தண்டனைகள் அதனால் தான் எதிர்த்து கேட்காத ஏழைகளின் உழைப்பைச் சுரண்ட இந்தியாவிற்குள் நுழைகின்றனர். இதைப்பற்றி எதுவும் தெரியாமலா மத்திய அரசு அனுமதித்தது? கொடுப்பவர்களுக்கெல்லாம் லைசென்ஸ், அனுமதி, பணப்பரிவர்த்தனை. இந்திய அரசியல்வாதிகளை யாரும் மிஞ்ச முடியாது.

இந்த நிறுவனங்கள் பணத்தால் எதையும் சாதிப்பவர்கள். அதைவைத்தே இந்தியாவில் அனுமதியை பெற்றார்கள். இனி ஆட்சியும் அவர்களுடையது, அதிகாரமும் அவர்களுடையது. ஏழைகளும், சில்லறை வியாபரிகளும் காணாமற் போய் விடுவார்கள். விவசாய நிலங்கள் வால்மார்ட் நிறுவனங்களாக மாறும். ஆங்கிலேயன் நமது வளத்தைச் சுரண்டி பொருளாகக் கொடுத்தான், இந்த அன்னியர்கள் நமது வளமை, பணம், பொருள், தன்மானம், சுதந்திரம் போன்றவற்றை சுரண்டிக் கொண்டு எதுவும் கொடுக்கமாட்டார்கள். பணியாளர்கள் முதல் நிறுவனங்கள் வரை வெளிநாட்டினரே. விவசாயம் கூட அயல்நாட்டு நிறுவனத்தால் செய்யப்படும். உழைப்பு நமது லாபம் அவர்களுக்கு… மொத்தத்தில் இந்தியா, ஒரு நவீன அமெரிக்காவாக மாறும். இந்தியா இருக்கும் ஆனால் இந்தியர்கள் இருக்கமாட்டார்கள். வெள்ளைத்தோல் கொண்டவர்களும், எட்டப்பர்களும் இருப்பார்கள். இந்த தருணத்தில் இந்தியாவிற்கு தேவை ஒரு பகத்சிங், நேதாஜி. வருவார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வி. எனவே அனைவரும் இணைந்து மீண்டும் ஒரு விடுதலைப் போராட்டத்திற்கு தயாராவோம்.

- சகோ.பாபு, தூய பவுல் இறையியல் கல்லூரி, திருச்சி. (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It