உற்பத்தி சக்திகள் என்பவை இடுபொருட்கள், கருவிகள், உழைப்புச் சக்தி, தொழில்நுட்ப அறிவு போன்றவையாகும். இவற்றில் இடுபொருட்களும், கருவிகளும் புறப் பொருள் சார்ந்தவைகளாகும். இவை முந்தைய சமுதாயத்தின் மூலம் கையளிக்கப்பட்டன. மேலும் உழைப்பு சக்தியும் தொழில்நுட்ப அறிவும் மனிதன் நடவடிக்கை சம்பந்தபட்டவையாகும். உற்பத்தி சக்திகள் என்பவை வெறும் பொருள்சார்ந்தவை மட்டுமன்று மனித நடவடிக்கை சார்ந்தவையுமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மனிதர்களுக்கு இடையிலான உறவின் சாராம்சம் உற்பத்தி உறவுகளாகும். உற்பத்தி உறவு என்பது உற்பத்தி சக்திகளின் மீதான உடைமை பற்றியதாகும். உற்பத்திக் கருவிகள் மற்றும் இடுபொருட்கள் ஆளும் வர்க்கங்கள் உடைமையாகவும் உழைப்புச் சக்தியானது உழைக்கும் வர்க்கத்தின் உடைமையாகவும் இருக்கின்றன. உற்பத்தி உறவுகள் ஆளும் வர்கத்திற்கும் உழைக்கும் வர்க்கத்திற்கும் இடையிலான முரண்பாட்டைத் தன்னகத்தே கொண்டிருக்கின்றன. வர்க்க முரண்பாடுகள் சமூக மாற்றத்தின் அடிப்படையாகத் திகழ்கின்றன‌.

மனித சமூகம் இடைவிடாமல் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. மக்களின் வாழ்நிலைக்கு பொருட்கள் தேவை. அவை உற்பத்தி நிகழ்வுப்போக்கில் உருவாகின்றன. உற்பத்தி நிகழ்வுப்போக்கில் உற்பத்தி சக்திகள் வளர்கின்றன. மனிதன் தமது உழைப்பின் மூலம் இயற்கையின்மீது செயலாற்றும்போது உற்பத்தி செய்யப்படும் அனுபவங்கள் கிடைக்கின்றன. உற்பத்தித்திறன் வளர்கின்றது; அறிவு வளர்கின்றது. இந்த அடிப்படையில் உழைப்புக் கருவிகளில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. உழைப்புக் கருவிகள் தொடர்ந்து வளர்ச்சி பெறுவதால் உற்பத்தி சக்திகள் வளர்கின்றன. இதன் மூலம் சமூக முன்னேற்றம் ஏற்படுகின்றது.

ஒவ்வொரு தலைமுறையும் முந்தைய தலைமுறையின் உற்பத்தி சக்திகளை சுவீகரித்துக் கொள்கின்றது. முந்தைய தலைமுறையின் அனுபவங்களையும், அறிவுத் திறனையும் உட்கிரகித்துக் கொண்டு பயன்படுத்திக் கொள்கின்றனர். குறிப்பிட்ட உற்பத்தி சக்திகளைப் பெற்றிருக்கும் ஒரு குறிப்பிட்ட சமூகம் அதற்கொப்ப ஒரு குறிப்பிட்ட உற்பத்தி உறவுகளைக் கொண்டிருக்கும். உற்பத்தி சக்திகள் ஓர் எல்லைக்கு வளர்ச்சியடைந்தவுடன் அது உற்பத்தி உறவில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன‌. ஆனால் உற்பத்தி உறவு உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கே தடையாக மாறிவிடுகின்றது. ஒருகட்டத்தில் உற்பத்தி உறவின் இடத்தில் வேறொரு உற்பத்தி உறவு மாற்றீடு செய்யப்படுகின்றது.

இது முன்பிருந்ததை விட அடுத்த கட்டத்திற்கு சமூகம் எடுத்துச் செல்கின்றது. ஒரு புதிய சமூக பொருளாதாரக் கட்டமைப்பு உருவாகின்றது. இத்தகைய மாற்றங்கள் அவ்வளவு எளிதாக நடைபெறுவதில்லை. உற்பத்தி சக்திகளுக்கும் உறவுகளுக்கும் இடையே உள்ள முரண்பாடுகளைத் தீர்ப்பதன் மூலமாக நடைபெறுகின்றன. உற்பத்தி சக்திகளுக்கும் உறவுகளுக்கும் இடையே உள்ள முரண்பாடானது, 1.உற்ப‌த்தி உறவு உற்பத்திச் ச‌க்திக‌ளை சார்ந்திருத்த‌ல், 2.உற்ப‌த்தி உறவு உற்பத்திச் சக்திகளின் மீது செல்வாக்கு செலுத்துதல் 3. உற்பத்தி உறவுகள் உற்பத்திச் சக்திகளை வளர்த்தெடுத்தல் ஆகிய மூன்று பண்புகளைக் கொண்டிருக்கின்றன.

மனிதர்கள் தங்களுக்கான உற்பத்தி சக்திகளை தேர்ந்தெடுத்துக் கொள்வதில்லை. உற்பத்தி உறவு சமூகத்தின் வடிவமாக திகழ்வதால், அது உற்பத்தி சக்திகளைச் சார்ந்திருக்கின்றது. ஆனால் உற்பத்தி சக்திகள் உற்பத்தி உறவின் மீது செல்வாக்கு செலுத்தும். அதே போல உற்பத்தி உறவும் உற்பத்தி சக்திகளின்மீது செல்வாக்கு செலுத்துகின்றது என்பதை மறுக்க முடியாது. இரண்டுமே ஒன்றுக்கொன்று எதிர்மறையான உறவைக் கொண்டுள்ளன. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி உற்பத்தி உறவின் மீது நேர்மறையான செல்வாக்கைச் செலுத்துகின்றன. ஆனால் உற்பத்தி உறவு உற்பத்திச் சக்திகளின் மீது எதிர்மறையான செல்வாக்கைக் கொண்டிருக்கின்றன.

சமூக உள்ளடக்கமும் சமூக வடிவ‌மும்

உற்ப‌த்தி ச‌க்திகள் உற்ப‌த்தியில் உள்ள‌ட‌க்க‌மாகக்‌ கொண்டால், உற்ப‌த்தி உற‌வுக‌ளை ச‌மூக‌ வ‌டிவ‌மாக‌ எடுத்துக் கொள்ள‌லாம். ஆக உற்பத்தி சக்திகளுக்கும் உறவுகளுக்கும் இடையிலான பிரச்சனை என்பது சமூக உள்ளடக்கத்திற்கும் சமூக வடிவத்திற்கும் இடையிலான பிரச்சனையாகும். உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி உற்பத்தி உறவின் மாற்றத்திற்கு இட்டுச்செல்லும். அதேபோல உற்பத்தி உறவில் ஏற்படும் மாற்றம் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு அடிப்படையாகவும் இருக்கின்றது. ஆக உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி உற்பத்தி உறவுகளின் மாற்றத்திற்கும் உற்பத்தி உறவுகளின் மாற்றம் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கும் இட்டுச்செல்லும்.

‘உற்பத்தி சக்திகள்’ பற்றிய கோட்பாடு

‘உற்பத்தி சக்திகள்’ பற்றிய கோட்பாடு என்பது சில மார்க்சியர்களால் முன்வைக்கப்படும் ஒரு கோட்பாடாகும். இக்கோட்பாட்டை முத‌ன்முத‌லில் முன்வைத்த‌வ‌ர் ஜெரால்ட் கோஹ‌ன் என்ப‌வ‌ராவ‌ர். தொழில் நுட்ப‌த்தில் ஏற்ப‌டுகின்ற‌ மாற்ற‌ங்க‌ள் ச‌மூக‌ மாற்றத்திற்கு இட்டுச் செல்லும் என்ற‌ க‌ருத்தை அவ‌ர் எடுத்துரைத்தார். வேறுவ‌கையில் கூறுவதானால், உற்ப‌த்திக் க‌ருவிக‌ளில் ஏற்ப‌டுகின்ற‌ மாற்ற‌ங்க‌ள் உற்ப‌த்தி உறவில் மாற்ற‌ங்க‌ளை கொண்டுவ‌ரும் என்ப‌துதான் இக்கோட்பாடாகும். இக்கோட்பாட்டானது, உற்ப‌த்திச் ச‌க்திக‌ளின் வ‌ள‌ர்ச்சியை முன்னிறுத்தி, க‌ருத்திய‌ல் மாற்ற‌ங்க‌ளை இர‌ண்டாம் ப‌ட்ச‌மாக‌ வைக்கின்ற‌து.

அவர் கூறும் கருத்துகளாவன: 1. வரலாறு முழுவதும் உற்பத்தி சக்திகள் வளர்ச்சிக்கு இட்டுச்செல்லும். 2. ஒருகுறிப்பிட்ட சமூகத்தில் உற்பத்தி உறவை உற்பத்திச் சக்திகளைக் கொண்டு விளக்கமுடியும். 3.பொருளாதார கட்டுமானத்தின் தன்மைகள்/ பண்புகளைக் கொண்டு பொருளாதாரமல்லாத நிறுவனங்களை அதாவது அரசியல், சட்டம் போன்றவற்றை விளக்க முடியும். 4. உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி உற்பத்தி உறவில் மாற்றத்தைக் கோருகின்றது. உற்பத்தி உறவு உற்பத்தி சக்திகளோடு இணக்கம் கொள்கின்றது. ஆனால் உற்பத்தி சக்திகள் உற்பத்தி உறவோடு இணக்கம் கொள்வதில்லை.

லியூ சோசியின் (Liu Shaoqi) உற்பத்தி சக்திகள் கோட்பாடு

உண்மையில், பொதுவாக உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி உற்பத்தி உறவில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. ஆனால் புரட்சிகர சிந்தனைகளின் மூலம் மக்களை அணிதிரட்டி அரசதிகாரத்தைக் கைப்பற்றியதையும் பின்னர் உற்பத்தி உறவை மாற்றியமைத்ததையும் வரலாறு காட்டுகின்றது.

சீன தொழிற்துறையில் மிகவும் பின் தங்கிய நாடு. உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி மிகவும் தாழ்ந்த நிலையில் இருந்தது. சீன தொழிலாளிவர்க்கம் குழந்தைத் தன்மானது. உதிரித்தன்மானது. லும்பன் தன்மையுடையது போன்ற காரணங்களை முன்னிறுத்தி லியூ சோசி என்பவர் சீனாவில் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக் கோட்பாட்டை முன்வைத்தார். மாவோ இக்கோட்பாட்டைக் கடுமையாக எதிர்த்தார்.

உற்பத்தி உறவில் மாற்றத்தை ஏற்படுத்தாமல் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியை ஏற்படுத்தமுடியாது என்ற நிலை யிருக்கும்போது உற்பத்தி உறவை மாற்றியமைப்பது முதன்மையான கடமையாகின்றது. அது தீர்மானகரமானதாகவும் இருக்கின்றது என்று மாவோ கூறுவது குறிப்பிடத்தக்கது.

உற்பத்தி சக்திகள் பற்றிய கோட்பாடின் குறைபாடுகளாவன: 1. சில சூழ்நிலைமைகளில் மேல்கட்டுமானமும் உற்பத்தி உறவும் முதன்மையான தீர்மானகரமானப் பாத்திரத்தை வகிக்கின்றன என்பதை உற்பத்தி சக்திகள் கோட்பாடு மறுக்கின்றது. 2.புரட்சிகரமான தத்துவத்தின் வழிகாட்டுதலின்கீழ் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றி உற்பத்தி உறவுகளை மாற்றியமைப்பதன் மூலம் உற்பத்திச் சக்திகளை பெருமளவில் மாற்றியமைக்க முடியும் என்பதை இக்கோட்பாடு மறுக்கின்றது. 3. மக்கள் மட்டுமே வரலாற்றின் உந்து சக்திகள் என்பதை மறுக்கின்றது.

உற்பத்திச் சக்திகளை வளர்ப்பது என்றால் என்ன?

உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியானது உற்பத்தி உறவுகளை மாற்றியமைக்கின்றது என்றால் இதன் உள்ளார்ந்த பொருள் என்ன? மனித உழைப்பானது உற்பத்திச் சக்திகளை வளர்த்தெடுக்கின்றது. உற்பத்திச் சக்தியானது மனித உழைப்பை மேம்படுத்துகின்றது. அறிவுத்திறனை முன்னேற்றுகின்றது. உயர்ந்த உற்பத்திமுறையும், உற்பத்தி நடவடிக்கைகளும் உழைக்கின்ற மக்களிடம் சமூக உணர்வை ஊட்டுகின்றது. இத்தகைய சமூக உணர்வுதான் உற்பத்தி உறவை மாற்றியமைக்க அடிப்படையாகின்றது. இது உற்பத்தி சக்திகள் வளர்ச்சியடைந்த சமூகத்திற்கு பொருத்தமுடையதாய் இருக்கும்.

ஆனால் பின் தங்கிய உற்பத்தி சமூகத்தில் சமூக உணர்வை ஊட்டுவது எவ்வாறு? சமூகம் மாற்றம் பெறுவது எவ்வாறு? என்றால் சமூகம் பின் தங்கிய உற்பத்திச் சக்திகளைக் கொண்டிருந்தாலும், அரசியல் கருத்தியல் தத்துவ போன்றவற்றின் மூலம் உழைக்கின்ற மக்களிடம் சமூக உணர்வை ஊட்டமுடியும். சமூக உணர்வை புகட்டுவதும் புரட்சிகர உணர்வை ஊட்டுவதும்தான் உற்பத்திச் சக்திகளை வளர்ப்பது என்பதன் பொருளாகும். புரட்சிகர உணர்வை ஊட்டிதான் உற்பத்திச் சக்திகளை வளர்க்க‌ முடியும். இங்குதான் அரசியல் கருத்தியல் தத்துவம் போன்ற மேற்கட்டுமானத்தின் பாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாகின்றது. உற்பத்திச் சக்திகளை வளர்ப்பது என்பது வெறும் உற்பத்திக் கருவிகள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த விசயம் மட்டுமன்று. உற்பத்தி சக்திகள் என்பவை உழைப்பையும் உழைக்கும் மக்களையும் சேர்த்தே குறிக்கின்றது.

உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி தீர்மானிக்கின்றனவா?

உற்பத்தி சக்திகள் எப்போதும் இயக்கத்தில் இருப்பதால் சுயமாக மாறிக்கொண்டே இருக்கும். அவை புறநிலையானவை. பொருளாயதத் தன்மைக் கொண்டவை. ஆனால் உற்பத்தி உறவு நிலையானது. சுயமான மாற்றத்திற்கு உட்படாதது. மாற்றத்திற்கு உட்படுத்தவேண்டும். உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியின் மூலமாக உற்பத்தி உறவு மாற்றத்திற்கு உள்ளாகும். உற்பத்திச் சக்திகளைப் போலவே உற்பத்தி உறவுகளும் புறநிலையானவை. பொருண்மைத் தன்மை வாய்ந்தவை. ஆனால் அருவமானவை.

இரண்டுமே பொருண்மைத் தன்மை வாய்ந்தவை தாம். பொருளாயதப் பண்புகளைக் கொண்டவைதாம். இரண்டுமே மனிதனின் விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டவை. உற்பத்தி உறவுகள், உற்பத்திச் சக்திகளை பெருமளவில் சார்ந்திருந்தாலும், சில நேரங்களில் உற்பத்தி உறவுகளும் உற்பத்தி சக்திகளின் மீது முதன்மையான தீர்மானகரமான பாத்திரத்தை வகிக்கின்றன.

உற்பத்தி சக்திகள் பற்றிய‌ கோட்பாடு என்பது தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் உற்பத்தி சக்திகளின் மீது தீர்மானிகரமான முக்கியத்துவத்தை அளிப்பதாகும். இக்கோட்பாட்டின் அடிப்படையில்தான் ரஷியாவிலும் சீனாவிலும் உற்பத்திச் சக்திகளை வளர்த்தெடுப்பதில் மும்முரம் காட்டுகின்றன.

பொருளாதார அடித்தளமும் மேல்கட்டுமானமும்

உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி உற்பத்தி உறவுகளைப் பாதிக்கின்றது. ஒரு குறிப்பிட்ட உற்பத்தி உறவை இன்னொரு உற்பத்தி உறவை பதிலீடு செய்கின்றது. இந்த மாற்றம் உற்பத்திச் சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையிலான முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. உற்பத்திச் சக்திகளும் உற்பத்தி உறவுகளும் முறையே சமூக பொருளாதாரத்தின் உள்ளடக்கமும் வடிவமும் ஆகும். இது சமூகத்தின் பொருளாதார அடித்தளமாகும். ஆனால் பொருளாதார அடித்தளம் மட்டுமே தனியாய் செயல்படவில்லை. அது சமூக மேற்கட்டுமானத்துடன் இணைந்து செயல்படுகின்றது. சில நேரங்களில் ஒன்றுபடுகின்றது. இன்னும் சில நேரங்களில் பிரிந்து காணப்படுகின்றது. மேற்கட்டுமானம் அடித்தளத்துடன் இணைந்தும் ஒன்றுபட்டும் பிரிந்து சென்றும் தமது உறவை மேற்கொண்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் அடித்தளத்தின் மீது மேற்கட்டுமானம் தனது செல்வாக்கை செலுத்துகின்றது. ஒருசில நேரங்களில் அடித்தளத்தையே மாற்றியமைக்கவும் செய்கின்றது.

உற்பத்திச் சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையிலான முரண்பாட்டை தீர்த்துவைக்கவும், முடிவுக்குக் கொண்டுவரவும் மேல்கட்டுமானத்தின் பாத்திரம் முக்கியமானது. மேல்கட்டுமானத்தை தவிர்த்துவிட்டு உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியையும் உற்பத்தி உறவின் மாற்றத்தையும் காணமுடியாது. உற்பத்தி உறவுகளை மாற்றியமைப்பதில் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி அடிப்படைக் காரணியாக இருந்தாலும், அரசியல், கருத்தியல், தத்துவார்த்தங்கள் போன்ற மேற்கட்டுமானத்தின் மூலமாக மட்டுமே உற்பத்தி உறவுகளை மாற்றியமைக்கப் படுகின்றன.

உற்பத்திச் சக்திகளை வளர்த்தெடுப்பது கம்யூனிஸ்டுகளின் கடமையா?

முதலாளித்துவம் வளராத நாடுகளில் சோசலிசம் சாத்தியமில்லை என்றும் முதலாளித்துவத்தை உயர்ந்த நிலைக்கு வளர்க்க வேண்டும் என்றும் வாதங்கள் முன்வைக்கப் படுகின்றன. மேலும் உற்பத்தி சக்திகள் வளராத நாடுகளில் உற்பத்தி உறவுகளை மாற்றி யமைக்க முடியாது என்பதால் உற்பத்திச் சக்திகளை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற வாதத்தையும் சிலர் முன்வைக்கின்றனர். இரண்டும் அடிப்படையில் ஒன்றுதான்.

பொருளாதார அடித்தளம் மட்டுமே தீர்மானிக்கும் என்ற கோட்பாட்டை முன்வைப்பவர்கள்தாம் உற்பத்திசக்திகளின் வளர்ச்சிக் கோட்பாட்டை எடுத்துரைக்கின்றனர். இவர்கள் அடித்தளத்தின் மீது மேல்கட்டுமானத்தின் செல்வாக்கையும் அதன் தீர்மானகரமான பாத்திரத்தையும் மறுக்கும் அதே நேரத்தில் புரட்சிகர அரசியலுக்கு எதிராக நிற்கின்றனர்.‌

உற்பத்திசக்திகள் உற்பத்தி உறவுகள் என்பவை சமூக பொருளாதார அடித்தளத்தைக் குறிப்பதாகும். அதே நேரத்தில் இவை இரண்டும் சமூக மேற்கட்டுமானத்தோடு நெருங்கிய தொடர்பு டையதாகும். மேற்கட்டுமானமானது, உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியிலும், உற்பத்தி உறவுகளின் மாற்றத்திலும் பெரும்பங்கு வகிக்கின்றது.

உற்பத்தி சக்திகள் வளர்ச்சி பெறவில்லை. ஆகவே உற்பத்திசக்திகளை வளர்க்க வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கின்றனர். இந்தியாவின் பின் தங்கிய உற்பத்திமுறைதான் இதற்கு முக்கிய காரணம் என்பதை வலியுறுத்துகின்றனர். பின் தங்கிய உற்பத்தி முறைக்கும், உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி யின்மைக்குமான காரணிகளைக் கண்டறிவது இதன் தனித்தன்மைகளைப் புரிந்து கொள்ள மட்டுமே. அதற்காக உற்பத்திசக்திகளை வளர்த்தெடுக்க வேண்டும் என்று கோருவது தீர்வாகாது. உற்பத்திச் சக்திகளை வளர்த்தெடுப்பதன் மூலம் உற்பத்தி உறவை மாற்றியமைக்க முடியும் என்பதோ அல்லது அரசதிகாரத்தைப் பெறமுடியும் என்பதோ கற்பனையான ஒன்று.

உற்பத்தி சக்திகள் உயர்ந்த நிலைக்கு வளர்ச்சியடைந்த நாடுகளில் அரசியல் அதிகாரம் கைப்பற்ற முடியாமல் போனதற்கும், உற்பத்தி சக்திகள் உயர்ந்த நிலைக்கு வளர்ச்சியடையாத நாடுகளில் அரசியல் அதிகாரம் கைப்பற்றிய மாபெரும் அனுபவங்களை எடுத்துக் கொள்ளவேண்டும்.

உற்பத்தி சக்திகள் வளர்ச்சிப் பெற்றிருப்பினும் அரசியல் உணர்வு ஊட்டப்படவில்லை யென்றால் உற்பத்திசக்திகளின் வளர்ச்சியானது முதலாளித்துவத்திற்கு மட்டுமே சேவை செய்யும். உற்பத்தி சக்திகள் வளர்ச்சிப் பெறாவிட்டாலும், அரசியல் உணர்வூட்டி அணிதிரட்டல் மூலம் அரசியல் அதிகாரத்தைப் பெறமுடியும் என்பது வரலாறு.

சோசலிச சமூகத்தில் உற்பத்திச் சக்திகளை வளர்த்தெடுத்தல் பற்றி:

சோசலிச சமூகத்தில் உற்பத்திச் சக்திகளை வளர்த்தெடுத்தல் என்பது ஒரு முக்கிய விவாதப் பொருளாக இன்னமும் இருந்து வருகின்றது. சீன அனுபவத்தைப் பொருத்தவரை, 1949 களில் மாவோ புதிய சனநாயகப் புரட்சியின் முடிவில் சோசலிசக் கட்டுமானத்திற்கு அறைகூவல் விட்டார். ஆனால் லியூசோசி உற்பத்திச் சக்திகளை வளர்த்தெடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார். அதாவது முதலாளித்துவம் இருக்கவேண்டும். எந்த தங்கு தடையுமின்றி முதலாளித்துவத்தை வளர்த்தெடுக்க வேண்டும் என்று கூறினார். விவசாயத்தை நவீனப் படுத்துவதற்கு முன்பு விவசாயக் கூட்டுறவு என்பது பிற்போக்குதனமானது என்றும் இது கற்பனாவாத விவசாய சோசலிசம் என்றும் குற்றம் சாட்டினார். இவ்வாறாக இவர் எதிர்புரட்சிகர கருத்தை முன்வைத்தார். மேலும் புதிய சீனாவில் உற்பத்திச் சக்திகளை வளர்த்தெடுப்பதற்கு முதலாளித்துவத்தைச் சார்ந்திருக்கவேண்டும் என்ற கருத்தை முதலாளித்துவ பற்றாளர்கள் முன்வைத்தனர்.

ஒரு சனநாயகப் புரட்சி சோசலிசத்திற்கு மாறிச் செல்வது என்பது பாட்டாளிவர்க்கத்தின் தயார்நிலையையும் அது எந்தளவுக்கு விவசாய வர்க்கதோடு இணைந்து நிற்கின்றதோ அதை பொருத்தும் இருக்கின்றது என்று லெனின் கூறினார். சீனாவைப் பொருத்தவரை பாட்டாளிவர்க்கம் அரசதிகாரத்தைக் கைப்பற்றியது; அதிகார வர்க்க முதலாளிகளின் உடைமையைப் பறித்தது; எல்லாவற்றையும் விட பரந்த ஏழை, விவசாய வர்க்கத்தோடு இணைந்து நின்றது; நிலச் சீர்த்திருத்ததிற்கு பின்னர் ஏழை, கீழ் மத்தியதர விவசாய வர்க்கத்தினருடன் கூட்டுறவுகொண்டு அணிதிரண்டது. கிராமபுறத்தில் ஒரு புதிய வர்க்க‌ அணிசேர்க்கை உருவானது.

நவீன மயமாக்கலும் நடந்தேறியது; மாவோவின் வழிகாட்டுதலின்கீழ் தொழிலாளர்களும் விவசாய மக்களும் சோசலிசப் பாதைக்கு அணிதிரண்டனர். மில்லியன் கணக்கில் மக்கள் புரட்சியிலும், உற்பத்தியிலும் முழுவீச்சில் ஈடுபட்டனர். இவ்வழியில் உற்பத்திச் சக்திகளை வளர்த்தெடுத்தனர். அதாவது புரட்சிக்கு பிந்தைய சமூகத்திலும்கூட உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியை மட்டும் வைக்கவில்லை. புரட்சியையும் உற்பத்தியையும் முன்வைத்ததன் மூலம் உற்பத்திச் சக்திகளை வளர்த்து உற்பத்தி உறவுகளையும் மாற்றி யமைத்தனர்.

1956 க்கு பின்னர் மாவோவின் தலைமையிலான சீன அரசு, உற்பத்தி சாதனங்களை முழுவதையும் சோசலிச முறைக்கு மாற்றியது. உற்பத்திச் சக்திகளை பெருமளவில் வளர்த்தெடுத்தது. அப்போதும் கூட உற்பத்திச் சக்திக்கும், உறவுகளுக்கும் உள்ள முரண்பாடும், பொருளாதார அடித்தளத்திற்கும் மேற்கட்டுமானத்திற்கும் உள்ள முரண்பாடும் இருக்கவே செய்ததை காணமுடிந்தது. இதனால்தான் " சோசலிசக் கட்டத்திலும் வர்க்கங்களும், வர்க்கப் போராட்டமும் முதலாளித்துவ பாதைக்கும் சோசலிசப் பாதைக்கும் ஆன முரண்பாடும் இருக்கின்றன' என்று மாவோ கூறினார். இதை மாவோ தொடர் புரட்சி என்று அழைத்தார். இதன் பொருள் பாட்டாளிவர்க்க அரசதிகாரத்தின் கீழும் புரட்சிகர மக்கள் வர்க்கப் போராட்டத்தையும் முதலாளித்துவ சக்திகளுக்கு எதிரான புரட்சியையும் இடைவிடாமல் தொடர வேண்டும் என்பதாகும்.

இதற்கு எதிராக வர்க்கப்போராட்டம் முடிந்துவிட்டது என்றும் சீன மக்களின் முக்கிய பணி உற்பத்திசக்திகளை வளர்த்தெடுப்பதே என்று லியூ சோசி கூறினார். அதாவது உற்பத்தி உறவுகள் உற்பத்தி சக்திகளோடு எத்தகைய முரண்பாட்டையும் கொண்டிருக்கவில்லை, பொருளாதார தளத்தில் சோசலிச புரட்சி முடிவடைந்துவிட்டது, அரசியல் கருத்தியல் தளத்தில் சோசலிசப் புரட்சி தேவையற்றது, வர்க்கங்கள் களையப்பட்டுவிட்டன, வர்க்கப் போராட்டம் முடிந்துவிட்டது, ஆகவே உழைக்கின்ற வர்க்கங்களும், இதர மக்களும் உற்பத்தியில் மட்டும் கவனம் செலுத்தவேண்டும் என்று பொருள்பட கூறினார்.

அரசியல்தான் அனைத்திற்கும் ஆன்மா; அரசியலை ஆணையில் வைப்போம்; அரசியல் பணிதான் எல்லா பொருளாதார நடவடிக்கைகளுக்கும் வாழ்வளிக்கும் இரத்தம் போன்றதாகும் என்று மாவோ கூறியுள்ளதைக் கருத்தூன்றிப் பார்க்கவேண்டும். இன்னும் ஒருபடி மேலே சென்று லின் கூறியுள்ளார். அதாவது “புரட்சியை பற்றிக் கொள்ளுங்கள்; உற்பத்தியை முன்னேற்றுங்கள் என்று கூறினார். இதுமட்டுமே புரட்சிக்கும் உற்பத்திக்கும் உள்ள உறவையும் உணர்வுக்கும் பொருளுக்கு உள்ள உறவையும் மேல்கட்டுமானத்திற்கும் பொருளாதார அடித்தளத்திற்கும் உள்ள உறவையும் விளக்குகின்றது.”

முடிவாக உற்பத்தி சக்திகள் உற்பத்தி உறவுகளின் மீது தீர்மானகரமான பங்கை வகிப்பதுபோல் சில தருணங்களில் உற்பத்தி உறவுகளும் உற்பத்திச் சக்திகளின் மீது முதன்மையான தீர்மானகரமான பாத்திரத்தை வகிக்கின்றன. அதே போல பொருளாதார அடித்தளம் சமூக மேற்கட்டுமானத்தின் மீது தீர்மானகரமான பாத்திரத்தை வகிப்பதுபோல சில தருணங்களில் மேல்கட்டுமானமும் பொருளாதார அடித்தளத்தின்மீது முதன்மையான தீர்மானகரமான பங்கை ஆற்றுகின்றன. உற்பத்தி உறவுகளின் முதன்மையான மற்றும் தீர்மானகரமான பாத்திரத்தை மறுப்பது வர்க்கப் போராட்டத்தை மறுப்பதாகும். மேற்கட்டுமானத்தின் முதன்மையான மற்றும் தீர்மானகரமான பாத்திரத்தை மறுப்பது உணர்வுப்பூர்வமான புரட்சியை மறுப்பதாகும்.

Pin It