தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முதல் தலைவர், 'சர்சங்சாலக்' என்று ஏற்றிப் போற்றப்படும் அந்த 'கேஷவ பல்ராம் ஹெட்கேவர்' யார் என்ற விபரங்களை ஆராய்வோம்.

1889-ம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி, நாக்பூரில் பார்ப்பன அர்ச்சகர் ஒருவருக்குப் பிறந்த மூன்றாவது மகன்தான் ஹெட்கேவர்! தலைமுறை தலைமுறையாக அர்ச்சகர் தொழிலில் ஈடுபட்டு வந்தது இந்தக் குடும்பம் என்பதிலிருந்தே பார்ப்பன வர்ணாஸ்ரம வெறித் தனத்தின் சூழலில் அவர் வளர்க்கப்பட்டவர் என்ற உண்மை தெளிவாகவே விளங்கும். அதற்கு பல தலைமுறைகளுக்கும் முன்பே ஆந்திர மாநிலத்தில் 'குந்த்குர்த்தி' என்ற கிராமத்தில் வாழ்ந்து வந்த அய்தராபாத் நிசாம் மன்னர்களின் ஆட்சியை எதிர்த்துப் போராட முடியாமல், வெறுப்படைந்து நாக்பூருக்கு வந்த குடும்பமாகும் அது!

எனவே, பார்ப்பன வர்ணாஸ்ரம வெறி, முஸ்லீம்களின் எதிர்ப்பு என்ற உணர்வுள்ள குடும்ப சூழ்நிலையில் வளர்ந்தவர் ஹெட்கேவர்.

1902-ம் ஆண்டில், ஹெட்கேவரின் பெற்றோர்கள் இறந்த பிறகு, அவரது சகோதரர் மகாதேவ சாஸ்திரி செய்து வந்த தொழிலும் பார்ப்பன புரோகிதர் தொழில்தான்!

'மூஞ்சி' ஆர்.எஸ்.எஸ். தோற்றுவித்த அய்வர் குழுவில் ஒருவர். இந்து ராஷ்டிரத்தை வன்முறையின் மூலம் ஏற்படுத்த வேண்டும் என்பதில் உறுதியான துடிப்பு கொண்டிருந்தவர் இந்த மூஞ்சி!

ஹெட்கேவருக்கு நல்ல உடல் வலிவு உண்டு; குத்துச் சண்டை, நீச்சல் பயிற்சிகளில் மிகுந்த ஆர்வம் இருந்தது. தெருச் சண்டைகளில் அவர் வீரராகத் திகழ்ந்தார். எனவே, அக்கால அரசியலுக்கு இவர் சரியானவர் என்ற முடிவுக்கு வந்து, அவரை உற்சாகப் படுத்தினார் 'மூஞ்சி.' ஆர்.எஸ்.எஸ். ஒரு வன்முறைக் கும்பலாகவும், பார்ப்பன வெறி அமைப்பாகவும், முஸ்லீம்கள் எதிர்ப்புசக்தியாகவும் செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டுகள் கல்லில் செதுக்கப்பட்ட உண்மைகளே என்பதற்கு ஹெட்கேவர் வளர்ந்த, உருவான சூழ்நிலைகளே சரியான சான்றுகளாகும்.

"இந்து ராஷ்டிரம் என்ற இந்தக் கொள்கையைச் சொன்ன அந்த முட்டாள் யார்?"

"அதைச் சொன்ன முட்டாள் இந்த கேஷவ்பல்ராம் ஹெட்கேவர்தான்."

ஆர்.எஸ்.எஸ். கூட்டத்திலே, இளைஞன் ஒருவன் கேட்ட கேள்விக்கு ஹெட்கேவர் மேற்கண்ட பதிலை அளித்தார்!

அவரைப் பொறுத்தவரை தன்னுடைய 'ஆளுமை சக்தியால்' தொண்டர்களை கட்டாயப்படுத்தி தனது அமைப்புக்கு இழுத்தவரே தவிர நியாயப்பூர்வமான அறிவு வாதங்களை எடுத்து வைத்து விவாதித்து அதன் மூலம் தனது அமைப்புக்கு பலம் சேர்த்தவர் அல்ல! இந்து ராஷ்டிரம் என்பது என்ன என்ற கேள்விக்கு, விவாதபூர்வமான விளக்கங்கள் எதையும் தராமல், தன்னையே முன்னிலைப்படுத்தி, நிலைமையை சமாளித்தார் ஹெட்கேவர்!

(இந்த உரையாடலை, ஹெட்கேவரின் வாரிசு கோல்வாக்கர் எழுதிய 'ஸ்ரீ குருஜி சம்ஹாரதர்சன்' என்ற இந்தி நூலில் 5-வது அத்தியாயத்தில் 22-23 பக்கங்களில் குறிப்பிடுகிறார்.)

தொடர்ந்து கோல்வாக்கர் அதே நூலில் மேலும் எழுதுகிறார்...

"நான் தான் அந்த முட்டாள் என்ற ஒரு வார்த்தைக்கு மேல், அவர் பேசவில்லை. எந்த வாதத்தையும் வைக்கவில்லை. கேட்டவரை சமாதானப் படுத்திவிடும் நியாயங்களையும் சொல்லவில்லை. அதிலே மிகவும் ஆச்சரியம் என்னவென்றால், அவர் அந்த ஒரு வார்த்தையை சொன்னவுடனேயே, அங்கு கூடியிருந்த எல்லா உறுப்பினர்களும் சமாதானமடைந்து, தாங்கள் 'சுயம் சேவக்காக' உறுதி எடுக்க முன் வந்தனர்." இப்படி குருபக்தியோடு, குருவின் கருத்துக்களில் சீடர்கள் கேள்வி கேட்பதே குற்றம் என்ற முறையோடுதான், ஹெட்கேவர் இந்த அமைப்பை நடத்திச் சென்றிருக்கிறார்! சிந்தனைகளுக்கு விளக்கங்களுக்கு அங்கே இடமில்லை!

எனவேதான் 'நீங்கள் டாக்டர்ஜீயைப் பற்றி (ஹெட்கேவர்) தெரிந்து கொள்ள வேண்டுமா? ஆர்.எஸ்.எஸ். பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். ஆர்.எஸ்.எஸ். பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா? டாக்டர்ஜீ பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...என்று ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

"மரியாதைக்குரிய டாக்டர்ஜீ அவர்களும், ஆர்.எஸ்.எஸ்சும் ஒன்றுக்கொன்று இணைந்தது. டாக்டர்ஜீ வாழ்க்கையைப் படித்தால் அதிலிருந்து கிடைக்கும் எழுச்சி உணர்வுகளால் ஆர்.எஸ்.எஸ்.சின் முறையான வளர்ச்சியை தெரிந்து கொள்ள முடியும்." என்கிறார் மறைந்த ஆர்.எஸ்.எஸ். முன்னால் தலைவர் தேவரஸ் (ஆதாரம்: சி.பி. பிஷிகார் எழுதிய நூல் பக்கம் - 5) எனவே ஹெட்கேவர் வாழ்க்கை வரலாற்று விவகாரங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தால், அது ஆர்.எஸ்.எஸ். தன்மையை பிரதிபலிக்கும் என்பதால், நாமும் அந்த ஆராய்ச்சியில் சற்று ஆழமாக இறங்குவோம்!

மெட்ரிகுலேஷன் தேர்வை நாக்பூரில் முடித்துவிட்டு மருத்துவப் படிப்பு படிக்க (ஹெட்கேவர்) கல்கத்தா போகிறார். இந்து மத வெறியரான அதே 'மூஞ்சி' என்ற பார்ப்பனர்தான் அவருக்கு இப்போது உதவி புரிகிறார். வன்முறை இயக்கங்களில் மிகவும் ஆர்வம் கொண்ட ஹெட்கேவர், கல்கத்தாவில் போய் படித்தால் இத்தகைய அமைப்புகளோடு தொடர்பு கொள்ள முடியும் என்று விரும்பினார். மராட்டிய மன்னர் சிவாஜியும், திலகரும் இவரின் ஞானத் தந்தைகள்!

1910-ம் ஆண்டிலிருந்து 1915-ம் ஆண்டு வரை கல்கத்தாவில் மருத்துவக் கல்வி பயின்றபோது, இவர் தங்கிய விடுதிதான் மாணவர்களின் அரசியல் அரங்கங்களாக செயல்பட்டது. பல திவீரவாத இயக்கங்கள், புரட்சி இயக்கங்களைச் சார்ந்தவர்களும் அங்கே வருவதுண்டு. இந்த கல்கத்தா வாழ்க்கைப் பற்றி, ஹெட்கேவரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கிடும், ஆர்.எஸ்.எஸ்சின் அதிகாரபூர்வமான, சி.பி. பிஷிகார் என்பவரால் எழுதப்பட்ட நூல் பக்கம்-13 கீழ்க்கண்டவாறு கூறுகிறது.


இந்த கல்கத்தா வாழ்க்கைப் பற்றி, ஹெட்கேவரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கிடும், ஆர்.எஸ்.எஸ்சின் அதிகாரபூர்வமான, சி.பி. பிஷிகார் என்பவரால் எழுதப்பட்ட நூல் பக்கம்-13 கீழ்க்கண்டவாறு கூறுகிறது.

"கல்கத்தா சென்றவுடன் ஹெட்கேவர் 'அனுசிஹிலன் சமிதி' என்ற அமைப்பின் நெருக்கமான உறுப்பினராக சேர்த்துக் கொள்ளப்பட்டார். ஆபத்துக்கள் நிறைந்த சில முக்கியமான வேலைகள் அவருக்குத் தரப்பட்டன. புரட்சியாளர்களுக்கு பயங்கரமான ஆயுதங்களை ரகசியமாக கொண்டு சென்றார்." என்று கல்கத்தா போன உடனேயே இவர் ஒரு புரட்சிக்காரராக மாறிவிட்டது போல, ஒரு தோற்றத்தைத் தந்து எழுதியிருக்கிறார்கள்.

ஆனால், உண்மை என்னவென்றால் வேறாக இருக்கிறது!

ஜே.ஏ. குர்ரான் (J.A.Cruuan) எழுதிய "Militant Hinduism in Indian Politics" நூலில் பக்கம்-13-ல் உண்மையை உடைத்துக் காட்டுகிறார்!

"கல்கத்தாவுக்கு ஹெட்கேவர் போனவுடன், புரட்சி இயக்கங்கள் அவருக்கு முக்கியத்துவம் எதுவும் தரவில்லை. கல்கத்தாவில் வாழ்ந்த காலத்தில், அவர் சிறைக்குச் சென்றதாக எந்த ஆதாரமும் கிடையாது. ஆனால், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள், பிரிட்டிஷார் அவரை போலீஸ் காவலில் வைத்திருந்ததாக சொல்கிறார்கள். அதற்கு எந்த ஆதாரமும் கிடையாது." என்று ஹெட்கேவரின் 'புரட்சி' வாழ்க்கையின் புரட்டுகளை அம்பலப்படுத்திக் காட்டுகிறார்.

ஆபத்து தரக்கூடிய பல இரகசிய வேலைகள் இவரிடம் ஒப்படைக்கப்பட்டது என்று கூறுகிறார்களே தவிர, எந்த வேலையை செய்தார்? எங்கே தூது போனார்? எந்த ஆயுதத்தை எடுத்துக் கொண்டு போனார்? என்பதற்கான விளக்கங்களை எதையுமே ஆர்.எஸ்.எஸ்.காரர்களால் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை!

கல்கத்தாவில் சிறைச்சாலையிலே அடைக்கப்பட்டார் என்று அப்பட்டமான பொய்ப் பிரச்சாரம் செய்வதற்கும் அவர்கள் கூச்சப்படவில்லை. 'ஹெட்கேவர்' வாழ்க்கை வரலாறும் - ஆர்.எஸ்.எஸ். வரலாறும் ஒன்றே என்கிறார்கள்; இந்த 'சத்தியகீர்த்திகள்.' ஆனால், இந்த 'உத்தம' 'புத்திரர்'களின் கதைகள் பொய்மைகளின் மூட்டைகளாகவே இருக்கின்றன.

கல்கத்தாவில் மருத்துவ டிப்ளமோ படிப்பை முடித்துவிட்டு ஹெட்கேவர் நாக்பூர் திரும்புகிறார்! அப்போது முதலாம் உலக மகாயுத்தம் துவங்கிவிட்டது. யுத்தத்தில் இங்கிலாந்தும் சம்பந்தப்படுகிறது! அந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு, உள்நாட்டிலே ஆயுதம் தாங்கிய புரட்சியை உருவாக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.

முதலாம் உலக மகா யுத்தம் துவங்கியபோது, ஜெர்மன் மொழியைப் படிக்க ஆரம்பித்தவர்கள் இந்த நாட்டு பார்ப்பனர்கள்தான்! காரணம், ஜெர்மன்காரர்கள் கையில் இந்திய ஆட்சி வந்துவிடும் என்று நம்பி, அந்த ஆட்சியிலே தாங்கள் செல்வாக்குப் பெற்று விடலாம் என்று அவர்கள் எதிர்பார்த்துக் கிடந்தனர்!

ஜெர்மன் - பாசிச இயக்கத் தலைவர் ஹிட்லர் மீது ஆர்.எஸ்.எஸ் காரர்களுக்கு எப்போதுமே மரியாதை உண்டு. ஹிட்லரின் ஸ்வஸ்திக் கொடி அமைப்பையே, தங்கள் கொடியாக வைத்துக் கொண்டிருந்ததுதான் இந்த ஆர்.எஸ்.எஸ். கூட்டம்!

"இரண்டாவது உலக யுத்தத்துக்கு முன்பு ஆர்.எஸ்.எஸ். காரர்களுக்கு ஹிட்லர்தான் குரு. காந்தியாருக்கு எதிராக வெறுப்புணர்ச்சியை இவர்கள் பரப்பி வந்தார்கள். சுதந்திரப் போராட்ட உணர்வுகள், மதச்சார்பின்மை ஆகியவற்றை எதிர்த்து பிரச்சாரம் செய்து வந்தனர். ஜனநாயகத்தை அவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். அது மேற்கத்திய நாடுகளின் இறக்குமதி என்றார்கள். அதே அளவுக்கு சோஷலிசத்தின் மீதும் அவர்களுக்கு வெறுப்பு உண்டு. காரணம், சோஷலிசம் இந்து கலாச்சாரத்துக்கு எதிரானது என்று அவர்கள் உணர்ந்தார்கள். காந்தியாரை ஒரு தலைவராகவே அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

1965-ம் ஆண்டில்தான், மிகவும் சிரமத்தோடு வேறு வழியின்றி தங்களின் அன்றாடப் பிரார்த்தனையில் காந்தியார் பெயரையும் சேர்த்துக் கொண்டனர்."

நாம் மேலே எடுத்துக் காட்டியிருப்பது - மறைந்த சோஷலிஸ்ட் தலைவர் மதுலிமாயி அவர்கள் 'சண்டே' பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியைத்தான். (10.6.1979 சண்டே இதழ்) இந்தப் பின்னணியில் முதலாவது உலகப்போரை பயன்படுத்தி, உள்நாட்டில் ஆயுதப் புரட்சி நடத்திட, இவர் போட்ட திட்டத்தின் நோக்கத்தை உணர்ந்து கொள்ள முடியும்.

ஹெட்கேவர் தனது திட்டம் பற்றி, இவரின் ஞானகுரு திலகரிடம் எடுத்துச் சொன்னபோது, அது நடைமுறைக்கு ஒவ்வாதது என்று புறக்கணித்துத் தள்ளிவிட்டார்; இதற்கு எந்த முக்கியத்துவமும் திலகர் கொடுக்கவில்லை. திலகர் ஆதரவு இல்லை என்றவுடன், ஹெட்கேவரின் வீரமும் குறைந்தது. (இந்தக் கருத்துக்களை 'பிஷிகார்' தமது 'சங்நிர்மதா' நூல் பக்கம் 13-ல் விளக்குகிறார்.)

"நாக்பூருக்கு திரும்பிய ஹெட்கேவர், இந்து மகாசபையில் தான் சேர்ந்துவிட்டதாகவும், அந்த அமைப்புக்குத் தேவையான நூல்கள், வெளியீடுகளைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், அவரே தனது நண்பர்களிடம் கூறுகிறார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தோற்றத்துக்கான எண்ண ஓட்டங்கள் இந்தக் காலத்தில்தான் அவருக்கு உருவானது."

"அந்த நேரத்தில், காங்கிரஸ் கட்சியிலும் இந்து மகா சபையிலும் ஒரே நேரத்தில், வேலை செய்கிறார்.! ராஷ்டிரிய உத்சவ மண்டல் என்ற அமைப்பிலும் தீவிரமாகப் பங்கெடுத்தார். 'அக்ஹதா' என்ற மாணவர் அமைப்பிலும், பொதுக் கூட்டங்கள் - மாநாடுகளிலும் பங்கெடுத்துக் கொண்டார்." என்ற தகவல்களை 'பிஷிகார்' தமது நூலில் குறிப்பிடுகிறார்.

இவர் அப்போது தீவிரமாகப் பங்கெடுத்த 'ராஷ்டிரிய உத்சவ மண்டல்' என்ற அமைப்பு ஒரு வன்முறை அமைப்பாகும். இந்த வகுப்பு வெறிக் கும்பல் மகாராஷ்டிர மாநிலத்தில் பிவாண்டி என்ற இடத்தில் மிகப்பெரிய வகுப்புக் கலவரத்தைத் தூண்டிவிட்டு நடத்தியதற்காக, மேடன் விசாரணைக் கமிஷனால் குற்றம் சாட்டப்பட்ட ஒரு கும்பலாகும்!

ஒரே நேரத்தில் இந்து மகாசபையிலும் காங்கிரஸ் கட்சியிலும் சேர்ந்து இரட்டை உறப்பினராக பணியாற்றும் முறை அப்போது இருந்திருக்கிறது! பின்னர் அது ஒரு பிரச்சனையாக வெடித்துக் கிளம்பியபோதுதான் 1934-ம் ஆண்டு அதில் இந்திய காங்கிரஸ் 'இரட்டை உறுப்பினர் முறையை' தடை செய்து தீர்மானம் நிறைவேற்றியது.

மூத்த தலைவர்கள் பலருடன் ஹெட்கேவர் தொடர்பு கொண்டிருந்தாலும் ஒருவர்கூட இவரின் ஆயுதம் தாங்கியப் போராட்ட திட்டத்திற்கு ஆதரவு தரத் தயாராக இல்லை. என்று எழுதுகிறார் 'பிஷிகார்' தனது நூலில் (பக்-27)

இந்து மத வெறியர்களில் ஒருவராக இருந்த டாக்டர் 'மூஞ்சி'யோடுதான் ஹெட்கேவர் மிகவும் நெருக்கமாக இருந்தார். தனது திட்டங்களுக்கு ஆதரவில்லாத நிலையில் 1920-ம் ஆண்டு நாக்பூர் காங்கிரஸ் மாநாட்டுக்குச் செல்கிறார். காந்தியாரின் ஒத்துழையாமை இயக்கத்தில் தனக்கு நம்பிக்கையில்லை என்று அவர் அறிவித்துக் கொண்டாலும் 1921-ம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்துக் கொள்கிறார்.

இதற்கான காரணம் என்ன என்பதை 'பிஷிகார்' தனது நூலில் விளக்குகிறார்.

"பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து ஆயிரக்கணக்கானவர்கள் சிறைச்சாலைக்குப் போகும் நேரத்தில் நீ மட்டும் மறைந்துக் கொண்டிருக்கிறாயே...இது வெட்கக்கேடு அல்லவா? என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாதே என்ற காரணத்தால்தான் காந்தியாரின் இயக்கத்தில் தீவிரமாக பங்கெடுத்துக் கொண்டார்." என்ற 'பிஷிகார்' தமது நூலில் பக்கம் 30-ல் குறிப்பிடுகிறார்.

ஹெட்கேவர் மிகப்பெரிய தேசபக்தர் என்றும், காந்தியாரோடு சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்தவர் என்றும் ஆர்.எஸ்.எஸ். வெளியீடுகள் அவரது பெருமையை பறை சாற்றுகின்றன. அதையே காரணம் காட்டி, காந்தியார் கொலைக்கும் தங்கள் அமைப்புக்கும் சம்பந்தமே இல்லை என்றும் வாதாடுகின்றனர்.

இந்த வாதத்திலே நேர்மை இல்லை என்பதை எடுத்துக் காட்டுவதற்காகத்தான் காந்தியார் இயக்கத்தின் எத்தகைய சூழ்நிலையில் அவர் பங்கேற்றார் என்பதை நாம் விளக்கியிருக்கிறோம்!

இதற்கு ஆதாரமாக இன்னொரு வாக்குமூலத்தையும் இங்கே தருகிறோம்.

மராட்டிய மாநிலத்தின் முதல் ஆர்.எஸ்.எஸ். தலைவராக இருந்தவர் 'ஜி.எம். ஹட்டர்.' அவர் 'ஆர்.எஸ்.எஸ்.சும் நேதாஜியும்' என்ற தலைப்பில் 7.10.79 'இல்லஸ்டிரேட்டட் வீக்லி' இதழில் எழுதிய கட்டுரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்...

"ஹெட்கேவர் காந்தியார் இயக்கத்தில் இருந்தார் என்பதும், சிறைக்குச் சென்றார் என்பதும் உண்மைதான். ஆனால், அதை வைத்துக் கொண்டு மக்கள் கிளர்ச்சியை விரும்பினார் என்று சொல்லிவிட முடியாது. காந்தியாரின் திட்டத்தை ஆதரித்தார் என்றும் சொல்லிவிட முடியாது. மற்ற தேச பக்தர்களைப் போலவே தனக்கும் மக்கள் இயக்கத்தில் நம்பிக்கை உண்டு என்று காட்டிக் கொள்வதற்கும், தானும் சிறைக்குப் போக அஞ்சமாட்டேன் என்பதை விளம்பரப் படுத்திக் கொள்வதற்குமே அப்போது அவர் காந்தியார் இயக்கத்தில் பங்கேற்றார்." என்று உறுதியாகக் குறிப்பிடுகிறார். கூறுபவர் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களிலேயே முக்கிய புள்ளி.

எனவே தேச விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற 'தேசிய திலகங்கள்' என்ற போர்வையில் தேசபக்தி வேடம் போட்டுக் கொண்டு அரங்கேறத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் காரர்களின் ஏமாற்று வேலைகள் எடுபடமுடியாது. உண்மைகள் மக்கள் மன்றத்தில் தோலுரித்துக் காட்டப்படும். தானும் தேசபக்தர்தான் என்று நாட்டு மக்களிடம் காட்டிக் கொள்வதற்காக, காந்தியார் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டு சிறை சென்ற ஹெட்கேவர் 1922-ம் ஆண்டு சிறையிலிருந்து வெளிவருகிறார். வெளியே வந்தவுடன் காந்தியாரைப் பற்றி கடுமையான தாக்குதல் பிரச்சாரத்தில் இறங்குகிறார். முஸ்லீம்களுக்கு ஆதரவாகப் போகிறார் காந்தியார் என்ற வகுப்புவாதப் பிரச்சாரம் முடுக்கி விடப்படுகிறது.

அதைத் தொடர்ந்து 1923-ம் ஆண்டு நாக்பூரில், ஒரு பதட்டத்தை இவர்கள் உருவாக்குகிறார்கள். குமரி மாவட்டம் மண்டைக்காட்டில், சர்ச் முன் ஒலிபெருக்கி வைக்கப்பட்டதை எதிர்த்து வன்முறை கலவரத்தை உருவாக்கிய கூட்டம் ஆர்.எஸ்.எஸ். இதே ஒலிபெருக்கிப் பிரச்சனையை வைத்துத்தான் அப்போதும் ஒரு பெருங் கலவரத்தை உருவாக்கத் திட்டமிட்டார்கள். நாக்பூர் மட்டுமல்ல; பல்வேறு இடங்களில் நடந்த வகுப்புவெறி கலவரங்களில், இந்த 'ஒலி பெருக்கி' சம்பந்தப்பட்டிருப்பதைப் பார்க்கமுடியும்! அங்கெல்லாம் ஆர்.எஸ்.எஸ் தனது கைவரிசையைக் காட்டியிருக்கிறது என்பதுதான் அதன் அர்த்தம். நாக்பூரிலே மசூதியின் முன் ஊர்வலம் நடத்திடவேண்டும்; முஸ்லிம்கள் எதிர்பார்ப்பார்கள்...அதை பயன்படுத்திக் கொண்டு, முஸ்லீம்களுக்கு எதிராக ஒரு கலவரத்தையே நடத்திக் காட்டவேண்டும் என்று திட்டமிட்டார் ஹெட்கேவர்!

இந்தப் பிரச்சனையில் சமாதான உடன்படிக்கை எதையும் ஏற்கக்கூடாது; இந்துக்களின் உரிமையை நிலை நாட்டிக் காட்டவேண்டும் என்று சவால் விட்டு, வேலைகளை ஆரம்பித்தார். டாக்டர் மூஞ்சி, ஹெட்கேவர் இருவருமே முன்னின்று இதை நடத்தினார்கள். ஒலிபெருக்கிகள் முழங்க முஸ்லீம்களை இழிவு படுத்திக் கோஷம் போட்டுக் கொண்டு, அவர்களை வன்முறைக்கு அழைக்கும் ஊர்வலம் மசூதி வழியாக சென்றது; ஆனால், இந்த மதவெறிக் கும்பலின் ஆசையில் மண் விழுந்துவிட்டது.

முஸ்லீம்கள் எவரும் ஆத்திரப்படாமல் அமைதி காத்தனர். ஊர்வலம் அமைதியாக சென்றுவிட்டது. ஆனால், இதை மிகப் பெரிய முதல் வெற்றி என்று அவர்கள் பறை சாற்றிக் கொள்ள ஆரம்பித்தனர்! இந்த சம்பவம் நடந்தது 1923-ம் ஆண்டு!

அதே ஆண்டு, உடல் பயிற்சி அமைப்பு ஒன்றை துவக்குகிறார் ஹெட்கேவர்! அதற்குப் பெயர் 'மஹாராஷ்டிரா வியாயம் ஷாலா'. அத்துடன் தொண்டர் படை ஒன்றையும் ஏற்படுத்துகிறார். அதற்குப் பெயர் 'ராஷ்டிரியம் சேவக் மண்டல்'. இவைகள் எல்லாம் 1925-ம் ஆண்டு துவக்கப்பட்டது. முஸ்லீம்களை கலவரத்துக்கு அழைக்கிறார்; உடற்பயிற்சி அமைப்பை உருவாக்குகிறார்; தொண்டர் படை அமைக்கிறார். அதைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ்சை உருவாக்குகிறார் என்பதிலிருந்தே, வன்முறைக் கலவரத்தை திட்டமிட்டு நடத்த வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் இந்த அமைப்பு உருவெடுத்தது என்பது விளங்குகிறது அல்லவா?

ஹெட்கேவரைப் பொறுத்தவரை அவர் மூளை பலம் என்பதைவிட, உடல் பலத்திலேதான் நம்பிக்கைக் கொண்டிருந்தார். குத்து விளையாட்டுகளும் - குஸ்தியும் தெரிந்த, இந்த உடல்கட்டு மிக்க மனிதர். ஒரு சிந்தனையாளராக விளங்கினார் என்பதற்கு ஆதாரங்கள் கிடையாது; ஆனால், ஆர்.எஸ்.எஸ் வெளியீடுகள் எல்லாம், இல்லாத பெருமைகளை இந்த மனிதரின் தலை மீது தூக்கி வைத்து, இவரை ஒரு மிகப் பெரிய சிந்தனையாளராக சித்தரித்துக் காட்டுகின்றன. ஆனால், அவைகள் உண்மைக் கலப்பில்லாத பொய்கள்; புனையப்பட்ட புனைந்துரைகள் என்பதற்கு அடுக்கடுக்கான ஆதாரங்கள் உண்டு.

'ஹெட்கேவர், அந்தக் காலத்தில் குறிப்பிடத்தகுந்த புரட்சியாளர்களில் ஒருவர், கல்கத்தாவில் மாணவராக இருந்தபோதே புரட்சிகர அமைப்புகளில் பங்கு கொண்டவர். அதற்குப் பிறகு காங்கிரஸ் கட்சியில் தீவிரமான உறுப்பினர்.' என்று ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் கூறுகிறார்கள். (நாக்பூர் நீதிமன்றத்தில் தேவரஸ், ராஜேந்திரசிங் ஆகியோர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் 8-வது பாராவைத்தான் மேலே எடுத்துக் காட்டியிருக்கிறோம்.)

கல்கத்தாவில் எந்த புரட்சி இயக்கத்தில், என்ன பங்கேற்றார் என்பதற்கு எந்த ஆதாரமும் சொல்லப்படவில்லை. இவர் காங்கிரஸ் கட்சியிலேயே தீவிரமாகப் பங்கு கொண்டவர் என்ற வாதத்திலும் நேர்மை இல்லை; நாணயம் இல்லை; என்பதை விளக்கியிருக்கிறோம்.!

தன்னுடைய தலைவருக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்ரு தொண்டர்கள் துடிப்பதில் நியாயம் இருக்கிறது என்பதை நாம் மறுக்கவில்லை. அதற்காக இல்லாத கற்பனைகள் எல்லாம் ஏற்றிச் சொல்லி பெருமை சேர்க்க வேண்டும் என நினைப்பது, கடைந்தெடுத்த அநாகரீகம் மட்டுமல்ல; அறிவு நாணயமற்ற செயல் அல்லவா?

ஹெட்கேவருக்கு குருவாக இருந்து , இவரை உயர்த்தி விட்டவர் டாக்டர் மூஞ்சி! ஆனால், ஆர்.எஸ்.எஸ். வெளியீடுகளில் ஹெட்கேவருக்கு, இவர் மெய்ப் பாதுகாவலராக இருந்தார் என்று எழுதுகிறார்கள்! ஹெட்கேவருக்கு 'இந்து ராஷ்டிரம்' என்ற தத்துவத்தை எடுத்துச் சொன்ன 'வீர சவர்க்கார்' பற்றி இவர்கள் வெளியீடுகளில் எந்தக் குறிப்பும் தரப்படவில்லை.

'பாய்பரமனானந்த்' என்பவர்தான் வட இந்தியாவில், குறிப்பாக சிந்த், பஞ்சாப், டில்லி பகுதிகளில் இந்த ஆர்.எஸ்.எஸ்சை வளர்த்தவர். ஆனால், எல்லா இடங்களிலும் 'குருஜீ'யின் செல்வாக்கால்தான் ஆர்.எஸ்.எஸ். வளர்ந்தது என்பதைக் காட்டுவதற்காக, இவரின் பெயரையே இருட்டடிப்பு செய்து விட்டார்கள்.

ஹெட்கேவர் நூலகங்களில் படித்தார்; சிந்தித்தார் என்பதற்கு ஆதாரங்களே இல்லை; வைதீகப் பார்ப்பனர் பரம்பரையில் வந்த அவருக்கு, பார்ப்பன வர்ணாஸ்ரம வெறித் தனத்தை வன்முறை மூலம் பரப்பிட வேண்டும் என்ற துடிப்பு இருந்திருக்கிறதே தவிர சிந்தனை வளம் இருந்ததாகத் தெரியவில்லை.

தேசபக்தர், தேசபக்தர் என்று விடாமல் இவர்கள் எழுதி வைத்திருப்பதற்குக் காரணம் என்ன?

இவர் புரட்சி இயக்கங்களில் பங்கு கொண்டார் என்பதைக்கூட ஹெட்கேவர் மறைவுக்குப் பிறகு, 1947-ம் ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஆர்.எஸ்.எஸ். வெளியீடுகளில் வெளியிடுகிறார்கள்! இதில் உண்மை இருந்தால், ஏன் இவ்வளவு காலம் தாழ்ந்து வெளியிட வேண்டும்!? காந்தியாரோடு நெருங்கிப் பழகியவர்; காந்தியாரிடம் பாராட்டு பெற்றவர் என்று இல்லாதை கதைகளை ஏன் ஏற்றிப் புனைய வேண்டும்?

எல்லாவற்றிற்கும் காரணம், அவர்களுக்கு இருந்த தாழ்வு மனப்பான்மைதான்! சூழ்நிலைகளால் மேலே வந்துவிட்ட, ஒரு சித்பவன், 'அடியாள்' பார்ப்பனருக்கு, தத்துவத் தலைவர் என்று அங்கீகாரம் தரத் துடித்தார்கள்! அதற்காகவே கட்டுக் கதைகளைப் புனைந்தார்கள்.

இதே போல நேதாஜி சுபாஷ் சந்திரபோசை , ஹெட்கேவர் நேரில் சந்தித்தார் என்றும் பெருமைப் படுத்துகிறார்கள்.

ஹெட்கேவரின் அதிகார பூர்வமான சுயசரிதையை எழுதிய 'பிஷிகார்' நேதாஜி சுபாஷ் சந்திரபோசுக்கும், ஹெட்கேவருக்கும் ஏற்பட்ட சந்திப்புப் பற்றி கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார். "1928-ம் ஆண்டு ஹெட்கேவர் கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டுக்குப் போயிருந்தார். அப்போது சுபாஷ் சந்திர போஸை சந்தித்தார். அவரோடு மூன்றரை மணி நேரம் விவாதித்தார். இந்த சந்திப்புப் பற்றி டாக்டர்ஜீ அவர்களே (ஹெட்கேவர்) ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகுதான் தெரிவித்தார். அந்தக் காலத்தில் சுபாஷ் சந்திர போஸ் கல்கத்தாவின் மேயர். முதலில் டாக்டர்ஜீக்கு (ஹெட்கேவர்) மூன்று நிமிடம்தான் சந்திப்புக்கு நேரம் ஒதுக்கினார். ஆனால் பேச்சு வேறு பக்கம் திசை திரும்பி இரண்டு தேச பக்தர்களும் மூன்றரை மணி நேரம் விவாதித்தனர். அப்போது 'இந்து ராஷ்டிரம்' என்ற கொள்கையை நான் வரவேற்கிறேன். ஆனால், இந்து சமூகம் என்பது ஏறத்தாழ செத்துவிட்டது. எனவே மத அடிப்படையில் மீண்டும் செயல்பட முடியும் என்று நான் நம்பவில்லை என்று போஸ் கூறினார்.

(இவ்வாறு ஹெட்கேவரின் அதிகாரபூர்வ சுயசரிதையில் எழுதப்பட்டிருக்கிறது. பக்கம் 58-59)

ஆர்.எஸ்.எஸ்சின் மற்றொரு வெளியீடான 'The Man and his mission' என்ற நூல் என்ன சொல்கிறது?

"இந்து ராஷ்டிரம் அமைக்கும் உங்கள் பணியினால் மட்டுமே இந்த நாட்டை உயர்விக்க முடியும்." என்று சுபாஷ் சந்திர போஸ், ஹெட்கேவரிடம் சொன்னதாக எழுதப்பட்டிருக்கிறது! இரண்டுமே முரண்பட்டுக் கிடக்கிறது.

அதற்குப் பிறகு சுபாஷ் ஒரு கைதியாக வார்தா வழியாக கல்கத்தாவுக்கு ரயிலில் கொண்டு போகப்படுகிறார். அது ஒரு விஜயதசமி நாள்! ரயில், தண்டவாளத்தில் நிற்கும்போது ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் போவதைப் பார்த்து, நேதாஜி மகிழ்ச்சி அடைந்தார் என்று 'பிஷிகார்' தமது நூலில் எழுதுகிறார். அதற்குப் பிறகு 1939-ம் ஆண்டில் ஹெட்கேவரை சந்திக்க போஸ் முயன்றதாகவும், ஹெட்கேவர் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்ததால், சந்திக்க இயலவில்லை என்றும், இரண்டு பேருமே சேர்ந்திருந்தால் நாடு எப்படியோ மாறியிருக்கும் என்றும் 'பிஷிகார்' எழுதுகிறார்.

ஆனால், மஹாராஷ்டிராவில் ஆர்.எஸ்.எஸ்.சின் முதல் தலைவரான ஜி.எம். ஹட்டர் இதுபற்றி எழுதியிருப்பதோ இன்னொரு கதை! இந்த ஹட்டர்தான், போஸ் சார்பில் ஹெட்கேவரிடம் தூது போனவர்!

"நாசிக்கில் நான் ஹெட்கேவரை சந்தித்த போது சில இளைஞர்களோடு ஜோக் அடித்துக் கொண்டு மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருந்தார். நேதாஜி போஸ் உங்களை சந்திக்க துடித்துக் கொண்டிருக்கிறார். என்று நான் சொன்னபோது, அதற்கு சம்மதிக்க ஹெட்கேவர் மறுத்துவிட்டார். என்னால் பேசமுடியாது அந்த அளவிற்கு உடல் சுகமில்லை என்றார். நான் வெளியே வந்த பிறகு மீண்டும் அந்த இளைஞர்களை கூட்டி வைத்துக் கொண்டு, ஜோக் அடித்துக் கொண்டு கலகலப்பாக சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்." என்று ஜி.எம். ஹட்டர் எழுதுகிறார். (ஆதாரம் இல்லஸ்டிரேட்டட் வீக்லி அக்-7-1979)

நாம் மேலே எடுத்துக் காட்டிய மூன்று பேருமே ஆர்.எஸ்.எஸ் காரர்கள்தான்; அந்த நூல்களும் ஆர்.எஸ்.எஸ் அங்கீகாரம் பெற்ற நூல்கள்தான்!

ஒருவர் இந்து ராஷ்டிரத்தை நேதாஜி ஏற்றுக் கொண்டார் என்று எழுதுகிறார்!

இன்னொருவர் இந்து சமூகம் செத்துவிட்டது; இது நடக்காத காரியம் என்று போஸ் சொன்னதாக எழுதுகிறார்!

மற்றொருவர் நிமோனியா காய்ச்சலால் அவதிப்பட்ட ஹெட்கேவர், போஸை சந்திக்க முடியவில்லை என்று எழுதுகிறார்!

வெறொருவரோ, இளைஞர்களோடு இருந்து மகிழ்ந்து கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தவர், வேண்டுமென்றே உடல் நலமில்லை என்று கூறி சந்திக்க மறுத்துவிட்டது போல எழுதுகிறார்!

ஹெட்கேவரே, தான் நேதாஜியை சந்தித்த செய்தியை ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகுதான் வெளிப்படுத்துகிறார். இவ்வளவு குழப்பங்களும் முரண்பாடுகளும் ஏன்?

வரலாற்று உண்மைகள் நூலுக்கு ஒருவிதமாக எப்படி இருக்கமுடியும்?

ஆர்.எஸ்.எஸ். 'பிரச்சார பீரங்கிகள்' தங்கள் கற்பனையைப் பயன்படுத்தி, தங்கள் 'குருஜீ'க்கு மரியாதை தேடித் தரப்போய், அது நூலுக்கு ஒருவிதமாக முரண்பட்டுக் கிடக்கிறது என்பதுதானே இதிலிருந்து விளங்கும் உண்மை!?

டி.ஆர். கேயால் என்ற பிரபல பத்திரிக்கையாளர் ஆர்.எஸ்.எஸ் என்ற தனது நூலில்,ஹெட்கேவர் 'அறிவுத்திறன்' பற்றி கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்.

"ஹெட்கேவரின் சரித்திர அறிவு பள்ளி மாணவனின் சரித்திர அறிவைத் தாண்டியது இல்லை. சிவாஜியைப் பற்றிய சரித்திரக் கதைகள்தான் அவருக்குத் தெரியும். 'ராமசரிதையை'த் தாண்டி அவர் இலக்கிய அறிவு சென்றதில்லை. மிகப்பெரிய கருத்து விவாதங்களை சிந்தனையாளர்களுடன் நடத்தினார் என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை." என்று குறிப்பிடுகிறார். (பக்கம் 55-56)

ஆர்.எஸ்.எஸ். ஆரம்பித்தவுடன், இளைஞர்களை இழுக்கவேண்டும் என்பதுதான் ஹெட்கேவரின் நோக்கமாக இருந்தது! குறிப்பாக பள்ளிக்கூடம் போகும் 12 முதல் 15 வயதுப் பையன்களாகவே பார்த்து சேர்த்தார். அதிலே சேர்க்கப்பட்டவர்கள் பெரும்பாலும் பார்ப்பனர்கள்தான்! குறுகிய காலத்திலேயே உடற்பயிற்சிகள் துவக்கப்பட்டன. உடற்பயிற்சிக்கான இடமும் தேர்ந்தெடுக்கப்பட்டது. நாக்பூரில் பயன்படுத்தப் படாமல் பொட்டை வெளியாய் கிடந்த ஒரு இடத்தை ஆக்கிரமித்து மைதானத்தை உருவாக்கினார்கள். அந்த இடத்திலேதான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இன்றைய தலைமை அலுவலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

இந்த இடத்தில் துவங்கிய உடற்பயிற்சிதான் அவர்களில் முதல் 'ஷாகா'! ராணுவப் பயிற்சி போல், இவர்களுக்குப் பயிற்சிகள் தரப்பட்டன; சிவாஜி இந்து தர்மத்துக்காக எப்படிப் போராடினான் என்பதையே திருப்பி திருப்பிச் சொல்லித் தந்தார்கள். இப்படியாக இந்த அமைப்பு படிப்படியாக வளர்ந்தது! அதுவரை, பெயர் சூட்டப்படாத அமைப்பாகவே அது இருந்தது; பெயர் சூட்டப்படுவதற்கு முன்பே உடற்பயிற்சிகள் துவக்கப்பட்டுவிட்டன என்பதை வாசகர்கள் கவனிக்க வேண்டும்.

1926-ம் ஆண்டில், அதாவது துவக்கி ஓராண்டுக்குப் பிறகு, பெயர் சூட்டுவது பற்றிய பிரச்சனை வந்தது; பாபாராவ் சவர்க்கார் 'ஹிந்து சுயம் சேவக் சங்' என்று பெயரிட்டார். 1921-ம் ஆண்டு அக்மதாபாத் காங்கிரஸ் மாநாட்டில் இந்தப் பெயரின் ஒரு அமைப்பு துவக்கப்பட்டது. அதே பெயரை சூட்டலாம் என்று சவர்க்கார் கூற, ஹெட்கேவர் அதை மறுத்து 'ராஷ்டிரிய சுயம் சேவக் சங்' என்ற பெயரை சூட்டுகிறார். ஒரு 'ராமநவமி' தினத்தில் இந்தப் பெயர் சூட்டல் நடக்கிறது.

இந்தியிலும் மராத்திய மொழியிலும் ஒரு பிரார்த்தனைப் பாடலைத் தயாரிக்கிறார்கள்.

ஒவ்வொரு 'ஷாகா' முடிவின் போதும் இதைப் பாடவேண்டும். ராஷ்டிர குரு சாம்ராத் ராமதாஸ்கி ஜே; பாரத மாதாகி ஜே; என்று அந்தப் பாடல் முடிவடையும்! சாம்ராத் ராம்தாஸ் என்பவர் சிவாஜியின் பார்ப்பன குரு. அவர்கள் தயாரித்திருந்த கொடி சிவாஜி பயன்படுத்திய கொடி. அவர்கள் குருவாகக் கொண்டது; சிவாஜியை! இந்த அணியில் சேர்க்கப்பட்டவர்கள் எல்லோருமே பார்ப்பனர்கள்தான்! எனவே, பிரிட்டிஷாரிடமிருந்து மீண்டும் மராட்டிய 'பேஷ்வா' பார்ப்பனர்கள் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கத்திலேயே, இந்த அமைப்பு துவக்கப்பட்டது என்பது இவைகளின் மூலம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.

அடுத்த ஆண்டு 1972-ல் நாக்பூரில் இரண்டு மாதப் பயிற்சி முகாம் ஒன்றை நடத்துகிறார்கள். சிலம்ப விளையாட்டு, கத்திச் சண்டை, குத்துச் சண்டைப் பயிற்சிகள் எல்லாம் தரப்படுகின்றன. அதில் இந்துக்கள் ராணுவமாக உருவாக வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. அதே 1972-ம் ஆண்டு நாக்பூரில் ஒரு மதக் கலவரம் உருவானது. அந்தக் கலவரம் பற்றி ஆர்.எஸ்.எஸ். வெளியீடு என்ன விவரிக்கிறது? இதோ பாருங்கள்.

"4-9-1972-ம் ஆண்டு இந்துக்கள் மகாலட்சுமி நோன்பு அனுசரிக்கும் நாளில் முஸ்லீம்கள் ஊர்வலம் நடத்தி கலவரம் செய்கிறார்கள். ஹெட்கேவர் வீட்டில் கல்வீச்சு நடக்கிறது. உடனே நோன்பு முடித்துவிட்டு விருந்து சாப்பிட உட்கார்ந்த இந்துக்கள் எல்லாம் ஆத்திரம் கொண்டு தாக்கினர். அதைத் தொடர்ந்து மூன்று நாட்கள் கலவரம் நடந்தது. பதட்டம் நீடித்தது; ஆனால், ஒரு இந்துப் பகுதிக்கூட அதற்குப் பிறகு தாக்கப்படவில்லை. இந்து சமூகம் தனது ஒற்றுமையக் காட்டியது. தனது ராணுவ சக்தியை வெளிப்படுத்தியது. இந்துக்களுக்கு தன்னம்பிக்கை வந்துவிட்டது." என்று வன்முறைக்கு பச்சையாக தூபம் போட்டு ஆர்.எஸ்.எஸ். வெளியீடு கலவரத்தை விவரிக்கிறது. (பிஷிகார் நூல் பக்கம் 43-44)

- தொடரும்...

Pin It