சுருக்கமான பின்னணி

       கூடங்குளம் அணு சக்தி உலை (KKNPP), ஒவ்வொன்றும் 1000 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட 6 அணு உலைகளை நிர்மாணிக்கத் திட்டமிட்டுள்ளது. பத்திரிகைச் செய்திகளிலிருந்து இதனுடன் இன்னும் இரண்டு உலைகளும் சேர்த்து மொத்தம் 8 அணு உலைகள் நிர்மாணிக்கப் படலாம் எனத் தெரிகிறது. தற்போது, உலை எண் 1 மற்றும் 2 ஆகியவை கடலிலிருந்து 300 மீட்டர் தொலைவிலேயே கட்டப்பட்டுள்ளன.

கூடங்குளம் அணு சக்தி உலை (KKNPP), இந்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான, இந்திய அணு சக்திக் கழகத்தின் (Nuclear Power Corporation of India -NPCIL) ஒரு தொழில் சார்ந்த மின் உற்பத்தி நடவடிக்கையாகும். NPCIL, கம்பெனி சட்டத்தின் கீழ் வரும் ஒரு கம்பெனியாகும். இந்த நிறுவனத்தின் குறிக்கோள்களில், வணிக அடிப்படையில் மின் உற்பத்தி செய்வதும் அடங்கும். 

அணு சக்தியைப் பற்றி ஒரு சிறு பின்விவரம்

அணு உலைக்கான அடிப்படை எரிபொருள் யுரேனியம்-235 ஆகும். இது மெட்டல் குழாய்களில், செராமிக் மாத்திரைகளில் வைக்கப் பட்டிருக்கும். இந்த எரிபொருள் குழாய்கள் பயன்படுத்தப்படுவதற்கு முன், சிறிதளவே கதிரியக்கம் கொண்டிருக்கும் என்பதால், அவற்றைக் கையாள்வதற்கு பெரிதாக சிறப்புக் கவசம் எதுவும் தேவையில்லை. அணுக்கரு வினையின் போது, அணுப்பிளவு ஏற்படுகிறது. அதாவது, யுரேனியம் அணு, இரண்டு மூன்று நியூட்ரானாகப் பிளந்து, சிறிதளவு வெப்பத்தையும் வெளிப்படுத்துகிறது. இந்த நியூட்ரான்கள் மீண்டும் மற்ற அணுக்களின் மீது மோதி, அவற்றைப் பிளக்கச் செய்கின்றன. இப்படியாக தொடர் வினையின் (சங்கிலி வினையின்) மூலம், ஏராளமான வெப்பம் வெளியிடப்படுகிறது. இந்த வெப்பம்தான், அணு உலையில் மின்சாரம் தயாரிக்கப் பயன்படுகிறது.

இந்த வினையின் கழிவாக அதிகக் கதிரியக்கம் கொண்ட யுரேனியம் உருவாகிறது. இந்தப் பயன்படுத்தப் பட்ட எரிபொருள் வினையில் ஈடுபட்டு வெப்பத்தை உருவாக்காது என்பதால் மீண்டும் அதனைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க இயலாது. இந்த பயன்படுத்தப்பட்ட அணு எரிபொருள் (Spent Nuclear Fuel (SNF)) மிகவும் வெப்பமாகவும், அதிக கதிரியக்கம் கொண்டதாகவும் இருக்கும். எனவே இதனைக் கையாள சிறப்பு கவசம் தேவைப் படுகிறது.

கீழேயுள்ள அட்டவணை கூடங்குளம் அணு சக்தி உலை (KKNPP)யின் முக்கியக் கட்டங்களை விவரிக்கிறது.

1.

1988

கூடங்குளம் பகுதியில், அணு உலை நிறுவுவதற்காக, அணு சக்தி ஒழுங்காற்றுக் கழகம்(AERB) சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வு (Site Evaluation Report (SER)) கீழ்கண்ட காரணிகள் அடிப்படையில் இருந்தது.

  1. இரண்டு அணு உலைகள் மட்டும் அங்கு அமைப்பது.
  2. அணு உலையில் பயன்படுத்தப்பட்ட எரி பொருளை (SNF), கடல் வழியாக சோவியத் யூனியனுக்குக் கொண்டு சென்றுவிடுவது.

2.

26.12.1988

அணு உலைக்கு தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அனுமதி வழங்கியது.

3.

13.02.1989

தமிழக அரசு, 26.12.1988 அன்று வழங்கிய அனுமதியில் கூடுதலாகக் கீழ் கண்ட நிபந்தனைகளைச் சேர்த்தது.

  1. கடலின் மீன் வளம் பாதிக்கப் படாமலிருக்க, அணு உலையிலிருந்து கடலில் வெளியேற்றப்படும் தண்ணீரின் வெப்பம், கடல்நீரின் வெப்பத்தினை விடக் கூடுதலாக 6 சென்டிகிரேட் அளவுக்கு மேல் இருக்கக்கூடாது.
  2. அணு உலைக் கழிவானது மறு உபயோகத்திற்காக எடுத்துச் செல்லப்படும் காலம் வரை, அக் கழிவு பாதுகாப்பாக தண்ணீர் தொட்டியில் வைக்கப்பட வேண்டும்.
  3. பேச்சிப் பாறை அணையிலிருந்து குழாய் வழியாக, நன்னீர் எடுக்கப்படும். குழாயில் பிரச்னைகளோ அல்லது அணையிலிருந்து நீர் வராமல் போனாலோ, நிலத்தடி நீர் எடுத்துக் கொள்ளப்படும்.

4.

 

09.05.1989

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, அணு உலைக்கு அனுமதி வழங்கியது. மேலும் 1981 ஆண்டு அன்றைய பிரதமர் இந்திராகாந்தி அரசு வெளியிட்ட உத்திரவான கடற்கரையின் உயர் அலைப் பகுதியிலிருந்து (High Tide Line) 500 மீட்டருக்குள் கட்டிடங்கள் கட்டக்கூடாது என்ற உத்திரவிலிருந்து அணு உலைக்கு மத்திய அரசு விலக்கு அளித்தது. இந்த அரசாணையில் அணு உலையிலிருந்து கடலில் வெளியேற்றப்படும் தண்ணீரின் வெப்பம் கடல்நீர் வெப்பத்திலிருந்து 5 சென்டிகிரேடுக்கு மேல் இருக்ககூடாது என்றும், பேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீர் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் குறிப்பிடப் பட்டிருந்தது.

5.

10.11.1989

அணுசக்தி ஒழுங்காற்று கழகம் (AERB) அணு உலைக்கு முடிவு செய்யப்பட்ட பகுதியில், அணு உலை கட்ட அனுமதி வழங்கியது.

6.

20.11.1989

இந்திய அரசு, சோவியத் யூனியனுடன் 1000 மெகாவாட் திறனுள்ள இரண்டு V.V.E.R ( Vodo-Vodyanoi Energetichesky Reactor or Water-Water Power Reactor) அணு உலை வாங்க ஒப்பந்தம் செய்தது. இதில் அணு உலைக் கழிவை (SNF), சோவியத் யூனியனுக்கே எடுத்துச் சென்று விடுவது என முடிவானது. ஆனால் சோவியத் யூனியன் உடைந்ததால், இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரவில்லை.

7.

19.02.1991

கடற்கரை ஒழுங்காற்றுப் பகுதி (CRZ) அறிக்கை, 1986 சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் படி வெளியிடப்பட்டது. இதன் படி கடற்கரையின் உயர் அலைப் பகுதியிலிருந்து (High Tide Line), 500 மீட்டர் தூரத்துக்குள் தொழிற்சாலைக் கட்டுவது தடை செய்யப்பட்டது. ஆனால், கடற்கரையைப் பயன்படுத்த வேண்டிய தொழிற்சாலைகள், பாதுகாப்புத் துறைக்கானத் தேவைகள், மற்றும் அணுசக்தித் துறையின் (DAE) திட்டங்கள் ஆகியவை விதிவிலக்கு அளிக்கப்பட்டன. இதன்படி பார்த்தால், 500 மீட்டருக்குள் KKNPP –யை கட்ட இயலாது. ஏனெனில், அணு உலை, கடற்கரையைப் பயன்படுத்த வேண்டிய தொழிற்சாலை அல்ல, மேலும் KKNPP இந்திய அணுசக்தி கார்பரேசன் லிமிட். (NPCIL) என்ற வணிக நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள, அரசுக் கம்பெனி ஆகும். இது அரசுத் துறையான அணுசக்தி துறை (DAE) யின் சலுகைகளைக் கோர முடியாது. அரசுத்துறையும், அரசுக் கம்பெனிகளும் வெவ்வேறானவை என்பதை ஏற்கனவே பல உச்ச நீதி மன்ற தீர்ப்புகள் உறுதி செய்துள்ளன.

8.

27.01.1994

சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம்-1986 மாசினைக் கட்டுப் படுத்தவும், சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும் பல வழிமுறைகளைக் கொண்ட EIA (Environment Impact Assessment) அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கை, ஒரு புதிய தொழிற்சாலை ஒரு பகுதியில் வருவதற்கு முன், சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து அறிக்கை வெளியிட வேண்டும் என்றும், பின் பொது மக்களின் கருத்து கேட்பு நடத்தப்படவேண்டும் எனவும், எதிர்ப்புக் கருத்துக்கள் பதிவு செய்யப் பட வேண்டும் எனவும், அதற்கான விளக்கத்தை அந்தத் தொழிற்சாலைத் தர வேண்டும் எனவும், பின்பு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் வல்லுநர் ஆய்வுக் குழு (Expert Appraisal Committee (EAC)) அந்த தொழிற்சாலைக்கு அனுமதி வழங்குவது பற்றி முடிவு செய்யும் என்றும், இந்த அனுமதியும் ஐந்து ஆண்டுகள் மட்டுமே செல்லும் எனவும், அந்த 5 ஆண்டுகளுக்குள் தொழிற்சாலை தொடங்கப் பட வேண்டும் எனவும் குறிப்பிட்டது. அதே போல், 1994க்கு முன் அனுமதி பெற்றத் தொழிற்சாலைகள், நிலத்தை கையகப்படுத்தி, அந்த மாநிலத்தின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் அனுமதியும் பெற்றிருக்க வேண்டும். அப்படியில்லாத பட்சத்தில், அந்த தொழிற்சாலைகள் மீண்டும் அனுமதி பெற வேண்டும் எனவும் இந்த அறிக்கை குறிப்பிட்டது. ஆனால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டத் தேதி வரை, KKNPPக்கான நிலம் கையகப்படுத்தப்படவுமில்லை, மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து அனுமதி பெறப்படவுமில்லை. எனவே, மீண்டும் அணு உலை செயல்பட அனுமதி புதியதாக வாங்கியிருக்க வேண்டும் ஆனால் அவ்வாறு செய்யப்படவில்லை.

9.

25.03.1997

அணு உலை திட்டத்தினை மறுபடியும் புதுப்பிக்க புதிதாக உருவான ருஷ்ய நாட்டுடன் ஒப்பந்தம் போடப்பட்டது.(ருஷ்யா வேறு, சோவியத் யூனியன் வேறு). புதிய ஒப்பந்தம் படி அணுக் கழிவுகள், இந்தியாவில் வைத்திருந்து பின் ருஷ்யாவுக்கு கடல் வழி எடுத்துச்செல்வது என முடிவானது. பின் அணுசக்தி ஒழுங்காற்றுக் கழகம் (AERB), இந்தக் கழிவுகள் மறு பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தப்படும் என அறிவித்தது. மறு பயன்பாட்டுக்கான ஆலைகள் எப்போது எங்கே நிறுவப்படும் என்று எந்த அறிப்புமில்லை. பல ஆயிரம் ஆண்டுகள் வரை ஆபத்தான கதிரியக்கத்தை வெளியிடும் தன்மை கொண்ட இக் கழிவினை கொண்டு செல்லும் வழியில் ஏற்படும் பாதிப்பு குறித்தும் அச்சப்பட வேண்டியுள்ளது.

10.

ஜீன் 2001

தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இந்திய அணுசக்தி கார்பரேசனுக்கு (NPCIL) சுற்றுச்சூழல் பாதிப்பு அனுமதி (environment clearance) பெறாது அணு உலை கட்டப் படக்கூடாது என்று அறிக்கை அனுப்பியது.

11.

06.09.2001

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை தனது அரசாணையில் அணு உலைக்காக 1989- மே மாதம் பெற்ற அனுமதி செல்லும் எனவும் மீண்டும் பொதுமக்கள் கருத்து கேட்பு நடத்தி, புதிய அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என்றது.

12.

அக். 2001

அணு உலை கட்டுமானப் பணிகளுக்கு நிலத்தில் அஸ்திவாரம் தோண்ட அனுமதி வழங்கியது, அணுசக்தி ஒழுங்காற்றுக் கழகம் (AERB).

13.

ஜன. 2003

அணு உலை கட்டுமானப்பணிகள் துவங்கிவிட்ட நிலையில், சுற்றுச் சூழல் பாதிபு அறிக்கையை (EIA), இந்திய அணுசக்தி கார்பரேசன், சுற்றுச் சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்திடமிருந்துப் (NEERI) பெற்றது. இதில் அணு உலைக் கழிவின் சுற்றுச் சூழல் பாதிப்பு குறித்து எந்த ஆய்வும் இல்லை. இந்த அறிக்கையும், பேச்சிப்பாறை அணையிலிருந்து குளிர்விப்பானுக்கான நீர் பெறப்படும் என்ற அடிப்படையிலேயே உருவாகியுள்ளது. இதில் கடல் தண்ணீரை நன்னீராக்கி அணு உலைக்கு பயன்படுத்துவதால் ஏற்படும் தாக்கம் குறித்து எந்த ஆய்வுமில்லை. மேலும் இந்த அறிக்கை அணு உலையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் வெப்பம், கடல் தண்ணீரின் வெப்பத்தினை காட்டிலும் 7 செண்டிகிரேட் அதிகம் இருக்கலாம் என்றது.

14.

25.02.2004

தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அணு உலை நிறுவ ஒப்புதல் வழங்கியது (consent to establish)

15.

09.06.2012

அணு உலை சுற்றுப்பகுதியில் உள்ள மக்களுக்கு அவசர கால பேரிடர் மேலாண்மை பயிற்சி நக்கநேரியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வழங்கப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. ஆனால் மக்கள் சிவில் உரிமைக்கழகம் (PUCL) சார்பில் நடைபெற்ற உண்மையறியும் குழு விசாரணையில் அவ்விதமாக எந்த பயிற்சியும் மக்களுக்கு வழங்கப்படவிலை எனவும், வழிமுறைகள் பின்பற்றப் படவில்லை எனவும் உறுதி செய்யப்பட்டது. 

15.

ஜூலை 2012

தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அணு உலை செயல் பட அனுமதி வழங்கியது.

மேற்கண்டத் தொடர் நிகழ்வுகள், இந்திய அணுசக்தித் துறை, அணுசக்தி ஒழுங்காற்றுக் கழகம், மத்தியச் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ஆகியவை தொடர்ந்து சட்டங்களையும் பாதுகாப்பு வழிமுறைகளையும் மீறி, கூடங்குள அணு உலை நிறுவியதை வெளிப்படுத்தும். இந்நாள் வரை, அணு உலைகள் 1 & 2 ஆகியவற்றிற்கு, கடற்கரை ஒழுங்காற்று மண்டலம் (CRZ) அனுமதி பெறப்படவிலை . அவ்வாறு பெறவும் சட்டத்தில் வழியில்லை. மேலும் கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தின் சுற்றுச் சூழல் பாதிப்பு, அணுக் கழிவுகளை பாதுகாப்பது அல்லது அவற்றை வேறு இடத்துக்கு எடுத்துச் செல்வது, அவற்றை மறு உபயோகம் செய்வது ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி எந்த ஆய்வும் செய்யப் படவில்லை. இந்திய அரசின் வல்லுநர் குழுவின் அறிக்கையின்படி, அணுக்கழிவை எங்கே, எப்படி, எப்போது மறு உபயோகம் செய்யப் போகிறார்கள் என்பது, இந்திய அரசின் அணுசக்தி கார்பரேசன் மற்றும் அணுசக்தி ஒழுங்காற்றுக் கழகம் ஆகியவைகளுக்கும் புரியாத புதிராகவே உள்ளது. 

முனை.வீ.சுரேஷ், தேசியச் செயலர், பி.யூ.சி.எல் மற்றும்

வழக்கறிஞர், சென்னை உயர்நீதி மன்றம். 

டி. நாகசைலா, பி.யூ.சி.எல்-.நா மற்றும் புதுச்சேரி

மற்றும் வழக்கறிஞர், சென்னை உயர்நீதி மன்றம்.

Pin It