எந்த தொலைக்காட்சியைப் பார்த்தாலும் வீடு கட்ட, மனை வாங்க வாங்க 1 சென்ட் நிலம் 70 ஆயிரம் ரூபாய் என பிரபல நடிகர், நடிகை கூப்பாடு போட்டு பொட்டல் காட்டைக் காட்டிக் கொண்டிருக்கும் வேளையில், 30 வகையான பயிர்கள் விளையும் விவசாய பூமியை அரசு எடுத்துக்கொண்டு 1 சென்ட் நிலத்திற்கு 185 ரூபாய், 357 ரூபாய், 828 ரூபாய் என விலை நிர்ணயம் செய்துள்ளது, மதுரை மாவட்ட விவசாயிகளை போராட்ட களத்தில் இறக்கியுள்ளது.

"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே“ என்ற பழமொழியை உதாசீனப்படுத்தி வரும் நிலையில் விவசாயிகளின் நிலை தமிழகம் முழுவதும் மாற்றப்பட்டு வருகிறது.

விவசாயிகள் தற்கொலை

இந்தியாவில் 2010-2011 ஆம் ஆண்டு வேளாண் பருவத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கையும் தாண்டி 24.10 கோடி டன் அளவு உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது புதிய விவசாயக் கொள்கைக்கு கிடைத்துள்ள வெற்றி எனப் பெருமிதத்தோடு நமது பிரதமர் மன்மோகன் அறிவித்துள்ள நிலையல் 1995 ஆம் ஆண்டு முதல் 2010 ஆண்டு வரை இந்தியாவில் 2 இலட்சத்து 56 ஆயிரத்து 913 விவசாயிகள் வாழ வழியின்றி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2010ஆம் ஆண்டில் மட்டும் 15 ஆயிரத்து 964 விவசாயிகளும், மகாராஷ்டிராவில் மட்டும் சுமார் 40 ஆயிரம் விவசாயிகளும் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக மத்திய அரசின் அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கிறது.

வாழ வழியற்ற நிலையில் விவசாயிகள் தற்கொலை ஒரு புறம் என்றால், விவசாயிகள் நம்பி வாழ்ந்து வரும் பூமியைப் பறிக்கும் தமிழக அரசின் நவீனமயக் கொள்கை உணவு உற்பத்தியைப் பாதிப்பதோடு, பல விவசாயிகளை தற்கொலைப்பள்ளத்தாக்கில் தள்ள உள்ளது.

ரேசனில் விலை இல்லா அரிசியை தமிழக அரசு வழங்கி வந்தாலும், வெளிமார்க்கெட்டில் குறைந்த விலை அரிசி 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. விளைநிலங்கள் ரியல் எஸ்டேட் என்ற பெயரிலும், சிப்காட் என்ற பெயராலும் சூறையாடப்பட்டு வருவதால் அரிசி உள்ளிட்ட உணவுப்பொருட்களின் விலை எட்டிப்பிடிக்க முடியாத உயரத்திற்குப் பறக்கிறது.

குறையும் விவசாயப்பரப்பு

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில், விளை நிலங்களின் பரப்பளவு, ஐந்து லட்சம் ஹெக்டேர் குறைந்துள்ளது. கடந்த 2000 ஆம் ஆண்டில், 53 லட்சம் ஹெக்டேராக இருந்த விவசாய நிலங்களின் பரப்பளவு, தற்போது 48 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது. சென்னை, புதுவை, கோவை மற்றும் மதுரை நகரங்களைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலேயே விளை நிலங்கள் பெருமளவு குறைந்துள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 29 ஆயிரத்து 234 ஹெக்டேர், திருவள்ளூர் மாவட்டத்தில் 14 ஆயிரத்து 032 ஹெக்டேர், வேலூர் மாவட்டத்தில் 36 ஆயிரத்து 097 ஹெக்டேர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 17 ஆயிரத்து 031 ஹெக்டேர் விளை நிலங்கள் அழிக்கப்பட்டுள்ளது. அதே போல் கடலூர் மாவட்டத்தில் 18 ஆயிரத்து 816 ஹெக்டேர், விழுப்புரம் மாவட்டத்தில் 4ஆயிரத்து 029 ஹெக்டேர் விளை நிலங்களின் பரப்பளவு குறைந்துள்ளது. தமிழகத்திலேயே அதிகமாக தர்மபுரி மாவட்டத்தில் 2 இலட்சத்து 51 ஆயிரத்து 850 ஹெக்டேர், கோவை மாவட்டத்தில் 1 இலட்சத்து 37ஆயிரத்து 200 ஹெக்டேர், ஈரோடு மாவட்டத்தில் 1 இலட்சத்து 8 ஆயிரத்து 803 ஹெக்டேர், சேலம் மாவட்டத்தில் 56 ஆயிரத்து 524 ஹெக்டேர், நாமக்கல் மாவட்டத்தில் 40 ஆயித்து 653 ஹெக்டேர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 9 ஆயிரத்து 702 ஹெக்டேர் வீதம் விளை நிலங்கள் குறைந்துள்ளன. மதுரை மாவட்டத்தில் 34 ஆயிரத்து 443 ஹெக்டேர், திண்டுக்கல் மாவட்டத்தில் 16 ஆயிரத்து 365 ஹெக்டேர், விருதுநகர் மாவட்டத்தில் 15 ஆயிரத்து 749 ஹெக்டேர், சிவகங்கை மாவட்டத்தில் 6 ஆயிரத்து 782 ஹெக்டேர் விவசாயப் பரப்பு குறைந்துள்ளது. இதனால் பெருமளவு உணவு உற்பத்திக் குறைந்துள்ளது. தமிழகத்தில் 2004 - 2005 ஆம் ஆண்டில் மொத்த உணவு தானிய உற்பத்தி 61 இலட்சத்து 46 ஆயிரத்து 044 டன்கள் ஆகும். ஆனால், 2005-2006-ல் 61 இலட்சத்து 16 ஆயிரத்து 145 டன்கள் தான். இது முந்தைய ஆண்டைவிட 29,899 டன்கள் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. ரியல் எஸ்டேட் துறை தற்போதைய அளவுக்கு அசுர வளர்ச்சி பெறாத காலத்திலேயே இத்தகைய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. விளைநிலங்கள் வீட்டுமனைகளாகவும், தொழிற்சாலைகளாகவும், சிறப்புப் பொருளாதார மண்டலங்களாகவும், சிப்காட் தொழிற்பேட்டைகளாகவும் தொடர்ந்து உருமாறி வருகின்றன.

விவசாய நிலத்தில் சிப்காட்

மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டை, கரிசல்காளம்பட்டி, சுவாமிமல்லம்பட்டி ஆகிய மூன்று கிராமங்களைச் சேர்ந்த 1478.71 ஏக்கர் விவசாய நிலங்களை சிப்காட்டிற்கு எடுக்கும் பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இந்த நிலங்கள் விவசாய நிலமாய் இல்லை என்ற அரசு நிர்வாக அதிகாரிகளின் கூற்றுகளை பல குழுக்கள் நேரடியாக கள ஆய்வு செய்து பொய் என்று நிரூபித்துள்ளன.

கம்பு,வரகு, சோளம், பருத்தி, துவரை, மொச்சை, பச்சைப்பயிர், சுண்டல், ஓமம் போன்ற 30க்கும் மேற்பட்ட உணவுத்தானியப் பொருட்கள் தற்போதும் சாகுபடி செய்து வரும் இந்த பூமியில் நித்ய கல்யாணி, அவுரி போன்ற மூலிகைப் பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. கரிசல்காளம்பட்டியில் சிவரக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் 1 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கு அவரி மானியம், தேசிய மூலிகை பயிர் இயக்கம், மாவட்ட இயக்குநர் மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் வழங்கப்பட்டுள்ளது. அதே போல, சிவரக்கோட்டை பகுதி விவசாயிகள் துவரையை, இதற்கான ஆதாரங்களை விவசாயிகள் சிவரக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு 4173 கிலோ அவரையைக் கொள்முதல் செய்துள்ளனர். கூட்டுறவு கடன் சங்கத்திற்கு பத்து சதவீதம் கொள்முதல் செய்ததே இத்தனை கிலோ என்றால் 90 சதவீதம் வெளிமார்க்கெட்டில் எத்தனை கிலோ விற்பனை செய்யப்பட்டிருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

இந்த ஆதாரங்களைக் காட்டும் விவசாயிகள், "பொன்விளையும் பூமியான எங்கள் பூமியை மலட்டு பூமியெனக் காட்ட பல்வேறு வேலைகளைச் செய்கிறார்கள். எங்களது மூன்று ஊர்களில் உள்ள பத்து ஊரணிகளில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் சுமார் 45 இலட்ச ரூபாய்க்கான வேலைகளும், வேளாண் பொறியியல் துறை மூலம் நீர் செருவூட்டல் திட்டத்தில் சிவரக்கோட்டையில் சுமார் 2 இலட்சத்து 62 ஆயிரம் செலவு செய்ததில் 5 ஊரணிகளில் பணிகள் நடைபெற்றுள்ளது. அரசுக்கு 100 குவிண்டால் துவரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது ஆதாரங்களுடன் உள்ளது" என்று கூறுகிறார்கள்.

இந்த நிலையில் சிவரக்கோட்டை ,கரிசல்காளாம்பட்டி, சுவாமிமல்லம்பட்டி விவசாய நிலங்களை அடிமாட்டு விலைக்கு எடுத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளும் தொடங்கியுள்ளன. நில எடுப்பு செய்வதற்காக கடந்த 2008 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட முன்மொழிவுகள் அடிப்படையிலேயே விலை நிர்ணயம் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சிவரக்கோட்டையில் 363.56 ஹெக்டேர் நிலம், கரிசல்காளம்பட்டியில் 753.64 ஏக்கர் நிலம், சுவாமி மல்லம்பட்டியில் 361.51 ஏக்கர் நிலம் நில ஆர்ஜிதம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

அடிமாட்டு விலை

புஞ்சை நிலங்கள் என்று அரசு உத்தரவிலேயே கூறப்பட்டுள்ள இந்த விளைநிலங்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள விலை எவ்வளவு தெரியுமா? சிவரக்கோட்டையில் 1 சென்ட் நிலம் 828 ரூபாய், கரிசல்காளம்பட்டியில் 1 சென்ட் நிலத்திற்கு 357 ரூபாய், சுவாமி மல்லம்பட்டியில் 1 சென்ட் நிலம் 185 ரூபாய். இதில் விந்தை என்னவென்றால் சிப்காட் வரப் போவதாகக் கூறி சிவரக்கோட்டை அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த பல ரியல் எஸ்டேட் கம்பெனிகள் சென்ட் நிலத்தை 70 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும் என்று விளம்பரம் செய்து வருவது தான்.

அரசு கையப்படுத்த நினைக்க முயலும் மூன்று கிராமங்களுக்கு அருகில் கள்ளிக்குடி பிட்1ல் 961.15.00 ஹெக்டேர், பிட்2ல் 589.23.5 ஹெக்டேர், வெள்ளாகுளம் பிட்2-ல் 663.15.0 ஹெக்டேர் என 2213.88.5 ஹெக்டேர் என 5 ஆயிரம் ஏக்கர் பரப்புள்ள பயன்பாடு இல்லாத தரிசு நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களை அரசு கண்டு கொள்ளவில்லை. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடின்றி இப்பகுதியில் அதிகாரம் படைத்த பலர், பினாமி பெயர்களில் 400 ஏக்கர் முதல் பல்வேறு வகையில் நிலங்களை வளைத்துப் போட்டு வருகின்றனர். நில உச்சவரம்பு சட்டம் இப்பகுதியில் கேலிக்கூத்தாக்கப்பட்டு வருகிறது. சிவரக்கோட்டை, கரிசல்காளன்பட்டி, சுவாமி மல்லம்பட்டி ஆகிய ஊர்களில் உள்ள 1478.71 ஏக்கர் நிலங்களைப் பாதுகாக்கும் போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் களம் இறங்கியுள்ளது. மாபெரும் போராட்டத்திற்கான ஆயத்தப் பணிகளைத் துவக்கியுள்ளது.

“சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்

உழந்தும் உழவே தலை.“

என்பதை உணருமா தமிழக அரசு?

- ப.கவிதா குமார்

Pin It