ஏகலைவன் காலம் தொட்டே கல்வி மறுக்கப்பட்டு வந்த ஒடுக்கப்பட்ட மக்கள் இன்றளவும் கல்வி மறுக்கப்பட்டே வருகின்றனர். பொதுவாகவே உயர்கல்வி பெறுவோர் அளவு 11 விழுக்காடுதான் எனும்போது, ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி பெறுவோர் எவ்வளவு குறைவாக இருக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்தத் தடைகளைத் தாண்டி ஒரு தலித் மாணவர் கல்லூரி வாசலை மிதிப்பதற்கு அவரைப் பெற்றவர்கள் எவ்வளவு பாடுபடுகிறார்கள் என்பதை உணர முடியும். அதுவும் முடை நாற்றமெடுத்துப்போன ஆணாதிக்க சமுதாயத்தில் ஒரு தலித் பெண் கல்வி பெறுவதென்றால் சொல்ல வேண்டியதே இல்லை. வர்க்கத்தால் ஏழையாக, பாலியலால் பெண்ணாக, சாதியால் சக்கிலிச்சியாக பிறந்த அன்புத்தங்கை காயத்ரி பள்ளிப் படிப்பைத் தாண்டி தொழில்நுட்பம் பயில நாமக்கல் திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.டெக் வரை வர எத்துணை பாடுபட்டிருப்பார்? எத்துணை பேருடைய உழைப்பு பின்புலமாக இருந்திருக்கும்? அவரை வீட்டிலிருந்து 200 கி.மீ தொலைவில் உள்ள திருச்செங்கோட்டில் உள்ள கல்லூரியில் சேர்த்து, வீட்டிலிருந்து போய் வர முடியாது என்று விடுதியில் விட்டு படிக்க வைத்து எத்துணை பொருளாதாரச் சுமைகளையும் மனச்சுமைகளையும் தாங்கி வளர்த்திருப்பார்கள்? எவ்வளவு கனவுகளை அன்புத்தங்கை காயத்ரியும் அவர்தம் பெற்றோரும் கண்களிலே தேக்கி வைத்திருந்திருப்பார்கள்?

 இவ்வளவு தடைகளைத் தாண்டி கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிற பெண் இறந்து விட்டாள் என்று சுலபமாகச் சொல்லும் சேதி கேட்டு எப்படி துடித்துப் போயிருப்பார்கள்? இறப்பும் இயற்கையாக இல்லாமல் கொலையாக இருக்கும்போது வேதனை எப்படிப் பெருகி இருக்கும்? இறப்புக்கு முன்பாக பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறாள் என்கிற அடையாளங்களைப் பார்க்கிற அவலத்துக்கு ஆளான அந்தத் தாயின் சோகத்தை யாரால் தாங்கிக் கொள்ள முடியும்? வாழையாக வாழ வேண்டிய இளம் குருத்தை அள்ளிக் கொடுத்திருக்கிற அபலைத்தாயின் கண்ணீருக்கு பதில் எங்கே?

 பெண்களை வெறும் உடலாக மட்டுமே பார்க்கிற, ஒரு மனுஷியாகவோ, உயிராகவோ, ஒரு ஆளுமையாகவோ பார்க்கத் தவறுகிற காமவெறியர்களின் பணக்கொழுப்புக்கு எம் தங்கை காயத்ரி போல எத்தனை பேர் விவேகானந்தா கல்லூரி வளாகத்தில் பலியாகி இருக்கிறார்கள்? மனிதத்தன்மையற்ற இந்த வன்செயல் நம் மனதை ரணமாக்குகிறது என்றால், வன்செயலைக் கண்டு கள்ள மவுனம் சாதிக்கும் பொதுச்சமூகத்தின் புத்தி நம்மைக் கோபம் கொள்ளச் செய்கிறது. இறந்தவர் பெண்ணாக இருப்பதால் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் போராடுகிறது. இறந்தவர் மாணவர் என்பதால் இந்திய மாணவர் சங்கம் போராடுகிறது. இறந்தவர் ஆதித்தமிழச்சி என்பதால் பேரவை களம் காணுகிறது. அன்புத்தங்கை காயத்ரி படுகொலைக்கு நீதி வேண்டுமென்று வெளியுலக வாழ்வின் சின்னச்சின்ன உரிமைகளையும் சின்னச்சின்ன வசதிகளையும் புறந்தள்ளி சேலம் மத்திய சிறையின் கதவுகளுக்குள்ளாக தங்களை அடைத்துக்கொண்டு பொதுச்செயலர் நாகராசன், மாவட்டச்செயலர் தமிழரசன், உள்ளிட்ட 9 போராளிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

நம்மைத் தவிர வேறு யாரும் ஏன் போராடவில்லை? யானை மிதித்துச் சாகடிக்கப்பட்டால் லட்சங்களை அள்ளித்தரும் ஒரு பெண்ணின் தலைமையிலான தமிழக அரசாங்கம் ஏன் காயத்ரிக்காக இரங்கவில்லை? ஆளுங்கட்சியின் சிறு தவறுகளைக் கூட தங்கள் வேலைத்திட்டமாக எடுத்துக் கொள்ளும் எதிர்க்கட்சிகள் ஏன் காயத்ரிக்காக வாதாடவில்லை? தமிழர் உரிமை, திராவிடர் உரிமை, இந்து உரிமை, இந்தியர் உரிமை, எனப் பேசும் யாரும் ஏன் காயத்ரியின் உரிமையைப் பேச மறுக்கிறார்கள்?

எல்லாவற்றையும் சாதியாகப் பார்க்கிறீர்கள் என்று பேரவை உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் இயக்கங்களைக் கேள்விக்குள்ளாக்கும் எல்லா 'சனநாயகவாதிகளையும்' பார்த்துப் பணிவாகக் கேட்கிறோம். காயத்ரியை சாதியாக பார்த்தது யார்? ஆக, காயத்ரியின் படுகொலைக்குப் பின்னால் சாதியம் இருக்கிறது. காயத்ரி படுகொலை போன்ற வன்கொடுமைகள் என்பது சிக்கலான சாதிய சமூகத்தின் வெளிப்பாடு. எனவேதான், சாதிய அமைப்பை தகர்க்காமல் வன்கொடுமைகளுக்கு முடிவு கட்ட முடியாது. சாதிய அமைப்பைத் தகர்க்க நமக்கு இருக்கும் ஒரே வழி அம்பேத்கர் காட்டிய வழிதான். நியாயமாக இவ்வளவு சிக்கல்களுக்குப் பிறகு வேறெந்த மக்கள் தொகுப்பாக இருந்தாலும் பிரிந்து போகத்தான் முடிவெடுத்திருந்திருப்பார்கள். ஆனால், பட்டியலின மக்கள் இவ்வளவுக்குப் பிறகும் சேர்ந்து வாழவே விரும்புகிறார்கள். அப்படியானதொரு சேர்க்கைக்கு தடையாக இருக்கும் சாதியை ஒழிக்க விரும்புகிறார்கள்.

தனிப்பட்ட விவேகானந்தா கல்லூரி தாளாளர் கருணாநிதி மட்டுமே நம்முடைய எதிரி அல்ல. சாதியத்தைக் கட்டிக்காக்கும் இந்த சமூகக் கட்டமைப்பே எதிரியாகும். சாதிய அமைப்பு முறையை இல்லாதொழிக்கும் ஒரு நீண்ட நெடிய போரில் இடையறாது, சமரசமில்லாது போராடுவதே வன்கொடுமைகளுக்கு எதிராக வாளெடுப்பது என்பதால், சாதிய அமைப்பு முறைக்கு எதிராக வாளெடுப்போம்! வாழ்க்கைக்கு போர் தொடுப்போம்!!

Pin It