இந்திய நாட்டு மக்கள் அனைவரும் மொழி, சாதி மற்றும் மதம் போன்றவற்றில் வேறுபட்டிருந்தாலும் ‘ஒரே நாட்டவர்’ என்ற உணர்வால் ஒன்றுபட்டுள்ளனர். இந்த ஒற்றுமை உணர்வு வளர வேண்டுமென்றால், நாட்டு மக்கள் அனைவரும் இந்திய அரசால் சரிசமமாக நடத்தப்பட வேண்டும்.

ஆனால் அப்படிச் செய்ய வேண்டிய இந்திய அரசே, ஆங்கிலவழியிலும் இந்திவழியிலும் 12-ஆம் வகுப்புப் பயின்ற மாணவர்களை மட்டும் அனைத்திந்திய இளநிலை வேளாண் நுழைவுத்தேர்வில் பங்குபெற அனுமதிக்கிறது. பிற மாநிலமொழிகளைப் பயிற்றுமொழிகளாகக் கொண்டு பன்னிரெண்டாம் வகுப்புப் பயின்ற மாணவர்களை இந்நுழைவுத்தேர்வில் பங்குபெற அனுமதிக்காமல், அவர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்துகிறது.

ஏன்? இந்திவழி மற்றும் ஆங்கிலவழியைத் தவிர்த்துப் பிற மாநிலமொழிகளைப் பயிற்றுமொழிகளாகக் கொண்டு பன்னிரெண்டாம் வகுப்புப் பயின்ற மாணவர்களை நடுவண் அரசுத் தடுக்கிறது. இவ்வாறுத் தடுப்பதன் நோக்கம் என்ன? இத்தெளிவுகளைப் பின்வரும் வரிகளில் அலசுவோம்.
 
அனைத்திந்திய இளநிலை வேளாண் நுழைவுத்தேர்வு:

முதலில் அனைத்திந்திய இளநிலை வேளாண் நுழைவுத்தேர்வைப் பற்றிப் பார்ப்போம். இந்நுழைவுத்தேர்வு, ஆங்கிலத்தில் AIEEA-UG அதாவது All India Entrance Exam for Admissions என்று அழைக்கப்படுகிறது. நடுவண் அரசின் கட்டுப்பாட்டில், 10 நடுவண் வேளாண் பல்கலைகள் (Central Agricultural Universities-CAU) உள்ளன. அதுபோல, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் 52 மாநில வேளாண் பல்கலைகள் (State Agricultural Universities) உள்ளன. இந்நுழைவுத்தேர்வில், நடுவண் வேளாண் பல்கலைகளிலுள்ள அனைத்து இளநிலை வேளாண் பட்டப்படிப்பு இருக்கைகள் மற்றும் மாநில அரசின் வேளாண் பல்கலைகளில் அனைத்திந்திய ஒதுக்கீடுக்கு (All India Quota) வழங்கப்படும் 15 விழுக்காடு இளநிலை வேளாண் பட்டப்படிப்பு இருக்கைகள் ஆகியன பங்கு பெறுகின்றன. ஆண்டிற்கு 6000 இளநிலை இருக்கைகள் உத்தேசமாக உள்ளன.

12-ஆம் வகுப்பு மாணவர்கள் இங்கு 4 வருட இளநிலை வேளாண் படிப்புகளான B.Sc. (வேளாண்மை), B.Sc. (வனவியல்), B.Sc. (தோட்டவியல்), B.E. (வேளாண் பொறியியல்)...போன்றவைப் பயில்வதற்கு, இந்நுழைவுத்தேர்வை எழுத வேண்டும்.
 
நடுவண் அரசின் புலைமைத்தொகை மற்றும் குறைந்தக் கல்விக் கட்டணத்துடன் இங்குப் பயிலும் மாணவர்கள், கடை வருடம் படித்துக் கொண்டிருக்கும் போதே, நடுவண் அரசின் நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டுத் தனியார் நிறுவனங்களில், அதிக அளவுச் சம்பளத்தில், வளாகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

அனைத்திந்திய இளநிலை வேளாண் நுழைவுத்தேர்வின் வடிவம்:

இந்நுழைவுத்தேர்வு கொள்குறி வினா வடிவத்தில் (Objective type with multiple choice answers) அமைந்தது. அதாவது, ஒரு வரியில் வினா எழுப்பப்பட்டிருக்கும். அதற்கு நான்கு விடைகளைக் கொடுத்திருப்பார்கள். சரியான விடையைக் கண்டுபிடித்து, அதன் விடைக்குறியீடை, ஒளிக்காந்தப் படிப்பி எனப்படும் O.M.R. (Optical Memory Reader) விடைத்தாளில் நிழலிட (shade) வேண்டும். அவ்வளவே! இவ்விடைத்தாள் கணினி மூலம் திருத்தப்படுகிறது.

நமது பிரச்சினை என்னவென்றால், இவ்வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே வழங்கப்படுகிறது.

தமிழ்வழிக்கல்வி மாணவர்களின் கண்ணீர்:

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 7.5 இலட்சம் மாணவர்கள் பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதுகிறார்கள். இவர்களில், 6.5 இலட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெறுகிறார்கள். இந்த 6.5 இலட்சம் மாணவர்களில் 5 இலட்சம் மாணவர்கள் (75 விழுக்காடு) தமிழ்வழிக்கல்வியில் பயின்றுத் தேர்ச்சி பெறுபவர்கள். இவர்களில் ஒருவர் கூட இந்நுழைவுத்தேர்வை எழுத முடியாது. காரணம், அவன் பயின்றப் பயிற்றுமொழியில் வினாக்கள் கொடுக்கப்படவில்லை.

இந்த நிலைமை தான், தெலுங்கு, உருது, பஞ்சாபி, சிந்தி, மராத்தி, குஜராத்தி மற்றும் ஒடியா மொழிகளைப் பயிற்றுமொழிகளாகக் கொண்டு, 12-ஆம் வகுப்புப் படிக்கும் மாணவர்களுக்கும் ஏற்படுகிறது.

ஏன் இந்த நிலைமை?

நமது நாடு, ஆங்கிலவழியில் கல்வி பயிலும் மேட்டுக்குடி அரசியல்வாதிகளிடமும் இந்தி மொழிச்சார்பு கொண்ட அரசியல்வாதிகளிடமும் சிக்கிக் கொண்டிருப்பதால் தான் இதர மாநிலமொழிகளைப் பயிற்றுமொழிகளாகக் கொண்டு 12-ஆம் வகுப்புப் பயிலும் மாணவர்களுக்கு இக்கொடுமை ஏற்பட்டுள்ளது.

தகவல் உரிமைச் சட்டம் வழியாக AIEEA-UG 2012 பற்றி பெறப்பட்டத் தகவல்கள்:

1996-ஆம் ஆண்டு தான் இந்நுழைவுத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. அன்றிலிருந்து, 2000-அம் ஆண்டு வரை வினாத்தாள் ஆங்கிலத்தில் மட்டுமே வழங்கப்பட்டு வந்திருக்கிறது. பின்னர், 2001-ஆம் ஆண்டிலிருந்து தான் ஏற்கனவே உள்ள ஆங்கில வினாத்தாளில் கூடுதலாக இந்தியிலும் வினாக்களை மொழிபெயர்த்து-அச்சிட்டு வழங்கியுள்ளனர். அதாவது, தற்போது வினாத்தாள் ஆங்கிலம்-இந்தி இருமொழிகளில் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இதனால், இந்திவழியில் 12-ஆம் வகுப்புப் பயிலும் மாணவர்களும் இந்நுழைவுத்தேர்வில் பங்குபெற வழிவகைச் செய்யப்பட்டுள்ளது. நாம் இதனைக் குறை கூறவில்லை. வரவேற்கிறோம்! ஆனால், இதே உரிமை, தமிழ் உட்பட இதர எட்டு மாநில பன்னிரெண்டாம் வகுப்புப் பயிற்றுமொழிகளில் படித்த மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்றுதான் கேட்கிறோம்.

மேலும், பல உண்மைகள் தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் வெளிக்கொணரப்பட்டுள்ளது. அவைகளை இங்கு கூறுகிறேன்.

Ø AIEEA-UG 2012 நுழைவுத்தேர்வில், 18,000 மாணவர்கள் இந்திமொழியில் அமைந்த வினாத்தாளைத் தேர்ந்தெடுத்து இந்நுழைவுத்தேர்வை எழுதியிருக்கிறார்கள். இந்திமொழியில் அமைந்த வினாத்தாளை இந்திவழிக்கல்வியில் 12-ஆம் வகுப்புப் பயின்ற மாணவர்களேப் பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Ø மொத்தமுள்ள 6,000 இருக்கைகளில், 1500 இருக்கைகள் (ஏறத்தாழ 25 விழுக்காடு) இந்திவழிக்கல்வியில் (Hindi medium) 12-ஆம் வகுப்புப் பயின்று இந்திமொழியில் வினாத்தாள் வாங்கி நுழைவுத்தேர்வை எழுதிய மாணவர்கள் பெற்றுள்ளனர். இவர்களால் முடியும் போது, தமிழ்வழிக் கல்வி மாணவர்களால் முடியாதா?

Ø இதர எட்டு மாநில மேல்நிலைப் பயிற்றுமொழிகளிலும் வினாக்களை மொழிபெயர்த்து அச்சிட்டு வழங்கும் எண்ணம் இல்லை என்றுத் திட்வட்டமாகக் கூறி விட்டனர்.

Ø தமிழ்நாட்டிலுள்ள தமிழக அரசின் இரு வேளாண் பல்கலைகள் இந்நுழைவுத்தேர்வில் பங்குகொண்டு 15 விழுக்காடு இளநிலை இருக்கைகளை அனைத்திந்திய ஒதுக்கீடு என நடுவண் அரசிற்கு வழங்குகின்றன. அவ்வாறு, கோவை வேளாண் பல்கலைக்கழகம் ஆண்டிற்கு 92 இடங்களையும் சென்னைக் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை 6 இடங்களையும் இந்நுழைவுத்தேர்வுக்கு வழங்குகிறது.

அனைவருக்கும் இளநிலை வேளாண் பட்டப்படிப்பில் ஒரே நிலைமை தான்:

ஒரு மாணவன் இந்திமொழியில் நுழைவுத்தேர்வு வினாத்தாள் வாங்கினாலும் தமிழ்மொழியில் நுழைவுத்தேர்வு வினாத்தாள் வாங்கினாலும் தெலுங்கில் நுழைவுத்தேர்வு வினாத்தாள் வாங்கினாலும்............இளநிலைப் பட்டப்படிப்பை அனைவரும் ஆங்கிலத்தில் தான் பயிலப் போகிறார்கள். மேலும், இந்திவழியில் 12-ஆம் வகுப்புப் பயின்ற ஒரு மாணவன் இந்தியில் அமைந்த நுழைவுத்தேர்வு வினாத்தாளை வாங்கி, நுழைவுத்தேர்வு எழுதி, வெற்றி பெற்று, ஆங்கிலவழியில் இளநிலை வேளாண் பட்டப்படிப்பு படிக்கும் போது, ஏன் தமிழ்வழிக்கல்வி மாணவனால் முடியாதா? நிச்சயமாக முடியும்.

மாநில மொழிகளை அழிக்கும் நடுவண் அரசு:

இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட 9 மாநிலத்தவர்களுக்கு மட்டும் அவர்களது தாய்மொழியான இந்திவழியில் 12-ஆம் வகுப்பு வரைக் கல்வி கற்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஏனென்றால், இந்திவழிக்கல்வியில் பயிலும் மாணவனுக்கு இந்நுழைவுத்தேர்வை எழுதும் வாய்ப்பு உள்ளது. எனவே, ஆங்கிலவழிக்கல்வி எதற்கு என்று, இந்தி மாநிலத்தவர்கள் இந்தி வழியில் தான் பன்னிரெண்டாம் வகுப்புவரைப் பயில்வார்கள்.

ஆனால், இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டிராத மாநிலத்தவர்கள் தங்கள் மாநில மொழிகளில் கல்வி கற்றால், இந்நுழைவுத்தேர்வை எழுத முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, அவர்கள் தங்கள் தாய்மொழியை உதறிவிட்டு ஆங்கிலவழியில் கல்விகற்க முயல்கிறார்கள். இதனால் மாநிலமொழிகள் அழிகிறது; அழிக்கப்பட்டு வருகிறது.

மாநில மொழிகள் அழிப்பில் நடக்கும் பொருளாதாரச் சுரண்டல்:

இந்நுழைவுத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டிலிருந்து, இதுவரை தமிழ்வழியில், தெலுங்குவழியில், மராத்திவழியில், உருதுவழியில், சிந்திவழியில், ஒடியா வழியில், பஞ்சாபி வழியில் மற்றும் வங்காளி மொழியில் பன்னிரெண்டாம் வகுப்புப் பயின்ற ஒரு மாணவன் கூட இந்நுழைவுத்தேர்வில் பங்குபெற்றது இல்லை. பங்குபெற்றால் தானே தேர்ச்சி பெற முடியும். தேர்ச்சி பெற்றால் தானே, நடுவண் வேளாண் பல்கலைகளில் பயில முடியும்.

இந்திமொழியில் மட்டும் ஏன் வினாத்தாட்கள் அளிக்கிறீர்கள் என்றுக் கேட்டால் அலுவல்மொழிச் சட்டத்தைச் சுட்டுகிறார்கள். இந்திவழியில் படித்த மாணவன் மட்டும் தான் இந்தி வினாத்தாளை வாங்குவான் என்பது நிதர்சனமான உண்மை. எனவே, அலுவல்மொழிச் சட்டத்தின் மூலம், இந்தியிலும் வினாக்களை மொழிபெயர்த்து வழங்குவது, இந்திவழிக்கல்வி மாணவர்களுக்கு மட்டுமே உதவுகிறது. மேலும், அலுவல்மொழிச் சட்டம் பிற மாநிலப் பன்னிரெண்டாம் வகுப்புப் பயிற்றுமொழிகளிலும் வினாக்களை மொழிபெயர்த்து அச்சிட்டு வழங்குவதற்கு எவ்விதத் தடையும் தெரிவிக்கவில்லை.

இதில் மிகப்பெரிய உண்மை என்னவென்றால், “இந்திவழிக்கல்வி மாணவர்கள் இந்நுழைவுத்தேர்வில் பங்குபெறவில்லையென்றால் வினாக்களின் மொழிபெயர்ப்பு இந்தியில் இருக்காது.” எனவே, இது இந்திமொழி வளர்ப்பு என்ற பெயரில் நடக்கும் ஒரு பச்சைப் பொருளாதாரச் சுரண்டல்.

எப்படித் தப்புவது?

இந்தியாவில் உள்ள இந்தி-ஆங்கிலம் பயிற்றுமொழிகளைத் தவிர்த்து இதர எட்டு மாநிலப் பயிற்றுமொழிகளிலும் வினாக்களை மொழிபெயர்த்து நடுவண் அரசு வரும் 2013-14 கல்வி ஆண்டிலிருந்து வழங்க வேண்டும்.

அப்படிச் செய்ய இந்திய அரசுத் தவறுமானால், இருபத்தோராம் நூற்றாண்டின் மொழித்தீண்டாமையாக இது வரலாற்றில் பதிவு செய்யப்படும். “இந்தியாவின் அப்பர்த்திட்” ஆக இப்பிரச்சினை உருவெடுக்கும். எனவே, இந்திய அரசு, இதர எட்டு மாநிலப் பன்னிரெண்டாம் வகுப்புப் பயிற்றுமொழிகளிலும் வினாக்களை மொழிபெயர்த்து-அச்சிட்டு, தொடர்வண்டிப் பணித்தேர்வு வினாத்தாளைப் போல் வழங்க வேண்டும். அப்போது தான் சமத்துவம் மலரும்.

Pin It