காங்கிரசின் குரலாய் தோழர் தா.பா என்ற கட்டுரையை திரு கமலன் அவர்கள் எழுதியுள்ளார். கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஏற்பட்ட பிளவுகள், கொள்கை நிலைபாடுகளை தனக்கு வசதியாக தோழர் தா.பா.விலிருந்து தொடங்கிவிட்டார். உண்மையில் தோழர் பி.டி.ரணதிவே அவர்களது 1948ம் ஆண்டைய செயல்பாடுகளிலிருந்து தொடங்கி இருக்க வேண்டும். 1964-ல் ஒன்றுபட்ட கட்சியாக இருந்தபோது அதில் சிறுபான்மையினர் 32 பேர் பிரிந்து தனியாக சி.பி.எம்.ஐ தொடங்கினர். இந்திய அரசு குறித்தும் முதலாளித்துவம் குறித்தும் இரண்டு கருத்துகள் இருந்தாலும் அமைப்பியல் ரீதியாக பிளப்பது புரட்சிகரமானது என பிளந்தது முதலில் யார்? அடுத்தவரை சுட்டுவிரல் காட்டி குற்றஞ் சுமத்துகிறபோது மற்ற மூன்று விரல்களும் தன்னையே காட்டுகிறது என்பதை மறந்துவிட்டு நறுமணம் கமழ வேண்டிய கமலன், நூற்நாற்றம் கமழலாமா?

ஒன்றுபட்ட சென்னை ராஜதானியின் சட்டமன்றத்திற்கான தேர்தல் நடைபெற்று 62 இடங்களில் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றிபெற்றது. ஆட்சி அமைத்துவிடுமோ என அஞ்சிய காங்கிரஸ் கொல்லைப்புற வழியாக ராஜாஜியை அணுகி, சில ஜாதிக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியைப் பிடித்தது. அவர் தமிழகத்தில் குலக்கல்வித்திட்டத்தை கொண்டுவந்து நுழைத்தபோதுதான் திராவிட இயக்கங்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்த தொடங்கின. இத்திட்டத்தை அமல்படுத்த சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடந்தபோது தோழர் பி.ராமமூர்த்தி முனிவர்கள் துறவறம் மேற்கொள்வதைப் போல காஷ்மீர் சென்றார். அதனால்தான் ஒரு வாக்கு வித்தியாசத்தில் இத்திட்டம் அமலானது. இந்த 'அவாள்' ஈர்ப்பை தி.மு.க. தெருதெருவாக பிரச்சாரம் செய்து தான் வளர்ந்தது என்பதை தங்கள் கட்சிகளின் மூத்த தோழர்களைக் கேட்டுணர்ந்து கொள்க. இலக்கியப் பேராசான் 'ஜீவா' அவர்களின் பெயரில் சென்னையில் ஒரு நினைவுப் பூங்கா உருவாக்கி அதன் திறப்பு விழாவிற்கு சி.பி.எம். தலைவர்களை அழைத்தபோது திரிபுவாதியின் பெயரால் அமைந்த பூங்காவைத் திறக்கும் விழாவில் நாங்கள் கலந்து கொள்ள முடியாது என்றவர்கள் இன்று எந்த நிலைபாட்டுக்கு வந்துள்ளார்கள்? 

பெரியார் அவர்களை ஜனசக்தி பத்திரிக்கையில் தந்தை பெரியார் என எழுதியதால் தோழர் தா.பா அன்று ஒன்றுபட்ட கட்சிக்குள்ளேயே இவர்களால் எவ்வாறு நடத்தப்பட்டார், பெரியார் ஒரு 'ஜாதி துவேஷி' என்று அவர்களால் அழைக்கப்பட்டார் என்பதையும் நினைவில் கொள்வது நல்லது. காகிதத்தில் ஒர் ஆயுதமாக வெளிவரும் ஜனசக்தி நாளிதழ், தீக்கதிரிடமிருந்து மக்கள் நாளிதழ் என்பதை திருடிக்கொண்டதாக போகிற போக்கில் கூறியிருப்பது தாங்கள் தான் எல்லாவற்றிலும் மேலானவர்கள், முதன்மையானவர்கள் என்ற சிந்தனைப் போக்கும், மக்கள் என்ற வார்த்தையை தாங்கள் பேட்டண்ட் வாங்கிவிட்டதாக கருதுவதும்தான் காரணமாகும். இந்தியா பெற்ற அரசியல் விடுதலையைக்கூட ஏற்காமல் பல ஆண்டுகள் புறக்கணித்த அவர்கள், சி.பி.ஐ ஒரு நாட்டின் விடுதலையை அங்கீகரித்துக் கொண்டாடியதைத் தொடர்ந்து தாங்களும் ஆண்டுதோறும் தங்களின் தலைமை அலுவலகத்தில் கொடி ஏற்றி கொண்டாடி வருகின்றனர்.

பாரதியை பூர்ஷ்வாக் கவிஞன் எனப் புறந்தள்ளினார்கள். பாரதிக்கு முற்போக்கு கவி சாம்ராஜ்யத்தின் தலைமைப் பட்டத்தை சி.பி.ஐ. அளித்தது; பாரதி விழாக்களை நடத்தியது. இப்போது சி.பி.எம்மும் கொண்டாடி வருகிறது. சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரை கம்யூனிஸ்ட் அல்ல என்று சொல்லித் திரிந்தவர்கள் இப்படி வடிகட்டிய வறட்டுத்தன வரலாறுகளை மறைத்து விட்டு, சி.பி.ஐ.யே தவறு என்று வெளிப்படையாக ஒத்துக்கொண்ட காங்கிரஸ் சார்பு நிலையை மட்டும் விமர்சிப்பது சறியா? பிளவுக்குப்பின் தவறே செய்யாத கட்சியா சி.பி.எம்.? அது மக்கள் மத்தியில் வெளிப்படையாக எப்போதாவது தனது தவற்றை ஏற்று சுட்டிக்காட்டியதுண்டா? ஏன்?... டெல்லியில் பாரதி விழாவில் தா.பா. ஆங்கிலத்தில் பேசியதை விமர்சிக்கிறார்களே, நம் மொழியின் பெருமையை, பண்பாட்டை மொழி தெரியாத மக்கள் இருக்கும் இடத்தில் பிறப்பால் தமிழராக இருந்தாலும் ஆங்கிலத்தில் பேசி புரிய வைப்பதில் என்ன தவறு? 

தோழர் தா.பா. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்து யு.சி.பி.ஐ. என்ற கட்சியைத் தொடங்கியது உண்மை. அது காங்கிரஸ் ஆதரவு நிலை எடுத்ததும் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனதும் உண்மை. ஆனால் அது தவறானது என்பதை உணர்ந்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்ததும் உண்மை. அவர் சி.பி.ஐ.யில் இணையப் போகிறார் என்ற தகவல் கிடைத்தவுடன் சி.பி.எம். மூத்த தலைவர்கள் சிலர் அவரைச் சந்தித்து சி.பி.ஐ.யில் இணைய வேண்டாம், தமிழ்நாட்டில் மூன்று இடதுசாரிக் கட்சிகளாக இணைந்து இயங்கலாம் என ஆர்வம் காட்டியது எதனால்? 

உத்தபுரம் தீண்டாமைப் பிரச்சனை குறித்து திடீர் ஞானஉதயம் எப்போது வந்தது? மதுரை மாவட்டத்தில் பி.ராமமூர்த்தி, சங்கரையா, என்.வரதராஜன், ஏ.பாலசுப்பிரமணியன், தோழியர் ஜானகி, மோகன் உட்பட பலர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தும் இது குறித்து ஒரு முறையேனும் சட்டமன்றத்திலோ பாராளுமன்றத்திலோ ஏன் பேசவில்லை? புதிய தமிழகத்திலிருந்து சிலர் விலகி சி.பி.எம்.மில் இணைந்த பிறகுதான் இந்தப் பிரச்சனையை அவர்கள் எடுத்தனர். சாதாரண உழைப்பாளி மக்களிடத்தில் பிளவு வந்திடாது கிராமத்தின் ஒற்றுமையைக் காத்தலும் அவசியம்; அதே நேரத்தில் சாதி ஆதிக்கம் வந்துவிடவும் கூடாது என்பதால் தான் தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலைமையில் அமைதிக்குழு அமைக்கப்பட்டு இரண்டு மக்களிடமும் அமைதியை நிலைநாட்ட சி.பி.ஐ. முயற்சி எடுத்தது. இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் அந்த ஊரைச் சார்ந்த இரண்டு பகுதி சமூதாயப் பெரியவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறுவது எனறும் மக்கள் எந்தவித பாகுபாடும் இன்றி ஒற்றுமையோடு வாழ்வது என்றும் ஒரு சிறப்பான முடிவை எடுத்துள்ளனர். இதில் உழைக்கும் மக்கள், விவசாயிகள் மத்தியில் ஒற்றுமை கட்டப்பட வேண்டிய பொறுப்போடுதான் சி.பி.ஐ. செயல்பட்டிருக்கிறது.

தீண்டாமை, சாதிக் கொடுமைகளுக்கு முடிவு கட்ட தஞ்சைத் தரணியில், நெல்லையில், இன்னும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வீரத்தியாகம் செய்தது சி.பி.ஐ. அதன் அமைப்பியல் கட்டமைப்பில் தேசியச் செயலாளராக, தமிழ் நாட்டில் கிடைத்த ஒரே ஒரு மாநிலங்களவை உறுப்பினர் வாய்ப்பு வந்தபோது தோழர் தா.பா. தலைமையில் தோழர் டி.ராஜாவைத் தான் தேர்ந்தேடுத்தது. சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 10 தொகுதிகளில் 5 தொகுதிகளில் தலித்துகள் போட்டியிட்டு 5 பேரும் வெற்றி பெற்றுள்ளனர். மாநில நிர்வாகக்குழுவில் 8 பேர் தலித்துகள், செயற்குழுவில் 9 பேரில் 3 பேர் தலித்துக்கள், துணைச்செயலாளர்கள் இரண்டு பேரில் ஒருவர் தலித். வர்க்க வெகுஜன அமைப்புகளிலும் பலர் பொறுப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது சி.பி.ஐ. யை தலித் விரோதக் கட்சி என்றும் கூறுவதும் கதை கட்டுவதும் தொடர்கிறது.

சி.பி.எம். மில் எத்தனைப் தலித்துகள், பழங்குடியினர் பொறுப்புகளில் உள்ளனர்? பழங்குடியினர் அதிகமாக வாழும் திரிபுரா போன்ற மாநிங்களில் பழங்குடி இனத்தைச் சார்ந்த ஒரு முதல்வரைக்கூட சி.பி.எம்.மால் உருவாக்க முடியாதது ஏன்? 

கேரள சி.பி.எம்.மில் நடைபெறும் உள் கூத்துகள் தினமும் செய்திகளாக வருவதும் சி.பி.எம்மிலிருந்து பிரிந்தவர்கள் படுகொலை செய்யப்படுவதும் அதை பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிற மாவட்டச்செயலாளர் மணி எப்படி எப்படியெல்லாம் கொலைசெய்தோம் என பகிங்கிரமாகப் பேசியதும் அதனை பத்திரிகைகள் வெளியிட்டதும் நீதிமன்றமும் அதனை ஏற்று கைது செய்யச் சொன்னதும் நடந்ததே?

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெ.தி.க.வைச் சார்ந்த பழனி படுகொலையோடு தொடர்பு படுத்தமுடியுமா? இதே பழனி தோழர்கள் ராமச்சந்திரன், லகுமையாவோடு சி.பி.எம்.மில் பணியாற்றிய போது பழனி ஒரு பெண்னோடு தகாத உறவு (மைத்துனரின் மனைவி) வைத்து அப்போதைய கிருஷ்ணகிரி மாவட்டக் குழுவில் விவாதித்து கட்சியை விட்டு நீக்கப்பட்டார். வரலாறு இப்படி இருக்க இக்கொலை வழக்கை சிலர் புரியாமல் சி.பி.ஐ மீதும் சட்டமன்ற உறுப்பினர் மீதும் குற்றச்சாட்டும்போது சி.பி.எம். 'ஜால்ரா' அடித்து உண்மையை மறைக்க முடியுமா? 

தோழர் டபிள்.யூ.ஆர். வரதராஜன் மீது ஒரு பெண் பழி சுமத்தி அவரது தற்கொலைக்கு காரணமாக அமைந்துவிட்டு அவருக்கு புகழஞ்சலி கூட்டத்தையும் மிகச் சாமர்த்தியமாக சி.பி.எம். நடத்தியதே அது எப்படி? இதனை ஒரு பொது விவாதம் நடத்தத் தயாரா? மே. வங்கத்தில் வளமான விவசாய நிலங்களை பிலிபைன்ஸ் நாட்டைச் சார்ந்த ஒரு கம்பெனிக்கு தாரை வார்தததே, அந்த தொழில் கூடத்தின் தலைவர் தான் பிலிப்பைன்ஸ் நாட்டின் பல்லாயிரக்கணக்கான கம்யூனிஸ்ட்கள் நரவேட்டையாட காரண‌மாய் இருந்தவர் என்றும் அவருக்கு மே.வங்க அரசு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தது என்றும் விமர்சனம் வந்ததே... விவசாயிகள் அரசின் நிலப்பறியலுக்கு எதிராக போராடிய போது ஒரு பொறுப்பான ஆட்சி அழைத்து பேசியிருக்க வேண்டும். துப்பாக்கியால் பதில் சொன்னது எந்தவகை புரட்சிகர வர்க்கப் போராட்டம் என்பதையும் விளக்க வேண்டும். 

தினமணியில் வெளிவந்த மது விலக்கு குறித்த தவறான சித்தரிப்பை அப்படியே ஏற்றுக்கொண்டு இதில் கருத்துகள் வெளிவந்துள்ளது பூரண மது விலக்கு என்பது சிக்கல் நிறைந்தது. பல மாநிலங்கள் உள்ள நாட்டில் ஒரு மாநிலத்தில் மட்டும் கொண்டு வருவது கடினம் என்றுதான் கருத்துச் சொல்லியிருந்தார் தா.பா. 

தவறான தொடர்பால் எய்ட்ஸ் நோய் பரவுவதைத் தடுக்க ஒழுக்கத்தோடு இருங்கள் என்று அரசோ, அரசுசாரா நிறுவனங்களோ பிரச்சாரம் செய்வதில்லை ஆணுறை (நிரோத்)அணியுங்கள் என பிரச்சாரம் செய்வது அதனை ஆதரிப்பது ஆகாது. மாறாக உடனடி இலக்காக அந்த நோய்த் தொற்றிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதுதான். அதுபோலத் தான் மது விற்பனை நேரத்தைக் குறைப்பது, கடைகளின் எண்ணிக்கையைக் குறைப்பது, 18 வயதிற்கு உட்பட்டவர்கள் மது அருந்துவதை தடைசெய்வது, மது மறுவாழ்வு மையங்களை ஒவ்வொரு அரசு மருத்துவமனைகளிலும் ஏற்படுத்துவது, மதுவால் பாதிக்கப்பட்டவர்களில் மருத்துவ செலவுகளை அரசசே ஏற்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் தான் இதனை படிப்படியாக குறைக்கமுடியும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று ஆணைகள் மூலம் நிறைவேற்றிட இயலாது என்ற அடிப்படை சிந்தனைகளில் இருந்துதான் தோழர். தா.பா வின் கருத்துகள் அமைந்தன‌. வீண்பழி சுமத்துவது சரியல்ல. 

எல்லவாவற்றிற்கும் மேலாக ராஜபக்ஷேவின் அழைப்பின் பேரில் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுவோடு நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கரகராஜன் சென்று விருந்துண்டு திரும்பி, வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவது போல இலங்கைத் தமிழர்கள் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தான் வாழ விரும்புகிறார்கள் என காங்கிரஸ் குரலிலேயே பேட்டியளித்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளதே! இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய படுகொலையை மனித உரிமை மீறல்களை, சொந்த மக்களை முப்படைகளைப் பயன்படுத்தி இன அழிப்புப் போர் நடத்தியதை உலகமே கண்டித்தது. ஐ.நா. மனித உரிமை அவையில் தீர்மானம் கொண்டுவந்த நிலையில் இவர் இப்படிப் பேசியது எதனால்? சி.பி.எம்.மின் நிலைதான் என்ன? திறந்த விவாதத்திற்குத் தயாரா? தோழர் தா.பா. ராஜீவ்காந்தி படுகொலையைக் கண்டித்தார். அதே நேரத்தில் ஒரு படுகொலையைக் காரணம் காட்டி லட்சக்கணக்கான ஈழ மக்களை படுகொலை செய்த இலங்கை அரசுக்கு இந்திய அரசு உதவியதை விமர்சித்தார்; கண்டித்தார். இதில் என்ன தவறு?

சமீபத்தில் நடைபெற்ற சி.பி.எம்.மின் 20வது அகில இந்திய காங்கிரசில் அனைத்து நிலைகளிலும் காங்கிரஸ் எதிர்ப்பை அரசியல் நிலைபாடாக எடுத்து விட்டு குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரணாப் முகர்ஜியை சி.பி.எம். ஆதரித்தது எப்படி? தா.பா. காங்கிரஸ் குரல் என்றால் சி.பி.எம். காங்கிரஸின் நகலா?

- கோடைஇடி திருவாரூர்

Pin It