“நம் நாட்டின் நடுத்தர வர்க்கம் நாளொன்றுக்கு இருபது ரூபாய்க்கு ஐஸ்க்ரீமும், பதினைந்து ரூபாய்க்கு தண்ணீர் பாட்டிலும் வாங்கக் கூடிய அளவிற்கு திராணியுடன் தான் இருக்கிறது” – ப.சிதம்பரம்.

p_chidambaram_380சமீபத்தில் ப.சிதம்பரம் வெளியிட்ட இந்த கருத்திற்கு கடுமையான கண்டனங்கள் வெளிவந்தன. இதில் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், அவர் சொன்ன வாசகம் “பொய்” என்று யாரும் மறுக்க முடியாது. விலைவாசி உயர்வால் அவதிப்பட்டாலும், ஆடம்பரத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்கிற நுகர்வு வெறியுடன் இன்றைய நடுத்தர மக்கள் அலைந்து கொண்டிருப்பதை கருத்தில் கொண்டு நாம் விமர்சனத்தை முன் வைக்க வேண்டும.

            நம் நாட்டின் உற்பத்தி முறையும், பொருளாதார அமைப்பும், மூன்று விழுக்காடு மேட்டுக்குடி வர்க்கத்தினரின் உபரி தேவைகளுக்காக இயங்குகிறது என்பதை நாம் உணர வேண்டும். நாம் இப்போது எதிர்க்க வேண்டியது ப.சிதம்பரம் தெரிவித்த அறிக்கையை அல்ல. இந்த மக்களை நுகர்வு கலாச்சாரத்திற்குள் இழுத்துச் செல்லும் தனியாயர்மயக் கொள்கைகளையும், அதற்குத் துணைபுரியும் ப.சி.போன்ற அரசியல்வாதிகளையும் தான்.

தன்னாட்சியிலிருந்து தனியார் மயம்:-

            பிரிட்டிஷ் அரசு, வெளியேறியவுடன், வேளாண்மை, மற்றும் தொழில்துறை சுயசார்புடன் முன்னேற வேண்டும் என்கிற அடிப்படையில் ஐந்தாண்டுத் திட்டங்கள் திட்டமிடப்படுவதாக நேரு கூறினார். அவர், “கலப்பு பொருளாதார” முறையை ஊக்குவித்து, சமதர்ம லட்சியத்தை எட்ட வேண்டும் என்றார். தனியார் துறையின் வளர்ச்சி, பொருளாதார தளங்களின் மீது பேராதிக்கம் செலுத்தக்கூடாது என்கிற அடிப்படையில் கட்டுப்பாடுகள் ஆரம்பத்தில் வலியுறுத்தப்பட்டன. அதன் பிறகு, பொருளாதார வளர்ச்சியை கணக்கிட 1967ம் ஆண்டு திரு.அசாரி தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அக்குழு தனியார் நிறுவனங்கள், உரிமம் வழங்கல் முறையை எவ்வாறு தவறாகப் பயன்படுத்தின என்பதை ஆதாரங்களுடன் வெளியிட்டது. தொழில் உரிமம் பெற்ற தனியார் நிறுவனங்கள், பொருளாதார மேம்பாட்டிற்குத் துணை புரியாத 'நுகர்வுப் பொருள்' தொழில்களில் அன்னிய முதலீட்டோடு செயல்பட்டன போன்ற பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன.

            மேல்தட்டு வர்க்க நலனுக்காக மட்டும் செயல்பட்ட தனியார் நிறுவனங்கள் 44 விழுக்காட்டிற்கும் அதிகமான நிதியுதவியை பொதுத்துறை நிதி நிறுவனங்களிடம் பெற்றன. அதாவது உழைக்கும் மக்கள் மறைமுகமாகவோ, நேரடியாகவோ செலுத்திய வரிப் பணம் தனியார் நிறுவனங்களின் கொள்ளை இலாபத்திற்குப் பயன்பட்டது என்பது வேதனையான உண்மை. இதே காலகட்டத்தில், பொதுத்துறை நிறுவனங்கள், பொதுத்துறை நிதி நிறுவனங்களிடமிருந்து 9 விழுக்காடே நிதியுதவி பெற்றன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தனியார் நிறுவனங்களின் இந்த கொள்ளையடிக்கும் போக்கை கட்டுப்ப‌டுத்த முன்னுரிமை வர்த்தக ஒழுங்குச் சட்டம் (1970) கொண்டு வரப்பட்டது. ஆனால், 1980-க்குப் பிறகு, வர்த்தக ஒழுங்குமுறைச் சட்டத்தில் தனியார்மயத்திற்கு ஆதரவான மாற்றங்கள் செய்யப்பட்டு அச்சட்டம் திருத்தியமைக்கப்பட்டது. பிறகு 90-க்குப் பிறகு அமலுக்கு வந்த LPG (Liberation, Privation, Globallation) தராளமயமாக்கல், தனியார் மயமாக்கல், உலகமயமாக்கல் கொள்கையின் மூலம் தனியார் மயம் தங்குதடையின்றி வாணிபம் செய்யும் அதிகாரத்தைப் பெற்றது.

            மக்களின் அடிப்படைத் தேவைகளை மய்யப்படுத்தாமல் மேட்டுக்குடியினரின் ஆடம்பரத் தேவைகளை பூர்த்தி செய்யும் இன்றைய ‘சந்தை' முறை உருவான வரலாறு இது தான். இந்த கணப்பொழுது கூட, பிரணாப் முகர்ஜி குடியரசுத்தலைவரானால், நிதிஅமைச்சர் மன்மோகன்சிங் பொறுப்போற்றுக் கொள்வார். அப்போது, சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு குவியும் என்ற கருதுகிறார்கள் பொருளாதார‌ நிபுணர்கள்.

 இந்த வரலாற்றுப் புரிதலோடு ப.சிதம்பரத்தின் விமர்சனங்களை அணுக வேண்டும். மேலும், ‘இந்தியா’ என்கிற எதேச்சாதிகார அமைப்பு மாநில அரசுகளின் நலனை புறக்கணித்ததன் விளைவாகவே, தனியார்மயமாக்கலும், நுகர்வு வெறியும் தலைவிரித்தாடுகிறது.

மாநில உரிமை பறிப்பும், பன்னட்டு நிறுவனங்களின் வேட்டையும்

            கடந்த 60 ஆண்டுகளில் மாநிலப் பட்டியலில் இடம் பெற்றிருந்த பல அதிகாரங்கள் மத்திய அரசுக்கும், பொதுப்பட்டியலுக்கும் மாற்றப்ப‌ட்டிருக்கிறது. 'புதிய பொருளாதாரக் கொள்கை' நிறைவேற்றப்பட்டதன் மூலம் மாநில, மத்திய, பொதுப்பட்டியல் இம்மூன்றிலும் குறிப்பிட்டுள்ள அதிகாரங்களில் இடம்பெறாத பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் பெருகி வருகிறது. மத்திய அரசின் பட்டியலிலுள்ள வங்கி, பங்குச் சந்தை, வான்வழிப் போக்குவரத்து, துறைமுகம், அஞ்சல், ஒலிபரப்பு, ஒளிபரப்பு, காப்புரிமை போன்ற துறைகளில் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் பெருகி வருகிறது.

            பெரியாரின் அடிப்படைக் கொள்கையான 'மாநில சுயாட்சி' உரிமையை இழந்ததன் விளைவாகவே இன்று பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் தலைவிரித்தாடுகிறது. மேலும் விகிதாச்சார ஒதுக்கீட்டை இன்று வரை முழுமையாக அமுல்படுத்தாதால், சட்டமன்றம், நீதித்துறை, நிர்வாகத்துறை ஆகிய மூன்றும் பார்ப்பன – பனியா மேட்டுக்குடி வர்க்க நலனை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. பெரும்பாலான உழைக்கும் மக்கள் புறக்கணிக்கப்படுகினற்னர்.

            மக்களை 'நுகர்வு கலாச்சாரத்திற்குள்' கொண்டு சென்ற அவலம், மாநில நலன் மறுப்பு, இட ஒதுக்கீடு மறுப்பு போன்றவை 'ஏக இந்தியா' மற்றும் இந்துத்துவ கொள்கைகளிலிருந்து துவங்குகிறது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக அரசியல்வாதிகளை சாடும் அதே நேரம், மக்களையும் அரசியல்படுத்த வேண்டும். நுகர்வுக் கலாச்சார மாயையில் மயங்கி கிடக்கும் மக்களை 'சவலைப்பிள்ளை'யாகப் பார்க்கும் பார்வை மாற வேண்டும். தனிமனிதனின் பேராசையின் விளைவாகவே அட்சய திருதி போன்ற 'இந்துத்துவ சந்தைகள்' உருவாகி வருகின்றன. மாற்றப்பட வேண்டிய இந்த சமூக அமைப்பை விமர்சித்த பெரியார், இந்த பாசிச, ஆதிக்க அமைப்பிற்கு வளைந்து கொடுக்கும் தனிமனிதனையும் சேர்த்தே சாடினார். அந்த துணிச்சலும், அறிவியல் நடைமுறையும் இன்றைய‌ அரசியல் தலைமையிடமும் இல்லை, இடதுசாரி அமைப்புகளிடமும் இல்லை. தனியார்மயத்தை எதிர்க்கும் பொதுவுடமை அமைப்புகள் ‘இந்தியா’ போன்றொரு அமைப்பில், சாதி, தேசிய இனச்சிக்கல், மாநில உரிமைச் சிக்கல் என்று பல்வேறு பிரச்சனைகளை கையில் எடுக்க வேண்டும். ஏனென்றால் இந்துத்துவ உளவியல், தனிமனிதனின் பேராசை, தேசபக்தி இம்மூன்றும் இந்தியாவில் உருவாக்கப்படும் நுகர்வு சந்தைக்கான முக்கிய காரணிகள் என்பதை உணரவேண்டும்.

- ஜீவசகாப்தன்

Pin It