காலையில எந்திரிச்சு பேப்பர புரட்டினா.. இன்னிக்கு கரண்டு கட்டு எந்த ஏரியாவுலன்னுதான் பாக்கத் தோணுது. அப்படி நம்மள போட்டு பாடா..ப் படுத்துது இந்த கரண்டு கட்டு. அரசாங்கமும் இன்னிக்கு, நாளக்கின்னு கரண்டு தட்டுப்பாட்ட போக்க கத சொல்லிக்கிட்டே இருக்கு. எல்லாரையும் போல நானும் நம்பிக்கிட்டுதான் இருந்தேன். என்னிக்காவது ஒருநாள்… முழுக்க, முழுக்க கரண்டு தட்டுப்பாடு இல்லாம வந்துருமுன்னு. ஆனா அது நம்மூருல நடக்கவே நடக்காது போல.. ஏன்னு கேக்கறீகளா? தமிழ்நாட்டுல உற்பத்தி பண்ணுற கரண்ட கூட வெளியூர்காரனுக்குத்தான் விக்கிறாங்களாம். அதுக்கு உதாரணமா ஒரு சம்பவம் தூத்துக்குடியில நடந்துருக்கு.

மத்திய அரசாங்கத்தோட பவர் கிரிட் கார்ப்பரேசன் ஆப் இந்தியா (www.powergridindia.com) அப்படிங்கற அமைப்பு தூத்துக்குடியில உள்ள தனியார் அனல் மின் நிலையத்தோட ஒரு ஒப்பந்தம் போட்டுருக்காங்க. அதாவது இந்து பாரத் அனல் மின் நிலையம் உற்பத்தி செய்யுற 1400 மெகாவாட் மின்சாரத்தையும், கோஸ்டல் எனெர்ஜென் நிறுவனம் உற்பத்தி செய்யுற 1200 மெகாவாட் மின்சாரத்தையும் கர்நாடகாவிற்கு கொடுக்கணும்னு ஒப்பந்தம் சொல்லுது. இந்து பாரத் கம்பெனி (www.ibpil.com) ஆந்திராவுல உள்ள ஒய்.எஸ்.ஆர். நண்பரோடதுன்னு சொல்றாங்க. கோஸ்டல் எனெர்ஜென் கம்பெனி (www.coastalenergen.com) இ.டி.ஏ. குழுமத்திற்கு (அதாங்க சலாவுதீன் இந்த ஊழல் புகாரெல்லாம் சொன்னாங்கல்ல அவருதான்) சொந்தமானதுன்னு சொல்றாங்க. இவங்களுக்கு நிலக்கரி கொண்டு வந்து கொடுக்கிறது யாரு தெரியுமா? ராஜாத்தி அம்மாளை பங்குதாரராக கொண்ட கனிமொழியின் முழு கண்காணிப்பில் உள்ள வெஸ்ட் கேட் லாஜிஸ்டிக் அப்படிங்கிற ஷிப்பிங் நிறுவனந்தான்.

சரி அதெல்லாம் இருக்கட்டும்!.. இப்ப என்ன பிரச்சனை தெரியுமா?

தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் பக்கத்துல கீழஈராலில் புதுசா ஒரு துணை மின் நிலையம் அமைக்கிறாங்க. இது மூலமா 765 கிலோ வோல்ட் மின்சாரம் சேலம் வழியா கர்நாடகா மாநிலம் பெங்களூர் பக்கத்துல மதுரகிரிக்கு கொண்டு போகப் போறாங்க. அதே மாதிரி மதுரை, சேலம் வழியாகவும் கர்நாடக மாநிலம் மதுரகிரிக்கு மின்சாரம் கொண்டு போகப்போறாங்க. இதுக்காக தூத்துக்குடி மாவட்டத்துல மேலமருதூர், குறுக்குசாலை, ஓட்டப்பிடாரம், எட்டையபுரமுன்னு பல ஏரியாவுல இப்போ உயர்அழுத்த மின்சார கோபுரம், அதான் பெரிய டவரு அமைச்சுகிட்டு இருக்காங்க. விவசாய நிலத்துல டவரு வேணாமுன்னு மேலமருதூர் ஊர்காரங்க 8 மாசமா போராடிப் பாத்தாங்க. அப்பப்போ பத்திரிகை, டிவிகாரங்களும் இதப்பத்தி ஏதாவது செய்தி போடுவாங்க. நைட்டுப் போல போலிசுக்காரங்க வந்து விவசாயிகள மிரட்டுவாங்க. இந்த ஏரியாவுல சுமார் 350 ஏக்கர் நிலத்துல மிளகாய், உளுந்து, கம்பு, பாசிப்பயறு, சோளம் அதாங்க மானாவாரி பயிரு வைச்சிருந்த விவசாயிகளுக்கு இடத்தக் கொடுக்க மனசில்ல. வெறும் இரண்டு செண்டு கொடுத்தா போதும் இரண்டு லட்சம் தாரோம்னு ஓட்டப்பிடாரம் தாசில்தாரும், குளத்தூர் இன்ஸ்பெக்டரும் கம்பெனிக்காரங்களுக்கு ஏஜெண்ட் மாதிரி பேச்சு வார்த்தையெல்லாம் நடத்துனாங்க. விவசாயிகள் மசியலை.

அனல் மின் நிலையத்துக்காரன் பாத்தான். கதை நடக்குற மாதிரி தெரியலை. சரி நம்ம வழியில இறங்கியிர வேண்டியதுதான்னு சொல்லிட்டு 7.7.2012 சனிக்கிழமை அதிகாலையில பத்து பன்னெண்டு வேனுல போலிசோட வந்து மேலமருதூர்ல இறங்கினாங்க. (அது கம்பெனிக்காரனோட போலிசு இல்லேங்க. நம்ம கவருமெண்டு போலிசுதான். அதிகாரி சொன்னா போணும்ல..). அங்கேயிருந்த மக்களெல்லாம் என்னமோ, ஏதோன்னு ஓடி வந்தாங்க. “யாரும் வீட்ட விட்டு வெளியே வரக்கூடாது” அப்படின்னு போலிசு அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவ போட்டது. அதிகாரிகள் இருக்காகல்லா (அவங்களும் கவருமென்ட் சம்பளம் வாங்குறவுகதான்) அவங்க நேரா பொக்லைன் மெசினோட போயி தனியார் கம்பெனிக்கு டவரு போட விவசாய நிலத்தில குழி தோண்ட ஆரம்பிச்சாட்டாங்க. கலெக்டரு உத்தரவுன்னு வேற சொன்னாங்க. இப்ப பருவ மழை பெஞ்சா விதைக்கலாம்னு கனவோட இருந்த ஏழை விவசாயிகளோட ஆசையில மண்ண அள்ளிப் போட்டுருச்சு அதிகார வர்க்கம். இந்த மாதிரி போனமாசம் இதே தேதியில 7.6.2012 வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில (கே.ஆர்.தாங்கல், பெருமாள்கவுண்டனூர், குருநாதபுரம்) விவசாயிகள அடிச்சுப் போட்டுத்தான் போலிசு உதவியோட நிலத்த எடுத்தாங்களாம்.

இதுக்கு பின்னாடி நிறைய அரசியல் இருக்குங்க. தமிழ்நாட்டுல 2010-11 ம் வருசத்துல நாம பயன்படுத்துன மொத்த மின்சாரம் 7499 கோடி யூனிட்டு. இதுல மாநில அரசுக்கு சொந்தமான மின்நிலையங்கள்ல இருந்து 2578.40 கோடி யூனிட்டு மின்சாரந்தான் உற்பத்தியானது. மீதி 4920.60 கோடி யூனிட்டுகள மத்திய மின் தொகுப்புலயிருந்தும், தனியார் மின் நிலயங்கள்ல இருந்தும் விலைக்கு வாங்கியிருக்கோம். இப்போ நடப்பு நிலவரப்படி நம்ம தமிழ்நாட்டுல 18,500 மெகாவாட்டுக்கான மின் நிலையங்கள தனியார் நிறுவனங்கள் கட்டிக்கிட்டு இருக்காங்க.

வணிக மின் நிலையங்கள் அப்படின்னு அழைக்கப்படுகிற இவங்களுக்கு எல்லா சலுகையும் (புறம்போக்கு, ஊரணி, கால்வாய்களை எல்லாம் ஆக்கிரமிக்கும் அளவிற்கு) அரசாங்கம் கொடுத்திருக்கு. ஆனாலும் அவங்க தயாரிக்கிற மின்சாரத்த நம்ம தமிழ்நாட்டுக்கு குடுக்கப் போறது இல்லையாம். அதாவது அவங்க மின்சாரத்துக்கு இந்தியாவிலயும், இலங்கை, பாகிஸ்தான், வங்காள தேசம் ஆகிய நாடுகளிலயும் யாரு அதிக விலை கொடுக்கிறாங்களோ அவங்களுக்கு கொடுக்கத் தயாரா இருக்காங்க. நம்ம ஊருல உள்ள 2003 ம் ஆண்டின் மின்சாரச் சட்டமும் சட்ட ரீதியில இது சரிதான்னு சொல்லுது. நிலமும், நீரும், உழைப்பும் நம்மோடது. ஆலைகளில் இருந்து வரும் கழிவுகளும், பாதிப்புகளும், நோய்களும் நமக்கு. இழப்புகள் மட்டும் தமிழனுக்கு. லாபமும், உற்பத்தியாகிற பொருளும் வெளியூர்காரனுக்கு. சரி! தனியார் மின் நிலயத்துகாரன் வியாபாரி. எங்க அதிகம் விலை கிடைக்கோ?. அங்கதான் அவன் தயாரிக்கிற கரண்ட விப்பான். அதுவும் சரிதான்!. அதுக்கு ஏண்டா நான் உசிரக் கொடுக்கணும்?..

ஜெ.பிரபாகர்

Pin It