அமெரிக்காவின் போலி ஜனநாயக முகத்திரை மீண்டும் ஒரு முறை கிழிபட்டுள்ளது. இம்முறை அதன் முகத்திரையைக் கிழித்தவர் இருபத்தொன்பது வயது நிரம்பிய எட்வர்ட் ஸ்னோவ்டன் என்ற அமெரிக்கர். தனி மனித சுதந்திரத்திற்கும், மனித உரிமைகளுக்கும், ஜனநாயகத்திற்கும் உயர்ந்த மதிப்பளிக்கும் நாடு அமெரிக்கா என்ற போலி பிம்பத்தை ஏற்கனேவே உடைத்து நொறுக்கிய அமெரிக்கர்களான டேனியல் எல்ஸ்பர்க் மற்றும் பிராட்லி மன்னிங் வரிசையில் எட்வர்ட் ஸ்னோவ்டன்னும் சேர்ந்துள்ளார்.

அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு நிறுவனம்(National Security Agency) எவ்வாறு உலகம் முழுவதும் வேவு வலையை விரித்துத் தனக்குத் தேவையான விவரங்களைச் சேகரித்து வருகிறது என்ற இரகசியத்தை, அந்த இரகசிய ஆவணங்களை வெளியிட்டதன் மூலம் எட்வர்ட் அம்பலப்படுத்தி அமெரிக்கப் பேரரசை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். அந்த நிறுவனத்தின் வரலாற்றிலேயே இது போன்ற பெரும் இரகசிய அம்பலப்படுத்தல் இதுவரை நடந்ததில்லை எனக் கூறப்படுகிறது.

அந்த நிறுவனம் நினைத்தால் உங்களுடைய மின்னஞ்சல், அதற்கான கடவுச் சொற்கள், உங்களுடைய வங்கிக் கணக்குகள், கடன் அட்டை விவரங்கள், தொலை பேசி உரையாடலின் பதிவுகள்,உங்களுடன் தொடர்பு கொண்டுள்ளவர்கள், உங்களுடைய விருப்பு வெறுப்புகள் என அனைத்தையும் அறிந்து கொள்ள முடியும். கூகுள், முகநூல் (Face Book), ஆப்பிள், மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்கள் அந்த விவரங்களைப் பெற உதவி வருகின்றன. தனி மனித சுதந்திரம், அந்தரங்கம் என்று எதையும் நீங்கள் பேச முடியாது. உங்களுடைய படுக்கை அறையையும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வேவுக் கண்கள் நோட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன. புகழ் பெற்ற நாவலாசிரியர் ஜார்ஜ் ஆர்வெல் தனது ‘1984’ நாவலில் விவரித்த பெரிய அண்ணன் நோட்டமிட்டுக் கொண்டிருக்கிறார் என்பது இன்று நூற்றுக்கு நூறு உண்மையாகி விட்டது.

எட்வர்ட், அமெரிக்காவின் உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. (Central Intelligence Agency) வில் முன்பு தொழில்நுட்ப உதவியாளராகப் பணிபுரிந்து வந்தவர். கடந்த நான்காண்டு காலமாக பூஜ் அல்லன் ஹாமில்ட்டன் என்னும் பாதுகாப்பு சம்பந்தமான ஒப்பந்த நிறுவனத்தின் பணியாளராக ஹவாயில் இருக்கும் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்தப் பணியின்போது அவர் அறிந்த விவரங்களைத்தான் இப்பொழுது அம்பலப்படுத்தியுள்ளார்.

ஆண்டொன்றுக்கு இரண்டு இலட்சம் டாலர் வருமானத்துடன், ஹவாயில் வசதியான ஒரு வீட்டில் தனது தோழியுடன் வசித்து வந்த எட்வர்டுக்கு அமெரிக்க அரசின் போலித்தனத்தை, மக்களுடைய உரிமைகளுக்கு எதிரான அதன் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அமெரிக்காவின் பாதுகாப்புக் கருதித்தான் தான் இதைச் செய்து வருவதாக அமெரிக்க அரசாங்கம் கூறி வந்தாலும் உண்மை அதற்கு மாறாக இருந்ததை அவர் அறிந்தார். சீனா, ருசியா போன்ற நாடுகளில் உள்ளவர்களை விட அமெரிக்காவில் வாழ்பவர்களே அதிகமான அளவில் வேவு பார்க்கப்பட்டு வருவதை அவர் அம்பலப்படுத்தி உள்ளார். இந்த நடவடிக்கையை மக்களின் சுதந்திரத்தில் அக்கறை உள்ள ஒருவரால் சகித்துக் கொள்ள முடியாது என்கிறார். “இத்தகைய ஒரு சமூகத்தில் நான் வாழ விரும்பவில்லை....நான் செய்யும் ஒவ்வொரு செயலும், சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் பதிவு செய்யப்படும் ஒரு உலகத்தில் வாழ நான் விரும்பவில்லை. அத்தகைய உலகத்தை ஆதரிக்கவோ அல்லது அதில் வாழவோ நான் விரும்வில்லை” என்கிறார் அவர்.

பத்தொன்பது வயதில் இராணுவத்தில் சேர்ந்த எட்வர்ட் ஈராக்கிற்குச் சென்று போரிட விரும்பினார். அமெரிக்கா உண்மையில் ஈராக்கில் உள்ள மக்களின் விடுதலைக்காகப் போரிடுகிறது என நம்பினார்.ஆனால் பயிற்சியின்போது அவருடைய இரு கால்களிலும் முறிவு ஏற்பட்டதால் அவரால் போருக்குச் செல்ல இயலவில்லை. ஆனால் போரிடச் சென்ற அமெரிக்க இராணுவம் மக்களின் விடுதலைக்கு உதவவில்லை, மாறாக அரபு மக்களைக் கொல்லவே செய்தது என்பதைத் தான் பிறகு அறிந்ததாகக் கூறுகிறார்.

ஒபாமா குடியரசுத்தலைவர் ஆனதும் எல்லாம் சரியாகி விடும் எனத் தான் கருதியதாகவும், ஆனால் நிலைமையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றும் ஒபாமா தனக்கு முந்தியிருந்த ஆட்சியாளர்களின் பாதையிலேயே சென்றதாகவும் அவர் கூறுகிறார்.

அவருடைய செயலை நாட்டின் பாதுகாப்புக்கு எதிரானது என அமெரிக்க அரசாங்கம் குற்றம் சாட்டினாலும் தான் தனது நாட்டு மக்களின் மீது கொண்டுள்ள பற்றின் காரணமாகவே இதைச் செய்துள்ளதாக அவர் கூறுகிறார்.

மாபெரும் அதிகாரம் கொண்ட அமெரிக்க அரசை எதிர்ப்பது என்பது எவ்வளவு ஆபத்தானது என்பதை அவர் அறியாதவர் அல்ல. தனது வாழ் நாள் முழுவது சிறையில் கழிக்க நேரிடலாம் அல்லது உயிரையும் இழக்க வேண்டி வரலாம் என்பதை அறிந்துதான் எட்வர்ட் இந்தத் துணிச்சலான செயலில் இறங்கியுள்ளார்.

ஏற்கனவே இராணுவ இரகசியத்தை அம்பலப்படுத்தினார் எனக் குற்றம் சாட்டப்பட்டு விசாரணையை எதிர் கொண்டுள்ள பிராட்லி மன்னிங்குக்கு வாழ்நாள் முழுவதும் வெளி வரமுடியாத அளவுக்குத் தண்டனை வழங்கப்படும் ஆபத்து உள்ளது. தனது இரகசியங்களை அம்பலப்படுத்தினார் என்பதற்காக ஜூலியன் அசஞ்சேவை அமெரிக்க வேட்டையாடி வருகிறது. இதை எல்லாம் நன்கு அறிந்தவர்தான் எட்வர்ட். இருப்பினும் தனது நாட்டு மக்களின் மீதான பற்றும், தனி மனித சுதந்திரத்தின் மீதான வேட்கையுமே அவருடைய இந்தத் துணிச்சலான செயலுக்குக் காரணமாக அமைந்துள்ளன.

ஹவாயிலிருந்தால் அமெரிக்க அரசாங்கம் தன்னை எளிதில் பிடித்து விடும் எனக் கருதி அவர் ஹாங்காங் சென்று அங்கிருந்து அந்த இரகசிய ஆவணங்களை வெளியிட்டுள்ளார். அங்கும் அமெரிக்காவின் கொடுங்கரங்கள் நீளும் எனக் கருதி இப்பொழுது அங்கிருந்தும் தலைமறைவாகியுள்ளார். ருசியா அவருக்குப் புகலிடம் அளிக்க முன் வந்துள்ள நிலையில் அவர் அதை ஏற்றுக் கொள்வாரா இல்லையா என்று இன்னும் தெரியவில்லை. அமெரிக்க அரசாங்கம் இப்பொழுது அவருடைய இரத்தத்தை ருசி பார்க்க அலைந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையிலும் எட்வர்ட், செய்திகள் தனக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விரும்பவில்லை. தன்னால் வெளிப்படுத்தப்பட்ட ஆவணங்கள் உலகு தழுவிய அளவில் பெரும் விவாதங்களை உருவாக்கவேண்டும் என விரும்புகிறார். அந்த எண்ணம் ஓரளவு நிறைவேறியுள்ளது என நம்புகிறார். ஜூலை 4 ன் தேதி அமெரிக்காவில் மாபெரும் பேரணிகளும், ஆர்ப்பாட்டங்களும் நடை பெறும் என நம்புகிறார். அவை தற்போது அமெரிக்காவில் நடந்து வரும் வால் தெருவை ஆக்கிரமிப்போம் என்ற இயக்கத்தை விடப் பலம் கொண்டதாக இருக்கும் எனக் கருதுகிறார்.

அமெரிக்காவின் வேவுக் கரங்கள் படாத நாடே இல்லை. அது திரட்டியுள்ள விவரங்களில் ஐந்தில் ஒரு பங்கு இந்தியாவில் திரட்டியவை. இச்செயல் இந்தியாவின் இறையாண்மையை மீறிய செயல். அதை இந்தியா கண்டிக்க வேண்டும் எனச் சிலர் கூறுகின்றனர். ஆனால் இந்தியா இதை கண்டிக்கப் போவதில்லை. இங்குள்ள ஆட்சியாளர்களுக்கு இந்திய மக்களின் சுதந்திரத்தை விட அமெரிக்க நாட்டு முதலாளிகளின் மூலதனமே முக்கியமானது. எனவே இவர்கள் தமது அமெரிக்கக் கூட்டாளியை எதிர்த்து சுண்டு விரலைக் கூட அசைக்க மாட்டார்கள் என்பதுதான் உண்மை.

உலக மக்களின் தனிப்பட்ட விடயங்களில் எல்லாம் தலையிட்டு அவர்களைப் பற்றிய விவரங்களை இரகசியமாகத் திருடிக் கொண்டிருக்கும் இந்த அமெரிக்காதான் சீனா தனது இரகசியங்களைத் திருடுவதாகக் குற்றம் சாட்டி வருகிறது. தான் செய்தால் சரி. ஆனால் அதை மற்றவர்கள் செய்தால் தவறு என்பதுதான் அமெரிக்காவின் வாதம்.

உலகம் முழுவதும் தனது சுரண்டல் சாம்ராஜ்யத்தை விரிவாக்கிக் கொண்டிருக்கும் அமெரிக்கா அதைக் காட்டிக் காப்பாற்ற மிகப் பெரும் இராணுவத்தையும், அதிகார அமைப்பையும், உளவு நிறுவனங்களையும் கட்டமைத்துள்ளது.. சிறு சலசலப்புக் கூட அதற்குப் பெரும் அச்சத்தை அளிப்பதாக உள்ளது. அதனால் தனது அதிகாரத்திற்கும், சுரண்டலுக்கும் ஆபத்து வந்து விடுமோ என அஞ்சுகிறது. அதற்காகவே பிற நாட்டு மக்களை மட்டுமல்லாமல் தனது சொந்த நாட்டு மக்களையும் வேவு பார்த்து வருகிறது. அதனால் அது இன்று பிற நாட்டு மக்களின் சுதந்திரத்திற்கு மட்டுமல்லாமல் தனது சொந்த நாட்டு மக்களின் சுதந்திரத்திற்கும் எதிரியாக மாறியுள்ளது. உலக மக்கள் அனைவரின் சுதந்திரத்திற்கும் ஆபத்தாக மாறியுள்ள அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது இருப்புக்கான அனைத்து தார்மீக நியாயங்களையும் இழந்து நிற்கிறது.

Pin It