நமது நாட்டில் ஐ.ஐ.டி. எனப்படும் இந்தியத் தொழில்நுட்பக் கல்வியகங்கள் 15 உள்ளன. இவற்றில் ஒன்று தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஐ.ஐ.டி. மெட்ராசு ஆகும். இக்கல்வியகங்களில் இளநிலைப் பொறியியல் (B.E.) படிப்பதற்கு, 12 ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஐ.ஐ.டி.ஜெ.இ.இ. எனும் நுழைவுத்தேர்வை எழுத வேண்டும். இந்நுழைவுத்தேர்வின் வினாத்தாட்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே கொடுக்கப்படுகிறது. ஐ.ஐ.டி.ஜெ.இ.இ. 2012 கல்வியாண்டிற்கான தகவல் தொகுப்பேடு இவ்வாறு கூறுகிறது.

“A candidate can opt for question papers either in English or in Hindi”.

இதனால் தமிழ் வழியில் ஆண்டுதோறும் 12 ஆம் வகுப்புத் தேர்ச்சி பெறும் 4.5 இலட்சம் மாணவர்கள் (75%) இந்நுழைவுத்தேர்வை எழுத முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் தமிழ்வழியில் 12 ஆம் வகுப்பு பயில்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. 1980ல் 92.5 விழுக்காடாக இருந்த இவர்கள் தற்போது 75 விழுக்காடாக குறுகி விட்டனர் அல்லது குறுக்கப்பட்டு விட்டனர்.

ஐ.ஐ.டி.ஜெ.இ.இ. நுழைவுத்தேர்வு, கொள்குறி வினா (objective type) வடிவத்திலேயே உள்ளது. சரியான விடைக்குறியீடைத் தேர்ந்தேடுத்து OMR விடைத்தாளில் shade செய்ய வேண்டும். அவ்வளவே!

எனவே மத்திய அரசுக்கு வினாத்தாள் மொழிமாற்றம் மட்டுமேத் தேவை.

இதைச் செய்ய மத்திய அரசு மறுக்கிறது. இந்தியில் வினாத்தாளை மொழிபெயர்க்க முடிந்த மத்திய அரசுக்கு தமிழில் மொழிபெயர்க்க முடியவில்லை. ஏன்? மனமில்லை.

தமிழிலும் கொண்டு வந்தால், ஆங்கிலவழிக் கல்வி பயின்ற மேட்டுக்குடி மாணவர்களுக்கும், இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட 9 இந்தி மாநிலத்தவர்களுக்கும் கடினப்போட்டியை உருவாக்கி அவர்களது வெற்றி வாய்ப்பைக் குறைத்து விடும் என்ற அச்சம்.

13,000 இருக்கைகளுள்ள, ஜ.ஜ.டி.ஜெ.இ.இ. நுழைவுத்தேர்வில் 15 ஐ.ஐ.டி., பனாரசு இந்து பல்கலைக்கழகம் மற்றும் தான்பாத் இந்திய சுரங்கப் பள்ளிக்கூடம் என 17 மத்தியக் கல்வியகங்கள் பங்குபெறுகின்றன. மத்திய அரசின் மாத உதவித்தொகையுடன் இங்கு படிக்கின்ற மாணவர்கள், படித்து முடித்தவுடன் இஸ்ரோ, டி.ஆர்.டி.ஓ., அச்.ஏ.எல், டாடா, ஜி.இ. போன்ற மத்திய மற்றும் பன்னாட்டு தனியார் நிறுவனங்களின் வளாகத்தேர்வு மூலம் தேர்ந்த்தெடுக்கப்படுகிறார்கள்.

மேலும், ஐ.ஐ.டி.ஜெ.இ.இ. நுழைவுத்தேர்வை வைத்து, இந்திய கடல்சார் பல்கலைக் கழகம் (7 மத்தியக் கடல்சார் கல்வியகங்கள் இதன் கீழ் உள்ளது. சென்னையிலும் ஒன்று உள்ளது), 5 இந்திய அறிவியற்கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகங்கள் (ஐ.ஐ.எஸ்.இ.ஆர்.), இரே பரேலியில் அமைந்துள்ள இராஜீவ் காந்தி பெட்ரோலியத் தொழில்நுட்பக் கல்வியகம், பெங்களூரிலுள்ள இந்திய அறிவியல் கல்வியகம் மற்றும் கொல்கத்தாவிலுள்ள இந்தியப் புள்ளியல் கல்வியகம் போன்றவை தனித்தனியாக கலந்தாய்வு நடத்தி, மாணவர்களைத் தத்தம் கல்வியகங்களுக்குத் தெரிவு செய்கின்றன.

தமிழ்வழியில் படித்த 12 ஆம் வகுப்பு மாணவர்கள், இக்கல்வியகங்களுக்குள் நுழைய மறைமுகமாகத் தடுக்கப்படுகின்றனர். தமிழ்வழிக் கல்வி மாணவர்களின் வரிப்பணம் வேண்டும். ஆனால் தமிழ்வழிக்கல்வி மாணவர்கள் வேண்டாம் என்பது நிலைமை.

இதனை எதிர்த்து, சமூக ஆர்வலர் ஓவியா அவர்கள் ஜ.ஜ.டி.ஜெ.இ.இ. நுழைவுத்தேர்வை வரும் 2012-13 கல்வியாண்டிலிருந்து தமிழிலும் மத்திய அரசு நடத்த வேண்டும் என்று ஒரு பொதுநல வழக்கை (WP.PIL/30,230/2011) சென்னை உயர்நீதிமன்றத்தில் டிசம்பர் 2011 அன்று தாக்கல் செய்துள்ளார். வழக்கை ஏற்றுக் கொண்ட உயர்நீதி மன்றம் 4 வாரத்திற்குள் பதிலறிக்கைத தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கில் நாம் வெற்றி பெற்றால் தான், தமிழ்நாட்டிலுள்ள 4.5 இலட்சம் தமிழ்வழிக்கல்வி மாணவர்களும் ஐ.ஐ.டி.ஜெ.இ.இ. நுழைவுத்தேர்வை எழுத முடியும். இவ்வழக்கில் நீதிபதிகள், மக்கள் விழிப்புணர்வையும் மனநிலையையும் கருத்தில் கொள்வர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே மக்களிடம் இதனைப் படிக்கும் அனைவரும் இப்பிரச்சினையைக் கொண்டு செல்ல வேண்டும்.

மத்திய அரசுக்கு 8 வது அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளிலும் வினாத்தாள்களை மொழிபெயர்த்துக் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் கூட ஏற்படவில்லை. ஏனென்றால், இந்த 22 மொழிகளில் பல மொழிகள் மேனிலைப் பள்ளி வரையில் பயிற்றுமொழியாக இல்லை.

இந்தியாவின் அலுவல் மொழியான இந்தியின் நலன் பாதிக்கும் என்றால் இந்தி, ஆங்கிலம் மற்றும் தமிழ் உட்பட இதர மேனிலைப் பயிற்றுமொழிகளில் ஒன்று என மூன்று மொழிகளில் கூட அமைக்கலாம்.

தமிழில் படித்தவர்கள் தமிழில் எழுதுவார்கள். ஆங்கிலத்தில் படித்தவர்கள் ஆங்கிலத்தில் எழுதுவார்கள். இந்தியில் படித்தவர்கள் இந்தியில் எழுதுவார்கள். யாருக்கும் பாதிப்புமில்லை! நட்டமுமில்லை!!

இப்பிரச்சினையில் ஒரு மராத்தியனிடம், குஜராத்தியிடம், வங்காளியிடம் உள்ள மொழிப்பற்று தமிழனுக்கு இல்லை என்பது மிகவும் வெட்கப்பட, வேதனைப்படக் கூடியது. தமிழ் அறிஞர்கள் ஆராய வேண்டியது.

குஜராத்தி சாகித்தியப் பரிசத் மற்றும் குஜராத்தி நவசரி அறக்கட்டளை என்ற வலிமை வாய்ந்த குஜராத்தி சங்கங்கள் “குஜராத்தி மொழியிலும் அனைத்து மத்திய இளநிலை நுழைவுத்தேர்வுகளையும் வரும் கல்வியாண்டிலிருந்து மத்திய அரசு நடத்த வேண்டும்” என்று தனித்தனியாக பொதுநல வழக்கைத் தாக்கல் செய்துள்ளன. வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வழக்குகளைக் கண்டு மத்திய அரசே அதிர்ந்து போய் நிற்கிறது.

இரயில்வேத் தேர்வு வாரியம் நடத்தும் இரயில்வேத் தேர்வுகள், மத்தியப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி.) நடத்தும் 90,000 துணை இராணுவக் காவலர் பணித்தேர்வு, பாரத ரிசர்வ் வங்கி நடத்தும் இளம் மாணவர் ஊக்குவிப்புத் தேர்வு, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மன்றம் (என்.சி.ஆர்.டி.) நடத்தும் தேசியத் திறனாய்வுத் தேர்வு என்பன தமிழ் உட்பட இதர மாநிலத் தாய்மொழிகளில் நடத்தப்படும்போது, மத்திய அரசு “ஐ.ஐ.டி.ஜெ.இ.இ. வினாத்தாளை தமிழில் மொழிபெயர்த்து தர முடியாது” என்று கூறுவதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.

தமிழகப் பாடத்திட்டம் மத்திய பாடத்திட்டத்திற்கு இணையில்லாமலிருந்தாலும், தமிழில் நுழைவுத்தேர்வு வந்தவுடன், தனியார் நிறுவனங்கள், மத்தியப் பாடத்திட்டத்தின் புத்தகங்களைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடும். இதனைத் திறமையான தமிழ்வழிக் கல்வி மாணவர்கள் படித்து வெற்றி பெறுவர். எனவே தமிழில் நுழைவுத்தேர்வு நடத்த, மத்தியப் பாடத்திட்டம் ஒரு தடையே அல்ல.

மேலும் சென்ற ஆண்டு ஐ.ஐ.டி.ஜெ.இ.இ. நுழைவுத்தேர்வை எழுதிய மாணவர்களில் 18 விழுக்காடு மாணவர்கள் மட்டுமே கிராமப்புறத்தைச் சார்ந்தவர்கள். மக்கட்தொகையில் பெரும்பான்மையான கிராமப்புற மாணவர்கள், ஐ.ஐ.டி.ஜெ.இ.இ. நுழைவுத்தேர்வை எழுதும் போது மட்டும், குறையக் காரணம் என்ன? தமிழ் உட்பட இதர மாநிலத் தாய்மொழிகளில் வினாத்தாள்கள் இல்லாததுதான்.

இக்கட்டுரையைப் படிக்கின்ற அனைவரும் இப்பிரச்சினையை, பொது மக்களிடம், இளைஞர்களிடம், மாணவர்களிடம், அதிகாரிகளிடம், கட்சிகளிடம் என அனைத்து தரப்பினரிடமும் கொண்டு செல்லுங்கள்! தமிழ்த்தாயின் செல்லக் குழந்தைகளைக் காப்பாற்றும் வேலையில் இறங்குங்கள்!

பொதுநல வழக்குகள், பாதயாத்திரை, உண்ணாவிரதம், கையெழுத்து இயக்கங்கள் என பலவிதப் போராட்டங்களை நடத்தி மத்திய அரசுக்கு புரிய வைக்க வேண்டும்.

தமிழக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் இப்பிரச்சினையை, நாடாளுமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து உடனே விவாதிக்க வேண்டும்.

மம்தா பானர்ஜி அவர்கள் இரயில்வேத் தேர்வுகளில் தமிழையும் இடம்பெறச் செய்தது போல, மாண்புமிகு தமிழக முதலமைச்சரும் இப்பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு “ஐ.ஐ.டி.ஜெ.இ.இ. உட்பட இதர மத்திய இளநிலை நுழைவுத்தேர்வுகளையும் தமிழிலும் மத்திய அரசு நடத்த வேண்டும்" என்று சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்ற வேண்டும். தனிச்சட்டம் அல்லது அரசாணைக் கொண்டு வர வேண்டும்.

முயற்சிகள் யாவும் பலனற்றுப் போய், இவ் அவல நிலை வரும் கல்வியாண்டையும் (2012-13) மீறித் தொடருமேயானால், 1965ல் தமிழக மாணவர்கள் “உயிரினும் மேலான நம் தாய்மொழி“ காக்க நடத்தியப் போராட்டத்தை மீண்டும் இத்தலைமுறை மாணவர்கள் தொடருவார்கள் என்று மத்திய அரசுக்கு சங்குநாதம் முழங்குவோம்.

வாருங்கள், ஊர் கூடித் தேரிழுப்போம்!

“கெடல் எங்கே தமிழின் நலம்?
அங்கெல்லாம்
தலையிட்டுக் கிளர்ச்சி செய்வீர்!”

- பாவேந்தர்.

- சா.வாகைச்செல்வன்

Pin It