சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி கடந்த 18-5-2012 அன்று தனது கட்சியின் ஆவணத்தை வெளியிட்டு இருக்கிறது. பெரியாரை சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும் தமிழக அரசியல் களத்தில் புதியதாக அரசியல் செய்ய‌ப் புறப்பட்டிருக்கும் இந்த கொள்கைச் சீமான்கள் திராவிட இயக்கத்தையும்- பெரியாரையும் கொச்சைப்படுத்தும் வகையில் தங்கள் ஆவணத்தை வெளியிட்டு இருக்கின்றனர்.

திராவிடம் என்ற ஓர் இனம் எங்கிருந்தோ குதித்தது போலவும் அவர்கள் தமிழர்களை நூறு ஆண்டுகளாக அடிமைப்படுத்தி வருவதாகவும் புதுக் கரடி விட்டிருக்கின்றனர்! தமிழையும் தமிழினத்தையும் திராவிட இனம் திட்டமிட்டு அழித்து விட்டதாகக் கூறுகின்றனர். இந்தியாவில் எந்த இனத்திலும், இல்லாத அளவில் மொழியுணர்ச்சியும், தனி ஈழம் - தனித் தமிழ்நாடு கோரிக்கைகளும் மேலோங்கி இருக்கும் தமிழகத்தில் திராவிடர் இயக்கம் தமிழர் உணர்ச்சியை மழுங்கடித்து விட்டதாகக் கூறுவது உண்மையா? பெரியார் மொழியிலேயே அவர்களுக்கு விடை காண்போம்.

"தமிழக அறிவையும், தன்மானத்தையும் மீட்டெடுப்பதாக முழங்கிக் கொண்டு தமிழ் அறிவியல் அற்ற மொழி; அதை வாழ்வியலிலிருந்து தலைமுழுகி விடுவதே அறிவுடைமை என்று திராவிட இயக்கத்தினர் பகுத்தறிவு பரப்புரையும் தன்மான பரப்புரையும் செய்தனர்" என்கிறது நாம் தமிழர் ஆவணம்.

தமிழை பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்க வேண்டுமென்று குடிஅரசு ஏட்டில் 4-9-1938லேயே கட்டுரை தீட்டப்பட்டிருக்கிறது.

"ஏ! சட்டசபைத் தமிழா! நீ சர்வ முட்டாள் அல்ல! தாய்நாட்டுக்குத் துரோகம் செய்யும் தறுதலையும் அல்ல! தாய் மொழியைக் கட்டாயமாக்கக் கூடாது என்று கருதித் திரியும் சண்டாளனுமல்ல!

நீ தமிழன். உன் தந்தை தமிழன். உன் தாய் தமிழ் மகள். உற்றார் தமிழர்; உறவினர் தமிழர். உனது முறுக்கேறிய நரம்புகளில் ஓடுவது வீரத் தமிழர் குருதி.

கட்டாய இந்தியால் உன் தமிழ் நாலாவகையிலும் நசுக்கப்படுகிறது. மொழிப் பாடங்களை மட்டும் தமிழில் கற்றால் தமிழ் விருத்தியாகிவிடும் என்று கருதி மயங்காதே! உன் தாயை உன் தமிழை இம்சிக்காமல் தமிழை கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று தீர்மானிப்பாயாக! இல்லையானால், தமிழைக் கட்டாயமாக்க வேண்டும் என்று முயலாமல் இருந்தாயானால், உன் நாட்டு மொழிக்கு துரோகியாவாய். உன் நாட்டின் கலைக்கு விரோதியாவாய்!

நீ மானமுள்ள தமிழனானால், உன் பெற்றோரின் தமிழ் இரத்தம் உன் உடலில் நரம்பில் தோய்ந்திருக்குமானால் இன்றே, ஏன் இப்பொழுதே எங்கள் நாட்டில் எங்கள் தாய் மொழி கட்டாயப் பாடமாக்கப்பட வேண்டும் என்று ஒரு தீர்மானம் அனுப்புவாயாக. உங்கள் தமிழை கட்டாயாமாக்க முயற்சி செய்யாமல் இருப்பது உங்கள் தகுதிக்கு அடுக்குமா? நீங்கள் தன் உணர்ச்சி இல்லாத விலங்குகளா? தாய் மொழியில் அபிமானம் இல்லாத தசைப்பிண்டங்களா?.

தேசத்தின் பெயரையோ, சமூகத்தின் பெயரையோ சொல்லிச் சிறை சென்றவர் எல்லா நாட்டிலும் உண்டு. நீ விரும்பும் இந்தி பேசும் நாட்டிலும் உண்டு. தான் பேசும் மொழி குறித்து சிறை புகுந்த தீரம் தமிழனுக்கு உண்டு. தன் மொழிக்காக சிறை புகுந்தான்! புகுகிறான்! புகுவான்! தடியடி பட்டான்! படுகிறான்! படுவான்! சகல துன்பங்களையும் அனுபவிப்பான்! பேசும் தமிழைத் தாய் மொழியாக உடைய நீ, தாய் மொழியை கட்டாயமாக்கக் கூடாது என முயலும் துரோகியாகப் போகிறாயா?

போவாயானால் ஏ! துரோகி உன் சட்டசபை வாழ்விற்கு சாவு மணி அடிக்கப்பட்டதென்று எண்ணிக்கொள்”

என்று பெரியாரின் குடிஅரசில் கட்டுரை வெளிவந்துள்ளது. ஆனால் இவர்களோ, தமிழை வாழ்வியலிலிருந்து தலைமுழுகி விடுவதே அறிவுடைமை என்று திராவிட இயக்கத்தினர் பகுத்தறிவு பரப்புரை செய்ததாகக் கூறுகின்றனர்.

தமிழரை, தொடர்ந்து அடிமைப்படுத்தும் திட்டத்தின் கீழ் திராவிடநாடு முழக்கத்தை திராவிட இயக்கம் முன்னெடுத்ததாக நாம் தமிழர் கட்சி ஆவணம் கூறுகிறது.

"எனக்கு ஏன் திராவிட நாடு வேண்டாம்?" என்று தந்தை பெரியார் அவர்கள் தனது 84-ஆம் ஆண்டு பிறந்த நாள் மலரில் தனித்தமிழ்நாடு கோரிக்கையை வலியுறுத்தி எழுதியுள்ள கட்டுரையைப் படியுங்கள்.

“1938-ம் ஆண்டு நான், ராஜாஜி ஆட்சி கொடுமையைக் கண்டு சென்னை ராஜதானி என்று பெயர் கொண்டிருந்த திராவிடநாடு தனி நாடாக ஆக வேண்டும் என்று கேட்டு திட்டம்போட்டு கிளர்ச்சி செய்து வந்தேன். அன்று பார்ப்பனர் தவிர்த்து யாரும் அதை எதிர்க்கவில்லை. அப்போது திராவிட நாடு என்பது ஆந்திரம், கன்னடம், மலையாளம் ஆகிய நாடுகளில் இருந்து ஒரு சிறு பாகமே தமிழ்நாட்டுடன் சேர்ந்து திராவிட நாடாக இருந்தது. தமிழ்நாட்டு மக்கள்தொகை இரண்டு கோடியே எண்பத்தைந்து இலட்சம் மற்ற மூன்றும் சேர்ந்து இரண்டு கோடியே எழுபத்தைந்து இலட்சம் தான். ஆகவே தமிழ்நாட்டு மக்கள்தொகை மேற்கண்ட மூன்று நாடுகளை விட அதிகமாக இருந்தது. அரசியல், சமுதாய, பொருளாதார நிலையில் இந்த நாடுகள் தமிழ்நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்த முடியாது என்பதோடு நம் கை வலுத்ததாகவும் இருந்தது.

ஆனால் இன்று தமிழ்நாடு மக்கள்தொகை மூன்று கோடிக்கு கீழ்ப்பட்டதாகவும் அவை மூன்றும் சேர்ந்து சற்றேறக்குறைய எட்டுக்கோடி மக்களாகவும் இருக்கிறார்கள். நாம் அதில் பகுதிக்குக் கூட அருகதையற்றவர்களாக இருக்கிறோம். உலகில் பிரிவினைக்காரன் எவனும் பிரிந்த பின் விருப்பப்படி ஆட்சி அமைக்க, பதவி பெற வசதியாக, யாருக்கும் மைனாரிட்டியாக இல்லாமல் சுய பலத்தோடு இருக்க எண்ணுவானா? மைனாரிட்டியாக இருக்க எண்ணுவானா? எனவே தான் திராவிட நாடு வேண்டாம் என்று சொல்லுகிறோம்.

சட்ட சபையில் நாம் 206 பேர்; அவர்கள் 429 பேர் கூடுதலாக 635 பேர் இருக்கிறார்கள். பார்லிமென்ட்டில் நாம் 41 பேர்; அவர்கள் 46 பேர் அதிகப்படியாக 87 பேர் இருக்கிறார்கள். திராவிட நாடு பிரிந்தால் நமது குறைகளை, பங்குகளை யாரிடம் கேட்பது? எதற்கு பிரிவினை கேட்கிறோம்? இன்று நாம் மைனாரிட்டியாக இருந்து மற்றவர்கள் மெஜாரட்டி ஆட்சிப்படி நடக்க வேண்டியிருக்கிறது. பிரிந்தால் நமக்கு நாமே எஜமான். வேறு யாரும் கூடாது. நாம் யாருக்கும் அடிமையல்ல என்கிற நிலை பெறவே பிரிவினை கேட்கிறோம். பிரிவினையால் பலன் அனுபவிக்க வேண்டுமானால் திராவிட நாடு கேட்பது புத்திசாலித்தனமா? தமிழ்நாடு கேட்பது புத்திசாலித்தனமா? என்பதைப் பற்றி இப்போது யோசித்துப்பாருங்கள்” என்று தெளிவாகக் கூறியிருக்கிறார் பெரியார்.

இந்த வகையில் பெரியாரைப்பற்றி விமர்சிக்க இந்த காளான்களுக்கு என்ன அருகதை இருக்கிறது? நாம் தமிழர் கட்சி தனது கொள்கை ஆவணத்தில் கலைச்சொல் விளக்கம் என்ற பெயரில் "பார்ப்பான் என்றால் ஆய்வாளன், இளைஞன்" என்றும் "ஆரியர் என்றால் சீரியன், உயர்ந்தவன்” என்றும், "பிராமணன் என்றால் பேரமணன்” என்றும் கூறி பார்ப்பனர்களை மகிழ்விக்கத் துடிக்கிறது. ஆரியர் வருகை - மனுநெறியர் போன்ற மரியாதைக்குரிய சொல்லாடல்களையே பார்ப்பனர்களைக் குறிக்கும் இடத்திலெல்லாம் கையாண்டிருக்கும் இந்தக் கூட்டம் பார்ப்பனர்களின் கைக்கூலிகளே என்பது தமிழர்களுக்கு விளங்காமல் போகாது.

நாம் தமிழர் கட்சி ஆவணத்தில் தங்கள் வழிகாட்டியாகவும், தமிழ் அறிஞர்களாகவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ள அறிஞர்கள் பெரியாரைப் பற்றி கூறிய கருத்துக்கள் இதோ:

மறைமலைஅடிகள்: சாதி, சமயப் பூச்சுகளை ஒழித்து எவ்வுயிரும் என்னுயிர் போல் எண்ணியிரங்கித் திருவருள் நெறி நின்று ஒழுகுதலாகிய பழந்தமிழ்க் கொள்கையே சைவ நன்மக்கட்குரிய உண்மைக் கொள்கையாய் இருந்தும் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு சொற்பொழிவாலும், நூல்களாலும் யான் அதனை விளக்கும் காலையில் அதனை எதிர்த்தும் எனைப் பகைத்தும் எனக்குத் தீது செய்தவர்கள் சைவறிர் கற்றவர்களே. அன்று எனக்கு உதவியாய் நிற்றதற்கு எவருமில்லை.

பின்னர் பெரியார் திரு.ஈ.வெ.ராமசாமி அவர்கள் யான் விளக்கிய கொள்கையையே மேலுந்தட்பமாக எடுத்து விளக்கிப் பேசவும் எழுதவும், துவங்கிய காலந்தொட்டு, ஆரிய சேர்க்கையால் தமிழ்மொழிக்கும், தமிழர் கோட்பாட்டிற்கும், தமிழரது வாழ்க்கைக்கும் நேர்ந்த குறைபாட்டை தமிழர் உணர்வராயினர். அவரிற் கற்றவரும் என் மேற்கொண்ட சீற்றந் தவிர்வராயினர்.

தேவநேயப் பாவாணர்: எல்லா துறைகளிலும், பிராமணீயத்தை வெளிப்படையாகவும் உண்மையாகவும் எதிர்த்து, தமிழரைத் தன்மானமும், பகுத்தறிவும் உள்ள மக்களாக வாழவைத்த செயல் ஏனைய எவரும் செயற்கறிய செயலாதலின் பெரியார் உண்மையில் பெரியாரே!

சோமசுந்தர பாரதியார்: பெரியார் ராமசாமி அவர்கள் திராவிடருக்குப் பொதுவாயும், தமிழருக்கு சிறப்பாயும் உரிமையும், பெருமையும் உண்டுபண்ண உழைக்கும் பெருந்தலைவர். தற்காலத் தமிழகத்தில் தலைநின்று ஒல்லும்வகையில், ஓயாது உழைத்து, தமிழர் வாழ்வுயர் வளம் சிறக்க, உரிமைப்போர்த் தலையணியில், பொருது வரும் ஒப்புயர்வற்ற தலைவர். தம் வாழ்வனைத்தும் தமிழர் உரிமை பேணும் அறப்போருக்கு உதவி, நல்லோர் மதிக்கும் அல்லோர் அழுக்காறும் நாளும் பெருக்கும் இயல்புடையவர்.

கா.அப்பாதுரை: தமிழர் உண்மையிலேயே தமிழராய் தனித்தமிழராய் உலகில் பிறருடன் ஒப்புரிமைக்கொள்ள துணிவர்! தன்னாட்சி புரிவர்! அறிவாட்சியில் அன்புக் கலையாட்சியில் முனைவர்! என்பதற்கு பெரியார் வாழ்க்கையின் வெற்றி ஓர் அறிய வழிக்காட்டியும் நற்குறியுமாகும்.

கி.ஆ.பெ.விசுவநாதன்: இந்நாட்டில் தோன்றி மறைந்தும் தோன்றி இருப்பதும், இனி தோன்றுவதுமாகிய எத்தகைய இயக்கமும் செய்திராத செய்யமுடியாத சீர்திருத்தச் செயல்களை இந்நாட்டில் சுயமரியாதை இயக்கம் செய்து காட்டிவிட்டது. எவராலும் நினைக்கவே முடியாத இவ்வியக்கத்தை தோற்றுவித்து நடத்தி வெற்றி அடைந்த பெரியார் அவர்கட்கு நாடும் இம்மாகாணமும், இத்தேசமும் மட்டுமல்ல உலகமே ஒன்று சேர்ந்து நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறது.

இலக்குவனார்: பெரியார் தலைமையில் நமது நாடு, திராவிட நல்திருநாடு விடுதலை பெற்று உலக அரங்கில் உயர் பெருமை அடைவது உறுதி.

புலவர் குழந்தை: பெரியார் பிறவாதிருப்பாரேல் தமிழர், தமிழ்நாடு, தமிழ்மொழி, தமிழ்ப் பண்பாடு, தமிழாட்சி, தமிழினம், தமிழ்நாகரிகம் எனும் உணர்ச்சியெல்லாம் தமிழ்மக்களுக்கு தோன்றியிரா. தமிழ் வாழ்க என முழக்கமிடும் நெஞ்சத் துணிவு கூட ஒரு காலும் உண்டாகியிருக்காது. பெரியார் பிறந்ததால் தமிழருக்கு உண்டான நன்மைகள் அளவிறந்தன. அவற்றையெல்லாம் கூறப்புகின் அது தனி நூலாகிவிடும். 1920 தமி்ழ்நாடு இருந்த நிலையும் இன்றுள்ள (1948) நிலையும் ஒத்திட்டுப் பார்த்தால் பெரியார் பிறந்ததினால் தமிழ்நாடு அடைந்த பயன் முழுதும் விளங்கும்.

இவ்வளவு நன்மைகள் செய்த பெரியாருக்கு தமிழர்கள் செய்யும் கைம்மாறு என்ன? தமிழர் உரிமை காக்க புதிதாக புறப்பட்டிருக்கும் சீமான்களே! உங்கள் வழிகாட்டிகளுக்கு முதலில் பதில் சொல்லுங்கள்!!

- கி.தளபதிராஜ்

Pin It