சாதி எதிர்ப்புக் களத்தில் தன் உயிரை ஈந்த மாவீரன் இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த ஏப்ரல் 14 ஆம் நாளில் 'ஜாதீய வாழ்வியல் எதிர்ப்புப் பயண'த்தை பெரியார் திராவிடர் கழகம் தொடங்கியது. சாதி எதிர்ப்புப் போராளி மேலவளவு முருகேசன் நினைவிடம் வழியாக, சாதிப் போராளி செகுடந்தாளி முருகேசன் நினைவிடத்தில் புரட்சிக் கவிஞர் பிறந்த ஏப்ரல் 29 ஆம் நாளில் பயணம் நிறைவுற்றது. அதே நாளில் திருப்பூரில் நிறைவு நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்களும், அறிவிக்கப்பட்ட போராட்ட செயற்திட்டங்களும்:

1. தமிழ்ப் பேரரசர்கள் காலத்திலிருந்து இன்றுவரை நிலைத்து இருக்கும் “ஊர் - சேரி” என்ற இரட்டை வாழ்விடங்களை - வாழ்விடத் தீண்டாமையை ஒழிக்கும் வகையிலும், “தாழ்த்தப் பட்ட சமுதாய மக்களுக்குத் தனியாக சேரி என்று இருப்பதைத் தடைசெய்யவேண்டும்”, “இனி கட்டப் போகும் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புக்கள் ஊருக்கு உள்ளேயே கிடைக்கும் இடங்களில் அடுக்குமாடிக் குடியிருப்புகளாகக் கட்டவேண்டும்” என்று 1947 ஆம் ஆண்டி லிருந்தே முழங்கிய பெரியாரின் இலட்சியத்தைச் செயல்வடிவமாக்கும் வகையிலும், தமிழ் நாடு அரசு இனி கட்டப்போகும் புதிய தலித் குடியிருப்புக்களை ஊருக்கு உள்ளேயே பிற்படுத்தப்பட்டோர் வசிக்கும் தெருக்களிலேயே கிடைக்கும் சிறு சிறு இடங்களில் அடுக்குமாடிக் குடியிருப்புக் களாகக் கட்டித் தரவேண்டும். 

periyar_dk_bus_622

2. தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் ரியல் எஸ்டேட் தொழிலில், லே அவுட் அனுமதிக் காக ஊராட்சி அலுவலகங்களை அணுகும்போது அந்த வீட்டுமனைத் தொகுப்புகளில் தலித் மக்களுக்கு வீட்டுமனை விற்பனை செய்யக்கூடாது என்று ஊராட்சித் தலைவர்கள் வாய்மொழியாக உத்தரவிடுகின்றனர். பிற்படுத்தப்பட்ட மக்களும் அப்படிப் புதிதாக உருவாகும் வீட்டுமனைத் தொகுப்புகளில் தலித் மக்களுக்கு இடம் விற்பனைசெய்யக் கூடாது என மிரட்டியும் வருகின்றனர். இதனால் தலித் மக்கள் பொருளாதாரத்தில் உயர்ந்தாலும் சேரித் தீண்டாமையிலிருந்து விடுபட்டு ஊரைத் தாண்டி வீட்டுமனை வாங்கக்கூட இயலாத நிலை உள்ளது. எனவே புதிதாக உருவாக்கப்படும் வீட்டு மனைத்தொகுப்புகளில் தலித்துகளுக்கு கட்டாயம் இடஒதுக்கீடு வழங்கவேண்டும். அவை மொத்தமாக ஒரே பகுதிக்குள் ஒதுக்குப் புறமாக இல்லாமல், கலந்து இருக்க வேண்டும். தலித் மக்கள் இடம் வாங்கிய பிறகு மறு விற்பனை செய்தாலும் மீண்டும் ஒரு தலித் சமுதாயத்தைச் சேர்ந்த வருக்குத் தான் அந்த வீட்டுமனையை விற்பனைசெய்ய வேண்டும் என்ற வகையில் அரசு சட்டமியற்ற வேண்டும்.

3 . சாதி மறுப்புத் திருமணத் தம்பதியினருக்கும், அவர்களது வாரிசுகளுக்கும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் கல்வி - வேலை வாய்ப்புகளில் பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் “ஜாதியற்றோர்” (No Caste Quota ) என்ற பெயரில் தனி இடஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்ற வேண்டும்.

4. அரசுத் துறைகள் வேக வேகமாக தனியார் துறைகளாக மாற்றப்பட்டுக்கொண்டிருக்கும் சூழலில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள பன்னாட்டு நிறுவனங்களில் ஜாதிவாரிப் பிரதிநிதித் துவத்தை நடை முறைப்படுத்த சட்டம் இயற்றவேண்டும்.

5 . இடஒதுக்கீட்டைத் தவிர வேறு எந்த வடிவிலும் ஜாதியை அடையாளப்படுத்தும் ஊர்களின் பெயர்கள், தெருக்களின் பெயர்கள், வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், தனியார் பேருந்துகள், கடைவீதியில் உள்ள கடைகள் அனைத்தின் பெயர் களையும் திருத்த வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அவற்றைத் திருத்தாத நிறுவனங்களின் மீது தீண்டாமை வன்கொடுமைச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வழி செய்யவேண்டும்.

6. தனியார் பெரும் தொழிற்சாலைகளில் - பஞ்சாலைகளில் உரிமையாளர்களின் சொந்த ஜாதியினரை அதிகமாக வேலைக்கு அமர்த்திக்கொள்வதைத் தடைசெய்ய வேண்டும். ஆலைகளின் நிர்வாகப் பிரிவு உட்பட அனைத்துப் பிரிவுகளிலும் கட்டாயம் ஜாதி அடிப்படை யிலான பிரதிநிதித்துவத்தை வழங்க வேண்டும்.

periyar_dk_bus_620

7. ஜாதி அடிப்படையில் இயங்கும் திருமணத் துணைதேடும் மய்யங்களைத் தடைசெய்ய வேண்டும். திருமணத்திற்குத் துணைதேடும் விளம்பரங்களில் ‘ப்ராமின்ஸ் ஒன்லி’, ‘எஸ்.சி, எஸ்.டி’ தவிர என்று வரும் விளம்பரங்களைதயும், கவுண்டர், செட்டியார், வன்னியர், தேவர், நாடார் என்று குறிப்பிட்ட ஜாதிகளை அடையாளப்படுத்தி வரும் விளம்பரங் களையும் தடைசெய்யவேண்டும்.

8. திருமண மண்டபங்களில் மறைமுகமாக பார்ப்பன சைவக் கலாச்சாரத்தைப் பரப்பும் வகையிலும், தாழ்த்தப்பட்டோர் - பிற்படுத்தப்பட்டோர் உணவுமுறையைக் கொச்சைப் படுத்தும் வகையிலும், தாழ்த்தப்பட்டோருக்கு அனுமதி மறுக்கும் நோக்கத்திலும் ‘சைவம் மட்டும்’ என்று சொல்வதைத் தடைசெய்யவேண்டும். சைவம் மட்டும் புழங்கச்சொல்லும் மண்டப உரிமை யாளர்கள் மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் வழியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். நகரங்களில் வீடு வாடகைக்கு விடுவோர் ‘சைவம் புழங்குவோருக்கு மட்டும்’ என்று கூறுவதும் மறைமுகமாக தீண்டாமையைக் கடைபிடிக்கும் செயல்தான் என்பதால் அப்படிச்சொல்லும் வீட்டு உரிமையாளர்கள் மீதும் தீண்டாமை வன்கொடுமைச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வழிசெய்யவேண்டும்.

9. டாக்டர் அம்பேத்கர் எழுதிய ஜாதியை ஒழிக்க வழி என்ற நூலை பள்ளி - கல்லூரிகளில் துணைப் பாடமாக (Non - Detailed ) வைக்கவேண்டும். பெரியாரின் குடி அரசு 1925 முதல் 1949 வரை உள்ள தொகுப்பு நூல்களையும், அம்பேத்கரின் 37 தொகுப்பு நூல்களையும் தமிழ்நாட்டின் அனைத்து அரசு நூலகங்களிலும், பள்ளி - கல்லூரிகளிலும் இடம்பெறச் செய்யவேண்டும்.

10. ஜாதி ஒழிப்புக்கு என தனி அமைச்சகம் - தனி துறை உருவாக்கப்பட வேண்டும். தீண்டாமை ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பில் அக்கறை செலுத்தாத மாவட்ட ஆட்சியர்கள் மீது நடவடிக்கை, சாதி மறுப்புத் திருமணங்களுக்குப் பாதுகாப்பு போன்றவற்றை உள்ளடக்கி உச்சநீதிமன்றம் 19. 04. 2011 அன்று லதாசிங் எதிர் உ.பி அரசு, ஆறுமுக சேர்வை எதிர் தமிழ்நாடு அரசு ஆகிய வழக்குகளில் அறிவித்த ஆணைகளின் அடிப்படையிலும், அந்த ஆணைகளின் நோக்கங்களைச் செயல்படுத்தும் வகையிலும், முடிவுகளை எடுத்து நடைமுறைப்படுத்தும் அதிகாரங்களைக் கொண்டதாக ஜாதி ஒழிப்புத் துறை உருவாக்கப்படவேண்டும். அத்துறைக்குப் போதுமான நிதிஒதுக்கீடு அளித்து, அறிவொளி இயக்கம், தடுப்பு ஊசிகள், பொதுசுகாதாரம் போன்றவற்றிற்கு மேற்கொள்ளப்படும் பரந்துபட்ட பிரச்சாரங்கள் போன்று தெருத்தெருவாக, கிராமம் கிராமமாக ஜாதிக்கு எதிராகவும், தீண்டாமை வன்கொடுமைகளுக்கு எதிராகவும், பாகுபாடுகளுக்கு எதிராகவும் பரந்துபட்ட தொடர் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படவேண்டும்.

போராட்ட அறிவிப்பு :

இரண்டாயிரம் ஆண்டுகளாக பார்ப்பன மனுநீதியே எழுதப்படாத சட்டமாக மக்களை அடக்கி ஆண்டு வந்தது. இந்தியாவில் முதன்முதலாக 1950 ஆம் ஆண்டுதான் ஓர் அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்தது. இந்த அரசியல் சட்டம்கூட மக்களுக்கு முழுமையாக நீதியைப் பெற்றுத்தரவில்லை. தீண்டாமையைத் தடைசெய்தாலும் இந்த சட்டம் சாதியைப் பாதுகாக் கிறது. பழக்க வழக்கங்களை மாற்றக்கூடாது என்று கூறி பழைமையை - பார்ப்பனீயத்தை உயர்த்திப்பிடிக்கிறது. ஆனாலும் மனுதர்மம் திணித்த அடிப்படையான சமுக ஏற்றத்தாழ்வுகளை அரசியல் சட்டம் ஏற்கவில்லை.

மனிதர்கள் அனைவரும் சமமாக முடியாது என்கிறது மனுதர்மச் சட்டம். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிறது அரசியல் சட்டம். கல்வி பெறும் உரிமையை சூத்திரர்களுக்கு மறுத்தது மனுதர்மம். 6 வயது முதல் 16 வயது வரை அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வியை வழங்க வேண்டும் என்கிறது அரசியல் சட்டம். பெண்களுக்கு இளம் வயதிலேயே திருமணம் ( பால்யவிவாகம்) செய்து விட வேண்டும் என்கிறது மனுதர்மம். 18 வயதுக்கு முன் திருணம் செய்வது குற்றம் என்கிறது அரசியல் சட்டம். சூத்திரர், பஞ்சமர் நாடாளக்கூடாது என்கிறது மனுதர்மம். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் எவருக்கும் நாட்டை ஆளும் உரிமை வழங்குகிறது அரசியல் சட்டம். பிறப்பின் அடிப்படையில் தொழிலை நிர்ணயித்தது மனுதர்மம். விரும்பும் தொழிலை சட்டத்திற்குட்பட்டு எவரையும் செய்ய அனுமதிக்கிறது அரசியல் சட்டம்.

periyar_dk_bus_621

இப்படி ஒரு குலத்துக்கு ஒரு நீதி பேசும் மனுதர்மம் அரசியல் சட்டத்தின் நோக்கிற்கும், உணர்வுகளுக்கும் நேர் எதிர் திசையில் உள்ளதால் மத்திய அரசு மனுதர்மத்தைத் தடைசெய்ய வேண்டும் என்று பெரியார் திராவிடர் கழகம் வலியுறுத்துகிறது.

அரசியல் சட்டத்தின் நோக்கங்களை முன்னெடுக்க - முறையாக அமுல்படுத்த மனுதர்மச் சிந்தனை களுக்கு எதிரான இயக்கம் அவசியமாகிறது. இந்த நிலையில் மனுதர்மத்தை அச்சிட்டுப் பரப்பி, நியாயப்படுத்துவதை பார்ப்பனர்களும் பார்ப்பனிய ஆதரவாளர்களும் மேற்கொள்வது சட்டத்தின் உணர்வுகளுக்கு எதிரானது என்பதோடு மீண்டும் மனுதர்மப் பாதையை வலுப்படுத்தும் முயற்சியாகவே இருக்கிறது.

அரசியல் சட்டம் தீண்டாமையைக் குற்றம் என்று கூறினாலும் சட்டத்தைப் பற்றிக் கவலைப்படாமல் பல்வேறு வடிவங்களில் தீண்டாமைகள் திணிக்கப்படுவதை நாம் பட்டியலிட்டுக் காட்டியுள்ளோம். மேற்கண்ட தீர்மானங்களைச் செயல்படுத்தவேண்டு மென்று வலியுறுத்துவ தோடு, ஜாதி - தீண்டாமை ஒழிப்பை நோக்கி பெரியார் திராவிடர் கழகம் முன்வைத்துள்ள மேற்கண்ட செயல் திட்டங்களை நிறைவேற்ற, தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், பெரியார் ஜாதி ஒழிப்புக்காக அரசியல் சட்டத்திலுள்ள ஜாதியைப் பாதுகாக்கும் பிரிவுகளை எரித்த நவம்பர் 26 அன்று தமிழ்நாடு முழுவதும் பெரியார் திராவிடர் கழகமும் ஜாதி ஒழிப்பில் அக்கறை கொண்ட அனைத்து முற்போக்கு அமைப்புகளும் இணைந்து மனுதர்ம சாஸ்த்திரத்தை தீயிட்டு எரிக்கும் போராட்டத்தை நடத்துவது என தீர்மானிக்கிறது.

செயல் திட்டங்கள் :

1. இந்து - ஜாதீய வாழ்வியலுக்கு எதிரான கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்லவும், ஜாதி - தீண்டாமை ஒழிப்புக்காக தமிழ்நாடு அரசும் மக்களும் ஆற்ற வேண்டிய கடமைகள் குறித்த திருப்பூர் தீர்மானங்களை விளக்கும் வண்ணமும், மனுஸ்மிருதி எரிப்புப் போராட்டம் ஏன்? எதற்கு? என விளக்கவும் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக முழுமையான பரப்புரைகளை நடத்த உள்ளோம். இந்தப் பரப்புரைகளில் இன்றும் மனு தர்மம் எந்தெந்த வழிகளில் உயிர்ப்புடன் உள்ளது என்பவைகளை எளிதாக விளக்கும் வகையில் புகைப்படங்கள் நிறைந்த சாதி ஒழிப்புக் கண்காட்சியும் இடம்பெறும்.

2. முதற்கட்டமாக சேலம் கிழக்கு, தஞ்சை, திருவாருர், நாகை ஆகிய மாவட்டங்களில் கிராமப் பிரச்சாரப் பயணங்கள் நடக்க உள்ளன.

ஒரு குழு மே மாதம் 14 ஆம் நாள் சேலம் மாநகரத்தில் தொடங்கி, மே 26 அம் நாள் ஒமலூரில் பிரச்சாரப் பயணத்தை நிறைவு செய்ய உள்ளது.

மற்றொரு குழு நாகை மாவட்டம் மணல்மேட்டில் மே மாதம் 21 ஆம் நாள் தொடங்கி, மே மாதம் 30 ஆம் நாள் திருவாருர் மாவட்டம் மன்னார்குடியில் நிறைவு செய்ய உள்ளது.

அந்த மாவட்டங்களைத் தொடர்ந்து மற்ற அனைத்து மாவட்டங்களிலும் கிராமப்பிரச்சாரப் பயணங்கள் நடைபெற உள்ளன.

3. மேலும், நவம்பர் 26 ஆம் நாள் வரை பெரியார் திராவிடர் கழகம் நடத்தும் அனைத்துப் பொதுக்கூட்டங்களிலும் ஜாதீய வாழ்வியல் எதிர்ப்பும், மனு சாஸ்த்திர எரிப்புப் போராட்ட விளக்கமுமே தலைப்புகளக இருக்கும்.

Pin It