தீண்டத்தகாத மக்களை இந்திய அரசியல் அரங்கிற்கு கொண்டு வருவதிலும் – இந்திய ஜனநாயகத்திற்கு அடித்தளமிடுவதிலும் டாக்டர் அம்பேத்கரின் பங்களிப்பு - 11

டாக்டர் அம்பேத்கர் 19.9.1932 அன்று பத்திரிகைகளுக்கு அளித்த அறிக்கையின் தொடர்ச்சி:

       தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த வேட்பாளர்கள், பொதுத் தொகுதியில் பிற சாதி இந்து வேட்பாளர்களுக்கு எதிராகப் போட்டியிடலாம். தாழ்த்தப்பட்ட சாதி வேட்பாளர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டால், அவர் தேர்தல் புகார் மனு அளித்து ஒரு தீர்ப்பைப் பெற வேண்டும். அத்தகைய ஒரு முடிவு பெறப்பட்டால், இந்து உறுப்பினர்கள் யாரையாவது பதவி விலக தூண்டுவதற்கு தான் முயற்சி எடுத்துக் கொள்வதாகவும், அதன் மூலம் ஒரு காலி இடத்தை ஏற்படுத்துவதாகவும் காந்தி கூறினார். அப்பொழுது மற்றொரு தேர்தல் நடைபெறும். அதில் தோற்கடிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட வேட்பாளர் அல்லது வேறு எந்த தாழ்த்தப்பட்ட சாதி வேட்பாளராவது, மீண்டும் இந்து வேட்பாளர்களுக்கு எதிராகத் தனது நிலையை சோதிக்கலாம். அவர் மீண்டும் தோற்கடிக்கப்பட்டால், அவர் பழையபடி, தான் தீண்டத்தகாதவர் என்ற காரணத்தினால் தோற்கடிக்கப்பட்டதாகத் தேர்தல் ஆணையத்திடமிருந்து தீர்ப்புப் பெற வேண்டும். இது, முடியாமல் தொடர்ந்து கொண்டே போகும்.

ambedkar_453

நான் இந்த விவரங்களையெல்லாம் கூறுவதற்குக் காரணமென்னவெனில், கூட்டுத் தொகுதிகளும் ஒதுக்கப்பட்ட (ரிசர்வ்) இடங்களும் மகாத்மாவின் மனசாட்சியை நிறைவுபடுத்தும் என்று சிலர் இப்பொழுதும்கூட எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். மகாத்மாவின் மெய்யான அறிக்கைகள் முன் வைக்கப்படாத வரையில், இந்தப் பிரச்சினையை விவாதித்துப் பயனில்லை என்று நான் ஏன் மீண்டும் வலி யுறுத்துகிறேன் என்பதை இது காட்டும்.

இருப்பினும், அவரும் அவருடைய காங்கிரசும் தேவையானøதச் செய்வார்கள் என்ற மகாத்மாவின் வாக்குறுதிகளை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை நான் சுட்டிக்காட்டியாக வேண்டும். என்னுடைய மக்களின் பாதுகாப்பு என்ற மிக முக்கியமான பிரச்சினையை – மரபுகளுக்கும் நல்லெண்ணங்களுக்கும் நான் விட்டுவிட முடியாது. மகாத்மா சாகாவரம் பெற்ற ஒரு மனிதர் அல்லர். காங்கிரஸ் ஒரு தீயசக்தி அல்ல என்று கருதிக் கொள்வதும் ஒரு நிலையான வாழ்வு இல்லை என்பதாகும். இந்தியாவில் பல மகாத்மாக்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய ஒரே குறிக்கோள் தீண்டாமையை அகற்றுவதும், தாழ்த்தப்பட்ட மக்களை உயர்த்தி, அவர்களை தத்தெடுத்துக் கொள்வதுமாகும். ஆனால், அவர்களில் ஒவ்வொருவரும் அவர்களது லட்சியப் பணியில் தோல்வியடைந்துள்ளனர். மகாத்மாக்கள் தோன்றியுள்ளனர்; மகாத்மாக்கள் மறைந்து போயுள்ளனர். ஆனால், தீண்டத்தகாதவர்கள் – தீண்டத்தகாதவர்களாகவே இருந்து வருகின்றனர்.

சீர்திருத்தத்தின் வேகம் பற்றியும் மஹத்திலும், நாசிக்கிலும் நடைபெற்ற மோதல்களில் இந்து சீர்திருத்தவாதிகளின் நம்பிக்கை பற்றியும் எனக்குப் போதிய அனுபவமிருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களின் நலன் விரும்பிகள் ஒருபோதும் இதை ஒத்துக் கொள்ள முடியாது. சீர்திருத்தவாதிகள், நெருக்கடியான தருணங்களில், தமது உற்றார் உறவினர்களின் உணர்வுகளைக் காயப்படுத்துவதைக் காட்டிலும், தமது கோட்பாடுகளுக்கு முழுக்குப் போடுவதையே விரும்புவர். அவர்களால் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு எந்தப் பயனும் இல்லை.

எனவே, எனது மக்களின் பாதுகாப்புக்கு சட்டப்பூர்வமான உத்திரவாதம் வேண்டும் என்று நான் வலியுறுத்துவதற்கு கடமைப்பட்டுள்ளேன், வகுப்புவாரித் தீர்ப்பை மாற்ற வேண்டுமென்று திரு. காந்தி விரும்புகிறாரென்றால், அவர்தான் தனது அறிக்கைகளை முன்வைக்க வேண்டும். தீர்ப்பின் கீழ் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளதைக் காட்டிலும் மேம்பட்ட உத்திரவாதத்தைத் தாங்கள் கொடுப்பதாக அவர் நிரூபிக்கட்டும்.

மகாத்மா, அவர் உத்தேசித்துள்ள தீவிர நடவடிக்கையை நடைமுறையில் நிறைவேற்றுவதைத் தவிர்ப்பார் என்று நான் நம்புகிறேன். நாங்கள் தனித் தொகுதிகளைக் கோரும்போது, இந்து சமுதாயத்திற்கு எந்தவிதத் தீங்கையும் நாங்கள் உத்தேசிக்கவில்லை. தனித்தொகுதிகளை நாங்கள் தேர்வு செய்கிறோமென்றால், எங்களுடைய எதிர்காலத்தை பாதிக்கும் விஷயங்களில் சாதி இந்துக்களின் கனிவான விருப்பத்தை முற்றாக சார்ந்திருக்கச் செய்வதைத் தவிர்ப்பதற்காகவே நாங்கள் அதைக் கேட்கிறோம். மகாத்மாவைப் போன்றே நாங்களும் தவறு செய்வதற்கு எங்களுக்கு உள்ள உரிமையைக் கோருகிறோம். அந்த உரிமையை அவர் எங்களிடமிருந்து பறிக்கக்கூடாது என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

இறுதி மூச்சுவரை, உண்ணா நிலையில் இருக்கப் போவதாக காந்தி உறுதி பூண்டிருப்பதை, இதைக்காட்டிலும் மிகவும் மேம்பட்ட ஒரு லட்சியத்திற்காக அவர் மேற்கொண்டிருக்கலாம். இந்துக்களுக்கும் முஸ்லிம் களுக்கும் இடையிலான மோதல்கள் அல்லது தாழ்த்தப்பட்ட சாதியினருக்கும் இந்துக்களுக்கும் இடையிலான மோதல்கள் ஆகியவற்றைத் தடுப்பதற்கு அல்லது வேறு எந்த தேசிய லட்சியத்திற்காகவாவது இத்தகைய தீவிர நடவடிக்கையை மேற்கொண்டிருந்த, மகாத்மாவின் நேர்மையை நான் புரிந்து கொண்டிருக்க முடியும். இது, நிச்சயமாக தாழ்த்தப்பட்ட மக்களின் நிலைமையை மேம்படுத்தாது. அவர் அறிவாரோ இல்லையோ, மகாத்மாவின் இந்த நடவடிக்கையினால், நாடு முழுவதிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக, அவரைப் பின்பற்றுபவர்கள் பயங்கர நடவடிக்கைகளில் ஈடுபடும் விளைவையே இது ஏற்படுத்தும்.

இந்த வகையில் நிர்பந்தம் செலுத்துவது தாழ்த்தப்பட்ட மக்களை – அவர்கள் வெளியேறிச் செல்வதற்கு உறுதி பூண்டிருந்தால் – இந்து அரவணைப்புக்குள் கொண்டு வருவதில் வெற்றி பெற முடியாது. இந்து சமயத்திற்கும் அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்கும் இடையில் தேர்வு செய்யும்படி தாழ்த்தப்பட்ட மக்களை மகாத்மா கேட்டால், தாழ்த்தப்பட்ட மக்கள் அரசியல் அதிகாரத்தைதான் தேர்வு செய்வார்கள் என்றும், மகாத்மாவை உயிர்தியாகம் செய்வதினின்றும் காப்பாற்றுவார்கள் என்றும் நான் மிகவும் நிச்சயமாகக் கருதுகிறேன். திரு. காந்தி, அவருடைய நடவடிக்கையின் விளைவுகள் குறித்துப் பொறுமையாக சிந்தித்துப் பார்ப்பாரேயானால், அவர் இந்த வெற்றியைப் பெறுவது தகுதி யுள்ளது தானா என்றும் அவர் எதிர்பார்ப்பது மிகவும் சந்தேகத்திற்குரியது என்றும் நான் கருதுகிறேன். மகாத்மா இந்த வழிமுறையைக் கையாள்வதன் மூலம் பிற்போக்கான மற்றும் கட்டுப்படுத்த முடியாத சக்திகளைக் கட்டவிழ்த்து விடுகிறார். மேலும், இந்து சமூகத்திற்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இடையில் வெறுப்புணர்வைப் பேணி வளர்க்கிறார் என்பதை கவனிப்பது, மேலும் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும், இதன் மூலம் இந்த இருசாராருக்கும் இடையில் ஏற்கனவே இருந்து வரும் பிளவை அவர் மேலும் அதிகப்படுத்துகிறார்.

வட்டமேசை மாநாட்டில் நான் திரு. காந்தியை எதிர்த்தபோது, நாட்டில் எனக்கு எதிராக ஒரு பெரிய கூக்குரல் எழுந்தது. தேசிய லட்சியத்திற்கு நான் ஒரு துரோகி என்று தேசியப்பத்திரிகைகள் கூறின. எனக்கு எதிராக சதி செய்யப்பட்டது. என்னுடைய தரப்பிலிருந்து எழுதப்பட்ட கடிதங்கள் வெளியிடப்படாமல் முடக்கப்பட்டன, என்னுடைய கட்சிக்கு எதிரான பிரச்சாரம் உசுப்பி விடப்பட்டது. இதற்காக கூட்டங்கள் மற்றும் மாநாடுகளைப் பற்றி மிகைப்படுத்தப்பட்ட செய்திகள் வெளியிடப்பட்டன. அவற்றில் பல கூட்டங்கள் நடத்தப்படவில்லை. தாழ்த்தப்பட்ட மக்களின் அணிகளில் பிளவுகளை உருவாக்குவதற்காக வெள்ளித் தோட்டாக்கள் தங்கு தடையின்றிப் பயன்படுத்தப்பட்டன. சில மோதல்களும் ஏற்பட்டு, அவை வன்முறையில் முடிந்துள்ளன.

இவையெல்லாம் இன்னும் பெரிய அளவில் திரும்ப ஏற்படுவதை மகாத்மா விரும்பவில்லையென்றால், அவர் தனது முடிவை மறுபரிசீலனை செய்து, ஆபத்தான விளைவுகள் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும். மகாத்மா இதை விரும்ப வில்லை என்று நான் நம்புகிறேன். ஆனால், அவர் அதைத் தடுத்து நிறுத்தாவிட்டால், அவருடைய விருப்பங்களையும் மீறி, இந்த விளைவுகள், பகலைத் தொடர்ந்து இரவு ஏற்படுவதைப்போல், தொடர்ந்து ஏற்படுவது நிச்சயம்.

இந்த அறிக்கையை முடிப்பதற்கு முன்னால், இந்த விஷயம் முடிக்கப்பட்டுவிட்டது என்று நான் கருதுகிறேன் என்று கூறுவதற்கு எனக்குத் தகுதியுள்ள போதிலும், மகாத்மாவின் அறிக்கைகளைப் பரிசீலனை செய்வதற்கு நான் தயாராயிருக்கிறேன் என்று பொது மக்களுக்கு நான் உறுதி கூற விரும்புகிறேன். ஆயினும், அவருடைய உயிருக்கும் எனது மக்களின் உரிமைகளுக்கும் இடையில் தேர்வு செய்யும் அவசியத்திற்கு, மகாத்மா என்னைத் தள்ளிவிட மாட்டார் என்று நான் நம்புகிறேன். ஏனெனில், என்னுடைய மக்களைக் கையையும் கால்களையும் கட்டி, எதிர்வரும் தலைமுறைக்கு சாதி இந்துக்களிடம் ஒப்படைப்பதற்கு நான் ஒருபோதும் ஒப்புக் கொள்ள மாட்டேன்.''

சாகும்வரை பட்டினி கிடக்கப் போவதாக திரு. காந்தி செய்துள்ள பிரகடனமானது, தீண்டத்தகாதவர்களின் நிலைமை குறித்து மக்கள் கூடுதலாகத் தெரிந்து கொள்வதற்கு வழி செய்துள்ளது. மேலும், தீண்டத்தகாதவர்களின் நெஞ்சங்களில் குமுறிக் கொண்டிருக்கும் உணர்ச்சிகளின்பால் சிறிது காலம் அவர்களுடைய கண்களைத் திறந்துவிட்டுள்ளது. மக்கள், பத்திரிகைகள் மற்றும் தேச பக்தர்கள் – தங்களுடைய சமூகத்தின் மீது ஒரு களங்கம் ஏற்பட்டுள்ளது என்பதை உணர்ந்து ஆவேசமடைந்துள்ளனர். ஒவ்வொரு அரசியல் கட்சியிலும், ஒவ்வொரு சமூக வட்டாரத்திலும், ஒவ்வொரு சமய நிறுவனத்திலும் டாக்டர் அம்பேத்கரைப் பற்றி முடிவில்லாமல் பேசப்பட்டு வந்தது. அவருக்கு தந்திகளும் கடிதங்களும் வந்து குவிந்தன. சில தந்திகளும் கடிதங்களும் அவருடைய உயிருக்கு உலை வைக்கப் போவதாக அச்சுறுத்தின. சில, அவருடைய மனசாட்சிக்கு வேண்டுகோள் விடுத்தன; சில, அவருடைய நிலைக்கு ஆதரவு தெரிவித்திருந்தன.

இத்தகைய பரபரப்பான சூழலில், ஏற்கனவே அறிவித்தபடி இந்து தலைவர்களின் மாநாடு, 19.9.1932 அன்று பண்டிட் மதன் மோகன் மாளவியா தலைமையில் "இந்தியன் மர்ச்சென்ட்ஸ் சேம்பரின்' விசாலமான மண்டபத்தில் நடைபெற்றது. டாக்டர் அம்பேத்கரும் டாக்டர் சோலங்கியும் தலைவரின் நாற்காலிக்கு அருகில் அமர்ந்திருந்தனர். ராஜாவும், டாக்டர் மூஞ்சேயும் கைகோத்துக் கொண்டு மண்டபத்திற்கு வந்தனர்.

மாநாட்டில் பின்வருபவர்கள் வருகை தந்தனர் : ராஜேந்திர பிரசாத், சி. ராஜகோபாலாச்சாரி, பண்டிட் குன்ஸ்ரூ, டி. பிரகாசம், டாக்டர் சவுதிராம், சுவாமி சத்யானந்த், திரு. ஆனே, ஜி.ஏ. கவாய், திரு. சிவராஜ், திரு. ஜெகன்னாதன், திரு. தர்மலிங்கம், திரு. மண்டல், சர். சுனிலால், ஹீரா சந்த் வால் சந்தி, சர். செதல்வாட், சர். மத்கோங்கர், சர். புருஷோத்தம்தாஸ், திரு. தியோதர், திரு. நடராஜன், ராவ்பகதூர் வைத்யா, டாக்டர் தேஷ்முக், தால்வி, சுபேதார், சேத் பிர்லா, திரு. கரண்டிகர், டாக்டர் சாவாக்கர், சிவதர்க்கர், பி. பாலு, நிகால்ஜி, கமலா நேரு, பேரணி கேப்டன், மஷோன் கேப்டன், சவு. அவந்திகாபாய், கோகலே, திருமதி அன்னபூர்ணாபாய் தேஷ்முக், ரத்தன் பென் மேத்தா மற்றும் குமாரி நடராஜன்.

– வளரும்

ஆதாரம் : பாபாசாகேப் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 17(1)