I

ஏகாதிபத்தியம் போலவே மனித உரிமை எனும் பிரச்சினையும் மார்க்சியர்களைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. ஏகாதிபத்தியத்தையும் மனித உரிமையையும் வித்தியாசப்படுத்திப் பார்ப்பது என்பது அவர்களைப் பொறுத்து பெரும் சிக்கலாக இருக்கிறது. தனிமனித உரிமை என்பதனை சொத்துரிமையுடன் வைத்து மட்டுமே புரிந்து கொள்வது வைதீக மார்க்சியர்களின் பார்வை. சொத்துரிமை என்பது அல்லாமல் தனி மனித உரிமை என்பதனை கலாச்சாரம், உயிர் வாழ்தலுக்கான உரிமை, மனிதன் எனும் சுயகண்ணியத்துக்கான உரிமை எனும் அடிப்படையில் பெரும்பாலுமான மார்க்சியர் காணத் தவறுகிறார்கள். மனிதனது இருத்தல் சார்ந்த மனிதகண்ணியம் (human dignity) எனும் பிரச்சினை குறித்த, தலித்திய மீட்சி, இன மீட்சி எனும் பண்பாட்டு ஒடுக்குமுறைகளை இதனாலேயே இவர்களால் சரியாக அணுகமுடியாமலும் போகிறது.

மனித உரிமை அரசியல் என்பதனை ஒரு தந்திரோபாய அரசியலாக நோக்குவது - அதாவது நிலவும் முதலாளித்துவ சட்டவரையறைகளை தமது போராட்டத்தின் முன்னகர்த்தலுக்கான தந்திரோபாய அரசியலுக்காகப் பாவிப்பது - என்பதிலிருந்து நகர்ந்து அரசு மற்றும் எதிர்த்துப் போராடும் அமைப்பு என இரு சாராரும் அணுசரிக்க வேண்டிய மனித உரிமைகள் எனும் கோட்பாடு நோக்கியும் சில மார்க்சியர்கள் நகர்ந்தனர். முன்னாள் ஆந்திர நக்சல் ஆதரவாளரும் பின்னாளில் முழுமையான மனித உரிமையாளராகவும் பரிமாணம் எய்திய அமரர் பாலகோபால் போன்றோருக்கு இந்தத் தரிசனம் இருந்தது. இந்தக் காரணத்தினாலேயே விடுதலைப் புலிகள் பற்றி, அவர்களது மனித உரிமைமீறல்கள் பற்றி கடுமையான விமர்சனங்களுடனேயே அவர் இலங்கை அரசைக் கடுமையாக எதிர்ப்பவராக இருந்தார். அவர் இன்று இருந்திருப்பின் ஐக்கிய நாடுகள் சபை அறிக்கையையும் முதலாக அவர் வரவேற்றிருப்பார் எனவே நான் நம்புகிறேன். 

இந்திய இலங்கைச் சூழலில் மார்க்சியர்கள், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்டுகள், மாவோயிஸ்ட்டுகள், டிராட்ஸ்க்கிஸ்ட்டுகள் என வேறு வேறு மார்க்சிய ஆதாரங்களைக் கொண்டவர்கள் இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பாக வந்திருக்கும் ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கையை எவ்வாறு பார்க்கிறார்கள் என அவதானிப்பது என்னளவில் முக்கியம் என்று தோன்றுகிறது. கடந்த காலத்தில் சோவியத் மற்றும் சீன ஆதரவு நிலையிலிருந்தபடி, மரபு ரீதியான மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்டுகளாகத் தம்மை முன்னிறுத்தும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி போன்றவைகள் நிபுணர் குழுவின் அறிக்கை குறித்து என்ன நிலைபாடுகளை மேற்கொள்கின்றன? இருப்பதிலேயே பாட்டாளி வர்க்க சர்வதேசியப் புரட்சிக்கென தாம் மட்டுமே இருப்பதாகத் தம்மைக் கூறிக்கொள்ளும் டிராட்ஸ்கியிஸ்ட்டுகளான இலங்கை சம சமாஜக் கட்சியும், நவ சம சமாஜக் கட்சியும் ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கை தொடர்பாக என்ன நிலைபாடுகளை முன்வைக்கின்றன? சுத்தி அரிவாள் கொடி பொறித்த செங்கொடி, மார்க்சியம், குவேராயிசம் என அனைத்தையும் கலந்துகட்டி கட்சிக்கு பெயர்வைத்திருக்கும் முன்வைத்திருக்கும் ஜனதா விமுக்தி பெரமுனா என்ன சொல்கிறது? ஈழத் தமிழர்களுக்கிடையில் செயல்படும், இன்று புதிய ஜனநாயக-மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்டுகள் எனப் பெயர் மாற்றம் பெற்றிருக்கும் மாவோயிஸ்ட் கட்சி என்ன சொல்கிறது? பிற அனைத்து மார்க்சிஸ்ட் கட்சிகளையும் போலி கம்யூனிஸ்ட்டுகள் என விமர்சித்தபடியிருக்கும் தமிழக மவோயிஸ்ட்டுகள் என்ன சொல்கிறார்கள்? 

இந்தக் கேள்விகளை எல்லாம் ஒரு திட்டவட்டமான வரலாற்றுப் பின்னணியில் இருந்துதான் அணுக நினைக்கிறேன். இனி ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட மக்களின் மீட்சியில் எந்தவிதமான பாத்திரமும் ரஸ்ய நாட்டுக்கோ, சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கோ இல்லை எனும் புரிதலுடன், வியட்நாம், வடகொரியா, கியூபா, வெனிசுலா போன்ற நாடுகளுக்கு அவரவரது சொந்த நாட்டின் நலன்கள் அல்லது அந்தந்த பிராந்திய நலன்கள் என்பதற்கு அப்பால் உலகின் ஒடுக்கப்பட்ட மக்களின் பால் எந்தவிதமான சர்வதேசிய உணர்வும் இல்லை என்னும் புரிதலுடன், நிலவுகிற சோசலிச மாதிரிகளில் தேர்ந்து கொள்ள எதுவுமில்லாத இடைக்காலத்தில் விடப்பட்டிருக்கும், மார்க்சியப் புனர்நிர்மாணத்திற்காக (reconstruction) அர்ப்பணிப்புடன் போராடிவரும் மார்க்சியர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்ற புரிதலுடன், முதலாளித்துவத்திற்கு எதிரான உலக இயக்கங்களுக்கும், மனித உரிமை மற்றும் அரசியல் ஜனநாயகத்திற்கான இயக்கங்களுக்கும் ஒரு எதிர்காலம் இருக்கிறது எனும் புரிதலுடன், அந்த இயக்கங்கள் அரபுப் புரட்சியிலும், 2011 மே இறுதியில் ஸ்பெயினில் கிளர்ந்திருக்கும் கட்சிகள்-தொழிற்சங்கங்களுக்கு அப்பாலான சிவில் சமூகத்தின் எழுச்சியில் மலர்ந்திருக்கின்றன எனும் புரிதலுடன்- இந்தப் பின்னணியில் இருந்துதான், ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கை தொடர்பான இந்திய-இலங்கை மார்க்சியர்களின் பார்வைகளை அணுக முயல்கிறேன். அனைத்துக்கும் மேலாக இலங்கையில் நடந்திருப்பது இனக்கொலை எனும் திட்டவட்டமான நிலைப்பாட்டிலிருந்துதான் இது குறித்த அணுகுமுறையையே மேற்கொள்ள முடியும் எனவும் நினைக்கிறேன். 

II 

ஐநா நிபுணர் குழு அறிக்கையை ஏகாதிபத்தியத்தின் உள்நாட்டுத் தலையீடு எனக் கடுமையாக எதிர்க்கும் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி, சம சமாஜக் கட்சி, ஜனதா விமுக்தி பெரமுனா அத்துடன் தொழிலாளி வர்க்க ஸ்தாபனங்களான பல்வேறு கட்சிகளின் தொழிற்சங்கங்கள் இது குறித்து என்னவிதமாகப் பார்க்கின்றன என்பதனை முதலாவதாகப் பார்ப்போம். 

2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19வது தேசிய மாநாட்டில் ஐநா நிபுணர் குழு தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் நிபுணர் குழு அறிக்கையை எதிர்ப்பது என முடிவு செய்திருப்பதாக இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி பதிவு செய்திருக்கிறது. 

 இந்த அறிக்கை குறித்து உணர்ச்சிவசப்பட்டு ஏதும் செய்துவிட வேண்டாம் எனவும் சர்வதேசிய நாடுகளின் விவகாரங்களைக் கையாள்கிற இவ்விடயத்தில் ஆத்திரமுற்று எதுவும் செய்துவிட வேண்டாம் எனவும் அரசை இந்தத் தீர்மானம் கேட்டுக் கொள்கிறது.

முதலாவதாக இந்த அறிக்கை சட்டவிரோதமானது. விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின் சில மேற்கத்திய அரசுகள் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் அவை ஒன்றில் ஒரு தீர்மானம் கொண்டு வர முயன்று முடியாமல் போனதால் அதனைத் தொடர்ந்து செயல்படுத்துவதற்காக இப்போது இலங்கை மீது போர்க்குற்றங்களைச் சுமத்தியிருக்கிறது. இது அவர்களது புவிசார் அரசியல் நலன்களை அடிப்படையாகக் கொண்ட தந்திரோபாயம் என இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது. இதுவல்லாமல் மனிதாபிமானத்தினாலோ அல்லது தமிழ் மக்களின் மீது கொண்ட அன்பினாலோ இதனைச் செய்யவில்லை.

விடுதலைப் புலிகளின் முழுமையான தோல்வியை விரும்பாத சக்திகள், மறுபடியும் இலங்கையில் தலையிட்டு, இலங்கையை நிலைகுலைக்க அல்லது ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறது. சரத் பொன்சேகா வேட்பாளரானதும் இந்தத் திட்டப்படிதான். பான் கீ மூனின் அறிக்கை, ஆதாரமில்லாத, இட்டுக்கட்டப்பட்ட,கதைகளினால் ஆன,விடுதலைப் புலிகளால் தரப்பட்ட, அரசு சாரா அமைப்புக்களின், உலக அரசு சாரா நிறுவனங்களின் மிகைப்படுத்தல்கள் மற்றும் கற்பனைகள். இறையாண்மையுள் ள ஒருநாட்டின் மீதான சட்டவிரோதமான ஒரு அமைப்பின் அறிக்கையை நாம் ஐநா அறிக்கை என மதிக்கக் கூடாது. சட்டவிரோதமான இந்த அறிக்கை கடந்த முப்பதாண்டுகால வரலாற்றை மேலோட்டமாகப் பார்த்திருக்கிறது. தோற்றுப்போன பேச்சுவார்த்தைகள், விடுதலைப்புலி பயங்கரவாதிகளின் அழிவுகரமான கொலைகாரத்தனமான இயல்பும் தந்திரமும் என்பவ‌ற்றைக் கள்ளத்தனமாக மேலோட்டமாக பார்த்திருக்கிறது.

புலிகளால் மனிதக் கேடயங்களாகப் பிடித்துவைக்கப்பட்ட மூன்று இலட்சம் மக்களை இலங்கைப் படையினர் வீரத்துடன் மீட்டனர் என்பதை மறைக்கிறது. இதுவரை நடைபெற்ற மீள்குடியேற்றம், மீள்கட்டுமானம் என்பவற்றை நிராகரித்திருக்கிறது. 7,000 விடுதலைப் புலிகள் விடுவிக்கப்பட்டிருப்பதைப் புறக்கணிக்கிறது. பழைய புண்களை அறிக்கை கிளறி மீளிணக்கத்தைக் குழப்ப முயல்கிறது. இனவாதத்தைப் பலப்படுத்த முயல்கிறது. பிரிவினையையும் வன்முறையையும் வளர்க்க முயல்கிறது. ஐக்கிய நாடுகள் சபைச் செயலாளரின் பொறுப்பற்ற கண்ணியமற்ற இந்த நடவடிக்கையை இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் செய்கிறது. தமது புவிசார் நலன்களை மையமாக முன்வைத்து உருவாக்கப்பட்ட தந்திரோபாயங்களின் அடிப்படையிலான மேற்கத்திய சக்திகளின் பிரம்மைகளுக்கு, சமாதானத்தை நேசிக்கும் தமிழ் மக்கள் இரையாகிவிடவேண்டாம். இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியானது தமிழ் மக்களின் உண்மையான துயர்களையும், உரிமைகளையும் அபிலாஷைகளையும் கவனம் கொள்ளவும், வரலாறு நமக்களித்திருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி தேசியப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வை அடையவும் செயல்படுமாறு அனைத்து தேசபக்தி சக்திகளுக்கும் முற்போக்கு சக்திகளுக்கும் கோரிக்கை விடுக்கிறது என்கிறார் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சிப் பொதுச் செயலாளரான டியூ குணசேகரா (26 April 2011 : silencing communist party.com).  

சம சமாஜக் கட்சியின் திஸ விதாரண வெளியிட்டிருக்கும் அறிக்கை இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையிலிருந்து பெரிய அளவில் ஏதும் வித்தியாசப்படாத அறிக்கை. 

 இலங்கை அரசானது பாரிய ராஜதந்திரத் தாக்குதலை எதிர்கொண்டிருக்கிறது, அது முழுநாட்டுக்கும் அழிவுகரமான விளைவுகளை உண்டாக்கக் கூடியது. பான் கீ மூனின் அறிக்கையின் அடிப்படையிலான ஏகாதிபத்திய சதித் திட்டத்தை முறியடிப்பதில் அனைத்து இலங்கையர்களும் ஒன்றுபட வேண்டும் என சம சமாஜக் கட்சி கேட்டுக்கொள்கிறது. அரசு உணர்ச்சிவசப்பட்டு எதிர்வினையாற்றவோ அல்லது பாரிய ஆபத்தைக் குறைத்து மதிப்பிடவோ கூடாது. கச்சிதமாகக் கவனத்துடன் செயல்பட வேண்டும். மகிந்த ராஜபக்சேவின் அரசானது அமெரிக்காவுக்குச் சார்பில்லாத கூட்டுச்சேரா வெளிநாட்டுக் கொள்கையினைக் கடைப்பிடித்து வருகிறது. விடுதலைப் புலிகளைத் தோற்கடித்தது பிரிவினைக்கான முயற்சியைத் தோற்கடித்தது மட்டுமல்ல, கடைசி நேரத்தில் விடுதலைப் புலிகளைக் காப்பாற்ற அமெரிக்கா செய்த முயற்சியையும் அவர் முறியடித்தார்.

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததால் இரண்டு பக்கமும் ஆயுத விற்பனை என்பது முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுவிட்டது. அதனால் நெருக்கடியிலிருக்கும் மேற்கத்தியப் பொருளாதாரத்திற்கு இது மிகப்பெரும் அடியாக அமைந்திருக்கிறது. ஆகவே அமெரிக்கா இலங்கையில் ஒரு ஆட்சி மாற்றத்தை உருவாக்கப் பார்க்கிறது. ஏகாதிபத்தியவாதிகள் உள்ளக நிலைமையிலும் சர்வதேச நிலையிலும் இலங்கையைக் கேவலப்படுத்தவும், முடிந்தால் ஐக்கிய நாடுகள் பொறியமைப்பை வைத்து இலங்கையில் தலையிடவும் முயல்கிறார்கள். சிறுபான்மைத் தமிழ்மக்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் எனும் போர்வையில் இதனை சாதிக்க முயல்கிறார்கள். சிறுபான்மைத் தமிழர்களுக்கு எதிராக பெரும்பான்மை சிங்கள அரசினால், அவர்கள் பல்லாண்டு துன்பப்பட்டு வருகிறார்கள் எனும் பொதுப்பரிவைத் தூண்டுவதன் மூலம் தமது ஏகாதிபத்தியைச் சதியை அவர்கள் சாதிக்கப் பார்க்கிறார்கள்.

பான் கி மூனினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் சிற்சில விடயங்கள் சரியானவைகளாக இருக்கலாம், ஆனால் பெரும்பாலுமானவை இட்டுக்கட்டபட்டவை, திரிபுகள் அதனோடு முழுக்கவும் கட்டுக்கதைகள். சார்பற்று இருக்க வேண்டிய ஐக்கிய நாடுகள் சபை நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் கடந்த காலங்களில் பக்கச் சார்பாளர்களாக மாறிவிட்டிருக்கிறார்கள். இந்த அறிக்கையைத் தயார் செய்த மூவரும் சார்நிலை அற்றவர்கள் என வைத்துக் கொண்டாலும், அவர்கள் இதனை அறியாதவர்கள் எனவே கருதவேண்டியிருக்கிறது, அவர்களுக்குச் சொல்லப்பட்டவைகளை அவர்கள் சரியானது என எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். வெளிநாடுகளில் இருக்கிற பலருக்கு இலங்கையில் இருக்கிற பல இன மக்களுக்கு இடையில், குறிப்பாக தமிழ் - சிங்கள மக்களுக்கு இடையில் நட்புரீதியிலான உறவுகள் இருந்து கொண்டிருக்கின்றன என்பது தெரியாது. சிக்கலான மோதல் நிலையிலுள்ள நாடுகளில் இருக்கும் இன மதக் குழுக்கிடையில் இருக்கும் ஆழமான வெறுப்பை ஒப்பிடுகிறபோது, இலங்கை நிலைமை அதற்கு மாறானது என்பதை அவர்கள் உணர்வார்கள். பொருத்தமான அரசு அமைச்சர்கள் உடனடியாகவும் புறநிலை அடிப்படையிலும் இந்தப் பொய்யான தகவல்களை உடனடியாக மறுக்க வேண்டும் என சம சமாஜக் கட்சி அரசைக் கோருகிறது.இதன் மூலம் அறிக்கையைச் சமன்செய்ய முடியும்.

ஐக்கிய நாடுகள் இலங்கையில் தலையிடுவதற்கான வாய்ப்பை நிபுணர்குழு அறிக்கை உருவாக்குகிறது. அதனது பரிந்துரைகளில் ஒன்றாக, குற்றம்சாட்டப்படும் மனித உரிமைகளை விசாரிப்பதற்கும் பொறுப்பு கூறலுக்கு உட்படுத்துவதற்குமான ஒரு சர்வதேசப் பொறிமுறையை உருவாக்குமாறு அறிக்கை பரிந்துரைத்திருக்கிறது. நிபுணர் குழு அறிக்கையின் பாரபட்சமான தன்மையைப் பார்க்கும்போது இந்த நடைமுறை நியாயமானதாக அமையும் எனத் தோன்றவில்லை. இதனைத் சாதிப்பதற்காக பொறுப்பு கூறும் வகையிலான ஒரு செயல்முறையை இலங்கையே உருவாக்க வேண்டும். ஏனெனில் இது உள்நாட்டுப் பிரச்சினையும் என்பதால் இதனை நாம் செய்ய வேண்டும். தமிழ்மக்களின் துயர்களைக் கவனத்தில் கொள்வதற்கான நடவடிக்கையை ஆழப்படுத்த வேண்டும் எனவும் அரசை சம சமாஜக் கட்சி கோருகிறது. தமிழ் மக்களது பொருளாதார சமூகப் பிரச்சினைகளை நாம் கவனம் கொள்கிறபோது, அவர்களுக்கு பொருத்தமான அதிகாரப் பகிர்வு அவசியம் என்பதையும் நாம் கவனம் கொள்ள வேண்டும்.

அனைத்துக் கட்சிக் குழுவின் பிரதிநிதிகளின் அறிக்கையின் முடிவுகளில் ஒன்று, ஐக்கிய இலங்கைக்குள் மத்திய அரசுக்கும் விளிம்புநிலையிலுள்ள அலகுகளுக்கும் இடையில் அதிகாரப் பகிர்வு இடம்பெற வேண்டும் எனும் முடிவும் முக்கியமானதாகும். இன்னும் வறுமை நிலையிலும் வளர்நிலையிலுமுள்ள இலங்கை போன்ற நாட்டுக்கு தமிழ் மக்களின் பொருளாதார மற்றும் சமூகத் தேவைகளை எதிர்கொள்வதற்கு இன்னும் நீண்ட காலங்கள் எடுக்கும். ஆனால் அதற்குத் தேவையான அரசியல் மாற்றங்களை உடனடியாக அமுல்படுத்த வேண்டும். வெளிநாடு வாழ் தமிழர்களும் மேற்கத்திய அரசுகளும் தமிழ் மக்களின் பெயரால் தொடுக்கப்படும் இந்தத் தாக்குதலை இது குறைக்கும். அரசு காத்திரமாக இதனை முன்னெடுக்க வேண்டும். பெருமிதத்துடன் நாம் ஏகாதிபத்தியங்களின் பொறிமுறையை இதன்வழி முறியடிக்கலாம். இது தொடர்பான அரசின் முயற்சிகளுக்கு சம சமாஜக் கட்சி முழுமையான ஆதரவை நல்கும் (30 April 2011 : srilnakabrief.org). 

இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியும் சம சமாஜக் கட்சியும் மகிந்த ராஜபக்சேவின் அரசில் அங்கம் வகிப்பதால் ஏறக்குறைய ஒரே குரலில் பேசுகின்றன. ஜனதா விமுக்தி பெரமுனா விடுலைப்புலிகளுக்கு எதிரான மகிந்த ராஜபக்சேவின் போரை ஆதரித்தாலும் கூட, கடந்த இரண்டு வருடங்களிலான மகிந்த அரசின் கொள்கைகள் குறித்து கடுமையான விமர்சனங்களைக் கொண்டிருக்கும் கட்சி. அதனுடன் இலங்கையின் அரசில் பங்குபெறாத கட்சி. கிராமப்புற சிங்கள மக்களின் சுபிட்ச வாழ்வில் அக்கறை கொண்ட இளைஞர்களைக் கொண்டு சிங்கள அரசுக்கு எதிராக ஒரு ஆயுதப் போராட்டத்தையும் நடத்தி, அதற்கு விலையாக ஆயிரக்கணக்கிலான சிங்கள இளைஞர்களது உயிரையும் அர்ப்பணித்த ஒரு கட்சி. என்றாலும் அடிப்படையான பிரச்சினையான தமிழ்மக்கள் சார்ந்த கண்ணோட்டத்தில் முன்னிரண்டு கட்சிகளுக்கும் இதற்கும் பெரிதாக வித்தியாசம் ஒன்றுமில்லை என்பதனை பெரமுனாவினது அறிக்கை மெய்ப்பிக்கிறது : 

 எந்தப் பிரச்சனையையும் பயன்படுத்தி அறுவடை செய்வது எனும் ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளரான பான் கி மூனது அறிக்கையின் அரசியல் இலக்கு என்பது இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதுதான். இதனை நாம் நிராகரிக்கிறோம். பல நாடுகளில் அறுவடை செய்த ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையினது செயல்பாடுகளை நோக்குகிறபோது, அந்த நாடுகளில் ஜனநாயகத்தையும் மனித உரிமையையும் பாதுகாப்பது எனும் நியாயமான நிலைபாட்டுக்கு அப்பால், முற்றிலும் மாறான அரசியல் இலக்குகளை எய்துவதற்குத்தான் அவர்கள் அதனைப் பாவித்திருக்கிறார்கள் என்பது தெளிவாக இருக்கிறது. ஜனநாயக விரோதமான, எழுந்தமானமான, ஒடுக்குமுறையைக் கொண்ட மகிந்த ராஜபக்சேவின் அரசுதான் இதற்குப் பொறுப்பாகும். இலங்கையின் உள்விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் தலையிடுவதற்கான இந்தப் பாதையை அமைத்துக் கொடுத்தது மகிந்த ராஜபக்சே அரசின் செயல்பாடுகள்தான்.

மனித உரிமைகளைப் பயன்படுத்தி இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் தலையிடுவதற்கான முழுக்காரணமும் ராஜபக்சே அரசுதான். யுத்தம் முடிந்து இந்த இரண்டு ஆண்டுகளில் ஜனநாயகத்தை மட்டுமல்ல மனித உரிமைகளையும் காப்பாற்றுவதில் இந்த அரசு தோல்வியுற்றுவிட்டது. இந்த அரசு அதனது எதிரிகளுக்கு எதிராகத் தொடர்ந்து அதிகாரபூர்வமற்ற ஒடுக்குமுறையை நாடெங்கிலும் செலுத்துகிறது. முற்றிலும் ஒடுக்குமுறைத்தன்மை கொண்ட ஒரு அதிகார அமைப்பை நாட்டின் வடக்கில் கொண்டிருக்கிறது. வடக்கிலும் கிழக்கிலும் வாழ்கிற மக்களுக்கு அடிப்படை உரிமைகைளை வழங்குவதற்கான எந்த முயற்சியையும் இந்த அரசு செய்யவில்லை. சந்தேகத்திலிருந்தும் அச்சத்திலிருந்தும் இந்தப் பிரதேசத்தில் வாழும் மக்கள் மீள்வதற்கான சிவில் நிர்வாகத்தை அமைப்பதனை இந்த அரசாங்கம் தன்னிச்சையாக நிராகரித்துவருகிறது. இந்த நிலைமை, முழு உலகத்திற்கும் இந்த அரசானது மனித உரிமை மீறலை நிகழ்த்தி வருகிறது எனும் சித்திரத்தை வழங்கியிருக்கிறது.

இன்னொரு வகையில் ராஜதந்திரத்திலும் இந்த அரசு தோற்றுப் போயிருக்கிறது. போலியான தேசபக்தியை முன்வைப்பதிலும், சாகும்வரை உண்ணாவிரதம் போன்றவற்றை முன்வைத்து மக்களை ஏமாற்றுவதிலும் ஈடுபட்டபடியே, ஐக்கிய நாடுகள் சபைச் செயலாளருடனும் அதன் அலுவலர்களுடனும், ஏகாதிபத்திய சக்திகளுடனும் உரையாடல்களையும் கலந்தாய்வுகளையும் மக்களுக்குத் தெரியாமல் இது நடத்திக்கொண்டு மக்களை ஏமாற்றி வருகிறது. இப்போது தொடுக்கப்பட்டிருக்கும் இத்தாக்குதல் அரசின் இந்த முட்டாள்தனமான நடவடிக்கைகளால் வந்துததுதான். பல்வேறு அரசியல் நலன்களுக்காக இலங்கையின் உள்நாட்டு நலன்களில் தலையிடும் ஐக்கிய நாடுகள் சபைச் செயலாளரின் நிபுணர்குழு அறிக்கையை நிராகரிக்கும் அதேபொழுதில், இலங்கையின் மீதான ஏகாதிபத்தியத் தலையீட்டையும் நாம் முறியடிக்க வேண்டும். இதனைப் போலவே இந்த தாக்குதலுக்கு வழிவகுத்திருக்கும் அரசின் சமூக விரோத ஜனநாயக விரோத நடவடிக்கைகளையும் நாம் முறியடிக்க வேண்டும். அனைத்து இலங்கை மக்களதும் மனித உரிமைகளையும் ஜனநாயக உரிமைகளையும் இலங்கை அரசு காப்பாற்ற வேண்டும் என அதனை உந்தித் தள்ள வேண்டும் என்பதனை நாம் வலியுறுத்துகிறோம். இந்த இலக்குகளை அடைய அனைத்து மக்களும் ஒன்றுதிரளுமாறு நாம் அழைக்கிறோம்;(11 April 2011 : transcurrents.com).  

இலங்கையின் அமைப்புரீதியான இடதுசாரிக் கட்சிகளின் நிலைபாடுகள் இவ்வாறு இருக்க, இலங்கையின் தொழிற்சங்கங்கள் என்ன நிலைபாடுகளை முன்வைத்திருக்கின்றன? தொழிற்சங்கங்கள், புரட்சியின் முன்னணிப் படையான புரட்சிகரக் கட்சியின் முன்னணி அரங்காகத் திகழ்வது. பாட்டாளிவர்க்க சர்வதேசியத்தை முன்வைக்கும் வர்க்கபேதத்தைக் கொண்டது தொழிற்சங்கள். இவைகள் என்ன சொல்கின்றன? 

 இலங்கை சுதந்திரக் கட்சியின் தொழிற்சங்கள் ஐக்கியநாடுகள் சபைக்கு எதிரான கோஷங்களை தமது மேநாள் அணிவகுப்பில் வைப்போம் எனச் சொல்கின்றன. பிறிதொரு தொழிற்சங்கத் தலைவரான லெஸ்லி தேவேந்திரா ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் நியாயத்தன்மையை நாம் சந்தேகிக்கிறோம். அதற்கு மறைக்கப்பட்ட திட்டம் இருக்கிறது என்கிறார். சம சமாஜக் கட்சியின் தொழிற்சங்கத் தலைவரான பியதாஸா நாங்கள் அறிக்கைக்கு எதிராக நிற்கிறோம். எமது சம சமாஜக் கட்சி ஏற்கனவே இதனை எதிர்த்திருக்கிறது என்கிறார். இலங்கை தொழிற்சங்கங்களின் ஒன்றியச் செயலாளர் சுபசிங்கே இந்நிலைபாடுகளிலிருந்து கொஞ்சமாக மாறுபடுகிறார்: இதற்கு எதிராக நாங்கள் போராடவும் இல்லை அல்லது அறிக்கையை ஒப்புக்கொள்ளவும் இல்லை. இந்த அறிக்கை இந்த நாட்டின் சாதாரண மக்களுக்கோ அல்லது தொழிலாளர்களுக்கோ எதிரானது இல்லை. இந்த அறிக்கை ஆட்சியாளர்களை விமர்சிக்கிறது. நாங்கள் ஆட்சியாளர்கள் இல்லை. அரசு இந்த அறிக்கையைப் பொருத்து தவறான வழியில் செல்வதாகப் படுகிறது. அவர்கள் உரையாடலுக்குப் போவது நல்லது. இதற்குத் தீர்வு காண்பதற்குப் பொருத்தமான நபர்களை அவர்கள் நியமிக்கவேண்டும் என்கிறார் சுபசிங்கே. இந்தத் தொழிற்சங்கம் ஆளும் அரசில் அங்கம் வகிக்கும் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சித் தொழிற்சங்கம் என்பது குறிப்பித்தக்கது (21 April 2011 : The Sunday Leader : Sri Lanka).  

விக்ரபாகு கருணாரத்ன நவ சமாஜக் கட்சியின் தலைவர். விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் என சிங்கள இடதுசாரிகளாலும் இலங்கை அரசினாலும் குற்றம் சாட்டப்பட்டவர். ஆக்ஸ்போர்ட் மாணவர் அவையில் பேசவிருந்த ராஜபக்சேவுக்கு எதிராக லண்டனில் எழுந்த தமிழர்களின் ஆர்ப்பாட்டங்களுக்குக் காரணமாக இருந்தார் என இலங்கை அரசு ஆதரவாளர்களின் தாக்குதலுக்கும் உள்ளானவர். நிபுணர் குழு அறிக்கை குறித்த அவரது பார்வை கொஞ்சம் வித்தியாசமானது. இந்த அறிக்கை இந்திய அரசினால் உருவாக்கப்பட்டது என்றும், தமிழ் மக்களுக்கு எந்தத் தீர்வும் தராத உலக அதிகாரங்களின் தாராளவாத ஜனநாயகப் பார்வை இந்த அறிக்கை எனவும் அவர் சொல்லியிருக்கிறார் (lanka news web : 06.05.2011). இதனோடு அரசு இந்த நிபுணர் குழு அறிக்கையை இனவாத முன்னணிக்கான தந்திரோபாயமாகப் பாவிக்காமல் பதில் சொல்ல வேண்டும் எனச் சொல்லியிருக்கிறார். இந்த அறிக்கை நிகழ்வுகளை விளக்கத்துடன் முன்வைத்திருக்கிறது, அதனோடு சில பரிந்துரைகளையும் முன்வைத்திருக்கிறது, அது செயல்படுத்தப்பட வேண்டியது அவசியம் எனவும் சொல்லியிருக்கிறது. அரசை அது எதிர்கொள்கிறது. அதற்கு பதில்களையும் அது கோருகிறது எனவும் சொல்லியிருக்கிறார் (Daily Mirror : 04 May 2011). 

 மனிதாபிமான அடிப்படையில் மக்களைக் காப்பது எனும் அடிப்படையில் அமைந்து வெகுமக்கள் மரணங்கள் அற்ற நடவடிக்கையை தமது ராணுவம் மேற்கொண்டது என்கிறது இலங்கை அரசு. இதிலிருந்து கூர்மையாக முரண்பட்டு நிபுணர்குழுவானது நம்பத்தகுந்த குற்றங்கள் இருக்கிறது எனச் சொல்லியிருக்கிறது. இவை நிரூபிக்கப்பட்டால் உலக மனிதாபிமானச் சட்டங்களையும் உலக மனித உரிமைச் சட்டங்களையும் இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் மீறியிருக்கிறார்கள் என ஆகும். இதில் சில மனித குலத்திற்கு எதிரான குற்றங்களும் ஆகும். நிஜத்தில் யுத்தகாலத்திலும் சமாதான காலத்திலும் இலங்கை அரசின் நடத்தையானது தனி மனித கண்ணியத்தைப் பாதுகாக்கும் முழு உலகச் சட்டங்களுக்கும் எதிராகவே இருந்தது. இந்த அறிக்கையை வாசிக்கிற ஒருவர் சில சமயம் அழவும் சமவேளையில் சிரிக்கவும் வேண்டியிருக்கும். உண்மைதான், இலங்கை அரசின் பல போர்க் குற்றங்கள் அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது. அறியாமையில் இருக்கிற மக்களுக்கு யுத்தம் எப்படி முன்னெடுக்கப்படுகிறது என நாம் சொன்னோமோ அதனை மெய்ப்பிக்குமாறும், அதற்கு அப்பாலும் இந்த அறிக்கை சொல்லியிருக்கிறது. ஆனால் ஈராக்கிலும் பாலஸ்தீனத்திலும் ஆப்கானிஸ்தானிலும் செய்யப்பட்ட குற்றங்களில் ஈடுபட்ட உலக அதிகாரங்களிடம் நீதியை எதிர்பார்ப்பது என்பது முட்டாள்தனமானது.

இதற்கு அப்பால் இவர்கள்தான் மகிந்தாவினது யுத்தத்தை நடத்திய எஜமானர்கள். இந்த அறிக்கை பான் கீ மூனினால் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. மாறாக இதனைக் கசியவைப்பதற்கு மகிந்தாவின் உதவியை இவர் பெற்றிருக்கிறார்! உலக அதிகாரங்களின் விளையாட்டு தெளிவாகி இருக்கிறது. எந்த நடவடிக்கையையும் இவர்கள் எடுக்க விரும்பவில்லை. அவர்களது வழிகாட்டுதலின் வழி மகிந்த நடவடிக்கை எடுப்பார். மிக முக்கியமானது என்னவென்றால் இந்த அறிக்கை தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்க மறுத்திருக்கிறது. மாறாக இரண்டு அரசுகளுக்கு இடையிலான யுத்தத்தில் இடம்பெற்ற இரு தரப்பு யுத்தக் குற்றங்களாகப் பிரச்சினை சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ஒடுக்குமுறையாளனுக்கும் ஒடுக்கப்பட்டவனுக்கும் இடையிலான வித்தியாசத்தை இவர்கள் அழித்துவிட்டார்கள். உலக அதிகாரங்களின் தாராளவாத ஜனநாயகத்திடமிருந்து தமிழ் மக்கள் தீர்வை எதிர்ப்பார்ப்பது என்பது வியர்த்தமானது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இடையிலான ஒற்றுமைதான் இதற்கான மார்க்கமாகும் (nssp.info/ninawwa/bahuscolumn). 

இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் சம சமாஜக் கட்சிக்கும் இடையில் எந்த விதத்திலும் பெரிய வித்தியாசம் இல்லை. அறிக்கை ஏகாதிபத்தியத்தின் சதி. புனைவுகள். இட்டுக்கட்டப்படவை. கட்டுக்கதைகள். இதனை எதிர்க்க வேண்டும். விசாரணை என்பது தேவையில்லை. அறிக்கையை முறியடிக்க வேண்டும். மேலதிகமாக இலங்கை ராணுவத்தினர் தமிழ் மக்களின் உயிரை வீராவேசமாகக் காத்தனர் என்கிறது கம்யூனிஸ்ட் கட்சி. மிகப் பெரிய உண்மையொன்றினை சம சமாஜக் கட்சி கருணையுடன் சொல்லியிருக்கிறது. இன்னும் வறுமை நிலையிலும் வளர்நிலையிலுமுள்ள இலங்கை போன்ற நாட்டுக்கு தமிழ் மக்களின் பொருளாதார மற்றும் சமூகத் தேவைகளை எதிர்கொள்வதற்கு இன்னும் நீண்ட காலங்கள் எடுக்கும். ஆனால், அதற்குத் தேவையான அரசியல் மாற்றங்களை உடனடியாக அரசு அமுல்படுத்த வேண்டும். 

நிபுணர் குழு அறிக்கை ஏகாதிபத்திய சதி என்பதிலோ தலையீடு என்பதிலோ ஜனதா விமுக்தி பெரமுனாவுக்கு சந்தேகமில்லை. இதற்கான காரணம் மகிந்தாவின் போருக்குப் பின்னான இரண்டாண்டுகால ஆட்சியின் நடவடிக்கைதான் எனும் பென்னாம் பெரிய உண்மையைக் கண்டுபிடித்திருக்கிறது பெரமுனா. இரண்டு வருடங்களுக்கு முன்னாலும், ஈழப் போரின் போதும் மகிந்த அரசு ஜனநாயகத்தையும் மனித உரிமையையும் காப்பாற்றிக் கொண்டிருந்தது என்கிறது பெரமுனாவின் அறிக்கை. மகிந்தா அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பாளர் என்கிறார் கம்யூனிஸ்ட் கட்சியின் குணசேகரா. இல்லை ஏகாதிபத்தியங்களோடு குலவிக் கொண்டிருப்பவர் மகிந்த என்கிறது பெரமுனா. சம சமாஜக் கட்சி போரை மகிந்த நிறுத்திவிட்டதால், ஆயுதப் பொருளாதாரத்தைக் கொண்ட ஏகாதிபத்தியங்கள் நெருக்கடி நிலைமையில் இருப்பதால், இந்த அறிக்கை நடவடிக்கையை எடுத்திருப்பதான பகுப்பாய்வை முன்வைத்திருக்கிறது. என்ன கொடுமை, இலங்கையின் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்த வெற்றியின் கருத்தரங்கில் பங்கு பற்ற இலங்கை அமெரிக்காவையும் அழைத்திருக்கிறது! செவ்வியல் மார்க்சியப் பகுப்பாய்வுகளைப் படித்திருப்பவர்களுக்கு முழுமையாக மூளைச்சலவை செய்து விடுபவைதான் இவர்கள் பாவிக்கிற சொல்லணிகளும் பகுப்பாய்வுகளும். ஆனால் குறிப்பான பகுப்பாய்வுகளையும் அதிலிருந்து சாத்தியமான தீர்வுகளையும் தேடுகிறவனை இனி இத்தகைய சொல்லணிகள் ஏமாற்றிவிட முடியாது. 

இந்த அறிக்கையை ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கை அல்ல என்று சொல்வதில் இவர்கள் தெளிவாக முனைப்பு காட்டுகிறார்கள். அறிக்கையில் உள்ள விடயங்களைப் பேசுவதற்கு முன்னால் இது சட்டபூர்வமற்ற தனிநபர்களின் அறிக்கை என்பதனை முன்வைக்கிறார்கள். பிற்பாடாகச் சதி என்கிறார்கள். அப்புறமாக முறியடிக்க வேண்டும் என்கிறார்கள். தமிழ் மக்களுக்கான நீதி என்னும் பிரச்சினை என்ன ஆனது? சரி. அதனை விடுவோம். அறிக்கையை எதிர்ப்பதற்கு சர்வகட்சி ஒன்றிணைவைக் கோருகிற பெரமுனா இலங்கையில் அனைத்து மக்களுக்குமான மனித உரிமையைக் கொண்டு வருவதற்கு என்ன முனைப்பை முன்வைக்கிறது? தமிழ் மக்களுடன் இணைந்து இந்தத் திட்டங்களை முன்னெடுப்பதற்கான ஏதேனும் முனைப்புக்கள் இந்த இடதுசாரிகளிடம் உண்டா? இது ஏதும் இல்லாத நிலைமையில் தெற்கிலுள்ள இடதுசாரிகளுடன் தமிழர்கள் இணைந்து போராடுவது என்பதற்கான வாய்ப்பு முற்றிலும் இல்லை. 

'இந்த அறிக்கை இந்த நாட்டின் சாதாரண மக்களுக்கோ அல்லது தொழிலாளர்களுக்கோ எதிரானது இல்லை. இந்த அறிக்கை ஆட்சியாளர்களை விமர்சிக்கிறது. நாங்கள் ஆட்சியாளர்கள் இல்லை' என்கிறார் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கத் தலைவர். தமிழ் மக்கள் இந்த நாட்டின் பகுதி என்கிறது இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி. அந்த மக்கள் ஆயிரக்கணக்கில் கேட்பாரற்றுக் கொல்லப்பட்டது பற்றியது அறிக்கை. இது சாதாரண மக்களுக்கோ தொழிலாளர்களுக்கோ எதிரானது இல்லை என்கிறார் கம்யூனிஸ்ட் தொழிற்சங்கத் தலைவர் எனில் மக்கள் என்பது இங்கு சிங்கள மக்கள் மட்டும்தானா? 

நவ சமாஜக் கட்சியின் அறிக்கை குறித்த பகுப்பாய்வும் முடிவும் இவர்களிடமிருந்து எந்தவகையில் வேறுபடுகிறது? அறிக்கை ஏகாதிபத்தியங்களின் அறிக்கை என்பதில் அவர் பிற சிங்களக் கட்சிகளுடன் முரண்படுவதில்லை. அவர்களது நவதாராளவாதம் தமிழர்களுக்குத் தீர்வு வழங்காது எனவும் சொல்கிறார். அறிக்கை இந்தியாவால் உருவாக்கப்பட்டது என்றும், இந்த அறிக்கையின் பின்னிருப்பவர்கள்தான் தமிழர்களுக்கு எதிரான யுத்தத்தை நடத்தி முடித்தவர்கள் எனவும் அவர் சொல்கிறார். இந்த அறிக்கை ஒடுக்கப்பட்டவர்களுக்கும் ஒடுக்குமுறையாளர்களுக்குமான வித்தியாசத்தை நிராகரித்திருக்கிறது எனவும் அவர் சுட்டுகிறார். சரி. என்ன செய்யலாம்? ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இடையிலான ஒற்றுமைதான் இதற்கான மார்க்கமாகும் என்கிறார் விக்ரமபாகு. இதுவும் ஒரு செவ்வியல் மார்க்சிய நிலைபாடு. எந்த சர்வதேசீயவாதியும் இதனையே ஏற்க வேண்டும். ஆனால், தமிழர்கள் ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிற சிந்தனையே இல்லாத பெரும்பான்மை சிங்கள சமூகத்தினிடையிலும், பெரும்பான்மை இடதுசாரிகளிடத்திலும் ஒடுக்கப்பட்ட தமிழர்கள் எங்கிருந்து நேசசக்திகளைத் தேடுவது? குறைந்தபட்சம் இந்த அறிக்கை குறித்து தமிழ் மக்களுக்குச் சாதகமான ஒரு பொதுக்கருத்தை இலங்கைக்குக் உள்ளாகக் கூட உருவாக்க முனையாத, மாறாக இந்த அறிக்கையை எதிர்த்து பொதுக்கருத்தை உருவாக்க நினைக்கிற சிங்கள இடதுசாரிகளோடு ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் எவ்வாறு ஒன்றுபட்டுப் போராடுவது சாத்தியம்? எதன் அடிப்படையில்?

கட்சிகளின் அறிக்கைகள் என்பது அவர்களது கொள்கைச் சாசனம். இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி, சம சமாஜக் கட்சி, பெரமுனா போன்றவைகளது அறிக்கை தமிழ் மக்களது சார்பாக எதையேனும் முன்வைக்கிறதா? யுத்தத்தின்போது தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் என்பதனை பெரமுனா ஒப்புகிறதா? இந்த ஒப்புதல்கள் அனைத்தும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான பிரச்சினையோடு சம்பந்தப்பட்டது. இந்த மனித உரிமை அறிக்கையை இனவாதத்திற்குப் பயன்படுத்தாமல் இதற்குப் பதில் தேட வேணடும் என்கிறார் விக்ரமபாகு. இரண்டு விதமாகவே பதில் காணமுடியும். நடந்ததை ஒப்புக் கொள்ள வேண்டும். தீர்வு காண்பதற்கான திறந்த மனம் வேண்டும். அந்தச் சூழல் இல்லாத போது, தமிழ் மக்களின் பாலான ஒடுக்குமுறையும் தம் மீதான ஒடுக்குமுறையின் பகுதிதான் என சிங்கள இடதுசாரிகளும் கட்சிகளும் வெகுமக்களும் பிரக்ஞைபூர்வமாக உணராத‌ வரை, ஒடுக்குமுறைக்கு எதிரான ஒன்றுபட்ட இயக்கங்கள் என்பதற்கான சாத்தியமும் ஸ்தூலமாக இலங்கை நிலைமையில் இல்லை. 

III 

அறிக்கைக்கு எதிர்ப்புக் காட்டும் நிலைபாடுதான் இலங்கைத் தமிழ் மாவோவியர்களதும் இந்தியத் தமிழக மாவோவியர்களதும் கருத்துக்களாக இருக்கிறது. புதிய ஜனநாயக மார்க்சிச லெனினியக் கட்சியின் செயலாளர் சி.க.செந்தில்வேல் நிபுணர் குழு அறிக்கை தொடர்பான தமது கட்சியின் நிலைபாடாக (22 april 2011 : inioru.com) இவ்வாறு சொல்கிறார் : 

 இலங்கை அரசாங்கம் ஐ.நா சபை உட்பட ஏகாதிபத்திய நவகொலனித்துவ நிறுவனங்களையும், அவற்றின் சட்டங்களையும் வரைபுகளையும் ஏற்றுக் கொண்டு அவற்றின் வாடிக்கை அரசாங்கமாக இருக்கின்றபடியால் அவற்றுக்குப் பதில் கூறக் கடமைப்பட்டுள்ளமை கவனத்திற்குரியதாகும். அமெரிக்க ஏகாதிபத்தியமும், ஐ.நா சபையும் நாடுகளின் இறைமையில் தலையிடுவது புதிதல்ல. அதனால் அத்தலையீடுகளை ஏற்று அங்கீகரிக்க வேண்டியதில்லை. அத்தலையீடுகளைத் தவிர்க்கவும் எதிர்க்கவும் வேண்டுமாயின் சொந்த நாட்டு மக்களுக்கு அரசாங்கங்கள் நேர்மையாகப் பதில் சொல்லக் கடப்பாடுடையனவாக இருக்க வேண்டும். ஏகாதிபத்திய அரவணைப்பாளர்களாக இருக்கும் நாடுகளின் தலைவர்கள் தமது அடக்குமுறை ஆட்சிக்கு சாதகமாக ஏகாதிபத்தியங்கள் இருக்கும் போது அவற்றை புகழ்வதையும், அடக்குமுறை ஆட்சிக்கு மாறாக அல்லது எதிராக ஏகாதிபத்தியங்கள் செயற்படும் போது அவற்றை எதிர்த்து பெரிய ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களாகவும் தேசப்பற்றாளர்களாகவும் காட்டிக் கொள்வதையும் மக்கள் அறிவார்கள்.

இலங்கை அரசாங்கத்தினாலும், அரச பாதுகாப்புப் பிரிவினராலும் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும், ஜனநாயகம் மறுக்கப்பட்டுள்ளதாகவும் 2009 மே மாதம் நடைபெற்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இலங்கை அரச பாதுகாப்புப் படையினருக்குமிடையிலான இறுதிக் கட்ட மோதலில் இலங்கைப் பாதுகாப்புப் படைத்தரப்பில் சர்வதேச மனிதாபிமான சட்டப் பிரமாணங்கள் மீறப்பட்டுள்ளதாகவும், அதற்காக இலங்கை அரசாங்கம் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளதாகவும், ஐக்கிய அமெரிக்க செனட் சபையும், ஐ.நா. பொதுச் செயலாளரினால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவும் தயாரித்த அறிக்கைகள் ஒன்றிற்குப் பின் ஒன்றாக வெளியிடப்பட்டுள்ளன.

  தமிழீழ விடுதலைப்புலிகளின் தனிநபர் பயங்கரவாத நடவடிக்கைகளையும் அதனது தனிநாட்டுக் கோரிக்கையையும் என்றுமே எமது கட்சி ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், அவ்வியக்கம் ஆயுதம் ஏந்திய போராட்டத்தில் ஈடுபட்டதற்கான அடிப்படைக் காரணம் தமிழ் மக்களின் மீதான பேரினவாத ஒடுக்குமுறையேயாகும். அவ்ஒடுக்குமுறை இன்னும் தொடர்கின்றன என்பதையும் எமது கட்சி வலியுறுத்திக் கூறும் கடப்பாட்டைக் கொண்டுள்ளது. 

 இலங்கையில் வாழும் தேசிய இனங்கள் அனைத்தும் சுயநிர்ணய உரிமை, சமத்துவம்,சுயாட்சி என்பவற்றின் அடிப்படையில் பல்லின சமூக ஐக்கியமாகி வாழும் அரச கட்டமைப்பை எமது கட்சி வலியுறுத்தி வருகிறது. அவ்வாறான ஏற்பாடில்லாதபோதே தனிநாடு, பிரிவினை போன்றவற்றை நாடும் நிலைமைக்கு அடக்கப்படும் தேசிய இனங்கள் தள்ளப்படுகின்றன என்பதையும் தொடர்ந்து எமது கட்சி சுட்டிக் காட்டி வந்துள்ளது.

  இலங்கையைத் தொடர்ந்து ஆண்டு வந்த, வருகின்ற பேரினவாத முதலாளித்துவ அரசாங்கங்களின் இன ஒடுக்கலும், தமிழ் மக்கள் மத்தியிலான பிற்போக்கு, பழமைவாத சக்திகளின் குறுகிய தேசியவாத நிலைப்பாடும் பிரிவினை கோரிக்கையை நியாயப்படுத்த அடிப்படையாக அமைந்தது.

  ஏகாதிபத்திய, பிராந்திய மேலாதிக்க சக்திகள் தமிழீழப் பிரிவினைக்கு ஆதரவு போல் நாடகமாடி தமிழ் மக்களின் போராட்டத்தைத் திசை திருப்பி, தமது நலனுக்காக அப்போராட்டத்தை நந்திக்கடலில் மூழ்கடிக்க வைத்தனர். இலங்கை பேரினவாத அரசாங்கத்திற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் துணை புரிந்தன. இந்நடவடிக்கையின் பின்னரும் ராஜபக்ஷ அரசைத் தம் வசம் முழுமையாக இழுக்க முடியாமையால் புலம்பெயர்ந்த தமிழ் மேட்டுக்குடியினரின் நாடு கடந்த தமிழீழ அரசிற்கு ஆதரவு தெரிவிப்பது போன்று ஒரு தோற்றப்பாட்டை அமெரிக்க, ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் கொண்டுள்ளன. அத்துடன் இலங்கை அரசாங்கத்தின் மீது போர்க்குற்ற விசாரணையை மேற்கொள்ளப் போவதாக அச்சுறுத்தி வருகின்றமை பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்கும் நோக்கத்தில் அன்றி ஜனாதிபதி ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை மிரட்டி முழு இலங்கையையும் கபளீகரம் செய்யும் ஏகாதிபத்திய நோக்கத்தையும் கொண்டுள்ளன.

ராஜபக்ஷ அரசாங்கம் சிங்கள மக்களிடம் ஏகாதிபத்திய எதிர்ப்பு வேஷத்தைக் கொண்டிருந்தாலும், அது நவகொலனித்துவத்தின் வாடிக்கை அரசாகவே இலங்கையை நிலை நிறுத்தியுள்ளது. இந்நிலையில் அவரின் நிலப் பிரபுத்துவ நிலைப்பாட்டில், ஒன்றான தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை மறுப்பானது ஏகாதிபத்திய அக்கறைகளுடன் முரண்படுவதையும் தற்போது காணமுடிகிறது. இதில் ராஜபக்ஷவிடம் ஏகாதிபத்திய எதிர்ப்புமில்லை. ஏகாதிபத்தியத்திடம் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அக்கறையும் இல்லை.தேசிய இனப் பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வு காணாமை மட்டுமன்றி, போர்க்குற்றங்கள், மனித உரிமைகள் மீறல் தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு பதில் சொல்லும் கடப்பாட்டை ராஜபக்ஷ அரசாங்கம் ஏற்காமையும் இலங்கையில் ஏகாதிபத்திய, பிராந்திய மேலாதிக்க சக்திகளின் அழுத்தங்களைக் கொடுக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளன. 

 அமெரிக்க செனட்சபையின் அறிக்கை ஏகாதித்திய நோக்குகொண்டதே, நவகொலனித்து அமைப்பான ஐ.நா. சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் நிபுணர்குழு அறிக்கை நவகாலனித்துவ அக்கறை கொண்டதே. ஆனால் அவற்றில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு இலங்கை அரசாங்கத்தின் மொட்டையான மறுப்பு பதிலாகாது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கை அரச படையின் இராணுவ நடவடிக்கையின் போது சிவிலியன்கள் கொல்லப்படவில்லையா, சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீறப்படவில்லையா, மனித உரிமை மீறல்கள் ஜனநாயக மறுப்புகள் இடம்பெறவில்லையா என்பது பற்றி விரிவான விசாரணைகளை செய்து அறிக்கை செய்யும் பொறுப்பை இலங்கை அரசாங்கம் கொண்டுள்ளது. இல்லாவிட்டால் அதன் ஏகாதிபத்திய எஜமானர்களிடம் அடிபணியும் அபாயத்தையே கொண்டுள்ளது. 

 எனவே அமெரிக்கா, ஐ.நா என்பனவற்றின் பசப்பலுக்கும் இலங்கை அரசாங்கத்தின் மறுப்புக்கும் அப்பால் போர்க்குற்றம், மனித உரிமை மீறல், ஜனநாயக மறுப்பு போன்றவற்றுக்கும் நீதியான விசாரணைக்கு முன் வரவேண்டும். அத்துடன் தேசிய இனங்களுக்கான அதிகாரப் பகிர்விற்கான அரசியல் தீர்வுக்கும் முன் முயற்சிகள் செய்ய வேண்டும். அதுவே அமெரிக்க மேற்குலக அழுத்தங்களையும் தலையீடுகளையும் எதிர்த்து அனைத்து மக்களையும் ஒன்றிணையச் செய்வதாகும்.

இந்த அறிக்கையினை இந்திய நிலைமைக்குப் பிரதியெடுத்தது போல தமிழக மாவோயிஸ்ட்டுகளின் குரலான வினவு இணையதளம் (04 may 2011 : vinavu.com) ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறது. நிபுணர் குழு அறிக்கை தொடர்பான வினவின் நிலைபாடு இவ்வாறாக இருக்கிறது :

  ஐ.நா. பொதுச் செயலர் தனிப்பட்ட முறையில் தனக்கு ஆலோசனை வழங்க இக்குழுவை நியமித்துள்ளாரே தவிர, இது ஐ.நா. மன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு அல்ல. இக்குழுவின் அறிக்கையும் ஐ.நா. மன்றத்தின் அறிக்கையோ, போர்க்குற்றங்கள் குறித்த விசாரணை அறிக்கையோ அல்ல. இப்படித்தான், கடந்த 2009ஆம் ஆண்டில் ஐ.நா. மன்றத்தின் மனித உரிமைக் கவுன்சில் என்ற எவ்வித அதிகாரமும் இல்லாத அமைப்பின் வாயிலாக, ஈழப்போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஒரு கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இறுதிப் போரின்போது நடந்த ஈழத் தமிழினப் படுகொலையையும் போர்க் குற்றங்களையும் சாடி அனைத்துலக மனித உரிமைக்கான தன்னார்வ அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்ததால் ஜனநாயக நாடகமாடுவதற்காகவும், ஐரோப்பிய நாடுகளில் போராடிய புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களுக்கு தற்காலிக மன ஆறுதல் தருவதற்காகவும் மேற்கொள்ளப்பட்ட பாசிபிச சதியாகவே இப்படியொரு தீர்மானம் அப்போது நிறைவேற்றப்பட்டது. இதை ஐ.நா.பொதுச் சபையில் வைத்து விவாதித்துப் பாதுகாப்புக் கவுன்சிலில் அங்கீகரித்தால்தான் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்பதால், அத்தீர்மானம் வெறும் காகிதத் தீர்மானமாக முடங்கிப் போனது. இப்போது மீண்டும் அதேவழியில் ஐ.நா. பொதுச் செயலர் நியமித்துள்ள நிபுணர் குழுவின் அறிக்கையும் அமைந்துள்ளது. 

 அமெரிக்கா தலைமையிலான இன்றைய ஒற்றைத் துருவ ஏகாதிபத்திய உலகில், இனப்படுகொலைகளை நடத்திவரும் பாசிச இராணுவ சர்வாதிகார அரசுகள் அனைத்தும் ஏகாதிபத்தியங்களின் விருப்பத்திற்கேற்ப கண்டும் காணாமல் விடப்படுகின்றன அல்லது விசாரணை மேற்கொள்ளப்பட்டு தலையீடும் ஆக்கிரமிப்பும் தொடர்கின்றன. அதேசமயம்,அமெரிக்கா மற்றும் பிற ஏகாதிபத்தியங்களின் தலையீட்டையோ அத்துமீறலையோ ஆக்கிரமிப்பையோ யாரும் வாயளவில்கூட கண்டிக்க முடியாது. 

 இத்தகைய நிலைமையில், அமெரிக்காவும் அதன் தலைமையிலான ஏகாதிபத்திய உலகமும் இலங்கை அரசின் போர்க்குற்றங்களைக் கண்டுகொள்ளாமல் ஒதுக்கிவிடவே விரும்புகின்றன. அதேசமயம், ஈழத் தமிழின அழிப்புப் போர் குறித்து அனைத்துலக மனித உரிமை அமைப்புகளின் கண்டனத்தால், ஜனநாயக நாடகமாடவும் செய்கின்றன. ஏகாதிபத்தியங்களின் மேலாதிக்க ஆக்கிரமிப்பு நோக்கங்களுக்கு ஏற்பச் செயல்படும் கைப்பாவையான ஐ.நா.மன்றமும் அதற்கேற்ப தலையாட்டுகிறது.

  இறுதிக் கட்ட ஈழப் போரில் நடந்துள்ள மனித உரிமை மீறல்களைப் பட்டியலிட்டு நிபுணர் குழு மூலம் ஆவணப்படுத்தி, அவசியமேற்படும்போது ராஜபக்சே கும்பலுக்கு எதிராக அதைப் பயன்படுத்தலாம் என்பதுதான் ஏகாதிபத்தியங்களின் திட்டமாக உள்ளது. மனித உரிமை ஜனநாயகம் பயங்கரவாத எதிர்ப்பு நாடகமாடிக் கொண்டு ஈராக், ஆப்கான் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்புப் போர்கள் மட்டுமல்ல் அண்மைக் காலமாக, அரபு நாடுகளில் அமெரிக்க விசுவாச சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டங்கள் தமது ஆதிக்கத்துக்கும் கொள்ளைக்கும் எதிரானதாகத் திரும்பிவிடாதிருக்க, மனித உரிமை ஜனநாயக நாடகமாடிக் கொண்டு ஏகாதிபத்தியங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் இந்த உண்மையை நிரூபித்துக் காட்டுகின்றன.

  மறுபுறம், இந்தியப் பெருங்கடலில் அமெரிக்காவுக்குப் போட்டியாக இலங்கையை ஒரு தளமாகப் பயன்படுத்த மேற்கொள்ளும் முயற்சியாகவே இலங்கை அரசுக்கு ரஷ்யா, சீனா முதலான நாடுகள் ஆதரவளிக்கின்றன. இந்தியாவுக்குப் போட்டியாக இலங்கையை தாஜா செய்யும் நோக்கத்துடன் அமெரிக்காவின் நம்பகமான கூட்டாளியான பாகிஸ்தான், ஈழப் போரின்போது இலங்கைக்கு ஏராளமான ஆயுதங்களை விற்று ராஜபக்சே கும்பலுக்கு ஆதரவாக நின்றது. இலங்கை அரசு சீனா பக்கம் சாய்ந்து விடாமல் தனது மேலாதிக்கப் பிடியில் இருத்தி வைப்பதற்காகவே இந்தியா, ஈழத்தில் மறைமுகமாகப் போரை வழிநடத்தி ராஜபக்சே கும்பலுக்கு உற்ற துணையாக நின்றது. மனித உரிமை மீறல் குறித்து விசாரணை நடந்தால், இந்தியாவும் பாகிஸ்தானும் சீனாவும் பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தம் உள்ளது. இத்தகைய நிலைமைகள்தான் இலங்கை அரசை இந்த நாடுகள் ஆதரிக்கக் காரணமாக உள்ளன. 

 இந்திய அரசு ஈழத்தமிழின அழிப்புப் போரில் முக்கிய பங்கு வகித்திருப்பது மட்டுமல்ல் காஷ்மீர், வடகிழக்கிந்தியாவின் தேசிய சுயநிர்ணய உரிமைப் போராட்டங்கள் மற்றும் இந்தியாவின் மத்திய கிழக்குப் பகுதியில் காட்டுவேட்டை என்ற பெயரில் நடத்திவரும் நரவேட்டை முதலானவற்றிலும் மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதித்து அப்பட்டமான அரச பயங்கரவாதத்தைக்  கட்டவிழ்த்துவிட்டுள்ள கொடூர அரசு என்பது நிரூபணமாகியுள்ளது. இருப்பினும், ஒரு போரில் மனித உரிமை ஜனநாயக உரிமைகளை மதிக்காமல் அட்டூழியங்களில் ஈடுபடுவதுதான் போர்க் குற்றம் என்பதாகவும், உள்நாட்டில் அரசு பயங்கரவாத அட்டூழியங்களையும் புரட்சிகரஜனநாயக இயக்கங்களின் போராட்டங்களையும் சமப்படுத்தி இருதரப்பும் மனித உரிமைகளை மீறிவிட்டதாகக் குற்றம் சாட்டுவதாகவும்தான் ஏகாதிபத்தியங்கள் மற்றும் சில மனித உரிமை அமைப்புகளின் நடவடிக்கைகளாக உள்ளன. தமிழினவாதிகளும் ஈழ ஆதரவு நாடகமாடும் ஓட்டுக் கட்சிகளும், ஏதோ இந்திய அரசு இதுவரை போர்க்குற்றங்களில் ஈடுபடாதது போலவும், ராஜபக்சே கும்பலுக்கு ஆதரவாக நின்று ஈழப் போரை வழிநடத்தியதுதான் போர்க்குற்றம் என்பதாகவும் மாய்மாலம் செய்து, இந்திய அரசு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்கின்றனர். 

 இன்றைய நிலையில், சர்வதேச சமூகம் என்று தமிழினவாதிகளால் சித்தரிக்கப்படும் மேற்கத்திய ஏகாதிபத்திய அரசுகள் எவையும் போர்க்குற்றவாளியான ராஜபக்சே கும்பலுக்கு எதிராக இல்லை. அப்படி இருப்பதைப் போல தமிழினவாதிகள் இன்னமும் நம்புகின்றனர். ராஜபக்சே கும்பல் மீது போர்க்குற்றம் சாட்டும் மேலைநாடுகளின் மனித உரிமை இயக்கங்களும்கூட ஒரு சில செயல்வீரர்களின் நடவடிக்கைகளாகவும் ஊடகங்களின் அம்பலப்படுத்தல்களாகவும் அமெரிக்காவின் தலையீட்டைக் கோருவதாகவும் உள்ளனவே தவிர, மக்கள்திரள் இயக்கமாக முன்னேறவில்லை. இந்நிலையில், ஈழத்திலும் இந்தியாவிலும் மட்டுமின்றி, உலகெங்கும் போர்க்குற்றவாளி ராஜபக்சே கும்பலுக்கு எதிராக மக்களிடம் பிரச்சாரம் செய்து பொதுக்கருத்தை உருவாக்குவதும், ஏகாதிபத்திய சதிகளை அம்பலப்படுத்தி, அக்கும்பலைத் தண்டிக்க மக்கள்திரள் இயக்கங்களைக் கட்டியமைத்து இறுதிவரை முன்னெடுத்துச் செல்வதும்தான் இன்றைய அவசியத் தேவையாக உள்ளது. 

இந்த அறிக்கையைத் தொடர்ந்து வினவு சார்ந்த வெகுஜன இயக்கத்தினர் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினர். கூட்டங்களில் போர்க்குற்றவாளி ராஜபக்சேவும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் தண்டிக்கப்பட வேண்டும் எனவும், போரை நடத்திய உலக நாடுகளைப் பற்றியும், ராஜீவ் சாகாவிடினும் தரகுமுதலாளிகளுக்காக இந்தப் போர் நடைபெற்றே தீரும் என்பதை விளக்கியும்,உள்நட்டில் இந்தியா தன் மக்கள் மீதே முதலாளிகளுக்கு ஆதரவாக தொடுத்திருக்கும் போர்கள் பற்றியும் தோழர்கள் உரையாற்றினர் (22 may 2011 : vinavu.com). 

இலங்கை தேசபக்தியில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, சம சமாஜக் கட்சி, பெரமுனா போன்றவற்றிலிருந்து குறைந்தபட்சம் பத்தடி முன்னால் பாய்ந்திருக்கிறது புதிய ஜனநாயக மார்க்சிச லெனினியக் கட்சி. அமெரிக்க செனட் சபை அறிக்கையும் ஐக்கிய நாடுகள் செயலாளருக்கான நிபுணர் குழு அறிக்கையையும் ஒப்பிட்டு இரண்டும் ஒன்றே என மாபெரும் பாயச்சலை நிகழ்த்தியிருக்கிறது இக்கட்சி. 

ஸ்வீப்பிங் ஸ்டேட்மென்ட என்று சொல்வார்கள். அம்மாதிரியிலான பல அவதானங்களைக் கொண்டது அக்கட்சியின் அறிக்கை. குறிப்பாக இந்தப் பகுதியை வாசியுங்கள்.

  ஏகாதிபத்திய, பிராந்திய மேலாதிக்க சக்திகள் தமிழீழப் பிரிவினைக்கு ஆதரவு போல் நாடகமாடி தமிழ் மக்களின் போராட்டத்தைத் திசை திருப்பி, தமது நலனுக்காக அப்போராட்டத்தை நந்திக்கடலில் மூழ்கடிக்க வைத்தனர். இலங்கை பேரினவாத அரசாங்கத்திற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் துணை புரிந்தன. இந்நடவடிக்கையின் பின்னரும் ராஜபக்ஷ அரசைத் தம் வசம் முழுமையாக இழுக்க முடியாமையால் புலம்பெயர்ந்த தமிழ் மேட்டுக்குடியினரின் நாடு கடந்த தமிழீழ அரசிற்கு ஆதரவு தெரிவிப்பது போன்று ஒரு தோற்றப்பாட்டை அமெரிக்க, ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் கொண்டுள்ளன. அத்துடன் இலங்கை அரசாங்கத்தின் மீது போர்க்குற்ற விசாரணையை மேற்கொள்ளப் போவதாக அச்சுறுத்தி வருகின்றமை பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்கும் நோக்கத்தில் அன்றி ஜனாதிபதி ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை மிரட்டி முழு இலங்கையையும் கபளீகரம் செய்யும் ஏகாதிபத்திய நோக்கத்தையும் கொண்டுள்ளன என்கிறது கட்சியின் அறிக்கை. 

தமிழீழப் பிரிவினையை ஒப்புவதுபோல எப்போதேனும் இந்தியாவோ அல்லது அமெரிக்க மேற்கத்திய அரசுகளோ செயல்பட்டது என்பதற்கான ஆதாரம் என்ன? நாடு கடந்த தமிழீழ அரசுக்கு ஆதரவான தோற்றப்பாட்டை அமெரிக்க மேற்கத்திய அரசுகள் காண்பிக்கிறது என்பதற்கான ஆதாரங்கள் என்ன? எல்லாம் சரி. புதிய ஜனநாயக மார்க்சிச லெனினியக் கட்சி இந்தப் பிரச்சினைக்கு என்ன தீர்வு சொல்கிறது? 

 எனவே அமெரிக்கா, ஐ.நா என்பனவற்றின் பசப்பலுக்கும் இலங்கை அரசாங்கத்தின் மறுப்புக்கும் அப்பால் போர்க்குற்றம், மனித உரிமை மீறல், ஜனநாயக மறுப்பு போன்றவற்றுக்கும் நீதியான விசாரணைக்கு முன் வரவேண்டும். அத்துடன் தேசிய இனங்களுக்கான அதிகாரப் பகிர்விற்கான அரசியல் தீர்வுக்கும் முன் முயற்சிகள் செய்ய வேண்டும். அதுவே அமெரிக்க மேற்குலக அழுத்தங்களையும் தலையீடுகளையும் எதிர்த்து அனைத்து மக்களையும் ஒன்றிணையச் செய்வதாகும் என்கிறது கட்சியின் அறிக்கை

 நீதியான விசாரணைக்கு யார், எவர், எப்படி முன்வரவேண்டும்? அதற்கான பொறிமுறை என்ன? ஐக்கிய நாடுகள் சபைக்கும் ஏகாதிபத்தியத்திற்கும் வித்தியாசமில்லை. ஆகவே அது சரிவராது. அரசியல் தீர்வுக்கும் அதிகாரப் பகிர்வுக்கும் முயற்சி செய்ய வேண்டும்? யார் செய்ய வேண்டும்? எப்படி? என்ன பொறி முறை? அனைத்து மக்களை ஒன்றிணையச் செய்ய வேண்டும். இலங்கை நிலைமையில் அனைத்து மக்கள் என்றால் யார்? மேலே கண்ட இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி, பெரமுனா, சம சமாஜக் கட்சி போன்ற இடதுசாரிகளா? அல்லது இவர்களால் தலைமை தாங்கப்படும் இனவாதம் பீடிக்கப்பட்ட இலங்கைத் தொழிலாளி வர்க்கமா? ஒன்றிணைவு இவர்களுடன், எதன் அடிப்படையில், எவ்வாறு சாத்தியம்? புதிய ஜனநாயக மார்க்சிச லெனினியக் கட்சியின் அறிக்கை வெற்று மார்க்சீயச் சொல்லணிகள் என்பதற்கு அப்பால், தனது நிலைபாட்டுக்கு எந்தவிதமான ஆதாரங்களையும் கொண்டிருக்கவில்லை. 

 கடந்த 2009 ஆம் ஆண்டில் ஐ.நா. மன்றத்தின் மனித உரிமைக் கவுன்சில் என்ற எவ்வித அதிகாரமும் இல்லாத அமைப்பின் வாயிலாக, ஈழப்போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஒரு கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது எனச் சொல்கிறது வினவு. 

முதலாவதாக வினவு இந்தப் பத்தியில் என்ன சொல்கிறது என்கிற தெளிவு இல்லை. 2009 ஆம் ஆண்டு மே 27 அன்று ஜெனீவா ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைக் கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இடதுசாரிகள் மத்தியில் மிகப்பெரும் விவாதங்களைத் தூண்டிய ஒரு நிகழ்வு. இலங்கை அரசை முழுமையாக ஆதரித்த, விடுதலைப் புலிகளை மட்டுமே பயங்கரவாதிகள் எனக் கண்டித்திருந்த தீர்மானம் அது. அத்தீர்மானம் உண்மையில் இலங்கை அரசின் எந்தவிதமான மனித உரிமை மீறல்களையும் சுட்டிக்காட்டவில்லை. கண்டிக்கவும் இல்லை. தமிழ் மக்களுக்கு முற்றிலும் எதிரான தீர்மானம் அது. மேலாக எந்தவிதமான அதிகாரமும் இல்லாதது மனித உரிமைக் கவுன்சில் என்பது பிழையான மதிப்பீடு. மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கை அரசு மனித உரிமை மீறல்களிலும், போர்க்குற்றங்களிலும் ஈடுபட்டது என ஆவணப்படுத்தப்பட்டால் அதனை அடுத்து அதனை தண்டனை நோக்கிய விசாரணைக்கு எடுத்துச் செல்ல முடியும். 

வினவு ஐக்கிய நாடுகள் சபை அறிக்கைக்கு ஆதரவாகப் பேசுபவர்களையும், தமிழக கம்யூனிஸ்ட் கட்சிகளையும் தமிழினவாதிகள் எனவும், ஓட்டுக் கட்சிகள் எனவும் விளிக்கிறது. இந்த மனித உரிமை அறிக்கைக்கு ஆதரவாக புகலிடத்தில் செயல்படுகிற அனைவரையும் தமிழினவாதிகள் என்பதும், தமிழகத்திலுள்ள பெரியாரியர்கள், தலித் கட்சிகள், தியாகு, மணியரசன், இன்குலாப் போன்றவர்களையும் ஒற்றைச் சொல்லில் தமிழினவாதிகள் என்பதும் மோசமான முன்னுதாரண‌மாகிவிடும் அரசியல். வினவு சொல்கிற மாதிரி அமெரிக்கத் தலைமையிலான ஒற்றைத்துருவ உலகு அல்ல இது. சீனா, ரஸ்யா, அமெரிக்கா, மேற்குலகு, இந்தியா எனும் ஏகாதிபத்தியங்களால் சூறையாடப்படும் பன்மைத்துவ உலகு இதுவாகும். 

இலங்கை மாவோவியர்களான புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சி போலவே ஏகாதிபத்தியம், தரகுமுதலாளித்துவம், மக்கள்திரள் பாதை என்றெல்லாம் பேசுகிறது வினவு. அறுதியில் எல்லா எதிரிகளையும், மகிந்த, மன்மோகன் சிங் என அனைவரையும் அம்பலப்படுத்திவிட்டு, மகிந்தாவை தண்டனைக்குட்படுத்த மக்கள் திரள் பாதை என்கிறது. இந்த மக்கள்திரள் பாதை இலங்கையில் எப்படி சாத்தியம் என்பதனை அது ஆதாரப்பூர்வமாக, தர்க்கங்களின் அடிப்படையில், தரவுகளின் அடிப்படையில் முன்வைக்க வேண்டும். அதைப் போலவே தமிழகத்தில் இந்த அறிக்கைக்கு ஆதரவான நடவடிக்கையை முன்னெடுக்கும் ‘தமிழினவாதிகட்கும் கம்யூனிஸ்ட் ஓட்டுக் கட்சிகளுக்கும்’ மாறாக வினவு தமிழ் மக்களின் இனக்கொலைக்கு எதிரான என்னவிதமான மக்கள்திரள் பாதையை அது முன்னெடுக்க விழைகிறது என்பதனையும், எப்படி அது மகிந்தாவுக்கு தண்டனை வாங்கித்தரும் என்பதனையும், அவர்கள் தரவுகளுடன் பேச வேண்டும். வெறும் சொல்லணிகளுக்கும் யதார்த்த அரசியலுக்கும் இடையில் உள்ள வித்தியாசங்களை அப்போது அவர்களால் அறிய முடியும். 

IV

 இந்திய கம்யூனிஸ்ட்(மார்க்சிஸ்ட்) கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளரான ஜி.ராமகிருஷ்ணன் மாநிலக் குழவின் சார்பாக ஒரு அறிக்கை ( 1 May 2011 : The Hindu : India) வெளியிட்டிருக்கிறார் :

  ஐக்கிய நாடுகள் குழு அறிக்கையானது இலங்கைப் படைகள் விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தில் ஆயிரக்கணக்கிலான பொதுமக்களைக் கொன்றிருக்கிறது எனவும், மனித உரிமை மீறல்களை அவர்கள் இழைத்தார்கள் எனவும் சொலலியிருக்கிறது. யுத்தக் குற்றவாளிகளுக்கு எதிராக தண்டனை வழங்கப்பட வேண்டும் என மாநிலக் குழு ஏற்கனவே ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியும் இருக்கிறது. ஐக்கிய நாடுகள் அறிக்கையானது யுத்தத்தின் கடைசி மாதத்தில் 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் எனவும், யுத்தக் கைதிகள் குறிவைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள் எனவும் தெரிவித்திருக்கிறது. பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களது உயிர் இழப்புக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் பொறுப்பானது இலங்கை அரசு.மே மாதத்தின் முதல் வாரத்தில் எமது கட்சி இந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பான விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், யுத்தக் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் கோரி ஆர்ப்பாட்டம் நடத்திவிருக்கிறது. இந்தத் தீவுநாட்டில் தமிழர்களுக்கு சுயாதீன உரிமை வழங்கப்பட வேண்டும் எனவும், மீள்கட்டுமானம் மேற்கொள்ள வேண்டும் எனவும் நாம் ஆர்ப்பாட்டம் செய்கிறோம். 

இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் மனித உரிமைகள் மீறல் குறித்துப் பேசும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விடுதலைப்புலிகள் பொதுமக்களைப் பிணைக் கைதிகளாக வைத்திருந்தமை, குழந்தைப் போராளிகளை விடுதலைப்புலிகள் பலவந்தமாகத் தமது படையில் இணைத்தமை போன்றவற்றை பற்றியும் குறிப்பிட்டிருக்கிறது. ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் இனப்பிரச்சினைகளுக்குத் தீர்வுக்காக பிராந்திய சுயாட்சி வழங்கப்பட வேண்டும் எனவும், இந்திய அரசு தனது ராஜதந்திர உறவுகளின் மூலம் இலங்கை அரசின்மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியிருக்கிறது.

 இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் டி.ராஜாவும் நிபுணர் குழு அறிக்கை தொடர்பான ஒரு அறிக்கையை (20 April 2011 : zeenews.com: India) வெளியிட்டிருக்கிறார். இந்த அறிக்கை தொடர்பான இந்திய அரசின் மௌனம் குறித்தும் கேள்வியெழுப்பியிருக்கும் அவர், இந்தக் குற்றங்களில் கொழும்பின் பங்களாளியாக இந்தியா இருந்திருக்கிறது என்பதனையும் குறிப்பிடுகிறார்.

  இலங்கைக்கு பொருளுதவியும் ராணுவ உதவியும் வழங்கி ஆயிரக்கணக்கிலான தமிழ் மக்களைக் கொல்ல உதவியதன் வழியிலாக உலகநாடுகளின் பார்வையில் இந்தியாவும் இந்தக் குற்றங்களின் பங்காளியாகி நிற்கிறது எனவும் அவர் குறிப்பிடுகிறார். போரின் நாட்களில் ஆயிரக்கணக்கிலான பொதுமக்கள் கொல்லபட்டதற்கான நம்பத்தகுந்த ஆதரங்களிலான போர்க்குற்றம் குறித்து அறிக்கை கூறுகிறது. இந்தியா இல்லாது தாம் இந்த யுத்தத்தில் வென்றிருக்க முடியாது எனவும் மகிந்த ராஜபக்சே தெரிவித்திருக்கிறார். இந்தியா இதனை எபபோதும் மறுத்ததில்லை. இலங்கைக்கு இந்தியா ராணுவ உதவி அளித்தது என்பது ஒரு நிஜம். தமிழினத்துக்கு எதிரான யுத்தத்தில் செயல்வேகமிக்க பங்காளி இந்தியா. ஐக்கிய முன்னணி அரசில் அங்கம் வகிக்கிற திராவிட முன்னேற்றக் கழகமும் இதற்குப் பதில் சொல்ல வேண்டும். இந்த அறிக்கை இலங்கை அரசினோடு தமிழீழ விடுதலைப் புலிகளையும் பொதுமக்கள் மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிட்டிருக்கிறது.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் தற்போது தற்காலிக உறுப்பினராகவும் பிற்காலத்தில் நிரந்தர உறுப்பினராவதற்கும் முயற்சித்துக் கொண்டிருக்கிற இந்தியா இது குறித்து வெளிப்படையாகப் பேச முன்வர வேண்டும். தமிழ்மக்கள் கொலை என்பது இனக்கொலை நடவடிக்கை. ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா என அனைத்து நாடுகளும் இதனைக் கண்டித்திருக்கின்றன. இந்த யுத்தத்தின் பங்காளியாக இருந்ததால் இந்தியா இந்த மீறல்களைக் கண்டிக்கவில்லை. யுத்ததின் கடைசிக் கட்டத்தில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் குறித்த சர்வதேசியக் குரலை ஒடுக்குவதிலும் இந்தியா பங்காற்றி இருக்கிறது. இது விக்கிலீக்ஸ் கேபிளில் கசிந்திருக்கிறது.

சர்வதேசிய நாடுகளின் பார்வையை இந்தியா இவ்விதத்தில் ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை. இந்தியா இந்தப் பிரச்சினையை உலக அளவிலும் பிராந்திய அளவிலும் எடுத்துச் செல்லாமல் தமிழ் மக்களுக்குத் துரோகம் இழைத்திருக்கிறது. காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முன்னணி அரசு ஒருபோதும் இலங்கை இனப்பிரச்சினை குறித்தும் அவர்கள் ஒன்றிணைந்து வாழ்தல் என்பது குறித்தும் எப்போதும் உளப்பூர்வமான முயற்சியை மேற்கொண்டதில்லை. யாப்பினைத் திருத்துவதன் மூலம் இந்தப் பிரச்சினையை உடனடியாகத் தீர்க்குமாறு இலங்கையை இந்தியா எப்போதுமே வற்புறுத்தவில்லை. தமிழ் பொதுமக்களின் மீள்கட்டுமானத்திற்கு இந்தியா வழங்கிய உதவிகள் சரியாப் பயன்படுத்தப்படுகிறதா என்பதனை இந்தியா உறுதி செய்து கொள்ள வேண்டும். 

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கடந்த காலங்களில் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் நெருங்கிய உறவுகள் கொண்டிருந்தவைகள். இவை இரண்டும் குறுங்குழுவாதக் கட்சிகள் இல்லை. வெகுமக்கள் கட்சிகள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடுகளில் ஜனதா விமுக்தி பெரமுனாவின் பிரதிநிதிகள் கலந்து கொள்வது வளமை. இன்று ஜனதா விமுக்தி, பெரமுனா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டுக்கு அழைக்கப்படுவதில்லை. 

அமெரிக்க ஏகாதிபத்தியம் குறித்து கடுமையான எதிர்ப்பு கொண்டவைதான் இரண்டு கட்சிகளும். லிபியப் பிரச்சினையில் மனதானிமானத் தலையீடு எனும் பெயரில் அமெரிக்க-மேற்கத்திய நாடுகளின் தலையீட்டைக் கண்டனம் செய்தவர்கள்தான் இருவரும். காங்கிரஸ் கட்சிக்கு இவர்கள் கொடுத்து வந்த ஆதரவைக் கூட இந்திய அரசு, அமெரிக்க அரசுடன் செய்து கொண்ட அணு ஒப்பந்தத்தை முன்வைத்து விலக்கிக் கொன்டனர் என்பதும் கூட இந்தியாவின் சமீபத்திய வரலாறுதான். மேற்குவங்கத்தில் மாவோயிஸ்ட்டுகளின் மீதான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசின் தாக்குதலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கவில்லை. என்ன ஆச்சர்யம், நிபுணர் குழுவின் அறிக்கையைப் பற்றிய இவர்களது நிலைபாடு இலங்கை மார்க்சியர்கள் போலவோ அல்லது இந்திய-இலங்கை மாவோவியர்களுடையது போலவோ இல்லை.

 நிபுணர் குழு குறித்த பகுப்பாய்வுகளில் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி, சம சமாஜக் கட்சி, ஜனதா விமுக்தி பெரமுனா, புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சி அதனோடு வினவு அனைவருக்கும் ஒரு பொதுப் பண்பு இருக்கிறது. ஏகாதிபத்தியம்-அமெரிக்கா-ஐக்கிய நாடுகள் சபை-நிபுணர் குழு அறிக்கை என்கிற இவர்களது சமன்பாடுதான் அந்தப் பொதுப்பண்பு. 

ஐக்கிய நாடுகள் சபையினையும், ஏகாதிபத்தியத்தினையும், நிபுணர் குழு அறிக்கையையும், நிபுணர் குழு அறிக்கையின் சாதகங்களையும் பிரித்துப் பார்த்து, ஈழத் தமிழ் மக்களின் நலன் எனும் அடிப்படையிலிருந்து இரண்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகளாலும் அணுக முடிகிறது. போர்க்குற்றங்களுக்கான தண்டனையைச் சம்பந்தப்பட்டவர்கள் பெறவேண்டும் என்பதற்கான பொறிமுறை என்பது ஐக்கியநாடுகள் சபையினூடான செயல்பாடும், இந்திய அரசுக்கு இதிலுள்ள பொறுப்புணர்வை வலியுறுத்துவதும்தான் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. இந்த இரண்டு நிறுவனங்களையும் நோக்கிய அழுத்த அரசியலால்தான் நிபுணர் குழு அறிக்கையின் பரிந்துரைகளைச் செயல்படுத்த முடியும் என்பதனையும் அவர்கள் அறிந்திருக்கிறார்கள். இந்தத் ஸ்தூலமான நடவடிக்கை நோக்கித்தான் அவர்கள் தமது அமைப்புசார் நடவடிக்கைகளையும் முன்னெடுக்கிறார்கள். எழுந்தமானமாக அனைவரையும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் எதிர்ப்பதையும், அதே மாதிரி வீரவசனமென மக்கள் திரள்பாதை என்பதனை சகட்டுமேனிக்கு உதிர்க்கிற அரசியலையும் அவர்கள் செய்யவில்லை. 

செவ்வியல் மார்க்சியச் சொல்லணிகளால் நிரவப்பட்ட வெற்றுப் பகுப்பாய்வுகளால் எந்தவிதமான பயனுமில்லை. இன்று ஈழத் தமிழ்மக்களுக்கு வேண்டியது மானுட நீதி, அதனோடு அரசியல் தீர்வு. அரசியல் தீர்வு எனும் அளவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் தாண்டி, அவர்கள் சொல்கிற ஐக்கிய இலங்கைக்குள் சுயாட்சி எனபதனையோ, மாற்றாக தமிழீழம் என்பதனையோ, அதனைத் தேர வேண்டியவர்கள் ஈழத் தமிழ்மக்கள்தான். அதனை அவர்கள் வேறு வேறு மட்டங்களில் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் செயலாளரின் நிபுணர் குழு அறிக்கையைப் பொறுத்து, இந்த இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தமது கடமையை மிக ஸ்தூலமாகவும், அதனை எய்துவதற்குமான பொறிமுறை என்ன என்பதனை தெளிவாகவும் அறிந்திருக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் சபை அமைப்புக்களையும், இந்த இனக்கொலையில் இந்தியாவின் பொறுப்பையும் வலியுறுத்துவதே அந்தப் பொறிமுறை. அந்த வகையில் இலங்கை மார்க்சியர்களை விடவும், இலங்கை-இந்திய மாவோவியர்களை விடவும் இந்த இரு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்ந்தவர்கள் தூரதரிசனத்துடன் செயல்படுகிறார்கள். 

- யமுனா ராஜேந்திரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

நன்றி : குளோபல் தமிழ்நியூஸ் நெட்வொர்க் நிறுவனம்

Pin It