பார்ப்பனிய சாதிய கட்டமைப்பு நிலை நிறுத்தியுள்ள சமூக ஏற்றத் தாழ்வுகளை பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் மீண்டும் உறுதி செய்து வருகின்றன. புறக்கணிக்கப்பட்ட பிரிவு மக்களுக்கு சமூக நீதியையும், சம வாய்ப்புகளையும் உறுதி செய்ய வேண்டிய மத்திய மாநில அரசுகள் தங்கள் கடமைகளைக் கை கழுவிவிட்டதோடு, பார்ப்பன பன்னாட்டு நிறுவனங்களின் தாராள சுரண்டலுக்கு கதவுகளைத் திறந்துவிட்டதால், சமூகம் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. பெரியார் - அம்பேத்கர் முன் வைத்த சாதி ஒழிப்பு சமத்துவக் கருத்துகளுக்கு கடும் சவாலாக எழுந்திருப்பவை மத்திய பார்ப்பன ஆட்சியின் இந்த சுரண்டல் கொள்கைகள் தான். இந்தக் கருத்தை நடுநிலையுடன் சிந்திக்கும் ஆய்வாளர்களும் முன் வைத்து எச்சரிக்கத் தொடங்கி யுள்ளனர். அண்மையில் இது தொடர்பாக இரண்டு பெண் ஆய்வாளர்கள் முன் வைத்துள்ள கருத்துகளை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

புது டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியரும், தேசிய மைனாரிட்டி ஆணைய உறுப்பினருமான சோயா அசன் சென்னையில் ஏசியன் பத்திரிகையாளர் பயிற்சிக் கல்லூரியில் நிகழ்த்திய உரையின் சுருக்கத்தை ‘இந்து’ நாளேடு (மார்ச் 26) வெளியிட்டுள்ளது. அவர் வெளியிட்ட கருத்துகள்:

“அடிப்படை உரிமைகள், அடிப்படைத் தேவைகள் என்ற நோக்கில் சமூக வளர்ச்சி மற்றும் சமூக நலத் திட்டங்களை அணுகத் தொடங்கி யிருக்கிறோம். இது ஒரு புதிய அணுகுமுறை. இந்தக் கண்ணோட்டம் நல்ல மாற்றங்களை உருவாக்கி வருகிறது என்று கூறினாலும், இதைப் பின்னுக்குத் தள்ளிவிடும் பேராபத்தைக் குறிப்பிட வேண்டும். அரசின் கொள்கைகளை உருவாக்குவதில் பன்னாட்டு தொழில் நிறுவனங்களின் செல்வாக்கு அதிகரித்துக் கொண்டிருப்பது, மிகப் பெரும் ஆபத்தாகும். மக்களை சமத்துவமாக்க வேண்டும் என்ற அரசின் இலக்கை, இந்த நிறுவனங்கள் சீர்குலைத்து, பின்னோக்கித் தள்ளிவருகின்றன.

இந்தியா, இப்போது பொருளாதார வளர்ச்சியில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. இதற்கு அன்னிய முதலீடுகளும், அரசு முதலீடுகளும் ஒன்றாக இணைந்து அதிகரித்து வருவது ஒரு காரணம். ஆனால், பன்னாட்டு நிறுவனங்களிடம் பொருளா தார அதிகாரங்கள் மய்யம் கொண்டிருப்பது ஆபத்தானது. அதிகாரங்கள் அவர்களின் பிடிக்குள் போய் விட்டதால், கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் உள்ள வேறுபாடுகள், மாநிலங்களுக்கிடையிலான  ஏற்றத் தாழ்வுகள், சமூத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகள் மேலும் மேலும் அதிகரித்து வருகின்றன. இதனால் சமத்துவமின்மை வளர்ந்து வருகிறது. தொழில் துறையில் மட்டுமே, தனியார் மூலதனம், சொத்துகளாக குவிந்து வருவது பெரும் சவாலாகும். இதன் காரணமாக முதலாளித்துவத்தை நோக்கி அரசு வேகமாக முன்னேறுகிறது. விவசாயத் துறை புறக்கணிக்கப்படுகிறது. இவை எல்லாவற்றிற்கும் காரணம், கொள்கைகளை உருவாக்குவதில் பன்னாட்டு நிறுவனங்கள் செல்வாக்கு செலுத்து வதே. இப்போது, இந்தியாவில் நடக்கும் பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்கிறது?

ஒரு பக்கம் சமத்துவத்தைக் குலைத்து, மக்களிடம் வறுமையை வளர்த்துக் கொண்டே மற்றொரு பக்கத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரிடம் சொத்து களை குவித்துக் கொண்டிருக்கிறது. சமுதாயத்தில் மக்களிடையே இந்த ஏற்றத் தாழ்வுகள் அதிகரித்துக் கொண்டிருப்பதாலேயே, பெரிய அளவில் ஊழல்கள் தீவிரமாகின்றன. தொழிலதிபர்கள், அரசியல் வாதிகள், அதிகாரிகள் என்ற முக்கூட்டு பரிமாணம் உருவாகியுள்ளது. அநேகமாக அரசாங்கத்தையே தங்கள் வசமாக்கிக் கொள்ளும் எல்லைக்கு பன் னாட்டு நிறுவனங்கள் நெருங்கிவிட்டன. இயற்கை வளங்கள் மிக மோசமாக அழிக்கப்பட்டு வருகின்றன.

1990-களில் ஜனநாயகத்தில் ஒரு புதிய எழுச்சி உருவானது (மண்டல் அறிக்கை அமுலாக்கம் - ஆர்) அப்போதுதான். ஏற்கனவே புறக்கணிக்கப்பட்ட பிரிவினர், அரசியல் அரங்கிற்குள் நுழைந்தனர். அப்படி அரசியலுக்குள், அவர்கள் வந்தாலும், சமூகக் கட்டமைப்பில் கீழ் நிலையில் நிறுத்தப்பட்டிருந்த சமூகப் பிரிவினரோடு (தலித், சூத்திரர்கள்) அதிகாரப் பங்கீடு நிகழவில்லை; செல்வங்களும், வசதிகளும், அவர்களை சென்றடையவில்லை.

இப்போது அய்க்கிய முற்போக்கு ஆட்சியில் நடக்கும் பொருளாதார வளர்ச்சியானாலும், உரிமைகள் மற்றும் தேவைகளுக்கான கண்ணோட் டமானாலும் சரி; உண்மையான பயன்களைத் தருவது மிகவும் கடினம். காரணம், பெருமளவில் பணம் சுருட்ட வேண்டும் என்ற போக்கு, அதிகார மய்யத்தில் ஆழமாக புரையோடி நிற்கிறது. இந்திய அரசியலின் போக்கு மாற்றியமைக்கப்பட வேண்டும். பொருளாதாரக் குவியல் தடுக்கப்பட்டு, அனைவருக் கும் மறு பங்கீடு செய்யும் கொள்கைகள் செயல் படுத்தப்படும்போது தான் சமூகநீதி என்ற கொள்கை அர்த்தம் பெறும். இந்தியா, ஜனநாயக நாடு என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சி நடக்கிறது என்றும் கூறிக் கொண்டாலும், உண்மையான ஜனநாயக அரசியல் வரவில்லை; அந்த ஜனநாயக அரசியல் தரும் அழுத்தத்தின் காரணமாக சமத்துவத்துக்கு எதிரான இந்தப் போக்குகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்” - என்று பேராசிரியர் கூறினார்.

மற்றொரு பெண் அரசியல் ஆய்வாளர் ஜெயத்தி கோஷ், “இந்தியாவில் பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சியால் சமூகப் பாகுபாடுகள் அதிகரித்து, தீண்டப்படாத மக்கள் மேலும் புறக்கணிப்புக்கு உள்ளாகி விட்டனர் என்று எழுதியுள்ளார். ‘பிரன்ட் லைன்’ ஏட்டில் ஒவ்வொரு இதழிலும் ஆய்வு கட்டுரைகளை எழுதி வரும் அவர், அண்மையில் வெளி வந்த அந்த இதழில் (ஏப். 22, 2011) ‘சந்தைப் பொருளாதாரம்  விரும்புகின்றன. உருவாக்கும் வளர்ச்சியால் சமூகத்தில் நிலவி வந்த சாதி ஒடுக்கு முறைகள் ஆண், பெண் ஏற்றத் தாழ்வுகள் போன்ற பழமைவாதங்கள் தானாக விடைபெற்று விடும் என்று ஆய்வாளர்கள் கூறி வந்த கருத்து பொய்த்துப் போய் விட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில், ஏற்கனவே இருந்த நிலையை பன்னாட்டு தொழில் நிறுவனங்களின் வரவு மேலும் மோசமாக்கியுள்ளது என்று கூறும் அவர், இதற்கு பல சான்றுகள் ஆய்வுகளை முன் வைத்துள்ளார். குறைந்த செலவில், குறைந்த கூலியில் உற்பத்தி செய்யவே இந்த நிறுவனங்கள், உற்பத்திக்கான செயல்பாடுகளை தங்களிடம் வைத்துக் கொள்ளாமல் ஒப்பந்தப் பணிகளாக்கி வெளியில் தந்துவிடுகின்றன. இந்த முறையில் குறைந்த கூலி கொடுத்து பெரும்  கொள்ளையடிக்கின்றன. மென்பொருள் துறையில் குறைந்த ஊதியத்தில் செயல்படக்கூடிய தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் மலிவாக கிடைத்து விடுகிறார்கள். அலுவலகத்தை சுத்தம் செய்தல், நிர்வகித்தல், போக்குவரத்து வசதிகளை செய்தல், உணவு வழங்குதல், பாதுகாப்பு வசதிகள் போன்ற அனைத்து பணிகளும் ஒப்பந்தப் பணிகளாக குறைந்த விலைக்கு ஏற்பாடு செய்து விடுகிறார்கள். சாதி மற்றும் சமூக பாகுபாடுகள் நிறைந்த இந்தியாவில், பாரம்பர்யமாக தொடரும் இந்த சமூக பாகுபாடுகள் பெரும் முதலீட்டுக் குவியலுடன் களமிறங்கியுள்ள தொழில் நிறுவனங்களிடம் கையேந்தி வேலைக்காக நிற்கும்போது, ஏழ்மையில் உழலும் ஒடுக்கப்பட்ட சாதிக் குழு, அதே அடையாளத்துடன் இந்த வேலைகளை செய்ய வேண்டியிருக்கிறது.

குறைந்த கூலியில் வேலை செய்யக்கூடிய பிரிவினராக தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மதச் சிறுபான்மைப் பிரிவினராகவே உள்ளார்கள் என்று தேசிய மாதிரி ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கிராமம் மற்றும் நகர உழைப்புச் சந்தைகள், இரண்டிலுமே இந்த சாதிய வேறுபாடுகள் இருக்கின்றன. இந்த நிறுவனங்களின் ‘தொழில்நுட்பம் சாராத’ சேவை தொடர்பான வேலைகளில் குறைந்த கூலியில் மிகவும் கீழ்நிலையில் வைக்கப்பட்டுள்ள சாதிப் பிரிவினரே ஈடுபடுத்தப் பட்டு, காலங்காலமாக நிலைநாட்டப்பட்டு வந்த சமூகப் பாகுபாடு மீண்டும் உறுதிபடுத்தப்படுகிறது. கிராமங்களில் சாதிய ஒடுக்குமுறைக்கு உள்ளாகி, உள்ளூர் வளங்களைப் பகிர்ந்து கொள்ளும் உரிமை மறுக்கப்பட்ட நிலையில், ஏதேனும் கிடைத்த வேலையைச் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப்பட்ட இந்த மக்கள், பன்னாட்டு நிறுவனங்களில் ஒப்பந்தக் கூலிகளாகி விடுகிறார்கள்.

இந்திய கிராமங்களில் நிலவும் தீண்டாமை பற்றி தமிழ்நாடு உட்பட 11 மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகள் நூலாக வெளி வந்துள்ளது. கிராமங்களின் சாதி ஆதிக்க பழக்க வழக்கங்களினால், தலித் மக்கள் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட முடியாமல், ஊருக்கு வெளியே மிக மோசமான சூழல்களில் குறைந்த கூலியில் வேலை செய்யக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

சமூகத்தில், ஏற்கனவே நிலவி வரும் சாதியப் பாகுபாடுகளை பன்னாட்டு நிறுவனங்கள் தனது தொழில் நலனுக்கு பயன்படுத்திக் கொள்கிறது என்றும், அவர்கள் தொழிலாளர்களிடம் நெகிழ்ச்சியாக தடையின்றி பேரம் பேசி, குறைந்த கூலி தருவதற்கான வாய்ப்பை இந்த சாதி ஏற்றத் தாழ்வுகள் எளிதில் உருவாக்கித் தருகின்றன என்றும் இந்த ஆய்வு சுட்டிக் காட்டுகிறது. (Capitalism in India, especially integrated variant, has used past and current modes of social discrimination and exclusion to its own benefit to facilitate the extraction of surplus and ensure greater flexibility and bargaining to employers when dealing with workers) பெண்களும் இதேபோல் மோசமாக பாகுபாடுக்கு உள்ளாக்கப்பட்டு, குறைந்த கூலியில் அவர்கள் சுரண்டப்படுகிறார்கள்” - என்று ஜெயந்தி கோஷ் கட்டுரை கூறுகிறது.

பன்னாட்டு நிறுவனங்கள், பார்ப்பன அதிகார வர்க்கத்தின் பிடியில்தான் செயல்படுகின்றன. இந்தியாவில், அரசுத் துறைகளில் உயர் பதவிகளில் இருந்த பார்ப்பனர்கள் பதவி ஓய்வு பெற்ற உடனேயோ, அல்லது பதவியை விட்டு விலகியோ, இந்த பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளாக வந்து விடுகிறார்கள். இதனால் இந்திய ஆட்சி அதிகார அமைப்பில் செல்வாக்குள்ள பார்ப்பன அதிகாரிகளை, தங்கள் வளையத்துக்குள் எளிதாக, பன்hனட்டு நிறுவனங்கள் கொண்டு வந்து விடுகின்றன. பிற்படுத்தப்பட்ட மக்களின் பிரதி நிதிகள், அமைச்சர்களாக சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களாக வந்தாலும், அவர்களுக்கு விலை நிர்ணயயீக்கப்பட்டு, அதிகாரம் பன்னாட்டு நிறுவனங்களின் பிடிக்குள் வந்து விட்டன.

ஆளும் கட்சியானாலும், எதிர்கட்சியானாலும் இதில் போட்டிப் போட்டு நிற்கின்றன. பண்பாட்டுத் துறையில் வேதம், கோயில், பூணூல், சாதி என்று பார்ப்பனியம் மக்களை அடிமைப்படுத்திய நிலையில், மேம்போக்கான சிறு மாற்றங்கள் மட்டுமே நிகழ்ந்துள்ளன. இந்த நிலையில் நாட்டின் பொருளாதார அதிகாரத்தை பன்னாட்டு நிறுவனங்கள் வழியாகக் கைப்பற்றிக் கொண்ட பார்ப்பனர்கள், அரசியலையும், தங்கள் பிடிக்குள் கொண்டு வந்து விட்டார்கள்.

Pin It