தலித் என்ற சொல்லுக்கு ஒடுக்கப்பட்டவர்கள் அல்லது அழுத்தப்பட்டவர்கள் என்று என்னதான் பொருள் இருந்தாலும் நடைமுறையில் இந்திய சமூகத்தில் உணர்வு மட்டத்திலே தலித் அடையாளம் ஒருவருக்கு என்றைக்கும் உவப்பான அல்லது உயர்வைத் தருகிற ஓர் அடையாளம் அல்ல. சாதி இந்துக்களுக்கு கொஞ்சமும் குறைவில்லாத சொல்லப்போனால் கூடுதல் திறனுடன் (முதலாளித்துவ கல்வியில் தொடங்கி அனைத்து துறைகளிலும்) இருந்தும், தலித் என்பதற்காகவே ஒடுக்கப்பட்டவர்களின் பெயர்களைப் பட்டியலிட்டோம் என்றால் அது புராண காலத்து சம்புகனில் தொடங்கி, நந்தன், அம்பேத்கர் தொடர்ச்சியாக தடகள வீராங்கனை சாந்தி வரை மிக நீண்டதாக அனைத்து தலித்துகளையும் உள்ளடக்கியதாக இருக்கும்.

சாதி அடையாளம் ஆதிக்க சாதியினருக்கு வேண்டுமானால் பெருமிதமாக இருக்கலாம்; தலித் மக்களுக்கு ஒரு நாளும் இல்லை என்ற கண்ணோட்டம் காலங்காலமாக இருந்து வந்தது. ஆனால் இந்த மேல்நிலையாக்க உளவியலை உடைத்தெறிந்து தலித் அடையாளம் எதிர்ப்பின், சாதி ஒழிப்பின் ஒரு வழி என்று இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புதியதொரு கண்ணோட்டம் வெளிப்பட ஆரம்பித்தது. அதே நேரத்தில் அறிவுஜீவி உலகத்தில் துரோகிகளும், எத்தர்களும், ஊரை ஏய்த்துப் பிழைப்பவர்களும் தலித் அடையாளத்தை தங்களுக்கு வசதியானதொரு முகமூடியாக பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்தனர். தவறுகளிலிருந்து தப்பித்துக்கொள்ளவும் அல்லது விமர்சிப்பவர்களிடமிருந்து கரிசனத்தைப் பெறுவதற்கும் தலித் முகமூடி இவர்களுக்கு நல்ல வாய்ப்பாக இருக்கிறது. விமர்சகர்களை நிலைகுலைய வைக்கும் தந்திரமாக தனக்கு முன்னால் தலித் அடையாளத்தை நிறுத்தி, அதன்பின்னால் ஒளிந்துகொள்ளும் ரவிக்குமார், ஆதவன் தீட்சண்யா போன்ற எழுத்தாளர்கள் இதற்கு நல்ல உதாரணம். இதுபோல அரசியல் களங்களிலும் பல டுபாக்கூர் தலைவர்களை நாம் பார்க்கலாம்.

aadhavan_dheetchanya_526

90களில் இந்திய அறிவுலகில் நிகழ்ந்த வரவேற்கத்தகுந்த மாற்றம் என்னவெனில் தலித் இலக்கியத்துக்கும், தலித் எழுத்தாளர்களுக்கும் கிடைத்த பரவலான அங்கீகாரம். அதுநாள் வரை பார்ப்பன மற்றும் சாதி இந்துக்களின் மொழி வழக்கில், நாகரிகம், பண்பாடு குறித்த - அவர்கள் போட்டுவைத்த சட்டகங்களுக்கு உள்ளாக மட்டுமே இயங்கி வந்த அறிவுலகம், தலித் எழுத்தாளர்களின் வருகைக்குப் பின் புத்தெழுச்சி பெற்றது. ஆதிக்க சாதி கட்டமைத்த ஒழுங்குகளை எல்லாம் தலித் இலக்கியம் புறந்தள்ளியது. இலக்கியத்தில் மீறல்களை மேற்கொள்ள விரும்பியவர்களுக்கான ராஜபாட்டையை தலித் இலக்கியம் அமைத்துக் கொடுத்தது. அதேநேரத்தில் பின்நவீனத்துவம், கட்டுடைப்பு என்று எழுதிவரும் எழுத்தாளர்களுக்கு, அவர்களது வலதுசாரி முகத்தை மறைக்கும் வசதியான முகமூடியாக தலித் அடையாளமும், தலித் இலக்கியமும் அமைந்துவிடுகிறது.

இவர்களது பொறுக்கித்தனங்களுக்கு எல்லாம் மிகக் கேவலமாக தலித் மக்களின் வாழ்க்கையை மேற்கோள் காட்டுகிறார்கள். கணவனை இழந்த பெண்கள் வேறு ஆண்களை தேடக்கூடாது என்று சாதி இந்துக்கள் பெண்களை ஒடுக்கும் இந்திய சமூகத்தில், தலித் பெண்கள் வெகு இயல்பாக கணவனின் தம்பியையோ வேறு ஆணையோ திருமணம் செய்துகொள்கிறார்கள். கணவன்/மனைவி நோய்வாய்ப்பட்டு, படுத்த படுக்கையிலிருந்தால், மற்றவர் 'களவு' கொள்வது அடித்தட்டு மக்களிடம் மிகவும் இயல்பான ஒன்று. இந்து மதம் திணிக்கும் கற்பை நிராகரிப்பவர்களாக, காமத்தை பசிபோல் இயல்பானதொரு தேவையாக பார்க்கும் குணம் ஒடுக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளிட‌ம் இருக்கிற‌து. இதை 'பின்நவீனத்துவ' எழுத்தாளர்கள் - நேரத்திற்கு ஒரு பெண் தேடும் தங்களது பாலியல் இச்சைகளைத் தீர்த்துக் கொள்ள - பாலியல் சுதந்திரம் என்பதாகத் திரித்து, பெண்களை பாலியல் பண்டமாக மாற்றுகிறார்கள்.

கடுமையான உடலுழைப்பில் ஈடுபடும் தலித் மக்கள் தங்களது உடல் வலியைப் போக்கிக் கொள்ள கள்ளும் சாராயமும் குடிக்கிறார்கள் என்றால், உடல் நோக எந்த வேலையும் செய்யாத இந்த எழுத்தாளர்கள் 'குடிக்கலாச்சாரம் தான் நமது கலாச்சாரம்' என்று தங்களது குடி, கூத்திற்கு கொள்கை விளக்கம் அளிக்கிறார்கள். இதை பாட்டாளி வர்க்கப் பண்பாடு என்று பரப்புரை வேறு செய்து கொள்கிறார்கள்.

தலித் மக்கள் கைக்கொள்வது பாலியல் சுதந்திரம் அல்ல, பாலியல் தேர்வு சுதந்திரமே... அது தனக்கான துணையை தேடிக் கொள்ளும் உரிமை மட்டுமே. வரைமுறையற்று பாலியல் இச்சைகளைத் தீர்த்துக் கொள்ளுவதை தலித் சமூகம் மட்டுமல்ல, எந்த சமூகமும் அங்கீகரிப்பதில்லை (இது பற்றிய ரசிய இலக்கியங்களைப் படித்தால் மேலும் சிறப்பான புரிதல் வாசகர்களுக்குக் கைவரும்). ஆனால், குடி மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களுடன் கூத்தடிப்பதற்கு அ.மார்க்ஸ், சாரு நிவேதிதா, சோபாசக்தி போன்றவர்கள் தலித் மக்களின் வாழ்க்கையை மிகக் கேவலமாக பயன்படுத்துகிறார்கள் (அவ்வாறு இருப்பது அவர்களின் பாலியல் உரிமை என்றாலும் அதை தலித் மக்களின் பண்பாட்டில் இருந்து அவர்கள் கைக்கொள்வதாக சொல்வதில்தான் நமக்குப் பிரச்சனை இருக்கிறது). இப்படியாக அவர்கள் தங்களது அரிப்புக்கு தலித் மக்களை இழிவுபடுத்துகிறார்கள்.

ஆதிக்க சாதியைச் சேர்ந்த சோபாசக்தியும், சாரு நிவேதிதாவும் இன்னும் ஒரு படி மேலே போய் தங்களது பொறுக்கித்தனங்களுக்கு பாதுகாப்பு அரணாக, அரசியல்ரீதியாக தங்களை தலித்துகளாகவே அடையாளப்படுத்துகிறார்கள். குடி, கூத்திற்கு தலித் மக்களை இழுக்கும் சாருவும், சோபாவும், தலித் மக்களின் உயர் பண்புகளான உழைத்து வாழ்தல், நேர்மை ஆகியவற்றைக் கடுகளவும் பின்பற்றுவதில்லை. சோபாசக்தி எந்த வேலையையும் செய்யாமல், சிங்கள அதிகார வர்க்கத்திடம் நக்கிப் பிழைக்கும் என்.ஜீ.ஓக்களிடம் காசு வாங்கிக் கொண்டு, வெளிநாட்டுப் பயணம், குடி, பாலியல் விடுதிகள் என உல்லாச வாழ்க்கை நடத்துகிறார். சாரு நிவேதிதா தனது சரோசாதேவி எழுத்துக்களில் மயங்கும் ஐ.டி. இளைஞர்களை சுரண்டிப் பிழைக்கிறார்.

மிகப் பெரிய 'புரட்சி'யாளர்களாக, கமுக்க அல்லது ரகசிய அமைப்பிலிருந்து வாழ்க்கையைத் தொடங்கியதாக சொல்லிக்கொள்ளும் இந்த உதிரிகள் அதிகார வர்க்கத்தின் அல்லது பிற்போக்கு இந்துமதத்தின் கைக்கூலியாக மாறும்போது என்னதான் கமுக்க நடைமுறைகளை செயல்பாடுகளை கடைப்பிடித்தாலும் ஏதாவது ஒரு இடத்தில் சறுக்கி விடுவார்கள். அப்படி இந்த உதிரியான நண்பர் சோதாசக்தி சறுக்கி வழுக்கி விழுந்து புட்டாணியை உடைத்துக்கொண்ட இடங்கள் மூன்று.

1. தமிழச்சி விவகாரத்தில் பாலியல் வல்லுறவிற்கு முயற்சித்து செருப்படி வாங்கியது.

2. இலங்கை அரசாங்கத்திடம் கையூட்டு பெற்ற விவகாரம்.

3. தலித் விவகாரம்

முதல் இரண்டு விவகாரங்களிலும் சோபாசக்தி வசமாக மாட்டிக் கொண்டார். தமிழச்சி விவகாரத்தில் ஆதாரம் எங்கே என்று சோபாசக்தி துள்ளிக் குதித்ததும், பின்பு தமிழச்சி வந்து செம சாத்து சாத்தியதும், அதற்குப் பிறகு தமிழ் இணைய உலகமே சோபாசக்தியைக் காறி உமிழ்ந்ததும் நடந்தது. கையூட்டு விவகாரத்தில் வினவிடம் ஆதாரம் கேட்டு வானத்துக்கும் பூமிக்கும் குதித்த சோபாசக்தி, 'யோக்கியமா இருந்தா வரவு செலவுக் கணக்கை வெளியிடு' என்று கீற்றில் கேட்டபோது, முன்னேயும் பின்னேயும் மூடிக்கொண்டு கமுக்கமாகிவிட்டார்.

சரி இப்போது சோபாசக்தியின் தலித் வேடக்கதை என்ன, அதுபற்றி அவருக்கும் முக்கியமாக நமக்கும் என்ன பஞ்சாயத்து என்பதைப் பார்த்துவிடுவோம்.

ஒரு பொதுவுடமை இயக்கத்தில் முக்கியமாக வாக்கு அரசியலில் இருக்கும் பொதுவுடமை இயக்கத்தில் புதிதாக இணையும் இளம் தோழர்கள் அதிலும் குறிப்பாக தலித் அல்லாத சாதியைச் சேர்ந்த தோழர்கள் தலித் மக்கள் மத்தியில் வேலை பார்க்கும்போது அவர்கள்படும் துன்பங்களைப் பார்த்து உணர்ச்சிவயப்பட்டு நாங்களும் தலித்துதான் என்று சொல்லிக்கொள்வார்கள். அவர்களிடம் நீங்கள் சாதியைக் கேட்டால் நான் பொதுவுடமைவாதி அல்லது சாதியற்றவன் என்று சொல்வார்கள். அதேபோல தம்முடன் பணிபுரியும் தலித் தோழர்களிடம் 'தோழர்களே நாம் மதம் சாதியைக் கடந்த பொதுவுடமைவாதிகள்' என்று சொல்லிக்கொள்வார்கள். இங்குதான் பிரச்சனை ஆரம்பிக்கிறது. அவர்களைப் பொருத்தவரை எப்படி வர்க்கமிறக்கலை (ஏனைய உடமை வர்க்கத்திலிருந்து பாட்டாளி வர்க்கத்திற்கு) ஒரு பொதுவுடமைவாதி மேற்கொள்கிறானோ மேற்கொள்ளவேண்டுமோ அதுபோல சாதியிறக்கத்தையும் மேற்கொண்டு ஒடுக்கப்பட்ட சாதியாகவே உணருதல் என்ற நிலையை பொதுவுடமைவாதி தனது தொடக்கநிலையில் மேற்கொள்கிறான். எப்படி தாங்கள் சாதியிறக்கத்தை மேற்கொள்கிறார்களோ அதுபோல தலித் தோழர்கள் சாதியேற்றத்தை மேற்கொள்ளவேண்டும் (அதாவது தனது சாதியை மறக்கவேண்டும்) என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அப்படி எதிர்பார்ப்பது சரியான பலனைத் தராது.

ஒருவன் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவனாக இருப்பதில் அவமானப்படவேண்டும், அவன் சாதியை வெளியே சொல்ல வெட்கப்பட வேண்டுமேயொழிய ஒரு தலித் தன்னை தலித் என்று சொல்லிக்கொள்வதில் அவமானமோ வெட்கமோ படவேண்டியதில்லை. தான் பொதுவுடமை இயக்கத்தில் இருக்கிறோம் என்பதற்காக தனது தலித் அடையாளத்தை ஒளித்துவைத்துவிட்டு அதற்கு பொதுவுடமைமுலாம் பூசவேண்டிய தேவையுமில்லை. ஒடுக்குமுறை எதன்பெயரால் நடக்கிறதோ அதன்பேரால்தான் அதன் எதிர்ப்பும் இருக்கும்; இருக்கமுடியும். இதைத்தான் அயோத்திதாச பண்டிதர் நான் பறையனாய் பிறந்தேன், பறையனாகவே சாவேன் என்று உரக்கக் கூறினார். இந்த பின்னணியில் நாம் தலித் அடையாளத்தை ஆராய்ந்தோமென்று சொன்னால் நமக்கு ஒரு உண்மை தூலமாகப் புலப்படும். அது என்னவெனில் ஒருவர் தான் தலித் அல்லாதவராக இருந்துகொண்டு, 'நானும் தலித்துதான், ஏனென்றால் நான் என் சாதிஇந்து எண்ணத்தை விட்டு விட்டேன்' என்று சொன்னால், தெரியாமல் சொல்லும்போது அது அவரின் அரசியல் அறியாமையையும், தெரிந்தே சொன்னால் அது அவர் தன்னை தலித்தாக முன்னிருத்திக்கொண்டு தலித்தாக இருப்பதால் கிடைக்கும் ஆதாயங்களைப் பெறவிரும்புகிறார் என்றும் அர்த்தமாகும்.

தலித் மக்களுக்காக உழைக்கும் தலித்தல்லாதவர்கள் தமக்கான எல்லைகளை உணர்ந்திருக்க வேண்டும்; அந்த எல்லையோடு நிற்க வேண்டும். நானும் தலித்துதான் என்று பந்தியில் உட்கார்ந்து விடக்கூடாது. இல்லையென்றால், உழைக்கும் வர்க்கமான தலித் மக்கள் வீதியில் நிற்க, உழைப்பிற்கு சம்பந்தமில்லாத பார்ப்பன வர்க்கம் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழுவில் (மாவோயியக் கட்சியைத் தவிர) உட்கார்ந்த கதையாகிவிடும். சாதி உணர்வற்ற தலித்தல்லாதவர்களின் கடமை எதுவெனில், தலித் மக்களின் போராட்டத்துக்கு துணை நிற்பதும், அதிகாரத்தைப் பெற உதவுவதும், அவர்களுக்குப் பக்கபலமாக பின்னே நிற்பதும்தான். இதை உணர்ந்தவராக பெரியார் இருந்ததால்தான், அவரைத் தலைவராக ஏற்றுக்கொள்ள ஆதிதிராவிடர்கள் முன்வந்தபோது, 'நான் உங்களுக்கான தலைவராக ஆக முடியாது. உங்களுக்கான தலைவரை நீங்கள்தான் தேட வேண்டும்' என்று கூறியதும், அப்படிப்பட்ட தலைவராக அம்பேத்கரைக் கண்டதும், அவரையே தலித் மக்களுக்குத் தலைவராக அடையாளம் காட்டியதும், தன்னுடைய தலைவரும் அம்பேத்கரே என்று வெளிப்படையாகக் கூறியதும் நடந்தது. அத்தகைய அறிவு நேர்மை பெரியாருக்கு இருந்தது. அவர் ஒருநாளும் நானும் தலித் என்றோ, உங்களுக்கும் நான்தான் தலைவராக இருப்பேன் என்றோ கூறியது கிடையாது.

தலித் இலக்கியத்தை தலித் எழுத்தாளர்கள்தான் எழுத வேண்டும் என்று நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வருவதும் எல்லோரும் அறிந்ததே. 'தலித் மக்களைப் பற்றி நானும் எழுதியிருக்கிறேன். தலித் இலக்கியத்தில் என் படைப்புகளையும் சேர்க்க வேண்டும்' என்று மறைந்த எழுத்தாளர் சுஜாதா பேசியபோது, தலித் எழுத்தாளர்களிடம் எழுந்த கடும் எதிர்ப்பு தமிழகம் அறிந்ததே.

தமிழகத்து எழுத்தாளர்களில் தனது குரு(டி)நாதரையும் ஒருசில எழுத்தாளர்களையும் தவிர ஒருபயலுக்கும் ஈழத்து அரசியலைப்பற்றி ஒரு எழவும் தெரியாது; அதுபற்றி எவனும் கதைக்கக்கூடாது என்று சண்டமாருதம் செய்து துள்ளுகின்ற, நானும் என் குடி(ரு)நாதரும்தான் ஈழ அரசியலின் ஒட்டுமொத்த குத்தகைக்காரர்கள் என்று சுயதம்பட்டம் அடிக்கின்ற அன்பர் சோபாவுக்கு, தலித் அரசியலிலே கரைகண்டவராக தன்னைக் காட்டிக்கொள்ளும் சோபாவுக்கு இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தலித் இயக்கங்களில் நடைபெற்ற மேற்சொன்ன அரசியல் உரையாடல்களை கவனிக்காமலிருந்திருக்க வாய்ப்பில்லை. தலித்துகளின் முன்னேற்றத்திற்காக தலித் அல்லாதவர் பாடுபடலாம். ஆனால் தலித்துகளின் விடுதலைக்காகவும், அந்த தேவைக்காகவும் உருவாக்கப்பட்ட அமைப்புகளில் என்னதான் தலித்துகளைப்போல வாழ்க்கைமுறையை ஒருவர் மாற்றிக்கொண்டாலும், தானே தலித்தாக உணர்ந்தாலும், அந்த சாதிஇந்து அல்லது உயர்சாதியைச் சேர்ந்தவர் தலைமையை தலித்துகளிடம் கொடுத்துவிட்டு அவர்களுக்குக் கீழே சாதாரண ஊழியராக வேலை செய்ய முன்வரவேண்டும். சும்மா நானும் தலித் மாதிரிதான் என்று சொன்னால் அப்புறம் அ.மார்க்சை ரவிக்குமார் 'நாங்க எங்க விடுதலையைப் பார்த்துக்கொள்கிறோம், நீ உன் வேலையைப் பாரப்பு' என்று சொன்னதுபோல் சொல்லவேண்டிவரும்.

சோபாசக்திஇதுபோன்ற அரசியல் விவாதங்களை சோபாசக்தி கேட்காதவரோ அல்லது இதுபற்றி தெரியாதவரோ அல்ல. அதுபோக சோபாவே தனக்கு நிறைய அரசியல் அறிவு இருப்பதாக ('தேசிய சுயநிர்ணயம் குறித்தும் ஆசியப் பொருளுற்பத்தி முறைமை குறித்தும் அமைப்பியல் குறித்தும் காஃப்கா குறித்துமா கீற்று என்னிடம் கேள்விகளைக் கேட்டுவிட்டது?' என்று தன் அறிவுபற்றி பெருமையடிக்கிற சோபாவால் இதுபற்றியென்ன... ஒரு சாதாரண அடிப்படையான அரசியல் பற்றிய கேள்விகளுக்குக்கூட பதிலளிக்கமுடியாது, அந்த அரசியல் அறிவுகூட இவருக்கு கிடையாது என்பதை நம்மால் நிரூபிக்க முடியும்.) தமுக்கு அடித்துக்கொள்கிறார். அதுபோக ஈழத்து தலித் எழுத்தாளர் டேனியலிலிருந்து தமிழகத்தின் தலித் (இந்த சொல்லாடலோடு தமிழவேளுக்கு முரண்பாடுகள் இருந்தாலும்) எழுத்தாளரான தமிழவேள்வரை இவர் பல இடங்களில் மேற்கோள் காட்டுகிறார். ஆனால், இந்த சோபாசக்திதான் தன்னை ஒரு தலித் என்று கட்டமைக்கும் அயோக்கித்தனமான வேலையையும் செய்கிறார். 

“50 வருஷத்திற்கு முன்பு வரை ஈழத்தில் தலித்துகள் மேலாடை போட இயலாது. பாட்டன் வேட்டி கட்ட இயலாது. கோயிலுக்குள் போக இயலாது. வெளியில் நின்று தேங்காய் உடைக்க இயலாது. தங்க நகை அணிய இயலாது. பாயாசம் வைக்க இயலாது. இது சட்டம். பொங்கல் நாள் தினத்தன்று காலையில் வைத்த ஆறிப்போன பொங்கலை நயினார்கள் சிறைக்குட்டிகளுக்குப் போடுவார்கள். இது தமிழர் விழாவா இல்லை சாதி இந்துக்களின் விழாவா? இதே கேள்வியைத்தான் இலக்கியத்திற்கும் பொருத்திப் பார்க்கிறேன். தலித்துகள் எழுத வரும்வரை தலித்துகளின் வாழ்க்கை தமிழ் இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா? ஒரு கே.டானியலும் பூமணியும் வரும்வரை தமிழ் இலக்கியத்தில் தலித் மக்களின் இடம் என்ன? எதுவுமே இல்லையெனில் இந்தப் பாழாய்ப்போன தமிழ் இலக்கிய மரபுக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம்? (அழுத்தம் நம்முடையது) அப்படித் தப்பித் தவறி ஆதிக்க சாதியினர் தலித் மக்களைக் குறித்து எழுதிய தருணங்களெல்லாம் தலித்துகளைக் கேவலப்படுத்தியும் நையாண்டி செய்துமே தங்கள் பிரதிகளைக் கட்டமைத்திருக்கிறார்கள்." (http://vallinam.com.my/issue8/pathivu.html)

இது 'தமிழில் நவீன இலக்கியம் இருக்கிறதா?' என்ற தலைப்பில் இது சோபா வல்லினம் இலக்கிய சந்திப்பில் மலேசியாவில் பேசியது. அரசியலின் அடிப்படைகளை கரைத்துக் குடித்தாக தம்பட்டம் அடிக்கும் சோபாவின் வாயிலிருந்து மேலே சொன்ன வார்த்தைகள் வாய்தவறி வந்ததா இல்லை தண்ணியைப் போட்டபின்பு வந்ததா?. இதுமட்டுமல்ல அவர் போட்ட தலித் வேடத்திற்கு ஆதாரமாக இன்னும் பல கருத்துக்களை, சோபாவின் எழுத்துக்களை நம்மால் வைக்க முடியும். சரி இப்போது அவை என்னென்ன என்பதை நாம் பார்ப்போம்.

தோழர் கவின்மலர் எழுதிய அந்தோணியின் கதையே சோபாவின் தலித் வேடத்திற்கு முதலான ஆதாரமாக முன்வைக்கப்பட்டது. அது என்னவெனில்

“அல்லைப்பிட்டி...ஆம் அதுதான் அவனுடைய ஊரின் பெயர். மனித மனங்களின் கனவுகளையும் சேர்த்துப் புதைத்த தீவு அது. யாழ்ப்பாணத்திற்கு வடக்கே உள்ள அந்தத்தீவுதான் பிற வடபகுதி தீவுகளுக்கு நுழைவாயில். அது அந்தோணி பிறந்த ஊர். ஒருவேளை அவன் அந்த ஊரில் பிறக்காது போயிருந்தால் இந்தக் கதைக்கான அவசியமே வந்திருக்காது. அந்தோணிக்கு ஒரு அண்ணன், இரண்டு தம்பிகள், ஒரு தங்கை. அப்பா உள்ளூரில் உள்ள ஒரு ரௌடி. அடிக்கடி சிறைக்குப் போய்விடுவார். போலீஸ் அவரைத் தேடி வரும்போது அவர் இல்லையென்றால் அவன் அம்மாவைப் பிடித்துக்கொண்டு போய்விடும். இந்துக்கோவில்களில் வெள்ளாளர்களுக்கு மட்டுமே மரியாதை அளிக்கப்பட்டது. கிறிஸ்துவ தேவாலயத்தில் தனித்தனியாகத்தான் வெள்ளாளர்களும் தலித்துகளும் அமர்ந்தனர். பாடசாலைகள், ரேஷன் கடைகள் போன்றவை வெள்ளாளர் வாழும் பகுதியிலேயே இருந்தன. உள்ளுக்குள் வெதும்பினாலும் அது பற்றி தலித் குடும்பங்கள் பெரிதாக வெளியே காட்டிக்கொள்ளவில்லை. ஏனெனில் வாழ்வாதாரத்தை தேடிக் கொண்டிருந்த அவர்கள் கல்வி குறித்தெல்லாம் கவலைப்படும் சூழ்நிலையில் இல்லை. புகழ்பெற்ற திரைப்படப் பாடலான “அல்லா அல்லா” பாட்டு மெட்டில் “அல்லா அல்லா அல்லைப்பிட்டி பள்ளா பள்ளா!” என்று வெள்ளாளர்கள் பள்ளர்களை வக்கிரமாகக் கேலி செய்து பாடுவதை அந்தோணி பார்த்திருக்கிறான். ஐந்தாம் வகுப்புவரை அந்தோணி அல்லைப்பிட்டியில் படித்தான். ஆறாம் வகுப்புக்கு வேலணை சென்றான். பள்ளியில் அந்தோணிக்கு நல்ல பெயர். கெட்டிக்காரனாக வருவான் என்று வாத்தியார்மார்கள் சொல்வதைக் கேட்கும்போது, ‘அப்பாடா! படிச்சு நல்ல வேலைக்குப் போய் வாழ்க்கையில் முன்னேறணும்’ என்று நினைப்பான். விடுதியில் தங்கித்தான் அவன் படித்தான்." (http://kavinmalar.blogspot.com/2010/11/blog-post.html)

கதையை போனபோக்கில் படிப்பவர்களுக்கு அந்தோணி ஒரு பள்ளர் சாதியைச் சேர்ந்தவர் என்றுதான் படும். லீனா மணிமேகலை சொல்வதுபோல் பிரதியின் ஜட்டியை கழட்டிப்பார்க்கும் எண்ணமெல்லாம் நமக்கு இல்லை என்றாலும் கதையின் ஜட்டியை கழற்றிப் பார்க்காமலேயே உள்ளே இருப்பது என்னவென்று இந்தக்கதையில் நன்றாகத் தெரியும். ஆனால் தோழர் கவின்மலர் என்னிடம் தொலைபேசியில் உரையாடியபோது நான் அவர் தலித் என்ற அர்த்தத்தில் எழுதவில்லை என்று சொன்னார், நல்லதுதான். அதுபோக அவர் இன்னொன்றும் சொன்னார் சோபாசக்தி கறுப்பாக இருப்பதால் அவரை தலித் என்று அனைவரும் நினைத்திருக்கலாம் என்று, அதுவும் நல்லதுதான்.

தோழர் கவின்மலர், சோபா தனக்கு வழங்கிய நேர்காணலை முன்வைத்து, தான் எழுதிய கதையில் வரும் அந்தோணி அல்லைப்பட்டியின் பள்ளர் சாதியைச் சேர்ந்தவர் என்று வாசிப்பவருக்குப் பட்டாலும், அதுபோல் அந்தோணி இல்லை என்றே வைத்துக்கொள்வோம். அவர் கருப்பாக இருப்பதால் அனைவரும் தலித் என்று தவறாக நினைக்க வாய்ப்பிருக்கிறது என்று தோழர் கவின்மலர் சொன்னதுபோலவே வைத்துக்கொள்வோம். ஆனால், தமிழீழ தேசியத் தலைவர் பெயரைக் குறிப்பிடும்போது 'வேலுப்பிள்ளை பிரபாகரன்' என்று வலிந்து எழுதும் (பிரபாகரன் வெள்ளாளர் இல்லை என்பது வேறு கதை) கவின்மலரோ, சோபாசக்தியோ ஒரு இடத்தில் கூட சோபாசக்தியின் வெள்ளாளப் பின்புலம் குறித்து எழுதவில்லையே ஏன்? அது என்ன பெரிய வாழ்க்கை வரலாறு? தலித்துகளின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை எழுதும்போது அவரின் சாதியப்பின்புலம் வேண்டுமென்றே கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டதா? அல்லது அவர் கேட்டுக்கொண்டபடியால் விடப்பட்டதா?

'நான் கன்னட பலிஜா நாயுடு குடும்பத்தைச் சேர்ந்தவன்' என்று வெளிப்படையாக பெரியார் அறிவித்ததுபோல், அந்தோணியின் கதையில் சோபாவின் பின்புலம் ஏன் அறிவிக்கப்படவில்லை? காரணம் எளிது... திட்டமிட்டு சோபா தலித் வேடம் போட்டு வருகிறார். அதை அவர் நண்பர்கள் தெரிந்தே மறைத்தார்கள். இப்போது வேடம் வெளிப்பட்டவுடன் இது அப்போதே எங்களுக்கு தெரியுமே என்று நாவினிக்க பொய்யுரைக்கிறார்கள்.

தனக்கு காஃப்காவைத்தெரியும், கத்தரிக்காயைத் தெரியும் என்று தம்பட்டம் அடிக்கும் சோபா, மேலே சொன்ன கருத்துக்களை சும்மாக்காச்சுக்கும் சொல்லிவிட்டேன் என்று சொல்லப்போகிறாரா? இல்லை திருந்தி ஆம் தலித்வேடம் போட்டேன் என்று ஒத்துக்கொள்ளப்போகிறாரா?

தலித் அரசியல் பேசினால் முக்கியமாக ஈழத்து புலத்திலிருந்து வந்த ஒருவர், அதுவும் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர், தலித் அரசியல் பேசினால் அது நன்றாக எடுபடும் என்பது சோபாவின் பித்தலாட்ட மூளைக்கு நன்றாகத் தெரியும். உதாரணமாக தோழர் தமிழச்சி சொன்ன வார்த்தைகளை வாசகர்கள் நினைத்துப் பாருங்கள். அவர் சொல்கிறார்,

“என் கணவருடன் வரும்போதே சோபா முழுபோதையில் இருந்தார்; கைகளில் நடுக்கம் இருந்தது. பெரியாரின் கட்டுரைகளை நான் வலையேற்றுவதைப் பாராட்டினார். 'சாதிதான் தமிழ்ச்சமூகத்தில் முதலில் ஒழிக்கப்பட வேண்டியது. என்னைப்போல் ஒரு தலித்தாக இருந்தால்தான் அதன் வலி உங்களுக்கு இன்னும் அதிகமாகப் புரியும்' என்று பேசினார். தமிழகத்தில் சில தலித் எழுத்தாளர்கள் பெரியாரை விமர்சிக்கும்போது, பெரியாரைப் பின்பற்றும் ஒரு தலித் எழுத்தாளர் என்று தெரிந்தபோது அவர் மீதான மரியாதை அதிகமானது." (http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13087:2011-02-19-01-17-42&catid=1:articles&Itemid=264)

தலித் அரசியலுக்கு இந்த காலச்சூழல்களில் கிடைக்கும் அங்கீகாரம் மற்றும் அதன் வலிமையான பாரதூரங்களும் சோபாவுக்கு நன்றாகத் தெரியும் (பல ஆண்டுகள் ஒதுக்கி வைக்கப்பட்ட கோடானுகோடி தலித்துகள் அதிகாரத்திற்கு எதிராக எண்ணற்ற தியாகங்களோடும் அவமானங்களோடும் போராடி தற்போதைய பத்தாண்டுகளில் பெரும்பாடு பட்டு ஒடுக்குமுறைக்கெதிராக வென்றெடுத்த அங்கீகாரம் இது). அந்த அங்கீகாரத்தை அடித்தளமாகக்கொண்டு புகழை அடையவேண்டும் என்பதற்காக சோபா திருட்டுத்தனமாக எடுத்த அலாவுதீனின் அற்புத விளக்கே இந்த தலித் வேடம். லீனா எப்படி கார்ல்மார்க்ஸின் ஜட்டியைக் கழட்டினால் மகஇக தோழர்கள் கொதிப்பார்கள், அதுமூலமாக தன்னைப் பிரபலபடுத்திக்கொள்ளலாம் என்றும், அந்தப்பயல் இந்தப்பயல் என்ற எழுதினால் பெயர் கிடைக்கும் என்றும், பாலியல் கவிதைகளை (நான் பாலியல் கவிதைகளை எழுதக்கூடாது என்று சொல்லவேயில்லை, மாறாக இந்த கவிதாயினியின் கவித்துத்துவ ஆழ அகலத்தை நன்கு படித்துவிட்டுத்தான் சொல்கிறேன்) தளமாக பயன்படுத்திக்கொள்கிறாரோ, அதைப்போல சோபா தன்னை, தன்பெயரை பிரபலப்படுத்த பயன்படுத்திய உந்து பலகைதான் இந்த தலித் வேடம்.

இந்த தலித் அடையாளத்தை அவர்மேலே சொன்ன வல்லினம் அரங்கில் சொன்னதுபோல் பல இடங்களில் அதாவது பேசும்போது வெளிப்படையாகவும் (தோழர் தமிழச்சியிடம் மற்றும் பலரிடம்), எழுதும்போது பூடகமாகவும் கட்டமைக்கிறார். இல்லை நான் அப்படிப் பேசவில்லை, நான் ஒருமாதிரி பேசியதை அவர் வேறுமாதிரியாக பதிவு செய்து விட்டார் என்று சோபா கருதியிருந்தால் வல்லினத்திற்கு அவர் தனது மறுப்பை எழுதியிருக்கவேண்டும். வாசகர்கள் இது என்ன பெரிய விடயமா என்று கேட்கலாம். ஆனால் தலித் அரசியலில் தலித் அல்லாத ஒருவர் தானும் தலித் என்று காட்டிக்கொள்வது பெரிய விடயம் மட்டுமல்ல, மாபெரும் அயோக்கியத்தனம். சரி இனி இவர் எப்படி தனது கதைகளிலும் கட்டுரைகளிலும் தான் ஒரு தலித் என்னும் பிம்பத்தை பூடகமாக கட்டமைக்கிறார் என்பதை கட்டவிழ்த்துவிடுவோம்.

'விலங்குப்பண்ணை' என்ற தான் எழுதிய கதையில் வரும் ஒரு தலித் கிறித்தவ அந்தோணியோடு தன்னை அடையாளப்படுத்திக்கொள்வதால் தானும் ஒரு தலித்துதான் என்னும் பிம்பத்தை உருவாக்குவார் சோபா. தலித் என்ற பிம்பம் மெல்ல மெல்ல ஆனால் மறைமுகமாக கட்டப்படும். அதாவது இயக்குனர் தரணி என்னதான் கதை குப்பையாக பிற்போக்குத்தனமாகதாக இருந்தாலும் தன் திரைக்கதையை விறுவிறுப்பாக அமைப்பதுபோல் இங்கு சோபா ஒரு சாதாரண கதையில் தானும் ஒரு பங்காளனாக, ஒரு பார்வையாளனாக நுழைந்து தன் எழுத்தின் மூலம் கதையின் விறுவிறுப்பைக் கூட்டுவார். கதையின் விறுவிறுப்பில் கதையின் ஊடே சோபா சொருகும் கத்தி வாசகர்களுக்கு உறைக்காது. வாசகனின் அடிமனதில் தான் ஒரு தலித்துதான் என்ற பிம்பத்தை அவரின் எழுத்து கட்டமைக்கிறது. அந்த கதையின் முக்கிய கதாபாத்திரம் என்ன சாதியைச் சேர்ந்தவர் என்பதைக்கூட சோபா வெளிப்படையாகச் சொல்ல மாட்டார். ஆனால் கதையின் வரும் இதர பாத்திரங்கள் அந்த முக்கிய பாத்திரத்தை திட்டுவது, அவரின் சாதியை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்திவிடும்.

மெல்ல அக்கதையின் முக்கிய கதாபாத்திரம் குறியீடாக மாறும். வாசகர் மனதில் அக்கதாபாத்திரம் குறிப்பிட்ட தலித் சாதியின் பிம்பமாக உருப்பெற்றவுடன் இவர், அதாவது கதையில் கதைசொல்லியாக வரும் கதாபாத்திரம் மெல்ல தன்னை அந்த தலித் சாதியைச் சேர்ந்த முக்கிய கதாபாத்திரத்தோடு அடையாளப்படுத்திக்கொண்டு தானும் ஒரு தலித் என்ற பிம்பத்தை உருவாக்கிக்கொள்ளும். மெல்ல மெல்ல வெளிப்படையாக யாரும் கண்டறியாதவண்ணம் சோபா இந்த அடியறுக்கும் வேலையை செய்து முடிப்பார். இல்லையில்லை சோபாவின் கதையை வெறும் கதையாகத்தான் பார்க்கவேண்டும் என்று சொல்பவர்களுக்கு சோபா தனது கதையை ஒரு நீண்ட அரசியல் பிரச்சாரம் என்று சொன்னதை நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது.

உதாரணமாக மேற்சொன்ன கதையில் ஆரம்பமே கதைசொல்லியான ஜெ.அன்ரனி மற்றும் ம.அன்ரனி ஆகியோருக்கு இடையே இருக்கும் ஒற்றுமையோடுதான் ஆரம்பமாகும்.

"ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்திரெண்டாம் ஆண்டு நான் ஏழாவது வகுப்பில் பாஸாகி எட்டாம் வகுப்புக்குச் சென்றேன். சென்ற ஆண்டு இறுதிப் பரீட்சையில் சித்தியடையாத பழைய எட்டாவது வகுப்பு மாணவன் ஒருவன் இப்பொழுது எங்களுடன் மறுபடியும் எட்டாம் வகுப்பில் படிக்கத் தொடங்கினான். எங்கள் இருவருக்கும் சில ஒற்றுமைகள் இருந்தன. இருவரும் அதிக தலைமுடியுடன் காணப்பட்டோம். இருவரும் சீத்தைத் துணியில் தைக்கப்பட்ட பூப்போட்ட சட்டைகளும் ப்ளுரில் துணியில் காற்சட்டைகளும் அணிந்திருந்தோம். இருவருமே வேதக்காரர்கள். அதாவது A B C D எனப் பிரிக்கப்பட்டிருந்த எட்டாவது வகுப்பில் நான்கு பிரிவுகளிலும் நாங்கள் இருவர் மட்டுமே வேதக்காரர்கள். எல்லாவற்றையும்விட எங்கள் இருவரது பெயர்களும் ஒன்றாகவிருந்தன. நான் ஜெ.அன்ரனி, அவன் ம.அன்ரனி."

இப்படியாக இருவரும் ஒரே பின்புலத்தைச் சேர்ந்தவர்கள் என்ற பிம்பம் முதலில் வாசகர்கள் மனதில் கட்டப்படும். பின்பு கதையின் ஒரு இடத்தில் கதையின் முக்கிய கதாபாத்திரமான ம.அன்ரனியை ஆசிரியர் அவன் சாதியை பூடகமாகச்சொல்லி திட்டுவார்.

"ஒருமுறை பசி மயக்கத்தில் இருந்த ம.அன்ரனியை எட்டு ஸ்ரீ அடித்த அடியில் ம.அன்ரனி மயங்கி விழுந்துவிட்டான். இன்னொரு தடவை விஞ்ஞான டீச்சர் மிஸிஸ் கந்தையா பிடித்து அவனை உலுக்கி “ஏனடா நித்திரை கொள்ளவா இங்கே வருகிறாய்?” என்று கேட்டபோது ம.அன்ரனி மரமாய் நின்றிருந்தான். “போய் உங்கள் சாதித்தொழிலைப் பார், உனக்கு எதற்கு சயன்ஸ்?” என்று மிஸிஸ் கந்தையா கேட்டார். வகுப்பில் இருந்த எல்லோருடைய சாதி விபரங்களையும் மிஸிஸ் கந்தையா விரல் நுனியில் வைத்திருந்தார். எப்படி இந்த சாதி விபரங்களை திரட்டினார் என்பது தெரியவில்லை. விஞ்ஞான டீச்சர்! அவருக்க தெரியாத விதிகளா? பரிசோதனை முறைகளா? ஏதாவது ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்திருப்பார்."

இதுதான் சோபாவின் ஸ்டைல். யாருடைய சாதியையும் நேரடியாகச் சொல்லாமல் ஆனால் மக்கள் மனதில் படிந்திருக்கும் படிமங்கள் மற்றும் கதையில் அவர் உருவாக்கும் குறியீடுகள் மூலமாக முக்கிய கதாபாத்திரத்தின் சாதியைச்சொல்லி அந்த சாதியைச் சேர்ந்த முக்கிய கதாபாத்திரத்தோடு தன்னை அதாவது கதைசொல்லியை அடையாளப்படுத்திக்கொண்டு தான் தலித் என்ற பிம்பத்தை கட்டமைப்பார். இதற்கு உதவியாக அவரின் நிறமும் இருந்தது அவருக்கு வசதியாக இருந்தது.

சோபா சக்தி 2007 பாரீஸ் மாநாட்டிலும் தலித் வேடம் கட்டியிருக்கிறார். அந்த மாநாடு குறித்த புதிய மாதவி எழுதிய கட்டுரை சோபாவின் இணையத்திலேயே இருக்கிறது.

"தலித்துகள் அல்லாதவர்களும் கலந்து கொண்டு நம்மிடம் இப்போது சாதியம் இருக்கிறதா என்று அசட்டுத்தனமாக கேள்வி கேட்டு நேரத்தை வீணாக்கிக் கொண்டிருப்பதை விமர்சித்த எழுத்தாளர் ஷோபாசக்தி ‘அடுத்த மாநாட்டில் தலித்துகள் மட்டுமே அழைக்கப்பட வேண்டும், தலித்துகள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்’ என்று கொஞ்சம் சூடாகக் கலந்துரையாடலில் சொன்னதும் ‘நானும் தலித் தான்’ என்று பசீர் சொன்னதும் ஈழ தமிழ்த் தேசியத்தில் இசுலாமியர்களுக்கான இடம் குறித்த அச்சத்தில் பசீர் போன்றவர்கள் இருப்பதைப் புரிந்து கொள்ள வைத்தது." (http://www.shobasakthi.com/shobasakthi/?p=120)

மக்களின் பொதுப்புத்தியில் படிந்திருக்கும் அதாவது தலித்துகள்தான் தலித் அரசியல் பேசுவார்கள் என்ற பிம்பத்தை இதுமாதிரியான கட்டமைப்புகளின்மூலம் தட்டியெழுப்பி அதை தனது எதிர்காலத்திற்கு பயன்படுத்திக்கொண்டார் சோபா.

சோபாவின் பித்தலாட்டம் எந்தளவிற்கு தமிழகத்தில் சென்றடைந்திருக்கிறது என்பதை உரசிப்பார்ப்பதற்காக 'சோபாசக்தி என்ன சாதி தெரியுமா?' என்று பலரிடம் கேட்டபோது, 'சோபாசக்தி தலித்துதான்' என்று அவர்கள் அடித்துப் பேசியதும், உங்களுக்கு எப்படித் தெரியும் என்று கேட்டபோது, 'அப்படித்தானேப்பா அவரது படைப்புகள் இருக்கின்றன' என்று சொன்னதும், சோபாவின் வேடம் நன்றாகவே வேலை செய்திருக்கிறது என்பதை உணர்த்தியது.

'கார்ல் மார்க்சுக்கு கள்ள உறவு இருந்தது; அதை ஒப்புக்கொள்ள இந்த மகஇக மறுக்கிறதே' என்று ஒப்பாரி வைக்கும் சோபா இப்படி ஒரு ஏமாத்து வேலையை செய்ததன் காரணமென்ன? கார்ல் மார்க்சு அப்படி ஒரு உறவு வைத்திருந்தால் அதை ஒப்புக்கொள்வதில் பொதுவுடமைவாதிகளுக்கோ ஏன் கார்ல்மார்க்சுக்கோ எந்தப் பிரச்சனையும் இல்லை, ஏனெனில் மார்க்சியத்தின் புனிதம் ஒன்றும் மார்க்சின் ஆணுறுப்பில் வைக்கப்படவில்லை. ஆனால் தலித்வேடம் போட்டு மக்களின் கவனத்தை ஈர்த்த சோபாவுக்கும் குலுக்கல் நடனத்தால் ஒன்றுக்கும் உதவாத திரைப்படத்தை கரை சேர்க்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம் என்பதை சோபாவின் ரசிகக் கண்மணிகள்தான் சொல்லவேண்டும்.

தனது ஆதிக்க சாதிப் பின்புலத்தை மறைத்து, இடஒதுக்கீட்டுக்காக 'தலித்' என்று சாதிச் சான்றிதழ் வாங்கும் சராசரி மனிதர்களை விடக் கேவலமானவர் சோபா சக்தி. இவர் தனது தலித் வேடத்தை, நியாயமான ஒரு போராட்டத்தின் மீது சேறடிக்கப் பயன்படுத்தியிருக்கிறார். தலித் அரசியலை முன்வைத்து, புலிகளை சோபா விமர்சித்தபோது, 'பாதிக்கப்பட்ட ஒரு தலித் சொல்வது சரியாகத்தான் இருக்கும்' என்பதுபோல்தான் தமிழ் இலக்கிய உலகம் அதை எடுத்துக் கொண்டது. இன்றுவரை அ.மார்க்ஸ், சுகன், ஆதவன் தீட்சண்யா, சுசீந்திரன் உள்ளிட்ட புலி எதிர்ப்பாளர்களின் முதல் கோஷமே புலிகள் ஆதிக்கசாதியினர் என்பதுதானே! இந்த தலித் வேடத்துக்கான கூலியாகத்தானே, சோபா எந்த வேலையும் செய்யாமல் கோயில்மாடு போல் திரிய கொடுத்து வைக்கப்பட்டிருப்பது?

aadhavan_shobasakthi_600

இவரது தலித் வேடத்தைக் கலைத்து, இவர் ஒரு ஆதிக்க சாதி வெள்ளாளர் என்பதை இணையத்தில் பலர் அம்பலப்படுத்தியவுடன், 'தான் ஒரு தலித் இல்லை' என்று மிகவெளிப்படையாகச் சொல்கிறார். இதை இதற்குமுன் ஒருநாளும் சோபா பேசியதில்லை என்பதில் இருந்துதான் அவரது அயோக்கியத்தனம் வெளிப்படையாக பல்லிளிக்கிறது.

‘தலித்‘ எழுத்தாளர் தமிழவேளிடம் சோபா பற்றி பேசிக்கொண்டிருந்தேன். அவரும் சோபாவின் தலித் வேடத்தையும் கைக்கூலித்தனத்தையும் நன்றாகவே அறிந்திருந்தார், சோபாவின் மீது கடுமையான கோபத்திலிருந்தார். அவர் பாரதியின் வரிகளை கொஞ்சம் மாற்றிச்சொன்னார். “வேடங்கள் போடுபவரைக் கண்டால் மோதி மிதித்துவிடு பாப்பா, முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா“ என்று. அவர் சொன்னது பாப்பாவுக்கு மட்டுமல்ல... அதுபோக சோபாசக்திக்கு கலகக்காரன் என்று ஒரு பட்டப்பெயரை அவரது ரசிகக் கண்மணிகள் கொடுத்துள்ளார்கள். அது உண்மைதான். பொய் சொன்ன வாயிக்கு போசனம் கிடைக்காது என்று சொன்ன பழமொழியை தனது தலித் வேடத்தால் உடைத்து, பொய் சொன்ன வாயிக்கு போசனம் என்ன இலங்கை அரசின் சாராயமும் கிடைக்கும் என்று நிரூபித்த 'புர்ச்சி'கரமான கலகக்காரர் அவர்தான்.

பின்குறிப்பு- தோழர் கவின்மலரிடம் அவர் எழுதிய கதை பற்றிப் பேச நான் தொடர்புகொண்டபோது அவர் முதலில் நன்றாகப் பேசத் தொடங்கினார். தான் சோபாவை தலித் என்று எழுதவில்லை என்று மறுத்தார். பின்பு கோபமுற்ற அவர், இரண்டு குற்றச்சாட்டுக்களை வைத்தார். அது என்னவெனில் போன கட்டுரையில் நான் சோபாவை தரம் தாழ்ந்து எழுதியதாகவும், அதுபோக அனைவரும் கூட்டு சேர்ந்து சோபாவை தாக்குவதாகவும். போன கட்டுரை மக்கள்மொழியில் கிண்டலும் கேலியும் கலந்து எழுதப்பட்டது. நமக்கு தோழர் கவின்மலர் மீது மரியாதையும் தோழமையுணர்வும் எப்போதும் உண்டு. தோழர் கவின்மலர் வர்க்க மனச்சாட்சியோடு சோபாவின் கட்டுரைகளை வாசித்துவிட்டு பின்பு சொல்லட்டும் யார் தரந்தாழ்ந்து பேசுவது என்று. இரட்டை அர்த்த வசனங்களாலும் படுபச்சையான கொச்சையான வசவுகளாலும் நிரப்பப்பட்டதுதான் சோபாவின் கட்டுரைகள். அவரது கட்டுரைகளை அரசியல் கட்டுரைகள் என்று சொன்னால் அதுவும் இடதுசாரிப் பார்வையில் அமைந்த அரசியல் கட்டுரைகள் என்றால் பேராசான் மார்க்சு நாக்கைப் பிடுங்கிக்கொண்டு செத்துப்போவார். வேண்டுமென்றால் அவரது கட்டுரைகளை நாம் வறட்டுவாதக்கட்டுரைகள் என்று சொல்லிக்கொள்ளலாம்.

அதுபோக கவின்மலரின் இரண்டாவது குற்றச்சாட்டு நீங்கள் கூட்டு சேர்ந்து (அதாவது கீற்று மற்றும் என் போன்றவர்கள்) சோபாவை தாக்குவதாக. நாம் தோழர் கவின்மலரைப் பார்த்து கேட்கவிரும்புவது இது ஒன்றுதான். நீங்கள் எந்த விடயத்தில் சோபாவை ஆதரித்தாலும் பரவாயில்லை, ஆனால் தோழர் தமிழச்சி அவர்மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். இந்த விடயத்தில் நீங்கள் யார் பக்கம் நின்றீர்கள்? பாதிக்கப்பட்டு, மனதுக்குள் வைத்து வைத்து மருகும் எத்தனையோ கோடி அப்பாவி பெண்களைப் போலல்லாமல், தனக்கு நியாயம் வேண்டுமென்பதற்காக தன்னந்தனியாக இத்தனை நாட்கள் போராடியதோடு, செய்யாத தப்பிற்கு ஒரு பொறுக்கியால் கிடைத்த அத்தனை அவமானங்களையும் துணிச்சலோடு எழுதி நிற்கும் அந்த பெண்ணிற்கு துணையாக நின்றீர்களா? இல்லையே... சோபாசக்தியின் அருகில் நின்று கொண்டு - வீரப்பன் தேடுதல் வேட்டையிலே காவல்துறையால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அப்பாவிப்பெண்கள் நீதிகோரியபோது ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டானே ஒரு கிழட்டு நாய் தேவாரம் - அவனைப்போல தோழர் தமிழச்சியிடம் சோபா ஆதாரம் கேட்டதற்கு ஒத்து ஊதத்தானே செய்தீர்கள்? பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் கேட்கும் தடித்தனம் சோபாசக்தி மாதிரியான பொறுக்கிகளுக்கு வேண்டுமானால் வரலாம், பெண்ணியம் பேசும் கவின்மலருக்கு...? இல்லை இதுதான் பாதிக்கப்பட்ட பெண்களிடம் நீங்கள் எப்போதும் கேட்க விரும்பும் கேள்வியா?

'சின்ன வயதில் இருந்தே பழக்கம், அதனால் அரசியலில் இருதுருவங்களாக இருந்தாலும் நட்பு தொடர்கிறது' என்று நீங்கள் சோபாவுடனான நட்பைப் பற்றி சொல்ல முடியாது. ஈழத்தில் பிறந்து, பிரான்சில் வாழும் சோபாசக்தியுடன் ஒத்த கொள்கையன்றி நட்புறவு கொள்வதற்கு வேறு காரணம் இருக்க முடியாது. சோபாசக்தியிடம் காணும் அத்தனை 'புரட்சிகர அம்சங்க'ளையும் நீங்கள் சாரு நிவேதிதாவிடமும் காண முடியும். பெரியார், பெண்ணியம், இந்து மத எதிர்ப்பு, பாலியல் சுதந்திரம், குடி இத்தனையையும் சாருவின் கட்டுரைகளில் இருந்தும் உருவியெடுக்கலாம். சோபாவைப் போலவே, சாருவும் தலித் வேடம் போட்டவர். மலம் அள்ளும் குடும்பத்தில் பிறந்ததாக பீலா விட்டவர். சோபாவின் 'புர்ச்சி'கரத்தன்மைக்கு ரசிகர் என்றால், அதே 'புர்ச்சி'கரத்தன்மை சாருவிற்கும் உண்டு என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இதுதான் பெண்ணியம், இப்படி பேசுவதுதான் பெண்ணியம் என்றால் நீங்கள் பேசும் பெண்ணியத்தில் எழவு விழ என்று எங்கள் ஊர் பாட்டிபோல்தான் எனக்கு சொல்லத்தோன்றுகிறது.

தோழர் கவின்மலர், ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். சோபாசக்தி அடிக்கடி தனது கட்டுரையில் ஒரு சீனப்பழமொழியை தன்னை எதிர்த்துப்பேசும் தனது முன்னாள் நண்பர்களுக்கு சொல்வார். “நீங்கள் எவ்வளவு தூரம் தவறான பாதையில் சென்றிருந்தாலும் திரும்ப வந்துவிடுங்கள்“ என்பதுதான் அது. அந்தப் பழமொழியே ஒரு பிற்போக்கானது. இருப்பினும் அந்தப் பழமொழியை நான் கொஞ்சம் மாற்றிச் சொல்ல விரும்புகிறேன். அன்புத்தோழர் கவின்மலர், "நீங்கள் எவ்வளவு தூரம் தவறான பாதையில் சென்றிருந்தாலும் திரும்ப வந்துவிடுங்கள், அல்லது நீங்கள் செல்லும் பாதை சரியென்றால் எம்மையும் அங்கு அழைத்துச் சென்றுவிடுங்கள்." ஏனெனில் நான் மாவோவின் ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்ற கருத்தில் அபார நம்பிக்கை வைத்துள்ளேன். அதே நேரத்தில் நீங்கள் ஒரு சமூகப் பொறுப்புமிக்க தோழர் என்பதையும், தோழர்களாக இருந்து துரோகிகளாக மாறியவர்களின் வரலாறுகள் மக்கள் மன்றம் முன்பாக கொட்டிக்கிடக்கிறது என்பதையும் உங்களிடம் நான் நினைவுபடுத்த கடமைப்பட்டுள்ளேன்.

-     சார்லசு அன்ரனி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

“50 வருஷத்திற்கு முன்பு வரை ஈழத்தில் தலித்துகள் மேலாடை போட இயலாது. பாட்டன் வேட்டி கட்ட இயலாது. கோயிலுக்குள் போக இயலாது. வெளியில் நின்று தேங்காய் உடைக்க இயலாது. தங்க நகை அணிய இயலாது. பாயாசம் வைக்க இயலாது. இது சட்டம். பொங்கல் நாள் தினத்தன்று காலையில் வைத்த ஆறிப்போன பொங்கலை நயினார்கள் சிறைக்குட்டிகளுக்குப் போடுவார்கள். இது தமிழர் விழாவா இல்லை சாதி இந்துக்களின் விழாவா? இதே கேள்வியைத்தான் இலக்கியத்திற்கும் பொருத்திப் பார்க்கிறேன். தலித்துகள் எழுத வரும்வரை தலித்துகளின் வாழ்க்கை தமிழ் இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா? ஒரு கே.டானியலும் பூமணியும் வரும்வரை தமிழ் இலக்கியத்தில் தலித் மக்களின் இடம் என்ன? எதுவுமே இல்லையெனில் இந்தப் பாழாய்ப்போன தமிழ் இலக்கிய மரபுக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம்? (அழுத்தம் நம்முடையது) அப்படித் தப்பித் தவறி ஆதிக்க சாதியினர் தலித் மக்களைக் குறித்து எழுதிய தருணங்களெல்லாம் தலித்துகளைக் கேவலப்படுத்தியும் நையாண்டி செய்துமே தங்கள் பிரதிகளைக் கட்டமைத்திருக்கிறார்கள்." (http://vallinam.com.my/issue8/pathivu.html)