சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரை, பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு, கூட்டணி, இலவசம், ஸ்பெக்ட்ரம், விக்கிலீக்ஸ், லிபியா, கடாபி என்று அனைத்தையும் ஓரங்கட்டிவிட்டது இந்தியா-பாகிஸ்தான் அரையிறுதி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி! 

இந்தியா - பாகிஸ்தான் நாடுகளிடையே எல்லை மோதல்கள், தீவிரவாதம் குறித்த பிரச்சனைகள், அரசியல் விவாதங்கள், அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடக்கும் போதெல்லாம் அவற்றின் விளைவு கிரிக்கெட்டில் எதிரொலிப்பது வழக்கம்! இந்த இரண்டு நாடுகளின் அணிகளும் கிரிக்கெட் விளையாடும்போது மட்டும் தேசிய உணர்வு மிதமிஞ்சிப் பொங்கி வழிவதாகவும், நாடி நரம்புகளில் நாட்டுப்பற்று முறுக்கேறி, மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்பதாகவும் ஊடகங்கள் சித்தரிப்பது புதிதல்ல. இந்த இரண்டு நாட்டு ரசிகர்களின் தேசிய உணர்வு பொங்குகிறபோது, அது வகுப்புவாதமாகவே எஞ்சி நிற்கிறது என்பது ஏற்கெனவே பலமுறை நிரூபிக்கப்பட்ட ஓர் உண்மை. எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல அரசியல் தலைவர்கள் இந்தியா - பாகிஸ்தான் விளையாடும் கிரிக்கெட் போட்டிகளுக்கு அதிகக் கவனம் செலுத்தி வந்திருக்கிறார்கள். 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்குப் பின்னால் இந்திய முஸ்லீம்கள் ஒளிந்திருப்பது போன்ற தோற்றத்தை இந்துத்துவவாதிகளும் வகுப்புவாத ஊடகங்களும் கட்டமைக்கத் தவறியதில்லை. இந்தியன் என்ற வட்டத்தைத் தாண்டி ஒரு சாதாரண ரசிகன் என்ற மனநிலையில் ஆஸ்திரேலிய அணியைப் பாராட்டலாம்; வெஸ்ட் இன்டீஸ் அணியைப் பாராட்டலாம். தப்பித் தவறி, பாகிஸ்தான் அணியை ஒருவர் வெளிப்படையாகப் பாராட்டிவிட முடியாது. அப்படிப் பாராட்டிவிட்டால், அவரை ஏதோ பயங்கரவாதியைப் பார்ப்பது போன்ற சூழல் உருவாக்கப்பட்டுவிடும். பாகிஸ்தானுக்கு எதிராக நடக்கும் போட்டிகளில் சரியாக விளையாடாத வீரர் ஒரு தேசத் துரோகி, அதிக ரன்களைக் குவித்தவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர், அதிக விக்கெட்களை எடுத்தவர்  மகாத்மாவின் வாரிசு என்ற கோணத்தில்  மனோபாவங்கள் கட்டமைக்கப்படுகின்றன. பாகிஸ்தானுக்கு எதிரான ரன்களின் எண்ணிக்கையும் விக்கெட்டுகளின் எண்ணிக்கையும்தான் நாட்டுப் பற்றின் அளவுகோல் என்ற நம்பிக்கை பலமுறை விதைக்கப்பட்டுவிட்டது. 

இந்த வரலாற்றின் தொடர்ச்சியாக, தற்போதைய பிரதமர் மன்மோகன் சிங் பாகிஸ்தான் - இந்தியா இடையிலான அரையிறுதி கிரிக்கெட் போட்டியைப் பார்க்க பாகிஸ்தான் பிரதமர் கிலானிக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பு ‘நட்பை’ வளர்க்கவே என்று சொல்லப்பட்டது. கடந்த கால அனுபவங்களிலிருந்து பார்க்கும்போது, இதுபோன்ற ‘கிரிக்கெட் - அரசியல் - நட்பு முயற்சிகள்’ ஏற்படுத்திய விளைவு குறைந்த ஆயுளைக்கொண்டதாகவே இருந்திருக்கிறது. இந்த உறவு நீடிப்பதில்லை என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் குறிப்பிடுகிறது. அரசியல்வாதிகளின் கவனம் கிரிக்கெட்டில் விழுகிறபோது, ரசிகர்கள் இந்தப் போட்டியை தேசிய மானப் பிரச்சனையாகவே பார்ப்பது தவிர்க்க இயலாது. கிரிக்கெட் தவிர ஏனைய விளையாட்டு மைதானங்களில் இத்தகைய அரசியல் நாடகம் நடத்தப்படுவதில்லை. ‘உசுப்பேத்தி உசுப்பேத்தியே கிரிக்கெட் ரசிகர்களை ரணகளமாக்கும்’ செயல் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. தங்கள் நாட்டு பிரதமர் விளையாட்டை பார்த்துக்கொண்டிருக்கிறார் என்ற எண்ணம், விளையாட்டு வீரர்களைவிட பார்த்துக்கொண்டிருக்கிற ரசிகர்களுக்கு வெறியை அதிகரிக்கவே செய்யும். 

இரு நாட்டுத் தலைவர்கள் பார்த்து ரசிக்கிற விளையாட்டுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி இருந்தது என்பதைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. “வரலாறு காணாத பாதுகாப்பு” என்ற புளித்துப்போன சொற்றொடரை ஊடகங்கள் வழக்கம்போல பயன்படுத்தத் தவறவில்லை. பணியிலமர்த்தப்பட்டிருந்த காவலர்களின் எண்ணிக்கை மட்டுமே 3,500 என்றால், மற்ற அம்சங்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. அப்படியானால், பாதுகாப்புக்காக மட்டும் எவ்வளவு செலவழிக்கப்பட்டிருக்கும் என்பதை நாமே கணித்துக் கொள்ளலாம். இந்த வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகளில் 2 விழுக்காட்டைப் பயன்படுத்தியிருந்தால்கூட, இலங்கை ராணுவத்தால் சுட்டுத்தள்ளப்படும் தமிழக மீனவர்களைக் காப்பாற்றியிருக்கலாம். 

போதாக் குறைக்கு கிரிக்கெட் மைதானம் என்பது போர்க்களமாகவே ஊடகங்களால் சித்தரிக்கப்படுகிறது. நடப்பது போட்டியா, போரா என்ற சந்தேகம் இயல்பாகவே வந்துவிடுகிறது.  1992ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணியின் துணைத் தலைவர், ஜாவத் மியான்தத் இந்த ‘நட்பு’ முயற்சியை இப்படிக் குறிப்பிடுகிறார்: “நடப்பது போர் அல்ல. விளையாட்டுப் போட்டிதான்”. எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல்  இருக்கிறது.  இதை உறுதிப்படுத்தும் விதமாக, “இந்தியா - பாகிஸ்தான் இடையே இன்று கிரிக்கெட் போர்” என்று தினகரனும் தினமலரும் (மதுரை, 30.03.2011) செய்தி வெளியிடுகின்றன. அதேபோல, “நடப்பது கிரிக்கெட் போட்டிதான். வாழ்வா சாவா பிரச்சனை அல்ல” என்று செய்திக் கட்டுரை எழுதுகிறது          த இந்து நாளிதழ் (மதுரை, 30.03.2011). இப்போட்டியை ‘மோதல்களின் தாய்’ என்று வர்ணிக்கின்றன இன்னும் சில ஊடகங்கள்.

உலகக் கோப்பை அரை இறுதியில் இந்திய அணியை வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றால் பாகிஸ்தான் அணியில் உள்ள ஒவ்வொரு வீரருக்கும் தலா 25 ஏக்கர் விவசாய நிலம் வழங்கப்படும் என்று பஞ்சாப் (பாகிஸ்தான்) மாநில முதலமைச்சர் ஷாபாஸ் ஷரீப் அறிவித்திருக்கிறார். இதில் வேடிக்கை என்னவென்றால், நடப்பது அரை இறுதி ஆட்டம்தான். உலகக் கோப்பையை வெல்வதைக் காட்டிலும் பாகிஸ்தானும் இந்தியாவும் ஒருவரை ஒருவர் வெல்வதே வீரமாகக் காட்டப்படுகிறது. பண்ணையாரை அடிப்பதைக் காட்டிலும், பக்கத்து வீட்டுக்காரனை அடிப்பதில் அப்படி ஒரு சுகம்! என்னதான் அரையிறுதிப் போட்டி என்று சொல்லப்பட்டாலும், இதுதான் இறுதிப்போட்டியாகக் கருதப்பட்டது. யாருக்கு வேண்டும் உலகக்கோப்பை? 

போட்டியின் முடிவு எதுவாக இருந்தாலும், இரண்டு நாட்டு பிரதமர்களும் செயற்கையாகப் புன்னகைத்து கைலுக்கி விடைபெறுவார்கள் என்பது நாம் அறிந்ததே. ஆனால், ரசிகர்கள் இம்முடிவை எளிதாக எடுத்துக்கொள்வதில்லை. உச்சக்கட்டத்தில் வில்லனைக் கொன்று தர்மத்தை நிலைநாட்டிய நாயகனைப் போலவும், சுதந்திரப் போரட்டத்தில் பங்கேற்ற தியாகிகளைப் போலவும் கிரிக்கெட் வீரர்களை ஊடகங்கள் சித்தரிக்கும். இந்தச் சித்தரிப்பின் பாதிப்பை சாதாரண ரசிகர்களிடையே அன்றாடம் உணர முடிகிறது. 

முன்கூட்டியே பணம் வாங்கிக்கொண்டு விளையாடும் ஊழல், சூதாட்டம் போன்ற புகார்களில் சிக்கி சின்னா பின்னமாகிப்போயிருக்கும் இந்த விளையாட்டு சூதாட்டக்காரர்களுக்கு  மிக அவசியம். இந்த அரை இறுதி ஆட்டத்தை முன்னிட்டு உலக அளவில் பத்தாயிரம் கோடி ரூபாய் வரை சூதாட்டம் நடந்திருப்பதாக இணைய தளங்கள் தெரிவிக்கின்றன. சில வீரர்கள் எதிர்பார்த்தபடி சரியாக விளையாடாத பட்சத்தில், ‘பணம் வாங்கியிருப்பானோ’ என்று ரசிகர்கள் பேசிக்கொள்வதை அவ்வப்போது கேட்க முடிகிறது. பாகிஸ்தான் அரசு தன் நாட்டு வீரர்களை இதுகுறித்து எச்சரித்தது குறிப்பிடத்தக்கது. இந்த விளையாட்டுப்  போட்டியை நேரடியாக மைதான வளாகத்தில் அமர்ந்து பார்ப்பதற்குத் தேவையான டிக்கெட் கறுப்புச் சந்தையிலும் விற்கப்பட்டிருக்கிறது.  இந்தக் குறிப்பிட்ட ஆட்டத்திற்கு மட்டும் கறுப்புச் சந்தையில் கட்டணம் 2,000 டாலர் வரை சென்றிருக்கிறது என்று இணையதளங்கள் தெரிவிக்கின்றன. 

மும்பை தாஜ் ஒட்டல் தாக்குதலுக்குப் பிறகு நடக்கும் ‘நட்பு நிகழ்வு’ என்பதால், ஊடகங்களுக்கு நல்ல தீனி கிடைத்துள்ளது. டி.ஆர்.பி. மதிப்பீடுகளின்படி தங்கள் விளம்பர வருமானத்தைப் பெருக்கிக்கொள்ள உதவும் வருமானச் சுரங்கம் இந்த விளையாட்டு. இந்தியா - பாகிஸ்தான் மோதிய இந்த அரை இறுதிப் போட்டியை நேரலை ஒளிபரப்பு செய்த இ.எ.ஸ்.பி.என்.- ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் தூர்தர்சன் தொலைக்காட்சிகள் 40 டி.ஆர்.பி. புள்ளிகளை பெறுவதாக ஒரு மதிப்பீடு கூறுகிறது. ஒரு டி.ஆர்.பி. என்பது 1.5 கோடி பார்வையாளர்களைக் குறிக்கும். எனவே, குறைந்த பட்சம் 60 கோடி இந்தியர்கள் இப்போட்டியைப் பார்த்திருக்கிறார்கள் என்று மதிப்பிடலாம். இதன் விளைவாக, விளம்பரக் கட்டணம் கணிசமாக உயர்ந்திருக்கும் என்பதால், விளம்பர நிறுவனங்களுக்குக் கொண்டாட்டம்தான்.

இந்த அரையிறுதிப் போட்டிகளின் போது ஒளிபரப்பான விளம்பரங்களுக்கான கட்டணம் என்ன தெரியுமா? 10 நொடிகளுக்கு 35 லட்சம் ரூபாய். அதாவது ஒரு நொடிக்கு 3,50,000 ரூபாய். போட்டி ஒளிபரப்பாகும் போதே குறுக்கும் நெடுக்குமாக வந்துபோகும் விளம்பரங்களின் நேர அளவையும், விளம்பர இடைவேளைக்கான நேர அளவையும் கணக்கில் எடுத்துக்கொள்வோம். அதைக் கட்டண அளவோடு தொடர்புபடுத்திப் பார்த்தால் வருமானத்தின் அளவு நம்மைத் தலைசுற்ற வைக்கும். இந்தியா-பாகிஸ்தான் அரையிறுதிப் போட்டியில் நைக், பெப்சி, ஹோண்டா போன்ற பன்னாட்டு விளம்பர நிறுவனங்கள் தங்கள் பொருளாதாரத் தொப்பையை அதிகரித்துக்கொண்டுள்ளன என்று உறுதியாகச் சொல்லலாம்.

ஆசியாவில் மிகப்பெரிய நுகர்வுச் சந்தையைக் கொண்ட நாடு இந்தியா. எனவே, பன்னாட்டு நுகர்வு விளம்பரங்களுக்கு இந்திய நுகர்வோர் அவசியம். இந்தியா அரையிறுதியைத் தாண்டி இறுதிப் போட்டிக்கு வரவேண்டும் என்ற அக்கறை ரசிகர்களுக்கு இருப்பதைவிட, விளம்பர நிறுவனங்களுக்கு அதிகம்.  இதனால்தான் ‘match fixing’ (பணம் வாங்கிக்கொண்டு தீர்மானிக்கப்பட்ட முடிவுக்கு ஏற்றபடி விளையாடுவது) பிரச்சனையில் ரகசியமாக இயங்கும் சூதாட்ட அமைப்புகளுக்கு மட்டுமல்ல, விளம்பர நிறுவனங்களுக்கும் முக்கிய இடம் இருப்பதாகக் கருத வாய்ப்புண்டு. 

இப்போட்டியில் இந்திய அணிக்குரிய “Bleed blue pledge” என்ற முத்திரை விளம்பரம் ஒன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானதைப் பார்த்திருக்கலாம்.  இந்திய அணியை உரமேற்றும் விளம்பரம் இது. ஒவ்வொரு விளையாட்டு வீரரும் கிரிக்கெட் மேல் கொண்ட தன் காதலை அல்லது வெறியை சொற்றொடர்களால் இவ்விளம்பரத்தில் வெளிப்படுத்துவார்கள். மேலும், ரசிகர்கள் தங்கள் கைரேகையை இணைய தளத்தின் வழியாக பதியவைத்து இந்திய அணிக்கு ஆதரவு தரும் வாய்ப்பையும் இந்த விளம்பரம் ஏற்படுத்துகிறது. நீல நிற  டி-சர்ட், நீல நிறத்தில் அச்சிடப்பட்ட படங்கள் ஆகியவை இந்த விளம்பரத்தின் மற்ற வகைகள். லுயசனள என்ற மற்றொரு விளம்பரம். தெருவில் விளையாடப்படும் கிரிக்கெட்டையும் உலகக் கோப்பை கிரிக்கெட்டையும் தொடர்புபடுத்தி, இந்திய கிரிக்கெட் ரசிகர்களை இந்திய அணியோடு ஒன்றச் செய்யும் விளம்பரம் இது. இந்த விளம்பரங்களை எல்லாம் தயாரித்தது நைக் என்ற அமெரிக்க நிறுவனம். விளையாட்டு வீரர்களுக்கான அணிகலன்களை, குறிப்பாக காலணிகளைத் தயாரிப்பதுதான் இந்த நைக் நிறுவனம். மொத்தத்தில் அமெரிக்காவின் செருப்பு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவை உசுப்பேற்றியது என்றுதான் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. 

இதில் கவனிக்கத்தக்கது என்னவென்றால், நைக் நிறுவனம் இந்திய அணிக்குச் செய்த அதே விளம்பரச் ‘சேவை’யை, பாகிஸ்தான் அணிக்கு பெப்சி நிறுவனம் இம்முறை செய்திருக்கிறது. இதற்கு முந்தைய உலகக் கோப்பைப் போட்டிகளில் பெப்சி அதே ‘சேவை’யை இந்தியாவிற்குச் செய்திருக்கிறது என்பதும் குறிப்பிடத் தக்கது. மொத்தத்தில், இந்தியா - பாகிஸ்தான் அணிகளை மோதவிட்டுச் சம்பாதிப்பதில் அமெரிக்க நிறுவனங்களுக்கு கொள்ளை லாபம். ‘இந்தியா - பாகிஸ்தான்- அமெரிக்கா’ என்ற பன்னாட்டு முக்கோண அரசியல், விளம்பரத்திலும் எதிரொலிப்பது நல்ல வேடிக்கை! ‘ஊரு ரெண்டுபட்டா கூத்தாடிக்குக் கொண்டாட்டம்’ என்பார்கள். அதுபோல, இந்தியா- பாகிஸ்தான் மோதிக்கொண்டால் அமெரிக்க நிறுவனங்களுக்குக்  கொண்டாட்டம்! 

நாடாளுமன்றத்தில் சுமத்தப்பட்டிருக்கும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் விக்கிலீக்ஸ் தகவல்களால் மத்திய அரசு விழிபிதுங்கிப் போயிருக்கும் நிலையில் ஒரு திசை திருப்பும் கிரிக்கெட் அரசியல் அவசியமாகிறது. இத்தகைய திசைதிருப்பும் அரசியல் ஒன்றும் புதிதல்ல. பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளில், அரசுத் தொலைக்காட்சியான தூர்தர்சன் இடைவிடாமல் ஒளிபரப்பியது கிரிக்கெட் போட்டியைத்தான். இப்படிப்பட்ட திசை திருப்பும் அரசியலுக்குப் பயன்படும் இந்த கிரிக்கெட்  அரசியல்வாதிகளுக்கு ஒரு ‘ரியாலிட்டி ஷோ’! இருக்கிற அரசியல் போதாதென்று, போர்க்குற்றவாளி என்று பன்னாட்டு அளவில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, 500க்கும் மேற்பட்ட இந்திய மீனர்வர்களின் படுகொலைக்குக் காரணமான இலங்கை அதிபர் ராஜபக்ச இந்தியா- இலங்கை மோதும் இறுதிப்போட்டியைக் காண மும்பை வருவதாக ஒரு தகவல் கூறுகிறது. கிரிக்கெட் அரசியல் யாருக்கெல்லாம் சிவப்புக் கம்பளம் விரிக்கும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. 

இப்படிப்பட்ட கிரிக்கெட் அரசியலை வெளிப்படையாக நடத்திவிட்டு, “கிரிக்கெட்டில் அரசியலை கலக்க வேண்டாம்” என்று சிரிக்காமல் வேண்டுகோள் விடுக்கிறார்கள் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள். கறுப்புச் சந்தையில் டிக்கெட் வாங்கி, சூதாட்டம் நடத்தி, விளம்பரக் கொள்ளையடித்து, பன்னாட்டு நிறுவனங்களுக்கு வாரி வழங்கி, பாதுகாப்பில் கோடிகளைச் செலவழித்து, கவனத்தைத் திசைதிருப்பி அண்டை நாடுகளுடன் உறவை வளர்க்க எடுக்கும் முயற்சி இருக்கிறதே.... சகிக்க முடியவில்லை.  அரையிறுதியில் இந்திய அணி, பாகிஸ்தானை வென்ற பிறகு இணையதளத்தில் இந்திய ரசிகர்கள் தங்கள் கருத்துகளைப் பதிவுசெய்திருக்கிறார்கள். இந்தியாவை வானளாவப் புகழ்ந்தும்  பாகிஸ்தானை வசைபாடியும் இவர்கள் பதிவு செய்திருக்கும் கருத்துகளைப் பார்க்கும்போது, பகைமை  வலுவூட்டப்பட்டிருக்கிறது என்பதே உண்மை. இந்திய அணியின் வெற்றியால் மொகாலி அதிர்ந்தபோது, இஸ்லாமாபாத்தில் மயான அமைதி நிலவியதாக சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவையெல்லாம் எதைச் சுட்டிக்காட்டுகின்றன? 

இந்த கிரிக்கெட் போட்டிகள் வழியாக அண்டை நாடுகளுடனான உறவு மேம்பட்டு விட்டதாக நம்புபவர்களையும், இந்திய இறையாண்மை கிரிக்கெட்டில் ஒளிந்திருக்கிறது என்று நம்பும் ரசிகர்களையும் நினைத்தால் பாவமாக இருக்கிறது!  “இன்னுமாடா நம்புறாய்ங்க” என்ற வடிவேலுவின் வசனம்தான் காதில் ஒலிக்கிறது. 

- மௌலியன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It