சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அரசியல் பற்றியும், தேர்தலில் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் பற்றியும், அதன் ஜனநாயக முக்கியத்துவம் பற்றியும் பரவலாக மக்களிடையே விவாதிக்கப்பட்டு வருகிறது.
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திடமிருந்து இந்தியா அரசியல் விடுதலை பெற்று அறுபத்து மூன்று ஆண்டுகள் முடிந்து விட்டன. இதுவரை பதினைந்து முறை பாராளுமன்றத் தேர்தல் நடந்துள்ளது. தமிழ்நாட்டில் இப்போது பதினான்காவது சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. உலகிலேயே மிகப் பெரிய அரசியல் அமைப்புச் சட்டத்தைக் கொண்ட நாடாகவும், மிகப் பெரிய ஜனநாயக நாடாகவும் இந்தியா பெயர் பெற்றுள்ளது. மதச்சார்பற்ற, ஜனநாயக, சோசலிச, இறையாண்மை கொண்ட நாடு என்பதைத் தனது வழிகாட்டும் நெறிமுறையாகக் கொண்டுள்ள அரசியல் அமைப்புச் சட்டத்தைக் கொண்டுள்ளது.
ஆனால் நடைமுறையில் இந்த அறுபது ஆண்டுகால ஆட்சியில் இங்குள்ள பாராளுமன்ற ஆட்சிமுறை மதச்சார்பற்ற தன்மையை வளர்த்தெடுத்துள்ளதா? ஜனநாயகத்தை விரிவடையச் செய்துள்ளதா? சோசலிசத்தை நோக்கி முன்னேறியுள்ளதா? இறையாண்மையைக் காப்பாற்றியுள்ளதா? என்ற கேள்விகள் உண்மையான தேசப்பற்று கொண்ட அனைவரையும் எதிர் கொண்டுள்ளன.
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தின்போது மங்கிய நிலையில் இருந்த மதவெறியும், சாதி வெறியும் இன்று தலைவிரித்து ஆடுகின்றன. சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் மக்களைப் பிளவுபடுத்தி அரசியல் இலாபம் தேடிக்கொண்டு இருக்கின்றன இங்குள்ள கட்சிகள்.
மக்களைப் பிளவுபடுத்தும் பார்ப்பனிய – நிலவுடைமை - சாதியப் பிற்போக்குப் பண்பாட்டைத் தகர்த்தெறிந்து மக்களை ஐக்கியப்படுத்தும் ஒரு புதிய ஜனநாயகம் இங்கு உருவாக்கப்படவில்லை. மாறாகப் பிற்போக்குப் பண்பாட்டினைப் பயன்படுத்தி மக்கள் மீது அதிகாரம் செலுத்தி வருகின்றன இங்குள்ள கட்சிகள். கட்சிகளுக்குள்ளும்கூட ஜனநாயகப் பண்பாடு வளர்த்தெடுக்கப்படவதில்லை. தந்தைவழிச் சமூகப் பண்பாடு கட்சிகளுக்குள்ளும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. குடும்ப ஆதிக்கமே ஒவ்வொரு கட்சிக்குள்ளும் நிலவி வருகிறது. உண்மையில் கட்சிகள் ஜனநாயகப் போலிகளாக இருக்கின்றன.
சமூகம், பொருளாதாரம், பண்பாடு ஆகிய அனைத்து அரங்குகளிலும் மக்களிடையே உள்ள ஏற்றத் தாழ்வுகளைப் போக்கிப் படிப்படியாக சமத்துவத்தைக் கொண்டு வருவதுதான் சோசலிசம். அதற்கு ஏதுவாக நாட்டின் பொருளாதார உற்பத்தி முறையை மாற்றி அமைக்க வேண்டியது முதல் தேவையாகும். ஆனால் இங்கு நடந்து கொண்டிருப்பது என்ன?
உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் என்ற பெயரில் இந்நாட்டுப் பெரும் முதலாளிகளும், பன்னாட்டு முதலாளிகளும் நமது இயற்கை வளங்களையும், கனிமவளங்களையும் சூறையாடவும், நமது மக்களைச் சுரண்டவும் வழிவகுக்கப்பட்டு உள்ளன.
இவர்களுடைய கொள்கைகளினால் கடந்த பத்தாண்டுகளில் மட்டும் இந்நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயிகளில் இரண்டு லட்சத்துக்கும் மேலானோரை தற்கொலை செய்து கொள்ள வைத்துள்ளனர். சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பெயரில் லட்சக்கணக்கான விவசாயிகளின் நிலங்களைப் பறித்து ஓட்டாண்டிகளாக ஆக்கிக்கொண்டு இருக்கின்றனர். சிறு, நடுத்தரத் தொழில்களை அழித்து லட்சக்கணக்கான மக்களை வேலையில்லாத் திண்டாட்டத்தில் வீழ்த்தியுள்ளனர். இந்நாட்டுப் பெரும்முதலாளிகளும் பன்னாட்டு முதலாளிகளும் நமது நாட்டின் பெரும் கனிவளங்களைக் கைப்பற்றுவதற்காக லட்சக்கணக்கான பழங்குடியினரை அவர்களுடைய வாழ்விடங்களிலிருந்து விரட்டி வருகின்றனர்.
அமைப்புச் சாராத் தொழில் நிறுவனங்களுக்கான ஆணையம் தனது ஆய்வின்படி இந்நாட்டில் 83.6 கோடி மக்கள், அதாவது மக்கள் தொகையில் 77 விழுக்காட்டினர் நாள் ஒன்றுக்கு இருபது ரூபாய் அல்லது அதற்குக் குறைவான வருமானத்தில் வாழ்க்கை நடத்தி வருவதாகத் தெரிவிக்கிறது. உலகின் பசியைக் குறிக்கும் அட்டவணை (World Hunger Index)யில் உள்ள 88 நாடுகளில் இந்தியா 66 இடத்தில் உள்ளது. ஆனால் அதே சமயத்தில், கடந்த பத்தாண்டுகளில் மட்டும் 5000௦௦௦ கோடி ரூபாய்க்கு மேல் சொத்து உள்ள 49 செல்வந்தர்களையும் 100 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து உள்ள ஒரு இலட்சம் செல்வந்தர்களையும் இந்தியப் பொருளாதாரம் உருவாக்கியுள்ளது.
இறையாண்மை என்பது சுருக்கமாகக் கூறினால் ஒரு நாட்டின் எல்லைப்பரப்பையும், இயற்கை வளங்களையும், அந்நாட்டில் வாழும் மக்களின் நலன்களையும், உரிமைகளையும் பாதுகாப்பதற்காக மக்களால் அவர்களுடைய பிரநிதிகளுக்கு வழங்கப்படும் அதிகாரமாகும். மக்களால் வழங்கப்பட்ட இந்த அதிகாரத்தை அவர்கள் மக்களுக்கு எதிராகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பான்மை மக்களின் நலன்களை இந்நாட்டுப் பெரும்முதலாளிகளின் இலாபத்துக்காகவும், பன்னாட்டு முதலாளிகளின் இலாபத்துக்ககவும் அடகு வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவை மட்டுமல்லாமல், இந்நாட்டு அரசியல்வாதிகளும் அதிகாரவர்க்கத்தினரும் எந்த அளவுக்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் செல்வாக்கிற்கு ஆட்பட்டு இருக்கிறார்கள் என்பதை அண்மையில் வெளியாகி உள்ள விக்கி லீக்சின் செய்திகள் அம்பலப்படுத்துகின்றன. இந்நாட்டின் நிதிக் கொள்கை எவ்வாறு இருக்கவேண்டும், அயலுறவுக் கொள்கை எவ்வாறு இருக்கவேண்டும் என்பதைத் தீர்மானிப்பதில் அமெரிக்கா எவ்வாறு செல்வாக்கு செலுத்தி வருகிறது என்பதை அச்செய்திகள் அம்பலப்படுத்தி உள்ளன. இந்நாட்டில் யார் யார் எந்த அமைச்சராக ஆக வேண்டும் என்பதை பெரும் முதலாளிகளும் பன்னாட்டு முதலாளிகளும் அதிகாரத் தரகர்களுமே தீர்மானிக்கின்றனர் என்பதை அண்மையில் வெளியாகிய நீரா ரேடியா தொலைபேசி உரையாடல்கள் பதிவு அம்பலப்படுத்துகிறது.
இவை அனைத்திற்கும் ஊற்றுக்கண்ணாகப் பாராளுமன்ற ஆட்சிமுறையும் தேர்தல் முறையும் உள்ளன.
முதலாவதாக, பிற்போக்கான பார்ப்பனிய-நிலப்பிரபுத்துவ-சாதியப் பண்பாட்டின் ஆதிக்கத்தில் பெரும்பான்மையான மக்கள் இருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு இங்குள்ள அரசியல்வாதிகள் இத்தேர்தல் முறையில் அரசியல் இலாபம் அடைந்து வருகின்றனர். சாதி அடிப்படையிலும், மத அடைப்படையிலும் மக்களைத் திரட்டித் தங்கள் வாக்கு வங்கிகளைப் பெருக்கிக்கொள்ள முனைகின்றனர். அதற்காகத் தொடர்ந்து சாதி,மத உணர்வுகளை மக்கள் மத்தியில் உயிர்ப்பித்து வருகின்றனர்.
இரண்டாவதாக, இத்தேர்தல் முறை இலஞ்சத்திற்கும், ஊழல்களுக்கும், கருப்புப் பணத்திற்கும் உற்பத்திக்களனாக உள்ளது. கோடீசுவரர்கள் மட்டுமே இங்கு தேர்தலில் வேட்பாளர்களாக நிற்க முடியும். தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் தாங்கள் தேர்தலில் செலவு செய்த தொகையைத் திரும்பச் சம்பாதிப்பதற்காகவும், தொடர்ந்து அடுத்த தேர்தலில் பெரும் செலவு செய்து வெற்றி பெறுவதற்காகவும் தங்களுடைய பதவியைப் பயன்படுத்தி இலஞ்ச, லாவண்யங்கள் மூலமும், ஊழல்கள் மூலமும் கோடிக்கணக்கான ரூபாய்களைக் கருப்புப் பணமாகவும், அளவற்ற சொத்துக்களைப் பினாமிகள் பெயரிலும் சேர்த்து வருகின்றனர். இவ்வாறு இவர்களால் குவிக்கப்பட்ட இலட்சக்கணக்கான கோடி ரூபாய்கள் இன்று சுவிஸ் வங்கிகளில் வைக்கப்பட்டுள்ளது உலகறிந்த செய்தியாகியுள்ளது. அரசியல் இவர்களுக்கு ஒரு இலாபம் மிக்க தொழிலாகவும், பரம்பரைத் தொழிலாகவும் மாறிவிடுகிறது. லஞ்சம் இவர்களுக்கு மூலதனத் திரட்டலுக்கான ஒரு வழியாக உள்ளது.
இந்தப் பண்பின் காரணமாக இங்கு தேர்தலில் நேர்மையானவர்களோ, சாதாரணத் தொழிலாளர்களோ, ஏழை, நடுத்தர விவசாயிகளோ, நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்தவர்களோ நின்று வெற்றி பெற இயலாது. எனவே இத்தேர்தல் முறை பெரும்பான்மையாக இருக்கும் தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும்,நடுத்தர மக்களுக்கும் பிரநிதித்துவம் வழங்கும் ஜனநாயகமாக இல்லை. எனவே இங்கு முதலாளிகளுக்கான ஜனநாயகம்தான் உள்ளதே தவிர மக்களுக்கான ஜனநாயகம் இல்லை. இந்நிலையில் இந்த ஆட்சிமுறையில் மக்களுடைய நலன்களுக்கு ஏற்ற மாற்றங்களைக் கொண்டுவந்து விடலாம் எனக் கருதுபவர்கள் முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ்பவர்களாகத்தான் இருக்க முடியும்.
மூன்றாவதாக, தேர்தலில் பங்குகொள்ளும் அனைத்துக்கட்சிகளுக்கும் உரியமுறையில் பிரநிதித்துவம் இங்கு கிடைப்பதில்லை. எடுத்துக்காட்டாக, மொத்தம் பதிவாகும் வாக்குகள் 70 விழுக்காடுகள் என்று எடுத்துக் கொண்டால், பதிவான வாக்குகளில் 35 விழுக்காடு பெற்ற கட்சி பெரும்பான்மை இடங்களை வென்ற கட்சியாக மாறி ஆட்சியைக் கைப்பற்றி விடமுடியும். அனைத்து இடங்களிலும் தனித்து நின்ற ஒரு கட்சி 10 விழுக்காடு வாக்குகள் பெற்றாலும் ஓர் இடம் கூட வெல்லமுடியாமல் போகலாம். அதனால் அந்தக் கட்சிக்கு வாக்களித்த 10 விழுக்காடு மக்களுக்கு உரிய பிரநிதித்துவம் கிடைக்காமல் போய்விடுகிறது. எனவே ஜனநாயகம் என்ற பெயரில் இங்கு எப்பொழுதுமே சிறுபான்மையினரின் ஆட்சியே நடைபெற்று வருகிறது.
அதற்குப் பதிலாகப் பதிவாகும் வாக்குகளின் விகிதாச்சாரத்திற்கு ஏற்பப் பிரநிதித்துவம் அளிக்கப்பட்டால் தங்கள் கொள்கையை விட்டுக்கொடுக்காமல் தனித்து நிற்கும் கட்சிக்கும் உரிய பிரநிதித்துவம் கிடைக்கும். அந்த நிலையில், ஐந்து இடங்களுக்கும் பத்து இடங்களுக்கும் இங்குள்ள இடதுசாரிக் கட்சிகள் கொள்கையற்ற கூட்டணி சேர்ந்து, சந்தர்ப்பவாதிகள், கொள்கையற்ற கோமாளிகள் என்ற ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாக வேண்டிய அவசியம் ஏற்படாது.
நான்காவதாக, இங்கு வாக்களிக்கும் உரிமைதான் மக்களுக்கு இருக்கிறதே தவிர, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் மக்கள் கையில் இல்லை. அவர்களுடைய பதவிக் காலத்தில் அவர்கள் மக்களுக்கு எந்தப் பணியையும் ஆற்றாவிட்டலும், லஞ்ச லாவண்யங்களின் மூலமும், ஊழல்கள் மூலமும் கோடிக்கணக்கில் சொத்துக்கள் சேர்த்தாலும், மக்கள் நலன்களுக்கு எதிராகச் செயல்பட்டாலும் அவர்களைத் திரும்ப அழைக்கும் அதிகாரம் மக்களிடம் இல்லை. மக்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் மக்களுக்குப் பணியாற்றும் சேவகர்களாக இருப்பதற்குப் பதிலாக அவர்கள் மக்கள் மீது அதிகாரம் செலுத்துபவர்களாக மாறிவிடுகிறார்கள்.
இவ்வாறு, இந்தத் தேர்தல் முறைதான் சாதி,மத உணர்வுகள் மீண்டும் மீண்டும் உயிர்த்து எழுவதற்கும், ஊழல் பேர்வழிகள், கருப்புப் பணமுதலைகள், அரசியல் தாதாக்கள்,அரசியல் தரகர்கள், போக்கிரிகள் ஆகியோர் தோன்றுவதற்கும் காரணமாக இருந்து வருகிறது.
ஆனால் நல்லது நடக்கும் என நம்பிக்கொண்டு நாமும் அறுபது ஆண்டுகாலமாய் மாறி மாறித் தேர்தலில் வாக்களித்து வருகிறோம். நமது கதையோ இலவு காத்த கிளியின் கதையாய் மாறிவிட்டது. ஆனால் இந்தத் தேர்தல் முறையும், அதன் வழியாக அமையும் ஆட்சியும் மக்களுடைய தேவைகளை நிறைவேற்றக்கூடியதாய், மக்களுடைய நல்வாழ்வுக்கு வழிகாட்டக் கூடியதாய் இல்லை என்பதை இந்த அறுபது ஆண்டுகால அரசியல் அனுபவங்கள் நிரூபித்து உள்ளன.
எனவே, இப்பொழுது உள்ள தீமைகளுக்கு இடமளிக்காத, தொழிலாளர்கள், விவசாயிகள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், தலித்துகள், பெண்கள் என அனைவருக்கும் விகிதாச்சார அடிப்படையில் உண்மையான ஜனநாயகத்தை வழங்கக்கூடிய, இந்நாட்டிலுள்ள அனைத்துத் தேசிய இனங்களுக்கும் சமத்துவத்தை வழங்கக்கூடிய, அதிகாரம் கீழிருந்து மேல் நோக்கிச் செல்வதற்கு வழிவகுக்கக்கூடிய ஒரு புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தைப் பற்றியும், அதன் அடிப்படையிலான தேர்தல்முறை பற்றியும் சிந்திக்க வேண்டிய உடனடிக் கடமை தேசப்பற்று கொண்ட, நீதியிலும், நேர்மையிலும், ஜனநாயகத்திலும் நம்பிக்கை கொண்ட அனைவரையும் இன்று எதிர்கொண்டுள்ளது.
அவ்வாறு ஒரு புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தையும், புதிய தேர்தல் முறையையும் உருவாக்கிக்கொள்வதன் மூலமே மக்கள் உண்மையில் தங்களுக்கான ஜனநாயகத்தையும், அதிகாரத்தையும் பெறமுடியும். தங்களுக்கான வாழ்வையும், வளத்தையும் பெறமுடியும். அதற்குப் பதிலாக இப்போது நடைமுறையில் உள்ள தேர்தல்கள் மூலமே வாழ்வையும், வளத்தையும் பெற்றுவிடமுடியும் என நம்புவது ஊசியின் காதில் ஒட்டகத்தை நுழைத்து விடமுடியும் என்பதை நம்புவதைப் போன்றது.