பின்தள்ளப்படும் பழங்கதை

முப்பத்தி நான்கு வருட ஆட்சியதிகாரத்திற்குப் பின்பு, மேற்கு வங்கத்தில் மீண்டும் ஆட்சிக்கு வர இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) எதையும் செய்யத் தயாராகயிருக்கிறது. அமைதியற்ற லால்காரின் நேடாய் கிராமமே அம்மாநிலத்தில் கொதித்துக் கொண்டிருக்கும் உள்நாட்டு யுத்தத்தின் சமீபத்திய பலி. வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக எப்படி அரசியல் கட்சிகள் ரத்தம் சிந்திக் கொண்டிருக்கின்றன என்பதை தெகல்கா பத்திரிக்கையாளர் துஷா மிட்டல் பதிவுசெய்கிறார்.

 நேடாய் கிராமத்தின் அனைத்து இடங்களிலும் புதிதாக நடப்பட்ட கொடிக்கம்பங்களும் உடைக்கப்பட்ட கொடிக்கம்பங்களும் காட்சியளிக்கின்றன. மேற்கு வங்கத்தில் அடுத்த முறை ஆட்சியைப் பிடிப்பதற்கான போட்டி இறுதிக்கட்டத்தை அதாவது காட்டுமிராண்டித்தனமான கட்டத்தை நெருங்கி விட்டது. இதுவரை எத்தனைபேர் இறந்துபோனார்கள் என்பதற்கான சரியான புள்ளிவிவரம் தெரியவில்லை. சில கொலைகள் குறிவைத்து நடத்தப்பட்டவை; சில கொலைகள் பதிலுக்குப் பதிலாக நடந்தவை. கொல்லப்பட்டவர்களில் சிலபேர் திரிணமுல் காங்கிரசையும் (இனி தி.கா.) சிலபேர் காங்கிரசையும் சிலபேர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் (இனி சிபிஎம்) சார்ந்தவர்கள். சிலபேர் தம்மைக் காத்துக்கொள்ள ஏதாவதொரு அரசியல் கட்சிகளை ஆதரித்தவர்கள்.

இந்தப் படுகொலைகளைப் பற்றி முழுதாக புரிந்துகொள்ள ஹூக்ளி மட்டும் குறிப்பாக அணுகலாம். ஆரம்பாக் தொகுதியைத் தவிர ஹுக்ளியின் அனைத்து பாராளுமன்றத் தொகுதிகளையும் தி.கா. 2009 தேர்தலில் வென்றது. சிபிஎம்மைச் சேர்ந்த அனில் பாசு மட்டும் தனது தொகுதியை தக்கவைத்துக்கொண்டார். ஆனால் வாக்குவிகிதம் ஆறு லட்சத்திலிருந்து அய்ம்பதாயிரமாக 2009 பாராளுமன்றத்தேர்தலில் சரிந்தது. ஹுக்ளி தி.கா. வ‌ச‌மான‌து.

2009 தேர்தல் முடிவுகளுக்குப் பின்பு  அரசியல் கொலையை ஆரம்பாக் முதன்முதலில் பார்த்தது. யுதிஷ்டிர் டோலோய் எனும் தி.கா. தொண்டர் துண்டுதுண்டாக வெட்டிக் கொல்லப்பட்டார். (பின்னிணைப்பு காண்க‌) அதன்பின்பு பத்துப்பேர் கொல்லப்பட்டனர்.

ஆனந்த் துலோய் தனது நிலத்தை உழுதுகொண்டிருந்தபோது திடீரென்று விழுந்து இறந்தார். உட்டம் டோலோய் தனது மாட்டுவண்டியை ஓட்டிச்செல்லும்போது தூரத்தில் பிரச்சனைபோல் தெரிந்ததைப் பார்த்து மாட்டுவண்டியை நிறுத்தினார். அவரது குடும்பம், காவல்துறை சுட்டதில்தான் அவர் இறந்துபோனார் என்று நம்புகிறார்கள். பக்கத்திலுள்ள சாராயக்கடையிலிருந்து வந்துகொண்டிருந்த ராபின் ஆடக் முகமூடி அணிந்த மனிதர்களால் கழுத்து நெறிக்கப்பட்டு இறந்தார். தாஸரத்தாஸின் மகனைத் தேடிய கும்பல் அவர் கிடைக்காததால் தாஸரத்தாஸைக் கொன்றது.

ஆரம்பாக், மேற்கு வங்கத்தில் நடந்து வரும் உள்நாட்டு யுத்தம் போன்றதொரு சூழலின் ஒரு குறியீடு. உண்மை நிலையைக் கண்டறிய தெகல்கா அய்ந்து மாவட்டங்க‌ளுக்குப் பயணித்தது. பதினெட்டு மாவட்டங்களில் சிறிய அளவிலான பிரச்சனைகள் இருக்கும் நிலையில், மிகவும் மோசமான நிலையற்ற தன்மை - தி.கா. குறிப்பிடத்தகுந்த வெற்றியைப் பெற்ற - கிழக்கு மிட்னாப்பூர், வடக்கு 24 பார்கனாஸ், கிழக்கு 124 பார்கனாஸ், ஹூக்ளி மற்றும் புர்த்துவான் பகுதிகளில் நிலவுகிறது. அந்தப் பகுதிகளை மீண்டும் மீட்கவும் தக்கவைத்துக்கொள்ளவும் சிபிஎம் ஆயத்தமாகயிருக்கிறது. மேலும் மேற்கு மிட்னாபூரில் தேர்தல் யுத்தம், மாவோவியர்கள் மற்றும் மத்திய துணைராணுவப்படையினரின் இருப்பால் மேலும் சிக்கலாக்கப்பட்டிருக்கிறது. சிபிஎம் மத்திய துணைராணுவப்படையினரைப் பயன்படுத்துவதாக தி.கா.வும், மாவோவியர்களோடு தி.கா. கைகோர்த்துள்ளதாக சிபிஎம்மும் குற்றஞ்சாட்டுகின்றன‌.

உள்நாட்டு யுத்தம் சமீபத்தில் இருப்பதற்கான அறிகுறிகள் 2007 ஆம் ஆண்டு கிழக்கு மிட்னாபூரில் 14 கிராமவாசிகள் இறந்தபோது தெரிய ஆரம்பித்தது. நிலத்தின் மீதான முரண்பாடாக ஆரம்பித்த சண்டை மோசமானதொரு அரசியல் யுத்தமாக வடிவெடுத்தது. மோட்டார் சைக்கிளில் கொடியை அசைத்துக்கொண்டும் ஆயுதங்களை ஏந்திக்கொண்டும் கிராமங்களுக்கு வந்தவர்கள் அண்டை கிராமங்களுக்குள் சண்டை மூட்டினார்கள். சிபிஎம்மை நந்திகிராமை விட்டு தி.கா. வெளியேற்றிய‌போது, சிவப்புப் படை அருகிலுள்ள கெஜுரியில் நுழைந்தது. மூன்றுவருடங்களுக்குப் பின்பு இப்போது கெஜுரியில் யுத்தம் தொடர்ந்து நடக்கிறது.

நந்திகிராம் கெஜுரி பிரச்சனை வெறும் கண்ணுக்குப் புலப்படும் வன்முறை மட்டுமல்ல; இது கண்ணுக்குப் புலப்படாத இன்னொருவிதமான வன்முறையையும் கொண்டுவந்து, தற்போது அது உச்சத்தை அடைந்து விட்டது. நந்திகிராமுக்குப் பின் பல கலைஞர்கள் குழப்பத்திலிருந்தார்கள். கடந்த முப்பத்திநான்கு வருடங்களாக சிபிஎம் தனது தொழிலாளர் இயக்கங்களாலும் மக்கள் திரள் இயக்கங்களாலும் பண்பாட்டு அமைப்புகளாலும் கல்வி, கால்பந்து, கலைக்கூடங்களிலும் உள்ளாட்சி அமைப்புகளிலும் குடிமக்களின் தினசரி வாழ்க்கைமுறையிலுமான அனைத்து அம்சங்களிலும் தனது பாதிப்பை ஏற்படுத்தி ஊடுருவியிருந்தது. பரந்தளவிலான நடுத்தர மக்கள் திரளுக்கு சிபிஎம் சார்பு என்பது வாழ்வில் இன்றியமையாதது. ஆனால் திடுமென சிபிஎம்மை எதிர்த்து வெளிப்படையாகப் பேசிய இயக்குனர்கள் தமது காட்சிகள் ரத்துசெய்யப்பட்டதைக் கண்டார்கள். சிபிஎம்மை எதிர்த்துப் பேசியவர்கள் தங்களைக் காத்துக் கொள்ள தி.கா.வோடு கூட்டுச்சேரும் நிலை ஏற்பட்டது.

இதுபோன்று நடுநிலையான குடிமக்களுக்கான இடம் என்பது மேற்கு வங்கத்தின் அரசியல் யுத்தத்தால் மெல்ல மெல்ல குறுக்கப்பட்டது. உள்ளுர்வாசிகளின் குடிநீர் வாரியத்துக்கான போட்டி, சிங்கூரின் டாடா தொழிற்சாலை, பல்கலைக்கழகக்கல்வி, குடியுரிமை இயக்கங்கள் போன்ற அனைத்தும் மேற்கு வங்கத்தில் திடுமென சிவப்பு (சிபிஎம்) அல்லது பச்சைநிற (தி.கா) வர்ணமடிக்கப்பட்டன. எழுத்தாளர்கள், பொருளாதார வல்லுநர்கள், விளையாட்டு வீரர்கள், இசை விற்பன்னர்கள், அதிகார வர்க்கத்தினர், காவல்துறையினர் போன்ற அனைவரும் திடுமென ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் நிலைக்கு ஆட்பட்டனர். ஏதாவது ஒரு வர்ணம் அவர்களுக்கு பின்பற்ற வேண்டுமாகிப் போனது.

பலவழிகளில் மேற்குவங்கம், அதிகார போதையில் இருக்கும் ஒன்றுக்கும் - எது மாதிரியான அதிகாரம் வேண்டும் என்பது பற்றி உறுதியான எண்ணம் இல்லாத ஒன்றுக்குமான இடைப்பட்ட பகுதியில் தூக்கியெறியப்பட்டது. மேற்கு வங்கத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறதென்றால் யாரும் எதிர்த்திராத முப்பத்திநான்கு - ஆண்டுகால வலுவான அடித்தளத்தை பிடுங்குவதற்கான திடீர் மாற்றத்தோடு வந்த எழுச்சியாகும். இது தெளிவில்லாத கூட்டு அல்லது தனிநபர்களின் அரசியல் என்றும் தனிப்பட்டது என்றும் பிரிக்கமுடியாத யுத்தநிலையாகும்.

அதனால்தான் கொல்கத்தாவில் நடந்த தி.கா.வின் ஊர்வலங்களில் அமிரிடோ மற்றும் தபாஸ் சாகாவின் உடல்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன. அவர்கள் தி.கா.வின் உறுப்பினர்கள்தானா என்று உறுதியாகத் தெரியாவிட்டாலும், இறந்தபின்பு அவர்கள் தி.கா.வின் தீவிரமான ஆதரவாளர்கள் என்று உறுதியாக அறிவிக்கப்பட்டார்கள். அவர்கள் கொலை செய்யப்பட்டதற்கு மறுநாள் தெகல்கா அவர்கள் கிராமத்திற்குச் சென்றது. அங்கு தி.கா.வின் தலைகளின் வருகைக்காக அவர்கள் வீட்டிற்கு வெளியே அதிகாலையிலேயே பச்சைநிற கொடிகள் நடப்பட்டிருந்தன. சாகாவின் குடும்பம், அரசியல் சார்பு காரணமாகவே அவர்களது அண்டை வீட்டுக்காரரரும் சிபிஎம் ஆதரவாளருமான கைலாசால் கொல்லப்பட்டதாக தி.கா.வின் சொற்களையே அவர்கள் சகோதரர்கள் எதிரொலித்தார்கள். காங்கிரசு அச்சகோதரர்களை தமது ஆதரவாளர்களாக அறிவித்தது. அக்கிராமத்தில் வசிக்கும் மீனா பர்வீன், அச்சகோதரர்கள் கொலை செய்யப்படுவதற்கு ஒரு நாள் முன்பாக தனிப்பட்ட சொத்து தகராறில் சிபிஎம்மின் கைலாஸ் அவர்களை மிரட்டியதை, கேட்டதாகச் சொன்னார்.

      பிப்ரவரி ஏழாந்தேதி காலையில் லால்காரின் நேடாய் கிராமத்தில் இரண்டடுக்கு கட்டிடத்தின் மாடியில் இருந்து சிலபேர் சுட்டதில் எட்டு நிராயுதபாணி கிராமத்தினர் இறந்தனர். அந்தக் கட்டிடம் ஆறுமாதத்திற்கு முன்பு கிராமத்திலிருந்து வெளியேறிய, சிபிஎம் மண்டலத் தலைவர் ரடின் தண்டாபட்டின் வீடு. அந்த கட்டிடம் ஹர்மத் வாஹினி என்று அறியப்பட்ட முப்பது ஆயுதந்தாங்கிய உறுப்பினர்களைக் கொண்ட சிபிஎம்மின் முகாமாக பின்பு மாறிய‌து.

      அதன்பின்பு நேடாய் கிராமத்தினரின் வாழ்க்கை மாறிவிட்டது. “ஹர்மத் எங்களை சிபிஎம் ஊர்வலங்களில் கலந்து கொள்ளவும் உணவு சமைக்கவும் மாவோவியர்களிடமிருந்து முகாமைக் காக்க இரவுக்காவல் புரியவும் துப்பாக்கிமுனையில் மிரட்டுகிறது” என்று கிராமத்தினர் சொன்னார்கள். கிராமத்தினரின் பெயர்களும் அவர்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளுக்குமான பட்டியல் ஒன்றும் ஹர்மத் உறுப்பினர்களால் பராமரிக்கப்படுவ‌தாக‌வும் கூறினார்க‌ள்.

      சம்பவம் நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக சிபிஎம்மின் ஹர்மத் உறுப்பினர்கள் புதிதாக ஒன்றை அறிவித்தார்கள் - அனைத்து வீட்டிலிருந்தும் ஆண்களை ஆயுதப்பயிற்சிக்கு அனுப்பவேண்டும் என்பதுதான் அது. “உங்களைப் பாதுகாக்க எங்களால் எப்போதும் இங்கே இருக்கமுடியாது. மாவோவியர்களிடமிருந்து நீங்களே உங்களை பாதுகாத்துக் கொள்ளவேண்டும். உங்கள் கிராமத்தை நீங்கள் பாதுகாக்க நாங்கள் உங்களை தயார்படுத்துகிறோம்” என்று அவர்கள் அறிவித்தார்கள். ஜனவரி ஆறாம்தேதி கால்பந்தாட்ட மைதானத்தில் கூடுமாறு கிராமத்தினர் அறிவிக்கப்பட்டார்கள். கூடிய 500 பேரில் உடல் தகுதியளவில் 62 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

      “அவர்கள் எங்களை அமரச்சொல்லி, கைகளில் லத்திக்கம்புகளை வைத்துக்கொண்டு தரையில் குதிக்கச்சொன்னார்கள்” என்று பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ஒருவரான சுப்ரடோ பால் கூறினார். “நான் அப்போதுதான் மதிய உணவு சாப்பிட்டேன். என்னால் அந்தப் பயிற்சியைச் செய்யமுடியவில்லை. அவர்கள் என்னை அடித்தார்கள். நீங்கள் இதைச் செய்யவில்லையென்றால் உங்கள் அத்தனை பேரையும் சுட்டு பத்து சக்கர லாரியில் ஏத்தி அனுப்பிவிடுவோம் என்று அவர்கள் எங்களிடம் சொன்னார்கள்."

      ஏழாந்தேதி காலை ரஞ்சித் பேட்ரோவின் குடிசைக்கு இரண்டுபேர் துப்பாக்கியோடு வந்தார்கள். அவரின் மகன் அரூப் பேட்ரோ முந்தையநாள் கட்டாயப் பயிற்சி வகுப்பிற்கு செல்லவில்லை. “நீ உன் மகன்களை ஆயுதப் பயிற்சிக்கு இன்று மதியம் மூன்றுமணிக்கு அனுப்பவில்லையெனில் நாங்கள் எல்லா வீடுகளையும் எரித்து விடுவோம்” என்று அவர்கள் சொன்னார்கள். காலையில் அனைத்து கிராமத்தினர்களும் ஒன்றுகூடி இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க முடிவு செய்தார்கள். சிபிஎம்மின் அலுவலகத்திற்கு வெளியே ஆயிரத்திற்கும் அதிகமான கிராமத்தினர் கூடினார்கள்.

      உள்ளுர் சிபிஎம் தலைவரான அபானி சிங் வெளியில் வந்து அய்ந்துபேர் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்தார். அந்த அய்ந்துபேரில் கிராமத்தில் வயதில் மூத்தவரான கிருஷ்ணகோபால் ராயும் ஒருவர். "நாங்கள் ஆயுதம் எடுக்க விரும்பாத சாதாரண கிராமத்தினர், நாங்கள் அமைதியாக வாழவிரும்புகிறோம்" என்று ராய் சொன்னார். சிங் மாடியின் மேலிருந்த மற்ற சிபிஎம் தொண்டர்களுக்கு சைகை காட்டிவிட்டு, 'இந்த விடயத்தைப் பற்றி அவரின் தலைவர்களிடம் பேசுவதாக' ராயிடம் சொன்னார்.

      அப்போது சிபிஎம்மின் இன்னொரு குழு வானத்தை நோக்கிச் சுட்டுக்கொண்டே கிராமத்தை நோக்கி வருவதை ராய் கண்டார். அவர்கள் ஹர்மத் முகாமிலிருந்து அனுப்பப்பட்ட கூடுதல் படையாகும் என்று அவர் சொன்னார். “அவர்கள் வந்தவுடன் மாடியில் இருந்தவர்களும் சுட ஆரம்பித்தார்கள்”. ராய் கூறுவது, 'இந்தச் சம்பவம் மாவோவியர்களின் எதிர்வினையாக இருக்கலாம்' என்று காவல்துறை சொல்வதற்கு மாறானதாக‌ இருக்கிறது. இரண்டு திசைகளிலிருந்து வந்த துப்பாக்கிச்சூடு சிபிஎம்மிடமிருந்து வந்ததாகவே ராயின் கூற்று காட்டுகிறது.

      “திடுமென எனக்கு அடுத்திருந்த பெண் செத்து விழுந்தார். நாங்கள் எல்லோரும் ஓடினோம்” என்று சொல்கிறார் கொலாமி பால். புல்குமாரி மைதி அவரது பன்னிரெண்டு வயது மகன் கிருஷ்ணாவைக் காக்க ஓடினார். அவர் இரண்டுமுறை குண்டடிபட்டு, பின்பு இறந்தபோது தனது மகனைப் பிடித்திருந்தார். குண்டுகள் மழையாகப் பொழிந்தபோது திரென் சென் தப்பி ஓட முயற்சித்தார். அவரது உறவினர் லத்திகாசென் அவரை வீட்டிற்குள் தள்ளினார். “ஆனால் அவர் வீட்டிற்கு வெளியே இழுத்துவரப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்” என்று லத்திகா சொன்னார்.

      தெகல்கா அந்தக் கொலைகள் நடந்து இருபது மணிநேரத்திற்குப் பின்பு நேடாய் சென்றபோது ரத்தக்கறைகளும் குண்டுதுளைத்த ஓட்டைகளும் அப்படியே கண்ணுக்குப் புலப்பட்டன. சரசுவதி கோராயின் தலைமோதி உடைந்த சுவரில் கொஞ்சம் சதைத்துணுக்குகளும் முடிக்கற்றைகளும் அப்படியே இருந்தன. கிராமத்தவர்கள் சுட்டிக்காட்டிய ஒன்று மூளையின் ஒரு துண்டு. எதுவும் அங்கே பாதுகாக்கப்படவோ அல்லது யாரும் செல்ல இயலாத வண்ணம் தடுக்கப்படவோயில்லை. சில மணிநேரங்களுக்குப் பின்னர் தி.கா.வின் தலைவி மம்தா பானர்ஜி நேடாய் கிராமத்திற்கு வந்தபோது கிராமத்தவர்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டு எந்த யோசனையோ நினைவோயில்லாமல் சாட்சியங்களின்மீது ஏறிநின்று அழித்து, தமது சொந்த மக்களின் காய்ந்த ரத்தக்கறையின் மீது அமர்ந்துகொண்டார்கள்.

      தமது உரையில் மம்தா பானர்ஜி இச்சம்பவத்தை நந்திகிராமோடு- மே 2007ல் காவல்துறை சுட்டதில் 14 கிராமத்தவர்கள் கொல்லப்பட்டதை ஒப்பிட்டுப் பேசினார். “இதுவும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்றுதான். எனவேதான் நீங்கள் மீண்டும் மீண்டும் அழைத்தும் காவல்துறை வரவேயில்லை” என்று அவர் சொன்னார். “நாங்கள் அமைதிப்படையினர் (சாந்தி வாகனி). நாங்கள் காயமடைந்தவர்களை கவனித்துக் கொள்கிறோம். நாங்கள் இறந்தவர்களை அடக்கம் செய்ய தயார்படுத்துகிறோம்” என்று அவர் சொன்னார். கிராமத்தினர் மீண்டுமொருமுறை தாக்குப்படுவோமென அஞ்சுவதாகக் கூறினார்கள். “அவர்கள் ஊர்வலம் சென்றால் நீங்களும் ஊர்வலம் செல்லுங்கள்; நீங்கள் பயந்தால் அந்த ஹர்மர்த்தை வெல்லமுடியாது. மக்களின் தியாகம் வீணடிக்கப்பட்டுவிடும். நீங்கள் ஒற்றுமையாகயிருக்க வேண்டும். நாங்கள் உங்களோடு இருக்கிறோம்” என்று மம்தா பானர்ஜி சொன்னார்.

நேடாய் சமீபத்திய சம்பவம்தான். சிபிஎம் இழந்து கொண்டிருக்கும் தனது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக தன்னிலை இழந்து தனக்குத் தானே மோச‌மான‌ எதிரியாக‌ மாறிக் கொண்டிருக்கிற‌து.

      இந்த நேடாய் கொலைகள் மூலம் சிபிஎம் தமது ஊழியர்களை ஆயுதபாணியாக்கியிருப்பதும், சல்வாஜுடும் பாணியில் ஹர்மத் படைகள் மேற்குவங்கத்தில் ஆளும் கட்சியால் தயார்படுத்தப்பட்டிருப்பதும் உறுதியாகியிருக்கிறது. சுயமாக உருவானதாகவும், மாவோவியர்களுக்கு எதிரான அமைதியான எதிர்ப்பாகவும் அரசாங்கத்தால் சொல்லப்பட்ட - அரசு உருவாக்கிய - சல்வா ஜுடும், சட்டீஸ்கரில் 60000 மக்கள் இடமாற்றம் செய்யப்பட்டதற்கும் 644 கிராமங்கள் எரிக்கப்பட்டதற்கும் காரணமாக‌ இருந்த‌தை நினைவு கொள்ள‌ வேண்டும்.

      ஆகஸ்ட் 2010 மேற்கு மிட்னாபூரில் ஹர்மத் முகாம்கள் அமைக்கப்படுவது குறித்து தெகல்காதான் முதலில் செய்தி வெளியிட்டது. இந்திய உளவுத்துறையின் ஆவணங்களைப் பெற்ற தெகல்கா, சிபிஎம்மின் முகாம்களின் பட்டியலை வெளியிட்டது. பள்ளிகளிலும், கட்சி அலுவலகங்களிலும், பஞ்சாயத்து அலுவலகங்களிலும் ஏகே 47 துப்பாக்கிகளும் கையெறி குண்டுகளும் நிரப்பப்பட்டிருப்பதை ஆதாரத்துடன் வெளியிட்டது.

      “மக்கள் மாவோவியர்களால் விரக்தியடைந்துவிட்டார்கள். மக்கள் எம்மோடு இருக்கிறார்கள். மாவோவியர்களை கொள்கைரீதியாகவும் மக்களை திரட்டுவதன் மூலமாகவும் முறியடிக்க வேண்டும் என்று நாங்கள் முடிவுசெய்தோம். நாங்கள் மக்களிடம் சென்று மாவோவியர்களுக்கு எதிராக பரப்புரை செய்தால் மக்கள் அவர்களுக்கு எதிராக தமது குரலை உயர்த்துவார்கள். நாங்கள் மக்களை கிராமங்களில் தினசரி ஊர்வலங்களின் மூலம் அணிதிரட்டுகிறோம்” என்று தெகல்காவிடம் அப்போது சிபிஎம் கட்சியினர் கூறினார்கள். ஆனால் இந்த அணிதிரட்டல் முன்பும் இப்போதும் துப்பாக்கிமுனையிலேயே நடைபெறுகிறது. சிபிஎம் எப்படி கிராமங்களை திரும்பக் கைப்பற்றியது என்பதையும் எப்படி நூற்றுக்கணக்கான மக்களை தங்களுக்கு விசுவாசமானவர்கள் என்று அறிவிக்கச் செய்தது என்பதையும் தெகல்கா வெளிப்படுத்தியது. சரணடையுங்கள் அல்லது பின்விளைவுகளை எதிர்கொள்ளுங்கள் என்று அவர்கள் சொல்லப்பட்டார்கள். மேற்கு மிட்னாபூரில் 'சல்வாஜுடும் மாதிரி' பின்பற்றப்படுவதற்கும் பணயக்கைதிகளையும் அகதிகளையும் உருவாக்குவதற்கும் மேற்கு வங்கத்தை உள்நாட்டு யுத்தத்தை நோக்கி கொண்டுசெல்வதற்கும் இதுவே முதல் அறிகுறி.

      இதை தெகல்கா வெளிப்படுத்தியவுடன் மம்தா இந்த விடயத்தை பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் பார்வைக்கு கொண்டுசென்றார்.  பின்பு சிதம்பரம் மேற்கு வங்க முதலமைச்சரிடம் சிபிஎம்மின் ஆயுத முகாம்கள் பற்றி கேள்வி எழுப்பினார். சிபிஎம் இக்குற்றச்சாட்டுகளை மறுத்தது.

      செப்டம்பர் மாதவாக்கில் சிபிஎம் தமது முகாம்களை மாநிலம் முழுவதும் விரிவாக்கியது தெளிவாகத் தெரிந்தது. ஒரு வாரத்தில் நடந்த 25 படுகொலைகளையும் சிபிஎம்மால் லால்கார் மீண்டும் கைப்பற்றப்பட்டதையும் தெகல்கா வெளியிட்டது. பலநாட்களுக்குப் பின்னர் சிபிஎம் லால்காருக்குத் திரும்பியது; மேலும் பல கைப்பற்றுதல்கள் அருகில் இருப்பதுபோல் அப்போதே தோன்றிய‌து.

      இது ஜனவரி 2011. இப்போது மேலும் பல கிராமங்கள், கோழிப்பண்ணைகளில் வாழும் அகதிகள், இறந்த மகன்களுக்காக ஒப்பாரி வைக்கும் தாய்மார்கள். புர்த்துவான் கிராமத்தில் விளக்கை சுற்றி அமர்ந்து கொண்டு இறந்துபோன ஒருவரின் குடும்பத்தவர்கள் மெல்ல முணுமுணுத்தார்கள், “நாங்கள் சிபிஎம் கட்சியின் அரச நீதியிலிருந்து தப்பிக்க முடியாது” (பின்னிணைப்பில் திலீப்கோஷ் காணவும்). உள்நாட்டு யுத்தம் வந்ததைப்போல அவர்கள் புலம்பினார்கள்.

சிபிஎம்வின் மத்திய மற்றும் மாநிலக்குழு உறுப்பினரான முகமது சலீமிடம் பேசியபோது, “ஆம் பிரச்சனைக்குரிய பகுதிகள் உள்ளன. ஆனால் இப்போது கொலைகள் அடிக்கடி நடப்பது குறைந்துவிட்டது. 2008 பஞ்சாயத்து தேர்தலுக்குப் பின்பும், 2009 பொதுத்தேர்தலுக்குப் பின்பும் பல கொலைகள் நடந்தன” என்று அவர் சொன்னார்.

      அவர் வெளிப்படையாக தி.கா.வின் மீது பழியைப் போடுகிறார். “மக்கள் நீ கொலை செய்தால் உங்களை ஆதரிக்கமாட்டேன் என்று சொல்லவேண்டும். அதைத்தான் நாங்கள் கடந்த மூன்று வருடங்களாக பரப்புரை செய்து வருகிறோம். பேச்சுவார்த்தைக்கும் விவாதத்துக்குமான ஒரு சனநாயகச்சூழல் வேண்டும். ஆனால் தி.கா. எங்களோடு கலந்துரையாடாத, ஒரு பொது மேடையைக்கூட எங்களோடு பகிர்ந்து கொள்ளாத சூழலை உருவாக்கிவிட்டது. இந்த மனப்பான்மை சகிப்புத்தன்மையற்ற வன்முறையான சூழலை உருவாக்குகிறது” என்று கூறினார்.

      மேற்கு வங்கத்தில் நிலச்சீர்திருத்தத் துறையின் முன்னாள் அதிகாரியாகப் பணியாற்றியவரும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான பண்ட்யோபாத்யாயாவின் புள்ளிவிவரப்படி, 1977க்கும் 2010க்கும் இடைப்பட்ட காலத்தில் மேற்கு வங்கத்தில் 55408 அரசியல் கொலைகள் நடைபெற்றுள்ளன.

      குடியுரிமை பாதுகாப்பு ஒருங்கமைப்பின் சுஜாதா பாட்ரோவைப் பொறுத்தவரையில், சிபிஎம் தனது ஊழியர்கள் 2500 பேரை இழந்திருக்கிறது; அதேவேளையில் 10000 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவர்களால் கொல்லப்பட்டுள்ளார்கள்.

“ஒரு வருடம் முன்புவரை திருட்டு என்றால் என்னவென்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் இப்போது எங்கள் கிராமத்தில் ஒவ்வொது இரவும் ஒரு திருட்டு நடக்கிறது. முகமூடியணிந்த மனிதர்கள் துப்பாக்கிகளோடு குடிசைக்குள் நுழைந்து அலமாரியை உடைத்துத் திறந்து என்ன வேண்டுமென்றாலும் எடுத்துச் செல்கிறார்கள்” என்று லால்காருக்கு அருகிலுள்ள பாபட்புர் கிராமத்தைச் சேர்ந்த தீபக் ராய் கூறினார். இவர் உணவுமேலாண்மைப் படிப்பு முடித்து வேலை கிடைக்காமல் கிராமத்திற்கே திரும்பி வந்த மாணவர்.

“அரசியலில் இருக்கவேண்டும் என்று நாங்கள் எப்போதும் விரும்பியதில்லை. ஆனால் இங்கு முதல் தகவல் அறிக்கையை பதிய வேண்டுமென்றாலும் ஓர் சிபிஎம்மின் தலைவர் பேரைச் சொல்ல வேண்டியிருக்கிறது. சிபிஎம்மை எதிர்ப்பதற்காக‌ நானும் அரசியலில் இணைந்தேன். கடவுளால் எங்களைக் காப்பாற்ற முடியாது. எனவே நான் திரிணமுல் காங்கிரசில் இணைந்தேன்” என்று சொன்னார் ராய்.

சிவப்போ பச்சையோ ஏதேனும் ஒரு கொடியை நீங்கள் வீட்டிற்கு வெளியே வைத்திருக்க வேண்டும். இதுதான் மேற்கு வ‌ங்க‌த்தின் இன்றைய‌ நிலை.  

பாதிப்புக்குள்ளானவர்களின் வாக்குமூலங்கள்

1.  "எனக்கு வயது பதினாறுதான். என் வாழ்க்கையை சிதைத்துவிடாதீர்கள் என்று கதறினேன்."

- சபானா காடுன், வயது 16, மாணவி, காமார்நௌபாட்

      shabanaசபானா கௌடுன், ஹர்மத்துக்கு அடைக்கலமளிக்கும் காமர் நௌபாட்டின் கிராமத்தில் வசிக்கிறார். சபானாவுக்கு பதினாறு வயதுதான் ஆகிறது. அவர் 2010ல்தான் பள்ளித் தேர்வை முடித்திருக்கிறார். காங்கிரசு தொண்டரான அவரின் தந்தை நூர் அலி, சபானா குழந்தையாகயிருக்கும்போது கொல்லப்பட்டார். அவரின் மூத்த சகோதரர் சடேக் அலி தி.கா.வின் ஆதரவாளர். அவரும் எந்தநேரமும் கொல்லப்படலாம் என்று சபானா சொல்கிறார்.

      பெருநாளுக்கு சிலநாட்களுக்குப் பின்னர் சபானா வீட்டில் தனியேயிருந்தபோது ஆயுதந்தாங்கிய ஏழு அல்லது எட்டு சிபிஎம் ஊழியர்கள் அவர‌து அறைக்கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தனர். அவரின் அண்ணன் எங்கே என்று விசாரித்தனர். அவர் தெரியாது என்று சொன்னவுடன் அவரை கட்டிலில் சேர்த்துக் கட்டிவைத்தனர்; அத்துமீறி நடந்தனர். அவர், 'எனக்கு 16 வயதுதான் ஆகிறது. என் வாழ்க்கையை சிதைத்து விடாதீர்கள்' என்று கெஞ்சினார். அவர்களிடம் அது எடுபடவில்லை. அவர்கள் அவரிடம், உன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி பின்பு கொன்று வீட்டிற்கு வெளியே குழிதோண்டி புதைக்கப்போவதாக கூறினர். 'சிங்கூர் தபசி மாலிக்குக்கு நேர்ந்த கதி உனக்குத் தெரியுமல்லவா' என்றும் மிரட்டினர். பின்பு அவர்கள் வெளியே அமர்ந்து தண்ணியடித்துக்கொண்டு இரவில் என்னவெல்லாம் செய்வது என்பது பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது அந்தக் கும்பலில், சபானாவை சிறுவயதில் இருந்தே அறிந்த ஒருவன் உள்ளே நுழைந்து இவரின் கட்டுக்களை அவிழ்த்துவிட்டு தப்பி ஓடிவிடுமாறு கூறினான். இவரும் சமையலறை ஜன்னல் வழியே தப்பிச்சென்றார்.

      சாசன் என்னும் இடத்திலுள்ள சிபிஎம்மின் மஜீத் மாஸ்டருக்கு முப்பது வருடங்களாக 40000 பிக்கா (3 பிக்கா = 1 ஏக்கர்) மீன்குளங்கள் சொந்தமாக உள்ளன. அந்தக் குளங்கள் ஒரு பிக்கா ரூ 10000 வீதம் குத்தகைக்கு விடப்படுகின்றன. மஜீத் ஒரு அரசாங்க பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக இருந்துகொண்டு சாசன் பகுதியில் ஒன்பது கட்சி அலுவலகங்களைக் கட்டியுள்ளார். அதுபோக அவர் சொந்தமாக ஒரு படையையும் வைத்துள்ளார். பன்னிரெண்டு கிராமங்கள் கொண்ட ஒட்டுமொத்த சாசன் பஞ்சாயத்தும் அவருக்கு அஞ்சுகிறது. இப்போது அடிக்கடி செய்திகளில் அடிபடும் ஹர்மத் முகாம்கள் பல பத்தாண்டுகளாக இப்பகுதியில் மஜீத் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றன.

      2009 தேர்தலின் மோசமான முடிவுகளுக்குப்பிறகு மஜீத் தனது வீட்டை விட்டு வெளியேறி பராசத்திலும் மத்யம்கிராம்மிலும் வசித்துவருவதாக நம்பப்படுகிறது. ஆனாலும் அவரின் மனைவி அவர் விட்டுச்சென்ற பணியைத் தொடர்கிறார். போனமுறை துக்டியா பால்டாடங்கா பள்ளிக்குழு தேர்தலின்போது ஹர்மத் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அவர் முன்னணியில் இருந்து செய‌ல்ப‌ட்டார்.

      டெகட்டா கிராமம் பாரம்பரியமாக காங்கிரசின் வலுமிகுந்த பகுதியாகும். எனவே அது இடது ஆட்சியின்போது மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் என்பது வெளிப்படை. பெரும்பாலான ஆண்கள் இடது முன்னணி 1977ல் ஆட்சிக்கு வந்ததும் இக்கிராமத்திலிருந்து ஓடிவிட்டார்கள். அவர்கள் 2009 தேர்தல்களில் வட 24-பார்க்னாஸ் மாவட்டத்தில் தி.கா. வென்றதும்தான் திரும்பி வந்தனர். "என் மகன் நான் கிராமத்தைவிட்டு விரட்டியடிக்கப்பட்டபோது சிகிச்சையின்றி இறந்துபோனான். திரும்பி வந்தால் கொல்லப்படுவேன் என்பதால் என் இறந்த மகனைக்கூட நான் பார்க்கவரவில்லை" என்று சொல்லி அழுதார் இமாம் அலி முல்லா. இந்த 52 வயதுக்காரர் 22 வருடங்கள் கழித்தே தனது கிராமத்திற்கு வந்து தனது வீட்டில் குடியிருக்கிறார். ஆனாலும் அவரது மற்ற‌ மகன்கள் திரும்ப வர மறுத்துவிட்டனர். சகிதுல் ஹக் மொல்லா டெகட்டாவிலிருந்து 23 வருடங்களுக்கு முன்பு ஓடிப்போனார். அவருக்கு இப்போது வயது 55.

      தினமும் மாலைப்பொழுதுகளில் ஒட்டுமொத்த கிராமத்திலும் ஆயுதந்தாங்கிய காவல்பணி நடக்கிறது. பன்னிரெண்டு வயது சிறுவனுக்குகூட துப்பாக்கியையும் வெடிகுண்டுகளையும் கையாளத் தெரிகிறது. அனைத்து அரசியல்கட்சிகளாலும் இந்த தயாரிப்பு வேலைகளுக்கு “தன்னிச்சையான மற்றும் சனநாயகரீதியான மக்கள் எதிர்ப்பு” என்று அதிகாரப்பூர்வ பெயரளிக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் இது எந்தநேரமும் உண்மையான யுத்தமாகக்கூடிய நிழல் யுத்தமாகும்.

2. "நான் தீவிரமான காங்கிரசு ஊழியராக இருந்ததற்காக பழிவாங்கப்பட்டேன்."

சுசந்தா மோண்டல், வயது 41, விவசாயத் தொழிலாளி, டெக்காரியா

டெக்காரியா கிராமத்தைச் சார்ந்த சுசந்தா மோண்டல் 1990களில் ஒரு காங்கிரசு ஊழியர். இவர் பக்டி என்ற‌ படைவீரர் சாதியைச் சார்ந்தவர். இந்த சாதி குற்றப்பரம்பரையாக கருதப்பட்ட‌ சாதியாகும். இவர் ஒரு நிலமற்ற விவசாயி. மற்றவர்களின் நிலங்களை உழுவதன்மூலமும் சிலநேரங்களில் பெரிய மீன்பிடிகுளங்களில் வேலைபார்ப்பதன் மூலமும் வயிற்றை நிரப்பிவந்தார். இந்த காங்கிரசின் தீவிர ஊழியர், சாசன் மற்றும் பராசட் பகுதியை பயமுறுத்தும் ஆளும் சிபிஎம்விற்கு கண்உறுத்தலாக இருந்தார். எனவே அவர் மூன்று கிராம் கஞ்சா கடத்தியதாக நெல்வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது காவல்துறையால் 2000ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். மூன்றுநாட்களுக்கு அவர் எங்கேயிருக்கிறார் என்பதே யாருக்கும் தெரியவில்லை.

susanta“என்னை அவர்கள் காவல்நிலைய சிறையில் அடைக்கவில்லை. நான் ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டேன். அவர்கள் எனக்கு மின்அதிர்ச்சி கொடுத்தார்கள். சூடாக்கப்பட்ட இரும்புக்கம்பியால் என்னை அடித்தார்கள். எனக்கு உடம்பு முழுவதும் வீங்கிவிட்டது; கையும் உடைந்துவிட்டது. நினைவின்றி நான் அரைப்பிணமாகக் கிடந்தேன்” என்று அவர் நினைவுகூர்கிறார். அவரின் அரசியல் அடையாளமே அவரை இந்த நிலைக்கு இழுத்துச்சென்றது. ஆனால் அதே அரசியல் அடையாளமே அவரை இந்த நிலையிலிருந்தும் காப்பாற்றியது. “தற்போது தி.கா.வின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ஜோதிப்பிரியா முல்லிக்கே என்னை இதிலிருந்து விடுவித்தார். இல்லையெனில் நான் இறந்திருப்பேன்" என்று அவர் கூறுகிறார். ஆனாலும் அவர் கஞ்சா கடத்தல் வழக்கில் த‌ண்ட‌னை விதிக்கப்பட்டு சிறையில் இருக்க வேண்டி வந்தது.

      சுசந்தாவின் அம்மா மாமோனி, சுசந்தா சிறையில் இருந்த நாட்களில் குடும்பத்தின் நிலையை எண்ணி தேம்பித்தேம்பி அழுகிறார். சுசந்தா கைதுசெய்யப்பட்ட சிலமாதங்களுக்குப் பின்பு அவரது தந்தை கொல்லப்பட்டார். சுசந்தாவின் அம்மா, மனைவி மற்றும் அவரின் மகள் அனைவரும் சுசந்தாவின் சகோதரி லட்சுமி வீட்டிற்கு சென்று வசித்தனர். லட்சுமி வீட்டின் சமையற்கூடமே இந்த மூன்று பெண்களுக்கும் பத்து வருடங்கள் அடைக்கலம் தரும் இடமாகிப் போனது.

“நாங்கள் யாரையும் நம்பப் போவதில்லை” என்று சொல்கிறார், தனது கணவன் விசாரிக்கப்பட்டதை கண்கூடாகக் கண்டு மனம் நொந்த அவரது மனைவி ரேகா. கடந்துபோன அந்த பத்து வருடங்களின் நினைவுகள் அவரை பேயாகக் கொல்கின்றன. “நான் மத்யம்கிராம், பிராடி மற்றும் சால்ட்லேக்கில் வீட்டு எடுபிடியாக வேலை பார்த்தேன். என் வாழ்க்கை எல்லா மரியாதையையும் இழந்த நாட்கள் அவை. ஆனாலும் எனக்கு வேறு வழி தெரியவில்லை. எனது மகள் மிகவும் சின்னப் பொண்ணாகயிருந்தாள். அவள் வாழ்ந்தேயாக வேண்டும்”. பெயரைச்சொல்ல மறுத்த அவரின் பதினாறு வயதுப்பெண் தானாக முன்வந்து “நானும் பள்ளிப்படிப்பை விட்டுவிட்டு வீடுகளில் எடுபிடியாக வேலை பார்த்தேன்” என்று கூறினார்.

      சுசந்தா இப்போது சிறையைவிட்டு வெளியே வந்திருந்தாலும் இன்னும் சிபிஎம்மாலும் காவல்துறையாலும் இரண்டாம்முறையும் வேட்டையாடப்படுவோம் என்று அஞ்சுகிறார். இவரால் இப்போது நடக்கமட்டுமே முடியும். மற்ற எந்த வேலையும் செய்யமுடியாது. தி.கா.வின் சட்டமன்ற உறுப்பினரான ஜோதிப்பிரியா முல்லிக், “எங்களுக்கு அவர் எவ்வாறு பலிகடா ஆக்கப்பட்டார் என்பதும் அவர் குடும்பம் எந்த நிலையில் உள்ளது என்பதும் தெரியும். அவர்களுக்கு நாங்கள் ஏதாவது செய்வோம்” என்கிறார். இந்த உறுதிமொழியே சுசந்தாவையும் அவரின் பாதிக்கப்பட்ட குடும்பத்தையும் தாங்கிப் பிடிக்கிறது.

3.   " அவர்கள் அவரின் கைகளையும் மர்ம உறுப்புகளையும் வெட்டி எறிந்தார்கள்."

யுதிஸ்டிர், வயது 45, தி.கா.வின் மண்டலத்தலைவர், ஜான்கிரி கிராமம்

இந்த 14 வயதிலேயே அசிம் தோலாவிற்கு உறுதியான‌தொரு அரசியல் நோக்கம் இருக்கிற‌து. அது 'சிபிஎம்மை இந்த நாட்டைவிட்டு துடைத்து எறிவது' என்பதுதான். அவர் தனது தந்தை துண்டுதுண்டாக வெட்டிக்கொல்லப்பட்டதை தன் கண்களால் கண்டார்.

yadhistirஅது 2009 பொதுத்தேர்தலுக்குபின்பு ஒரு மாதம் கழித்து நடந்தது. தோலாய் குடும்பம் இரண்டு அறை மட்டுமே இருக்கும் மண் மற்றும் செங்கலான குடிசைவீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது சுமார் 100 சிபிஎம் தொண்டர்கள் மண்ணெண்ணெய்யை அவர்கள் வீட்டின்மீது ஊற்றி அதை தீயிட்டு எரித்தனர். “இதற்குப் பெயர்தான் அரசியலா?” என்று கேட்டார் யுதிஸ்டிர் தோலாய். அவர் குடும்பம் ஒன்றும் செய்ய இயலாமல் தவித்துக்கொண்டிருந்தபோது அவர் சுற்றிவளைக்கப்பட்டு தாக்கப்பட்டார்.

அவர்கள் அவர் கைகளை துணுக்காக வெட்டினார்கள். பின்பு அவர் கழுத்தையும் மர்ம உறுப்புகளையும் வெட்டி எறிந்தார்கள் என்று நடந்ததை நினைவுகூர்கிறார் அவரின் சகோதரர் தபான். அவரின் 70 வயது அம்மா அவரைக் காப்பாற்ற முயற்சித்தபோது அவர் தூக்கி எறியப்பட்டார். அவர் இப்போதும் “அய்யோ என் மகனே நீ எங்கே போனே” என்று கதறி அழுகிறார். யுதிஸ்டிரின் குடும்பத்தில் ஒருவருக்கு தொடர்வண்டித்துறையில் வேலை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கையில் 36 நபர்களின் பெயர்களை அவர் குடும்ப உறுப்பினர்கள் அளித்திருந்தார்கள். ஆனால் காவல்துறை ஏழுபேரை மட்டும் கைது செய்தது. அவர்களும் மூன்று மாதங்களுக்கு முன்பு பிணையில் விடுவிக்கப்பட்டார்கள்.

பத்தாண்டுகளுக்கு முன்பு யுதிஸ்டிர் சிபிஎம்மின் ஊழியர். தி.கா. ஆரம்பிக்கப்பட்டவுடன் மற்ற சில‌ர் போலவே அவரும் தனது விசுவாசத்தை அதற்கு மாற்றிக்கொண்டார். 2001 சட்டசபை தேர்தலுக்கு முன்பு அவர் வீடு சூறையாடப்பட்டது. “நாங்கள் யாரும் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை. எனவே இயல்பாகவே சிபிஎம் வென்றது” என்று நினைவுகூர்கிறார் தபன்.

தீவிரமான தி.கா. ஊழியராக இருந்து யுதிஸ்டிர் 2001ல் தப்பி ஓடவேண்டியதாகிப் போனது. அவர் ஆறு வருடங்களுக்கு வெளியே இருந்துவிட்டு 2006ல்தான் வீடு திரும்பும் துணிச்சலையே பெற்றார். ஆனாலும் அவரால் தமது குடும்பத்தோடு வெறும் மூன்று வருடங்களே வசிக்கமுடிந்ததது. அவர் கொலை செய்யப்பட்டதற்கு சில நாட்களுக்குப்பிறகு காவல் அரண்களுக்கு வெறும் ஒரு கிலோமீட்டர் தொலைவிலேயே ஒரு உள்ளுர் தொடக்கப்பள்ளியில் ஹர்மத் முகாம் அமைக்கப்பட்டது. ஜான்கிரி கிராமத்தில் அந்தக் கொலைக்கு மூன்று மாதங்களுக்குப் பிறகு இருபது வீடுகள் கொள்ளையடிக்கப்பட்டன. கடந்த வாரம் பல வீடுகள் உடைக்கப்பட்டு, சூறையாடப்பட்டன. மிஞ்சியிருந்த தி.கா. கொடிகளும் கிழித்தெறியப்பட்டன. "காவல்துறை ஆற்றுக்கு அந்தப்புற‌த்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தது. 'சிபிஎம்மின் கொடியைத் தொட்டீர்கள் என்றால் உங்கள் வீடுகளைக் கொளுத்திவிடுவோம்' என சிபிஎம் தொண்டர்கள் மிரட்டினார்கள்" என்று சொல்கிறார் தபான்.

      ஹூக்ளி மாவட்டத்தின் ஆரம்பாக் தொகுதியில் யுதிஸ்டிரின் படுகொலையே பின்தொடர்ந்த பல படுகொலைகளுக்கு முன்பு நடந்த முதல் கொலையாகும். அதன்பின்பு தி.கா. சொல்வதுபோல் அரசியல் வன்முறையில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

கோல்டிகிரி கிராமத்திற்கு அருகில் வசித்துவரும் முகமது ஒரு பிஸ்கட் தொழிற்சாலையில் வேலைபார்த்து வருகிறார். அதுவரை அரசியல் சாராதவராகயிருந்த அவர், ஒரு மாதத்திற்குமுன்புதான் தி.கா.வின் கூட்டங்களுக்குச் செல்ல ஆரம்பித்தார். அச்சமயங்களில்தான் சிபிஎம்மும் தனது கொடிஊர்வலங்களை கிராமத்தில் ஆரம்பித்திருந்தது. டிசம்பர் 4 அன்று அவர் தனது குடிசையை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தபோது அவரை யாரோ பெயர் சொல்லி அழைத்தார்கள். "அவர்கள் அவரை சுட்டார்கள். அவர் நெஞ்சில் குண்டு துளைத்தது" என்று சொல்கிறார் அவரது மனைவி பேகம். அதிலிருந்து பேகத்தால உணவுகூட சரியாக உண்ண முடியவில்லை. அவரின் மகன்கள் கடைகளில் வேலைபார்க்கிறார்கள். அவர்களுக்கு அரசியலோடு எந்த சம்பந்தமும் இல்லை ஆனாலும் அவர்கள் குழப்பத்திலிருக்கிறார்கள். தி.கா.வில் இணைவதா அல்லது அதை ஆதரிப்பதா? அல்லது பேசாமல் சும்மாயிருப்பதா?

அதேநேரத்தில் சிபிஎம் தொண்டர்கள் கிராமங்களுக்கு ஊர்வலம் செல்கிறார்கள், சில சமயங்களில் வீடுகளையும் கடைகளையும் அடித்து நொறுக்குகிறார்கள். நெற்வயல்களை தீயிட்டு கொளுத்துகிறார்கள். இரவில் துப்பாக்கியால் சுடும் ஓசை கேட்கிறது. “என்னால் உறங்கமுடியவில்லை. அவர்கள் திரும்பவந்து வீட்டைக் கொளுத்தினால் என்ன செய்வது?" என்று கேட்கிறார் பேக‌ம்.

4. "அவர்கள் அவனை மாடியில் இருந்து தூக்கி எறிந்தார்கள். அவன் உணர்வின்றி கீழே கிடந்தான்."

சுவபன் கோலே, 21, மாணவர் தலைவர், ஹவுரா மாவட்டம்.

மேற்குவங்கத்தின் அந்த 21 வயது மாணவனுக்கு தெரிந்திருக்காது தனக்கு அரசியலில் ஆர்வம் வந்த ஒரு வருடத்திலேயே தாம் கொல்லப்படுவோமென்று. 16 டிசம்பர் 2010 அன்று மாணவர் சங்கத் தேர்தலுக்கு வேட்புமனுதாக்கல் செய்துவிட்டு வந்த கோலே, கல்லூரியை விட்டு வெளியே வரும்போது, வெளியே ஒரு கும்பல் தனக்காகக் காத்துக்கொண்டிருப்பதைக் கண்டான். அவர்கள் மொத்தம் முப்பதுபேர் கருப்புநிற முகமூடியணிந்து, நெற்றியில் திலகமிட்டிருந்தார்கள். அவன் தாக்கப்பட்டபோது, கல்லூரியில் ஒழுங்கை நிலைநாட்ட வரவழைக்கப்பட்டிருந்த வெறும் அய்ந்து காவல்துறையினரால் எந்தப் பயனும் இல்லாமல் போனது. அந்த நேரத்தில் கோலே மட்டும் தனியாக இருந்தான். இரும்புக்கம்பியால் அந்தக் கும்பல் அவனைத் தாக்கியது.

swapanஅவன் அருகிலுள்ள வீட்டு மாடியில் ஒளிந்தான். அவர்கள் அவனைப் பின்தொடர்ந்து வந்து வேட்டையாடினார்கள். அவர்கள் அவனை மேலிருந்து கீழே தூக்கியெறிந்தார்கள். பின்பு அவர்கள் அவன் இறந்துவிட்டான் என்று நினைத்து சென்றுவிட்டார்கள். அவனது நண்பர்கள் அந்த இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது அவன் உயிரோடு இருந்தான். அந்த நேரத்தில் அச்சம்பவத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த காவல்துறையினரும் அங்கே வந்தார்கள். அவர்கள் அவனை ஒரு ரிக்ஷாவில் வைத்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுசென்றார்கள். ஆனால் அக்கும்பல் திடுமென பின்னாலிருந்து தோன்றி ரத்தம் வடியும் அம்மாணவனை மீண்டும் தூக்கி அருகிலுள்ள பாலத்திலிருந்து ஒரு கால்வாயில் தூக்கி வீசியது. அதன்பிறகும் கோலே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவனின் நுரையீரல்கள் வேலைசெய்துகொண்டுதான் இருந்தன. அதன்பிறகு அவன் கொல்கத்தாவிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டான். ஆனாலும் தொடர்ச்சியான மூன்று தாக்குதலுக்குப்பிறகு அவனைக் காப்பாற்ற எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. அவன் இறந்தான்.

      "என்னால் அக்கும்பலில் இருந்தவர்களின் பெயர்களைச் சொல்லமுடியும். அவர்கள் அதே கல்லூரியின் மாணவர்கள் மற்றும் தி.கா.வின் மாணவர் அமைப்பினர். அவர்களில் சிலர் தி.கா. கொடியை வைத்திருந்தார்கள். மற்றவர்களை நான் நேரில் பார்த்ததில்லை" என்று சொன்னார் ஹவுரா மாவட்ட இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினரும் சம்பவ இடத்தில் இருந்த கோலேவின் நண்பருமான ராஜ்தீப் சக்கரவர்த்தி. 

      கோலே ஒரு வெத்தலைபாக்குக்கடை வைத்திருப்பவரின் மகன். ஒரு கலைஞனாக ஆகவேண்டும் என்பதே அவனது அவா. அவனால் கல்லூரியில் சேர முடியவில்லை. அவனின் அப்பா சொன்னபடி சிபிஎம்மின் சிபாரிசு இன்றி கல்லூரியில் சேருவது கடினம். எனவே அவன் இந்திய மாணவர் சங்கத்தின் மூத்த தலைவர்களை சிபாரிசு செய்யவேண்டி சென்று பார்த்தான். பின்பு அவனுக்கு அவர்களின் சிபாரிசால் கல்லூரியில் இடமும் கிடைத்தது. அதிலிருந்து அவன் இ.மா.ச.விற்கு கடன்பட்டவனான். கல்லூரியில் அவன் சிபிஎம்வின் மாணவர் அமைப்பான இ.மா.சங்கத்தில் சேர்ந்து அரசியல் வேலை பார்க்கத் தொடங்கினான். ஒரு வருடத்திலேயே அதில் முக்கியமான ஊழியராக மாறினான். பெற்றோர்கள் தடுத்தும் கேளாமல் மாணவர் சங்கத் தேர்தலில் போட்டியிட ஆயத்தமாகி வேலை பார்க்கத் தொடங்கினான். “அவனுக்கு சேவை செய்வதில் ஆர்வம் உண்டு, அவன் எப்போதும் ஒரு அரசியல்வாதியாக இல்லை. கல்லூரியில்தான் அவனுக்கு அரசியலில் ஆர்வம் உண்டானது. ஆனால் அரசியலே அவனைக் கொல்லும் என்று நினைத்திருக்க மாட்டான்” என்று சொன்னார் அவனின் சகோதரர் தபாஸ் கோலே.

5. "எனது ஒன்றுவிட்ட சகோதரர் சீருடை அணிந்தவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்."

கஜால் மொல்லா, வயது 28, விவசாயி, புர்த்துவான் மாவட்டம்.

மேற்குவங்கத்தில் இடதுசாரிகளின் வலுவான கோட்டையான புர்த்துவானில் கடந்த பஞ்சாயத்துத் தேர்தலில் தி.கா.வினர் சிபிஎம்விடமிருந்து சில இடங்களைக் கைப்பற்றியதும் அக்கோட்டை நொறுங்கிப் போவதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்தது. சிபிஎம்மில் இருந்து வெளியேற்றப்பட்ட செல்வாக்குமிக்க‌ தலைவரான பாம்தேவ் மோண்டால் தனது ஆதரவாளர்களோடு தி.கா.வில் இணைந்தனர். அதிலிருந்து போர் தொடங்கியது.

கொல்கத்தாவில் இருந்து சுமார் 130 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஜோட்சாடி கிராமத்தில் பிரச்சனை ஆரம்பித்தது. டிசம்பர் ஒன்றாந்தேதி காலை ரெய்னாவில் பேருந்திலிருந்து இரண்டு தி.கா. ஆதரவாளர்கள் கீழே இழுத்துவரப்பட்டு தாக்கப்பட்டனர். இதற்குப் பழிவாங்கும்முகமாக, தி.கா. ஆதரவாளர்கள் பெருந்திரளாக சிபிஎம்மின் ஆதரவாளர்களின் வீடுகளை துப்பாக்கிகளோடும் வெடிகுண்டுகளோடும் தாக்கினார்கள். சண்டை ஆரம்பித்தது.

மதியநேரம் 22 காவல்துறையினர் போன்டிரிலிருந்து தீவைப்பு சம்பவ விசாரணையை முடித்து திரும்பினார்கள். அந்தக்குழு ரெய்னா காவல்நிலையத்தின் பொறுப்பு அதிகாரி சதான் பாண்ட்யோபாத்யாயவால் தலைமை தாங்கப்பட்டது. அவர்கள் தி.கா.வால் கிராமத்தைவிட்டு வெளியே துரத்தப்பட்ட சமாத் எனும் ஒரு சிபிஎம்மின் தொண்டரைப் பற்றிய விடயத்தை விசாரித்தார்கள். “தி.கா.வினர் காவல்துறையினர்மீது தமது கோபத்தைக் காட்டினார்கள். அவர்கள் சிபிஎம்மோடு ஒட்டி உறவாடுவதாக குற்றஞ்சாட்டினார்கள்; அவர்கள் மீது வெடிகுண்டுகளையும் எறிந்தார்கள். மதன் முகபாத்யாய என்னும் காவலர் ஒருவர் இதில் மிகமோசமாகக் காயமடைந்தார்” என்று சொல்கிறார் புர்த்துவானின் காவல்துறைக் கண்காணிப்பாளர் ராஜாராம் ராஜ‌சேகரன். “குறைந்த எண்ணிக்கையில் இருந்த காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசினர். பின்பு கும்பலைக் கலைப்பதற்காக பத்து முறை சுட்டார்கள்” என்றும் அவர் கூறினார்.

ஆனால் ரெஸயுல் மொல்லா, காவல்துறை கொலைசெய்வதற்காக சுட்டதாகவே கூறுகிறார். “அனைத்து குண்டுக்காயங்களும் மார்பிலும் கையிலும் தலையிலுமே பட்டுள்ளன. என் சகோதரர் ஹஸ்மத் அலிக்கு மார்பில் குண்டுபட்டுள்ளது” என்று அழுதுகொண்டே சொல்கிறார் மொல்லா. அசிசுல் அகமது “பெரும்பான்மையான கிராமத்தவர்கள் மதிய உணவுக்காக வயலிருந்து வந்தபோது சுடப்பட்டார்கள்” என்று குற்றஞ்சாட்டுகிறார். “கருப்புத்துணியால் முகத்தை மறைத்திருந்த சீருடையணியாத மனிதர்களால் சுட்டுக்கொல்லப்பட்டபோது கஜல் எனக்கு மதிய உணவு கொண்டுவந்து கொண்டிருந்தார்” என்று சொல்கிறார் கஜல் மொல்லாவின் ஒன்றுவிட்ட சகோதரரான எஸ்கே அலாதிவுதீன்.

உள்ளுர் தி.கா.வினர், சிபிஎம் கட்சியினர்தான் காவல்துறை சீருடையணிந்து தம்மை சுட்டதாக குற்றஞ்சாட்டுகிறார்கள். இதற்குப் பதிலடியாக தி.கா.வினர் பெல்சார் மோரிலுள்ள சிபிஎம் அலுவலகத்தையும் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களின் வீடுகளையும் சூறையாடி ஒரு மோட்டார் சைக்கிளையும் கொளுத்தினர்.

6. "அவரின் உருக்குலைக்கப்பட்ட உடல் மறுநாள் கண்டெடுக்கப்பட்டது."

திலிப் கோஷ், வயது 40 இனிப்புக்கடையில் வேலை செய்பவர், பிரம்புர் கிராமம்

திலிப் கோஷ்ஷின் உடல் உருக்குலைக்கப்பட்ட சம்பவம், தடை செய்யப்பட்ட அமைப்பான இந்திய பொதுவுடமைக் கட்சி(மாவோவியர்)களால் செய்யப்பட்டிருந்ததது என்றால் அது இந்த நாட்டை பல நாட்களுக்கு கோபப்படுத்தியிருக்கும். ஜனவரி ஆறாந்தேதி காலை, கோஷின் கைகளும் கால்களும் தனித்தனியாக வெட்டப்பட்டு, கண்கள் தோண்டப்பட்டு, நாக்கு அறுக்கப்பட்டு, மர்ம உறுப்புகள் வெட்டப்பட்ட உடலை குளத்தின் அருகே கிராமத்தவர்கள் பார்த்தனர். இவரின் இந்த நிலை சட்டப்பூர்வமான அரசியல் கட்சிகளுக்கிடையேயான மோதலால் ஏற்பட்டது. தி.கா. இவரது உடலை கண்ணாடிப்பெட்டியில் வைத்து கொல்கத்தாவில் ஊர்வலமாக சென்றது. நாடு கோபமுறாததற்கு அதுகூட காரணமாகயிருக்கலாம்.

ஜனவரி அய்ந்தாம் தேதி பிரம்பூர் கிராம மக்கள் 150 பேர் ஆயுதங்களோடு ஆற்றைக்கடந்து கூடுவதைக் கண்டார்கள். உள்ளுர்வாசிகள் அவர்கள் சிபிஎம்மின் ஆயுதந்தரித்த ஊழியர்கள் என்றும் அவர்கள் கிராமத்தை நோக்கி வருகிறார்கள் என்றும் கூறினார்கள். அப்படி அவர்கள் கிராமத்தை நோக்கி வந்தபோது தி.கா.வினர் ஓர் அய்க்கிய முன்னணியை உருவாக்கி அதைத் தடுத்தனர். இவர்கள் வெறும் பதினாறுபேர் மட்டும்தான் இருந்தனர். ஆனால் அவர்கள் 150க்கும் மேல் இருந்தனர். இவர்கள் வெறும் லத்திகளை மட்டும் வைத்திருந்தனர். அதனால் அவர்கள் துப்பாக்கியால் சுட்டபோது இவர்கள் பயந்து ஓடினர். அப்போது பாதத்தில் காயம்பட்டிருந்த திலிப் கோஷால் ஓட முடியவில்லை. அவரை நன்றாகக் குடித்திருந்த சிபிஎம்மினர் பிடித்துக்கொண்டனர்.

காலையில் அவரது உருக்குலைந்த உடலை கண்டெடுத்ததாக அவரது சகோதரர் அனந்தகோபால் கூறினார். மேலும் அவர் “எப்படியும் சிபிஎம்மிற்கு தாம் தோற்கப்போவது தெரியும். எனவேதான் அவர்கள் ஈவிரக்கமின்றி கொல்கிறார்கள். இது எப்படியிருக்கிறதென்றால் நான் எப்படியும் சாகத்தான்போகிறேன். எனவே நான் எல்லோரையும் கொன்றுவிட்டு சாகிறேன் என்று சொல்வதுபோல் இருக்கிறது” என்று கூறினார். கோஷ் கடந்த பத்து வருடங்களாக தி.கா.வின் ஆதரவாளர். அவரது மகள் பஞ்சாயத்து தேர்தலில் அக்கட்சி சார்பாக போட்டியிட்டார். அவரது மருமகன் அக்கட்சியின் பகுதிக்குழு உறுப்பினர்.

      பெரும் வெள்ளம் அப்பகுதியைத் தாக்கியபோது வெள்ளநிவாரண பணம் சிபிஎம் ஆதரவாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. இதை பிஷ்வாஜாத் என்பவர் எதிர்த்துக்கேட்டார், ஆனால் அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. எனவே அவர் ஒரு கிராமக் குழுவைக் கட்ட முயற்சி எடுத்தார். கோஷ் மற்றும் பலர் அதை ஆதரித்தனர். இந்தக் கிராமக்குழுவினர் அனைவரும் தி.கா.வில் இணைந்தனர்.

7. "சிபிஎம்மின் ஹர்மத்திற்கு விருந்தாவதைவிட நான் செத்துப்போவேன்"

சைபாலினி தாஸ், 35, குடும்பத்தலைவி, சுனியா சார் கிராமம்

தி.கா. 2008 பஞ்சாயத்து தேர்தலில் வெல்லும்வரை, சுனியா சார் மற்றும் அதன் அருகிலுள்ள எட்டு கிராமங்களும் பாரம்பரியமாக சிபிஎம்மின் வலுமிகுந்த பகுதியாக இருந்ததன‌. ஆகஸ்ட் மாதம் துவங்கி ஆயுதந்தாங்கிய சிபிஎம்மினர் அங்கு கூட ஆரம்பித்தனர். ஊடகங்கள் உள்ளே நுழையாமல் தடுப்பதற்காக - காவல்துறை 144 தடை உத்தரவு போட்டிருந்தது.

போனவருடம் ஆகஸ்ட் 22ந்தேதி சுமார் 95 பேர் அக்கிராமத்தில் இருந்து துப்பாக்கிமுனையில் ஹர்மத்தால் விரட்டியடிக்கப்பட்டனர். ஒரு சிறிய வெத்தலைப் பாக்குக்கடை நடத்திக்கொண்டிருந்த நிர்மலா ஜனாவும் அதில் ஒருவர். அவர் அக்கிராமத்திலேயே தனது மனைவி மற்றும் மகளோடு தங்கியிருந்தவர்.

அவரிடமிருந்து கடனுக்கு பொருள் வாங்கும் சிபிஎம்மினர், அவர் கடனை திரும்பக்கேட்டதும் கடையை அடித்து நொறுக்கி அவரையும் விரட்டியடித்தனர். அவர் இப்போது கமார்டாவின் உதவிமுகாமில் இருக்கிறார். "நான் என் குடும்பத்தோடு பேசவில்லை. அவர்கள் என்ன செய்கிறார்கள் என எனக்குத் தெரியவில்லை" என்று அவர் கூறினார்.

தி.கா.வை சுனியாவில் வழிநடத்திய லஷ்மிகாந்த மைதி, இரவில் உறக்கத்தில் இருந்து எழுப்பப்பட்டு, உயிர் மீது ஆசை இருந்தால் அப்போதே அக்கிராமத்தைவிட்டு ஓடிவிடுமாறு சொல்லப்பட்டார். அவர் அங்கிருந்து வந்ததிலிருந்தே தனது குடும்பத்தினரை நினைத்து மிகவும் வருந்துகிறார். “எனக்கு ஓடிப்போவதைத்தவிர வேறு வழி எதுவும் அப்போது இல்லை. எனக்கு வயதான தாயாரும், வயதுக்கு வந்த பெண்களும் மனைவியும் இருக்கிறார்கள். இரவில் தண்ணியடித்துவிட்டு வீட்டுக் கதவைத் தட்டும் சிபிஎம் ஊழியர்களிடம் இருந்து தம்மைக் காத்துக்கொள்ள அவர்கள் கையில் சமையல் பாத்திரங்களைத்தவிர வேறொன்றும் இல்லை” என்று அவர் சொன்னார். அவர் இப்போது 146 பேர்கள் கொண்ட கமார்டா உதவி முகாமின் பொறுப்பாளராக இருக்கிறார்.

shaibaliniபிரதிப் தாஸ் தனது மனைவி சைபாலினியை விட்டுவிட்டு அவரது மகன் மற்றும் மகளோடு அந்த இரவோடு இரவாக வீட்டைவிட்டு ஓடிவந்தார். அவரது மனைவி சைபாலினி இளம்பிள்ளைவாதத்தால் பாதிக்கப்பட்டவர். அவரால் கைகளையும் ஊன்றித்தான் நடக்கமுடியும். எனவே அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இரண்டு வாரங்களுக்குப்பின்பு சிபிஎம்மின் ஊழியர்கள் அவரிடம் சென்று அவரோடு இரவைக் கழிக்கவேண்டுமென்று கூறினர். இதைக்கண்டு பயந்துபோன அவர் இரவோடு இரவாக தன் உடம்பை இழுத்து இழுத்து நெற்வயல்களின் வழியாகவும், முட்புதற்களின் வழியாகவும் சுமார் மூன்று கிலோமீட்டர்கள் சென்று ராசுல்பூரின் கரைகளில் புரண்டு தண்ணீரில் மூழ்கி அடுத்த கரையை அடைந்தார். தனது ஆடைகள் உலரும்வரை ஒரு மரத்தின் அடியில் இரவைக் கழித்தார். திரும்பவும் காலையில் சிரமப்பட்டு ஊர்ந்தே சென்று முகாமைக் கண்டறிந்து தனது குடும்பத்தாரோடு இணைந்துகொண்டார்.

2008 பஞ்சாயத்துத் தேர்தலில் சிபிஎம்மை எதிர்த்ததற்காக சுப்ரதா தாஸின் இடதுகையின் மூன்று விரல்கள் வெட்டப்பட்டன. அவர் உயிருக்குப் பயந்து ஓடவில்லையென்றால் இம்முறை வெட்டப்பட்டிருந்திருப்பது அவர் தலையாக இருந்திருக்கலாம்.

சிபிஎம்மை எதிர்த்து தி.கா.விற்கு வாக்களிக்கத் துணிந்த கிராமத்தவர்களின் விதி இதுதான்.

 8. "சிபிஎம்மினர் அவர் இறந்தததைக் கொண்டாட ஏழுமுறை துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுட்டனர்."

பலாய் மண்டல். 45, மீன்வியாபாரி, குழிப்பாரா கிராமம்.

அக்டோபர் மாதம் அந்த இரவுக்கு முன்பு அந்தக் கிராமமே அமைதியிழந்திருந்தது. சிபிஎம்மினர் தி.கா.வினரை சிலைகளைக் கரைக்க அழைத்தனர். ஆனால் அங்கு சென்ற தி.கா.வினரை அவர்கள் தாக்க ஆரம்பித்தனர். அமோல் திரும்ப வரும்போது அவர் மற்ற தி.கா. ஆதரவாளர்களையும் அழைத்துக் கொண்டார். அவர்கள் தாக்குதலுக்குப் பயந்து பலாயின் வீட்டில் அன்று இரவைக் கழிக்க தீர்மானித்தனர். அவர்கள் நினைத்ததுபோலவே சிபிஎம்மினர் பலாயின் வீட்டை நோக்கி சுட்டுக்கொண்டே வந்தனர். பாலாய் தனது இரண்டு பேரன்களும் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்தார். அவர்களைக் காப்பாற்றச் சென்ற அவரை சிபிஎம்மினர் துப்பாக்கியால் சுட்டனர். காவல்நிலையம் 200 மீட்டருக்கு அருகில் இருந்தாலும் ஒரு மணிநேரம் கழித்தே காவல்துறையினர் அங்கே வந்தனர். வந்தவுடன் அவர்கள் கிராமத்தவர்களை அழைத்து ரத்தம் சொட்டச்சொட்ட காயம்பட்டுக்கிடந்த பலாயை தூக்கச்சொல்லியும், அங்கே இருக்கும் ரத்தத்தை துடைக்கச்சொல்லியும் ஆணையிட்டனர். அதற்கு கிராமத்தினர், "நாங்கள் ஏன் ஆதாரங்களை அழிக்கவேண்டும்?" என்று கேட்டதற்கு, அவர்களை காவல்துறையினர் லத்தியால் தாக்கினர். அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போதே பலாய் மரணமடைந்தார்.

பலாய் மண்டல் மீன் வியாபாரம் செய்பவர். அவர் 2009 தேர்தலுக்குப்பிறகுத் தி.கா.வின் கூட்டங்களுக்குச் செல்ல ஆரம்பித்தார். பசந்தி, மண்டலின் மனைவி. தனது கணவரைக் கொன்ற எதிர்வீட்டுக்காரர்களான சிபிஎம் தலைவர்கள் பிரபுல்லா மண்டல் மற்றும் ரஞ்சன் மண்டல் ஆகியோரின் வீட்டைக் கவலையோடு பார்க்கிறார். அவர்கள் திரும்பவந்தால் தனது மகன்களையும் கொன்றுவிடுவார்கள் என்று அச்சப்படுகிறார்.

"அப்பா மண்டல் மருத்துவமனையில் இறந்தததைக் கேள்விப்பட்டதும் சிபிஎம் கட்சியினர் ஏழுமுறை துப்பாக்கியால் வான்நோக்கிச் சுட்டு அதைக் கொண்டாடினார்கள்" என்று சொன்னார் பலாயின் மகன் சமீர்.

9. "நாங்கள் எங்கள் மகளை கட்டிலுக்கு அடியில் ஒளித்து வைத்தோம்."

சாக்டிபாடா லாயா, வயது 38, சொந்தமாக தேநீர்க்கடை நடத்துபவர், கமார்டா கிராமம்

சாக்டிபாடாவும் சந்தியா லாயாவும் கெஜுரியிலுள்ள கமார்டா கிராமத்தின் வெளிப்புறத்தில் ஒரு சிறிய தேநீர்க்கடையை நடத்துகிறார்கள். நவம்பர் 24, 2010 காலை நேரம் அவர்கள் இருவரும் துப்பாக்கிகள் வெடிக்கும் சத்தம் கேட்டு எழுந்தார்கள். உடனே தமது மகளை கட்டிலுக்குகீழே ஒளித்துவைத்துவிட்டு, காப்பாற்றுமாறு கடவுளைக் கும்பிட ஆரம்பித்தார்கள்.

shaktipadaசரியாக அதிகாலை 5.20க்கு இரண்டு பத்து சக்கர வாகனங்களில் சுமார் 300 ஆயுதந்தாங்கிய சிபிஎம் ஊழியர்கள் கமார்டா கிராமத்தின் நுழைவுப்பகுதியான ஹெரியா சாலை சந்திப்பு இடத்துக்கு வந்தார்கள். அவர்கள் சிபிஎம் மண்டல செயலாளர் ஹிமாஞ்சு தாஸால் வழிநடத்தப்பட்டனர். இது 2009 தேர்தல் வெற்றிக்குப் பின்பு, தி.கா.வால் இவ்விடத்தைவிட்டு விரட்டியடிக்கப்பட்ட அவர்களுக்கு ஒரு “வீடு திரும்புதலாக” இருந்தது. பின்பு அவர்கள் தமது வெற்றி ஊர்வலத்தில் கிராமத்தவர்களையும் கட்டாயப்படுத்தி நடக்கவைத்தார்கள். அப்பகுதியின் தி.கா. அலுவலகம் மஞ்சள் தொப்பி அணிந்த சிபிஎம் ஊழியர்களால் அடித்து சூறையாடப்பட்டது. ஆனால் இவ்வெற்றி சிறிது நேரமே நீடித்தது. இந்த “மறு கைப்பற்றுதலை”அறிந்த தி.கா.வினர் உடனடியாக தமது பாராளுமன்ற உறுப்பினர் சுபேந்து அதிகேரியின் தலைமையில் சுமார் ஆயிரம் ஆதரவாளர்களோடு வந்து சிபிஎம் ஊழியர்களைத் தாக்கினர். வெற்றி விருந்தை உள்ளுர் பள்ளிக்கூடத்தில் வைத்து உண்ண தயாராகிக் கொண்டிருந்த சிபிஎம் கட்சியினர் அடித்து விரட்டப்பட்டனர். அவர்கள் அலுவலகம் சூறையாடப்பட்டது. அவர்கள் பிர்பந்தர் மற்றும் காந்திபாரி கிராமங்களின் வழியாக ஓடிச்சென்று ராசுல்பூர் ஆற்றைக்கடந்து சுனியாவின் ஹர்மத் முகாமில் அடைக்கலமடைந்தார்கள். “அவர்களில் பாதிப்பேர் வெளியில் இருந்து வந்தவர்களாக இருந்தாலும் மீதிப்பேர் இந்தப் பகுதியைச் சார்ந்தவர்கள். எனவேதான் அவர்களை நாங்கள் கொல்லாமல் தப்பிச்செல்லுமாறு விட்டுவிட்டோம்" என்று சொன்னார் தி.கா.வின் இளம் தலைவர் ஒருவர். கமார்டாவுக்கும் சுனியாவுக்கும் இடையிலான இச்சண்டை இன்னும் தொடர்கிறது.

10. கல்லூரிவளாக மோதல்

சௌவிக் ஹஸ்ரா, வயது 20 கொல்கத்தா

souvilkசௌவிக் ஹஸ்ரா கொல்கத்தா அசுடோஸ் கல்லூரியின் மாணவர். கல்லூரியில் டிசம்பர் 16ஆம்தேதி நடந்த தகராறில், இந்திய மாணவர் சஙக உறுப்பினரான இவரது கண்பார்வை போன‌து.

டிசம்பர் 9ந்தேதி தி.காங்கிரசின் மாணவர் அமைப்பினர் கல்லூரி முதல்வரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதில் பிரச்சினை தொடங்கியது. இ.மா.ச. எதிர்ப்புப் போராட்டம் டிசம்பர் 16ம் தேதி ஒன்றை கல்லூரிக்கு முன்பாக நடத்தினார்கள். தி.கா.வின் மாணவர் அமைப்பும் போராட்டம் ஒன்றை அருகில் நடத்தியது. அப்போது இருதரப்பாரும் மோதிக்கொண்டனர். இதில் தி.கா. மாணவர் அமைப்பினர் எறிந்த கல் ஒன்று, சௌவிக்கின் இடது கண்ணை பறித்துச்சென்றது.

சௌவிக் அவரது பெற்றோருக்கு ஒரே பிள்ளை. அவரது அப்பா பேசுகையில், "அவன் எப்போதும் அரசியலில் தீவிரமாக இயங்கியதில்லை. அவனுக்கு எப்படி இது நேர்ந்தது என்பது எனக்குப் புரியவில்லை. கடைசியில் என் மகனுக்கு ஒரு கண் போய்விட்டது. இதைத் தவிர வேறு என்ன சொல்ல?" என்றார்.

மொழியாக்கம்: சார்லசு அன்ரனி

நன்றி: தெகல்கா இதழ் ஜனவரி 22, 2011

ஆங்கில மூலம்:

http://www.tehelka.com/story_main48.asp?filename=Ne220111Coverstory.asp
http://www.tehelka.com/story_main48.asp?filename=Ne220111Coverstory01.asp
http://www.tehelka.com/story_main48.asp?filename=Ne220111Coverstory02.asp
http://www.tehelka.com/story_main48.asp?filename=Ne220111Coverstory03.asp
http://www.tehelka.com/story_main48.asp?filename=Ne220111Coverstory04.asp
http://www.tehelka.com/story_main48.asp?filename=Ne220111Coverstory05.asp
http://www.tehelka.com/story_main48.asp?filename=Ne220111Coverstory06.asp
http://www.tehelka.com/story_main48.asp?filename=Ne220111Coverstory07.asp
http://www.tehelka.com/story_main48.asp?filename=Ne220111Coverstory08.asp
http://www.tehelka.com/story_main48.asp?filename=Ne220111Coverstory09.asp
http://www.tehelka.com/story_main48.asp?filename=Ne220111Coverstory10.asp

Pin It