செம்மொழி மாநாட்டினை நீங்கள் எவ்வாறாக நோக்குகின்றீர்கள்?

sivathamby_352உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடாக இம்மாநாடு அமைவதற்கான பின்புலம் உண்டு. அது எந்த வகையில் என்றால் அனைத்துலக தமிழாராய்ச்சி நிறுவனம் கடந்த 9 வருட காலத்தில் தன்னுடைய மாநாடுகளை நடத்த வில்லை. இந்நிலையிலேயே அதை நடத்துவதற்கான ஓர் வாய்ப்பினை வழங்குவதற்கு முதல்வர் கருணாநிதி முன்வந்திருந்தார்.

ஆனால்,உலகத் தமிழாராய்ச்சிக் குழுமத்தின் பிரதான செயலரான ஜப்பானைச் சேர்ந்த நொபூரு கரசிமா, மற்றையவர்களுடைய கருத்தினையும் கேட்டதன் பின்னர்தான் இந்த மாநாட்டினைத் தமிழகத்தில் நடத்த முடியுமென்று தனது நிலைப்பாட்டினைத் தெரிவித் திருந்ததுடன், என்னுடன் ஒரு தடவை தொலைபேசியில் உரையாடிய சந்தர்ப்பத்திலும் தான் எடுத்த தீர்மானம் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், கடந்த ஒன்பது வருடங்களாக மாநாடு நடத்தப்படுவதற்கு பணம் எங்களிடம் இல்லை என்ற நிலையிலும் முன்னைய காலப்பகுதிகளிலும் அதாவது 1968 காலப்பகுதியில் அறிஞர் அண்ணாத்துரை ஆட்சியில் நடைபெற்றது என்பதுடன், 1985 மற்றும் 1995 காலப்பகுதியில் தஞ்சாவூரில் நடைபெற்றதென்ற விடயங்களையும் இம் மாநாட்டின் போது ஏற்பட்ட பிரச்சனைகளையும் கருத்திற்கொண்டு தற்போதைய நிலையில், தமிழக அரசு இம்மாநாட்டினை விரும்பினால் நடத்தலாம் என்ற நிலைப்பாட்டினை நானும் எடுத்தேன்.

அது மாத்திரமல்லாமல், அனைத்துலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இந்தியக் கிளையின் தலைவராகக் கடமையாற்றிய வா.செ.குழந்தைசாமியும் இந்நிலைப்பாட்டினையே எடுத்ததுடன், மாநாட்டினை எப்படியாவது நடத்த வேண்டுமென்றும் இருந்தார். தமிழக அரசினைப் பொறுத்தவரையிலும் கரசிமா இம்மாநாட்டினை அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடாக நடத்தத் தவறினால் செம்மொழி மாநாடு என்ற தலைப்பில் நடத்துவதென்று தீர்மானித்தது.

இங்கே குறிப்பிடத்தக்க விடயமாக தமிழகத்திலே அல்லது இந்தியாவிலே தமிழைச் செம்மொழி என்று கூறப்படுவதனால் தான் இம்மாநாட்டினை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்று கூறுகின்றோம்.

இன்றும் கூட நான் செம்மொழி என்ற சொல்லினைப் பயன்படுத்த விரும்பவில்லை. இலங்கையில் நாங்கள் புறநானூற்றில் சிலருடைய பெயர்கள் தெரியாது. அந்தப் பெயர் தெரியாதவர்களுக்கு நாங்கள் என்ன செய்வதாயின் பாடலில் வருகின்ற நல்ல வரியினை எடுத்து வைத்துப் பெயராகக் கூறுகின்றோம். ஆனால், எங்களிடம் ஓர் நீண்ட கதைப்பாடல் கிடையாது. அவ்வாறான நீண்ட கதைப்பாடல் சிலப்பதிகாரத்தில் தான் முதலில் வருகின்றது.

இதற்கு தொல்சீர் பண்பாடுகள்,மொழிகள் என்ற மொழிபெயர்ப்பினையே பயன்படுத்த விரும்புகின்றோம். தொல்சீர் மொழிகள் என்பது இரண்டு விடயங்களைக் காட்டுகிறது. அதாவது ஒரு மொழியின் தொன்மை யினையும் தொடர்ச்சியினையும் காட்டுகிறது. எனவே தான் நாங்கள் செம்மொழி என்பதிலும் பார்க்க தமிழ் ஒரு தொல்சீர் மொழி என்ற பண்பாட்டைக் கொண்டுள்ளது என்கின்றோம்.

இரண்டாவதாக அனைத்திந்திய மொழிகளில் தமிழுக்கு உரிய இடத்தினைப் பார்க்கின்றோம். அதாவது இரண்டு பிரதானமான மொழிக் குழுக்களில் ஒன்றுதான் இந்தோ ஆரியர். அதனுடைய முன்னிலை மொழியாக சமஸ்கிருதம் சொல்லப்படுகிறது. சமஸ்கிருதம் என்பது நன்கு செப்பனிடப்பட்டது என்கின்ற கருத்து அது. இதேவேளை, சமஸ்கிருதம் எந்தவொரு பிரதேசத்திலும் பேச்சு மொழியாக இல்லை. நூல்களில் உள்ள மொழியாகவேயுள்ளது. எனினும் பேச்சு வழக்கிலே இருந்து மொழியாக இருந்தது இந்தோ ஆரிய திராவிடத் தமிழ்தான். எனவே, தமிழினுடைய முக்கியத்துவம் யாதெனில் இந்தியா முழுவதும் மிகப் பழைமையான சமயச் சார்பற்ற இலக்கியங்கள் உண்டென்பதாகும். சமஸ்கிருதத்திலும் தமிழிலும் பார்க்கப் பழைய நூல்கள் உண்டு. ஆனால், அவை மதங்கள் சார்ந்த பாராயண நூல்களாகவேயுள்ளன.

இன்றைய இந்திய மொழிகளில் மிகவும் தொன்மையும் தொடர்ச்சியும் கொண்ட மொழி தமிழ்மொழிதான். இம்மொழியை உலக நிலைப்படுத்துகின்ற தேவையும் தமிழின் உலக நிலை முக்கியத்துவத்தினைப் பார்க்க வேண்டிய தேவையும் எமக்குள்ளது. இவ்வாறு நோக்குகின்றபோது உலகத்தில் செம்மொழிகளில் தமிழ் மொழி இருக்கின்றமை நமக்குத் தெரியும்.

எங்களிடமுள்ள தமிழிலேயுள்ள மிகப் பண்டைய இலக்கியம் இருக்கு,வேத,சமஸ்கிருதமளவு காலத்தால் முந்தியது ஆகும். இவ்வாறு எம்மிடமுள்ள சங்க இலக்கியத்தினை எவ்வளவுதான் தள்ளினாலும் கி.பி. 200கி.பி.250 காலப் பகுதியினைத்தான் சங்க இலக்கிய காலப்பகுதியாகக் கருத முடியும். சங்ககாலப் பாடல்களில் ஒரு விசேட தன்மை என்னவெனில் கைலாசபதியினால் வீரயுகப் பாடல்கள் என்று விரிவாக எழுதப்பட்ட நிலையில் மற்றைய வீரயுக மொழிகளில் நீண்ட கதை களைச் சொல்லுகின்ற பாடல்களேயுண்டு. எனினும், சங்க இலக்கியத்தில் அதுவோர் நீண்ட கதைத் தொடர்ச்சி யுள்ள பாடல்களாகவே அமைகின்றன. இதுவே சங்க இலக்கியத்தில் உள்ள சிக்கலாகும். எட்டுத்தொகை பத்துப்பாட்டு என்ற நூல்கள் இரண்டு அடிப்படையில் தொழிற்படுகின்றன. அவை வாழ்க்கையை அகம்,புறம் எனப் பிரிக்கின்றன. சங்க இலக்கியம் உண்மையில் வாய்மொழிப் பாடல்களாகும். அவை புலவர்களாலும் பாடத்தக்கது. இவ்விடத்து சங்க இலக்கியங்கள் இன்றுள்ள மிகப் பழைமையான பாடல்களாகவுள்ளன. இவற்றைப் பாடிய புலவர்களின் பெயர்களும் எங்களுக்குத் தெரியாது. இதுவோர் முக்கிய விடயம். புறநானூற்றில் சிலருடைய பெயர்கள் தெரியாது. அந்தப் பெயர் தெரியாதவர்களுக்கு நாங்கள் என்ன செய்வதாயின் பாடலில் வருகின்ற நல்ல வரியினை எடுத்து வைத்துப் பெயராகக் கூறுகின்றோம். ஆனால், எங்களிடம் ஓர் நீண்ட கதைப்பாடல் கிடையாது. அவ்வாறான நீண்ட கதைப்பாடல் சிலப்பதிகாரத்தில் தான் முதலில் வருகின்றது.

திருக்குறளில் இன்றைக்கு கி.பி. 250 க்குப் பிறகு 300,350 காலப்பகுதிக்குரியதாகவே கூறுகிறார்கள். சிலப்பதிகாரம் அதற்கும் பிறகே வந்துள்ளது. இவ்வாறாக இந்த இலக்கியப் பாரம்பரியத்தினைச் சரியான முறையில் உலகத்துக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அதற்கான தேவை நமக்குள்ளது.

தமிழகம் மற்றும் இந்தியாவின் சுதேசமொழி தமிழ். இலங்கையின் சுதேச மொழிகளிலும் ஒன்று. ஆனால், இதனைவிட சிங்கப்பூர்,மலேசியா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் ஏதோவொரு வகையான அங்கீகாரம் தமிழுக்கு உள்ளது. மேலும், தமிழர்கள் வாழும் மலேசியா, சிங்கப்பூர் என அங்கெல்லாம் தமிழ்ப் பத்திரிகைகள் வெளிவருகின்றன. தென்னாப்பிரிக்காவில் தமிழ் ஒரு பாடமாகக் கற்பிக்கப்படுகின்றது. இது ஒருபுற மிருக்க அண்மைக்காலமாகத் தமிழ் மக்கள் பலர் புலம் பெயர்ந்துள்ளனர். இவ்வாறு புலம்பெயர்ந்துள்ள பிரான்ஸ்,கனடா,இங்கிலாந்து,அவுஸ்திரேலியா,நோர்வே,சுவீடன் எனப் பல நாடுகளில் தமிழினை ஒரு பாடமாக அதாவது தமிழினை நான்காவது மொழியாகக் கற்கின்ற சந்தர்ப்பங்கள் உள்ளன. இவ்வாறானதொரு உலகப் பொதுநிலையான பிரச்சினையும் அம்சமும் தமிழுக்கு உண்டு.

தமிழினுடைய பன்முகப்பார்வையினையும் வரலாற்றுத் தொன்மையினையும் தொடர்ச்சியையும் பற்றிய ஆய்வாக நடைபெறவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அமையும். மேலும், ஒரு மொழி சர்வதேச மொழியாகப் புழங்கப்படுவதற்கு பல சொற்கள் கண்டுபிடிக்கப்படவும் வேண்டியுள்ளது. நவீன காலத்தில் ஒரு மொழி செழிப்புடன் வளர வேண்டுமானால் அது விஞ்ஞானத்தினைப் பயன்படுத்த வேண்டும். இவ்வாறாக உலக மொழிகளில் காணப்படுகின்ற திறமை தமிழுக்குக் கொண்டுவரப்பட வேண்டிய தேவையும் தமிழில் உள்ள தொன்மையினையும் வளத்தினையும் எடுத்துக்காட்ட வேண்டிய தேவையும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்குக் காணப்படுகின்றது.

செம்மொழி மாநாடு கலைஞர் கருணாநிதியின் அரசியலுக்காக நடத்தப்படுவதாக முன்வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து என்ன கூற விரும்புகின்றீர்கள்?

கலைஞர் இலங்கைப் பிரச்சினைக்கு சாதகமான ஒரு முடிவை எடுக்காத காரணத்தினால் அவரால் ஒழுங்கு செய்யப்படும் செம்மொழி மாநாட்டிற்கு இலங்கையிலிருந்து நாம் கலந்துகொள்ளக்கூடாது என்கின்றனர். இவ்வாறான பிரச்சினைக்கு இரண்டு,மூன்று நிலையில் பதிலளிக்க வேண்டியுள்ளது. அதில் முதலாவது நாங்கள் எங்களுடைய உரிமைப் போராட்டத்தினை ஆரம்பித்தது 1956 களில் தனிச் சிங்கள மசோதா கொண்டுவரப்பட்டு அரசாங்கங்கள் தமிழுக்கு உரிய இடத்தினை வரையறை செய்யாதுள்ள நிலையில்,

எங்களுடைய தமிழுக்கு உரிய இடத்தினை அரசாங்கங்கள் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே. இதிலே வட்டுக்கோட்டைத் தீர்மானம் முக்கியமானதாக அமைகின்றது. இவ்விடத்து என்னுடைய கவலை யாதெனில் இலங்கையினுடைய இடதுசாரிக் கட்சிகள் 1964 இல் ஸ்ராமாவுடன் சேர்ந்த போது தமிழினுடைய நிலைமைபற்றித் தெளிவுபடுத்தாத விடயமாகும்.இது எங்களுடைய போராட்டம். நேற்று உருவான போராட்டம் அல்ல. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததே 1967 இல் தான். ஆகவே, இது எங்களுடைய போராட்டம்.

1964 காலப்பகுதியில் தி.மு.க. ஆட்சிக்கு வரவில்லை. எங்களுடைய இந்தத் தமிழுரிமைப் போராட்டமானது இன்றைய நிலையில் நாம் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலப்பகுதியினை வைத்து நோக்கும்போது, நாங்கள் இப்போராட்டத்தினை கருணாநிதியினை நம்பித் தொடங்கவில்லை. கருணாநிதி இன்றைய காலப்பகுதியில் உதவவில்லை என்பதற்காகப் போராட்டத்தினை விடவும் முடியாது.

இந்நிலையில், கருணாநிதி கூட்டுகின்ற மாநாட்டுக்குப் போக வேண்டாம் எனக் கூற முடியாது. இவ்விடயங்கள் சரியோ,பிழையோ உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் இலங்கை தமிழுக்காற்றிய தொண்டினையும் இலங்கைத் தமிழர்கள் தமிழுக்காற்றிய தொண்டினையும் எடுத்துச் சொல்ல வேண்டிய தேவையுள்ளது. அத்துடன், இலங்கையில் தமிழ் இன்றைக்கு இருக்கின்ற நிலையையும் எடுத்துச்சொல்ல வேண்டிய தேவையிருக்கின்றது. இந்த இடத்தில் இலங்கையின் தமிழ் இன்று நேற்றல்ல, அது இந்நாட்டின் வரலாறு தொடங்குகின்ற காலம் முதலே இருந்து வருகின்றது. இதை அடித்துச் சொல்ல வேண்டிய தேவை எங்களுக்குள்ளது. மற்றையது தமிழகத்தில் கூட இல்லாத முக்கியமான விடயம் இந்நாட்டில் தமிழ்மொழி வழிக்கல்வி பல்கலைக்கழகம் வரையுள்ளது.

இவைகளையெல்லாம் நாங்கள் எடுத்துச்சொல்ல வேண்டிய தேவையுள்ள நிலையில், கருணாநிதி மாநாட்டினைக் கூட்டுகிறார் என்று கூறிவிட்டு நாம் இம்மாநாட்டிற்குச் செல்லாது விடுவோமானால் இவ்விடயங்களைச் சொல்வதற்கான சந்தர்ப்பங்களை நாம் இழந்து விடுவோம். அவ்வாறு இல்லையாயின் நாம் ஒரு பெரிய மாநாட்டினைச் செய்ய வேண்டும். அது இன்றைக்குள்ள அரசியல் சூழ்நிலையில் சாத்தியப்படாது. ஆனபடியால் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு நாங்கள் போய் எங்களுடைய இலங்கையில் தமிழுக்குரிய இடம் பற்றியும் பேச வேண்டும். நான் அறிந்த வரையில் இலங்கையில் இருந்து ஏறத்தாழ எண்பதுபேருடைய கட்டுரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இலங்கையிலுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், கிழக்குப் பல்கலைக் கழகம்,தென்கிழக்குப் பல்கலைக் கழகங்களினுடைய துணைவேந்தர்கள் அழைக்கப் பட்டிருக்கின்றார்கள். தமிழ்த் துறைத் தலைவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வாசிக்கவுள்ளனர். இலங்கையில் தமிழுக்கான வளத்தினையும் இடத்தினையும் நாம் பெற வேண்டியுள்ளது.

இதைவிட இம்மாநாட்டின் நிகழ்ச்சி நிரலை கலைஞர் தீர்மானிக்கவில்லை. அதற்கான நிகழ்ச்சி நிரலை மாநாட்டுக்கான குழுவே தீர்மானித்துள்ளது என்ற காரணத்தினால் கருணாநிதி எமது போராட்டத்தினை ஆதரிக்கவில்லை என்பதற்காக எங்களை மாநாட்டினைப் புறக்கணிக்கக் கூறுவது ஓர் வாதமல்ல.

மேலும், இன்றைய நிலையில், சாதாரணமாக திருமண வைபவங்களுக்குக் கூட இந்தியாவிற்கு எம்மவர்கள் செல்ல வேண்டியுள்ளது. இன்றைக்கு இந்தியாவில் இலங்கைத் தமிழர் எத்தனையோ ஆயிரக்கணக்கான குடும்பங்களாய் போய் வசிக்கின்றனர். அப்படியாயின் இம்மக்களையுமல்லவா எதற்காக அங்கிருக்கின்றீர்கள் எனக் கேட்க வேண்டும். அரசியல்வாதிகளின் குடும்பங்கள் இந்தியாவில் உள்ளனர். ஏறத்தாழ 14 வருடங்களிற்குப் பின் ஓர் தமிழ் மாநாடு நடக்கையில் நான் ஓர் தமிழ்ப் பேராசிரியர் என்ற வகையில் நான் செல்லாது விடுவது முறையாகாது.

மாநாட்டில் சமர்ப்பிக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகள் தொடர்பில் தங்கள் கருத்தென்ன?

ஆய்வுக் கட்டுரைக்காக ஆய்வாளர்கள் சுருக்கமான முன்மொழிவொன்றை 150,200 சொற்களுக்குமிடையில் சமர்ப்பித்திருந்தனர். அதில் அவர்கள் பார்த்து தெரிவு செய்து எந்தக் கட்டுரையாளர்களை வரவழைக்கலாம் என்பதன் அடிப்படையில் கட்டுரையாளர்களை வரவழைத்துள்ளனர். சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகள் வாயிலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட 800 கட்டுரையாளர்கள் மாநாட்டுக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் இலங்கையிலிருந்து 50 பேர் வரையில் கட்டுரையாளர்களாக அடங்குவதாக அறிகின்றேன். இதில் நான் சங்க இலக்கியம் தொகுக்கப்பட்ட முறைகள் பற்றி ஆராயவுள்ளேன்.

ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகளைச் சமர்ப்பிப்பதற்கு போதுமான கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதா?

ஆராய்ச்சியாளர்கள் ஒருபோதும் மாநாடு ஒன்று நடக்கப்போகின்றது என்பதற்காகப் பணியை ஆரம்பிப்பதில்லை. நீண்டகாலச் சிந்தனை மற்றும் பணியின் அடிப்படையிலேயே ஆய்வுகளை மேற்கொள்கின்றனர். இந்த வகையில் தமிழருடைய சமூக இலக்கியம்,தமிழ் நாடகம், தமிழ் மக்களின் பண்பாடும் தொடர்பாடலும், தமிழ்ச் சினிமாவும் தொடர்பாடலும் என அமைகின்றபோதும் செம்மொழி மாநாட்டில் என்னால் ஆராயப்படவுள்ள விடயம் குறித்தவொன்றாகவேயுள்ளது. இவ்வாறே ஏனைய ஆய்வாளர்களும் செயற்படவுள்ளனர்.

மாநாட்டின் புலமைசார் விடயங்கள் பற்றி?

மாநாட்டின் புலமைசார் விடயங்கள் தொடர்பில் மாநாட்டில் ஆராயப்பட வேண்டிய விடயங்களை நான் கூறியுள்ளேன். மேலும், தமிழ்நாட்டின் வரலாற்றை தமிழ் நாட்டின் சிறப்புகளைக் காட்டுகின்ற ஓர் கண்காட்சியும் நடத்தப்படுகிறது. இலங்கையிலிருந்து மலையகத்து காமன் கூத்து,வடகீழ் வடமோடி, தென்மோடிஅதற்கும் அடுத்து தேயிலைக் கொழுந்து நடனம் என இலங்கையில் தமிழரின் வாழ்வைச் சித்திரிக்கும் நடனங்களும் இடம்பெறவுள்ளன.

நன்றி: தினக்குரல்

Pin It