புனைவிலக்கியப் படைப்பாளி களில் இளந்தலைமுறையினர் அசாத்தியமான படைப்பாக்கங்களைப் படைத்து வருகின்ற சூழலிது. முன்னைய இலக்கியங்கள் முதன்மைப்படுத்தாத பழங்குடிகள், இசுலாமிய பெண்கள், விளிம்புநிலை இசுலாமியர்கள், மீனவர்கள், திருநங்கைகள் என்பதான மனிதர்களையும் அவர்களுக்கான உலகத்தையும் பதிவுகளாக்கி வருகின்றனர். குறிப்பாக இளம் படைப்பாளிகள் இப்புனைவிலக்கியங்கள் வழி தான் சார்ந்த சமூக விடுதலைக்கான முன்னெடுப்பைச் செய்து வருகின்றனர். இம்முன்னெடுப்பின் மற்றுமொரு அடையாளமே ‘சலவான்’ புதினம். இக்கட்டுரை ‘சலவான்’ புதினம் வழி படைப்பாளிப்பதிவுகளாக்கியுள்ள குறவரின் வாழ்வியல் கூறுகளை எடுத்துரைக்கிறது.

‘சலவான்’ புதினத்தின் படைப்பாளி பாண்டியக்கண்ணன். இவர் மதுரை திருமங்கலம் கட்டாரம்பட்டியைச் சேர்ந்தவர். துப்புரவுத் தொழில் சார்ந்த குடும்பத்திலிருந்த பாண்டியக் கண்ணன் விருதுநகர் அரசு சுகாதாரத்துறையில் மோட்டார் பணிமனையில் பணியாற்று பவர். திரைப்படக் கனவுகளோடு திரிந்த பாண்டியக் கண்ணன் கவிஞர் முத்து மகரந்தன், சுந்தர ராமசாமி எனும் நட்பு வட்டாரத்தால் புனைகதையாளரானார்.

ஆண் பன்றியைக் குறிக்கும் ‘சலவான்’ எனும் சொற்பிரயோகத் தோடமைந்தது புதினம். இப்புதினம் இழிநிலைச் சமூகமாக அடையாளப் படுத்தப்படும் குறவரினத்தின் சமூக நிலைப்பாட்டினூடாக மறவரும் குறவரும் முரண்பட்டு மோதுவதைக் களமாகக் கொண்டமைந்துள்ளது. ஆதிக்கச் சாதியினர், அரசியல் கட்சிகள், அதிகாரவர்க்கம், காவல்துறை ஆகியவற்றால் குறவரினத்துக்கு நிகழும் ஒடுக்குமுறைகளை ‘சலவான்’ புதினம் காட்சிப்படுத்துவதோடு அக்குறவரினம் வெகுண்டெழுந்து அக்களத்திலேயே எதிர்வினையாற்றுகிற போராட்டமும் பதிவு செய்யப்படும் புனைவிலக்கிய மாய்த் திகழ்கிறது.

இப்பெரு நிகழ்வுகளூடாக குறவரினத்தின் சமூகத்தரம், இனத்தொழில்கள் (பன்றிகள் வளர்ப்புப் பணி, கழிவறைத் துப்புரவுப் பணி), பணிசார் அவலங்கள், அவமானங்கள், பொருளியல் அறிவுத்திறன், நாட்டார் வழிபாடு, உரையாடல், நாட்டார் சொல்வழக்குகள், நம்பிக்கைகள் ஆகிய வாழ்வியல் கூறுகளைச் சுட்டுவதாய் ‘சலவான்’ புனைவாக்கம் அமைந்துள்ளது.

‘சலவான்’ புதினம் விவரிக்கும் குறவர் வாழ்வியலுக்கு முன்னோட்டம் பண்டைத் தமிழ் இலக்கியங்களில் விரவிக் கிடக்கின்றன. குறவர்களைக் குறிஞ்சி நில மக்கள் என்பதோடு ஐங்குறுநூறு (252, 256, 259) குறுந்தொகை (வரி.82), நற்றிணை (64), புறப்பாடல் (157) ஆகிய சங்கக் கவிதைகளும் சிலம்பு, குறவஞ்சி ஆகிய இலக்கியங் களும் சுட்டிச் செல்கின்றன. ‘குறவ’ என்பது திராவிடச் சொல்லாக ஆய்வாளரால் விளக்கப்படுவதோடு இருபத்துநான்கு வகைக் குறவர்களை அரசு இனம் கண்டுள்ளதும் குறிப்பிடத் தகுந்தது. அரசு இனங்கண்டுள்ள பிரிவுகளைத் தவிர மக்களால் பாண்டியக்கண்ணன் சுட்டப்படும் உப்புக்குறவர், கறிவேப்பிலைக்குறவர், கேப்மாரிக்குறவர், குஞ்சிக் குறவர், காதுகுத்திக்குறவர், பஞ்சாரம் கட்டிக் குறவர், அம்மி கொத்திக்குறவர், பச்சமலைக் குறவர், பவழமலைக்குறவர், ஊர்க்குறவர், பன்றிக் குறவர், மூச்சுக்குறு, ஓரங்குறு, நாடுதிரிகிறகுறு, தப்பலாயக்குறு, குஞ்சுக்குறு ஆகிய பிரிவுகளும் அடங்கும் (மணி.கோ. பன்னீர் செல்வம், தொடரும் காலனியக் குற்றம், பக்.12-34)

சாதிய அடுக்குகளால் கட்டமைக்கப்பட்ட நம் சமூகம் மனித வாழ்வியலில் வெவ்வேறான நிகழ்வுகளினூடாக அப்படிநிலையை உறுதிப்படுத்தும் விதமாகவே இயங்கிக் கொண்டிருக்கும். இவ்வியக்கத்தின் அசைவை ‘சலவான்’ புதினத்தில் அறிந்து கொள்ளலாம். படிநிலையில் ‘இழிவான சமூகம்’ என்பதைப் புலப்படுத்திக்காட்ட ‘பாலன்’ எனும் குறவரின இளைஞனின் செயல்பாட்டுத் தளத்தில் புதினம் காட்சிப் படுத்துகிறது. புதினத்தில் பாலன் கழிவுநீர் வாய்க்காலில் அடைத்து நிற்கும் குப்பைகளை அகற்றும் பணி நேரத்தில் தன்னை ஒரு பெண் விரும்பிப் பார்க்கும் தினசரி நடவடிக்கையில், “மலம் அள்ளும் நம்மைப் பார்த்து “யாராவது காதலிப்பார்களா?” என்றும், “இந்த உலகத்துலே நாமெல்லாம் ஒரு மனித வர்க்கமாகவே தெரியாது. இதுலே ஒருத்தி காதலிக்கிறாளாக்கும்” (ப.17) எனத் தன்னை உணர்ந்து சிந்திப்பது குறவரினத்தின் இழிநிலையைப் புலப்படுத்திக் காட்டுகிறது.

‘சலவான்’ புதினமானது பன்றிகள் வளர்ப்பையும் மலக்கிடங்குத் துப்புரவையும் தொழிலாகக் கொண்டுள்ள குறவரினத்தின் வாழ்வியலை எடுத்துரைக்கும் படைப்பாகும். படைப்பாளியால் குறவரினத் தொழில்கள் அனுபவப் பகிர்வோடு நுட்பத்துடன் விவரணையாக சலவானில் பதிவு செய்யப்பட்டுள்ளன எனலாம்.

பன்றிகள் கிராமப்புறக் குறவர்களால் வளர்க்கப்படுவதோடு ‘கொறவன் பன்னி’ என்றும் சுட்டப்படுகிறது (மணி.கோ.பன்னீர் செல்வம், தொடரும் காலனியக் குற்றம், பக்.29) இப்பன்றிகள் வளர்ப்பைப் பற்றி ‘சலவான்’ புதினம் மிக விரிவாகவே எடுத்துரைக்கிறது. குறிப்பாகப் பன்றிகளுக்கான உணவு சேகரிப்பு முறை (ப.34), பன்றிகள் உணவருந்தும் திறன் (ப.37) ஆகிய செயல்பாடுகளை எடுத்துரைக்கும் புதினம் “ தாலி சலவான் ஆறு, வெங்கா குட்டி எட்டு, மூளி பன்னி ஒன்பது, அள்ளைமறை பதினொன்று காகுட்டி, சலவான் ஆறு, பொட்டை குட்டிகளே எட்டு ஆமா வெங்காமட்டம் வல்லையே!” (ப.130) எனப் பன்றிகளை அடையாளப்படுத்தும் விதத்தை குறவரின பாலன் கதாபாத்திரத்தின் வாயிலாக விவரிக்கிறது.

“குறவர்கள் பன்றி வளர்ப்பைத் தொழிலாகக் கொண்டவர்கள். குடும்பம் நன்றாக வாழவும், பன்றி பெருகவும் மதுரை வீரனை நினைத்து ஆண் பன்றி ஒன்றை மதுரைவீரனுக்கு நேர்ந்து விடுவர். ஆண் பன்றியைச் சலவாங்குட்டி என்பர் குறவர்” (மணி கோ. பன்னீர் செல்வம், தொடரும் காலனியக் குற்றம், ப.40) என்னும் கருத்து ஒப்புநோக்கத்தக்கது. மேலும் பன்றிகள் பாலுறவை (ப.137) எடுத்துக்காட்டும் புதினமானது, “கரும் முயல் போல் சின்ன பொட்டை குட்டி வெளியேற இதன்பின் ஒன்றன்பின் ஒன்றாக வெளியேறி ஆறு பொட்டை ஐந்து சலவான் நாத்து மெத்தையிலேயே விழுந்தது” (ப.138) எனப் பன்றியின் பேறுகால இயக்கங்களைத் தெளிவாக விவரிக்கிறது.

பன்றி தன் முதல் பேறுகாலத்தில் நான்கு குட்டிகளைத் தனக்கென உணவாக்கியது. எஞ்சிய பன்றிக்குட்டிகளைச் சோர்வில்லாமல் பராமரிக்கும் (ப.143) என்னும் பன்றி வளர்ப்பின் தொழில் நுμக்கச் செய்திகளையும் புதினம் வழி அறிய முடிகிறது. இவற்றோடு ஊரைச் சுற்றி வருகின்ற பன்றிக்கு ‘காய் எடுக்கும் முறை’யும் (ப.144) ‘சலவான்’ புதினம் விளக்குகிறது.

‘சலவான்’ புதினம் குறவரினத்தாரின் துப்புரவுப் பணி பற்றி மிக விரிவாகவும் ஆழமாகவும் எடுத்துரைக் காட்டுகிறது. குறவரினம் மேற்கொண்டிருந்த சுற்றுப்புற, வாழிடம் சார்ந்த துப்புரவுப் பணிகளைப் (ப.16) புதினம் சுட்டிச் சென்றாலும் மனிதக் கழிப்பிடங்களையும் கழிவுகளையும் தூய்மையாக்கும் அவர்களின் வாழ்வியல் அவலங்களை மேலதிகப் பதிவுகளாக்கியுள்ளது. குறிப்பாகக் கழிப்பிடச் செய்திகள் உச்சபட்சமாய் விவரிக்கப்படுகிறது.

‘சலவான்’ புதினம் மனிதக் கழிவறைகளின் வகையையும் அமைப்பையும் (பக்.83-84) எடுத்துக் காட்டுவதோடு “ காய்ந்தும், இளகியும், கொளுக்கட்டை யாகவும் கிடந்தது. தகர தட்டை இடது கையிலேயும், வளிப்பு கரண்டியை வலது கையிலேயும், வைத்துக் கொண்டு குரலெழுப்பினாள்” (ப.84) எனத் துப்புரவின் ஆயத்த தோற்றத்தையும் நிலையையும் விளக்கி பணிச் செயல்களை (பக்.84-89) மிகத் துல்லியமாய் மனதுருவமாகப் பதிய வைக்கிறது.

மேலும், கழிவறைக் கிடங்குகளின் துப்புரவுக்கான முன்னேற்பாடு, “மொதலாளி, பிளேட்டை பேத்தெடுத்துப் போட சொல்லி இருக்கே. அப்பத்தான் ஆவி போகும் இல்லைனா, நாங்க வேல பார்க்கமுடியாது” (ப.114) என்னும் உரையாடலில் வெளிப்பட்டு நிற்கும். கதாபாத்திரங்களான குமரன், பாலன், பாலனின் தந்தை ஆகியோர் மனித மலக்கிடங்குகளைத் துப்புரவு படுத்தும் காட்சி விவரிப்புகளும் (ப.117,125) பணியினூடாக நிகழும் மரணத்தைத் தவிர்க்க குறவரினத்தாரால் செய்யப்படும் நுட்பமான வேலைத்திறனும் (ப.123) ‘சலவான்’ புதினத்தால் அறிய முடிகிறது.

‘சலவான்’ புதினமானது குறவரினத்தாரின் வாழ்வியலில் முக்கிய அங்கமாகத் திகழும் திருமணம் தொடர்பான முன், பின்னான நிகழ்வுகளை விவரிக்கிறது. குறவரினப் பெண்μக்குத் திருமணம் உறுதிப்படுவதை, “புள்ள மேல கள்ளு குடிக்கிறாங்க” (ப.145) என்றும் மணப்பெண்ணை உறுதி செய்ய வந்திருக்கும் மணமகன் வீட்டார், “அய்யாவு பேரன் சின்ன கருப்பன் மகனோட மக குப்பாயி மேல கள்ளு குடிக்க வந்து இருக்கோம்பா” (ப.147) என்பதும் அவ்வினத்தாரின் தனித்துவமிக்க கலாச்சார அடையாளத்தைப் புலப்படுத்திக் காட்டுகிறது. “பொண்μ மேல கள்ளு குடிப்பது” என்பது பற்றி எட்கர் தர்ஸ்டனும் (1993: 21-22) குறிப்பிட்டுள்ளார்.

குறவரினத் திருமணத்திற்கு முன்பு நாட்டார் தெய்வ வழிபாட்டில் அறுபத்தி ஒரு பந்தி இருபத்தியரு தெய்வங்களை வணங்கும் முறைகள், மணப்பெண்ணனின் தாய்மாமன் அப்பெண்ணின் மீதான தன்னுரிமையை விட்டு விலகும் ‘விருந்து வெளக்குதல்’ தாய்மாமன் உடன்பட்டு (கள்ளுக்கு மாற்று) சாராயம் குடித்தல், பெண் தர சம்மதித்து மணப்பெண்ணின் தந்தை சாராயம் குடித்தல், மணமகனின் தந்தை மருமகளாக்கிக் கொள்ள உடன்பாட்டுச் பொருட்களுடன் பன்றிகளும் பெரிய வாளியில் சாராயமும் இடம் பெறுதல் (பக்.145-148) ஆகிய திருமண நிகழ்வுகளும், சடங்குகளும் புதினத்தில் விரிவாக எடுத்துக்காட்டப்படுகிறது.

“குறவர்களின் பண்பாட்டு நடவடிக்கையிலும் பன்றிகள் பயன்பாடு இன்றியமையாதது” என்பதும், “ தற்போது குறவர்கள் தாலி கட்டியே திருமணம் செய்கின்றனர்” என்பதும் இங்கு நோக்கத்தக்கது (மணி. கோ. பன்னீர் செல்வம், தொடரும் காலனியக் குற்றம் பக்.39).

அநேக சாதிகளின் வழக்கத்திற்கு ஏற்பவே குறவரினத்தாரின் இறப்புச் சடங்குகளும் நிகழ்வதை ‘சலவான்’ புதினம் சொல்லிச் செல்கிறது. பச்சை கொண்டு வருதல், பிறந்த, புகுந்த இடத்துக்கோடி போடுதல், மரைக்காலில் நெல், செம்பில் சில்லறை நாணயங்கள் வைத்து ஆலத்தி எடுத்தல், மகன்கள் பூணூல் அணிந்து கொள்ளிக்குடம் எடுத்தல் (பக்.57-59) ஆகிய இறப்புச் சடங்குகள் புதினத்தில் அடையாளப்படுகின்றன.

‘கட்டிடத்து மொய்’ (ப.60) வாங்குதல் எனும் வழக்கத்தில் மூத்த மாமனார் மட்டுமே முதல் நபராகப் பணம் கொடுக்க வேண்டும் என்பது குறவரினத்தாரின் தனித்த நிகழ்வு, சடங்குகள் உறவுகளின் வரிசை முறையான உரிமையை முன்னிறுத்தியே நிகழ்த்தப்பட வேண்டும் (ப.58) என்பது அவ்வினத்தாரிடையே உள்ள எழுதாச் சட்ட விதியாகும்.

‘சலவான்’ புதினமானது பன்றி மாமிசம் குறவரினத்தின் உணவுப் பழக்கங்களில் இடம்பெறுவதை அழுத்தமாகவே பதிவு செய்துள்ளது எனலாம். சான்றாகப் பன்றியைச் சாகடித்து தூய்மைப்படுத்திப் பதமான உணவாகச் சமைக்கும் வரையிலான (பக்.42-44,ப.77,ப.78) செய்தி விவரிப்புகளை பசகின்றி புதினம் எடுத்துக் கூறும். இதைப் போன்றே மதுப்பழக்கமானது சகலவிதமான வாழ்வியல் நிகழ்வுகளிலும் இடம் பெறுவதைக் காணலாம்.

குறிப்பாகக் குறவரினத்தார். ஆண், பெண் இருபாலரும் மதுவருந்துவதை, “ மீண்டும் சென்று ஒரு சொம்பு ஒரு கிளாசும் கொண்டு வந்து அம்மாவுக்கு கிளாசில் ஊத்தி கொடுக்கவும், அதை வாங்கி மடக், மடக்கென்று குடித்துவிட்டு கிளாசை அப்பாவிடம் கொடுத்தாள்” (ப.39) என்ற வரிகளும் இறப்பு வீட்டில் அழுத பெண்கள் கணவன்மாரால் சாராயம் குடித்த பின்பு ஒப்பாரி ராகத்தை ஒழுங்காகப் பாடுவதும் (ப.57)இறப்பு (ப.52), திருமண நிகழ்வுகளிலும் (ப.147) மதுப்பழக்கமானது அதிமுக்கியத்துவம் பெற்றிருப்பதை எடுத்துக்காட்டுகிறது.

கழிவறைக் கிடங்குகளின் துப்புரவுப் பணியில் குறவர்களுக்கு ஏற்படும் கண்கள் இழப்பு, கக்கூஸ் பத்து, மூலக் காய்ச்சல் ஆகியவை தவிர்க்கப்படவும், உடல் வளர்ச்சி மற்றும் குறுக்கு, உடம்பு வலிகளுக்கும் பன்றி மாமிசம் உணவுப் பயனுக்கானது (ப.124,ப.171) என்கிறது ‘சலவான்’ புதினம். மேலும் பன்றியின் விதை அறுத்தெறிந்த இடத்தில் சாம்பல் மருந்தாகத் தடவப்படுவதும் (ப.144) புதினம் வழி அறியமுடிகிறது.

‘சலவான்’ புதினமானது குறவர்களின் வணிகப் பொருளியல் அறிவுத்திறன் (ப.36,ப.37,ப.171), நாட்டார் வழிபாடு (பக்.145-146), உரையாடல் (ப.34,ப.38,ப.45,ப.51,ப.54,ப.61,ப.62,ப.108), நாட்டார் சொல் வழக்குகள் (ப.25,ப.40,ப.77,ப.91,ப.118,ப.171), நம்பிக்கைகள் (ப.122,ப.162,ப.179,ப.174,) ஆகிய கூறுகளையும் எடுத்துக்காட்டும் புதினமாகத் திகழ்கிறது.

பாண்டியக் கண்ணனின் புதினமானது குறவரின வாழ்க்கை ‘சலவான்’ என்னும் ஆண் பன்றிகள் குறியீட்டில் அர்த்தப்படுத்தியுள்ளது. குறியீட்டின் தொனியானது புதினம் முழுமையும் விரவிக்கிடக்க குறவர் வாழ்வியலின் பல்வேறு கூறுகள் பாசாங்கின்றி விலாவாரியாகப் படைப்பாளியால் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. இவ்வெடுத்துரைப்பு என்பது தீவிரத்தன்மையோடு சாதியப் படிநிலைவாழ் வாசகமனங்களினூடாக அதிர்வலைகளை ஏற்படுத்தும் முயற்சியாகும். படைப்பாளி பாண்டியக்கண்ணனின் முயற்சி வெற்றியடைந்துள்ளது எனக் கூறலாம்.

சலவான் | பாண்டியக் கண்ணன் | பக் 239 | ரூ. 120 | பாரதி புத்தகாலயம்

Pin It