தலித் முரசு' மார்ச், 2010 இதழில்  வெளிவந்த '33 சதவிகித மோசடி' என்ற தலைப்பிலான கட்டுரை – நல்ல விதமாகவோ, கெட்டவிதமாகவோ பெருமளவில் கவனத்தை ஈர்க்கும் என்று நினைத்திருந்தோம். காரணம், இதற்கு முன்னர் தலித் முரசில் வெளிவந்த என்னுடைய கட்டுரைகளுக்கு கிடைத்த எதிர்வினைகள்தான்! எழுத வந்த இந்தப் பத்தாண்டுகளில் "தலித் முரசில்' வெளிவந்த எத்தனையோ கட்டுரைகளுக்கும் கவிதைகளுக்கும் (சாதிய அத்துமீறல்கள், பெண்ணியம், உட்சாதி பூசல்கள், சிறுபான்மையினர் மீதான ஒடுக்குமுறை, இனவெறி, இந்து வெறி, கருத்துச் சுதந்திரம்) வரவேற்புகளும் பாராட்டுகளும் கிடைத்திருக்கின்றன.

குறிப்பிட்ட இரண்டு சூழல்களில் மட்டும் கடுமையான எதிர்ப்புகளை சந்தித்திருக்கிறோம். இதில், தாயின் பெயரை முதல் எழுத்தாகப் போடும் சட்டவரைவை வரவேற்று, நான் எழுதிய கட்டுரைக்கு "உணர்வு' இதழ் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தது. தந்தை பெயரைத்தான் முதல் எழுத்தாகப் போட வேண்டும் என்றும், இல்லையெனில் பண்பாடு கெட்டுப் போகும் என்றும் அவர்கள் தரப்பில் எதிர்வினைக் கட்டுரைகள் வெளிவந்தன. இரண்டு முறை "உணர்வு'க்கு பதிலளித்துவிட்டு, சில விஷயங்களை சிலருக்குப் புரிய வைக்கவே முடியாது என சோர்ந்து போய் விட்டுவிட்டோம். எனினும், முஸ்லிம் பெண்களின் நிலை பற்றின ஆரோக்கியமான விவாதமாக அது அமைந்ததில் மகிழ்ச்சியே!

dalit_women_343இரண்டாவது சூழல், உட்சாதி ஒடுக்குமுறைகள் பற்றி எழுதும் போதெல்லாம் கிளம்பும் மோசமான சலசலப்புகள். அருந்ததியர் மீதும், புதிரை வண்ணார் மீதும் பள்ளர் மற்றும் பறையர்கள் நிகழ்த்தும் சாதிய வன்கொடுமைகளை  சுட்டிக்காட்டும் போதெல்லாம் "தலித் முரசு' வன்மையாகக் கண்டிக்கப்பட்டது, தாக்கப்பட்டது. விடுதலைச் சிறுத்தைகள் அரசியலுக்கும் அதிகார வட்டத்திற்குள்ளும் வருவதற்கு முன்பு இத்தகு கண்டனங்கள் வெளிவந்ததில்லை. என்னுடைய தொடக்க கால கட்டுரைகளில் அருந்ததியர் பற்றியும், புதிரை வண்ணார் குறித்தும் களப்பணி செய்து கட்டுரைகள் எழுதியபோது, பள்ளரும் பறையரும் இவர்கள் மீது செலுத்தும் அதிகாரத்தையும் ஒடுக்கு முறைகளையும் பதிவு செய்திருக்கிறேன். அப்போதெல்லாம் கிளம்பாத எதிர்ப்பு, பறையர்கள் எல்லோரும் விடுதலைச் சிறுத்தைகளாக உருமாறிய பின்னர், ஒவ்வொரு முறை உட்சாதி மோதல்கள் பற்றி கட்டுரைகள் வெளிவரும் போதெல்லாம் கிளம்பியது.

இந்த இரண்டு சூழல்களும் உணர்த்திய உண்மை என்னவெனில், சிறுபான்மையினர் நிலை பற்றி மாய்ந்து மாய்ந்து எவ்வளவு வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால், முஸ்லிம் பெண்களின் நிலை குறித்து விவாதிக்கக்கூடாது. அவர்களுக் கான உரிமைகள் பற்றியும், முன்னேற்றம் குறித்தும் சிந்திக்கவே கூடாது. அதே போல, சாதிய அத்துமீறல்கள், ஒடுக்குமுறைகள், வன்கொடுமைகள் பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் உட்சாதி ஒடுக்குமுறை பற்றி வாய் திறக்கவே கூடாது.

இத்தகைய வெளிப்படையான எதிர்ப்புகள், உணர்வு ரீதியாக எந்த விதத்திலும் எங்களை பாதிக்கவில்லை. ஆனால், 33 சதவிகித மோசடிக்கு – பெரியாரிஸ்டுகள், பெண்ணியவாதிகள், சிறுபான்மையினர், இயக்கவாதிகள், அறிவுஜீவிகள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், இலக்கியவாதிகள் என எல்லா தரப்பினரும் காத்த கடுமையான அமைதி, அய்யத்தை ஏற்படுத்தியதோடு, சில உண்மைகளைப் புரிய வைத்திருக்கிறது. இங்கு பெண்களுக்கெதிரான ஒடுக்குமுறைகள் பற்றி விவாதிக்கிற சரக்கு மட்டுமே விற்பனையாகும். பெண்களின் சாதிய உணர்வுகள் பற்றியோ, உரிமை மீறல்கள் பற்றியோ பேசுவது யாருக்குமே பிடிக்காது.

மிகவும் நம்பிய, எதிர்பார்த்த சில பெரியாரிஸ்டுகள், பெண்ணியவாதிகள் மற்றும் அறிவுஜீவிகள் கூட இந்த விஷயத்தை கண்டு கொள்ளவில்லை! இந்த கள்ள மவுனம், மிக மிக காரணமிக்கதாக எனக்குப்படுகிறது. இந்தச் சூழல், பெண்களின் சாதிய உணர்வுகள் பற்றிய மேலும் சில விஷயங்களை விவாதித்தாக வேண்டிய கட்டாயத்தை உருவாக்கியிருக்கிறது. பெண்களின் "ஒன்றே குல முழக்க'த்தின் மீதும், அவர்களை ஆதரிக்கும் "சமத்துவ சிந்தனை' ஆண்கள் மீதும் சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியச் சூழலில், ஒவ்வொரு மனிதருக்கும் அவர்களுக்கான ஆதிக்கத்தையும் அடிமைத்தனத்தையும் போதிப்பது சாதி மட்டுமே! ஒருவர் ஆதிக்க வெறியோடு நடந்து கொள்கிறார் எனில், அவரிடம் சாதி உணர்வு மேலோங்கி இருக்கும் என முடிவு செய்து கொள்ளலாம். ஒருவர் அடிமைச் சிந்தனையோடு செயல்படுகிறார் எனில், அதுவும் சாதியால் விளைந்ததே. இங்கு, சாதி உணர்வின்றி ஒருவர் வளரவே முடியாது என்ற சூழல் நிலவுகிறது. ஆதிக்க சாதி ஆண்கள் தங்களின் இருப்பை சாதியாலேயே நிலை நிறுத்துகிறபோது, சாதி இந்து பெண்கள் அவரவர் சாதிக்கான ஒரு கவுரவச் சின்னமாகவே வளர்க்கப்படுகின்றனர். பெண்ணை வளர்ப்பதையோ, படிக்க வைப்பதையோ விட, அவர்களுடைய தகுதிக்கு உகந்த ஜாதிக்கார மாப்பிள்ளையை மணம் முடித்து வைப்பதுதான்  ஆதிக்க சாதிக்கான கவுரவமாகக் கருதப்படுகிறது. காரணம், ஒரு சாதியின் வம்சாவளியைத் தழைக்கச் செய்யப் போகிறவள் பெண்தானே!

தாழ்த்தப்பட்டவர்கள் தங்களுக்கான மரியாதையை சரியாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்களா என எந்நேரமும் கண்காணிப்பது, சாதி இந்து பெண்களின் வேலையாக இருக்கிறது. தெருவில் செருப்புப் போட்டு நடக்கிறார்களா? துண்டு தோளில் கிடக்கிறதா, இடுப்பில் இருக்கிறதா? பேசும்போது கைகளை கட்டியிருக்கிறார்களா? உட்காரும்போது குத்த வைக்கிறார்களா? தலை குனிந்திருக்கிறதா? கண்கள் தாழ்ந்திருக்கிறதா? பேசும் போது அய்யா, அம்மா அல்லது சாமி என்று குறிப்பிடுகிறார்களா? ஊர்க் குளத்தில் தண்ணீர் எடுக்கிறார்களா? சுடுகாட்டிற்கு எந்தப் பாதையைப் பயன்படுத்துகிறார்கள், வீட்டு வேலைக்கோ, தோட்ட வேலைக்கோ கூப்பிட்ட குரலுக்கு மறுப்பு சொல்லாமல் ஓடி வருகிறார்களா என தாழ்த்தப்பட்டவர்களின் அசைவுகளை நெருங்கிக் கண்காணிப்பது ஆதிக்க சாதி பெண்களே!

இவர்கள் தங்களுக்குள் அனுபவிக்கும் உரிமை மீறல்கள் பற்றி கவலைப்படுவதில்லை. சாதிக்கு ஏதேனும் களங்கம் உண்டானால், முதலில் கொந்தளிப்பதும் எதிர்வினையாற்றுவதும் குடும்பங்களில் கொம்பு சீவி வளர்க்கப்பட்ட பெண்கள்தான். இது, ஏதோ கதையல்ல. இன்று ஆதிக்க சாதி குடும்பங்களில் பார்க்க முடிகிற குணம் இது. சாதி தரும் ஆதிக்க உணர்வையும், பெண் என்பதால் உருவாக்கப்பட்ட அடிமைத்தனங்களையும் ஒரு சேர சுமந்தே ஆதிக்க சாதி பெண்கள் வளர்கின்றனர். இந்த இருவேறு மனநிலைகளுக்கிடையே நடக்கும் போராட்டத்தில் வெல்வது, சாதி தரும் ஆதிக்க உணர்வேயன்றி பாலியல் ரீதியான அடிமைத்தனம் அல்ல.

வீட்டைவிட்டு வெளியேறி சமூக வட்டத்திற்குள் வரும் சாதி இந்துப் பெண்கள், மிக இயல்பாக தங்களின் அடிமைத்தனங்களுக்கு எதிராக மட்டுமே குரல் கொடுக்க விழைகின்றனர். தாங்கள் சுமந்து கொண்டிருக்கும் ஆதிக்க உணர்வு சாதியால் வந்தது என்பதைப் புரிய மறுத்து, பாலியல் அடிமைத்தனங்களை எதிர்ப்பதால் உண்டானதாக திசை திருப்புகிறார்கள். இன்று, பெண்ணியவாதிகளாக, பெரியாரிஸ்டுகளாக, எழுத்தாளர்களாக, ஊடகவியலாளர்களாக, பொதுவுடைமைவாதிகளாக, இலக்கிய மற்றும் இயக்கவாதிகளாக நாம் சந்திக்கும் ஒவ்வொரு பெண்ணிடமும் முரண்பட்ட அல்லது மடைதிருப்பப்பட்ட சாதிய உணர்வு இருக்கத்தான் செய்கிறது. இந்த ஆதிக்க உணர்வை போராட்டக் குணமாகவோ, தலைமைப் பண்பிற்கான தகுதியாகவோ நாம் வரித்துக் கொள்ள முடியாது. அப்படி இருக்குமெனில், இங்கு நிறைய போராளிகளையும், நல்ல தலைவர்களையும் நாம் பெற்றிருக்கக் கூடும்!

தமிழகத்தில் பெண்களை ஒன்று திரட்டும் இயக்கம், அமைப்பு என்று எதுவுமில்லை. பொதுவுடைமைக் கட்சிகளின் பெண்கள் பிரிவுகள் செயலற்றுக் கிடக்கின்றன. பெரியாரியவாதிகள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் இப்படி எல்லாரும் தனித்தனியாகவே இயங்கிக் கொண்டிருக்கிறார்களே ஒழிய, ஒன்றிணைந்து செயல்படும் போக்கு அற்றுப் போய்விட்டது. இந்த நிலைமை ஏன்? தன் அடிமைத்தனங்களையும், தன் மீது சுமத்தப்படும் இழிவுகளையும் தனக்கெதிராகத் திருப்பப்படும் சவால்களையும் எதிர்கொள்ள நினைக்கும் ஒவ்வொரு ஆதிக்க சாதிப் பெண்ணும் ஊன்றுகோலாக பற்றிக் கொள்வது, ஆதிக்க உணர்வு ஒன்றைத்தான். அதுவொன்றுதான் அவர்களை செயல்பட வைக்கிறது. அதுதான் அவர்களுக்கான அங்கீகாரங்களைப் பெற்றுத் தருகிறது.

தலித்தை திருமணம் செய்து கொண்ட சாதி இந்து பெண்ணியவாதி ஒருவர், போகும் இடமெல்லாம் தான் ஒரு தலித்தை திருமணம் செய்திருப்பதை பெருமையாகப் பதிவு செய்தது, அவருடைய சாதி ஆதிக்கத்தின் வெளிப்பாடின்றி வேறில்லை. மேடைப் பேச்சுகள், பேட்டிகள் என எதிலும் விட்டு வைக்காமல் வாழ்க்கை கொடுத்த மனநிலையோடு, தன்னுடைய சாதியையும் கணவரின் சாதியையும் அவர் பதிவு செய்கிறார். இது அவசியமற்றது. சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்வது சாதியை மறுக்கவும் மறக்கவும்தான். ஆனால், அதையே ஒரு தகுதியாக சொல்லிக் கொண்டிருந்தால், சாதி அங்கே தோற்கவில்லை; வென்றுவிட்டதாகவே பொருள்.

தலித் சமூகத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்ய விரும்புவதாகவும், வென்றெடுக்க முடியாத அச்சமூக ஆண்களின் அடிமைத்தன சிந்தனையும், தாழ்வு மனப்பான்மையும் அச்சத்தை உண்டாக்குகிறது என்று தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டார், ஆதிக்க சாதி பெண்ணியவாதி ஒருவர். உண்மைதான். தலித் சமூகத்தினர் தங்களின் தாழ்வு மனப்பான்மையை வென்றெடுப்பது, அவர்களுக்கிருக்கும் சவால்களில் முக்கியமானது. அதே சவால்தான், ஆதிக்க சாதியினர் குறிப்பாக, பெண்கள் தங்களின் உயர்வு மனப்பான்மையைத் தோற்கடிப்பதிலும் இருக்கிறது. அடிமை உணர்வு எப்படி வாழ்க்கைக்கு எதிரானதோ, அதைப் போலவே ஆதிக்க உணர்வும். இவையிரண்டையும் வெல்லும்போதுதான் சமத்துவம் மலர்கிறது. தலித் சமூகத்தினரின் தாழ்வு மனப்பான்மை சமூக நீதிக்கு பங்கம் விளைவிப்பதை விடவும் பன்மடங்கு அதிகமாக, ஆதிக்க சாதியினரின் உயர்வு மனப்பான்மை அல்லது ஆதிக்க உணர்வு, கேடு விளைவிக்கிறது. தலித் சமூகத்தினரின் தாழ்வு மனப்பான்மையை நினைத்து அச்சப்பட்ட ஆதிக்க சாதி பெண்ணியவாதி, தன்னிடம் நிரந்தரமாகத் தங்கிவிட்ட ஆதிக்க உணர்வைப் புரிந்து கொள்ளவே இல்லை அல்லது அதை ஒரு பொருட்டாகவே கருதவில்லை.

தனிநபர்கள் மட்டுமல்ல, பெண்கள் இயக்கங்களும் அமைப்புகளும் சாதிக்கு எதிராக ஒரு துரும்பைக் கூட நகர்த்தவில்லை. பொதுவுடைமை இயக்கங்களின் பெண்கள் அமைப்புகள், சாதிரீதியான ஒடுக்குமுறைகளுக்கும் அத்துமீறல்களுக்கும் குரல் கொடுப்பதில்லை. அது சார்ந்து வரும் புகார்களை ஏற்பதில்லை என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கின்றன. பொதுவுடைமைக் கட்சிகளுக்கு சாதி இரண்டாம்பட்ச பிரச்சனையாக இருப்பதைப் போலவே, பெண்கள் இயக்கங்களுக்கு

சாதிய அத்துமீறல்கள் அவர்களது வரையறைகளுக்குள் வராத குற்றம். குடும்ப வன்முறைகளுக்கும், அரசியல் அங்கீகாரத்திற்கும், பாலியல் துன்புறுத்தல்களுக்கும் குரல் கொடுக்கும்போது, சாதிய வன்கொடுமைகள் ஒரு துரும்பாகக் கூட பெண்ணியவாதிகளை அசைப்பதில்லை.

கிராமப்புறங்களில் ஆதிக்க சாதி ஆண்களால் ஏமாற்றப்பட்ட, வன்கொடுமைகளுக்கு ஆளான எத்தனையோ பெண்கள் நிராதரவாக நிற்கிறார்கள். இவர்களுக்கான ஆதரவை பெண்கள் அமைப்புகள் கொடுப்பதில்லை. காவல் நிலையங்களில் நிரம்பி வழியும் ஆதிக்க சாதிக்காரர்களிடம் புகாரைக் கூட பதிவு செய்ய வழியின்றி கண்ணீரோடு திரும்பி வருகின்றனர் பாதிக்கப்பட்டவர்கள். ஜாதிக்கு ஜாதி இயக்கங்களும் கட்சிகளும் இருக்கும் இந்நாட்டில், ஜாதிக் கட்சிகள் ஒன்றோடு ஒன்று கூட்டு சேர்ந்து செயல்படுவதால், பாதிக்கப்பட்டவர்கள் நீதியின் கதவுகளை எட்டக்கூட வழியின்றி தவிக்கின்றனர். வலுவான பெண்கள் அமைப்புகளும், போராட்ட  இயக்கங்களும் நம்மிடையே இல்லாமல் போனது மிகப் பெரிய தோல்வியே.

சாதியொழிப்பை தங்களின் செயல்திட்டங்களில் முதன்மைப்படுத்தாதவரை, பொதுவுடைமை இயக்கங்களாலும் அவைசார்ந்த பெண்கள் அமைப்புகளாலும் தலித் மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு எந்த நலனும் ஏற்படப் போவதில்லை. 33 சதவிகித பெண்கள் இடஒதுக்கீட்டுக்கான சட்டவரைவை ஆதரித்துப் பேசிய மார்க்சிஸ்ட் கட்சியின் பிருந்தா காரத், “பாரம்பரிய வழக்கங்களால் பெண்கள் இன்னும் பண்பாட்டுச் சிறைகளில் அடைபட்டுக் கிடக்கின்றனர். இந்நிலையில் இந்தப் பெண்கள் இடஒதுக்கீடு, பண்பாட்டையே மாற்றியமைக்கும். பெண்கள் மாயவித்தைக்காரர்கள் அல்லர். அதனால் ஒரே இரவில் மாற்றங்களை கொண்டு வருவார்கள் என எதிர்பார்க்கத் தேவையில்லை. உணர்வுப்பூர்வமான அரசியல் சூழலை பெண்கள் உருவாக்குவார்கள் என என்னால் உறுதியாகக் கூற முடியும். இந்த சட்டவரைவு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின  முஸ்லிம் பெண்களுக்கு பலனளிக்கும்'' என்றார். உள் ஒதுக்கீடு இன்றி, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடி மற்றும் முஸ்லிம் பெண்கள் 33 சதவிகிதத்தில் எப்படிப் பயன்பெறுவார்கள் என்பதுதான் நம் கேள்வி. உள்ஒதுக்கீட்டை ஒரு பொருட்டாகவே மதிக்காத மார்க்சிஸ்ட் பிருந்தாவிற்கு, இந்த கேள்விக்கான பதில் தெரிந்திருக்க நியாயமில்லை.

இட ஒதுக்கீடு என்ற ஒன்று இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம் பிடிப்பதற்கு முன்பு அரசு மய்யங்களிலும், அரசியலிலும், அதிகாரத்திலும் இருந்தவர்கள் யாரென்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். அந்நிலை இன்றும் மாறிவிடவில்லை. அரசியலில் மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் ஆதிக்க மற்றும் முன்னேறிய சாதியினர்தான் நிறைந்திருக்கிறார்கள். கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் கிடைத்த இடஒதுக்கீடு ஒன்றுதான் – தலித், பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின மற்றும் முஸ்லிம் சமூகத்தினரை ஓரளவிற்காவது முன்னேற்றியிருக்கிறது. ஒதுக்கப்பட்ட இடங்களையும், இவர்களின் முன்னேற்றத்திற்கு வழங்கப்படும் நிதியையும் கூட எட்ட முடியாத நிலையில் ஒடுக்கப்பட்டோர் தவிக்கின்றனர்.

dalit_woman_327பிருந்தா காரத் குறிப்பிடுகின்ற பண்பாட்டுத் தடை, பார்ப்பன மற்றும் முன்னேறிய சாதிப் பெண்களுக்கு அல்ல. சாதி – மதக் கட்டுப்பாடுகள் கூட்டு சேர்ந்து ஒடுக்க, வறுமை கழுத்தை நெரிக்க, சாதி – மத ரீதியாக ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு பண்பாட்டு விதிமுறைகள் கூடுதல் சுமை. இந்தியாவின் அடையாளமாக முன்னிறுத்தப்படும் பண்பாடு என்பது, ஆகாயத்தில் தொற்றி நிற்கும் விஷயமில்லை.மதமும் சாதியும் இணைந்து உருவாக்கிய கட்டமைப்புகளும் கட்டுப்பாடுகளும்தான் இங்கு பண்பாடாகப் போற்றப்படுகின்றன, பாரம்பரியமாகக் கொண்டாடப்படுகின்றன. சாதியக் கொடுமைகளும், பெண்ணடிமைத்தனங்களும் பண்பாட்டின் கூறுகள்தான். இந்த பண்பாட்டைக் கட்டிக் காக்கும் பொறுப்பு, பெண்களிடம் திணிக்கப்பட்டிருக்கிறது.

மதத்தை எதிர்க்காமல், சாதியை அழிக்காமல் வெறுமனே அரசியல் அதிகாரத்தின் மூலம் பண்பாட்டை மாற்றியமைத்துவிட முடியும் என்று சொல்வது எவ்வளவு தட்டையான ஒரு வாதம்!

பெண்கள் இடஒதுக்கீட்டை வலியுறுத்தி பிருந்தா ஆற்றிய உரை, பெருமளவில் கவனத்தை ஈர்த்து பாராட்டுகளைப் பெற்றது. பிருந்தா ஒரு முன்னேறிய சமூகத்தவராக இல்லாமல் போயிருந்தால், உள் ஒதுக்கீட்டில் இருக்கும் நியாய தர்மங்கள் அவருக்குப் புரிந்திருக்கக் கூடும். பிருந்தா காரத் போன்றவர்களுக்கு அரசியல் அதிகாரமும்  முன்னேற்றமும் சாத்தியப்பட்டது, இட ஒதுக்கீட்டினால் அல்ல. அது, அவர்களுக்கு தேவையும் இல்லை. இட ஒதுக்கீடு இருந்தாலும் இல்லையென்றாலும், ஆதிக்க சாதிப் பெண்களுக்கு எல்லா இடங்களிலும் வாய்ப்பு கிடைக்கிறது. இடஒதுக்கீடு இருந்தால் மட்டுமே முன்னேற்றம் சாத்தியம் என்ற நிலையில் வாழ்வோர் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, முஸ்லிம் பெண்கள்தான். இவர்களின் முன்னேற்றம்தான் இந்திய அடிமைப் பண்பாட்டினை அசைத்துப் பார்க்க முடியும். இவர்களின் பங்கேற்புதான் இந்திய அரசியல் சூழலை சுரணையுள்ளதாக மாற்றவல்லது. அதனால் கொடுக்கப்படுவது கொஞ்சமே என்றாலும், அதில் பெருவாரியான பங்கை இவர்களுக்குதான் பகிர்ந்தளித்தாக வேண்டும்.

உள் இடஒதுக்கீடு என்பது விளையாட்டல்ல. அதைக் கோருபவர்களை கேலிக் கூத்தர்களாகப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. "உள்ஒதுக்கீடு இன்றி பெண்கள் சட்டவரைவு நிறைவேற்றப்படுமானால், விஷம் குடித்து சாவேன். சாதி ஒழிகிற வரை எந்த ஒதுக்கீடும் உதவப் போவதில்லை' என்று சொன்ன சரத் யாதவின் குரல் உணர்ச்சிவசப்பட்டதாக இருந்தாலும் கருத்து ஆழமானது. சாதி அழியாமல் இங்கு சமத்துவம் சாத்தியமில்லை. சாதி அழியாமல் பெண்கள் ஒன்றிணைய முடியாது. பெண்கள் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டால், முன்னேறிய மற்றும் ஆதிக்க சாதிப் பெண்கள் அடித்தட்டு பெண்களுக்கு வாய்ப்புகளை வழங்கி, ஒதுங்கிக் கொள்வார்கள் என்று சொல்வது ஒரு மாயக் கற்பனை. அரசியல் என்பது மிக நிச்சயமாக ஒரு போட்டிக் களம். விட்டுக் கொடுத்தல் என்பது இங்கு கெட்ட வார்த்தை. ஒடுக்கப்பட்ட மற்றும் அடித்தட்டுப் பெண்கள் இந்தப் போட்டிக் களத்திற்கு வர வேண்டுமெனில், உள்ஒதுக்கீட்டினால் மட்டுமே அது சாத்தியப்படும்.

இந்த உண்மை தெரிந்தே இருந்தும் அறிவுஜீவிகளும் பெண்ணியவாதிகளும் போராளிகளும் உள் ஒதுக்கீட்டிற்கு குரல் கொடுக்க மறுக்கின்றனர். உள் ஒதுக்கீடு இன்றி பெண்கள் சட்டவரைவு தாக்கல் செய்யப்பட்டதைக் கண்டித்து, எந்த எழுத்தாளரும் எழுதவில்லை. எந்த பெண்கள் அமைப்புகளும் போராட்டம் நடத்தவில்லை. பெரியாரியவாதிகளும் பெண்ணியவாதிகளும் குரல் எழுப்பவில்லை. இந்த சூழல் உணர்த்தும் உண்மை மிக பயங்கரமானது. சாதி என்ற ஒன்று உயிர்ப்போடு இருக்கிற இந்த சமூகத்தில், நாளொன்றுக்கு மூன்று தலித் பெண்கள் சாதி ரீதியாக வன்புணர்வுக்கு ஆளாகும் நிலையில், சாதியை ஒரு பொருட்டாக இவர்கள் யாரும் மதிக்கவில்லை. அதைக் கடந்து வந்துவிட்டதாக இவர்கள் அனைவரும் அரிதாரம் பூசிக் கொண்டிருக்கின்றனர். குடும்பச் சிறைகளை தகர்த்து வெளியே வந்ததாலேயே சாதி – மத இழிவுகளையும் கடந்து வந்துவிட்டதாக நம்புகின்றனர்.

எத்தனைதான் பகுத்தறிவு விஷயங்களைப் பேசினாலும், சாதி தரும் சலுகைகளை இவர்கள் யாரும் அனுபவிக்காமல் விடுவதில்லை. எல்லா துறைகளிலும் தங்கள் சாதி ஆதிக்கத்தை பெண்கள் நிறுவத்தான் செய்கிறார்கள். ஊடகவியலாளர்களாகவோ, எழுத்தாளர்களாகவோ, இலக்கியவாதிகளாகவோ, பெண்ணியவாதிகளாகவோ இருப்பது, எந்த விதத்திலும் ஒரு சமூகப் புரிதலை இவர்களிடம் தோற்றுவிக்கவில்லை. பார்ப்பனப் பெண்கள் எங்கே இருந்தாலும் தங்களின் "அவா பாஷை'யைத்தான் பேசுகின்றனர். தொலைக்காட்சியின் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பார்ப்பனப் பெண்கள், மிகக்  கொச்சையாக தங்களின் சாதி அடையாளத்தைப் பதிவு செய்கின்றனர். எந்தத் தடையுமின்றி ஊடகங்களும் அதை ஒளிபரப்புகின்றன. சாதி அடையாளம் என்பதை விடவும் பார்ப்பனர்களின் பண்பாட்டு அடையாளமாகவே இவை பிரபலப்படுத்தப்படுகின்றன. மடிசாரும், அவா பாஷையும், குடுமியும் பூணூலும் பெரியாரால் கேலி செய்யப்பட்டு, கேள்விக்குள்ளாக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வந்த நிலையில், தற்பொழுது மீண்டும் தைரியமாக, ஊடகங்களின் உதவியோடு, தங்களின் சாதி அடையாளத்தை வெளிப்படுத்தத் துணிந்திருக்கின்றனர் பார்ப்பனர்கள்! "ஜெயா' தொலைக்காட்சியில் வெளிவரும் "எங்கே பிராமணன்?' தொடர் ஒரு சிறு எடுத்துக்காட்டு!

விஜய் தொலைக்காட்சியில் "நீயா நானா' நிகழ்ச்சியில் கலப்புத் திருமணம் பற்றிய விவாதத்தில் பங்கேற்ற – அய்.டி. நிறுவனத்தில் வேலை செய்யும் பார்ப்பன இளம்பெண் – "பூர்வ ஜென்மத்தில் பாக்கியம் செய்ததாலேயே நான் பார்ப்பனராகப் பிறந்திருக்கிறேன்' என்றார். அப்படியெனில், இந்த தலைமுறையினருக்கும் சாதியின் விளக்கங்கள் மிகச் சரியாக போதிக்கப்படு கின்றன. பார்ப்பனராகப் பிறப்பது பாக்கியம் என்றும், மற்ற சாதிகளில் பிறப்பது பாவம் என்பதும் இன்றும் சாதிக்கான விளக்கமாக சொல்லித் தரப்படுகின்றன. இப்படியொரு மனநிலை பரவியும் பதிந்தும் கிடக்கும் போது, பார்ப்பன மற்றும் முன்னேறிய சாதி பெண்களிடமிருந்து ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்புவது முட்டாள்தனமில்லையா?

இந்தியாவில் 20 கோடி பெண்கள், கல்வியறிவு இன்றி இருக்கிறார்கள். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் முப்பதிலிருந்து 40 சதவிகிதமாக அதிகரிக்கிறது. பதினெட்டு வயதுக்குட்பட்ட பெண்களுக்கு திருமணம் நடந்து குழந்தை பிறக்கிறது. பெண் சிசுக் கொலையும் வரதட்சணைக் கொடுமைகளும் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன. இப்படி பெண்களுக்கெதிரான எல்லா கொடுமைகளிலும் அதிகளவில் பாதிக்கப்பட்டிருப்பது, நிச்சயமாக ஒடுக்கப்பட்ட மற்றும் அடித்தட்டுப் பெண்கள்தான். பெண்களுக்கெதிரான பாலியல் மற்றும் பண்பாட்டு அடிமைத்தனங்களோடு சேர்ந்து, சாதிக் கொடுமைகளையும் அனுபவிக்கின்றனர் தலித் பெண்கள். இவர்கள் வாழ்வில் இடஒதுக்கீட்டால் கிடைக்கும் அரசியல் அதிகாரம், சிறு மாற்றத்தைக் கூட உண்டாக்கப் போவதில்லை.

தனியார் நிறுவனங்களிலும் நவீன துறைகளிலும் கலை மற்றும் ஊடகத் துறைகளிலும் உயர் பொறுப்புகளை பெண்கள் வகிக்கின்றனர். இட ஒதுக்கீடின்றி தகுதியின் அடிப்படையிலேயே பெண்கள் இதை சாதித்திருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படி சாதித்திருப்பவர்களின் சாதிய பின்னணியை கணக்கெடுத்தால், எந்தத் தகுதியின் அடிப்படையில் அவர்கள் முன்னேறினார்கள் என்ற உண்மை வெளிச்சத்துக்கு வரும். இந்தியாவைப் பொறுத்தவரை, தகுதி என்ற வார்த்தைக்கு சாதி அந்தஸ்து என்ற ஒரே அர்த்தம்தான். இடஒதுக்கீடு தேவையில்லாத நவீன துறைகளில் மட்டுமல்ல, இடஒதுக்கீடு கட்டாயமாக்கப்பட்ட அரசுத் துறைகளிலும் கூட, உயர் மட்டத்தில் இருப்பது ஆதிக்க சாதியினர்தான்.

தலித், பழங்குடியின மற்றும் முஸ்லிம்களுக்கான இடங்கள் நிரப்பப்படாமல் விடப்பட்டிருக்கின்றன. படித்து பட்டம் பெற்ற எத்தனையோ பெண்களும் ஆண்களும் அரசு வேலைக்கு விண்ணப்பித்துவிட்டு காத்திருக்கிறார்கள். இடஒதுக்கீடு சமூக உரிமையாக இருந்தும், அதை அனுபவிக்க விடாமல் சாதி ஆதிக்கம் தடுக்கிறது. அரசு நிறுவனங்களே இவ்வளவு மோசமாக செயல்படும் போது, அரசியல் கட்சிகளிடம் என்ன நியாயத்தை நாம் எதிர்பார்த்து விட முடியும்? பெண்கள் சட்டவரைவில் உள் ஒதுக்கீடு இல்லையென்றால், நிச்சயம் ஆதிக்க சாதி தலைமைகளின் மனைவிகளோ, மகள்களோ, சொந்தக்கார பெண்மணிகளோதான் சட்டமன்றங்களிலும் நாடளுமன்றத்திலும் இடம் பிடிப்பார்கள். அதையும் நாம் வேடிக்கை பார்க்கத்தான் போகிறோம்.

ஆதிக்க சாதியைச் சார்ந்த பெண்ணியவாதிகளும் பெண்ணுரிமைகளுக்காக தட்டையாக குரல் கொடுக்கும் ஆண்களும் தங்களை சமத்துவவாதிகளாகவும் பகுத்தறிவாளர்களாகவும் காட்டிக் கொண்டு, இது போன்ற மோசடிகளுக்கு மவுனமாகத் துணை நிற்கிறார்கள். பெரியார் – மத எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, பெண்ணடிமைத் தகர்ப்பு என இவற்றை ஒன்றிணைத்துப் போராடியதன் காரணம், மூன்றும் பின்னிப் பிணைந்தவை; பிரிக்க முடியாதவை. ஆனால்,  நவீனப் போராளிகள் தனித்தனி குழுக்களாகவும், தொடர்பற்றவர்களாகவும் இயங்குகின்றனர். மதத்தை எதிர்க்காமல், சாதியை அழித்துவிட முடியும் என நினைக்கின்றன சில இயக்கங்கள். சாதியை அழிக்காமலேயே பெண்ணடிமைத்தனத்தை ஒழிக்க முனைகின்றன பெண்கள் அமைப்புகள். பெண்களை விடுவிக்காமலேயே மதத்தைப் பரப்பவும் சீர்திருத்தவும் முயல்கின்றனர் மதவாதிகள். இவை மூன்றும் ஆபத்தானதோர் ரசாயனக் கலவை போல சமூகத்தில் ஊறிக்கிடக்கின்றன.

தங்கள் வசதிக்குட்பட்ட விஷயங்களுக்கு பெரியாரையும், அம்பேத்கரையும் சேர்த்துக் கொள்வதைத் தவிர, சாதி – மதங்களுக்கு எதிரான வலுவான, நிலையான எதிர்ப்பை யாருமே வெளிப்படுத்துவதில்லை. பாலினத்தை ஒரு பகடையாகப் பயன்படுத்தி, செல்லுமிடமெல்லாம் அதிகாரங்களைக் கைப்பற்றவும் அரியணையில் வீற்றிருக்கவும் முயலும் பெண்கள், மதங்களை எதிர்த்து, சாதியை ஒழிக்க களமிறங்கும் போது – அவர்கள் சமத்துவத்திற்கு உழைக்கிறார்கள் என்று நம்பலாம்.

பெண்கள் சார்ந்து இயங்கும் அமைப்புகள் சாதி, மதத்தை எதிர்ப்பதை செயல்திட்டங்களில் முதன்மைப்படுத்தட்டும். இயங்கும் துறைகளில் தங்களலவிலான சமத்துவ செயல்பாடுகளை முன்னிறுத்தட்டும். சாதிய வெறியாட்டங்களில் பங்கேற்கும் ஆதிக்க சாதிப் பெண்களை, சமூக மாற்றத்திற்கான  போராட்டங்களில் முன்னிறுத்தும் வேலைகளை பெண்கள் அமைப்புகள் செய்யட்டும். அதுவரையிலும் பெண்களிடையே சாதிப் பாகுபாடு இல்லை என யாரும் முழங்க வேண்டாம். பார்ப்பனப் பெண்ணையும் தலித் பெண்ணையும் ஒரே தராசின் தட்டுகளில் நிறுத்தி அது சமமாக நிற்க வேண்டுமெனில், இந்த சமூகத்திலிருந்து சாதி முற்றிலுமாக துடைத்தெறியப்பட வேண்டும். அதுவரையிலும் சாதிய உணர்வு ஆதிக்க உணர்வாக, ஒவ்வொருவர் ரத்தத்திலும் ஊறிக்கொண்டேதான் இருக்கும்.            

(தலித் முரசு ஜூன் 2010 இதழில் வெளியானது)