அரசுக்கு எதிரான எதிர்ப்புக்கு  களங்கம் உருவாக்கி அதை நசுக்கும் நோக்கம் 

உளவுத் துறையின் (R&AW) முன்னாள் தலைவர் ஏ.எஸ்.தவுலத், இஸ்துஸ்தான் டயம்சுக்கு அண்மையில் அளித்த நேர்முகத்தில் உளவு நிறுவனங்கள், மற்ற செயல்பாடுகளோடு எப்படி இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் உள்ள எல்லா வகையான "தீவிரவாத", "பயங்கரவாத", "பிரிவினைவாத"அமைப்புகளுக்கு வழக்கமாகவே பணம் கொடுத்து வருகிறார்கள் என்று பேசியிருக்கிறார். 1988 லிருந்து வாஜ்பாய் அரசாங்கத்தில் பிரதமருக்கு அறிவுரையாளராக நியமிக்கப்படும் வரை, உளவுத் துறை அதிகாரியாக அவர் ஜம்மு காசுமீரத்தில் வேலை செய்து வந்தார். அப்போது அந்த மாநிலத்தில் வன்முறை தீவிரமடைவதற்கு ஏற்ப, இப்படிப்பட்ட அமைப்புகளுக்கு கொடுக்கப்படும் தொகையும் அதிகரித்தது என்பதை அவர் உறுதிப்படுத்தியிருக்கிறார். அந்த மாநிலத்திலுள்ள உளவுத் துறை நிறுவனங்களுடைய வழக்கமான முறைதான் இதுவென்றும் அவர் கூறியிருக்கிறார். தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சராக இருக்கும் இராணுவத்தின் முன்னாள் தலைவர் வி.கே.சிங், ஜம்மு - காசுமீரத்தில், பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இராணுவம் வழக்கமாகவே நிதியளித்து வந்திருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

குழப்பத்தையும், வன்முறையையும் பரப்புவதற்காகவும், நியாயத்திற்காகப் போராடும் மக்களைக் குறிவைத்தும், "சரணடைந்த தீவிரவாதிகளின்" பல்வேறு குழுக்கள், இந்திய அரசால் காசுமீரத்தில் திட்டமிட்டு  ஏற்பாடு செய்யப்பட்டது என்பது இப்போது பொதுவாகவே பொது மக்களுக்குத் தெரிய வந்துள்ளது. இதே போன்று அசாமிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் செய்யப்பட்டது.

இப்படிப்பட்ட நடவடிக்கைகளை "பயங்கரவாதத்திற்கு எதிர் நடவடிக்கை" என்றும், "கிளர்ச்சிக்கு எதிர் நடவடிக்கை"யென்றும் இந்திய அரசும், அதன் பரப்புரையாளர்களும் நியாயப்படுத்தி வந்தாலும், மக்களுக்கும், சமுதாயத்திற்கும் இதனுடைய உண்மையான பொருள் என்ன?குழப்பமும், வன்முறையும், திட்டமிட்ட முறையில் கட்டவிழ்த்து விடப்பட்டு, உரிமைகளுக்காகப் போராடுகின்ற மக்களுக்கு அவப்பெயரை உண்டாக்கி, பிளவுபடுத்தி, காட்டுமிராண்டித்தனமாக நசுக்கப்படுகிறார்கள் என்று பொருள். இந்த நடவடிக்கையில் இந்திய அரசு அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிற ஏகாதிபத்திய அரசுகளை எடுத்துக் காட்டாகப் பின்பற்றுகிறது.

இது, 1980-களில் பஞ்சாப் அரசு மற்றும் அதன் நிறுவனங்களின் வழக்கமான வழிமுறையாகவே இருந்தது. வெறும் சந்தேகத்தின் அடிப்படையிலேயே மக்களை எல்லா வழிகளிலும் சித்திரவதை செய்யவும், கொல்லவும் அரசின் பாதுகாப்புப் படைகளுக்கு முழுச் சுதந்திரம் அளிக்கும் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் (AFSPA)நடைமுறையில் இருக்கும் காசுமீரத்திலும், வடகிழக்கிலும் இதுவே முறையான செயல்முறையாக இருந்தது, இன்றும் தொடர்ந்து நீடிக்கிறது. ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம், ஜம்மு - காசுமீரத்தில் 1990 லிருந்து கடந்த 25 ஆண்டுகளாகவும், வடகிழக்கில் 1958 இலிருந்து 56 ஆண்டுகளுக்கும் மேலாகவும் நடைமுறையில் இருந்து வருகிறது.

பஞ்சாபில் இந்து மத நம்பிக்கை கொண்ட சாதாரண மக்களும், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த செயல்வீரர்களும் பயங்கரவாத முறையில் கொல்லப்பட்டதற்குப் பின்னால், இந்திய அரசின் கையும், பல்வேறு உளவு நிறுவனங்களுடைய கைகளும் இருந்தது பின்னர் வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. இந்தக் கொடூரமான கொலைகளுக்கு சீக்கிய மக்கள் மீது பழி கூறப்பட்டு அதன் மூலம் சூழ்நிலை வகுப்புவாத அடிப்படையில் பதற்றமானதாக ஆக்கப்பட்டது. இவற்றைப் பயன்படுத்தி, உரிமைகளுக்கான பஞ்சாபிய மக்களுடைய போராட்டங்கள் தாக்கப்பட்டன, பொற்கோயில் மீது காட்டுமிராண்டித்தனமான இராணுவத் தாக்குதலும், பஞ்சாபிலும், நாடெங்கிலும் சீக்கிய மக்களுக்கு எதிராக பெரிய அளவில் கட்டவிழ்த்து விடப்பட்டு, ஆயிரக் கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட அரசு பயங்கரவாதமும் நியாப்படுத்தப்பட்டன.

இதுவே, ஜம்மு-காசுமீரத்திலும், மணிப்பூர், அசாம் மற்றும் பிற மாநிலங்களிலும் மீண்டும் மீண்டும் நடத்தப்பட்டது.

மணிப்பூரில் இந்திய இராணுவத்தின் மீது நடத்தப்பட்ட அண்மைத் தாக்குதல்கள், இந்திய அரசுக்கு எதிரான எதிர்ப்பைப் பிளவுபடுத்தவும், பலவீனப்படுத்துவதற்காகவும் இந்திய உளவு நிறுவனங்கள் ஆதரித்து, நிதியுதவியளித்து பராமரித்துவரும் கிளர்ச்சி குழுக்களால் நடத்தப்பட்டதென வெளிவந்திருக்கிறது. வடகிழக்கில் பெரும் எண்ணிக்கையில் தலைமறைவு குழுக்களை உளவு நிறுவனங்கள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள் என்பது தெரிந்ததே. இந்தக் குழுக்கள் குழப்பத்தையும், வன்முறையும் பரப்பி, உரிமைகளுக்கான மக்களுடைய உண்மையான போராட்டங்களுக்குக் களங்கம் ஏற்படுத்தி வருகின்றன.

தங்களுடைய உரிமைகளுக்காகப் போராடும் மக்கள், "பயங்கரவாதிகள்" என வழக்கமாக முத்திரை குத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்படுகின்றனர் அல்லது கொல்லப்படுகின்றனர். காசுமீர், அசாம், மணிப்பூர் மற்றும் பிற வடகிழக்கு மாநிலங்களில் உள்ள இளைஞர்களும், மக்களும், நாடெங்கிலும் குறிப்பட்ட மத சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களும், வழக்கமாகவே கூட்டி வளைக்கப்பட்டு, போலி எதிர்மோதல்களில் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். அவர்கள் காவல் துறையாலும், இராணுவத்தாலும், துணை இராணுவப்படைகளாலும் "பயங்கரவாதிகள்"என்று முத்திரை குத்தப்படுகின்றனர். உண்மையை மூடி மறைப்பதற்காக அவர்களுடைய உடல்கள், ஓடைகளில்  தூக்கியெறியப்படுகின்றன, அல்லது முகவரியற்ற சுடுகாடுகளில் அவசரமாக எரிக்கப்படுகின்றனர். அவர்களுடைய குடும்பங்களும், மனித உரிமைச் செயல்வீரர்களும் கோரும் ஆய்வுகள் பின்னர், பயங்கரவாதிகள் என்று அழைக்கப்பட்ட இவர்கள் உண்மையில் சாதாரண அப்பாவி மக்கள் என்பதும், அரசு பயங்கரவாதக் கொள்கையின் ஒரு அங்கமாக சிக்க வைக்கப்பட்டவர்கள் என்றும் பெரும்பாலும் வெளிவருகிறது.

இதே போன்று "கிளர்ச்சிக்கு எதிரான" ஒரு கொள்கையானது, ஜார்கண்டிலும், சத்தீஸ்கரிலும் பிற மாநிலங்களிலும் இந்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தங்களுடைய நிலங்கள் அரசால் வலுக்கட்டாயமாகக் கைப்பற்றப்படுவதற்கு எதிராகப் போராடி வருபவர்களையும், தங்களுடைய நதிகள், காடுகள், கனிம வளங்கள் ஆகியவற்றின் மீது தங்களுடைய உரிமைகளுக்காகப் போராடி வருபவர்களையும், நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள முழு பிரிவு  மக்களையும், "மாவோவாதிகள்" என்று வழக்கமாகவே முத்திரை குத்தப்பட்டு, கைது செய்யப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்படுகின்றனர். அரசு பயங்கவாதத்தை நியாப்படுத்துவதற்காக, மாவோயிச கிளர்ச்சியாளர்களால், அரசுக்கு ஒரு பெரும் அச்சுறுத்தல் இருப்பது போல ஒரு பரப்புரையை இந்திய அரசு செய்து வருகிறது. முன்பிருந்த தடா(TADA), போடா (POTA), போன்ற இரத்தவெறி பிடித்த சட்டங்களை மாற்றி, புஏபிஏ (UAPA)என்ற இரத்தவெறி சட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறது.

இத்துடன், அரசு அதனுடைய சொந்த பயங்கரவாதக் குழுக்களை நிறுவியிருக்கிறது. சத்தீஸ்கரில் உள்ள சால்வா ஜுடூம் என்பது இதற்கான எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகும். காவல்துறையிலும், துணை இராணுவப் படைகளிலும் வேலை கொடுக்கப்படும் என்ற வாக்குறுதியோடு நூற்றுக்கணக்கான வேலையற்ற ஜார்கண்டு இளைஞர்களை ஈர்த்து, ஆயிரக் கணக்கான ரூபாய்களைக் கட்டுமாறு செய்து, பின்னர் அவர்களுக்கு ஆயுதங்களை வழங்கி, அவர்கள் தங்களைத் தாங்களே மாவோவாதிகள் என்று அறிவித்துக் கொண்டு, அதிகாரிகள் முன்னர் சரணடையுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது, ஒரு சமீப அறிக்கை மூலம் வெளிவந்துள்ளது.

அப்படிப்பட்ட ஒரு பழங்குடியின இளைஞர், ஊடகங்களிடம் கூறியிருப்பதாவது - அவரும் அவரைப் போன்ற பலரும் சிறைச்சாலையில் உள்ள ஒரு சி.ஆர்.பி.எப் (CRPF)முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு பயிற்சியளிக்கப்படும் என்று கூறினர். அவர்களுக்குக் கிடைக்குமென்று சொல்லப்பட்ட வேலைக்காக அவர்கள் ஒவ்வொருவரும் ரூ 50,000 மோ அதற்கு மேலுமோ கொடுக்க வேண்டும். பல நாட்களுக்குப் பிறகு அவர்களை ஒரு அரசாங்க வாகனத்தில் ஓரிடத்திற்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு துப்பாக்கிகளும் குண்டுகளும் ஆயுதங்களும் கொடுக்கப்பட்டன. அவர்கள் தங்களைத் தாங்களே அதிகாரிகள் முன்னே சரணடையப் போகும் மாவோவாதிகள் என்று அறிவித்துக் கொள்ள வேண்டுமென கூறியிருகின்றனர். சரணடைவுக் கொள்கையின் ஒரு அங்கமாக, அவர்களுக்குத் துணை இராணுவப் படைகளில் வேலை கொடுக்கப்படும் என்று அவர்களிடம் சொல்லப்பட்டிருக்கிறது.

இது எதைக் காட்டுகிறது? குழப்பத்தையும், வன்முறையையும் பரப்புவதற்கு அரசு திட்டமிட்டு செயல்படுகிறது என்பதையும், பிறகு அதை மாவோவாதிகள் மீது பழி போடுகிறது என்பதையும் வெளிப்படுத்துகிறது. ஜார்கண்டில் பயங்கரத்தைப் பரப்பிவரும் பல்வேறு குழுக்கள், உண்மையில் உளவு நிறுவனங்களால் நிதியளிக்கப்பட்டு, ஆயுதம் வழங்கப்படுகிறது என்று பரவலாக நம்பப்படுகிறது.

தன்னுடைய ஆட்சியை எதிர்க்கும் மக்களுடைய நியாயமான எதிர்ப்புக்கு, அவப்பெயரை உருவாக்கவும் அவர்களை நசுக்கவும், குழப்பத்தையும் வன்முறையையும் பரப்புவது, இந்திய அரசுக்கு பிடித்தமான ஒரு கொள்கையாகும்.

அரசு பரப்பும் குழப்பத்தையும், வன்முறையையும் வெட்ட வெளிச்சமாக்கி எதிர்ப்பது தொழிலாளி வர்க்கம் மற்றும் மக்கள் உரிமைகளுக்காகவும், ஒரு புதிய சமுதாயத்திற்காகவும் போராடுகின்றவர்களுடைய நலனுக்கு உகந்ததாகும். அரசு பயங்கரவாதமும், "அரசு அல்லாதவர்கள்" என்று அழைக்கப்படுபவர்கள், தனி நபர்கள் மற்றும் அமைப்புக்களுடைய பயங்கரவாதச் செயல்களும், உழைக்கும் மக்களை இன்றுள்ள சூழ்நிலைகளில் கட்டிப் போட்டு, குழப்பி அவர்களைப் பிளவுபடுத்தும் ஆளும் வர்க்கத்திற்குச் சேவை செய்கின்றன. அரசு பயங்கரவாதத்திற்கு முடிவுகட்ட, பெரும் ஏகபோக முதலாளிகளுடைய ஆட்சிக்கும், அவர்களுடைய அரசுக்கும், அதனுடைய எல்லா பயங்கரவாதக் கருவிகளுக்கும் முடிவு கட்டுவதற்காகப் போராட வேண்டியது அவசியமாகும்.

Pin It