2015 சூன் இறுதி வாரத்தில் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த பள்ளிகொண்டா காவல் நிலையத்தில், ஆம்பூரைச் சேர்ந்த சமீல் அகமது என்பவரை விசாரணை என்ற பெயரில், காவல் துறை காட்டுமிராண்டித் தனமாக அடித்து சித்திரவதை செய்ததால், குத்துயிரும் கொலை உயிருமாக மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். காவல் துறையின் இந்தப் பச்சைப் படுகொலையைக் கண்டித்தும் நியாயம் கோரியும் ஆயிரக் கணக்கான பொது மக்கள் சூன் 27 அன்று கூடி ஆம்பூரில் ஆர்பாட்டம் நடத்தினர். பயங்கரவாத முறையில் படுகொலை செய்த காவல்துறை அதிகாரிகள் மீது பயங்கரவாத சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, நியாயம் கேட்டு ஆர்பாட்டம் நடத்தியவர்கள் மீது திட்டமிட்ட முறையில் காவல் துறையும், ஆட்சித் துறையினரும் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டு, தடியடி நடத்தியும், பொது மக்களுடைய வாகனங்கள் மற்றும் பிற சொத்துக்களை அடித்து நொறுக்கியும், தீயிட்டுக் கொளுத்தியும், ஆர்பாட்டத்தில் பங்கேற்ற நூற்றுக் கணக்கான பொது மக்களைக் கைது செய்து சிறையிலடைத்தும் இருக்கின்றனர்.

இந்த கலவரத்தைப் பற்றிய உண்மை செய்திகள் வெளிவராமல் இருக்க அரசு தலையிட்டு பல இணைய தளங்களிலும் செய்திகளைத் தடை செய்துள்ளது. அது மட்டுமில்லாமல், மக்கள் போராட்டங்களையும் காவல் துறையின் அடக்குமுறைகளையும் படமெடுத்த பத்திரிக்கையாளர்களையும் அவர்கள் படமெடுத்த வீடியோ கேமெராக்களையும் காவல் துறையினர் அடித்து உடைத்துள்ளனர்.

இது மட்டுமின்றி, மக்களுடைய நியாயமான குரலை நசுக்கும் விதத்திலும், அரசு பயங்கரவாத, வகுப்புவாத நடவடிக்கைகளை மூடி மறைக்கும் நோக்கத்துடனும், ஆம்பூர் - வாணியம்பாடி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் 144 -ஐப் பிறப்பித்து மக்களை அடக்கி, ஒடுக்கி வருகின்றனர். முஸ்லீம் மக்களுடைய குடியிருப்புப் பகுதிகளில் புகுந்து, வீடு வீடாக தேடுதல் வேட்டை நடத்தியும், அப்பாவி மக்களைத் தாக்கியும், துன்புறுத்தியும், மேலும் பல இளைஞர்களைத் தொடர்ந்து கைது செய்து சிறையிலடைத்தும் வருகின்றனர்.

அதே நேரத்தில், அரசின் ஆதரவோடும் காவல் துறையின் பாதுகாப்போடும் பிற்போக்கான, மதவாத, மக்கள் விரோதக் கட்சிகளும், அமைப்புக்களும், வீதிகளில் வலம் வந்தும், ஊடகங்கள் மூலமாகவும், வகுப்புவாத வன்முறையை அனைத்துத் தரப்பு மக்கள் மீது மேலும் தூண்டிவிட்டும், அரசு பயங்கரவாதத்தை நியாயப்படுத்தியும் வருகின்றனர்.

இந்தக் கொடுமைகளை எதிர்த்துக் கூட்டங்கள், ஆர்பாட்டங்கள் போன்ற நியாயமான அமைதியான செயல்பாடுகளில் ஈடுபடவும், பேசுவதற்கும், தமிழக அரசும், அரசு அதிகாரிகளும், காவல் துறையும் தடை விதித்துள்ளனர். ஆயிரக் கணக்கான காவல் துறையினர் இந்தப் பகுதியெங்கும் காவலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அரசு பயங்கரவாதத்தையும், அரசின் ஆதரவுடன் நடத்தப்படும் வகுப்புவாத வன்முறையையும் கண்டிப்பதற்காக, அமைதியான முறையில் பொதுக் கூட்டத்தை நடத்த தமிழ்நாடு தொழிற் சங்க நடுவம் எடுத்த முயற்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அடிப்படை சனநாயக உரிமை மறுக்கப்படுவதை எதிர்த்து நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கும் மக்களுடைய பேச்சுரிமையையும், கருத்துரிமையையும், கூடிப் பேசும் உரிமையையும் நிலைநாட்டவில்லை. ஆம்பூர் - வாணியம்பாடியில் தோல் பதனிடும், காலணிகளை உற்பத்தி செய்யும் பெரும் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அங்கு வேலை செய்யும் ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் கடுமையாக சுரண்டப்பட்டும், ஒடுக்கப்பட்டும் வருகின்றனர். அவர்களுடைய போராட்டங்களை நசுக்குவதற்காகவும், தொழிலாளர்களை அச்சுறுத்தி வைப்பதற்காகவும், அரசு அவ்வப்போது அரசு பயங்கரவாதத்தைத் திட்டமிட்ட முறையில் நடத்தி வருகிறது.

இத்தகைய சூழ்நிலையில் முற்போக்கு சக்திகளும், மக்களும் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும். மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயலூக்கத்தோடு அரசு பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும். ஆம்பூரில் நடைபெற்ற அரசு பயங்கரவாத வன்முறையை, தொழிலாளர் ஒற்றுமைக் குரல் வன்மையாகக் கண்டிக்கிறது.

Pin It