இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி மத்தியக்குழுவின் அறிக்கை, மே 21, 2013

224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடகா சட்டமன்றத்திற்கான தேர்தல்கள் மே 5 அன்று நடைபெற்றன. முந்தைய தேர்தலில் 2008-இல் 65 சதவிகித மக்கள் அங்கு வாக்களித்திருந்தனர், இத் தேர்தலில் அது 71 சதவிகிதமாக அதிகரித்திருந்தது. இதன் காரணமாக காங்கிரசு கட்சிக்கு "அறுதிப்பெரும்பான்மை" கிடைத்திருக்கிறது. அது பாஜக-வை மாற்றி தற்போது அங்கு அரசாங்கத்தை அமைக்கும்.

அறுதிப்பெரும்பான்மை என்று இது அழைக்கப்பட்டாலும், முடிவுகளை நன்கு கூர்ந்து பார்த்தால், தகுதி உடைய வாக்காளர்களில் 26.1% த்தினர் மட்டுமே தங்களுடைய வாக்குகளை காங்கிரசு கட்சிக்கு அளித்திருந்தனர். அதே நேரத்தில் அதை விட அதிகமாக 28.7% த்தினர் வாக்கே அளிக்கவில்லை. இதற்கு முன் ஆட்சியிலிருந்த பாஜக-விற்கு 14.3% வாக்குகள் மட்டுமே கிடைத்தது. 2008-இல் அது பெற்ற 22%-லிருந்து அது வீழ்ச்சியடைந்துள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சிக்கு பாஜக-விற்கு சமமாக 14.3% வாக்குகள் கிடைத்துள்ளன. ஜனதா கட்சியிலிருந்து பிரிந்து வந்த முன்னாள் முதலமைச்சர் இடையூரப்பா உருவாக்கிய கேஜேபி கட்சி 7% வாக்குகளைப் பெற்றுள்ளது.

2008-ஐ ஒப்பு நோக்கும் போது, காங்கிரசு கட்சிக்கு 1.8% வாக்குகள் அதிகமாக கிடைத்திருக்கிறது. மதச்சார்பற்ற சனதா தளம் தன்னுடைய வாக்கு விகிதத்தை 1.1% அதிகரித்திருக்கிறது. சிபிஎம் 18 தொகுதிகளில் போட்டியிட்டது. அது 6 தொகுதிகளில் போட்டியிட்ட சிபிஐ-யுடனும், மூன்று தொகுதிகளில் போட்டியிட்ட பார்வேர்ட் பிளாக் உடனும் உடன்பாடு வைத்திருந்தது. எஸ்யுசிஐ 11 வேட்பாளர்களையும், சிபிஐஎம்எல்(விடுதலை) 10 வேட்பாளர்களையும் களம் இறக்கியிருந்தது. மேலும் சிபிஐஎம்எல் குழுக்களிலிருந்து பலர் தேர்தல்களில் பங்கேற்றனர்.

மொத்த வாக்குகளில் 0.2% த்தை சிபிஎம் பெற்றிருந்தது. அது ஒரு தொகுதியில் இரண்டாவது இடத்திலும், மற்றொரு தொகுதியில் மூன்றாவது இடத்திலும் வந்திருந்தது. சிபிஐ வேட்பாளர்கள் முடிகேரில் நான்காவது இடத்தையும், பெல்லாரி நகரத்தில் ஐந்தாவது இடத்தையும் பெற்றிருந்தனர்.

அங்கீகாரம் பெறாத கட்சிகளும், கட்சியல்லாத வேட்பாளர்களும் தங்களுடைய வாக்கு விகிதத்தை 2008-இல் 12.4%-த்திலிருந்து 2013-இல் 13.5%-மாக அதிகரித்திருந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்சியல்லாத வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அவர்கள் சுயேச்சை வேட்பாளர்களாக பதிவு செய்யப்பட்டிருந்தனர்.

2009-இல் உருவாக்கப்பட்ட இந்திய சமூக சனநாயக கட்சி (எஸ்டிபிஐ), மைசூர் நரசிம்மராஜா தொகுதியில் இரண்டாம் இடத்தையும், ஐந்து தொகுதிகளில் மூன்றாவது இடத்தையும், ஒன்பது தொகுதிகளில் நான்காவது இடத்தையும் பெற்றிருந்தனர். அது மதச் சிறுபான்மையினரின் பாதுகாப்பிற்கு உத்திரவாதமளிக்கும் மேடையில் பிரச்சாரம் செய்திருந்தது. கடந்த காலத்தில் காங்கிரசிற்கும் மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கும் வாக்களித்து தற்போது துரோகமிழைக்கப்பட்டுவிட்டதாக கருதும் முஸ்லீம்களுடைய ஆதரவை அது திரட்டியிருந்தது. ஆந்திரப் பிரதேசத்தில் துவக்கப்பட்டு, கர்நாடகாவில் நுழைந்துள்ள லோக் சத்தா கட்சி 24 வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது. அவற்றில் சிலர் மூன்றாவது, நான்காவது இடங்களைப் பெற்றுள்ளனர்.

இந்த முடிவுகளால் யார் பயனடைவார்கள், யார் பாதிப்படைவார்கள்?

இந்தத் தேர்தலில் காங்கிரசு கட்சி வெற்றியடைவதை உறுதி செய்வதற்காக அதிக பணத்தைக் கொட்டிச் செலவழித்துள்ள நமது நாட்டின் பெரு முதலாளிகள் இந்த முடிவுகளால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தேர்தல் பிரச்சாரத்திற்கு உதவி செய்த கர்நாடகாவைச் சேர்ந்த பெரும் சொத்துக்கள் கொண்ட குடும்பங்கள் இந்த முடிவுகளை வரவேற்றுள்ளனர். இப்போது அவர்கள் நல்ல இலாபமடையலாமென எதிர்ப்பார்த்திருக்கின்றனர்.

முதலாளி வர்க்கமானது தன் இயல்பின் காரணமாக எதிரெதிரான குழுக்களாக பிளவுண்டு இருக்கின்றனர். ஆட்சி அதிகாரத்தைத் தம் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்காக இக்குழுக்களும் கட்சிகளும் ஒருவரோடு ஒருவர் சண்டையிடுகின்றனர். இந்திய பெரு முதலாளி வர்க்கத்தின் இக்குணம்தான் அதை காங்கிரசாகவும், பாஜகவாகவும் பிரித்து வைத்திருக்கிறது. கர்நாடகாவிலுள்ள பிராந்திய முதலாளி வர்க்கத்தின் குணமும் இதுதான். இந்த நேரத்தில் அது காங்கிரசு, பாஜக, கஜக, மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளமென நான்கு கட்சிகளாக பிரிந்து இருக்கிறார்கள். இந்த எதிரெதிரான முதலாளித்துவக் குழுக்கள், பல்வேறு விவசாய பிரிவினரையும், பிற நடுத்தட்டு மக்களையும், சாதி மற்றும் மத வேறுபாடுகளை சூழ்ச்சியாகக் கையாளுவதன் மூலம் தங்கள் பக்கம் இழுக்க முயற்சிக்கிறார்கள்.

இன்றுள்ள அமைப்பில் எதிர்க் கட்சியில் இடம்பெறும் கட்சிகளின் பின்னணியில் உள்ளவர்களைக் காட்டிலும், அமைச்சரவையில் இடம் பெறும் முதலாளித்துவ குழு, தன்னுடைய சொத்துக்களை அதிக விரைவாக பெருக்கிக் கொள்கிறார்கள். ஆளும் அணி தன்னுடைய ஆதாயங்களை அறுவடை செய்து கொண்டிருக்கும் போது, எதிரணியில் உட்கார்ந்திருப்பவர்கள் ஆளும் கட்சியினுடைய ஊழலைப் பற்றி கூச்சல் போட்டு அதை வெட்ட வெளிச்சமாக்கி வருவதோடு, தங்களுடைய வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருப்பார்கள். கர்நாடகாவில் வெட்ட வெளிச்சமான சுரங்க ஊழலே, முதலாளித்துவ கும்பல்களுக்கிடையே நடைபெரும் கடுமையான போட்டி சண்டைகளின் காரணமாகத்தான். இதன் விளைவாகவே பாஜக பிளவுண்டது.

தேர்தல் முடிவுகள், கர்நாடக தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும், பிற கடின உழைப்பாளர்களுக்கும் எவ்வகையிலும் நிவாரணமளிக்கவில்லை. பாஜக-வை மாற்றி காங்கிரசு ஆட்சிக்கு வருவதால், கர்நாடகாவின் வளங்களும், மக்கள் உழைப்பும் சுரண்டப்படுவதும், கொள்ளையடிக்கப்படுவதும் தொடரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. பல்வேறு பெரு முதலாளித்துவ நிறுவனங்களுக்கும், பிராந்திய செல்வச் சீமான்களுக்கும் அதிகபட்ச இலாபத்தைக் கொண்டு வருவதற்காக, கர்நாடகாவின் ஆற்றல் கொண்ட இளம் பெண்களும் ஆண்களும் தொடர்ந்து நீண்ட நெடும் நேரம் கடுமையாக உழைத்துக் கொண்டே இருப்பார்கள். குடியானவர்களுடைய வாழ்க்கைப் பாதுகாப்பும், அவர்கள் உழுகின்ற நிலங்களும் அவர்களிடமிருந்து தொடர்ந்து திருடப்பட்டு வரும். பெண்கள், மதச் சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடி மக்கள் ஆகியோர் ஓரவஞ்சகமாக நடத்தப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வருவார்கள்.

தாராளமயம், தனியார்மயமாக்கல் மூலமாக உலகமயமாக்கும் முதலாளித்துவ - ஏகாதிபத்திய திட்டத்தைத் தொடர்வதால் கர்நாடகாவில் மிகவும் மோசமான ஏற்றத்தாழ்வான வளர்ச்சி மேலும் தொடரும். மக்கள் நெருக்கடி மிகுந்த, உலகமயமாக்கப்பட்ட பெங்களூரு, சேவைகள் ஏற்றுமதியை முதன்மையாகக் கொண்டு குழப்பமான வளர்ச்சித் தோடர்ந்து பெற்றுவரும். அதே நேரத்தில் கர்நாடகாவின் பெரும்பான்மையான பகுதிகள் வளர்ச்சி குன்றி இருக்கின்றன. முதலாளித்துவ வழங்கு சங்கிலிகள் மீது ஏகபோக ஆதிக்கம் செலுத்துவதற்காக, முதலாளித்துவ ஏகபோகங்கள் தங்களுடைய கொடுக்குகளை ஒப்பந்த விவசாயத்தின் மூலமும் மற்ற அடிமை முறைகள் மூலமாகவும், விவசாய உற்பத்தியாளர்கள் மீது நீட்டி வருகின்றனர். இதனால் விவசாய நெருக்கடி மேலும் தீவிரமடையும். பெரிய அளவிலான தொழிற்சாலைகளிலும், நவீன சேவைகளிலும், தங்களுக்குப் பிடித்தமான சங்கத்தை அமைக்கும் உரிமை, வேலை நிறுத்தப் போராட்ட உரிமை உட்பட தொழிலாளர்களுடைய உரிமைகள் தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாகி வரும்.

இந்த சனநாயகத்தில் யார் தீர்மானிக்கிறார்கள்?

கர்நாடக மாநிலத்தை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு காங்கிரசு கட்சி ஆளவேண்டுமென கர்நாடக மக்கள் தீர்மானித்திருப்பதாக ஒரு கருத்தை ஊடகங்கள் உருவாக்கியிருக்கின்றன. இது உண்மைக்குப் புறம்பானதாகும். உண்மை என்னவென்றால், சிறுபான்மை வர்க்கமான சுரண்டல்காரர்கள், காங்கிரசு கட்சி இப்போது ஆட்சிக்கு வருவதை ஆதரிப்பதென முடிவெடுத்துள்ளனர். பாஜக-வில் ஏற்பட்டுள்ள பிளவு, காங்கிரசு கட்சி வெற்றி பெறுவதற்கு வழிவகுக்குமென்பதை அறிந்து அதை உறுதிப்படுத்துவதற்காக அவர்கள் மிகப்பெரிய அளவில் பணத்தை முதலீடு செய்திருக்கின்றனர். ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக செலவழிக்கக் கூடிய தொகையை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்துங்கூட இத் தேர்தலில் முன் எப்போதும் கண்டிராத அளவில் பணம் செலவிடப்பட்டிருக்கிறது. இந்த அதிகபட்ச வரம்பும் வேட்பாளர் செலவிடும் தொகைக்கு மட்டுமே. இதுவன்றி, கட்சிகள் மிகப் பெரிய தொகையைச் செலவிடுகின்றன. அதிலும் காங்கிரசு கட்சி மற்ற கட்சிகளைக் காட்டிலும் அதிகமாக செலவழிக்கிறது.

வட்டார சமூக மற்றும் சாதித் தலைவர்களின் ஆதரவைப் பெறவும், காங்கிரசு கட்சிக்கு மிகவும் ஆரவாரமாக அனைவருடைய கவனத்தையும் ஈர்க்கும் வண்ணம் பிரச்சாரத்தை நடத்தவும் பணபலம் பயன்படுத்தப்படுகிறது. தான் விரும்பும் முடிவுகளை அடைவதற்காக, பெரு முதலாளி வர்க்கம் "முதலில் கம்பத்தைக் கடக்கும்" விதியைத் திறமையாகப் பயன்படுத்துகிறது. வாக்குகளில் வெறும் 1.8 சதவிகித வாக்குகளை அதிகமாகப் பெறுவதன் மூலம் காங்கிரசு கட்சி, சட்ட மன்றத்தில் தன்னுடைய பலத்தை 36 சதவிகிதத்திலிருந்து 54 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது.

இந்த சனநாயகத்தில் மக்கள் தான் தீர்மானிப்பவர்களாக இருக்கிறார்கள் என்ற கருத்தை இந்திய அரசியல் சட்டம் கொடுக்கிறது. ஆனால் உண்மையோ பெரும்பான்மையான மக்கள் எந்த அதிகாரமும் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். தகுதியுள்ள ஒவ்வொரு வாக்காளரும், "ஒரு நாளைக்கு மன்னராக" இருப்பது போல் மின்னல் போல மறையும் நேரத்திற்கு அதிகாரத்தைப் பெறுகிறார்கள். வாக்களித்த உடனேயே, அந்த மாயை போய்விடுகிறது. இந்த சனநாயகத்தில் எந்த அளவிற்கு எவ்வித அதிகாரமும் இன்றி இருக்கிறோம் என்பதை உழைக்கும் மக்கள் உணர்கிறார்கள். 50%-க்கு மேற்பட்ட தொகுதிகளில் "கம்பத்தை முதலில் தாண்டுகின்ற" கட்சி அல்லது கூட்டணி கட்சிகளுடைய கைகளுக்கு எல்லா அதிகாரமும் சென்றடைவதே இன்றைய தேர்தல் வழிமுறையாகும்.

தொழிலாளி வர்க்கமும், விவசாயிகளும் மற்றும் பிற நடுத்தட்டு பிரிவினரும் தங்களுக்கென கட்சிகளை அமைக்கவும், தேர்தல்களில் போட்டியிடவும் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் அவர்கள் மிகவும் சமனற்ற போட்டியைச் சந்திக்கிறார்கள். பணபலத்தில் மிகுந்த வேறுபாடு இருப்பது மட்டுமின்றி, மக்கள் பிரதிநிதித்துவ சட்டமும், தேர்தல் விதிமுறைகளும் புதிய மற்றும் சிறிய கட்சிகளையும், கட்சி சாராத வேட்பாளர்களையும் ஒரு சார்பாக நடத்துகின்றன. நிரந்தர தேர்தல் சின்னம், தொலைக்காட்சியில் இலவசமாக நேரம் ஒதுக்கீடு என்பன உட்பட எண்ணெற்ற சலுகைகளும், அரசின் ஆதரவும் விரல்விட்டு எண்ணக்கூடிய "அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு" மட்டும் கிடைக்கின்றன.

பெரு முதலாளி வர்க்கம் முன்வைக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஒரு கட்சி மட்டுமே அதிகாரத்திற்கு வரவும், நீடிக்கவும் அனுமதிக்கப்படுகிறது. இந்த அமைப்பிற்குள்ளே அதிகாரத்தில் நீடிப்பதற்காக பெரு முதலாளி வர்க்கத்தின் திட்டத்தோடு ஒரு தொழிலாளி வர்க்கக் கட்சி சமரசம் செய்து கொள்ளும் போது என்ன நடக்கும் என்பதை மேற்கு வங்காளத்தில் சிபிஎம்-இன் நிலை காட்டுகிறது.

முடிவுரை

அங்கீகரிக்கப்படாத மற்றும் புதிய கட்சிகளுக்கு பாதகமான நிலைகளும், போட்டி சமனற்றதாகவும் இருந்துங்கூட, அவர்களுடைய பல வேட்பாளர்கள் கர்நாடகாவின் பல்வேறு தொகுதிகளில் முன்னேற்றம் பெற்றிருக்கிறார்கள். நிறுவப்பட்டுள்ள முதலாளித்துவ கட்சிகளுடைய மேலாதிக்கத்தை எதிர்க்க வேண்டுமென ஒடுக்கப்பட்ட வகுப்பினரிடையே ஒரு போக்கு இருப்பதை இது சுட்டிக்காட்டுகிறது. இந்தப் போக்கானது வளர்ச்சி பெற்று வருகிறது. மேலும் விரிவடைந்து வரும். இந்த இடத்தைக் கைப்பற்ற தொழிலாளி வர்க்கத்தைக் கம்யூனிஸ்டுகள் வழிநடத்த வேண்டும்.

இளமையும் கல்வி அறிவும் கொண்ட கர்நாடக தொழிலாளர்கள் சிபிஎம் அல்லது சிபிஐ-யை நோக்கி வராததற்கு ஒரு காரணம், இக் கட்சிகளின் கடந்த கால வரலாறாகும். குறிப்பாக காங்கிரசு கட்சியோடு சமரசம் செய்துகொண்டதும், அவர்களுக்கு ஆதரவளித்த வரலாறு காரணமாகும். மற்றொரு காரணம், சிபிஐ மற்றும் ஓரிரு கட்சிகளோடு இணைய ஒப்புக்கொள்ளும் சிபிஎம், தொழிலாளி வர்க்கம் அல்லது நடுத்தட்டு மக்களுடைய பிற கட்சிகளோடு அரசியல் ஒற்றுமையை அமைக்கவோ, தேர்தல் உடன்பாட்டை ஏற்படுத்தவோ மறுத்து வருவதாகும்.

இறையாண்மையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு நவீன சனநாயக அமைப்பிற்கு வழிகாட்டுவதன் மூலம் உழைக்கும் பெரும்பான்மையான மக்கள் அதிகாரத்திற்கு வர தலைமை தாங்கும் ஒரு அரசியல் கட்சியை நவீன தொழிலாளி வர்க்கம் எதிர்பார்க்கிறது. அப்படிப்பட்ட ஒரு கட்சி, இன்று நிலவும் அதிகாரத்தைத் தன் கைகளில் கைப்பற்றும் நோக்கத்தைக் கொண்டிராமல், மக்களுக்காக ஒரு புதிய அரசியல் அதிகாரத்தை உருவாக்குவதற்காக முயற்சிக்கும். அது, வேட்பாளர்களைத் தீர்மானிப்பதில் அரசியல் கட்சிகளுடைய மேலாதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர போராடும். அது, தேர்தலுக்கு முன்னர் வேட்பாளர்களை முடிவு செய்யவும், சட்டங்களை முன்வைப்பதற்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை எந்த நேரத்திலும் திருப்பியழைக்கவும் உழைக்கும் மக்களுக்கு உரிமை கோரிப் போராடும்.

ஒரு புதிய அரசியல் அதிகாரத்தை - ஒரு மக்களாட்சி அமைப்பை நிறுவுவதற்கானப் போராட்டத்தில் பெரும்பான்மையான விவசாயிகளையும், பிற ஒடுக்கப்பட்ட மக்களையும் தலைமைதாங்கி நடத்திச் செல்ல தொழிலாளி வர்க்கத்தை தயாரிக்கும் நோக்கத்தோடு கம்யூனிஸ்டு கெதர் கட்சி வேலை செய்கிறது. இந்தப் போராட்டதினூடே கம்யூனிஸ்டுகளுடைய ஐக்கியத்தை மீண்டும் கட்டியமைக்கும் நோக்கத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். வர்க்க சமரசம் மற்றும் குறுங்குழு வாதம் என்னும் இரண்டு நோய்களையும் எதிர்த்து ஒரு விட்டுக் கொடுக்காத போராட்டத்தின் மூலம் கம்யூனிஸ்டுகளுடைய ஒற்றுமையை மீண்டும் கட்டியமைக்க முடியுமென நாங்கள் நம்புகிறோம். ஒரு ஐக்கிய கம்யூனிச இயக்கத்தால் இன்றுள்ள அமைப்பின் மீது வெறுப்படைந்து, தாங்கள் அதிகாரமற்று இருக்கும் நிலைமைக்கு முடிவு கட்ட முயன்று வருவோர் அனைவரையும் தன்பால் ஈர்க்க முடியுமென நம்புகிறோம்.

முதலாளித்துவ ஆட்சியைத் தூக்கியெறியவும், சோசலிசத்திற்கான பாதையைத் திறந்துவிடவும் உள்ள எண்ணெற்ற  வர்க்கப் போராட்டக் களங்களில் ஒன்றாக தேர்தல் களத்தையும் கம்யூனிஸ்டுகள் அணுக வேண்டும். மாறாக காங்கிரசு, பாஜக மற்றும் பிற முதலாளித்துவ கட்சிகளோடு போட்டி போட்டுக் கொண்டு, இன்றுள்ள அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமென்ற ஒரே நோக்கத்தோடு தேர்தல் போராட்டங்களை ஒரு தொழிலாளி வர்க்கக் கட்சி அணுகுமானால், அப்படிப்பட்ட கட்சி முதலாளித்துவ ஆட்சியோடு சமரசம் செய்து கொண்டுள்ளது என்று பொருளாகும். தங்களுடைய வர்க்க சமரசத்தை நியாயப்படுத்துவதற்காக இப்படிப்பட்ட கட்சிகள் இன்றுள்ள சனநாயக அமைப்பு ஒரு முதலாளித்துவ சனநாயகமென்ற உண்மையை மறைத்து அது பற்றி மாயைகளைப் பரப்பி வருகின்றன.

இந்த நேரத்தில் இருக்கும் அரசியல் நெருக்கடியின் மையமாக, மக்களுக்கு அதிகாரத்தை வழங்க வேண்டியத் தேவை இருக்கிறது. இந்தப் பிரச்சனை, கம்யூனிஸ்டுகளுக்கும் எண்ணெற்ற பிற அரசியல் சக்திகளுக்கும் ஆர்வமூட்டுகிறது. இப்படிப்பட்ட எல்லா சக்திகளையும், அவர்களுடைய தத்துவார்த்த நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்ட அளவில், அரசியல் ரீதியாக ஐக்கியப்படுத்தும் முயற்சிகளுக்குக் கம்யூனிஸ்டுகள் தலைமை தாங்கி முன்னெடுத்துச் செல்ல வேண்டும். பல்வேறு கட்சிகளோடும், உழைக்கும் மற்றும் ஒடுக்கப்பட்ட பெரும்பான்மை மக்களுடைய கட்சி சாராத வேட்பாளர்களோடும் ஐக்கியப்படாமல் இருப்பதற்கு தத்துவார்த்த காரணங்களைக் காட்டும் இந்தக் கட்சிகளின் குறுங்குழுவாதமே இப்படிப்பட்ட முயற்சிகளுக்கு ஒரு மிகப் பெரிய தடையாக இருக்கிறது.

அடுத்த கட்ட மாநிலத் தேர்தல்களும், பாராளுமன்றத் தேர்தலும் நெருங்கும் இந்த வேளையில் தற்போது முடிந்த கர்நாடக மாநில தேர்தல் படிப்பினைகள் உட்பட கடந்த கால அனுபவத்தின் படிப்பினைகளைப் பற்றி நாம் தெளிவாக இருக்க வேண்டும்.

மக்களை அதிகாரத்திற்குக் கொண்டுவரும் நோக்கத்தையொட்டியும், எல்லா வகையான வர்க்க சமரசத்தையும், குறுங்குழுவாதத்தையும் முறியடிப்பதன் மூலம் கம்யூனிஸ்டுகளுடைய ஐக்கியத்தை மீண்டும் கட்டியமைக்கும் போராட்டத்தைத் தீவிரப்படுத்தவும் அரசியல் ஒற்றுமையைக் கட்டும் வேலையைத் தீவிரப்படுத்த வேண்டுமென தன்னுடைய எல்லா உறுப்பினர்களையும், செயல்வீரர்களையும் கம்யூனிஸ்டு கெதர் கட்சி கேட்டுக் கொள்கிறது.

Pin It