பெரும்பான்மையான மக்களை விலையாகக் கொடுத்து, தன்னுடைய சுயநலத்தைக் காத்துக் கொள்ளும் ஒரு அரசியல் அமைப்பிடமும், அதனுடைய ஆளும் வர்க்கத்திடமும் நியாயம் கேட்டு, பல்கலைக் கழக, பள்ளி மாணவர்களும், தொழிலாளி வர்க்க இளைஞர்களும், நாட்டின் தலைநகர வீதிகளில் குவிந்தனர்.

அடிமைகளாக நடத்தப்பட்ட மக்களிடம், எல்லாருடைய உரிமைகளும் மதிக்கப்படும் ஒரு புதிய சமுதாயத்தைக் கட்டுவோமென்ற வாக்குறுதியோடு,  சுதந்திரமடைந்து 65 ஆண்டுகளுக்குப் பின்னர், மக்கள் தொகையில் பாதியாக இருக்கும் பெண்களுக்கு தன்மானத்திற்கான உரிமை வேண்டுமெனக் கேட்டு, மக்கள் வீதிகளில் இறங்கினர்.

டிசம்பர் 16-அன்று தில்லியில் ஒரு பேருந்தில் ஒரு இளம் பெண் மோசமாகக் கற்பழிக்கப்பட்டதற்கும், அவரும் அவருடைய நண்பரும் தாக்கப்பட்டதற்கும் அரசாங்கத்தின் பதிலானது, மக்கள் மீது இந்திய ஆளும் வர்க்கத்திற்கு உள்ள மிகவும் அக்கறையற்ற அலட்சியத்தைக் காட்டுகிறது. இந்த மோசமான நிகழ்வுக்கு முதலில் அரசாங்கத்திடமிருந்து எவ்வித அதிகாரபூர்வமான பதிலும் வரவில்லை. இந்த குற்றத்திற்கு பரந்துபட்ட இளைஞர்களிடமிருந்து எழுந்த மக்கள் எதிர்ப்பை அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை. குற்றம் வெளியான ஒரே நாளிலேயே தலைநகரானது போராட்டப் புயல்களால் உலுக்கப்பட்டது. அவை நாட்டின் பிற நகரங்களுக்கும் பரவியது. தில்லியில் ஆர்பாட்டக்காரர்கள், இந்தியா கேட்டில் ஒன்று கூடி ராஜ் பாத்திற்கும், சனாதிபதியின் மாளிகைக்கும் சென்று, சோனியா காந்தியின் வீட்டின் முன்னர் ஆர்பாட்டம் நடத்தினர்.

அப்போதும் அரசாங்கத்தின் பதில் என்ன? அரசாங்கம், போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியும், தண்ணீர் பீரங்கிகளைக் கொண்டும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் அவர்களைக் கலைக்க முயற்சித்தனர். அவர்களுடைய முக்கிய கவலையானது, ஆர்பாட்டக்காரர்கள் சனாதிபதி மாளிகைக்குள் நுழைந்துவிடக் கூடாதென்பதும், தலைநகரிலேயே இரு இளைஞர்களுக்கு நடந்த இந்தக் கொடூரமான குற்றம் பற்றி அப்போது வருகை தந்திருக்கும் இரசிய தலைவருக்குத் தெரியக் கூடாதென்பதும் ஆகும்! ஐந்தாவது நாள் ஆர்பாட்டத்தின் போது, காவல்துறையினரைத் தூண்டிவிடவும், வாகனங்களைச் சிதைக்கவும், வன்முறையைக் கட்டவிழ்த்து விடவும், குண்டர்கள் வேண்டுமென்றே ஆர்பாட்டக்காரர்களோடு அனுப்பப்பட்டனர். அதற்காகவே காத்திருந்த காவல் துறையினர், அப்பாவியான பல ஆர்பாட்டக்காரர்கள் மீது தங்களுடைய முழுக் கோபத்தையும் கட்டவிழ்த்து விட்டனர்.

இப்படிப்பட்ட தாக்குதல்களால் இளைஞர்களுடைய உணர்வை அடக்க முடியவில்லை. பெண்களுக்கு நகரம் பாதுகாப்பானதாக இருப்பதற்கு அரசாங்கம் உண்மையிலேயே சில நடவடிக்கைகளை எடுக்கப் போகிறார்கள் என்பதைக் காணும் வரை தங்களுடைய ஆர்பாட்டங்களைத் தொடர வேண்டுமென்பதில் அவர்கள் உறுதியாக நின்றனர். பிரதமரும், தில்லி முதலமைச்சரும், உள் துறை அமைச்சரும் ஆர்பாட்டக்காரர்களை அமைதிப்படுத்த மேற்கொண்ட முயற்சிகளை மக்களும் இளைஞர்களும் புறக்கணித்தனர். இவை வெற்று வார்த்தைகள் என்பதை தங்களுடைய அனுபவத்திலிருந்து அறிந்திருந்த அவர்கள், இந்த வாக்குறுதிகளைக் கேட்க மறுத்தனர். போராட்டத்தை திசை திருப்ப அரசியல் கட்சிகள் மேற்கொண்ட எல்லா முயற்சியையும் அவர்கள் தெள்ளத் தெளிவாகப் புறக்கணித்தனர்.

பாலியல் வன்முறைகளைத் தண்டிப்பதற்கான சட்டங்களுக்கு நம் நாட்டில் பஞ்சமில்லை. ஆனால் உண்மையோ, மிகச் சில குற்றவாளிகளே குற்றஞ்சாட்டப்படுகிறார்கள் அல்லது விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். தில்லியிலும், இந்தியாவின் பிற நகரங்களிலும், பேரூர்களிலும், குற்றவியலான குண்டர்களும், தடியர்களும் சுதந்திரமாக சுற்றி வந்து, மக்களை அச்சுறுத்தி வருகின்றனர். அவர்கள் எவ்வித அச்சமும் இன்றி செயல்படுகிறார்கள். ஏனெனில், அவர்கள் சட்டத்தால் பிடிக்கப்படவோ, தண்டிக்கப்படவோ மாட்டார்களென அவர்களுக்குத் தெரியும். இன்றிருக்கும் அமைப்பிற்கு இப்படிப்பட்ட குற்றவாளிகள், அரசியல் கட்சிகளுக்கு வாக்குகளைப் பெறுவதற்கும், பேட்டை ரவுடிகளுக்கும், நில உடமையாளர்களுக்கும் பட்டி தொட்டிகளிலிருந்து மக்களை அவர்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்றவும், போராடும் தொழிலாளர்களைப் பணக்காரர்கள், அதிகாரத்திலுள்ளவர்கள், முதலாளிகளுடைய சார்பில் தாக்கவும், வகுப்புவாதப் படுகொலைகளை நடத்தவும் தேவைப்படுகின்றனர். காவல் துறைக்குத் தெரியாமலும், அரசியலில் சக்தி வாய்ந்தவர்களுடைய பாதுகாப்பு இல்லாமலும் இப்படிப்பட்ட குற்றவாளிகள் இருக்க முடியாது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், பெண்கள் குறியிட்டுத் தாக்கப்படும் நிலை உள்ளது. இந்திய சமுதாயம் தன்னுடைய இடைக்காலத்திலிருந்து விடுபட்டு வரக்கூடிய சமூகப் புரட்சியை சந்திக்கவில்லை. சாதி அமைப்பும், பிற்போக்கான மதச் சடங்குகளும், சமுதாயத்தில் இன்னும் நிலவும் பிற்போக்கான சமூகப் பழக்க வழக்கங்களும் பெண்களைத் தொடர்ந்து ஒடுக்கியும், அவமானப்படுத்தியும் வருகின்றன. காலனிய காலத்தில் முதலாளித்துவம் வளர்ச்சியடைந்த போதும், நவீன காலத்தில் அது மேலும் வளர்ச்சியடைந்து வருகின்ற போதும், எல்லா மக்களையும் கடுமையாகச் சுரண்டுவதற்கு, சில இடைக்கால சாதி வழக்கங்களையும், பெண்களுக்கு எதிரான நடைமுறைகளையும் கட்டிக்காப்பது பயனுள்ளதென முதலாளி வர்க்கம் கண்டது.

முதலாளித்துவத்தின் கீழ் ஆணாதிக்க சமூக அமைப்பு, பெண்களுக்கு உரிய இடத்தைத் தொடர்ந்து மறுத்து வருகிறது. பெரும் ஏற்றத் தாழ்வு நிறைந்த இந்த சமுதாயத்தில், பெண்கள் மிகவும் பாரபட்சமாக நடத்தப்படுகிறார்கள். "உன்னுடைய தகுதியை அறிந்து நடந்து கொள்ள வேண்டுமென" அவர்கள் மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறார்கள். அதை மீறி நடந்து கொண்டதாகக் கூறி அதற்காக அவர்கள் மோசமாக நடத்தப்பட்டுத் தாக்கப்படுகிறார்கள். தங்களுடைய சொந்த தனிப்பட்ட வாழ்க்கையைத் தீர்மானித்துக் கொள்ளக்கூட அவர்களுக்கு உரிமை இல்லை. அவர்களுக்கு எதிராக நடத்தப்படும் எல்லாக் குற்றங்களுக்கும் அவர்களே காரணமென குற்றஞ் சாட்டப்படுகிறார்கள். அதே நேரத்தில், முதலாளித்துவ அமைப்பில், இளம் பெண்களும் சிறுவர்களும் பாலியல் கற்பழிப்பிற்கும் வன்முறைக்கும் ஆளாகிறார்கள். எனவே, நம்முடைய தலைநகரில் கூட பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்பதில் வியப்பேதுமில்லை.

ஒரு நவீன சமுதாயத்தின் தலைமையில் இருப்பதாக இந்திய ஆளும் வர்க்கங்கள் கூறிக் கொள்ளும் போது, அவர்கள் மிகக் குறுகிய இடமாகிய தொழில் நுட்ப தொழில் வளர்ச்சியையும், அவர்களுடைய மூலதனத்தின் இலாபத்தை அதிகரிக்கும் நிதிச் சந்தையையும், வணிகச் செயல்பாடுகளையும் மட்டுமே அவர்கள் குறிப்பிடுகிறார்கள். அவர்களுக்கு மக்களின் நலத்தைப் பற்றியோ, கண்ணியத்தைப் பற்றியோ கவலையில்லை. பெண்களுடைய நிலையைப் பற்றி அவர்களுக்குக் கொஞ்சமும் கவலையில்லை.

பெண்கள் மீது இப்படிப்பட்ட தாக்குதல்களை நடத்துகின்ற, பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கின்ற ஒரு சமுதாயம், ஆடவருக்கும் எவ்வித மதிப்பையும் அளிக்க முடியாது. ஒரு சமுதாயம் எவ்வளவு முன்னேறி இருக்கிறது என்பது பெண்கள் எவ்வளவு விடுதலை பெற்றிருக்கிறார்கள் என்பதைப் பொறுத்ததாகும். ஒரு சமுதாயம் பெண்களுடைய பாதுகாப்பிற்கும், மதிப்பிற்கும் உத்திரவாதம் அளிக்க முடியாவிடில், குற்றவாளிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் பெண்களுக்கு எதிரான வன்முறையை நீடித்து வருமானால், அப்படிப்பட்ட சமுதாயம் அடிப்படையில் மாற்றியமைக்கப்பட வேண்டும்! பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவது குறித்து கோபம் கொண்டுள்ள நாம் எல்லோரும், அனைவருடைய மனித உரிமைக்கும் உத்திரவாதமளிக்கவும், இப்படிப்பட்ட கொடுமையான ஒரு நிகழ்வைக் கூட பொறுத்துக் கொள்ளாத ஒரு புதிய அமைப்பிற்காக வேலை செய்ய வேண்டும். இந்தப் போராட்டத்தின் முன்னணியில் பெண்கள் இருக்க வேண்டும். ஏனெனில் பெண்களுடைய விடுதலையானது, ஒட்டுமொத்த சமுதாயத்தின் விடுதலையைப் பொறுத்ததாகும். பெண்களும் ஆண்களும் சமமாக மதிக்கப்படும், எல்லா மக்களும் மதிப்போடு வாழக்கூடிய ஒரு சமுதாயத்திற்காக நாம் போராட வேண்டும்.

Pin It