27.02.15 அன்று,இராணிப்பேட்டை தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் தொடர்ந்து பலியாவதன் பின்னணியில் லாபவெறி பிடித்த முதலாளிகளும், ஊழலில் திளைக்கும் அரசு அதிகாரிகளும் இருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டும் கண்டன ஆர்ப்பாட்டத்தை காஞ்சி மக்கள் மன்றம் நடத்தியது.

சென்றசனவரி 31, 2015 அன்றுவேலூர்மாவட்டம், இராணிப்பேட்டை, சிட்கோ (SIDCO)தொழிற்பேட்டையில்  , அதிலிருந்து வெளிவந்த கடும் நச்சுத்தன்மை மிக்க கழிவுகளில் மூழ்கி 10 தொழிலாளிகள் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் கழிவுநீர்த் தொட்டியை ஒட்டி உள்ள "ஆர்கேலெதர்ஸ்" எனும்தோல்பதனிடும் தொழிலகத்தில் பணியாற்றியவர்கள்.

இவர்கள் இந்தத்தொழிலகத்தில் உள்ள ஒரு கொட்டகையில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள். ஒருவரைத் தவிர மற்றவர்கள் மேற்கு வங்கத்திலுள்ள பஸ் சிம்மெதினி பூர்மாவட்டத்தை சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளிகள் ஆவர்.

இராணிப்பேட்டையில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட தோல்பதனிடும் தொழிலகங்கள் பல ஒன்றாய்ச் சேர்ந்து "பொதுக்கழிவு சுத்தகரிப்பு நிலையங்களை" (Common Effluent Treatment Plant - CETP) அமைத்துத்தம் தொழிலகங்களிலிருந்து வரும் கழிவுகளைச் சுத்திகரிக்கின்றன. இராணிப்பேட்டை சிட்கோவில் மட்டும் இதுபோன்ற 8 பொதுக் கழிவுநீர்த் திருத்த நிலையங்களும், தனிப்பட்ட 226 சுத்திகரிப்பு நிலையங்களும் (Independant Effluent Treatment Plant - IETP) உள்ளன.

சுத்திகரிக்கும் நிலையத்தை வடிவமைப்பது, செயல்படுத்துபவது எல்லாவற்றிலும் தோல்பதனிடும் தொழிலகங்களின் உரிமையாளர்களே முக்கியபங்குவகிக்கின்றனர். இவர்களின் நோக்கம் "சுத்திகரிப்பின்" பெயரிலும் உச்சபட்சமான லாபம் சம்பாதிப்பதே. பாதுகாப்பு, சுற்றுச்சூழலை மாசுபடாமல் காப்பது என்பதெல்லாம் இவர்களுக்குப் பொருட்டல்ல.

வெடித்த அந்த சுத்தகரிக்கும் நிலையக் கட்டிடம் அனுமதியின்றிக் கட்டப்பட்டுள்ளதாக இப்போது மாசுகட்டுப்பாட்டு நிறுவனம் இப்போது கூறுகிறது.

ranipettai meeting 600

உரிய வலுவுடன் கட்டப்பட்டிருந்தாலும் கூட இந்த தொட்டிகள் திரவங்கள் நீக்கப்பட்டுத் திடவடிவம் அடைந்த கழிவுகளை மட்டுமே தாங்க வல்லன. அதற்குள் கடந்த ஆறு மாத காலத்திற்கும் மேலாக சுத்திகரிக்கப்படாத பிசுபிசுப்புமிக்க திரவவடிவிலான நச்சுக் கழிவுகளை சுத்திகரிப்பு நிலைய நிர்வாகம் தேக்கி வைத்துள்ளது.

இந்த திரவக் கழிவுகளின் அழுத்தம் தாங்க முடியாத இரண்டாம் தொட்டி சனவரி 31 இரவு 1 மணி அளவில் உடைந்து விழுந்து 10தொழிலாளர்கள் சாவதற்குக் காரணமாக இருந்துள்ளது.

இந்தப் படுகொலையையும், அப்பகுதியில் தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் அடிக்கடி நடக்கும் இப்படிப்பட்ட உயிரிழப்புக்களையும் கண்டித்து இந்த ஆர்பாட்டம் நடைபெற்றது. இராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் மன்றத் தோழர்கள் பெருந்திரளாகப் பங்கெடுத்தனர்.அப்பகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி,இந்தியக் குடியரசுக் கட்சி,மனிதநேய மக்கள் கட்சிஉள்ளிட்ட இயக்கங்களின் தோழர்கள் பங்கேற்று தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்தனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில், இளந்தமிழகம் இயக்கம் சார்பாக தோழர்கள் வினோத், தமிழ் நாசர் பங்கெடுத்தனர். கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டக் கருத்துகள் பின்வருமாறு.

இராணிப்பேட்டை டேனரி தொழிற்சாலையில் நடந்தது விபத்து அல்ல, பச்சைப் படுகொலைகள் என்பது தெளிவு.சுத்திகரிக்கப்பட்டபின் தோல் கழிவுகளைச் சேமிக்கும் தொட்டியை நிர்வகிக்கும் செம்காட், சிட்கோ, டிலெடெப், சிடெப்உள்ளிட்ட அமைப்புகள் முதலாளிகளுடைய நலன்களைப் பாதுகாப்பதிலும், ஊழலிலும் ஈடுபட்டுள்ளனர். இந்த உயிரிழப்பிற்கு இந்த அமைப்புகளும்,இவற்றை மேற்பார்வையிடும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டுத் துறையின் உயர் அதிகாரிகளுமே பொறுப்பு.

வட இந்தியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி, போதிய தங்குமிடம், இட வசதிகளைச் செய்து கொடுக்காமல், இலாப வெறியில், பணி செய்யும் இடத்திலேயே தங்க வைத்ததால், அவர்கள் இறந்திருக்கிறார்கள். தொழிலாளர்களின் நலனை உறுதி செய்திருக்க வேண்டிய தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளும் இந்தக் கொலைகளுக்கு பொறுப்பானவர்கள் ஆவர்.

தொழிலாளர் நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்னெடுக்கவும், வெற்றி பெறவும், அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் சங்கம் அமைக்க வேண்டும். முக்கியமாக, அனைத்து வகைகளிலும் சுரண்டலுக்கு ஆளாகும் வட இந்தியத் தொழிலாளர்களின் உரிமைகளுக்கு பாதுகாப்பு உடனடித் தேவையாகும். இதை ஏற்கெனவே இருக்கும் தொழிற்சங்கங்களும்,இந்தப் போராட்டத்தில் இருக்கும் இயக்கங்களும் இணைந்து முன்னெடுக்க வேண்டும்.

அனைத்து வகைகளிலும் முதலாளித்துவ இலாப வெறியால் பாதிப்புக்குள்ளாகும் வட இந்தியத் தொழிலாளர்களை முதன்மை விரோதிகள் போல் சித்தரித்து, நாம் எதிர்த்துப் போராட வேண்டிய இந்திய பெருமுதலாளித்துவ சுரண்டலை பின்னுக்குத் தள்ளும், பிற்போக்குத்தனமான, தொழிலாளர் விரோத, ‘வெளியாரை வெளியேற்றுவோம்’என்னும் கேடுகெட்ட அரசியலை நாம் அனைவரும் இணைந்தே முறியடிப்போம்.

அனைத்துத் தொழிலாளர்களுடைய உயிரையும், உரிமைகளையும் பாதுகாக்கவும், சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கவும் தொழிலாளர்களை ஒருங்கிணைத்துப் போராடுவதென்ற உறுதியோடு இந்த ஆர்பாட்டம் முடிவுற்றது.

Pin It