சூழலியல் வகுப்பு - 2

புவியின் காலநிலை வரலாறு:

நம் சமூகமும், உயிர்க்கோளமும் இன்று சந்திக்கும் மிகப்பெரும் சூழலியல் பிரச்சினையாக காலநிலை மாற்றம் உள்ளது. இதைச் சூழலியல் விஞ்ஞானிகளும், மற்றத் துறைகளைச் சார்ந்த நிபுணர்களும்  சுட்டிக் காட்டியுள்ள போதிலும், காலநிலை மாற்றம் என்பது உண்மையல்ல என்றும், அது வெறும் கட்டுக்கதை என்றும் ஒரு சாரார் பரப்புரை செய்கிறார்கள்.

இதில் எது உண்மை? காலநிலை மாற்றம் அறிவியல் பூர்வமான உண்மையா, இல்லையா என்பதை ஆய்வு செய்து அறிய வேண்டியுள்ளது. நிகழ்கால சிக்கல்களைத் தீர்ப்பதற்கும், வருங்காலத்தில் பிரச்சனைகள் வராமல் தடுப்பதற்கும் நாம் வரலாற்று ஒளியைப் பாய்ச்சி ஆராயாமல் அப்பிரச்சனைகளுக்கான சரியான தீர்வைப் பெற முடியாது.

வரலாறு என்பது புனையப்பட்ட கதைகளோ புராணங்களோ அல்ல, வரலாற்று ஆய்வு அறிவியல் அடிப்படையில் செய்யப்பட வேண்டும் என்பதை 21ஆம் நூற்றாண்டிலும் அடிக்கோடிட்டுக் காட்ட வேண்டிய சூழலில் நாம் இருக்கிறோம்.

வேதங்களே அறிவியல் என்று ஓதப்படும் இன்று அறிவியல் என்ன என்பதையும் அறிவுறுத்த வேண்டியுள்ளது. அறிவியல் என்பது ஆய்வுகளின் அடிப்படையிலும், தரவுகளின் அடிப்படையிலும் பெறப்பட்ட உண்மைகளால் ஆனது.

இவ்வுலகிலுள்ள எல்லா நிகழ்வுகளுக்கும், மனிதர்களுக்கும், பொருட்களுக்கும் வரலாறு உள்ளது. அதன் அடிப்படையில்தான் நாம் ஒவ்வொன்றையும் புரிந்து கொள்கிறோம், உலகிலுள்ள ஒவ்வொன்றிற்கும் ஒரு வரலாறு உண்டு என்றால் காலநிலைக்கும் ஒரு வரலாறு உண்டுதானே? நம் உலகம் இதுவரை கடந்து வந்த காலநிலைகளைப் பின்சென்று பார்க்கலாமா?

வானிலை என்பது வளிமண்டலத்தின் வெப்பநிலை, ஈரப்பதம் மழைப்பொழிவு ஆகிய கூறுகளை ஒரு நாள், ஒரு வாரம், ஒரு மாதம் எனக் குறுகிய காலகட்டத்தில் பதிவு செய்வதைக் குறிக்கிறது. நீண்ட கால அளவில் அவை பதிவுசெய்யப்படும் போது அதுவே காலநிலை எனப்படுகிறது, இதுதான் காலநிலைக்கும் வானிலைக்கும் உள்ள முக்கியமான வேறுபாடு.

புவியின் வயது 4.6 பில்லியன் ஆண்டுகள் ஆகும் கிட்டத்தட்ட 5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் புவி உருவாகத் தொடங்கியது. புவியின் வாழ்வுக் காலம் நான்கு பேரூழிக் காலங்களாக (Eons) பிரிக்கப்பட்டுள்ளது, ஒரு பேரூழிக் காலம் என்பது 50 கோடியிலிருந்து 100 கோடி ஆண்டுகளைக் குறிக்கும். இவை முறையே 1. ஹாடியன், 2. ஆர்கியன் 3. புரோட்டிரோசோயிக் 4. பெனெரோசோயிக் என அழைக்கப்படுகின்றன.

அதற்கு அடுத்த மட்டத்தில் பேரூழிக்காலங்கள் ஊழிக்காலங்களாகவும் (‘Era’-பல மில்லியன் ஆண்டுகள், ஊழிக்காலங்கள் பகுதிகளாகவும் (‘periods’ ஒரு மில்லியன் ஆண்டுகள்) பிரிக்கப்பட்டுள்ளன.

நம் புவியானது அதன் ஆதிக் காலத்திலிருந்து அடுத்தடுத்து பல வெப்பக் காலங்களையும் பனி ஊழிக் காலங்களையும் கண்டுள்ளது. புவியானது மூன்று வடிவங்களில் காணப்பட்டிருந்தது. ஒரு வெப்பமான பசுங்குடிலாகவோ (green house) அல்லது குளிரான பனிக் குடிலாகவோ (ice house), முற்றிலும் உறைந்த பனிப் பந்தாகவோ (ice ball) காணப்பட்டது.

பனிக் காலமானது தொடர்ந்து பல ஆயிரம் ஆண்டுகளாக நீடிக்கும் போது அது பனியூழிக் காலம் என அழைக்கப்படுகிறது. இரண்டு பனியூழிக் காலங்களுக்கு இடைப்பட்ட காலம் பனியூழி இடைக்காலம் (Interglacial period) எனப்படுகிறது.

அடுத்தடுத்து பனியூழிக் காலத்தின் கால அளவானது 40,000 ஆண்டுகளிலிருந்து 1 லட்சம் ஆண்டுகள் வரை வேறுபடுகிறது. அதன் இடையில் வரும் பனியூழி இடைக்காலம் 10,000 ஆண்டுகள் வரை நீடிக்கிறது. பனியூழி இடைக்காலங்கள் வெப்பக் காலங்களாக உள்ளன.

புவியின் வெப்ப நிலையை நிர்ணயிப்பதில் முக்கியப் பங்கு வகிப்பவை கார்பன்-டை-ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஜன்–டை-ஆக்சைடு போன்ற முதன்மையான பசுங்குடில் வாயுக்கள் (Green house gases) ஆகும். பசுங்குடில் விளைவு என்பது செயற்கையான நிகழ்வு அல்ல. அது ஒரு இயற்கை நிகழ்வு தான். இது புவியில் மட்டுமல்ல, வளி மண்டலத்தைக் கொண்டுள்ள பிற கோள்களிலும் பசுங்குடில் விளைவு நிகழ்கிறது.

வளி மண்டலத்தில் பசுங்குடில் வாயுக்கள் இருப்பதால்தான் புவியில் உயிர்கள் வாழத்தக்க ஒரு சூழ்நிலை நிலவுகிறது. பசுங்குடில் வாயுக்கள் இல்லையென்றால் புவியின் வெப்பநிலை -18 அல்லது -19 பாகையாகக் குறைந்திருக்கும். பசுங்குடில் விளைவினால்தான் நாம் வாழ்வதற்கான சூழல் புவியில் ஏற்பட்டுள்ளது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

இந்தப் பசுங்குடில் வாயுக்களின் அளவு வெவ்வேறு காலகட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளால் மாறுபட்டுள்ளது. அதுவே  புவியின் வெப்பநிலையையும், புவியின் நீர்ப்பரப்புகளின் அளவையும் (கடல் மட்டத்தின் அளவு), அதன் நிலையையும் (பனிப் பாறைகளின் அளவு) தீர்மானிக்கிறது.

புவி கடந்துவந்த பேரூழிக்காலங்கள்:

ஹாடியன் பேரூழிக்காலம்:

புவியின் முதல் பேரூழிக் காலம் ஹாடியன் எனப்படுகிறது .ஹாடியன் என்பது கீழுலகின் கடவுள் பெயரைக் குறிக்கும் கிரேக்கச் சொல். நரகம் மாதிரியான ஒரு சூழ்நிலையையே, உயிர்கள் வாழத் தகுதியற்ற ஒரு சூழலையே ஹாடியன் குறிக்கிறது.

ஏனெனில், பெருவெடிப்புக் கொள்கையை நீங்கள் அறிந்திருப்பீர்கள், புவி தோன்றிய போது எரிமலைகளுடன், நெருப்புப் பிழம்பாக இருந்தது. அது ஒரு முழுமையான திட வடிவம் பெறாமல் ஒரு நெருப்புக் கோளமாகத்தான் இருந்து வந்தது, அந்தக் காலகட்டமே ஹாடியன் எனப்படுகிறது.

ஆர்க்கியான் பேரூழிக்காலம்:

ஹாடியனைத் தொடர்ந்து வந்த இரண்டாவது பேரூழிக் காலம் ஆர்க்கியான் எனப்படுகிறது. ’ஆர்க்’ என்பது ஆதி என்ற பொருளுடையது. ஆர்க்கியான் காலகட்டத்தில்தான் உயிர்கள் தோன்றுவதற்கான அடிப்படைச் சூழல் ஏற்பட்டது ஆர்க்கியான் காலகட்டத்தில்தான் புவியின் வெப்ப நிலை குறைந்து கண்டங்கள் உருப்பெற்றன.

அடிப்படையான ஒரு செல் உயிரினங்கள் தோன்றின. ஆனாலும் ஆக்சிஜன் குறைந்த அளவிலேயே காணப்பட்டது. அதற்கடுத்த புரோட்டிரோசோயிக் காலகட்டத்திலும் ஆக்சிஜன் குறைவாகவே காணப்பட்டது.

ஏனென்றால் இரும்பு மற்றும் பிற தாதுக்கள் அதிக வினைப்படும் திறனுடன் காணப்பட்டதால் அவற்றின் ஆக்சிஜனேற்றத்திற்கே பெருமளவு ஆக்சிஜன் எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆக்சிஜன் பற்றாக்குறையால், குறைந்த அளவிலே உயிரினங்கள் காணப்பட்டன.

புரோட்டிரோசோயிக் பேரூழிக்காலம்:

ஆர்க்கியானைத் தொடர்ந்து வந்த மூன்றாவது பேரூழிக் காலம் புரோட்டிரோசோயிக் எனப்படுகிறது. புரோட்டிரோசோயிக்கில் உள்ள புரோட்டோ என்றால் முந்தைய என்று பொருள். சோயிக் என்றால் விலங்கு என்று பொருள். அதாவது முந்தைய விலங்கினங்கள் தோன்றிய காலம் புரோட்டிரோசோயிக் காலம் எனப்படுகிறது.

இந்த மூன்றாவது பேரூழிக் காலத்தில் இரண்டு பனியூழிக் காலங்கள் ஏற்பட்டுள்ளன. அதில் பாக்டீரியா போன்ற ஆரம்பநிலை உயிரினங்களான புரோக்கேரியட்டுகள் தோன்றியுள்ளன. இந்தக் காலகட்டத்திலும் பல்லுயிர்ப் பெருக்கம் ஏற்படும் அளவிற்கு ஆக்சிஜனின் அளவு அதிகரிக்கவில்லை.

அப்பொழுது ஓசோன் மண்டலமும் ஏற்படாததால் புற ஊதாக் கதிர்களின் தாக்கம் இருந்தது. நிலப்பகுதிகளில் உயிர்கள் வளர்வதற்கான சூழல் உருவாகவில்லை. ஆரம்ப காலத்தில் நீர்நிலைகளில்தான் உயிரினங்கள் முதலில் தோன்றியுள்ளன. உயிர் தோன்றுவதற்கான உயிர் மூலக்கூறுகள் முதன் முதலில் நீரில்தான் உருவாகின. ஓசோன் படலம் ஏற்பட்ட பிறகுதான் உயிரினங்கள் நிலத்திற்கு இடம் பெயரும் சூழல் ஏற்பட்டது. இந்த புரோட்டிரோசோயிக் காலத்தில் ஒரு முக்கியமான பனியூழிக் காலம் ஏற்பட்டது.

2,500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட இந்த முதல் பனியூழிக் காலம் ஹுரானியன் பனியூழிக் காலம் எனப்படுகிறது. புரோட்டிரோசோயிக் காலகட்டம் முடியும் போதும் கிரையோஜனியன் என்ற காலப் பகுதியில் ஸ்டுர்டியன்,மரினோன் என இரு பனியூழிக்காலங்கள் ஏற்பட்டன. ‘கிரையோ’ என்றால் பனி என்று பொருள். 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட இந்தப் பனியூழிக்காலத்தில் புவியின் அனைத்து பகுதியும் பனியாய் உறைந்து ஒரு பனிப்பந்தாக புவி காணப்பட்டது.

பெனரோசோயிக் பேரூழிக்காலம்:

புரோட்டிரோசோயிக்கைத் தொடர்ந்து வந்த நான்காவது பேரூழிக்காலம் பெனரோசோயிக் எனப்படுகிறது. பெனரோசோயிக்கில் வரும் பெனரோ என்றால் கண்ணுக்கு வெளிப்படையாகத் தெரிகிற என்று பொருள். கண்ணுக்கு வெளிப்படையாகத் தெரிகின்ற உயிரினங்கள் தோன்றிய காலகட்டத்தைக் குறிக்கிறது.

பெனெரோசோயிக் பேரூழிக்காலமானது 1.பேலியோசோயிக், 2.மீசோசோயிக், 3.செனோசோயிக் என மேலும் மூன்று ஊழிக்காலங்களாக(eras) பிரிக்கப்பட்டுள்ளன. பேலியோ என்பது பழைய என்னும் பொருளையும், மீசோ என்பது மத்திய எனும் பொருளையும், செனோ என்பது புதிய எனும் பொருளையும் குறிக்கிறது.

பெனரோசோயிக் பகுதியில் காலநிலை மாற்றத்தால் ஐந்து பேரழிவுகள் ஏற்பட்டுள்ளன. அதில் முதல் மூன்று பேரழிவுகள் பேலியோசோயிக் ஊழிக் காலத்திலும், அடுத்த இரண்டு பேரழிவுகள் மீசோசோயிக் ஊழிக் காலத்திலும் ஏற்பட்டுள்ளன.

ஒரு விதமான உயிரினங்கள் அழிவதும், புதுவிதமான உயிரினங்கள் தோன்றுவதும் அது காலத்திற்கேற்பத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதும் என உயிர்க்  கோளத்தின் பரிணாம மாற்றம் ஒரு தொடர்  நிகழ்வாக உள்ளது 

பேலியோசோயிக் ஊழிக்காலம்:

பேலியோசோயிக் முதல் காலகட்டமான கேம்பிரியன் காலப் பகுதியில்தான் கேம்பிரியன் வெடிப்பு ஏற்பட்டு பல்லுயிர்ப் பெருக்கம் ஏற்பட்டது. ஏனென்றால் அப்போது ஆக்சிஜன் அளவு அதிகரித்ததால் பல்லுயிர்களாகப் பெருகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதை அடிப்படையாக  வைத்து உலகின் காலத்தை கேம்பிரியனுக்கு முன், கேம்பிரியனுக்குப் பின் என இரண்டாகப் பிரிக்கலாம். ஹாடியன், ஆர்க்கியன். புரோட்டிரோசோயிக் பேரூழிக் காலங்கள் பிரி-கேம்பிரியன் காலகட்டங்களாக அழைக்கப்படுகின்றன.

முதல் பேரழிவு:

கேம்பிரியன் பெருவெடிப்புக்குப் பிறகு ஏற்பட்ட ஆர்டோடாவிசியன் காலப்பகுதியில் 444 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பனியூழிக்காலம் (ஆண்டிஸ்-சகாரா) ஏற்பட்டு கடல் மட்டம் குறைந்ததால் முதல் பேரழிவு ஏற்பட்டது. கடலில் வாழ்ந்த உயிரினங்கள் பேரழிவை சந்தித்தன. கொனோடொன்ட், கடற்பஞ்சுகள் ஆகிய சில உயிரினங்களே தப்பிப் பிழைத்தன. இதைத் தொடர்ந்து சில்லுரியன் காலப்பகுதி ஏற்பட்டது.

இரண்டாம் பேரழிவு:

சில்லுரியன் காலப்பகுதியைத் தொடர்ந்து வந்த நியோடாவியன் காலப்பகுதி மீன்களின் காலம் என்றழைக்கப்பட்டது. இக்காலத்தில் கவச மீன்கள் அதிகம் காணப்பட்டுள்ளன நீரில் ஆக்சிஜன் அளவு குறைந்ததால் 350 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாம் பேரழிவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்தே கார்பனிஃபெரஸ் காலப்பகுதி வந்தது. இந்தக் காலப்பகுதியில் இருந்த காடுகள், உயிரினங்கள் புதைந்து படிம எரிப்பொருட்கள் பெருமளவில் பெறப்பட்டுள்ளதாலே கார்பனிஃபெரஸ் காலப்பகுதி என அழைக்கப்படுகிறது.

மூன்றாம் பேரழிவு:

பெர்மியன் காலப்பகுதியில் 250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் சைபீரியாவில் எரிமலைச் செயல்பாட்டால் மூன்றாவது முறையாக உயிரிகளின் பெரும் பேரழிவு ஏற்பட்டது, பூச்சியினங்கள் அழிந்தன. காடுகள் அழிந்தன. அந்தக் காலகட்டத்தில்தான் கண்டங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து பேஞ்சியா என்ற பெருங்கண்டம் தோன்றியது.

பெர்மியன் காலப்பகுதியில் 95% உயிரிகள் அழிந்ததால் அது பேரிறப்புக் காலம் எனப்படுகிறது. பெர்மியன் காலப்பகுதியில் ஒரு பனியூழிக் காலமும் ஏற்பட்டது. பெர்மியன் காலப்பகுதியே பேலியோசோயிக் ஊழிக்காலத்தின் கடைசி காலப்பகுதியாகும்.

மீசோசோயிக் ஊழிக்காலம்:

நான்காவது பேரழிவு:

பேலியோசோயிக் காலத்தைத் தொடர்ந்து வெப்பமான மீசோசோயிக் ஊழிக்காலம் ஏற்பட்டது. மீசோசோயிக் ஊழிக்காலத்தில் பனியூழிக்காலம் ஏற்படவில்லை. இக்காலப்பகுதியில் பெரும் முதலைகள் காணப்பட்டன, ஊர்ந்து செல்லும் விலங்குகள் அதிகம் காணப்பட்டதால் அது ஊர்ந்து செல்லும் விலங்குகளின் காலமாக அறியப்படுகிறது. மீசோசோயிக் ஊழிக்காலம் டிரையாசிக், ஜுராசிக், கிரெட்டேசியஸ் ஆகிய மூன்று காலப்பகுதிகளைக் கொண்டுள்ளது. டிரையாசிக் காலப்பகுதியில் மைய அட்லாண்டிக் பகுதியில் ஒரு பெரும் எரிமலை வெடிப்பு நிகழ்ந்ததால் நான்காவது பேரழிவு ஏற்பட்டது. ஊர்ந்து செல்லும் விலங்கினங்கள் அழிந்தன இவை அழிந்த பிறகுதான் டைனோசர்கள் பல்கிப் பெருகுவதற்கான சூழல் உருவானது.

ஐந்தாவது பேரழிவு:

ஜுராசிக் காலப்பகுதியில் டைனோசர்கள் பல்கிப் பெருகின. அதைத் தொடர்ந்து வந்த கிரெட்டெசியஸ் காலப் பகுதியில், 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் மெக்சிகோவில் விண்கல் மோதியதாலும், தக்காணப் பகுதியில் எரிமலைச் செயல்பாடுகளாலும் ஐந்தாவது பேரழிவு ஏற்பட்டு டைனோசர்கள் அழிந்தன. அவற்றின் அழிவுக்குப் பிறகே பாலூட்டிகள் உருவாவதற்கான ஒரு சூழல்ஏற்பட்டது. அந்தக் காலப்பகுதியில் கண்ட நகர்வும் ஏற்பட்டது.

செனோசோயிக் ஊழிக்காலம்:

மீசோசோயிக் ஊழிக்காலத்தைத் தொடர்ந்து வந்த செனோசோயிக் ஊழிக்காலம் புதிய காலம் என்றும், பாலூட்டிகளின் காலம் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் கடைசி காலப்பகுதி குவாட்டர்னரி என அழைக்கப்படுகிறது. இந்த குவாட்டர்னரி காலப்பகுதியில் 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பிலெய்ஸ்டோசீன் பகுதியில் பனியூழிக் காலம் ஏற்பட்டது.

அதையடுத்து 11,700 ஆண்டுகளாக தொடர்கின்ற ஹொலோசீன் என்ற வெப்பக் காலத்தில்தான் நாம் வாழ்ந்து வருகிறோம். அதாவது நாம் ஒரு பனியூழி இடைக்காலத்தில் வாழ்ந்து வருகிறோம். அப்படியென்றால்  நம் புவியானது அடுத்து ஒரு பனியூழிக் காலத்தை சந்திக்கவுள்ளதா?.புவி அதன் இயல்பான செயல்பாடுகளோடு தொடர்ந்திருக்குமானால் கி.பி. 3500இல் ஒரு பனியூழிக்காலம் ஏற்படும் எனக் கணக்கிடப்பட்டிருந்தது.

ஆனால் அது மனிதச் செயல்பாடுகளால் தூண்டப்பட்ட பசுங்குடில் விளைவால் தடுக்கப்பட்டுள்ளது. மனிதச் செயல்பாடுகளால் 1850க்கு பிறகு பெருகிய தொழில்மயமாக்கம், நகரமயமாக்கம், போக்குவரத்தால் பசுங்குடில் வாயுக்களின் அளவு பெரிதும் அதிகரித்துள்ளது. தொழிற்புரட்சிக்கு முன் ஒரு பில்லியனில் 280 பகுதியாக  இருந்த கரியமில வாயுவின் அளவு இப்பொழுது ஒரு பில்லியனில் 411 பகுதிக்கும் மேல் அதிகரித்துள்ளது. இதனால் அடுத்து வரும் பனியூழிக் காலமானது தடுக்கப்பட்டது.

புவியில் பனியூழிக் காலங்கள், வெப்பக் காலங்கள் என மாறி மாறிக் காலநிலை மாற்றங்கள் ஏற்படுவதற்கு முதன்மையான காரணங்கள் பின்வருமாறு:

முதலாவதாக வளிமண்டலத்தில் பசுங்குடில் வாயுக்களின் அளவில் ஏற்படும் மாற்றத்தால் புவியின் வெப்பநிலை மாறுகிறது.

புவியின் சுற்றுப் பாதையில் ஏற்படும் மாற்றம்: புவி சூரியனைச் சுற்றி வரும் போது ஒரு குறிப்பிட்ட அச்சில் சுற்றி வருகிறது. அந்த அச்சின் சாய்வு 8 பாகையிலிருந்து 24.4 பாகை வரை மாறுபடுகிறது. இந்த மாற்றம் ஒரு சுழற்சியாக ஒவ்வொரு 40,000 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படுகிறது.

புவியின் சுற்றுப் பாதையானது ஒரு நீள்வட்டப் பாதை என்று நாம் படித்திருப்போம். ஆனால் அது எல்லா நேரங்களிலும் நீள்வட்டப் பாதையாக இருப்பதில்லை. ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு ஒரு முறை நீள்வட்டப் பாதையானது வட்டப் பாதையாக மாறுகிறது. வட்டப் பாதையில் சுற்றி வரும் போது புவிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரத்தில் மாற்றம் ஏற்படாது.

ஆனால் நீள்வட்டப் பாதையாக இருக்கும் போது ஓரிடத்தில் புவிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட  தொலைவு அதிகமாக பெருமத் தொலைவாகவும், மற்றோர் இடத்தில் புவிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட  தொலைவு குறைவாக சிறுமத் தொலைவாகவும் இருக்கும். இதனால் சூரியனிலிருந்து புவியை வந்தடையும் ஒளி ஆற்றலின் அளவிலும் வெப்பத்தின் அளவிலும் மாற்றம் ஏற்படுகிறது.

புவியானது தன்னைத் தானே சுற்றும் போது அதன் அச்சில் விலகல் ஏற்பட்டு, கற்பனையான கூம்பச்சைச் சுற்றி ஒரு வட்டப் பாதையையும் மேற்கொள்கிறது. புவி வட்ட வடிவில் மேற்கொள்ளும் இந்த தள்ளாட்டச் சுற்று 26,000 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்கிறது. இந்த மூன்று சுற்றுகளும் ஒருங்கிணைந்து செயல்படும் போது சூரியனிடமிருந்து புவியை வந்துசேரும் வெப்பத்தின் அளவு குறைகிறது.

இந்த மூன்று சுற்றுகளையும் ஒன்றிணைத்து மிலன்கோவிச் சுழற்சிகள் என்றழைக்கப்பர். மிலன்கோவிச் என்ற செர்பிய விஞ்ஞானியே இதைக் கண்டுபிடித்தார், மிலன்கோவிச் சுழற்சிகளால் புவி குளிரூட்டப்படுகிறது. கடந்த ஜந்து லட்சம் ஆண்டுகளில் ஐந்து முறை ஏற்பட்ட பனியூழிக் காலங்களுக்கான விளக்கமாக மிலன்கோவிச் கோட்பாடு அறியப்படுகிறது.

எரிமலைகளின் தாக்கம்: எரிமலைகளின் அதிகச் செயல்பாடுகளாலும், பல முறை ஏற்பட்ட எரிமலை வெடிப்புகளாலும், எரிமலைக் குழம்பு பல்லாயிரக் கணக்கான மைல் தூரம் பரவி அதன் மூலம் அதிக வெப்பம் வெளியேறுகிறது. எரிமலை வெடிப்பின் மூலம் வெளியான சாம்பல், கந்தக சல்பைடு, வளிமக் கரைசல் (aerosol) ஆகியவை ஒரு புகை மண்டலமாகி சூரியனிலிருந்து புவிக்கு வரும் வெப்பத்தைத் தடுக்கிறது.

அதனால் புவியின் வெப்பம் குறைந்து குளிரூட்டப்படுகிறது. எரிமலைக் குழம்புகளிலிருந்து மீத்தேன், கார்பன்-டை-ஆக்சைடும் அதிகளவில் வெளியிடப்படுகிறது. இந்த இரு பசுங்குடில் வாயுக்களின் அளவும் பெரிதும் அதிகரித்து புவியின் வெப்பநிலை அதிகரிக்கவும் காரணமாகிறது.

மலைகள் உருவாக்கம்: கண்டத் தட்டுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதுதலால் மலைகள் தோன்றுகின்றன. மலை உருவாக்கச் செயல்பாடானது வளிமண்டலத்தில் இருந்து அதிகளவு கார்பன் - டை - ஆக்சைடை எடுத்துக் கொள்கிறது. அதனால் வளிமண்டலத்தில் கார்பன் - டை - ஆக்சைடு குறைவதால் புவி குளிர்ச்சியடைகிறது.

கடைசி பனியூழிக் காலமான பிலைய்ஸ்டோசீனில் புவி அதிகளவு குளிர்ச்சியடைந்ததற்குக் காரணம் இமயமலையின் தோற்றமும், வளர்ச்சியுமே. அண்டார்டிகா எப்பொழுதும் பனி உறைந்து காணப்படவில்லை. 14 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்புதான் அண்டார்டிகா முழுவதும் பனியாக உறைந்தது.

வட - தென் அமெரிக்கப் பகுதியின் மலை உருவாக்கமே இதற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. அதே போல் ஆர்க்டிக் பனியும் 3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்புதான் உருவாகியது. சமீபத்தில் 14ஆம் நூற்றாண்டுக்கும் 19ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் புவி குளிர்ச்சியடைந்துள்ளது. இது சிறுமப் பனிக்காலம் என அழைக்கப்படுகிறது.

சூரியப் புள்ளிச் சுற்றின் (Sun spot cycle) விளைவாக சூரியனிலிருந்து வரும் கதிர்வீச்சின் அளவு குறைந்ததே இதற்குக் காரணம் என மாண்டர் என்ற விஞ்ஞானி விளக்கியுள்ளார். சூரியனில் கருமையான பகுதிகள் அதிகரித்தால் சூரியனின் செயல்பாடும், வெப்ப நிலையும் அதிகரிக்கும். கரும்புள்ளிகள் குறைந்து விட்டால் சூரியனின் வெப்ப நிலையும் குறைந்து விடும்.

1800களில் சூரியனில் காணப்படும் கரும்புள்ளிகளின் அளவு குறைந்திருந்ததாக அவர் கண்டுபிடித்தார். அதனால்தான் அந்தக் காலகட்டத்தில் புவியின் வெப்பநிலை குறைந்துள்ளது. இது மாண்டர் சிறுமம் எனப்படுகிறது. குறிப்பாக 1618ஆம் ஆண்டு கோடைக்காலம் இல்லாததாக இருந்தது. இந்தச் சிறுமப் பனிக்காலத்தைத் தொடர்ந்து ஒரு வெப்பமான காலகட்டத்தில்தான் நாம் வாழ்ந்து வருகிறோம்.

பசுங்குடில் விளைவு:

ஒரு கண்ணாடிப் பெட்டி அதிகமாக வெப்பத்தை உள்வாங்கிக் கொள்ளும், ஆனால் அதே அளவிற்கு வெப்பத்தை வெளியிடாது எனவே குளிர்ப் பகுதிகளில் தாவரங்களை வளர்க்க இவை பசுங்குடில்களாக பயன்படுத்தப்படுகின்றன. இது போன்றே புவியின் வளிமண்டலத்தில் உள்ள கார்பன்-டை-ஆக்சைடு போன்ற வாயுக்கள் பசுங்குடில் போல் வெப்பத்தை வெளியிடாமல் தக்கவைப்பதால்தான் இது பசுங்குடில் விளைவு என அழைக்கப்படுகிறது.

பசுங்குடில் விளைவை முதன்முதலில் ஜோசப் ஃபுரியர் என்ற விஞ்ஞானி கண்டுபிடித்தார். பசுங்குடில் விளைவுக்கு கார்பன் டை ஆக்சைடுதான் முக்கியக் காரணம் என்பதை ஸ்வந்தே அர்ரேனியஸ் என்ற ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானி கண்டறிந்தார். அதன் பிறகு 1955இல் படிம எரிபொருள்களை அதிகம் பயன்படுத்துவதுதான் பசுங்குடில் வாயுக்களின் அளவு அதிகரிப்பதற்கு முக்கியமான காரணம்  என்பதை கீலிங்க் என்ற விஞ்ஞானி கண்டறிந்தார்.

அதற்கு பிறகு 1980களில் மனிதனால் தூண்டப்பட்ட பசுங்குடில் விளைவால் ஏற்படும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டது. ஐ.நா.வின் சூழல் அமைப்பும், உலகக் காலநிலை அமைப்பும் இணைந்து சர்வதேச அரசுகளிக்கிடையிலான காலநிலை மாற்றம் குறித்த அமைப்பு (IPCC) 1988இல் ஏற்படுத்தப்பட்டது. இவ்வமைப்பு தனித்த ஆய்வுகளை மேற்கொள்வதில்லை என்ற போதும் உலகெங்கும் காலநிலை குறித்துச் செய்யப்படும் ஆய்வுகளைத் தொகுத்து அதன் அடிப்படையில் மதிப்பீடுகளை வெளியிடுகிறார்கள்.

காலநிலை மாற்றத்தால் சமுதாயத்தில் என்ன பாதிப்பு ஏற்படுகிறது? பொருளாதார பாதிப்புகள் ஏற்படுகின்றனவா? அவற்றை எவ்வாறு தடுக்கலாம் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இவ்வமைப்பில் மூன்று வேலைக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. முதல் குழு இயற்பியல் அடிப்படையில் காலநிலை மாற்றம் குறித்த ஆய்வுகளைத் தொகுத்து அதன் அடிப்படையில் மதிப்பீடுகள் அளித்தது. இரண்டாம் குழு காலநிலை மாற்றம் சூழலியல் அடிப்படையில் உயிரினங்களில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்த ஆய்வுகளின் மதிப்பீடுகளை அளித்தது.

மூன்றாம் குழு காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தாக்கத்தை எவ்வாறு குறைக்கலாம் என்பது குறித்த ஆய்வுகளின் மதிப்பீடுகளை அளித்தது. 2014இல் இவை அனைத்தும் சமர்ப்பிக்கப்பட்டன. இதன் அடிப்படையில்தான் விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக 2007இல் ஐபிசிசிக்கும், முன்னாள் அமெரிக்கத் துணை அதிபர் அல்கோருக்கும் நோபல் பரிசு அளிக்கப்பட்டது. மனிதனால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றம் அறிவியல் அடிப்படையில் உண்மை என்பதை இவற்றிலிருந்து அறிய முடியும்.

மனிதர்கள் தோன்றுவதற்கு முன் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தினால் உலகத்தில் இது வரை 5 மிகப் பெரும் பேரழிவுகள் ஏற்பட்டுள்ளன. இவை பல மில்லியன் ஆண்டுகளில் ஏற்பட்டவை. 5 பில்லியன் ஆண்டுகளில் 5 மிகப்பெரும் பேரழிவுகள் ஏற்பட்டுள்ளன. நாம் வாழும் செனோசோயிக் ஊழிக் காலத்தில் ஒரு குறுகிய காலத்தில் வெறும் 150 ஆண்டுகளிலேயே ஒரு பேரழிவு உண்டாவதற்கான சூழல் மனிதர்களால் உருவாக்கப்பட்டுள்ளது, பெருமளவு காடுகள் அழிக்கப்பட்டதால் உயிரிகளின் பன்மைத்துவம் குறைந்து வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் ஒரு ஆறாவது பேரழிவு உலகம் முழுவதும் ஏற்படும்.

தொடர்ந்து இயக்கத்தில் உள்ள புவிக்கு இது இழப்பில்லை. மனிதனே அழிந்து விட்டாலும் மிகவும் நுண்ணிய சிறு உயிர்களால் நீடித்திருக்க முடியும். இல்லையென்றாலும் வேறு உயிரினங்கள் புதிதாக உருவாகலாம். ஆனால் இத்தனை ஆண்டுக் காலம் மனித இனம் அரும்பாடுபட்டு உருவாக்கிய அரிய பல கண்டுபிடிப்புகளும், பண்பாடும், மனித வரலாறும் சுவடில்லாமல் அழிய நாமே காரணமாக இருக்கக் கூடாது.

ஆறறிவுடைய மனிதன் ஆறாவது பேரழிவு ஏற்படக் காரணமாக இருக்கலாமா?. இந்த ஆறாவது பேரழிவு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் மனித சமூகத்திடம் உள்ளது. எனவே இதைத் தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம். காலநிலை மாற்றத்தைக் கட்டுக்குள் வைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்.

காலநிலை மாற்றத்திற்கு முக்கியமான காரணங்கள் என்னவென்று இது வரை பார்த்தோம். இதனுடன் மிகவும் ஆர்வம் ஏற்படுத்தும் ஒரு துறையான தொன்மக் காலநிலையியல் குறித்தும் அறிந்து கொள்வோம்.

தொன்மக் காலநிலையியலை ஆய்வு செய்வோர் தொன்மக் காலநிலையாளர் என அழைக்கப்படுகின்றனர். புவியில் காணப்படும் உயிர்ப் படிமங்களைப் பற்றி நாம் அறிந்திருப்போம். நாம் பழங்காலத்திற்கு மீண்டும் செல்ல இயலாது.

ஆனால் பழங்காலம் விட்டுச் சென்றுள்ள தடயங்களின், பதிவுகளை ஆய்வு செய்து தகவல்கள் பெற முடியும் என்ற அடிப்படையில்  தொன்மக் காலநிலை ஆய்வுகள் செய்யப்படுகின்றன. இவற்றிலிருந்து நிறைய புதிய தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளன.

அதற்கு அவர்கள் பல மாதிரிகளை பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக ஒரு செல் உயிரிகளான ஃபொராம்ஸ் என்ற உயிரினம் ஓடுடைய சிறு உயிரிகளையும், டையாடம்ஸ் ஓடுடன் கூடிய பாசியையும் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

தண்ணீரை H2O  எனக் குறிப்பிடுகிறோம், அதில் ஆக்சிஜன் உள்ளது. இந்த உயிரிகள் விட்டுச் சென்ற ஓட்டிலுள்ள ஆக்சிஜன் ஐசோடோப்புகளின் தன்மையையும், அளவுகளையும் வைத்து அவற்றின் காலகட்டம் என்ன என்பதைக் கண்டறிந்துள்ளார்கள்.

அப்பொழுது என்ன வெப்ப நிலை நிலவியது என்பது, அதில் உள்ள ஆக்சிஜனின் கனமான ஐசோடோப்புகளுக்கும், இலேசான ஐசோடோப்புகளுக்கும் இடையிலான விகிதத்திலிருந்து கண்டறியப்படுகிறது. கனமான ஐசோடோப்புகளின் நிலைத் தன்மை அதிகம், வெப்பநிலை அதிகமாகும் போது இலேசான ஐசோடோப்புகள் குறைந்து விடும், இதன் அடிப்படையில்  வெப்பநிலையைக் கணக்கிடுகிறார்கள்.

மரங்களில் உள்ள ஆண்டு வளையங்களை ஆய்வு செய்வதன் மூலம் பல புதிய தகவல்கள் பெறுகின்றனர். ஆண்டு வளையங்களுக்கிடையே உள்ள பருமன். அந்தக் குறிப்பிட்ட ஆண்டில் எவ்வளவு மழை பொழிந்தது, என்ன வெப்பநிலை நிலவியது என்பதையும், தீயால் ஏற்படும் வடுக்கள் உள்ளனவா என்பதிலிருந்து அந்த ஆண்டில் தீ ஏற்பட்டதா என்பதையும் அறிந்து கொள்கிறார்கள்.

மகரந்தம், ,பறவையின் எச்சம், எனப் பல்வேறு படிம மாதிரிகளைப் பயன்படுத்தி ஆய்வுகள் செய்கிறார்கள். ஈல் மீனைப் போன்று தொன்மையில் இருந்த கொனொடொன்ட் என்ற மீனின் பற்கள் மிக முக்கியமான மாதிரிகளாக இந்த ஆய்வுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

ஆர்ட்டிக் கிரீன்லாந்து, அண்டார்டிக் பகுதிகளில் நிரந்தரமாக உறைந்து காணப்படும் பனி மலைகளின் ஆழத்திலிருந்து ‘ஐஸ் கோர்’ எனப்படும் நீண்ட பனிக்கம்பிகளை மாதிரிகளாக வெட்டி எடுத்து அவற்றை ஆய்வு செய்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பனிப் பொழிவு ஏற்படும் போது, ஒரு வருடத்தில் பொழியும் பனியெல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு அடுக்காகிறது.

அது போல் அடுத்தடுத்து அடுக்குகள் அமைந்துள்ளன. ஒவ்வொரு அடுக்கிலும் அந்தக் காலக்கட்டத்திற்கான அரிய தகவல்கள் சேமிக்கப்பட்டுள்ளன. அதை ஆய்வு செய்வதன் மூலம் அப்பொழுது என்ன வெப்பநிலை நிலவியது. வேறு உயிரினங்கள் இருந்தனவா எனப் பல்வேறு தகவல்கள் பெறப்படுகின்றன. ’ஐஸ் கோர்’களில் காணப்படும் உறைந்த வாயுக் குமிழிகளின் மூலம் காற்றில் இருந்த மாசுக்கள் குறித்தும் தரவுகள் பெற முடிகிறது.

இந்த உலகமே ஒரு திறந்த புத்தகமாக உள்ளது. இந்தப் புத்தகத்தில் படிக்கப்படாத பல பக்கங்கள் உள்ளன. ஒரு சின்ன மணல் துகளிலிருந்து, நீர்த்துளி, பனிப்பாறை என அனைத்திலும் இந்தப் புவியின் கதைகள் ஒளிந்துள்ளன. இன்னும் நமக்குத் தெரியாத, சொல்லப்படாத பல கதைகள் உள்ளன. தொன்மக் காலநிலையியல் கூறும் கதைகள் வெறும் கட்டுக்கதைகள் அல்ல. அறிவியல் அடிப்படையிலான உண்மைகள்.

(தொடரும்)

- சமந்தா

Pin It