nursery-school-banner 600இருபதாண்டு முன்பு தமிழகத்தில் ஒரு புதிய கல்வி இயக்கமாகப் பிறந்த தாய்த் தமிழ்ப் பள்ளிகள் இப்போது கடும் தவிப்பில் உள்ளன. மெல்லத் தமிழ் இனி வாழும் என்று தாய்த் தமிழ்ப் பள்ளிகளை வாழ்த்தியது தினமணி பொங்கல் மலர். இது கல்வித் துறையில் ஒரு புரட்சி என்று போற்றினார் தமிழண்ணல். தாய்த் தமிழ்ப் பள்ளிகளுக்கு அரசு துணை நிற்கும் என்று அமைச்சர்கள் வாக்களித்ததும் உண்டு.

தமிழ்க் கல்வியையும் தமிழ்வழிக் கல்வியையும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்க மாட்டார்கள் என்ற அவப்பெயரை மாற்றித் தமிழ்நாடெங்கும் தமிழ்ப் பற்றாளர்களின் முயற்சியினால் தமிழ் மக்களின் ஆதரவோடு ஐம்பதுக்கு மேற்பட்ட தாய்த் தமிழ்ப் பள்ளிகள் நிறுவப்பட்டன. இவை தவிர பல பகுதிகளில் தமிழ்வழிப் பள்ளி-களும் இயங்கி வந்தன. இப்போது இவற்றின் எண்ணிக்கை சுருங்கி விட்டது. மாணவர்ச் சேர்க்கை குறைந்து விட்டது என்று எல்லாப் பகுதிகளிலிருந்தும் செய்தி வருகிறது.

தாய்த் தமிழ்ப் பள்ளிகளின் இந்த நலிவுக்கு என்ன காரணம்? அரசுப் பள்ளிகளில் தமிழ்வழிப் பிரிவுகளை ஆங்கிலவழிப் பிரிவுகளாக மளமளவென மாற்றுவதில் முனைந்து செயல்படும் தமிழக அரசின் கொள்கையே முதன்மைக் காரணம் எனப்படுகிறது.

மக்களிடம் கல்வி ஆர்வம் மிகுந்துள்ளதே தவிர கல்வித் தெளிவு இல்லை. அரசிடமே தெளிந்த கல்விக் கொள்கை இல்லாத போது மக்களை எப்படிக் குறை சொல்ல முடியும்? அனைவர்க்கும் கல்வி, அனைத்துக் கல்வியும் தமிழில் என்பதை அரசே ஒரு கொள்கையாக ஏற்று முழுமையாகச் செயல்படுத்துமானால், தாய்த் தமிழ்ப் பள்ளிகளுக்கே தேவையிருக்காது.

ஆனால் அரசின் கொள்கை நேர்மாறாக இருக்கும் போது தமிழையும் சமூகநீதியையும் காப்பதற்கும், தமிழ்ச் சமூகத்தின் நல்வாழ்வை உறுதிசெய்வதற்கும் தாய்த் தமிழ்ப் பள்ளிகள் நிலைத்து நிற்க வேண்டும், அவை வளர்ந்து செழிக்க வேண்டும். இதற்கு அரசு துணைநிற்பது இன்றியமையாதது. இப்பள்ளிகளுக்கு நிதியுதவி வழங்குவது, நிலம் ஒதுக்கித் தருவது, கட்டடம் கட்டிக் கொடுப்பது, ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவது, விரைந்து ஒப்புதல் அல்லது அறிந்தேற்பு வழங்குவது, கல்வித் துறைக் கெடுபிடிகளை நீக்குவது... இப்படிப் பல்வேறு வழிகளிலும் தமிழக அரசு உதவ வேண்டும்.

அரசு உதவட்டும் என்று தமிழ்ப் பற்றாளர்களும் கல்வி ஆர்வலர்களும் ஒதுங்கி இருந்து விடக் கூடாது. தாய்த் தமிழ்ப் பள்ளிகளைக் காக்கவும் வளர்க்கவும் அவர்கள் ஒல்லும் வகையெல்லாம் உதவிடல் வேண்டும். படித்த இளைஞர்கள், இளம்பெண்கள் கிடைத்த நேரமெல்லாம் இப்பள்ளிகளுக்குச் சென்று ஆசிரியத் தொண்டர்களாகப் பயிற்சி பெற்றுப் பணியாற்ற முன்வர வேண்டும்.

மக்களிடையே தமிழ்வழிக் கல்வியின் தேவையைப் பரப்புதல் வேண்டும். தாய்த் தமிழ்ப் பள்ளிக் குழந்தைகளின் கல்விக்குப் பொறுப்பேற்று இயன்றதனைத்தும் செய்திடல் வேண்டும். இது தமிழ்ப் பணி, கல்விப் பணி, அறிவுப் பணி. நம் கடன் இப்பணி செய்வது என்ற உணர்வோடு செயலாற்ற முன்வாருங்கள் என்று அழைக்கிறோம்!

Pin It