இயக்குனர் பா.இரஞ்சித் நேர்காணல்

சென்னை என்றாலே கல்லூரி இளைஞர்களின் ஆட்டம் பாட்டம் மட்டுமே என்றுதான் தமிழ்த் திரைப்படங்கள் பதிவு செய்து வந்துள்ளன. இந்நிலையில், சென்னையின் உண்மை முகத்தை, குறிப்பாகச் சென்னை மண்ணின் மைந்தர்களின் வாழ்வியலை மெட்ராஸ் படம் எதார்த்தமாய்ப் பதிவு செய்கிறது. வடசென்னை அரசியல் அங்குள்ள இளைஞர்களின் உணர்வுபூர்வமான அரசியலை எப்படி எல்லாம் பயன்படுத்திக் கொள்கிறது என்பதை அண்மையில் வெளிவந்துள்ள மெட்ராஸ் திரைப்படம் தோலுரித்துக் காட்டியுள்ளது. அதன் இயக்குனர் தோழர் பா. இரஞ்சித் அவர்களை நேர்காண்கிறார் தோழர் வே. பாரதி.

ranjithபாரதி: சினிமாவில் நுழைவது உங்களுக்கு எளிதாக இருந்ததா அல்லது போராட்டங்கள் நிறைந்ததாக இருந்ததா?

இயக்குனர்: போராட்டங்கள் என்பது எனக்கு தெரிந்து இப்போது கிடையாது! நான் ரொம்ப பாதுகாப்பாகத்தான் உள்ளேன். நான் ஓவியக் கல்லூரி மாணவன். எனவே என் ஓவியத் தேர்ச்சி காரணமாக எல்லா இடங்களிலும் எளிமையாக எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதே போல் நானும் எனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட காரணத்தினால் எனது சினிமா வாழ்வு அவ்வளவு கடினமாக இல்லை.

பாரதி: நீங்கள் வாழ்ந்த சூழல்தான் உங்களுக்கு இச்சமூகத்தைப் பார்ப்பதற்கான அடிப்படையாக அமைந்ததா?

இயக்குனர்: ஆம்! அந்தச் சூழல்தான் முக்கியமானது. அதுதான் இந்தச் சமூகத்தை உறுதியாகப் புரிந்துகொள்ளும் அனுபவத்தை எனக்குத் தந்தது.

பாரதி: இதற்கு முன்பு நீங்கள் இயக்கிய அட்டக்கத்தி என்னும் படத்தை நாங்கள் பார்த்துள்ளோம். அந்தப் படத்தில் ஒரு புற நகர்ப் பகுதி வாழ் மக்களின் வாழ்க்கையைச் சொல்லி இருந்தீர்கள். இந்தப் படத்தில் வடசென்னை வாழ் மக்களைப் பற்றி சொல்லியுள்ளீர்கள். இரண்டுக்குமிடையில் நீங்கள் காணும் வேறுபாடுகள் என்ன?

இயக்குனர்: வேறுபாடு என்று பெரிதாகச் சொல்வதற்கில்லை. சுற்றமும் இடமுந்தான் வேறுபாடே தவிர வாழ்க்கை ஒரே மாதிரியானதுதான். நான் இந்தப் படத்தில் வட சென்னை வாழ்க்கையைச் சொன்னாலும் கூட என்னுடைய வாழ்க்கைக்கும் அந்த வாழ்க்கைக்கும் பெரிய வேறுபாடு இல்லை. கிராமம் என்றால் அதில் ஒரு தனித்துவம் இருக்கும். கிராமம் ஊர், சேரி எனப் பிரிந்திருக்கும். வடசென்னையில் ஊர், சேரி என்ற பிரிவில்லை, இங்கு எல்லோரும் எல்லாவற்றிலும் ஒன்றாக இருக்கிற சூழல்தான் இருக்கிறது. அதைத்தான் இதில் நாம் காட்டி இருக்கிறோம். ஒருவேளை கிராமத்தில் நடப்பதாகப் படம் எடுத்திருந்தால் முதலில் சேரியைக் காட்டிவிட்டுத்தான் ஊருக்குப் போக முடியும்.

இதில் நாம் இல்லாத ஒன்றை அப்படிக் காட்டமுடியாது. இதே பகுதிகள் கிராமங்களாகவும் இருந்திருக்கிறது. வட சென்னையிலேயே கூட வியாசர்பாடி, பம்மல், பட்டாளம் பகுதிகள் ஊர், காலனி என்ற பிரிவுகளோடு இருந்துள்ளன. பட்டாளத்திலும் நாயக்கர்கள் அதிகமாக வாழ்ந்த ஒரு காலம் இருந்தது. அங்கே நடந்த சண்டைகளையெல்லாம் நாம் வரலாற்றுப் பின்னணியோடு எடுத்து வைக்கலாம். எனக்கு இரண்டிலும் வாழ்க்கை என்பது ஒன்று என்றுதான் நினைக்கிறேன். சூழல், இடம் போன்றவைதான் வேறு வேறாக இருக்குமே தவிர வாழ்க்கை ஒன்றுதான்.

நீங்கள் இதே கதையைச் சேலம் போன்ற நகரத்தில் உள்ளே இருக்கிற சேரிப் பகுதிகளில் எடுத்துப் போய் வைக்கலாம். இப்படி எல்லா இடத்திலேயும் நீங்கள் இதைச் செய்யலாம். எல்லா வாழ்க்கையும் ஒன்று என நினைக்கிறேன். நான் அதைத்தான் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டும் என நினைத்தேன். மதுரை சார்ந்த படங்கள் நிறைய வந்துள்ளன. தமிழ் மண் என்று சொல்லப்படுகிற மதுரையின் வாழ்வும் ஒன்றுதான், இங்கும் ஒன்றுதான். அது உயர்ந்த வாழ்க்கை, இது தாழ்ந்த வாழ்க்கை என்ற வேறுபாடு கிடையாது என்பதுதான் இதில் முக்கியம்.

அடுத்த இதழில் . . . தந்தை பெரியார், அம்பேத்கர், தமிழ்த் தேசியம், சாதி, அட்டகத்தி குறித்த கேள்விகளுக்கும் பதிலளிக்கிறார். அன்பு (கலையரசன்), மேரி (ரித்விகா) ஆகியோரின் செவ்விகளும் இடம்பெறும்.

Pin It