fidel castro 340உங்களில் ஒருவராய் ஃபிடலை இழந்து துயர்கொண்டேன்
ஏற்க இயலவில்லையே! இதுவும் இன்னொரு புரளியாகாதா!
நூறு வயது கடந்து அவரைக் காணும் கனவு நிறைவேறவில்லையே
அவரை உடனிருந்து பார்க்க, பேச கண்ட கனவுகள் கானலானதே
ஃபிடலாகும் கனவு ஒருபோதும் நிறைவேறாமல் போகாது!

தூக்கமிழந்து நிகழ்காலம் மறுத்து ஃபிடலின் கடந்தகாலத்தில் வாழ்கிறேன்
அதோ குழந்தைகளுடன், இருந்த ஃபிடல் படைவீரர்களுடன்
அதோ விவசாயிகளுடன் பேசிய ஃபிடல் பொறியியலாளர்ளுடன்
புரட்சிக் கலையின் கதாநாயகன் ஃபிடல் காஸ்ட்ரோ
புரட்சியின் ஆளுருவம் நம் ஃபிடல் காஸ்ட்ரோ
பேரன்பும் முழுமையாக ஃபிடலாக மலர்ந்தது
வல்லாதிக்க அசுர முதலையின் கொடிய வாயருகிலும்
உழைப்பு, போராட்டம் என இரட்டைப் பணிகளை
நிறைவேற்றும் ஃபிடலின் தன்னெழிச்சி பெற்ற கியூபர்கள்
கல்வி, மருத்துவம்,இயற்கை வேளாண்மை
என வெற்றியைக் குவித்தனர் துறைதோறும்

திருத்தல்வாதத்தால் சோவியத் யூனியன் சோசலிசத்திலிருந்து அயன்மைப்பட்டபோதும்
சந்தைப் பொருளாதாரத்திற்காக சீனா சோசலிசத்திலிருந்து அயன்மைப்பட்டபோதும்
ஊடகங்கள் தடயமில்லாமல் அருங்காட்சியகத்திலும்
சோசலிசத்தை நீக்க முயன்ற போதும்
கியூபாவே மக்களின் நம்பிக்கையாகவும் இலக்காகவும் இருந்தது
அதுவே மக்களுக்கு சுதந்திர தாகத்தை ஊட்டியது
நவீன அடிமைத் தனத்தின் தளையறுக்க உத்வேகமிட்டது

ஒருபோதும் மார்க்சிய லெனினியத்திலிருந்து அயன்மைப்படவில்லை
ஃபிடலின் கோட்பாடு
ஒருபோதும் கோட்பாட்டிலிருந்து அயன்மைப்படவில்லை ஃபிடலின் நடைமுறை
ஒருபோதும் மக்களிடமிருந்து அயன்மைப்படவில்லை ஃபிடலின் நடைமுறை
ஜனநாயகத்தின் இரட்டையாய் ஏகாதிபத்தியத்தை குடியரசுகள் சட்டமாக்கிய போது
ஏகாதிபத்திய ஜன நாயகத்தை எள்ளி நகையாடினார் ஃபிடல்
நுகர்வுக் கலாச்சாரத்தின் சுற்றுச்சூழல் விளைவை எச்சரித்தார் ஃபிடல்
ஐ நா வீட்டோவின் கொடுங்கோன்மையை கண்டனம் செய்தார்
தனியார்மயமே பொருளாதாரத் தீர்வாக போதிக்கப்பட்டபோது
தேசியமாக்கத்தையும், நீடித்த பொருளாதாரத்தையும் அடிக்கோடிட்டார்
பொருளாதாரக் குறியீடுகள் மக்களை குழப்பிய போது ஃபிடல் எளிமைப்படுத்தினார்

கியூப விவசாயியின் வியர்வையில் ஒரு பெசோ கூட வரியாகவில்லை
கியூப மாணவனிடமிருந்து ஒரு பெசோ கூட கருவூலம் போகவில்லை
மக்களல்லவா கியூபாவின் உண்மையானக் கருவூலம்
நெறியிழந்த உலகில் அறநெறியில் வாழும் கியூபர்கள்
மனித உறவுகளைப் போற்றி வாழ்வைப் பகிர்கின்றனர்
குழந்தைகளுக்கு அறத்தையும், மனிதத்தையும் புகட்டுகின்றனர்
விளம்பரங்களிலோ, தனி நபர் வழிபாட்டிலோ குருடாகாமல்
தன்னுணர்வுடன் தேர்வுசெய்யும் சுதந்திரத்தை தக்க வைத்த கியூபர்கள்
அரசியல் கூட்டுணர்வால் இணைந்து ஏகாதிபத்தியத்திற்கு சாவுமணி அடிக்கின்றனர்
நாடுகள் காப்புரிமையிலும் அறிவு சொத்துடைமையிலும், டிரில்லியன்கள் சம்பாதித்த போது

கியூப தொழில்நுட்பத்தையும், முன்னேற்றத்தையும் உலகிற்குப் பகிர்ந்தளித்தார் ஃபிடல்
தற்காப்பிற்கே படைகளைப் பரிந்துரைத்தாரே அன்றி அயல்ஆதிக்கத்திற்கு அல்ல
எந்த பலனையும் எதிர்பாரா ஃபிடலின் அன்புச்சேவை உலகெங்கும் நீண்டது. தேவையின் போது
சுயவிமர்சகர் ஃபிடல் பாராட்டுக்களால் மயங்கவும் இல்லை, அவதூறுகளால் கலங்கவும் இல்லை
ஃபிடலின் பேரன்பால் திண்மையால் வீரத்தால், இயங்காற்றலால் ஆட்கொள்ளப்பட்டோம் மனிதத்தை உயிர்ப்பிக்க
ஃபிடலால் ஆட்கொள்ளப்பட்ட நாம் ஃபிடலிடோக்கள் ஆகிறோம்,
ஒன்றிணைந்து நெடு நடையில் கொல்வோம் ஏகாதிபத்தியத்தை
எங்கும் என்றும் தொடரட்டும் நம் ஃபிடலின் வெற்றிப்பாதை,
வரலாற்றில், நம்மில் நம் செயல்பாடுகளில் வாழும் புரட்சியாளர்
நம் ஃபிடல் காஸ்ட்ரோ என்றும் என்றென்றும் நீடூழி வாழ்க!
புரட்சிகர கியூபா நீடூழி வாழ்க!
சோசலிசம் நீடூழி வாழ்க!

Pin It