நம் நாட்டின் 2014 – 2015ம் வருடத்திய நிதி நிலையறிக்கையில், வட்டிகளுக்கான செலவீனங்களுக்கு (சுமார்  36%, அதாவது 4.27 லட்சம் கோடி ரூபாய்கள்), அடுத்த படியாக அதிக நிதி ஒதுக்கப்படுவது ராணுவத்திற்குத்தான் (சுமார்  20%, அதாவது 2.29 லட்சம் கோடி ரூபாய்கள்).

இவ்வளவு பெரிய தொகையை ஒதுக்கி, அவர்களுக்குப் பல சலுகைகளையும் வழங்கி, அந்தத் துறையினரை நம் நாட்டு அரசு ஊக்குவிக்கும் பொழுது, அந்தத் துறையினர், இந்நாட்டின் குடிமக்களுக்கு என்ன செய்ய வேண்டும்? அவர்கள் என்ன செய்கின்றனர்?

நாம் அன்றாடம் தினசரிகளில் படிக்கும், அதுவும் 56 inch மார்பளவு மனிதர் பிரதமராகப் பொறுப்பேற்று அமர்ந்த சில நாட்களில்  மிக அதிகமாக நடக்கும், தொலைக் காட்சிகள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பும் ஒரு விஷயம், “சீனாவின் எல்லை மீறலும், பாகிஸ்தானின் குண்டு மழை பொழிதலும்”.

இந்த எல்லை மீறல்களையும், குண்டு மழை பொழிதல்களையும் சகித்துக் கொள்ளும் நம் ராணுவத்தினர், மணிப்பூர் மற்றும் வட கிழக்கு மாநிலங்களிலும் குறிப்பாக காஷ்மீரத்திலுமுள்ள அப்பாவி இளைஞர்களும், பெண்களும் நிம்மதியாகவும், தன்மானத்தோடும், அமைதியோடும் வாழ்வதை என்ன காரணத்திற்காகவோ சகித்துக் கொள்வதே இல்லை.

அவர்களைக் குதறுவதும், பெண்களைக் கற்பழிப்பதும், கொலை செய்வதும், நிரந்தர ஊனமாக்குவதும், எந்தக் குற்றமும் செய்யாத அந்த அப்பாவிகளுக்கு சிறை தண்டனை பெற்றுக் கொடுப்பதும் இந்த ராணுவத்திற்கு பொழுது போக்காகவே இருக்கிறது.         

indian army rape 600

கடந்த நவம்பர் மாதம் 3ம் தேதி, காஷ்மீரின் பட்காம் மாவட்டத்திலுள்ள சட்டர்காம் என்னுமிடத்தில் நான்கு சிறுவர்கள் ஒரு காரில் வந்து கொண்டிருந்த பொழுது, அவர்களை நோக்கி ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டதில், பைசல் யூசுப், மெஹ்ராஜூதீன் என்னும் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டினால் சிறுவர்கள் கொல்லப்பட்டதைக் குறித்து முதலில் கூறிய ராணுவ வீரர்கள் என்னும் போர்வையில் இருக்கும் அந்தக் கொலைகாரர்கள், அந்தக் கார், இரண்டு சிக்னல்களில் நிக்காமல் சென்றதால் நாங்கள் மூன்றாவது சிக்னலில் அந்தக் காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய ஒரு நிர்பந்தமுன்டானதென்றனர்.

அவர்கள் சொன்ன பொய் சிறிது நேரத்தில் பல்லிலிக்கவே, அந்தக் காரில் இருந்தவர்கள் எங்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதனால் தான், நாங்கள் அவர்களை தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சுட்டு விட்டோமென்று, வழக்கமாக அப்பாவிகளைக் கொல்லும் பொழுது சொல்லும் அதே வார்த்தைப் பிரயோயகங்களைப் பயன்படுத்திச் சொன்னனர்.

அந்தச் சூத்திரமும் வெகு விரைவில் பல்லிலித்ததால், அந்தச் சிறுவர்கள் இருவரையும் நாங்கள் தவறுதலாக சுட்டுக் கொன்று விட்டோமென்று திட்டமிட்டு காஷ்மீரிகளைக் கொல்லும் இந்த ராணுவம்நவம்பர் 7ம் தேதி சொன்னது. அதோடல்லாமல் கொல்லப்பட்ட அந்த இருவரின் குடும்பத்திற்கும்10 லட்சமும், காயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு 5 லட்சமும் இழப்பீடு வழங்கி ராணுவ அமைச்சகம் உத்தரவிட்டது. இது தொடர்பாக கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பத்காம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.    

கடந்த அக்டோபர் மாதம் 8ம் தேதி, ஹைதராபாத் மாநிலத்தின் மெஹ்திப்பட்டினம் என்னும் ராணுவத்திற்கு சொந்தமான இடத்தில் எரிந்த நிலையில் கிடந்த சேக் முஸ்தபாத்தீன் என்னும் 11வயது சிறுவனை மருத்துவமனையில் அனுமதித்து, அந்தச் சிறுவன் இறப்பதற்கு முன் அவனிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தில் “நான் என் வீட்டினருகே விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது, அங்கு வந்த இரண்டு ராணுவ வீரர்கள் தன்னை அழைத்து, தடுப்பு வேலிக்குள் அத்துமீறி நுழைந்து பதுங்குமாறு கேட்டுக் கொண்டனர். நான் அவர்கள் சொன்ன படி செய்த பொழுது, அவர்கள் என்னை அடிக்கத் தொடங்கினர்,நான் அவர்களிடமிருந்து தப்ப முயலும் பொழுது என்னை அடித்து, என் மீது எண்ணெய் ஊற்றி தீ வைத்தனர்” என்று சொல்லியுள்ளான்.

அதனைத் தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து அப்பல் ராஜ் என்னும் ராணுவ வீரரை விசாரணை  செய்து வந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் 3ம் தேதி தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டுதற்கொலை செய்து கொண்டார்அப்பல் ராஜ். அவரின் தற்கொலையைத் தொடர்ந்து கருத்துக் கூறிய அப்பல் ராஜுவின் மனைவி, என் கணவர் நிரபராதி. போலீசார் அவரிடம் கடுமையாக நடந்து கொண்டதனால் அவமானமடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறினார்.    

காஷ்மீர் மாநிலத்தின் மாச்சில் என்னுமிடத்தில் 2010ம் வருடம் ஏப்ரல்மாதம் 30ம் நாள் பாரமுல்லா மாவட்டம் நதிகால் கிராமத்தைச் சேர்ந்த சஜாத் அஹமது கான், ரியாஸ் அஹமது லோன், முகம்மது ஷாஃபி லோன் என்ற மூன்று இளைஞர்கள் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இவர்களை சுட்டுக் கொலை செய்த ராணுவம், இவர்கள் மூன்று பேரும் “பாகிஸ்தான் தீவிரவாதிகள்”, நம் எல்லையில் அத்துமீறியதால் சுட்டுக் கொன்றோம் என்று கதை சொன்னனர்.

இந்தக் கொலைகாரர்களின் கதையை நம்பாத காஷ்மீர் மக்கள், பல உணர்வுப்பூர்வமான போராட்டங்களை நடத்தியதன் விளைவாக, அந்தக் கொலைகள் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், அந்த மூன்று பேருக்கும் வேலை வாங்கித் தருவதாக அழைத்துச் சென்ற ராணுவத்தினர், பின்னர் அவர்களை சுட்டுக் கொன்றது இப்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்தக் கொலை வழக்கில், ஏழு பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தக் கொலைகாரர்களில் கர்னல் பதானியா, கேப்டன் உபேந்தர் என்னும் இரு உயரதிகாரிகளும் அடங்குவர்.

இது போல பல வழக்குகளை போதிய ஆதாரங்கலில்லையேன்று கூறி இதே ராணுவ நீதிமன்றம் தள்ளுபடி செய்து காஷ்மீர் மக்களை வஞ்சித்துமுள்ளது.

எல்லையைக் காக்கிறேன் பேர்வழி என்று, ராணுவத்தினர் செய்யும் மற்றும் செய்த கற்பழிப்புகளும், கொலைகளும், நிரந்தர ஊனமாக்களும், மக்களிடமிருந்து பணம் பிடுங்குவதும், அப்பாவிகளை சிறைலடைப்பதும், பொது மக்களை வதைப்பதுமேன்று பல நூறு பக்கங்கள் எழுதுமளவு அநியாயங்கள் காஷ்மீரிலும் மற்றும் வட கிழக்கு மாநிலங்களிலும்  அரங்கேற்றப்பட்டுள்ளது.         

ஒரு தெருப்பொறுக்கி, குண்டன், கூலிப்படை செய்யும் அனைத்து கீழ்த்தரமான வேலைகளையும் செய்யும் ராணுவம், தாங்கள் செய்யும் எந்த ஒன்றிற்கும் தண்டிக்கப்படாமல் இருப்பதற்கு அவர்களுக்கு உதவுவது, ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரச் சட்டம் தான் (Armed Forces (Special Power) Act 1958, AFSPA) .

மனித உரிமைகளையும், மனித மாண்புகளையும் சிதைக்கும் இந்தச் சட்டத்தை, வடகிழக்கு மாநிலங்களிலிருந்தும், மணிப்பூரிலும் மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்தும் நீக்க வேண்டுமென்று பல பேர் பல முறை குரல் கொடுத்தும், இந்த சட்டத்தினால் அதிகம் பாதிக்கப்படுவது முஸ்லிம்களும், பழங்குடியினரும், மலைவாழ் மக்களும்   என்பதால் தான் இந்தச் சட்டம் அகற்றப்படாமல் இருக்கிறதோ என்ற சந்தேகம் உண்டாகிறது.

அது போல மணிப்பூர் மாநிலத்தைச் சார்ந்த தஞ்சம் மனோரமா என்னும் இளம் வயதுப் பெண்மணியை, ஒரு தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சார்ந்தவர் என்று கூறி, 2004ம் வருடம் ஜூலை மாதம் 10ம் நாள் நள்ளிரவு, அவருடைய வீட்டிலிருந்து அழைத்துச் சென்ற ராணுவத்தினர், அவரை அழைத்துச் செல்லும் பொழுதே, அதுவும் அவரின் பெற்றோர்களின் முன்னிலையிலேயே பாலியல் சேட்டைகளை செய்துள்ளனர்.

ராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்ட தஞ்சம் மனோரமா தேவி மறு நாள் எரிபோக் என்னுமிடத்தில் ஒரு சாலையோரத்தில், மறைவான இடம், தொடை, மார்பு போன்ற இடங்களில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த நிலையில் இறந்து கிடந்தார். இவரது இறப்புக் குறித்து ௯றிய ராணுவம் என்னும் கொலைகாரர்கள், அவர் சிறுநீர் கழிக்க என்று கூறிச் சென்று தப்பிக்க முயலும் பொழுது காலில் சுட்டதாகக் கூறினர்.

இதனை ஏற்காத மணிப்பூர் மக்களில் ஒரு பிரிவினர், தங்களைத் தாங்களே  நிர்வாணமாக்கி, “இந்திய இராணுவமே, எங்களையும் கற்ப்பழி” (Indian Army Rape Us) (இஸ்லாம் தடை செய்துள்ள வகையில் அந்தப் படங்கள் இருப்பதால், நாம் அந்தப் படங்களை வைகறை வெளிச்சத்தில் பிரசுரிக்க இயலாது)என்னும் வாசகம் பொறித்த பதாகையை அணிந்து கொண்டு, மணிப்பூரின் ராணுவ தலைமையிடம் சென்று போராடினர்.

indianarmy rape 350மணிப்பூர் மக்களின் பெரும் போராட்டத்திற்குப் பின்னர், அரசாங்கம் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டது. அந்த நீதி விசாரணைக் குழுவின் விசாரணை அறிக்கையில், அந்தப் பெண்மணிக்குக் காலுக்குக் கீழே எந்த குண்டுக்காயங்களும் இல்லை என்றும், அவருடைய மறைவானப் பகுதி, தொடை மற்றும் மார்பகங்களில் தான் குண்டுக்காயங்கள் இருந்தது என்றும், அவருடைய ஆடையில் விந்துத் துளிகள் இருந்தது என்றும், ஆதாரத்தை சிதைப்பதற்க்கே அவருடைய மறைவுப் பகுதியில் துப்பாக்கியால் சுட்டுள்ளனர் என்றும், அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு, பல பாலியல் கொடுமைகளுக்கும் ஆளாக்கப்பட்ட பின்னரே, மிகக் கொடூரமாக கொல்லப்பட்டுளதை அந்த விசாரணை அறிக்கை உறுதி செய்கிறது.

மணிப்பூரிலும்ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரச் சட்டம் (Armed Forces (Special Power) Act 1958, AFSPA) அமலிலுள்ளதால் தான் கொலைகாரர்கள் கொலை செய்து விட்டு அந்தச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுகின்றனர். 

ஐரோம் சர்மிளா, மணிப்பூரின் இரும்புப் பெண். கடந்த 2000ம் வருடம் மணிப்பூர் மாநிலத்தின் இம்பாலில் 10 பேரைச் சுட்டுக்  கொன்ற ராணுவத்தினர், மனிதனைக் கொலை செய்யத் தூண்டும் இந்தச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டார்கள். அதனைத் தொடர்ந்து அந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டுமென்று கடந்த 14 ஆண்டுகளாக வாயால் எந்த உணவையும் உண்ணாமல், உண்ணா விரதம் இருந்து வருகிறார் இந்தப் பெண்மணி.

இவரை உணவருந்த வைப்பதற்காக சாம பேத தான தண்ட வழிமுறைகளை கையாண்ட,  கையாலாகாத மத்திய மாநில அரசுகள், அந்த முயற்சியில் தோல்வியடைந்து அந்தப் பெண்மணியின் முன் மண்டியிட்டனர். கடைசி ஆயுதமாக. அவர் மீது பல வழக்குகளைப் புனைந்தும் அவர் தன் கொள்கையில் உறுதியாக இருப்பதால், இனி என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கிகை பிசைந்து நிற்கின்றனமுட்டாள் அரசுகள்.

சீனாவின் அத்துமீறலுக்கும், பாகிஸ்தானின் குண்டு வீச்சுக்கும் செவி கொடுக்காத அல்லது செவி கொடுப்பதில் மெத்தனமாக இருக்கும் நம் ராணுவம், மணிப்பூரிகளின் மற்றும் காஷ்மீரிகளின் வாழ்க்கையை சீரழிப்பதிலும், அவர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்குவதிலும் மிக வேகமாகவே செயல்படுகிறார்கள்.       

இவ்வளவு எழுதிய எங்களுக்கே, இந்திய ராணுவத்தின் பணி என்ன என்று இன்னும் புரியவில்லை. இந்தக் கட்டுரையைப் படிக்கும் வாசகர்களாகிய உங்களுக்காவது இந்திய ராணுவத்தின் பணி என்ன என்று புரிகிறதா?

Pin It