உங்களது நினைவலைகளால்
புத்தக அலமாரியோ
செல்லரித்துச் செப்பனிடுவாரின்றிக்
கிடந்தன

வேட்டிகளும் சட்டைகளும்
மடிப்புக் கலையா வண்ணம்
தூசுகள் மெருகேறி இருந்தன

ஊர் ஊராய் வலம்வந்த
பெட்டியோ
தூசு துடைப்பாரன்றி
ஊருக்குச் செல்ல தாகத்தோடு
தகிக்கின்றது

தங்களின் எண்ணங்களைப்
பிரதிபலிக்கும் புத்தகங்களை
மட்டும்
காற்று தன் அரவணைப்பால்
பக்கங்களைப் புரட்டிக்கொண்டே
இருக்கிறது
என் கண்களுக்குள் மிஞ்சியது
என்னவோ உப்பளங்களே...

உங்களின் ஊர்ப்பயணங்களின்
கருவான பெட்டியை
என் குழந்தை
நகர்த்தி வந்த பொழுது
அதன்மீது
கதிர்வீச்சு புகுந்தது மாதிரியாய்

வெற்றிடத்தின் அடையாளக் குறியீடுகளை
மட்டுமே
விட்டுச் சென்றமையாய்
நுட்பமான காட்சிப்படலமாய்
விரிந்து
என் உணர்வுக் கலவைகளைக்
கிளறி
உணர்ச்சிப் பெருக்கெடுத்து
உயிர்த்தெழுந்து

தடுமாற்றத்துடன் வெளிவர இயலா
வார்த்தைகளாய்
நினைவில் கோர்த்தன
உங்களது பயணத்தின்
சங்கிலித் தொடர்களை
சுட்டிக் காட்டின
நெடுந்தொலைவு பறந்தமையை

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.